Sunday, May 16, 2010

6. யுத்த காண்டம். முதற் பாகம்.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் இயற்றிய
இராம காதை
6. யுத்த காண்டம்.
முதற் பாகம்.
கடவுள் வாழ்த்து.


ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம்
இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!

இறைவன் ஒன்று என்று சொன்னால் ஒன்றுதான்; பல என்றால் பலவேதான்; அப்படி அல்ல என்றாலும் அல்லதான்; அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்; இல்லை என்றாலும் இல்லைதான்; உண்டு என்றாலும் உண்டுதான்; எல்லாம் நமது நம்பிக்கையில்தான் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு நன்று!

பிரளய காலத்திலும் கடலுள் மூழ்காத மேரு மலையும், வற்றாத கடலும், நிலப் பகுதியும் வடபுறம் முழுவதும் வியாபித்திருக்க, நிலமே தாழ்ந்து போகுமாறு தென் திசைக் கோடியில் எழுபது வெள்ள வானரப் படைகள் வந்து கூடின.

சீதையைப் பிரிந்த பிறகு இராமன் உறங்கவேயில்லை. தென் கடல் பகுதியை வந்தடைந்தபோது அங்கே பரந்து விரிந்து கிடந்த பெருங்கடலைக் கண்டான். அதோ! அந்தக் கடலின் அப்புறத்தில்தான் சீதை இருக்கிறாள். மிகமிக அருகில் இருக்கிறாள். நம்மை இந்த கடல் மட்டுமா பிரித்து வைத்திருக்கிறது? அல்ல. எதிரியைக் கொன்ற பிறகு அல்லவா நான் உன்னை மீட்க வேண்டும். அதுவரை காத்திரு என்று மனதைத் தேற்றிக் கொண்டான்.

அந்த கடலின் மீது எழுந்து தவழ்ந்து கரையில் மோதுகின்ற அலைகளைப் போலவே எண்ண அலைகள் இராமன் மனதில் தோன்றி, எழுந்து மோத, இனி என்ன செய்ய வேண்டுமென்று எண்ணமிடலானான். இராமனை, சிந்தனை வயப்பட்ட நிலையில் தென் கடலின் கரையிலே நிறுத்திவிட்டு, இலங்கையில் அசோக வனத்தில் சீதையை அனுமன் பார்த்தபின், இலங்கைக்குத் தீயிட்டுவிட்டு திரும்பிய பிறகு இலங்கையில் நடந்தவற்றை சற்று பார்ப்போம்.

தெய்வத் தச்சன் மயன், பிரம்மனோடு இலங்கைக்கு வந்து மூவுலகங்களிலும் சிறந்ததொரு நகரத்தை இராவணன் விருப்பப்படி கட்டியிருந்தான். அந்த நகரம்தான் இலங்கை. அப்படிப்பட்ட அழகிய நகரம் அனுமனால் தீயிடப்பட்டு அழிந்த பிறகும்கூட தேவர்களின் நகரத்தைவிட அந்த நகரம் மிகவும் அழகாக இருந்தது. அந்த அழகிய இலங்கை நகரத்தில் அரண்மனை கொலுமண்டபத்தில் இராவணன் ஓர் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். அனுமன் வந்து சென்ற பிறகு இலங்கைக்கு ஏற்பட்ட அழிவு பற்றிய ஆலோசனைக் கூட்டம் அது.

தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தவிர முனிவர், தேவர், வித்யாதரர், இயக்கர் அனைவரையும் அவையை விட்டு நீங்கச் சொன்னான் இராவணன். பெண்களையும், இளைஞர்களையும்கூட கூட்டத்திலிருந்து விலகி இருக்கச் சொன்னான். அறிஞர்களையும், நீண்ட நாட்களாகப் பழகியவர்கள், சுற்றத்தார், நற்பண்புகளையுடையோர், நல்ல அமைச்சர்கள் ஆகியோரைத் தன்னுடன் இருக்கச் செய்தான். உறவினர்களில்கூட பிள்ளைகளையும், தம்பியர்களையும் தவிர மற்றவர்களை வெளியேற்றி விட்டான்.

மண்டபத்திற்கு வெளியே பலத்த காவல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வலிமை மிக்க வீரர்கள் காவலுக்கு நின்றார்கள். காக்கை குருவிகள்கூட அந்தப் பக்கம் வருவதற்கு அஞ்சி வேறு திசைகளில் பறந்துவிட்டன.

இராவணன் மனத்துக்குள் புழுங்கினான். கேவலம் ஒரு குரங்கு! என் வீரத்தையும், பெருமையையும் அந்தக் குரங்கு அழித்து விட்டதே. இதைவிட என்ன அவமானம் எனக்கு வேண்டும்? இவ்வளவு ஆனபிறகும் நானும், நாடும் நன்றாகத்தானே இருக்கிறோம் என்று இகழ்ச்சி தோன்ற மனத்துக்குள் வருந்தினான்.

"ஒரு குரங்கு வந்து இலங்கையைச் சுட்டு எரித்துவிட்டுச் சென்று விட்டதே. வெற்றியை மட்டுமே கண்டு வந்த இலங்கை முதன்முதலாக ஓர் அழிவைக் கண்டுவிட்டதே. நண்பர்கள், உறவினர்கள் என்று எங்கு திரும்பினாலும் அனைவரும் இறந்து விட்டார்களே. அவமானம் மட்டுமே எனக்கு
மிச்சமாகப் போனது. நான் மட்டும் இன்னமும் சிங்காதனத்தில் ஆடம்பரமாக அரசன் என்று சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேனே".

"சுட்டது குரங்கு எரி சூறையாடிடக்
கெட்டது கொடி நகர் கிளையும் நண்பரும்
பட்டனர், பரிபவம் பரந்தது எங்கணும்
இட்டது, இவ் அரியணை இருந்தது என் உடல்".

நகரத்தில் எல்லா கிணறுகளிலும் தண்ணீர் ஊறவில்லை, உதிரம்தான் ஊறுகிறது. அந்த குரங்கு வைத்த நெருப்பு இன்னும் நகரம் முழுவதும் அடங்கவில்லை, அகிலும் சந்தனமும் மணந்து கொண்டிருந்த நகரத்தில் இப்போது மங்கையர்களின் கூந்தல் கருகிய நாற்றம் மட்டும் தான் பரவியிருக்கிறது. அகில், சந்தனம் வாசனையை அனுபவித்துக் கொண்டிருந்த நாம் இப்போது இந்த துர்நாற்றத்தைத்தான் நுகர்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வளவுக்குப் பிறகும் நாம் உண்டு உடுத்து சுகமாகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

"ஊறுகின்றன கிணறு உதிரம், ஒண்ணகர்
ஆறுகின்றில தழல் அகிலும் நாவியும்
கூறு மங்கையர் நறுங் கூந்தலின் சுறு
நாறுகின்றது, நுகர்ந்திருந்தம் நாம் எலாம்".

இப்படி ஆலோசனை சபையில் இராவணன் பேசத் தொடங்குகிறான். அனுமன் இழைத்த அழிவு, அவனை வெகுவாகப் பாதித்துவிட்டது, அவனது வீரத்துக்கு இழுக்கு நேர்ந்துவிட்டது என்ற தாபம் மிகுந்திருந்தது, மனதில் ஒரு விரக்தி தோன்ற பேசுகிறான்.

"நாம் சிறப்பாகப் போர் புரிய வேண்டுமென்பதுகூட இல்லை. இவ்வளவு அழிவைச் செய்த குரங்கு இறந்தது என்ற செய்தியைக்கூட நம்மால் கேட்கமுடியவில்லையே. நாம் பழியிலே மூழ்கிக் கிடக்கிறோம். பிறந்தும் பிறவாதவர் ஆகிவிட்டோம்" இப்படி இராவணன் பேசிக் கொண்டே போனான்.

இராவணன் பேச்சினால் மனம் வருந்திய படைத்தலைவன் எழுந்து "மன்னா! நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். சீதையைக் கவர்ந்து வருதல் ஒரு வீரனுக்குரிய செயல் அல்ல என்று நான் முன்பே சொன்னேன். நீங்கள் அதைக் கேட்கவில்லை.. கரனைக் கொன்று, சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த இராம லக்ஷ்மணரை இதுவரை கொல்லாமல் விட்டுவிட்டு, நம் அரசு அழிந்தது என்று வருந்தி என்ன பயன்?"

"பகைவரை எதிர்த்துக் கொல்லாமல் இலங்கையில் இன்பம் அனுபவித்துக் கொண்டு இருக்கலாமா? நாம் இப்படி இருந்தால் நம்மை குரங்கு மட்டுமா எதிர்க்கும், கொசுவும் (உலங்கு) கூட நம்மை எதிர்க்கும்" என்றான்.

படைத்தலைவன் பேசியதைத் தொடர்ந்து மகோதரன் எழுந்து படைத்தலைவன் சொன்னதையே அவனும் சொன்னான். அரசே! இப்போதே என்னை அனுப்புங்கள். நான் சென்று எதிரிகளின் உயிரைக் குடித்துவிட்டு வருகிறேன் என்றான். அவனைத் தொடர்ந்து வஜ்ரதத்தன் எழுந்து பேசினான். பிறகு தொடர்ந்து துன்முகன், மகாபார்சுவன், பிசாசன், சூரியசத்ரு, வேள்வியின் பகைஞன், தூமிராட்சன் முதலான அரக்க வீரர்களும் எழுந்து பேசினார்கள்.

அப்போது இராவணனது தம்பியும், உத்தம குணங்கள் உள்ளவனுமான கும்பகர்ணன் எழுந்து பேசுகிறான். "என்ன செய்ய வேண்டு மென்பதை அறியாத சிறுவர்கள் பேசாமல் இருங்கள்" என்று சொல்லி மற்றவர்களை விலக்கிவிட்டு இராவணனை நெருங்கி "என்னை உன் உடன் பிறந்தவன் என்று அன்பு காட்டுவதானால் நான் உனக்கு நல்லதைச் சொல்வேன்" என்றான்.

"பிரமன் முதலாக தொடங்கி தொடர்ந்து வரும் நம் குலத்தில், நீ ஒருவனே ஒப்பிலாதவனாகச் சிறந்து விளங்குகிறாய். ஆயிரம் ஷாகாக்களைக் (பிரிவுகளை) கொண்ட சாம வேதத்தை ஆராய்ந்து படித்துத் தேர்ந்தவன் நீ! தீ நம்மைச் சுட்டு எரித்துவிடும் என்பது தெரிந்து அந்தத் தீயை எப்படிப் பயன் படுத்துவது என்பதைத் தெரிந்தவன் நீ! ஓவியத்தில் எழுதியது போன்ற அழகிய இலங்கை நகரம் தீயினால் அழிந்து போயிற்றே என்று மனம் வருந்துகிறாய். அப்படியென்றால் அரச குல தர்மம் அழியும்படி வேறொருவன் மனைவியைப் பிடித்து கொண்டு வந்து சிறை வைத்திருப்பது மட்டும் நல்ல செயலோ? பாவம் செய்வோருக்கு ஏற்படக்கூடிய பழி இதனினும் வேறு ஏதேனும் இருக்கிறதா?"

"ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய்
கோவியல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன்
தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ?
பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டா?"

"இலங்கை நகரம் தீயினால் அழிந்தமைக்காக வெட்கப் படுகிறாய். உன்மீது ஆசையும் பரிவும் கொண்ட உனது மனைவிமார்கள் அரண்மனை அந்தப்புரத்தில் உன்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்க, பிறனொருவன் மனைவியின் காலில் விழுந்து வணங்கி, அவள் மறுத்து 'சீ' என்று விலக்கியது உனக்கு அவமானமாகப் படவில்லையோ? இந்தச் செயல் உனக்குப் புகழையா கொடுக்கும்?".

"இல்லறம் எனும் தர்மத்தை மேற்கொண்டு ஒருவனுடன் இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஒரு பத்தினிப் பெண்ணை, உள்ளத்தில் இரக்கம் சிறிதுகூட இன்றி, அரச தர்மத்தைக் காற்றில் பறக்கவிட்டு, என்றைக்குக் கடத்திக் கொண்டு வந்து சிறை வைத்தாயோ அன்றைக்கே, அரக்கர்களின் புகழ் அழிந்து போயிற்று! நல்ல செயல்களைச் செய்தால் புகழ் பெறலாம். தீய செவல்களைச் செய்துவிட்டு புகழ் கிடைக்கவில்லையே என்று வருந்தினால், புகழா கிடைக்கும், பழிதான் கிடைக்கும்."

"ஆசில் பரதாரம் அவை அம்சிறை அடைப்பேம்
மாசில் புகழ் காதலுறுவேம் வளமை கூரப்
பேசுவது மானம், இடை பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்."

"குற்றமில்லாத பிறன் இல்லாளைப் பிடித்துக் கொண்டு வந்து சிறையில் வைப்போம். இப்படிப்பட்ட காரியத்தைச் செய்தால் புகழையா பெறுவோம்? பலே! நாம் பேசுவதோ வீரம்; ஆனால் பேணுவதோ காமம். நாம் அஞ்சி நிற்பதோ வலிமையற்ற மனிதர்களைப் பார்த்து, நன்று! நன்று! நம் ஆற்றலும் வீரமும் மிகவும் நன்று!"

"மாசற்றப் பெரியோர்கள் செய்யும் நல்ல காரியத்தை நீ செய்யவில்லை. நம் குலத்துக்கே இழிவைத் தேடித் தரும் காரியத்தைச் செய்திருக்கிறாய். மன்னா! இனியாவது அந்த சீதையைக் கொண்டுபோய் விட்டுவிடுவாயானால் நல்லது."

"சிட்டர்செயல் செய்திலை; குலச்சிறுமை செய்தாய்,
மட்டவிழ்க் குழலினாளை, இனி, மன்னா!
விட்டிடுது மேல் இனியம் ஆதும், அவர் வெல்லப்
பட்டிடுது மேல் அதுவம் நன்று, பழி அன்றால்"

"தன் ஒரு அம்பினால் இராமன் காட்டில் கரனின் பதினான்காயிரம் வீரர்களின் உயிர்களைக் குடித்து, கரனையும் கொன்று விட்டான். முனிவர்களுக்கிடையே, அரக்கர்களை களை எடுப்பது போல அவன் காட்டில் அரக்கர்களைக் கொன்று குவித்து விட்டான். தர்மம் அந்த இராமன் பக்கத்திலும், அதர்மம் நம் பக்கத்தில் இருப்பதால், தர்மமே இறுதியில் வெல்லும், இராமனே வெல்வான்! இந்த அறிவுரைகளும் கண்டனங்களும் அண்ணன் இராவணனுக்குப் பிடிக்கவில்லையோ, அதனால் கோபம் கொண்டு நம்மீது ஆத்திரமடைவானோ என்று நினைத்தான் போலிருக்கிறது. ஏனேன்றால் எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கும் சாபமுள்ள தனக்கு பாதுகாப்பும், உறக்கம் நீங்கி எழும்போது உணவும், கள்ளும் கொடுத்துப் பாதுகாத்து வருவது அவன்தானே! என்ன செய்வது அவனுக்கு ஒரு உபாயம் சொல்லலாம் என்று கருதி ஒரு ஆலோசனை சொல்லுகிறான்.

"நாம் ஒன்று செய்யலாம். நம் பகைவர்கள் தங்கள் படைபலத்தைப் பெறுக்கிக் கொள்வதற்கு முன்பாக, அவர்களை முந்திக் கொண்டு நாம் கடலைக் கடந்து அவர்களைத் தாக்கி அந்த மானுடர்களையும், அவர்களோடு சேர்ந்துள்ள வானரங்களையும் பூண்டோடு அழித்துவிடவேண்டும். அதுதான் சரியான வழி. அப்படி நாம் செய்யாவிட்டால், அந்த மனிதர்களோடு தேவர்களும் சேர்ந்து கொள்வார்கள். ஏழு உலகங்களும் அவர்களோடு சேர்ந்து கொள்ளும்" என்றான் கும்பகர்ணன்.

"ஊறுபடை ஊறுவதன் முன்னம் ஒரு நாளே
ஏறுகடல் ஏறி நரர் வானரரை எல்லாம்
வேறு பெயராதவகை வேரொடும் அடங்க
நூறுவதுவே கருமம்! என்பது நுவன்றான்".

இப்படிப் பேசிய தம்பி கும்பகர்ணனை நோக்கி இராவணன், மிகவும் செளகரியமாக அவன் கூறிய அறிவுரைகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, கோபம் இருந்தாலும் அதனை மறைத்துக் கொண்டு, அவன் இறுதியாகக் கூறிய ஆலோசனையை மட்டும் ஏற்றுக் கொண்டான். "குமரா! நல்லது கூறினாய். நானும் நீ கூறியவாறேதான் எண்ணினேன். இனி தாமதம் கூடாது. உடனே புறப்படுவோம். நீ சொன்னபடி பகைவரை அழித்துத் திரும்புவோம்" என்று சொல்லித் தன் படைத்தலைவர்களிடம் "நம் படை முழுவதும் இப்போதே புறப்படட்டும். பறை அறைந்து அறிவித்து விடு!" என்றான்.

அப்போது இராவணன் மகனான இந்திரஜித் குறுக்கிட்டு "அரசே! நீயே படைகளுடன் சென்று அந்த மனிதர்களைப் போரில் வென்று வருவாயோ? நீ அப்படிப் போவாயானால் என் வீரம் மிகவும் சிறப்படையும், அப்படித்தானே!" என்று கோபமாய் சிரித்தான்.

"அரசே! நான் போருக்குப் போகிறேன். நீரும், நெருப்பும், நிலமும், காற்றும், வானமும், பெரிய உலகமும் யாவும் ஒரே நாளில் நிலை பெயர்ந்து மனிதர்களும் வானரர்களும் ஒருவர்கூட மிஞ்சாதபடி கொன்றுவிட்டுத் திரும்புகிறேன், விடை கொடுங்கள்" என்கிறான் இந்திரஜித்.

அப்போது இராவணனின் மற்றொரு தம்பியும், நற்பண்புகளும், மெய்ஞானமும் நிரம்பப் பெற்ற வீடணன் (விபீஷணன்) குறுக்கிட்டுக் கோபத்துடன் பேசுகிறான்.

"இந்திரஜித்! நீ சிறுவன். ஆராய்ந்து பார்த்து அறிவு பூர்வமாகப் பேசுபவன் போலப் பேசுகிறாய். நடக்கப் போவதையும், அதைத் தடுக்க எது சிறந்த வழி என்பதையும் அறியாத சிறு பிள்ளையாகிய நீ இப்படிப் பேசலாமா?"

"நீ இளைஞன். அரச நீதிகளை நன்கு உணர்ந்திருக்கவில்லை. விவேகம் இல்லாதவனும், கண் இல்லாதவனுமாகிய இருவன் ஓவியம் தீட்டப் புகுந்தது போல பேசுகிறாய். வயதும் அனுபவமும் உடையவர்கள் முடிவு செய்ய வேண்டியவற்றை நீ செய்ய முயலுவது முறையல்ல".

வீடணன் இராவணனை நோக்கி "என் பேச்சை இகழாமல் ஏற்பதானால், உனக்கு நன்மை பயக்கக்கூடிய நல்ல தெளிந்த பொருளை ஆராய்ந்து கூறுவேன்" என்றான்.

"எனக்குத் தந்தையும் நீதான், தாயும் நீதான், தமையனும் நீயே! தினமும் நான் வணங்குகின்ற தெய்வமும் நீயே! எனக்கு மேம்பட்ட அனைத்தும் நீயே! இந்திரனுக்குரிய பெருமையுடைய மூவுலகமும் ஆள்கின்ற அரச பதவியை இழக்கின்றாயே என்றுதான் எனக்கு வருத்தம். ஆகையால் நான் உனக்கு இந்த நல்லுரைகளைச் சொல்லலானேன்".

"உனக்கு யோசனை சொல்லக்கூடிய ஆற்றல் இல்லாதவன் நான் என்றாலும், இதுவரை உனக்குச் சொல்லப்பட்ட யோசனைகள் அனைத்துமே தீமை பயக்கக்கூடியது என்பதால் கூறுகிறேன். ஆகையால் என்மீது கோபப்படாமல் கேட்பாயாக!.

"இலங்கையை ஒரு குரங்கு எரித்தது என்று நீ நினைத்தால் அது தவறு. ஜானகி எனும் உலகத் தாயின் கற்பு இந்த நகரத்தை எரித்தது என்பதுதான் உண்மை, அதனை உணர்ந்துகொள். நன்கு ஆராய்ந்து பார்த்தால் ஒருவனது பெருமை நீங்குவதற்குப் பெண்ணே காரணமாக இருப்பதை நீ உணர்ந்து கொள்ளலாம். அல்லது மண் காரணமாகவும் அந்த நிலை ஏற்படலாம். இது தவிர வேறு காரணங்கள் எதுவும் இருக்க முடியாது".

"ஒரு மானுடப் பெண்ணால் இலங்கை அரசன் தவப் பெருமை நீங்கிக் கெடுவான் எனும் பழைய சாபம் உனக்கு நினைவில் இல்லையா? முன்பு தவம் செய்து பிரமனிடம் வரம் பெற்றபோது மனிதர்களை ஒரு பொருட்டாக நீ கருதவில்லை, அவர்களை வெற்றி பெறுதல் எனும் வரத்தை நீ கேட்கவில்லை. நீ கைலாய மலையைப் பெயர்த்து எடுத்த காலத்தில், நந்தி பகவான் உனக்கு ஒரு சாபம் கொடுத்தார். நினைவு இருக்கிறதா? வால் உள்ள பெரிய குரங்குகளால் உனக்குக் கேடு உண்டாகும் என்று. அதனால்தான் வாலியிடமும் நீ தோற்றாய்".

"தெய்வத் தன்மை வாய்ந்த வேதவதி என்னும் பெண் தீயில் பாய்ந்து உயிர் விட்டபோது, சொன்ன சொல்லின் விளைவை நாம் தடுக்க வல்லவர்களா? உன் மரணத்துக்குக் காரணமான நோயாக ஆவேன் என்று அந்தப் பெண் சொன்னாளே. அவளே முன்பு பாற்கடலில் இருந்த திருமகளின் மறுபிறவி என்பதை உணர்ந்து கொள்வாயாக".

(வீடணன் குறிப்பிடும் இந்த வேதவதி என்பவள் யார்? அவள் ஏன் தீயில் பாய்ந்து உயிரை விட்டாள்? அவள் இட்ட சாபம் என்ன? என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். வேதவதி என்பவள் குசத்துவ முனிவரின் புதல்வி. முனிவர் வேதம் ஓதிக்கொண்டிருக்கும் சமயத்தில் இந்தக் குழந்தை பிறந்ததால் அவளுக்கு 'வேதவதி' என்று பெயரிட்டு வளர்த்தார். அவள் வளர்ந்து பருவமடைந்தபோது, அவளது அழகில் மயங்கி தேவர்கள், அசுரர்கள் முதலானோர் அவளை மணந்து கொள்ள விரும்பினர். முனிவரோ, தம் மகளுக்குத் தகுந்த வரன் திருமால்தான் என்று எண்ணினார். அவளை மணந்து கொள்ள விரும்பி சம்பு எனும் அரக்கன் முன்வந்து தன் விருப்பத்தைத் தெரிவித்தான். முனிவர் அவனுக்குப் பெண் தர மறுத்ததால் அந்த அரக்கன் அவரைக் கொன்று விட்டான். அவரோடு முனிவரின் பத்தினியும் உயிர் நீத்தாள். வேதவதி தந்தையின் விருப்பதிற்கிணங்க திருமாலை மனந்து கொள்ள வேண்டி காட்டில் தவம் இருந்தாள்.

அப்போது திக்விஜயம் மேற்கொண்ட இராவணன் வேதவதியைக் கண்டு அவள் அழகில் மயங்கி, அவளை மணந்து கொள்ள ஆசைப்பட்டான். அவள் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் இராவணன், அவளை வலியத் தீண்டினான். அதனால் சினமடைந்த வேதவதி, 'பிரமன் அளித்த வரத்தின் பலத்தால் ஆணவத்தோடு என்னை நீ தீண்டியதால், உன்னைக் குலத்தோடு அழிக்க நான் மீண்டும் பிறந்து வருவேன். உன் மரணத்துக்குக் காரணமான நோயாக நானே ஆவேன் என்று சொல்லிவிட்டுத் தீயில் பாய்ந்து இறந்து போனாள். அவளே சீதையாக மறுபிறவி எடுத்து வந்திருக்கிறாள் என்பது வீடணனின் வாதம்.)

"தசரத மன்னன் இந்தப் புவிமீது அறமுறை தவறாத ஆட்சி செய்துவந்தான். அப்போது சம்பரன் எனும் அசுர வேந்தன் தேவலோகத்தில் இந்திரனை எதிர்த்துப் போரிட்டு அவனை விரட்டி விட்டான். இந்திரன் தசரத மன்னனிடம் வந்து முறையிட, தசரதன் அந்த சம்பராசுரன் மீது படையெடுத்துப் போர் செய்தான். அந்தப் போரில் தசரதன் சம்பராசுரனைக் கொன்று, இந்திரனுக்கு அவனது தேவலோக ஆட்சியை மீட்டுக் கொடுத்தான்."

"அந்த தசரத மன்னன் இந்திரனையே ரிஷப வாகனமாக்கி அவன்மீது அமர்ந்து போர்புரிந்து அரக்கர் அனைவரையும் அழித்தான். அவனது ரவி வம்சத்தில் பிருதுவும், சகரனும், கங்கையை பூமிக்குக் கொணர்ந்த பகீரதனும் ஆகிய புகழ் வாய்ந்த மன்னர்கள் வரிசையில் இந்த தசரதனும் ஆட்சி புரிந்தான். அவன் தன் மனைவிக்குக் கொடுத்த இரண்டு வரங்களினால், தன் மூத்த மகன் இராமனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டு, அந்தப் பிரிவின் சோகம் தாங்காமல் தன் உயிர் கொடுத்துப் புகழ் பெற்றான்."

"அந்த தசரத குமாரர்களான இராமனும் இலக்குவனும்தான் இப்போது உனக்குப் பகைவர்களாக ஆகியிருக்கிறார்கள். அந்த ராஜகுமாரர்களை நீ சாமானியமாக நினைத்து விடவேண்டாம். எவரோடும் ஒப்பிட முடியாத பெருமைக்கு உரியவர்கள் அவர்கள். முனிவர்களும் தேவர்களும் போற்றி வணங்குகின்ற பெருமையும் தகுதியும் உடையவர்கள். வினைப் பயனால் மானுட உருக்கொண்ட மகோன்னதமானவர்கள்."

"கெளசிக முனிவர் அன்போடு ஆசி வழங்கி, அவர்களிடம் கொடுத்துள்ள படைக்கலன்கள் இமைப்பொழுதில் சகல உலகங்களையும், அவற்றிலுள்ள ஜீவராசிகளையும் அழிக்கவல்ல ஆற்றல் படைத்தவை. வாலியின் உயிரை ஓர் கணையால் எடுத்தவர்கள். அரசே! சொல்ல முடியாத சில தீய நிமித்தங்கள் எங்கும் தோன்றுகின்றன. அந்த இரு வீரர்களுக்கும் துணையாக வந்திருக்கும் வானரப் படை வேறு யாருமல்ல, தேவர்களே! எனவே பகையை வளர்த்துக் கொள்வது நல்லதல்ல".

"உன் சுற்றமும், உன் புகழும், நம் குலத்தோரின் நல்லியல்புகளும் அழிந்து போவதற்கு முன்னதாக, நீ சீதையை இராமனிடம் கொண்டு போய் விட்டுவிடு. அப்படிச் செய்வதுதான் உனக்கு உண்மையான வெற்றி!".

வீடணன் பேசியவற்றைக் கேட்டான் இராவணன். அவன் சொன்னவற்றால் அளவற்ற கோபம் கொண்டான். தன் கையோடு கையை அறைந்து, பற்களைக் கடித்து, உடல் குலுங்க சிரித்தான்.

"உனக்கு உறுதிப் பொருளைக் கூறுவேன் என்று சொல்லிவிட்டு, பித்தர் கூறுவனவற்றைக் கூறினாய். எனது அளவற்ற ஆற்றலை உணர்ந்திருந்தும், என்னை அந்த மனிதர்கள் வெல்வார்கள் என்று பேசுகிறாய். ஏன் அப்படிக் கூறினாய்? அவர்கள்பால் உனக்கு உள்ள அச்சம் காரணமா? அல்லது அவர்கள் மீது உனக்குள்ள அன்பின் காரணமா? வேறு ஏதேனும் காரணம் உண்டா?".

"இந்த மனிதப் பசுக்களைக் கொல்ல வரம் பெறவில்லை என்கிறாய். அஷ்டதிக் கஜங்களை வென்றதும், சிவபெருமானை கைலையங்கிரியோடு பெயர்த்தெடுத்ததும் உண்டா இல்லையா? ஆற்றலுடையவர்களை வெல்லும் வலிமை இருக்கும்போது, ஆற்றல் அற்றவர்களை வெல்லுதல் அரிதான செயலோ?".
"சிந்திக்காமல் பொருளற்ற விஷயங்களைப் பேசிவிட்டாய். என்ன பேசவேண்டும் என்பதையும் நீ அறிந்திருக்கவில்லை. நந்தி இட்ட சாபத்தின்* பயனாய், குரங்குகள் நம்மை அழிக்கும் என்கிறாய். நாம் பெற்ற சாபங்கள் எத்தனையோ உண்டு. அவைகள் எல்லாம் நம்மை என்ன செய்ய முடிந்தன. நம் அழிவை எல்லோரும்தான் விரும்புகின்றனர். முனிவரும், தேவரும் நம் அழிவைக் காண காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைவுகள் நம்மை என்ன செய்ய முடிந்தன?".

(விபீஷணன் நந்தி இட்ட சாபப்படி வாலுள்ள பெரிய குரங்குகளால் இராவணனுக்குப் பெரிய கேடு உண்டாகும் என்று கூறியதன் வரலாறு: இராவணன் குபேரனுடன் போரிட்டு வென்று, அவனுடைய புஷ்பக விமானத்தைக் கைப்பற்றி அதன் மீது அமர்ந்து இலங்கையை நோக்கி போய்க்கொண்டிருக்கையில் கைலை மலை மீதாகச் செல்ல வேண்டியிருந்தது. அப்படி புஷ்பக விமானம் கைலை மலைமீது செல்லும்போது அதன் இயக்கம் நின்று தடைப்பட்டு நின்றது. ஏன் இப்படி நேர்ந்தது என்று இராவணன் சிந்தித்த போது, சிவகணங்களின் தலைவன் நந்திபகவான் தோன்றி, கைலாய மலையின் பெருமையைக் கூறி, அதன்மீது பறப்பது கூடாது என்று சொன்னான். அதற்கு இராவணன் செவிசாய்க்காமல் ஆணவத்துடன் நடந்து கொண்டான். அது போதாதென்று நந்திபகவானைப் பார்த்து இராவணன், 'குரங்குமுகமுடையவன்' என்று பரிகசித்தான். இதனால் நந்தி கோபம் கொண்டு 'நீ என்னை குரங்கு முகமுடையவன் என்று இகழ்ந்ததால், குரங்குகளே இலங்கை நகருக்குள் புகுந்து உன்னையும் உன் குலத்தோரையும் பூண்டோடு அழிக்கும்" என்று சாபமிட்டார். அந்த நந்தியின் சாபத்தைத்தான் விபீஷணன் இப்போது இராவணனுக்கு நினைவு படுத்தினான்).

இராவணன் தொடர்ந்து பேசுகிறான். "வாலியிடம் நான் தோற்றதை எடுத்துக் காட்டுகிறாய். எதிரியின் வலிமையில் பாதியை வாலி பெற்றுவிடும் வரம் பெற்றிருந்தான். அதனால் அவனோடு போரிடும்போது என் வலிமையில் பாதி அவனுக்குப் போனதோடு, அவனது சொந்த வலியும் சேர்ந்து என்னை தோற்கடித்து விட்டான். அந்த வாலியிடம் தோற்றுவிட்டேன் என்பதால் ஊரிலுள்ள எல்லா குரங்குகளிடமும் தோற்றுவிடுவேன் என்று சொல்லுகிறாயா?".

"சிவனும், விஷ்ணுவும்கூட வாலியிடம் நேருக்கு நேர் நின்று போரிடுவார்களானால், அவர்களுடைய பாதி வலிமை வாலிக்குப் போய் அவன் ஜெயிக்க, இவர்கள் தோற்றுப்போவார்கள். நீ சொல்லும் அந்த மனிதனும் அந்த வரத்தை எண்ணிய்;ஏ, வாலியை மறைந்திருந்து கொன்றான்."

"மிகப் பழமையானதும், பழுதுபட்டதுமான ஜனகனின் சிவ தனுசை ஒடித்து, ஏற்கனவே ஓட்டையாக இருந்த கிஷ்கந்தையில் மராமரங்களில் அம்பை செலுத்தி, கூனியின் ஆலோசனையால் அரசை இழந்து, நான் செய்த சூழ்ச்சியால் தன் மனைவியையும் இழந்து விட்டு இப்போது உயிரைச் சுமந்து கொண்டு அலையும் நீ சொல்லும் அந்த மனிதனை, உன்னையன்றி வேறு யார் போற்றுவார்கள்?".

"நீ அறிவற்றவன்!" என்று சொல்லிவிட்டு இராவணன், தன் அவையோரிடம் "நல்லது! நாம் போருக்குப் புறப்படுவோம். எல்லோரும் புறப்படுங்கள்" என்று அறிவித்தான்.

அப்போதும் விபீஷணன் விடாப்பிடியாக இராவனனை நோக்கி "ஐயா! நான் சொல்வதைக் கேள்!" என்று மன்றாடத் தொடங்கினான்.

"தன்னிலும் மேலாக ஒருவரும் இல்லை எனும் ஒப்பற்ற புகழ்கொண்ட திருமால், தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, தீயவர்கள் எனக் கருதப்படும் அரக்கர்களாகிய நம்மை அழிக்கவே மனிதனாய் அவதாரம் எடுத்திருக்கிறார். இதனை அறிந்த பிறகும் அவனுடன் போருக்குப் போவது நல்ல செயலா? அவனோடு போருக்குப் போவதை தவிர்த்து விடு" என்று கெஞ்சி அவன் கால்களில் விழுந்தான்.

விபீஷணன் சொன்னதைக் கேட்டு இராவனன் வெகுண்டான். "அந்த இராமனைத் திருமால் என்று சொல்லுகிறாய். அந்தத் திருமாலே என்னை எதிர்த்துப் போரிட்டு எத்தனை முறை தோற்றிருக்கிறான். இவ்வளவு நாளும் அந்த திருமால் மூச்சற்று விழுந்து கிடந்தானா, இப்பொழுதுதான் அரக்கர்களை அழிக்கப் பிறந்து வந்திருக்கிறானா?"

"நான் இந்திரனை சிறையில் அடைத்தேன். அவனுடைய பட்டத்து யானையான ஐராவதத்தின் தந்தங்களை முறித்தேன். அந்தத் திருமாலைப் போரிலே புறமுதுகிட வைத்தேன்; தேவர்களை அஞ்சி ஓடஓட விரட்டினேன். அப்போதெல்லாம் நீ சொல்லும் அந்த தேவபுருஷன் சிறுவனாக இருந்தானோ? மும்மூர்த்திகளும் என் ஆட்சிக்கு உள்ளே இருந்தார்களே, அப்போதெல்லாம் திருமால் வலிமை குன்றிப்போய் கிடந்தானோ?"

"மிகப் பெரிய விஸ்வரூபத்தை எடுக்க வல்ல திருமால், அது தீயது, சிறுமையுடையது என்று எண்ணி, விஸ்வரூபம் எடுத்து வராமல் மனித உருவம் எடுத்து வந்தானோ?"

"பித்தனாம் சிவனும், திருமாலும் என் பெயரைக் கேட்டாலே ஓடுவார்களே! அவர்களது வாகனங்களான காளை மீதிலும், கருடன் மீதும் நான் விட்ட அம்புகளின் தடங்கள் இன்னும் இருக்கின்றனவே!"

கோபம் கொண்ட இராவணன், விபீஷணனிடம் "கோபமாய் நாங்கள் செய்யும் போருக்கு என்னுடன் நீ வரவேண்டாம். இலங்கையிலேயே பாதுகாப்பாக இரு! பயம் வேண்டாம்" என்று சொல்லிவிட்டு இடி இடிப்பது போல சிரித்தான்.

"வேண்டாம்! உன்னைவிட வலிமையுள்ள பலர் திருமாலுடன் போரிட்டு அழிந்து போய்விட்டார்கள். அப்படி அழிந்து போனவர்களுள் இரண்யன் என்பவனின் வரலாற்றை உனக்குச் சொல்கிறேன் கேள்!" என்று சொல்லி, விபீஷணன் இரண்யனின் வரலாற்றை எடுத்தியம்பத் தொடங்கினான்.

இந்த வரலாற்றின் இந்தப் பகுதியில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான், விபீஷணன் இராவணனுக்குச் சொல்லுவதாக இந்த பிரஹலாதன் - இரண்யன் வரலாற்றைக் கூறி, இறுதியில் இரண்யன் எப்படி நரசிம்ஹத்தால் வதம் செய்யப்படுகிறான் என்பதையும் சொல்கிறார். இந்த இரண்யன் வரலாறு மூலநூலான வான்மீகத்தில் இல்லை. இந்த வரலாற்றை கம்பர் பெருமான் ஏன் தன் இராம காவியத்தில் சேர்த்தார் என்பதற்கு, கம்பர் பிறந்த ஊரான தேரழுந்தூரிலுள்ள ஆமருவியப்பர் எனும் வைணவத் திருக்கோயிலில் உள்ள பெரியவர்கள் கூறும் காரணம் சாலப் பொருத்தமுள்ளதாகத் தெரிகிறது.

தேரழுந்தூரிலுள்ள ஆமருவியப்பர் ஆலய மூலத்தானத்தில் நடுவில் பெருமாளும், ஒரு புறம் கருடாழ்வாரும், மறுபுறம் பிரஹலாதனும் அமர்ந்த நிலையில் காட்சியளிப்பதை நாம் பார்க்கலாம். தன் பிறந்த ஊரின் தலபுராணத்தில் பிரஹலாதனுக்கும், கருடாழ்வாருக்கும் அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் கருதியே, பிரஹலாதனின் சரித்திரத்தை விபீஷணன் வாயிலாக இராவணனுக்குச் சொல்லும் விதத்தில் இராம காதையில் சேர்த்துள்ளார். இறுதியில் போர்க்களத்தில் இலக்குவன் உள்ளிட்ட அனைவரும் நாகபாசத்தால் கட்டுண்டு கிடக்கையில், கருடன் பறந்து வந்து இவர்களை எழுப்பிய வரலாற்றையும் எழுதியுள்ளார்.

இது குறித்து மற்றொரு செவிவழிச் செய்தியும் பக்தர்களால் பரவலாகச் பேசப்படுகிறது. அது, கம்பர் பெருமான் தனது இராம காதையை திருவரங்கத்திலுள்ள ஆலய மண்டபத்தில் (தற்போதைய இராமாயண மண்டபம்) அரங்கேற்றிய போது, பண்டிதர்கள், இந்த இரணியன் வதைப் படலத்துக்கு மூலநூலில் இல்லாதது என்று இதனைச் சேர்க்கக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அதற்கு ஏனையோர், கம்பர் இந்தப் பகுதியைப் பாடி அரங்கேற்ற வேண்டுமானால், அவர் பாடியது சரிதான் என்பதற்கு ஏதேனும் நல்ல தெய்வ அனுமதி கிடைத்தால் சம்மதிப்போம், இல்லையேல் நிராகரிப்போம் என்று சொல்ல கம்பர் அரங்கேற்றினாராம். அப்போது அவர் ஒவ்வொரு பாடலையும் பாடி முடித்தவுடன் அங்கிருந்த நரசிம்ஹருடைய விக்ரகம் தன் தலையை ஆட்டியும், திருக்கரங்களை நீட்டியும், சிம்ஹ கர்ஜனை புரிந்தும் ஆமோதித்ததாகவும் கூறுவார்கள். அவையோர் இவற்றைக் கண்டு வியந்து கம்பர் பெருமானின் இராமகாதையை தெய்வத் தன்மை வாய்ந்தது என்று ஏற்றுக் கொண்டதாகவும் கூறுவார்கள். இங்ஙனம் இந்தப் பகுதி இராம காதையில் இடம் பெற்றிருப்பதை நாமும் படித்து அருள் பெருவோமாக!

விபீஷணன் தன் தமையனான இராவணனுக்கு பற்பல அறிவுரைகளைக் கூறியபோதும், அவன் லட்சியம் செய்யாததால், அவன் எவ்வளவு வலிமை உடையவனாயினும், உலகிறகு முதல்வனான திருமாலையும் அவன் பேராற்றலையும் விளக்கி, திருமாலைப் பகைத்தோர் அழிந்தொழிவது நிச்சயம் என்பதனையும் அறிவுறுத்தும் வகையில் நரசிம்ஹாவதாரத்தை எடுத்து இயம்பலுற்றான்.

பிரமனுடைய பேரனும் மரீசியின் புதல்வனுமானவர் காசிப முனிவர். இவருக்கும் திதி என்பாளுக்கும் பிறந்தவன் இரணியன். இரண்யம் என்றால் பொன் என்று பொருள். இவன் பொன் நிறத்தவனாதலின் இவனை இரண்யன் என்று அழைத்தார்கள்.

இவனுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் இரண்யாட்சன். திருமாலின் துவார பாலர்களாக இருந்த ஜயன், விஜயன் என்பவர்களே ஒரு சாபத்தால் அரக்கர்களாகப் பிறந்தனர். இரண்யாட்சனைத் திருமால் தன் வராக அவதாரத்தின் போது கொன்றுவிட்டார்.

இரண்யன் கடுமையான தவத்தினைச் செய்து பிரமனிடம் ஒரு வரம் வாங்கினான். அந்த வரம் "தேவர்களாலோ, மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஐம்பெரும் பூதங்களாலோ, வேறு எந்த படைக்கலன்களாலோ, பகல் நேரத்திலோ, இரவு நேரத்திலோ, வீட்டுக்கு உள்ளிலோ, அல்லது வீட்டுக்கு வெளியிலோ தனக்கு இறப்பு வரக்கூடாது" என்பதாகும். மிகவும் ஜாக்கிரதையாக எவற்றால் எல்லாம் இறப்பு நேரிடக்கூடுமா, எங்கெல்லாம் இறப்பு நேரிடக்கூடுமோ அங்கெல்லாமும், அவற்றால் எல்லாமும் இறப்பு வரக்கூடாது என்று முன் எச்சரிக்கையோடு இந்த இரண்யன் வரம் வாங்கினான்.

அசுரர் வேந்தனான இரண்யன் தேவர்கள் முதலான அனைவர்க்கும் எல்லையற்ற துன்பத்தைக் கொடுத்து வந்தான். உலகத்தார் தன்னையே முழுமுதல் கடவுளாக வழிபடவேண்டும், கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டான். இவனது கொடுங்கோன்மைக்கு அஞ்சி நடுங்கி, உலகத்தார் அவன் சொற்படி கேட்டு நடந்து வாழ்ந்து வந்தனர்.

இரண்யனுக்கு ஒரு மகன் உண்டு. அவன் பெயர் பிரஹலாதன். குருகுலம் சென்று படிக்கும் வயதை அடைந்தான். அவனை ஓர் ஆசிரியரிடம் கல்வி கற்பிப்பதற்காக குருகுலவாசத்துக்கு அனுப்பி வைத்தான். அந்த குருகுலத்தில் ஆசிரியர் வேதத்தைப் பயிற்றுவிப்பதற்கு முன்பாக "ஓம் நமோ நாராயணாய நம:" என்று சொல்லுவது வழக்கமாக இருந்தது. இதை இரண்யன் மாற்றி, இனி அனைவரும் "இரண்யாய நம:" என்றுதான் சொல்ல வேண்டுமென்று ஆணையிட்டான். பிரஹலாதனுக்குப் பாடம் எடுத்த குருவும், அந்த ஆணைப்படியே "இரண்யாய நம:" என்று சொல்லிக் கொடுத்தார். ஆனால் அப்படிச் சொல்ல மறுத்து பிரஹலாதன் "ஓம் நமோ நாராயணாய நம:" என்ற மந்திரத்தையே திரும்பத் திரும்பச் சொன்னான்.

ஆசிரியர் இரண்யனிடம் சென்று அவனுடைய மகன் பிரஹலாதன் தான் சொல்லிக்கொடுத்தபடி "இரண்யாய நம:" என்று சொல்ல மறுப்பதையும், அவன் நாராயண மந்திரத்தையே உச்சரிப்பதாகவும் முறையிட்டான். இரண்யன் தன் மகனிடம் இதமாகவும் அன்பாகவும் தன் ஆற்றலையும், தேவர்கள் தனக்குக் கீழ்ப்படிந்தவர்கள் என்பதையும், தன் பெயரைத்தான் முதலில் சொல்லி வணங்கி பாடத்தைத் தொடங்க வேண்டுமென்றும் எடுத்துரைத்தான். ஆனால், பிரஹலாதனோ திருமாலே பரம்பொருள் என்றும், அவரை இகழ்வதால் அனைவருக்கும் அழிவு நேரிடும் என்றும் எடுத்துரைத்தான். இரண்யன் கேட்பதாக இல்லை. மகனைத் துன்புறுத்தியாவது தன் பெயரைச் சொல்லி வணங்கச் செய்யும்படி ஆணையிட்டான்.

அரசனின் ஆணைப்படி ஏவலர்கள் பிரஹலாதனுக்கு தண்டனைகள் என்ற பெயரில் துன்பங்களை இழைத்தனர். வாள் கொண்டும், மழு எனும் ஆயுதத்தாலும் அந்தச் சிறுவனைத் தாக்கினர். என்ன நேர்ந்த போதும் நாராயண மந்திரத்தை உச்சரிப்பதை மட்டும் பிரஹலாதன் நிறுத்தவேயில்லை. கோபமடைந்த இரண்யன் ஆணைப்படி, காவலர்கள் பிரஹலாதனைத் தீக்குழிக்குள் தள்ளினார்கள். தீ அவனைச் சுடவில்லை. அனந்தன் முதலான பாம்புகளை விட்டுக் கடிக்க வைத்தான். அவற்றின் விஷப் பற்கள்தான் முறிந்துபோனவே தவிர பிரஹலாதனை விஷம் தாக்கவில்லை. பிரஹலாதனின் தலையை பட்டத்து யானையை விட்டு இடற ஆனையிட்டான். அந்த யானை பிரஹலாதனை வணங்கிக் கும்பிட்டுவிட்டுப் பின் வாங்கிப் போய்விட்டது. அந்த யானையைக் கொன்றுவிடும்படி அரசன் ஆணையிட்டான். ஆனால் அந்த யானை தன்னைத் தாக்க வந்தவர்களையே இடறிவிட்டது.

எதற்கும் பிரஹலாதன் சாகாதது கண்டு, இரண்யன் அவனைப் பாறையோடு கட்டி கடலில் தூக்கி எறியச் சொன்னான். ஆனால், அந்தப் பாறை தெப்பம் போல கடலில் மிதந்து அவனைக் கரை சேர்த்ததே தவிர மூழ்கவில்லை. கடுமையான நஞ்சை அவனுக்கு ஊட்டுமாறு மன்னன் கட்டளையிட்டான். அந்த நஞ்சும் அவனை ஒன்றும் செய்யவில்லை.

இவ்வளவு செய்தும் சாகாத பிரஹலாதனைத் தானே கொல்வேன் என்று கிளம்பினான் இரண்யன். அதற்கு பிரஹலாதன் "என் உயிர் இறைவன் கொடுத்தது. அதைப் போக்கும் உரிமை உனக்கு இல்லை" என்றான். "யார் அந்த இறைவன் என்றான்" இரண்யன்.

"உலகையும் உயிர்களையும் படைத்தவன் திருமால்" என்றான் பிரஹலாதன்.

"யார் அந்தத் திருமால்?" என்று இரண்யன் கேட்டான். அதற்கு பிரஹலாதன் "அவன்தான் உலகையும், உயிர்களையும் படைத்தும், காத்தும், அழித்தும் முத்தொழிலைச் செய்பவன். உலகுக்கு உயிர்களையும், மலருக்கு மணத்தையும், எள்ளில் எண்ணெயையும் கொடுத்தவன்" என்றான்.

"அவன் எங்கே இருக்கிறான்?' என்றான் இரண்யன்.

"அவன் தூணிலும் உள்ளான், துரும்பிலும் உள்ளான், எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் அவன்" என்று பதில் சொன்னான்.

"சாணினும் உளன்; ஓர் தன்மை அணுவினை சதகூறு இட்ட
கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந்நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத்தன்மை
காணுதி விரைவின்' என்றான்; நன்று எனக் கனகன் சொன்னான்."

"அவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்றால், இந்தத் தூணிடத்தே அவனைக் காட்டு, இல்லையேல், உன்னைக் கொல்வேன்" என்றான் இரண்யன்.

அதற்குப் பிரஹலாதன் "என் உயிர் உன்னால் பறிக்கத்தக்க அளவு எளிதானதல்ல. நான் சொல்லும் இறைவன் தொட்ட இடத்திலெல்லாம் தோன்றானாயின் நான் அவனது உண்மையான அடியவன் அல்ல" என்று சூளுரைத்தான்.

உடனே இரண்யன் அங்கிருந்த தூண் ஒன்றத் தன் கையால் அறைந்தான். அந்தத் தூணுக்குள்ளிருந்து நரசிம்ஹத்தின் பெரும் சிரிப்பொலி எழுந்தது. தூணின் உள்ளே நரசிம்ஹன் வந்துவிட்டதை அறிந்த பிரஹலாதன் மகிழ்ந்தான். பாடினான்; ஆடினான்; இறைவனை வாயார வாழ்த்தித் துதித்தான்.

தூணின் உள்ளேயிருந்து சிரிப்பொலி கேட்டதும், இரண்யன் "யாரடா அவன் சிரித்தது?" என்று கேட்டுவிட்டு, "புறப்படு! புறப்படு! என்னுடன் போருக்கு வா!" என்று அழைத்தான்.

"ஆர் அடா சிரித்தாய்? சொன்ன அரி கொலோ? அஞ்சிப் புக்க
நீர் அடா, போதாது என்று நெடுந்தறி நாடினாயோ?
போர் அடா பொருதி ஆயின் புறப்படு! புறப்படு! என்றான்
பேர் அடா நின்ற தாளோடு உலகு எலாம் பெயரப் பேர்வான்"

இரண்யன் இப்படிச் சொன்ன அந்த நொடியே அந்தத் தூண் பிளந்து, வெடித்துச் சிதற, உள்ளேயிருந்து பெரும் கோபத்துடன் கண்கள் சிவந்து தீ உமிழ, பெரும் கர்ஜனையோடு, நரசிம்ஹம் வெளிப்பட்டது. வானுக்கும் பூமிக்குமாக நின்று உலகே அதிரும்படி கர்ஜித்து நின்ற நரசிம்ஹத்தின் தோற்றம் அச்சம் தருவதாக இருந்தது.

"பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும், பகிரண்டம் முதல் மற்றும்
அளந்தது; அப்புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்?
கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது கீழும் மேலும்".

அண்டம் அதிர, உலகம் கிழிய பெரும் கர்ஜனையோடு வான் முட்டும் தோற்றத்தோடு வந்து தோன்றிய நரசிம்ஹத்தைக் கண்டதும் இரண்யன் கையில் வாளும், கேடயமும் ஏந்தி அவரை எதிர்க்கப் புறப்பட்டான். அப்போது பிரஹலாதன், அவனைத் தடுத்து "நீ உய்ய வேண்டுமானால் சங்கும் சக்கரமும் ஏந்திய திருமாலை வணங்கி நற்கதி அடைவாயாக!" என்று அன்புடன் வேண்டிக் கொண்டான்.

தன்னிலும் மேம்பட்டவராக எவரையும் மனதாலும் கருதாத இரண்யன், பிரஹலாதனை இகழ்ந்து சிரித்து, நரசிம்ஹமூர்த்தியை எதிர்த்தான். அந்நிலையில் நரசிம்ஹம் இரணியனுடைய இரண்டு கால்களையும் தன் ஒரு கையால் பற்றிச் சுழற்றி, அந்தி நேரமாகிவிட்ட அந்த நேரத்தில், அரண்மனை வாயிற்படியில், அவனைத் தொடைமேல் தாங்கிக் கொண்டு, தன் கைகளின் நகங்களால் அவன் மார்பைப் பிளந்து, உயிரைக் குடித்தார். இரண்யனின் கொடுமையால் வாடிய தேவர் முதலானோர் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

"ஆயவன் தன்னை, மாயன் அந்தியின், அவன் பொன் கோயில்
வாயிலில், மணிக் கவான் மேல், வயிரவாள் உகிரின், வானின்
மீஎழு குருதி பொங்க, வெயில் விரி வயிர மார்பு
தீஎழப் பிளந்து நீக்கி தேவர்கள் இடுக்கண் தீர்த்தான்".

இரண்யனுக்கு அஞ்சி முன்பு ஓடி ஒளிந்த பிரமன், ருத்ரன் முதலானோர் பயம் நீங்கித் திரும்பி வந்தனர். கூடிய அனைவரும் நரசிம்ஹத்தின் பேருருவையும், இரத்தம் படிந்த பயங்கரத் தோற்றத்தையும் கண்டு அஞ்சி நடுங்கினர். பிரமன் நரசிம்ஹத்தைத் துதித்துப் போற்ற, நரசிம்ஹன் பொங்கி மேலெழுந்து நின்ற கோபத்தை உள்ளடக்கிக் கொண்டு "அஞ்சாதீர்கள்" என்று அபயம் அளித்தான்.

நரசிம்ஹன் இரண்யனை பகலும் இல்லாத இரவும் இல்லாத அந்தி நேரத்தில், வீட்டின் உள்ளேயோ அல்லது வெளியேயோ இல்லாமல் அரண்மனை வாயிற்படியில், தரையிலோ அல்லது ஆகாயத்திலோ இல்லாமல் தனது தொடைமீது வைத்து, ஈரமுள்ல உடல் உறுப்புகளாலோ அல்லது ஆயுதங்களாலோ அன்றி தனது விரல் நகங்களால் கிழித்து நெஞ்சைப் பிளந்து குருதி பொங்கக் கொன்றதற்கு, முன்பு இரண்யன் பெற்ற வரமே காரணம். அந்த வரம் என்ன என்பதைப் பார்ப்போம்.

இரண்யன் நீண்ட நாட்கள் கடுமையாக தவம் செய்து பிரமதேவனிடம் வரம் கேட்டான். அவன் கேட்ட வரம் தனக்கு மனிதர்கள் உருவிலோ அல்லது விலங்குகள் உருவிலோ, இரவு நேரத்திலோ அல்லது பகல் நேரத்திலோ, பூமியிலோ அல்லது ஆகாயத்திலோ, ஈரமான உறுப்புகளாலோ அல்லது ஈரமற்றதான ஆயுதங்களாலோ, வீட்டிற்குள்ளோ அல்லது வெளியிலோ யாரும் கொல்ல முடியாத வரம் வேண்டுமென்று கேட்டு அப்படியே பெற்றான். அவன் பெற்ற இந்த வரத்தினால்தான் நரசிம்ஹமூர்த்தி மேலே குறிப்பிட்ட எந்த வகையாலும் இல்லாமல் அவனை சம்ஹாரம் செய்தார். அது இரவுமற்ற, பகலுமற்ற அந்திப் பொழுதில், பூமியும் இல்லாமல் ஆகாயமும் இல்லாமல் தனது தொடையின் மீது வைத்து, ஈர உறுப்புகளாலோ அல்லது உலர்ந்த ஆயுதத்தாலோ இல்லாமல் தன் விரலின் நகங்களால் கிழித்து, மனித உருவமும் இல்லாமல், மிருக உருவமும் இல்லாத நரசிம்ஹ உருவம் எடுத்து, வீட்டின் உள்ளோ அல்லது வெளியோ இல்லாமல் வாயிற்படியில் வைத்து அவனை சம்ஹாரம் செய்தார்.

இரண்ய வதம் முடிந்து நரசிம்ஹ மூர்த்தியும் கோபம் தணிய, தேவர்கள் அனைவரும் பிராட்டியாகிய திருமகளை வேண்டிப் போற்றி நரசிம்ஹ மூர்த்தியின் அருகே சென்று அவரை அமைதிப்படுத்த வேண்டினர். நரசிம்ஹரும் சினம் தணிந்து திருமகளை அன்போடு நோக்கினார். கூடியிருந்தோர் அனைவரும் நரசிம்ஹத்தைப் போற்றி வணங்கினர்.

தனது தந்தையின் மரணத்துக்குத் தானே காரணமாக இருந்து, அவன் தன் கண் முன்னேயே மாண்டபோதும், தன்னிடம் பேரன்பும் பக்தியும் பூண்டு நிற்கும் பிரஹலாதனைப் பாராட்டிய நரசிம்ஹம் உனக்கு நான் செய்ய வேண்டியது எதுவாயினும் கேள் என்று கேட்டார். அதற்கு பிரஹலாதன் சொன்னான்:

"புழுவாய்ப் பிறக்கினும் நின் திருவடிகளைப் பணிந்து, நின் அருளைப் பெற அருள் புரிவாய்!" என்றான். பிரஹலாதனின் மொழிகளைக் கேட்ட நரசிம்ஹம் ஐம்பெரும் பூதங்கள் அழியினும் நீ என்றும் என்னைப் போல அழிவற்று சிரஞ்ஜீவியாய் நிலைத்திருப்பாய். உலக உயிர்கள் அனைத்தும் என்னைப் பணிந்து பெறும் நற்பயன்களை, நின்னைப் பணிந்தும் பெறட்டும். அசுரர்களுக்கு மட்டுமன்றி தேவர்களுக்கும் நீயே அரசன்" என்று வரம் அளித்தார்.

"நல் அறமும், மெய்ம்மையும், நான் மறையும், நல் அருளும்
எல்லை இலா ஞானமும், ஈறு இலா எப்பொருளும்
தொல்லை சால் எண்குணனும், நின் சொல் தொழில் செய்க;
நல்ல உரு ஒளியாய் நாளும் வளர்க நீ"

மேலே கண்டபடி நரசிம்ஹப் பெருமாள் பிரஹலாதனுக்கு வாழ்த்துச் சொல்லி ஆசீர்வதித்தார். பிறகு பிரமதேவன் வேள்விச் சடங்குகளைச் செய்து பிரஹலாதனை மூவுலகங்களுக்கும் அரசனாக்கினான்.

இந்த வரலாற்றைக் கூறி முடித்த விபீஷணன் இராவணனிடம் "எம் வேந்தனே! இது முன்னர் நடந்த வரலாறு. யான் உரைத்த இவ்வறிவுரையில் ஏதேனும் பொருள் இருக்குமானால் அதனை ஏற்று அதன்படி நட. இல்லையேல், இதனை இகழ்வாய் ஆயின் அதனால் உனக்குத் தீங்கு விளைதல் உறுதி" என்று கூறினான்.

தன் தம்பி கூறிய அறிவுரைகளை இராவணன் செவிகள் கேட்டனவே தவிர, அவன் மனம் சீதையைப் பற்றிய கனவுகளிலேயே இருந்ததால், அந்த அறிவுரைகள் எதுவும் அவன் மனதில் ஏறவில்லை. விபீஷணன் மீது அளவற்ற கோபம் கொண்டான்.

"இரண்யன் எம்மை விட வலிமையுடையவனா? அவனைக் கொன்றதால் திருமால் வலிமையுடையவனோ? அவன் மீது உனக்கு ஏன் இவ்வளவு பக்தி?"

"தந்தையான இரண்யனைத் தன் கண் எதிரிலேயே கொன்ற போதும் வருந்தாத பிரஹலாதனும் நீயும் ஒன்றுதான். இரண்யனைக் கொன்று பிரஹலாதன் செல்வத்தையும் ராஜ்யத்தையும் அடைந்ததைப் போல, உனக்கும் ஆசை ஏற்பட்டுவிட்டது போல இருக்கிறது. அதனால்தான் இராம லக்ஷ்மணரிடத்து உனக்கு இவ்வளவு பரிவும் பாசமும் ஏற்பட்டிருக்கிறது. போ! நீ போய் அவர்களிடமே அடைக்கலம் கொள்!".

"பகைவனிடம் அச்சம் கொண்ட நீ போர் செய்ய மாட்டாய். உன்னை உடன் வைத்துக் கொள்வது எனக்கு நல்லதும் அல்ல. உன்னைக் கொன்றால் தம்பியைக் கொன்ற பழி எனக்கு வரும் என்பதால், நான் உன்னைக் கொல்லவில்லை. எனக்கு உபதேசம் செய்வதை உடனே நிறுத்திக் கொள்! இனியும் நீ என் கண்முன் நிற்காதே! இங்கிருந்து உடனே ஓடிப்போய்விடு! மேலும் இங்கு தாமதித்தால் என் கையாலேயே உன்னைக் கொன்றுவிடுவேன்" என்றான் இராவணன்.




விதி வழியில் மதி செல்கிறது. அழிவை நோக்கிச் செல்லும் அவனுக்கு அறிவு வேலை செய்யவில்லை.

"பழியினை உணர்ந்து, யான் படுக்கிலேன் உனை
ஒழி சில புகலுதல்; ஒல்லை நீங்குதி;
விழி எதிர் நிற்றியேல், விளிதி என்றனன்
அழிவினை எய்துவான், அறிவு நீங்கினான்".

இங்ஙனம் இராவணன் வெகுண்டு உரைத்ததும், விபீஷணன் தன் துணைவர்கள் சிலருடன் அவ்விடத்திலிருந்து மேலே எழும்பி வானத்தில் சென்று, அங்கு அந்தத் துணைவர்களுடன் ஆலோசனை நடத்தியபின், தன் அண்ணன் அழிந்துவிடுவானே என்ற கவலையினால் மீண்டும் அவனுக்குச் சில நீதிகளை எடுத்துரைத்தான்.

"இராவணா! நான் சொல்வதைக் கேள்! ஊழிக்காலம் வரை செல்வச் செருக்கோடு வாழ வேண்டிய நீ கீழோர் சொல் கேட்டு அழிய நினைக்கிறாய். தர்மம் தவறினால் நல்வாழ்வு கிட்டுமா? உன் மக்கள், குரு முதலானவர்களையும், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையும் களபலி கொடுத்துவிட்டு நீ அந்தப் பேரழிவைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயா?"

"உனக்கு எத்தனை நீதிகளைச் சொன்னேன். அவற்றையெல்லாம் நீ உணரவில்லை. என் தந்தைக்கு ஒப்பானவனே! என் பிழையைப் பொறுத்துக் கொள்!" என்று சொல்லிவிட்டு, வானவழியாக அந்த இலங்கையை விட்ட் நீங்கிச் சென்றான், அந்த உத்தமமான விபீஷணன். விபீஷணனுடன் நான்கு அமைச்சர்களும் சேர்ந்து கொண்டு அவனுடன் சென்றனர். அவர்கள் அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகியோராவர்.

அண்ணன் இராவணன் நீ போய்விடு இல்லையேல் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று அச்சுறுத்துகிறான். அவனுக்கு எடுத்துரைத்த நீதிகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்தது. இனி என்ன செய்வது? தன் துணைவர்களாக வந்து சேர்ந்து கொண்ட அந்த நான்கு அமைச்சர்களோடும் இலங்கையை விட்டு நீங்கி, கடலின் அந்தக் கரையில் பெரிய கடல் போன்ற வானர சேனையோடு வந்து தங்கியிருக்கிற இராமபிரானிடம் சென்று தஞ்சமடைவோம் என்று புறப்பட்டார்கள்.

தன் துணைவர்களோடு பெருங்கடலைக் கடந்து வானவழியாக அக்கரையில் தங்கியிருந்த கடல் போன்ற வானரப் படையைக் கண்டான் விபீஷணன். இப்போது நாம் என்ன செய்யலாம் என்று அமைச்சர்களோடு விபீஷணன் கலந்து ஆலோசித்தான். அவர்கள் அனைவரும் ஒருமித்தக் கருத்துடன் தாழ்வு இல்லாத ஞானப் பொருளாகவும், தர்மத்தின் வடிவாகவும் விளங்குகின்ற இராமபிரானைச் சென்று காண்பதே இப்போது நமது கடன் என்று முடிவு செய்தார்கள்.

விபீஷணன் சொல்கிறான்: "இராமனை நான் முன்பு பார்த்ததும் இல்லை. அவனைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டதும் இல்லை. எனினும் அவனைப் பற்றி எண்ணுகின்ற போது எனது என்புகள் உருகுகின்றனவே. உள்ளத்தில் அன்பு மேலிடுகிறது. அந்த இராமன், நமது பிறவி நோய்க்கு மருந்தாக வந்திருக்கிற இறைவன்தானோ?"

அவர்கள், இராமனும் வானரப் படைகளும் தங்கியிருக்கிற பகுதிக்கு வந்து சேர்ந்தபோது இரவு நேரம் வந்துவிட்டது. இந்த இரவு நேரத்தில் புதியவர்களான நாம் சென்று இராமனைக் காண்பது இயல்பானதாக இருக்காது. ஆகையால் நாம் இன்று இரவை ஒரு மரச் சோலையில் கழித்து காலையில் சென்று இராமனைக் காணலாம் என்று முடிவு செய்து, அங்ஙனமே சோலையில் போய்த் தங்கினர்.

இராமபிரான் தங்கியிருந்த இடத்தில், இந்தக் கடலை எப்படித் தாண்டிச் செல்வது என்ற கவலையில் இராமன் ஆழ்ந்திருந்தான். சீதையின் நினைவு வேறு அடிக்கடி இராமனை வாட்டிக் கொண்டிருந்தது. சுற்றிலுமிருந்த இயற்கை வனப்புகள் அனைத்துமே சீதையை நினைவூட்டுவனவாக இருந்தன. உணர்ச்சிக் கொந்தளிப்பால் இராமன் சிந்தை கலங்கிப் போயிருந்தது, அப்போது அனுமன் முதலானவர்கள் அங்கே வந்து சேர்ந்தனர். அங்கு அவர்கள் அமர்ந்து ஆலோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், இராமனைக் காண வேண்டி இலங்கையிலிருந்து வந்து சோலையில் தங்கியிருந்த விபீஷணனும் அவன் அமைச்சர்களும் அந்தப் பிரதேசத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

விபீஷணனையும் அவன் அமைச்சர்களையும் கண்டதும், கூட்டம் கூட்டமாய் நின்று கொண்டிருந்த வானர வீரர்கள் அனைவரும், இதோ பாருங்கள், நம்மிடையே அரக்கர்கள் வந்துவிட்டார்கள். அவர்களைப் பிடியுங்கள், அடியுங்கள், கொல்லுங்கள் என்று ஓடிவரத் தொடங்கினார்கள்.



"இவன் இராவணனாகத்தான் இருக்க வேண்டும். தர்மமே இவன் மனதை மாற்றி, தவறை உணர்ந்து சரணடைய இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது" என்று சில வானர வீரர்கள் சொன்னார்கள்.

"இராவணனுக்கு இருபது கரங்கள், பத்து தலைகள், ஆனால் இவனுக்கு ஒரு தலை, இரண்டு கைகள்தானே இருக்கிறது. மற்றவை எங்கே? சிதைந்து போயினவோ?" என்று ஐயத்தைக் கிளப்பினார்கள் சில வானரர்கள்.

சில வானரர்களோ, "வாருங்கள்! வாருங்கள்!! வந்து எங்களோடு போர் செய்யுங்கள்" என்று அறைகூவல் விட்டார்கள். வேறு சிலரோ "இவர்களைப் பிடித்து சிறையில் அடையுங்கள், பிறகு இராமனிடம் சென்று சொல்வோம்" என்றார்கள்.

"எச்சரிக்கையாக இருங்கள், இவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் விண்ணில் எழுந்து போய்விடுவார்கள். அதற்கு முன் இவர்களைக் கொல்லுங்கள்" என்று ஓடிவந்தனர் சிலர்.

இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அனுமன், அங்கே அருகே இருந்த மயிந்தன், துமிந்தன் எனும் நீதி நெறி அறிந்த இருவரை அழைத்து, அங்கே யார் வந்திருக்கிறார்கள், வானர வீரர்கள் ஏன் கூச்சலிடுகிறார்கள் என்ற விவரங்களைத் தெரிந்து வருமாறு அனுப்பி வைத்தான். மயிந்தனும், துமிந்தனும் உடனே புறப்பட்டுப் போய் கூட்டமாய் நின்று கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்த வானர வீரர்களையெல்லாம் விலக்கிக் கொண்டு வந்திருப்பது விபீஷணனும் அவன் அமைச்சர்களும் என்பதைத் தெரிந்துகொண்டு அவர்கள் அருகில் வந்தனர். இவர்களை நன்றாக கவனித்தபின் மயிந்தனும் துமிந்தனும் இவர்களைப் பார்த்தால் வஞ்சனை எண்ணம் எதுவும் இல்லாதவர்களாகத் தோன்றுகிறார்கள், அறநெறியும், ஞானமும் உள்ளவர்கள் என்று அறிந்து கொண்டார்கள்.

விபீஷணனை நோக்கி இவர்கள் "நீங்கள் யார்? இங்கு வந்ததின் நோக்கம் என்ன? போர் புரிவதற்காக வந்தீர்களா, அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா?" என்று கேட்டார்கள்.

அதற்கு விபீஷணன் கூறுகிறான்: "சூரிய வம்சத்தில் உதித்த அறத்தின் நாயகன் இராமனுடைய கழலடிகளில் புகலிடமாக அடைவதற்காக நடு நிலையும், நேர்மையுமுடையவனும், சத்தியத்தைக் கடைப்பிடிப்பவனுமான பிரமனின் பேரனுடைய மகன் விபீஷணன் வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்" என்றான்.

"எனது அண்ணனான இராவணனுக்கு அவன் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ள எவ்வளவோ சொல்லியும், பற்பல நீதிகளை எடுத்துச் சொல்லியும் அவன் கேட்கவில்லை. தர்மத்துக்குப் புறம்பான செயலைச் செய்துவிட்டு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அவன் எனது அறிவுரைகளைக் கேட்டு கோபம் கொண்டு, உயிர் பிழைக்க வேண்டுமானால் இங்கே நிற்காதே ஓடிவிடு என்று எங்களைத் துரத்திவிட்டான், ஆகையால் இராமன் கழலடியில் சரணாகதியடைய வந்திருக்கிறோம்" என்றான் விபீஷணன்.

மயிந்தனும் அனலனும் தாங்கள் கேட்டுத் தெரிந்துகொண்ட விவரங்கள் அனைத்தையும் இராமனிடம் சொல்லி, இராவணனின் தம்பி விபீஷணன் அடைக்கலம் தேடி தங்களை நாடி வந்திருக்கிறான் என்ற செய்தியைக் கூறினர். அவர்களைக் கொல்லுங்கள், வெட்டுங்கள் என்று விரைந்து ஓடிய வானர சேனையை ஒழுங்குபடுத்தி சும்மாயிருக்கச் சொல்லிவிட்டு வந்ததாகவும் தெரிவித்தார்கள்.

அறத்தைப் பின்பற்றி ஒழுகும் விபீஷணன் சொற்களை இராவணன் நிராகரித்து விரட்டியடித்து விட்ட செய்தியையும் அவன் உயிர் பிழைத்து இராமனிடம் புகலிடம் தேடும் செய்தியையும் அவர்கள் இராமனிடம் கூறினார்கள்.

உடனே இராமன் தன் அருகில் இருந்த சுக்ரீவன் முதலானவர்களிடம் "இவ்வளவு செய்திகளையும் கேட்டுக் கொண்டிருந்தீர்களே! விபீஷணனுக்கு நாம் அடைக்கலம் கொடுக்கலாமா? என்பதை சொல்லுங்கள்" என்றான்.

சுக்ரீவன் இராமனை வணங்கிவிட்டு சொல்கிறான்: "விபீஷணன் இங்கே அடைக்கலம் தேடி வந்திருக்கக்கூடிய நேரம் சூழ்நிலை இவற்றைக் கருத்தில் கொண்டு என்னுடைய கருத்தைச் சொல்லுகிறேன். இராமா! முற்றும் உணர்ந்த நீ என்னிடம் கருத்துக் கேட்பது நட்பு கருதியே என்பதை நான் உணர்வேன். ஆயினும் சொல்கிறேன். விபீஷணன் தன் அண்ணனோடு போர் செய்தாலோ, அல்லது இவன் உயிரைப் பறிக்க முயன்றாலோ அன்றி, அவன் இங்கே நம்மை நாடி வந்தது முறையல்ல. இது போன்ற நேரத்தில் அண்ணனைப் பிரிந்து வருதல் தர்மமும் அல்ல. மேலும் அரக்கர்களில் உயர்ந்த பண்புடையவர்கள் எவரும் உளரோ?"



"பகைவர் நெருங்கி வரும்போது, தாய் தந்தையரையும், அண்ணனையும், குருவையும், வேந்தனையும் விட்டு நீங்கி வருதல் விரும்பத்தக்க செயலோ? நகைப்புக்கு இடமல்லவா? தேவைப்பட்டபோது அண்ணனோடு இணங்கி இருந்து விட்டு, அவன் போர் என்று கிளம்பும்போது அவனை விட்டுப் பிரிந்து சென்று பகைவரோடு சேருதல் ஆண்மைக்கு அழகோ?"

"அரக்கர்களையே பூண்டோடு அழிக்க நாம் விரதம் மேற்கொண்டிருக்க, அரக்கரில் சிலரையே நம்முடன் சேர்த்துக் கொள்ளுதல் நன்றோ? மேலும் அரக்கர்கள் நிலையான குணம் உள்ளவர்கள் அல்ல. நம் கையில் பொருள் உள்ள போது ஒன்றும், பொருள் இல்லாத போது மாறுபட்டும் இருப்பார்கள்".

"இராவணனிடத்து மாறாத அன்பு பூண்ட விபீஷணன் நம்மிடம் ஏதோ வஞ்சனை செய்யக் கருதிதான் வந்திருக்கிறானே தவிர உண்மையில் நம்மிடம் அடைக்கலம் தேடி வந்தவன் அல்ல!." சுக்ரீவன் இப்படித் தன் கருத்தைக் கூறிய பிறகு, இராமபிரான் அளவற்ற ஞானமுடைய ஜாம்பவானிடம் உன் கருத்து என்ன என்றான்.

ஜாம்பவான் கூறுகிறான்: "சிறந்த அறிஞர் என்பதற்காக ஒரு பகைவரை நம்முடன் சேர்த்துக் கொள்வது அழிவுக்கு ஏதுவாகும். அரக்கர்களுக்கு அறவழி என்பது நம்மிடமிருந்து மாறுபட்டதாகும். நாம் இராவணனோடு போரிடுங்கால், இவர்கள் நல்ல உபாயங்களைச் சொல்வார்கள் என்பது உண்மைதான். நமக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளுக்கும் காரணங்களை அறிந்து அவற்றை நிவர்த்திப்பார்கள். எல்லாம் சரிதான், ஆனால் அவர்கள் நமது பரம்பரை எதிரிகள் என்பதை மறந்துவிடக்கூடாது. மேலும் சிற்றினத்தாராகிய இவர்களோடு நாம் சேரலாமா?'.

"வேதங்களையும், வேத முறைப்படி செய்யும் வேள்விகளையும் அழித்து, அந்தணர்களுக்குத் தீமை செய்து, தேவர்களுக்குத் துன்பம் இழைக்கும் மகா பாதகர்களாகிய இவர்கள் நம்மிடம் மட்டும் அன்பு செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? நம்மிடம் அடைக்கலம் அடைய விரும்பும் இவர்கள், பிறகு மாறுபட்டு நமக்குத் தீமை இழைக்க முயலும் போது, உன்னால் இவர்களைத் துரத்த முடியாது. ஏனென்றால் அடைக்கலம் என்று வந்தவர்களை இராமன் கைவிட்டான் என்கிற பழி வந்து சேரும்".

"இவனை நம்மோடு சேர்த்துக் கொள்வதால் நமக்குத் தீமைகளே வந்து சேரும் என்பதை நான் அதிகம் கூற வேண்டுமோ? சுருங்கச் சொன்னால், இந்த விபீஷணன் வரவு, முன்பு பொன் மானாக வந்த மாரீசனின் வரவைப் போன்றே தீமை பயக்கக்கூடியதே" என்று சொல்லி முடித்தான் ஜாம்பவான்.

பிறகு இராமபிரான் படைத்தலைவன் நீலனைப் பார்த்து "நீ உன் கருத்தைக் கூறு" என்றான். அதற்கு அந்த நீலன் சொல்லுகிறான்: "எல்லையற்ற நூல் கேள்வியுடைய இராமா! பகைவர்களையும் துணையாகக் கொள்ள வகைகள் பல உண்டு, கூறுகிறேன். ஆனால் குரங்கின் சொல்தானே என்று அலட்சியமாக ஒதுக்கிவிடாமல் கேள்! என்று சொல்லிவிட்டு எத்தகையவர்களை அடைக்கலம் என்று வரும்போது ஏற்றுக் கொள்ளலாம், எவர்களையெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடாதென்று ஒரு பட்டியலிட்டுவிட்டு, இந்த விபீஷணனுடைய வரவு எத்தகையது என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்து முடிவு செய்வோம்" என்கிறான்.

நீலனைத் தொடர்ந்து, அங்கிருந்த கற்றோரும், இராமன்பால் அன்புடையோரும், மற்ற அமைச்சர் பெருமக்களும் பகைவருடைய தம்பியை நம்மோடு சேர்த்துக் கொள்ளுதல் குற்றம் என்று கூறினார்கள். அப்போது இராமன் அனுமனை நோக்கி "மாருதி! நீ உன் கருத்தைக் கூறு" என்றான்.

"உறுபொருள் யாவரும் ஒன்றக் கூறினார்;
செறிபெருங் கேள்வியாய்! 'கருத்து என் செப்பு' என
நெறிதெரி மாருதி எனும் நேரிலா
அறிவனை நோக்கினான், அறிவின் மேலுளான்".

இராமனைப் பணிந்து மாருதி பேசலானான். "ஒன்றைப் பற்றி ஆராயுமிடத்து எளியவனாகவும், சாதாரணமானவனையும் கூட கருத்துக் கேட்பது, நும் போன்ற பெரியோர்கள் கடைப்பிடிக்கும் நெறியாகும். அந்த வகையில் என் கருத்தைக் கேட்டதனால் கூறுகிறேன். ஆராய்ந்து பார்த்து ஆலோசனை கூறவல்ல உத்தமர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களைக் கூறிவிட்டார்கள். நான் என் கருத்தையும் கூறத்தான் வேண்டுமோ?"

"அமைச்சர்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் தூய்மையானவையே. என்றாலும் நான் ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும். இந்த விபீஷணன் தீயவன் என்று நான் கருதவில்லை. அதற்கான காரணங்களை நான் சொல்லுகிறேன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். நெஞ்சில் வஞ்சகம் இருந்தால் முகத்தில் தெரியாதபடி, இவனால் மறைக்க முடியுமோ? பகைவன் என்பவன் நம்மிடம் புகலிடம் நாடுவார்களோ?"



"வாலியை விண்ணுலகம் அனுப்பி, அவன் இளவலான சுக்ரீவனுக்கு அரச பதவியைத் தாங்கள் அளித்த செய்தியைக் கேள்விப்பட்டு, இராவணன் அரசைத் தான் பெறும் பொருட்டு விபீஷணன் இங்கு வந்து சேர்ந்துள்ளான். அரக்கர்களின் அரசு கொடுங்கோல் அரசு, நன்னெறி அற்ற அரசு என்பதை அறிந்து, உனது அரசை தம்பி பரதனுக்கு அளித்த கருணையை உணர்ந்து விபீஷணன் இங்கே வந்துள்ளான்".

"விபீஷணன் தன் அண்ணனைப் பிரிந்து வந்த காலம் தவறு என்று பெரியோர்கள் கூறினார்கள். ஆனால் இராவணன் வலியிலும் நின் வலி சிறந்தது என்றும், இராவணன் முதலானோர் இனி அழிந்து போவது திண்ணம் என்பதை உணர்ந்தும், சரியான தருணத்திலேயே விபீஷணன் இராவணனைப் பிரிந்து வந்திருக்கிறான். அரக்கர்கள் மாயத் தொழிலில் வல்லவர்கள். அவர்களது மாயங்களை அறிந்து நமக்குச் சொல்வதற்கு ஏற்ற வகையில் விபீஷணன் நம் பக்கம் வருவது நமக்கு நன்மைதானே!"

"அடைக்கலம் என்று வந்து நம்மோடு சேர்ந்த பிறகு, நமக்கே தீமை செய்வார்கள் என்ற கருத்தையும் சொன்னார்கள். நம்மிடம் அடைக்கலம் என்று வந்த எளியவர்கள் அத்தகைய தீமையைத் துணிந்து செய்ய முடியுமோ? இலங்கையில் இராவணன் அவையில் நான் கொண்டுவந்து நிறுத்தப்பட்டபோது 'கொல்லுங்கள் இவனை' என்று இராவணன் கட்டளையிட்ட போது, தூதரைக் கொல்லுதல் இழிவான செயல், பழியொடு பொருந்தியது; அப்படிச் செய்தால் போர்த் தொழிலில் வெல்லமாட்டாதவர் ஆகும் என்று அறவுரை கூறியவன் இந்த விபீஷணன் என்பதையும் நான் சொல்லியிருக்கிறேன்".

"மாதரைக் கோறலும், மறத்து நீங்கிய
ஆதரைக் கோறலும், அழிவு செய்யினும்
தூதரைக் கோறலும் தூயது அன்றாம் என
ஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டினான்".

"இலங்கையில் யான் இவனது பொன் மயமான மாளிகைக்கு இரவு நேரத்தில் சென்ற போதும், அங்கு தேவியைத் தேடித் திரிந்தபோதும், நல்ல நிமித்தங்களே தொன்றின. அவையன்றி வேறொரு செய்தியும் உண்டு."

"மாமிச உணவுகளும், கள் முதலான மயக்கம் தரும் வஸ்துக்களும் இவனது அரண்மனையில் எங்கும் காணப்படவில்லை. அறவழிப்பட்ட தான் தருமங்களும், இறை வழிபாடும் நடக்கும் அந்தணரின் இல்லத்தை ஒத்திருந்தது இவனது மாளிகை. அதுமட்டுமல்ல! இந்த விபீஷணனின் மகள் திரிசடை என்பாள் சீதாதேவிக்குக் காவல் இருக்கும் அரக்கியரில் ஒருத்தி. அவள் தேவியிடம் இந்தக் கெடுமதி இராவணன் உன்னைத் தீண்டுவானாயின் அவனது தலை சிதறி மாண்டுபோவான்; அப்படியொரு சாபம் அவனுக்கு உண்டு என்றும் அதனால் நீ அஞ்சாதே என்று ஆறுதல் கூறிவந்தாள்".

"இராவணன் பெற்றுள்ள வரங்களும், அவனது மாயச் செயல்களும் உன் கை வில் அம்பினால் அழியும் என்பதைத் தெரிந்து கொண்டே விபீஷணன் அடைக்கலம் தேடிவந்துள்ளான். இவன் பெற்றிருக்கிற பெரிய வரங்களையும், அவனது அருட் குணத்தையும், ஞான உணர்வுகளையும் நோக்கும்போது இவனினும் தவத்திலும் ஒழுக்கத்திலும் மிக்கார் எவருமில்லை".

"தேவர்க்கும், தானவர்க்கும், திசைமுகனே முதலாய தேவதேவர்
மூவர்க்கும், முடிப்பரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றோம்
ஆவத்தின் வந்து "அபயம்" என்றானை அயிர்த்து அகல விடுதும் என்றால்
கூவத்தின் சிறு புனலைக் கடல் அயிர்த்தது ஒவ்வாதோ? - கொற்ற வேந்தே!"

"ஐயனே! தேவர், அசுரர், பிரமன் ஆகியோருக்கு அரிதான காரியத்தை முடிக்க முனைந்திருக்கிறோம். அப்படிப்பட்ட காரியத்தில் முனைந்திருக்கும் நம்மிடம் அபயம் கேட்டு வந்திருக்கும் இவனை விலக்கி விடுவோமானால், கடலானது, கிணற்றிலிருக்கும் நீர் வந்து தம்மிடம் இருக்கும் நீரை அடித்துக் கொண்டு போய்விடுமோ என்று அச்சப்படுவது போன்றது".

"பகைவனிடமிருந்து பிரிந்து வந்திருக்கும் இவன் நமக்குத் துணவனாக இருக்க முடியாது என்று விபீஷணனை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து விடுவோமானால், அரசியல் அறிந்த அறிஞர்கள் நம்மைப் பார்த்து சிரிக்கமாட்டார்களா? ஆகையால் தன் அண்ணனோடு மாறுபட்டு வந்துள்ள இந்த விபீஷனனின் வரவு நமக்கு நன்மை தரத்தக்கதே. அனைத்தையும் அறிந்த, வேதப் பொருளான தங்கள் மனக் கருத்து எதுவோ?" என்றான் மாருதி.




அனுமன் சொற்களைக் கேட்ட இராமன், அமிழ்தம் உண்டவன் போல மனத்தால் பருகி மகிழ்ந்து, அனுமனை நோக்கி "பேரரிவாளா! நன்று! நன்று! நீ கூறியது அனைத்தும் நன்று! என்று பாராட்டிவிட்டு மற்றவர்களைப் பார்த்து, "அனுமன் சொல்வதே சிறப்புடையது. இதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்" என்றான்.

"விபீஷணன் நன்கு ஆராய்ந்து இங்கு வந்த காலம் ஏற்ற காலமே. அவன் பெரு விருப்பமும் இலங்கை அரசை அடைவதுதான். அவன் நன்கு கற்ற பேரறிவாளன். உயர்ந்த தவவலிமை உடையவன். நம்மை வந்து சேர்ந்ததாலேயே அவனது உயர்ந்த குணநலன் விளங்கவில்லையா? அனுமன் ஆராய்ந்து சொன்னவைகளே, நாம் செய்யத் தக்கதாகும். அப்படியின்றி இனி நாம் வென்றாலும் தோற்றாலும், நம்மிடம் அடைக்கலம் என்று வந்தவனை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்."

"அடைக்கலம் தேடி வருகின்ற ஒருவனை, இவன் நமக்கு முன்பே தெரியாதவன் என்று விலக்கிவிடுவது நன்றோ? அல்லது தாய் தந்தையரை, அண்ணனைக் கொன்றவன் என்று விலக்குவதும் உண்டோ? அவனை நன்மை நெய்யும் நண்பனாக ஏற்பதே முறை. பிறகு அவன் நமக்குத் தீமை விளைவித்தாலும், பழி அவனுக்கேயன்றி, நமக்கில்லை".

"இது போன்ற தருணத்தில் நாம் செய்யக்கூடியது என்ன என்பதை அறிந்துகொள்ள மேலும் சில வரலாறுகளைச் சொல்லுகிறேன், கேளுங்கள்.

"பருந்து ஒன்றினால் துரத்திவரப்பட்ட புறா ஒன்று தன் உயிருக்கு அஞ்சி சிபிச் சக்கரவர்த்தியின் முன்பாக வந்து விழுகிறது. அந்தப் புறாவைத் துரத்திக்கொண்டு பருந்தும் தொடர்ந்து வருகிறது. சிபிச்சக்கரவர்த்தி புறாவிடம் இரக்கம் கொண்டு அதற்கு அடைக்கலம் தருகிறார். ஆனால் அந்தப் பருந்தோ புறாவை என்னிடம் கொடு அல்லது அந்தப் புறாவின் எடையளவுக்கு உன் சதையைக் கொடு என்கிறது. உடனே சிபி தராசைக் கொண்டு வந்து ஒரு தட்டில் புறாவை வைத்து, மற்றொன்றில் தன் தசையை அரிந்து வைக்க வைக்க, புறாவின் தட்டே கிழே இருக்கிறது. இதைக் கண்டு மன வருத்தம் கொண்டு மன்னன் தானே ஏறி அந்தத் தட்டில் அமர்ந்து கொள்கிறான். உடனே தட்டுகள் சமமாகி விடுகின்றன. தன்னிடம் அடைக்கலம் என்று வந்த புறாவுக்காகத் தன்னையே இரையாகக் கொடுக்க முன்வந்த சிபிச் சக்கரவர்த்தியின் முன்பாக அப்போது புறாவாகவும் பருந்தாகவும் வந்த எமனும் இந்திரனும் தத்தமது உண்மை உருவத்தைக் காட்டி, அவனது தியாகச் செயலுக்காகப் பாராட்டிவிட்டு அவனது இழந்த சதையை மீண்டும் சரிசெய்தனர்".

"மற்றொரு வரலாற்றையும் சொல்கிறேன் கேளுங்கள். தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெறுவதற்காக, பாற்கடலைக் கடைகிறார்கள். அப்போது பொங்கி வந்த ஆலகால விஷத்தைக் கண்டு அனைவரும் அஞ்சி ஓடி, சிவபெருமானிடம் அடைக்கலம் அடைய, சிவபெருமானும் அந்த நஞ்சை எடுத்துத் தன் கண்டத்தில் வாங்கிக் கொண்ட வரலாற்றை அறியீர்களா? வலிமை குறைந்தோர்க்கும் அபயம் என்று வந்தோர்க்கும் உதவவில்லையானால், ஆண்பிள்ளை ஆவரோ?"

"இந்த வரலாற்றையும் கேளுங்கள். ஒரு வேடன் காட்டில் வேட்டையாடச் செல்கிறான். அப்போது ஒரு மரக் கிளையில் ஆண் புறா ஒன்றும் பெண் புறா ஒன்றும் ஆனந்தமாக உட்கார்ந்து கொண்டிருந்தன. வேடனைக் கண்டு பறக்கத் தொடங்கிய அந்த ஜோடிப் புறாக்களில் பெண் புறா அந்த வேடனின் வலையில் சிக்கிவிடுகிறது. அந்த புறாவைப் பிடித்து தன் கூண்டில் அடைத்துக் கொண்டு, மேலும் சில புறாக்களைப் பிடிக்க வேடன் காட்டிற்குள் அலைந்தான். அன்றைய இரவுப் பொழுதும் வந்தது. அதோடு மழையும் பெய்யத் தொடங்கியது. வேடன் மழையில் நனைந்து குளிரில் நடுங்கினான். தனது பேடையைப் பிரிந்த ஆண்புறா அந்த மரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டு வேடனின் கூண்டில் அடைபட்டிருந்த பெண் புறாவைக் கண்டு ஒலி எழுப்பியது. அதற்குப் பெண் புறா சொன்னது "நான்தான் முன்வினைப் பயனால் இங்கு சிறைப்பட்டு விட்டேன். நம் வீடு நோக்கி வந்து விட்ட இந்த வேடன் குளிரால் நடுங்குகிறான். அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வாயாக என்றது. உடனே அந்த ஆண்புறா உலர்ந்த சுள்ளிகளைப் போட்டு தீமூட்டி அந்த வேடனின் குளிரைப் போக்கியது. பின் அவன் பசியால் தவிக்க, என்னையே உண்டுகொள், பசி தணிக என்று தீயில் விழுந்து மாண்டுபோனது. தங்கள் இருப்பிடம் வந்தடைந்த வேடனுக்காகத் தன் உடலையே கொடுத்த அந்த புறா வீடு பேறு அடைந்தது".

"நீயே அடைக்கலம் என்று "ஆதிமூலமே" என்று அலறிய கஜேந்திரனுக்கு திருமால் அபயம் அளித்த வரலாற்றைச் சொல்லுகிறேன் கேளுங்கள். தாமரை மடுவொன்றில் தன் காலை ஒரு முதலைப் பிடித்துக் கொண்டு இழுக்க, கஜேந்திரன் எனும் யானை அந்த முதலையின் வாயிலிருந்து தப்பிக்க வழியின்றி "ஆதிமூலமே" என்று திருமாலை எண்ணி விளித்தது. நான் உனது அடைக்கலம் என்றதும் திருமால் வந்து கஜேந்திரனை முதலையின் வாயிலிருந்து மீட்டு வீடு பேறு அளித்த வரலாற்றை அறியீரோ?".




எனவே சார்ந்தாரைக் காத்தல் என்பது நமது கடன் என்றான் இராமபிரான். மேலும் மார்கண்டேயன் சிவனிடம் அடைக்கலம் அடைந்ததும், அந்த மார்க்கண்டனைக் காப்பாற்ற சிவபெருமான் எமசம்ஹாரம் புரிந்ததையும், இராவணன் சீதாதேவியைக் கவர்ந்து செல்லும்போது ஜடாயு அடைக்கலம் தந்து தனது உயிரை விட்டது ஆகிய கதைகளையும் எடுத்துக் கூறினான்.

நான் உன்னைச் சரண் அடைகிறேன் என்று அடைக்கலம் புகுவோனது உயிரைப் பாதுகாக்காதவன் கீழ்மகன். ஒருவன் தனக்குச் செய்த உதவியில் கருத்தில்லாது மறுத்தவனும், கடவுளை இகழ்கின்ற நாத்திகனும் மீளாத நரகத்தில் வீழ்வர். தண்டகாரண்யத்தில் முனிவர்கள் தன்னிடம் சரணடைந்ததாலேயே இராவணனைக் கொல்வதாகத் தான் சபதம் எடுத்துக் கொண்டதாக இராமன் கூறினான். விபீஷணனை ஏற்றுக் கொள்வதால் நன்மையோ, தீமையோ எது வேண்டுமானாலும் நடக்கட்டும். அடைக்கலம் என்று வந்தவரை ஏற்றுக் கொண்டு காப்பது நம் கடமை என்றான் இராமன்.

இராமன் சுக்ரீவனை அழைத்து "நீ போய் விபீஷணனை என்னிடத்தில் அழைத்துக் கொண்டு வா!" என்றான்.

சுக்ரீவன் விபீஷணன் இருக்குமிடம் செல்லுகிறான். மயிந்தனின் தம்பி துவிந்தன் விபீஷணனுக்கு சுக்ரீவனை அறிமுகம் செய்து வைக்கிறான். இருவரும் ஆலிங்கனம் செய்து கொள்கிறார்கள்.

"தழுவினர் நின்ற காலை, தாமரைக் கண்ணன் தங்கள்
முழுமுதல் குலத்திற்கு ஏற்ற முறைமையால் உவகை மூள
வழுவல் இல் அபயம் உன்பால், வழங்கினன் அவன் பொற்பாதம்
தொழுதியால், விரைவின் என்று, கதிரவன் சிறுவன் சொல்வான்.

இருவரும் தழுவிக் கொண்டதும், சுக்ரீவன் விபீஷணனிடம் இராமபிரான் மகிழ்ச்சியோடு உனக்கு அடைக்கலம் கொடுக்க விரும்புகிறான், நீ உடனே என்னுடன் வா, அந்த வள்ளலின் பொற்பாதம் பணிவோம் என்றான். சுக்ரீவன் சொன்ன சொல் கேட்ட விபீஷணனும் கண்களில் மழைபோல கண்ணீர் சிந்த, உடலும் மனமும் குளிர சொல்லுகிறான்:

"பஞ்சு எனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்த பாவி
வஞ்சனுக்கு இளைய என்னை 'வருக' என்று அருள் செய்தானோ?
தஞ்சு எனக் கருதினானோ? தாழ் சடைக் கடவுள் உண்ட
நஞ்சு எனச் சிறந்தேன் அன்றோ, நாயகன் அருளின் நாயேன்".

சீதாதேவியைத் தன்னிடமிருந்து பிரித்த பாவியான இராவணனின் தம்பி நான் என்பது தெரிந்தும் எனக்கும் கனிவோடு அருள் செய்தானா? எனக்கு அடைக்கலம் தர சம்மதித்தானா? என்னே நான் பெற்ற பேறு. நஞ்சு விரும்பத்தகாததொன்றுதான் எனினும், சிவபெருமான் எடுத்து உண்ட நஞ்சு அவனை நீலகண்டனாக பெருமை பெறச் செய்தது போல நானும் பெருமை பெற்றேன். நாயேனுக்கும் அந்த நாயகன் காட்டிய கருணையை என்னவென்று சொல்வேன்.

விபீஷணனை அழைத்துக் கொண்டு சுக்ரீவன் இராமனிடம் சென்றான். அங்கே இராம பிரானைக் கண்டதும் விபீஷணன் மிக்க பரவசமடைந்து அவன் காலில் வீழ்ந்து வணங்குகிறான். வந்து வணங்கிய விபீஷணனுக்கு இராமபிரன் ஓர் ஆசனத்தைக் கொடுத்து அமரச்செய்த பின் அவனிடம் பேசுகிறான்:

"ஆழியான் அவனை நோக்கி, அருள் சுரந்து உவகைகூர
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எந்நாள்
வாழும் நாள் அன்று காறும், வளை எயிற்று அரக்கர் வைகும்
தாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன் என்றான்".

இராமபிரான் விபீஷணனை கருணையோடு நோக்கி, விபீஷணா! இந்த ஈரேழு உலகங்களும், எனது பெயரும் வாழுகின்ற நாள் வரையிலும், அரக்கர்கள் வாழும் கடல் சூழ்ந்த இலங்கைச் செல்வத்தை உனக்கே தந்தேன், என்று திருவாய்மலர்ந்தருளினான்.

இராமனது சொற்களைக் கேட்ட உலகத்து உயிர்கள் எல்லாம் "வாழ்ந்தோம்" என்று ஆரவாரம் செய்தன. அது இராமனது அருளுக்காகவா? அன்றி அவனால் விபீஷணன் பெறப்போகும் அறத்தோடு கூடிய நல்வாழ்க்கைக்காகவா?


"அடியேன் உய்ந்தேன்" என்று விபீஷணன் இராமனை வணங்கினான். உடனே இராமன் இலக்குவனை நோக்கி "தம்பி! தூய்மையான இந்த விபீஷணனுக்கு, இலங்கை வேந்தனாக முடிசூட்டுவாயாக!" எனப் பணித்தான்.

விபீஷணன் இராமபிரானிடம் "ஐயனே! அளவற்ற பெருமையுடைய இலங்கைச் செல்வத்தை எனக்கு அளித்தாய். ஆனால் நீ எனக்கு பொன்னால் ஆன கிரீடத்துக்குப் பதிலாக, இராவணனுக்குத் தம்பியாகப் பிறந்த என்னுடைய பாவம் தீரும்படி, பரதனுக்குச் சூட்டிய உனது பாதுகையாகிய திருவடியையே சூட்டுவாயாக!" என்றான்.

விபீஷணனுடைய அன்பையும் பக்தியையும் பாராட்டி இராமபிரான் சொல்லுகிறார்:

"குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகலரும் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை".

இராமனுடைய கருணையால் தம்பி இலக்குவனை தனக்கு முடிசூட்ட பணித்தமைக்கும், தன்னையும் தன் தம்பியருள் ஒருவன் என்று சொல்லியதைக் கேட்டு விபீஷணன் என்புருக உள்ளம் கசிய, அவனிடம் சொல்லுகிறான்.

"நடு இனிப் பகர்வது என்னே? நாயக! நாயினேனை
உடன் உதித்தவர்களோடும் ஒருவன் என்று உரையா நின்றாய்
அடிமையில் சிறந்தேன்! என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித்
தொடு கழல் செம்பொன் மோலி சென்னியில் சூட்டிக் கொண்டான்".

இப்படிச் சொல்லிக் கொண்டு, இராமபிரானின் பாதுகைகளைத் தன் தலையில் வைத்துக் கொண்டான். கூடியிருந்தோர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். விபீஷணனை வாழ்த்தினார்கள். விபீஷணன் முடிசூட்டிக் கொண்ட காட்சி கண்டு ஏழு கடல்களும் மண்ணும், விண்ணும், முரசங்களும், சங்குகளும் ஆரவாரம் செய்து வாழ்த்தொலி எழுப்பின.

இப்படி விபீஷண பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, இலக்குவன் அவனை அழைத்துக் கொண்டு அவர்கள் படைகள் தங்கியிருந்த இடங்களைக் காண்பிக்க அழைத்துச் சென்றான். விபீஷணனுக்கு முடிசூட்டிய பிறகு அவனை இலக்குவன் நகர்வலம் வந்து, படைகளை சந்தித்துவிட்டுத் திரும்பிய பின் அவனுக்கு ஒரு தனி வீடு ஒதுக்கப்பட்டு அங்கே தங்க வைக்கப்பட்டான். அன்றைய இரவு நேரம் வந்தது. மல்லிகை மலர்ந்து மணம் பரப்பியது. நிலவு தன் குளிர்ந்த ஒளியை வீசிக் கொண்டிருந்தது. கடல் ஈரப் பசையோடு காற்று வீசி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது. பால் நிலவு உலகை நனைத்துக் கொண்டிருந்தது. தென்றல் காற்று இராமனைத் தீண்டி அவனது மனக் கவலையை அதிகரித்தது.

இராமனுக்கு சீதையின் நினைவு வந்து மிகவும் துன்புறுத்தியது. காமனின் மலர்க் கணைகளும், நிலவின் கதிர்களும், இராமன் உள்ளத்தில் கிளர்ச்சியை உண்டு பண்ணி விரக தாபத்தால் தவித்தான். சீதையின் நினைவு இராமன் சிந்தையை கலங்கச் செய்தது. இதைக் கண்ட சுக்ரீவன் இராமனது சிந்தையை வேறு திசையில் திருப்ப எண்ணி நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்க, இப்படி உட்கார்ந்து கொண்டு வருந்துவது ஏன் என்கிறான்.

இராமனும் சிந்தை தெளிவுற்று அயர்வு நீங்கி விபீஷணனை அழைத்து வரச் செய்தான். அவன் வந்த பிறகு இராமன் அவனிடம் இலங்கை நகரத்தின் அமைப்பு, பாதுகாப்பு, இராவணனின் படை வலிமை, அளவு இவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ள எண்ணினான். இராமன் விபீஷணனை உட்காரச் சொல்லி, விவரங்களைக் கேட்க, அவனும் அதற்கான பதில்களைக் கூறத் தொடங்குகிறான்.

"ஒரு சமயம் வாயு பகவான் மேரு மலையைச் சிதறடித்து மூன்று சிகரங்களைத் தன்னோடு சுமந்து சென்று கொண்டு போய் கடலில் தூக்கி எறிந்து விடுகிறான். அந்த சிகரங்கள் கடலுக்குள் மூழ்காமல் மேலாகத் தெரிந்தது. அதன் மீது இலங்கை நகரம் அமைக்கப்பட்டது. அந்த இலங்கையின் மதில் சுவர் இருக்கிறதே அது எழு நூறு யோசனை அகலமும், நூறு யோசனை ஆழமுமாகக் கட்டப்பட்டது. இந்தப் பெரிய மதிற்சுவர் இலங்கை நகரைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த மதிற்சுவரில் அமைக்கப்பட்டிருக்கிற எந்திர அமைப்புக்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரு ஆயுள் போதாது. இந்த நகருக்கு, மதிற்சுவரைச் சுற்றி எல்லா திசைகளிலும் கடலே அகழியாக இருப்பதை நாம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.



இந்த இலங்கை நகரத்தின் வடக்கு வாசலில் பதினாறு கோடி, எதற்கும் அஞ்சாத, பின் வாங்காத வீரர்கள் காவல் புரிகின்றனர். ஒவ்வொரு வீரனும் பிரளய காலத்து ருத்ரன் போன்றவர்கள். நகரத்தின் மேற்கு வாசலில் பதினெட்டு கோடி கொடிய காவலர்கள் கூர்மையான கண்களோடு காவல் புரிந்து வருகின்றனர். இதன் தென் திசையில் பதினாறு கோடி கொடிய அரக்கர்கள் காவலுக்கு இருக்கிறார்கள். கிழக்கு வாசலுக்கு பதினாறு கோடி கயமை குணமுள்ள அரக்கர்கள் காவல் இருக்கிறார்கள். விண்ணிலும், மண்ணிலும் முப்பத்திரெண்டு கோடி பேர், தேவர்கள் வான வழியாக வந்து விடாமல் காவல் இருக்கின்றனர். மதிலின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் ஆயிரம் கோடி பேர் ஊண் உறக்கமின்றி காவல் புரிந்து வருகின்றனர்.

நகரக் காவலுக்கு உள்மதில், இடைமதில், புறமதில் என்று மூன்று அடுக்கு மதிற்சுவர்கள் இருக்கின்றன. இராவனனிடம் விருதுகளும், பரிசுகளும் பெற்ற பதினாறு கோடி பேர் சேமப் படையாக தயார் நிலையில் எப்போதும் வைக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை அரண்மனையின் வாயிற்புறத்தைக் கண் இமைக்காத, தீ உமிழும் கண்களோடு, வாயிலின் முன் இடம் வலமாக காவல் புரிவோர் எண்ணிக்கை அறுபத்திநான்கு கோடியாகும்.

அரண்மனையின் முற்றங்களைக் காக்க கோடிக்கணக்கான, உலகத்தையே பெயர்த்தெடுக்கும் ஆற்றல் பெற்ற வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மலையினும் திண்மையுடையவர்கள். இராவணனிடம் உள்ள தேர்களின் எண்ணிக்கை பதினாயிரம் பதுமம். (பதுமம் என்பது கோடிக்கும் மேற்பட்டதான ஒரு எண்ணிக்கை). யானைப் படை இருபதினாயிரமும், குதிரைப்படையில் நாற்பதினாயிரமும், ஒட்டகப் படையில் எண்பதினாயிரமும் இருக்கின்றன.

பல சொல்லி என்ன பயன். இராவணனின் படையின் எண்ணிக்கை ஆயிரம் வெள்ளம். (வெள்ளம் என்பது பதுமத்திற்கும் மேற்பட்டதான ஒரு எண்ணிக்கை). இராவணனுக்குத் துணையாக இருப்பவர்கள் எல்லையற்ற வலிமை உடையவர்கள், வரங்களைப் பெற்றவர்கள். அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வீரர்களைப் பற்றி சொல்லுகிறேன்.

முதலில் கும்பன். பல கோடி யானை, குதிரை, தேர் ஆகியவற்றுக்கு இணையான வீரன். சூரியனைவிட வெம்மையான கொடிய வீரன். அகம்பன் என்பவன், யுக யுகமாய்த் தவமிருந்து போர்த்தொழில் புரிகிறவன். நகம், பல், இவை இல்லாத நரசிங்க மூர்த்தியைப் போன்றவன். இவன் கடலையே குடித்துவிடக்கூடிய ஆற்றலுள்ளவன். நிகும்பன் என்பவன் மலைகளைக் கூடத் தாண்டக்கூடிய யானை, குதிரைப் படைகளை உடையவன். ஒன்பது கோடி படைகளுக்குத் தலைவன். மகோதரன் என்பான் யாளி, கோவேறு கழுதை பூட்டிய தேர்ப்படை இவற்றையுடையவன். வஞ்சனையும், மாயையும் கடைப்படித்துப் போர்த்தொழில் செய்பவன். வேள்வியின் பகைஞன் என்பவன் மலைவாழ் வீரன். பெரும்படைக்குத் தலைவன் இவன். தேவர்களை முன்பு பலமுறை போரில் தோற்கடித்தவன். சூரியன் பகைஞன் என்றொருவன், இவன் ஒரு நாள் போரில் மண்ணுலக வாசிகளோடு விண்ணுலக வாசிகளையும் வெல்லக்கூடிய வலிமையுடையவன். தீ உமிழும் கண்களையுடைய இவனிடம் எட்டு கோடி வீரர்களைக் கொண்ட படை இருக்கிறது. பெரும்பக்கன் என்பவன், பதினாறு கோடி படைக்கு அதிபன், தேவரும் முனிவரும் நேருக்கு நேராக இவனைப் பார்க்க அஞ்சுவார்கள்.

வச்சிரதந்தன் என்ற வீரன், இவன் உச்சி வெயில் போல சுட்டு எரிக்கும் முகத்தையுடையவன். எட்டு கோடி சேனைக்கு இவன் அதிபன். சிவனும் இவனிடம் போரிட அஞ்சுவான்; கூற்றுவன் போன்றவன். பிசாசன் என்ற வீரன் பகைவரக் கண்டு அஞ்சாதவன். பத்து கோடி சேனையை உடையவன். தன்னையன்றி மற்ற அனைவரையும் வென்றவன். இயக்கர் (தேவர்களில் ஒரு பிரிவு) கூட்டத்தைத் தன் கையால் கொன்று பிசைந்து முகர்ந்து பார்த்த போர் வெறியன் இவன். (நாற்றமுள்ள பொருட்களை முகர்ந்து பார்த்தல் கீழோர் இயல்பு).

துன்முகன் என்பவன் பெரும் தேர்படை, குதிரைப் படைகளுக்கு அதிபன். பதினான்கு கோடி காலாட்படைக்குத் தளபதி. பூமியையும் குடையவல்ல தீகக்கும் முகமுடைய இவன் தர்மத்தைக் கைவிட்டவன். விரூபாட்கன் என்பவன் இலங்கை அருகே உள்ள வேறொரு தீவில் பத்து கோடி சேனைகளை வைத்துக் கொண்டு அதன் தலைவனாக இருப்பவன். வாட்போரில் இவன் வல்லவன். தூமாட்சன் என்பவன் போர்க்களத்தில் மாண்ட வீரர்களின் உடலைத் தின்பவன். பதுமம் அளவுள்ள சேனைக்குத் தலைவன். தேவர்களைத் தோற்றோடச் செய்தவன். இவனைப் புகைக்கண்ணன் என்றும் அழைப்பர்.

போர்மத்தன், வயமத்தன் ஆகிய இவ்விருவரும் மந்தர மலை போன்ற வலிமையுடையவர்கள். கடல் போன்ற படைக்கு இவர்கள் அதிபர்கள். உலகங்களை நிலைகெடச் செய்யும் வல்லமையுடையவர்கள். பிரகஸ்தன் என்பவன் போர்த்தொழிலில், இராவணனுக்குத் துணை புரிபவன். இதுவரை சொல்லப்பட்ட படைகளைப்போல் இரு மடங்கு படைகளையுடையவன். இந்த பிரகஸ்தன் இராவணனின் படைத் தளபதி. இந்திரனின் ஐராவதம் என்ற யானை உள்ளிட்ட அனைத்துப் படைகளையும், தேவர்களையும் அஞ்சி ஓடச் செய்யும் வல்லமை படைத்தவன்.



இராவணனுடைய அருமைத் தம்பி கும்பகர்ணன். இவன் தேவர்களை ஓட ஓட விரட்டிய மாபெரும் வீரன். வேறு ஆயுதம் எதுவுமின்றி, ஐராவதத்தின் கொம்புகளையே ஆயுதமாகக் கொண்டு தேவர்களை அழித்தவன். வாழ்நாளில் பெரும்பகுதி தூக்கத்தில் ஆழ்ந்திருப்பவன், மிகுந்த நாட்களில் மலைமலையாக உணவும் கள்ளும் குடித்து இராவனனின் பராமரிப்பில் இருப்பவன். அடுத்ததாக இந்திரஜித், இவன் சூரிய சந்திரரை சிறையில் இட்டவன்; இராவணனின் மூத்த மகன். இந்திரனைப் போரில் வென்றவன் இந்த இந்திரஜித். அதிகாயன் என்பவன் அறக்கடவுளுக்கு அஞ்சாமல் தொடர்ந்து பாவங்களையே செய்து வருபவன். பிரமன் கொடுத்த வில்லை உடையவன். இவன் இராவணனின் இரண்டாவது மகன், இந்திரஜித்துக்குத் தம்பி. தேவாந்தகன், நராந்தகன், திரிசிரன், இவர்கள் மும்மூர்த்திகளையும் போரில் தலை குனியச் செய்தவர்கள். இராவணனுடைய பெருமை மிக்கப் புதல்வர்கள்.

இறுதியாக இராவணன். இவன் துணைவர்களின் வலிமையைப் பற்றி இதுவரை கூறினேன். இராவணன் வலிமையைச் சொல்லக் கூடுமோ? பிரமனின் மகன் புலஸ்தியன், இந்த புலஸ்தியனின் மகன் விஸ்ரவசு, இந்த விஸ்ரவசுவின் புதல்வன்தான் இராவணன். பிரமனும் பரமேஸ்வரனும் இவனுக்கு அரிய பெரிய வரங்களை அளித்திருக்கின்றனர். சிவன் இருக்கும் வெள்ளி மலையைப் பெயர்த்தெடுத்த பெருமைக்குரியவன். அஷ்டதிக் கஜங்கள் எனும் திசை யானைகளோடு போரிட்டு அவற்றின் தந்தங்களை முறித்தவன். குபேரபுரி எனப்படும் அளகாபுரிக்குத் திக்விஜயம் செய்து குபேரனை தோற்கடித்து அவனுடைய நகரத்தைக் கைப்பற்றியவன். அந்த குபேரன் இராவணனிடம் தோற்று சங்கநிதி, பதுமநிதி இவற்றை இழந்து, தன் மானம், விமானம், இலங்கை நகரம் இவற்றை இழந்து ஓடுமாறு வெற்றி கண்டவன்.

தென் திசைக்கு அதிபனான எமனை, இராவணனால் தனக்கு அழிவு வந்து சேரும் என்று தினம் தினம் செத்துப் பிழைக்க வைத்தவன் இவன். எமனுக்கும் எமனாக ஆனவன். மேற்திசையில் வருணனை வென்றவன். மலைகள் அழியினும் அழியாத தோள் வலிமையை உடையவன். உன்னாலன்றி வேறு எவராலும் அழிக்கமுடியாதவன் இராவணன்.

இப்படி விபீஷணன் இலங்கை நகரத்தைப் பற்றியும், இலங்கையில் இராவணன் உட்பட அங்கே இருந்த மகா வீரர்களைப் பற்றியும், அவனது படைபலம் பற்றியும், கோட்டை அமைப்பு பற்றியும் விவரமாகக் கூறிமுடித்தான். தொடர்ந்து, இராமா! அனுமன் இலங்கைக்கு வந்த போது ஆற்றிய வீர தீரச் செயல்களை இங்கு எவரும் பார்த்திருக்கமுடியாது. ஆகையால் அவற்றை நான் சிறிது சொல்கிறேன் கேட்பாயாக! என்று தொடங்கினான்.

அசோகவனத்தில் அனுமன் கையால் மாண்ட அரக்கர்கள் ஏராளமானோர். புலியால் துரத்தப்பட்ட ஆடுகள் பட்ட பாட்டை அன்று அந்த அரக்கர்கள் பட்டனர். இலங்கை மாநகர் அவன் இட்ட தீயால் எரிந்து சாம்பரானது. எம் குலத்துப் பிறந்த எண்பதினாயிர கிங்கரர் எனும் போர் வீரர்களை கைகளாலும், கால்களாலும் தன் வாலினாலும் அனுமன் அடித்துக் கொன்று குவித்துவிட்டான்.

சம்புமாலி எனும் பெரும் வீரனையும் அவனுடைய படைகளையும் துடிக்கத் துடிக்கக் கொன்றான் அனுமன். சம்புமாலியின் வில்லையே அவன் கழுத்தில் மாட்டி அவனைக் கொன்றான். அவனை அடுத்து மாபெரும் வீரர்களான பஞ்ச சேனாதிபதிகளைக் கொன்றான். இராவணனின் இளைய மகனான அக்ஷயகுமாரனை தரையோடு தரையாகத் தேய்த்துக் கொன்று விட்டான். இராவணனை நிலை குலைய வைத்தது இந்த அக்ஷயகுமாரனின் மரணம்தான். இலங்கையில் அனுமனால் தாக்கப்பட்டு இறந்த அரக்கர்கள் எண்ணிக்கை அளவில் அடங்காதவை. அதுபோலவே அவன் இட்ட தீயினால் எரிந்த பகுதி கணக்கிட முடியாதது.

இலங்கை மாநகர் தீயின் நாக்குகளுக்கு இரையாகிப் போனபோது ஊருக்குள் இருக்க முடியாமல் இராவணன் ஏழு நாட்கள் வான வெளியிலேயே தங்கியிருந்தான் என்றால், இலங்கைக்கு அனுமன் இழைத்த அழிவு எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எரிந்து போன இலங்கையை தெய்வத் தச்சனைக் கொண்டு இராவணன் புதுப்பித்து விட்டான். அனுமனின் வீரச் செயல்களைக் கண்டதாலும், அரக்கர்களை அவன் கொன்ற தன்மையாலும் நான் அடைக்கலம் புகவேண்டியது தங்களிடம்தான் என்று உணர்ந்து இங்கு வந்தேன். இதற்கு முன்பாக காட்டில் தங்கள் கையால் கரன் மாண்டதையும், தங்கள் வாளியால் வாலி வானுலகம் புகுந்ததையும் அறிந்து வைத்திருந்தேன், அதனால் தங்களிடம் அடைக்கலம் புக வந்தேன்.

இப்படி அனுமனின் வீரதீர பராக்கிரமங்களை வீபீஷணன் சொல்லச் சொல்ல இராமபிரானின் தோள்கள் பூரித்தன. அனுமன் தன் சுயபுராணத்தையோ, அல்லது அவனது வீரதீர பராக்கிரமங்களையோ தன் வாயால் சொல்லிக் கொண்டு திரியாத அடக்கமானவன் என்பதாலும், தான் இலங்கையில் நிகழ்த்திய இந்த வீரச் செயல்களை நிச்சயம் இராமபிரானிடம் சொல்லிக் கொண்டு புகழ், பாராட்டு தேடியிருக்கமாட்டான் என்பதை நன்கு உணர்ந்து கொண்டுதான் விபீஷணன், மேற்படி செயல்களையெல்லாம் இராமபிரானிடம் பட்டியலிட்டுச் சொன்னான். மேலும் அனுமனின் ஆற்றலை மற்றவர்கள் எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, இதன் மூலம் தெரிந்து கொள்ளட்டுமே என்றுதான் அவற்றை இராமபிரானிடம் விளக்கிச் சொன்னான்.


அனைத்தையும் கேட்டுக் கொண்ட இராமன் கருணையோடும் நன்றிப்பெருக்கோடும் அனுமனைப் பார்த்து கூறுகிறான்: "வீரனே! விபீஷணன் சொல்லிய செய்திகளிலிருந்து இராவணன் படைகளில் பாதியை நீயே துவம்சம் செய்திருக்கிறாய். இலங்கை முழுவதையும் எரியூட்டி தீக்கு இரையாக்கியிருக்கிறாய். எனக்கு இனி அங்கே என்ன வேலை பாக்கி வைத்திருக்கிறாய்? என் வில்லின் வலிமைக்கு இழுக்கு என்றுதான் நீ சீதையை மீட்டுவரவில்லை போலும். மாருதி! இதற்கெல்லாம் பிரதியாக நான் உனக்கு என்ன செய்ய முடியும்? உனக்கு பிரம்மபதத்தை வழங்குகிறேன் என்றான் இராமன்.

இராமபிரான் சொன்னதைக் கேட்டு அனுமன் கீழே விழுந்து அவனை வணங்கிவிட்டு, நாணத்தால் ஒன்றும் பேசாமல் தலை குனிந்து நின்று கொண்டிருந்தான். கூடியிருந்த சுக்ரீவன் முதலானவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். பின்னர் அனைவரும் இலங்கைக்குச் செல்ல என்ன வழி என்பதை ஆராய்வதற்காக கடற்கரைக்குச் சென்றனர். அங்கு இராமன் விபீஷணனைப் பார்த்து "நாமும் நமது படைகளும், இந்தக் கடலை கடக்கும் உபாயம் ஒன்று சொல்" என்றான்.

விபீஷணன் ஆழ்ந்து சிந்தித்து இராமனிடம் "இராமா! இந்தக் கடல் உமது குலத்துக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. ஆகையால் நீ கேட்டால் இந்தக் கடல் நிச்சயமாக உனக்கு வழி செய்து கொடுக்கும்" என்றான்.

இராமன் உடனே கடலுக்கு அருகில் சென்று, தர்ப்பைப் புற்களை அடுக்கி அதன்மேல் நின்று கொண்டு, ஏழு நாட்கள் வருண ஜபம் செய்தும், வருணன் வந்து தோன்றவில்லை. இவ்வளவு செய்தும் வருணன் வராதது கண்டு இராமனுக்குக் கோபம் வந்தது. தன் கோதண்டத்தை எடுத்து வளைத்து, நாணை இழுத்து ஒலி எழுப்பினான். அம்புகளை கடலின் மீது செலுத்தினான். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இலக்குவன் முதலான அனைவரும் இனி என்ன நடக்குமோ என்று அச்சத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

இராமன் விட்ட அம்புகள் ஏழு கடல்களையும் துளைத்துச் சென்று, கடல் வாழ் உயிரினங்களை வாட்டின. கடல் பற்றி எரிய அந்தத் தீ விண்ணுலகத்தையும் எட்டுகிறது. அப்போதும் வருணன் அங்கே வந்து தோன்றவில்லை. இராமனுடைய கோபம் மேலும் அதிகரித்தது. பிரம்மாஸ்திரத்தை மதிரம் சொல்லி கையில் வாங்கி அதை வில்லில் பூட்டி கடலின் மீது செலுத்த முயல்கிறான். இதனைக் கண்டு உலகமே நடுங்குகிறது. மேகக்கூட்டம் நடுங்கி சிதறி ஓடுகிறது. திருமாலின் அம்சமான இராமபிரான் வேண்டி அழைத்தும் வராத வருணனுக்காக தேவர்களும் வருந்துகிறார்கள். வருணன் செய்தது பிழை என்கிறார்கள்.

பஞ்ச பூதங்களில் மற்ற நான்கு பூதங்களும் கடல் செய்த தவறால், தங்களுக்கும் ஆபத்து வருமோ என்று அஞ்சுகிறார்கள். வருண பகவான் மீது அவர்கள் கோபம் கொண்டு அவனை ஏசுகிறார்கள். அப்போது புகை படர்ந்த கடல் வழியே வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டு, இராம பாணத்தால் உடல் வெந்துபோன நிலையில், கண்களில் கண்ணீரோடு, தொழுத கையனாய் வருணன் வந்து இராமனின் பாதங்களில் வந்து விழுந்து 'அடைக்கலம் இராமா' என்கிறான். தான் வருவதற்கு தாமதமானதற்காக வருந்தி மன்னிப்பை வேண்டுகிறான்.

இராமன் அவனிடம் இரக்கம் கொண்டு, சீற்றம் தணிந்து "யாம் இரந்து வேண்டியும், நெடு நேரம் வராமல் இருந்து, தாமதம் செய்துவிட்டு, சினந்து தண்டிக்கத் துணிந்த போது ஓடிவரக் காரணம் என்ன?" என்று வினவினான்.

"ஏழாவது கடலில் நிகழ்ந்த மீன்களுக்கிடையே நடந்த போரை விலக்கி சமாதானம் செய்துவிட்டு வந்தேன். இங்கு நிகழ்ந்தவை எவையும் நான் அறியவில்லை" என்றான்.

"அதைக் கேட்டு இராமன் மனம் இரங்கினான். "அது போகட்டும், பிரம்மாஸ்திரத்தை எடுத்து வில்லில் பூட்டிவிட்டல் அதை ஏதாவது இலக்கைத் தாக்கச் செலுத்த வேண்டும். உன்னைத் தாக்க எடுத்த இந்த அஸ்திரம் வில்லில் பூட்டப்பட்டுவிட்டது. இதற்கு ஓர் இலக்கு வேண்டும், எதன் மீது இதனை செலுத்தலாம் சொல்" என்கிறான்.

வருணன் சொல்கிறான். "மருகாந்தாரம் எனும் தீவில் வாழும் நூறு கோடி அவுணர்களும் உலகுக்கு அழிவு செய்து வருகிறார்கள். என் மீதும் வன்மம் கொண்டு பகைத்திருக்கிறார்கள். அவர்கள் உயிரினங்களுக்கே எதிரிகள்; அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் மீது இந்தக் கணையை ஏவிவிடுக!" என்றான். அங்ஙனமே இராமனும் தனது பிரம்மாஸ்திரத்தை அவர்கள் மீது ஏவினான். அந்த அஸ்திரம் கணப் பொழுதில் அந்தத் தீவையே அழித்து விட்டு இராமனிடமே மீள்கிறது. பிறகு இராமன் வருணனிடம் "நீ அபயம் என்று கூறினாய். அதனால் சினம் தீர்ந்தேன். எனக்குப் பழியை உண்டாக்கிய அரக்கர்களது செருக்கை அடக்கக் கடலில் வழி உண்டாக்கித் தரவேண்டும்" என்றான்.



அதற்கு வருணன் "கடலை வற்றச் செய்ய நெடுங்காலம் ஆகும். கடல் நீரை திடமானதாக ஆக்குவோமென்றால், கடல் வாழ் உயிரினங்களுக்குத் துன்பம் நேரும். ஆகையால் இவ்விரு வழியும் வேண்டாம். என் மீது (கடல்) அணை கட்டிச் செல்வதே நல்லது. என் மீது அணை கட்டுவதற்காக இடும் கற்கைளை நான் கடலில் மூழ்கிவிடாமல் வரம்பிலா காலமும் தாங்குகிறேன்" என்றான். (இப்போதும் இராமேஸ்வரத்தில் கடலிலிருந்து மீனவர்களால் எடுத்து வரப்படும் இராமர் கட்டிய அணையின் கற்கள் நீரில் மிதக்கக்கூடியவைகளாக இருப்பதை அவ்வூரில் ஒரு கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்)

"சரி! அதுவே நன்று" என்று இராமபிரான் வருணனைப் பாராட்டிவிட்டு, தன் வானர சேனையை அழைத்து "குன்றுகளைக் கொண்டு வந்து கடலில் இட்டு சேதுவைக் கட்டுக" என்று பணித்தான். இராமன் வருணனை வாழ்த்தி அனுப்பி வைத்தான்.. (வான்மீகத்தில் இந்தப் பகுதி பெரிதும் மாறுபடும்).

கடலில் சேதுபந்தனம் செய்ய (அணை கட்ட) மேலே ஆகவேண்டிய காரியங்கள் குறித்து சுக்ரீவன் விபீஷணனுடன் ஆலோசிக்கிறான். நளன் எனும் விஸ்வகர்மாவின் மகனை அணை கட்டத் தகுதியானவன் என்று இருவரும் தீர்மானிக்கிறார்கள். அந்த நளனை உடனே அழைத்து வரச் செய்கிறார்கள்.

அந்த வானரத் தச்சன் நளன் வந்து சுக்ரீவனிடம் "மன்னா! என்னை அழைத்த பணி என்ன என்று கேட்க கடலில் இலங்கைக்கு ஓர் அணை கட்ட வேண்டும்" என்று இருவரும் கூறவே, அவன் சம்மதிக்கிறான். "அணையைத் திறம்பட கட்டி முடிக்கிறேன், நீங்கள் அதற்கான மலைகளைக் கொண்டு வந்து சேருங்கள்" என்றான் நளன். இதைக் கேட்டு ஜாம்பவான் பறை சாற்றி வானரப் படையை அணைகட்ட அழைத்தான்.

பல காத தூரம் பரவியிருந்த கரிய மலைகளை வானரங்கள் கைகளிலும், தோளிலும், தலையிலும் சுமந்து கொண்டு வந்து போட்டனர். ஒரு கடலில் அணை கட்டித் தடுப்பதற்கு மற்ற ஆறு கடல்களும் வந்தது போல வானரர்கள் கூட்டம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரவியிருந்தது. சிலர் மலைகளைப் பெயர்த்தனர். அவர்கள் பெயர்க்க பெயர்க்க மற்றும் சிலர் அவற்றைக் கட்டி இழுத்துக் கீழே தள்ளினர். அப்படித் தள்ளப்பட்டப் பாறைகளைச் சிலர் தலையில் சுமந்து கொண்டு வந்து கடலில் இட்டனர். அப்படி பாறைகளால் கடல் தூர்ந்து போவதைப் பார்த்து வானரக் கூட்டம் ஆரவாரம் செய்தது. மற்ற பல வானரங்கள் ஆடவும், பாடவும் செய்தன.

"பேர்த்தன மலை சில; பேர்க்கப் பேர்க்க, நின்று
ஈர்த்தன சில; சில சென்னி ஏந்தின;
தூர்த்தன சில; சில தூர்க்கத் தூர்க்க நின்று
ஆர்த்தன; சில சில ஆடிப் பாடின".

சில வானரங்கள் காலால் ஒரு மலையை உருட்டிக் கொண்டும், சில கைகளில் இரு மலைகளைத் தாங்கிக் கொண்டும், மிக உயர்ந்த மேகங்களால் சூழப்பட்ட பெரிய மலை ஒன்றை வாலினால் இழுத்துக் கொண்டும் வந்தன. கோடிக்கணக்கான வானரங்கள் கொண்டு வந்து வீசும் மலைகளை, நளன் மிக அனாயசமாகக் கையில் தாங்கிக் கொண்டு "உம்! இன்னும் இன்னும் வேகமாகக் கொண்டு வாருங்கள்" என்று வாங்கி அடுக்கிக் கொண்டிருந்தான்.

வானரங்கள் கொண்டு வந்து வீசும் மலைகளை நளன் தாங்கிக் கொண்டது எப்படி இருக்கிறது தெரியுமா? 'தஞ்சம்' என்று வரும் வரியவர்களை சடையப்ப வள்ளல் தாங்கி ஆதரிப்பது போல இருக்கிறது என்று கம்பர் பெருமான், இந்த காப்பியத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருடைய பெருமையையும் பேசுகிறார்.

பெரிய மலைகளைப் பெயர்த்தெடுக்கும்போது அதன் மீது தவழ்கின்ற மேகங்கள் பயந்து சிதறி ஓடின. அங்கு தங்கி வாழ்கின்ற இயக்கர்களும் தங்கள் மனைவிமார்களோடு பயந்து ஓடினார்கள். வானரர் வீசிய இரு பெரும் மலைகள் கடலில் விழும்போது ஒன்றோடொன்று உரசி தீ பரவி மேலே எழுகிறது. இதைக் கண்ட வருணன் அஞ்சினான். பெரிய பெரிய மலைகள் வானரங்களால் கடலில் வீசப்பட்டதால், வெளிப்பட்ட நீர் திவலைகள் விண்ணுலகம் வரை சென்று அங்கே மழை போலப் பொழிந்தனவாம்.

விண்ணுலகில் சென்றடைந்த நீர்த்துளிகள் மேகலையோடு சிவந்த சேலை அணிந்த தேவ மாதர்கள் மீது விழுந்ததால் அவர்களது உடைகள் நனைந்து உடலோடு ஒட்டிக்கொள்ள, நாணமுற்று ஓடி ஒளிந்தனர். கடலில் விழுந்த மலைகளோடு அவற்றில் இருந்த யானைகளும், நீரில் வீழ்ந்து மூழ்கின. மகர மீன்கள் அவற்றைக் கவ்வ, அந்த யானைகள் முன்பு முதலை காலைக் கவ்வும்போது 'ஆதிமூலமே' என்று அழைத்த கஜேந்திரனைப் போலப் பிளிறின. மலைத் தேனும், அகிலும், சந்தனமும் மலைகளோடு வந்து விழுவதால் எல்லா திசைகளிலும் நறுமணம் வீசிக் கொண்டிருந்தது.


அனுமன் ஒரு பெரிய மலையைக் கொணர்ந்து கடலில் போட்டான். கடல்வாழ் உயிரினங்களோடு கடல் நீரும் விண்ணுலகம் சென்று வீடுபேறு பெற்றது. இவ்வாறு கொண்டு வந்து போடப்பட்ட மலைகளைச் சமமாக உடைத்து, அவற்றை ஒன்றொடொன்று பொருத்தி, ஏற்றத் தாழ்வின்றி ஒரே அளவில் ஒத்திருக்குமாறு அடுக்கி, மணலை எடுத்துத் தன் கையால் மட்டம் செய்தான் நளன்.

மூன்றே நாட்களில் திரிகூடமலை (திரிகோணமலை) வரையில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அணை கட்டும் வேலை முடிந்ததும் வானரர்கள் எழுப்பிய மகிழ்ச்சியொலி வான்முகட்டைச் சென்று தாக்கியது.

"நாடுகின்றது என்? வேறு ஒன்று? நாயகன்
தோடு சேர் குழலாள் துயர் நீங்குவான்
'ஓடும் என் முதுகிட்டு' என ஓங்கிய
சேடன் என்னப் பொலிந்தது, சேதுவே!"

பாற்கடலில் திருமால் பள்ளி கொள்ளும் ஆதிசேஷன், தேவியை மீட்பதற்காக இராமபிரானும் வானர சேனையும் கடலைக் கடந்து செல்வதற்கு மற்றொருவர் உதவி எதற்கு? என் முதுகின்மீது கடந்து போகட்டுமே என்று படுத்துக் கிடந்தது போல அமைந்திருந்தது சேது. அணைகட்டி முடித்த செய்தியை சுக்ரீவனும், விபீஷணனும் இராமனிடம் சென்று அறிவித்தார்கள்.

அணை கட்டி முடிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் இராமன் அவர்களை தழுவிக் கொண்டு பாராட்டினான். அவர்களோடு விரைந்து சென்று சேதுவைப் பார்த்தான். சீதையையே கண்டுவிட்டதைப் போன்ற மகிழ்ச்சியை அடைந்தான். இவ்வளவு விரைவில் அணை கட்டி முடிக்கப்பட்டதையும் வியந்து பாராட்டினான்.

வானரப் படை அணிவகுத்துப் புறப்பட்டது. அணைமீது நடந்து கடலைக் கடக்கத் தொடங்கினர். படையின் முகப்பில் விபீஷணன் சென்று கொண்டிருந்தான். அனுமன் பின்னால் கடைசியில் வந்து கொண்டிருந்தான். இலக்குவன் பின் தொடர இராமபிரான் அணைமீது நடந்து சென்றான்.

வானர சேனை மிகுந்த உணவுப் பொருட்களைச் சுமந்து கொண்டு சென்றன. இராமனுடைய திருமேனியில் வெயில் படாவண்ணம், பெரிய மரங்களைக் குடைபோலப் பிடித்துக் கொண்டு நிழல் அவன் மீது பட வானரங்கள் அழைத்துச் சென்றன. பூங்கொத்துக்களைக் கொண்டு சாமரம் வீசிக் கொண்டிருந்தன.

சிறைப்பட்டிருக்கும் சீதாபிராட்டியின் மன நிலையையும், பகைவரை ஒரு சேர அழித்து அவளை விடுக்கும் நினைவுகளோடு இராமன் தன் படைகளுடன் அந்த அணையைக் கடந்து சென்று அடுத்த கரையை அடைந்தான். இலங்கைக் கரையை அடைந்து அங்கே ஒரு குன்றின் அடிவாரத்தில் தங்கினான். அங்கே நீலனை அழைத்து, நம் படைகள் தங்குவதற்கு ஓர் பாடிவீடு அமைத்துக் கொடுக்கச் சொன்னான். நளனும் நீலனின் சொற்படி ஒரு பாடிவீட்டை அமைத்துக் கொடுத்தான்.

இராமனுக்கு மூங்கில்களாலும், புல்லாலும் ஒரு பர்ணசாலை அமைத்துத் தரப்பட்டது. இரவும் படரத் தொடங்கியது. இரவு நேரம் வந்ததும் இராமனுக்கு பிராட்டியின் நினைவு வந்து மிகவும் துன்புறுத்தியது. அப்படிப்பட்ட இரவு நேரத்தில் இராவணனால் ஏவப்பட்ட சில ஒற்றர்கள், குரங்குகளைப் போல உருவம் தாங்கிக் கொண்டு வானரப் படைகளின் அளவு, வலிமை இவற்றை அறியும் பொருட்டு அந்த பாடிவீட்டைச் சுற்றி வந்தனர். அவர்களை விபீஷணன் அடையாளம் கண்டு கொண்டு பிடித்துக் கயிற்றால் பிணைத்து இராமனிடம் கொண்டு போய் நிறுத்தினான்.

இராமன் முதலில் இவர்களை ஒற்றர்கள் என்று அறியாமல், இந்த வானரங்கள் ஏதேனும் பிழை புரிந்தனவோ? போகட்டும், இவர்களை மன்னித்து விட்டுவிடுங்கள் என்றான். அதற்கு விபீஷணன், இவர்கள் வானரங்கள் அல்ல. வானர உருவத்தில் நம்மை வேவு பார்க்க வந்த அரக்கர்கள். இராவணனால் அனுப்பப்பட்டு இங்கே வந்து நம் படைகளையும், அதன் பலத்தையும் நேரில் பார்த்து அவனுக்குச் சொல்லுவதற்காக வந்திருக்கிறார்கள் என்று சொன்னான். சுகன், சாரன் எனும் பெயரையுடைய வானர உருவம் தாங்கிய அந்த இரு அரக்கர்கள் இராமபிரானிடம், இந்த விபீஷணன் நம் வானர வீரர்களைக் கபடமாகக் கொன்று நம்மைப் போரில் வீழ்த்த திட்டமிட்டிருக்கிறான், நாங்கள் ஒற்றர்களும் அல்ல, அரக்கரகளும் அல்ல, நாங்கள் வானர வீரர்களே என்றார்கள்.

விபீஷணன் அந்த அரக்கர்களின் கபட நாடகத்தை முறியடிக்கக் கருதி மாயத்தை நீக்கும் மந்திரத்தை உச்சரித்து அந்த ஒற்றர்களின் வானர உருவம் நீங்கும்படி செய்து, அவர்களுடைய அரக்க உருவத்தைப் பெறச் செய்தான். இதோ இவர்கள் கள்வர்களே! தாங்களே பாருங்கள் என்றான் விபீஷணன்.




இராமன் முகத்தில் புன்னகை தவழ அந்த ஒற்றர்களிடம் "அஞ்ச வேண்டாம். நீங்கள் இங்கு வந்த காரணம் என்ன" சொல்லுங்கள்!" என்று கேட்டான்.

அவர்கள் இராமனை நோக்கி "வீர! எல்லா உயிர்க்கும் தாயாய் விளங்கும் சீதாதேவியைத் தன்னைக் கொல்ல வந்த நோய் என்பதை உணராத இராவணன், எங்கள் தீவினையால், வஞ்சனையால் ஒற்று அறிந்து தெரிவிக்க பணித்ததனால் வந்தோம்" என்றனர்.

"ஒற்றர்களே! உங்கள் இராவணனிடம் சென்று சொல்லுங்கள். இலங்கையின் அரசுரிமையும், அளவற்ற செல்வத்தையும், அவன் தம்பியாகிய விபீஷணனுக்கு யான் வழங்கிவிட்டதாகச் சொல்லுங்கள். வானர வீரர்கள் மலைகளைப் பெயர்த்துக் கடலில் இட்டு பாலம் அமைத்து கடலின் இந்தப் புறத்துக்கு வந்து விட்ட செய்தியையும், வில் வீரர்கள் வந்து விட்டார்கள் என்பதையும் போய் சொல்லுங்கள்" என்றான் இராமன்.

"படைகளைச் சுற்றிப் பார்த்தீர்கள். இனி தீங்கு ஒன்றும் நீங்கள் செய்யப் போவதில்லையாயின் அஞ்சற்க!" என்று சொல்லி விபீஷணன் முதலியோரிடம் "இவர்களைத் தீதின்றி போகவிடுக!" என்றான்.

அங்கே இலங்கை அரண்மனையில், இராவணனின் தாயைப் பெற்ற பாட்டன் மாலியவான் இராவணனுக்கு அறிவுரைகளைக் கூறுகிறான். இராமனின் வீரம், அவனுக்குத் துணைஇருக்கும் வானரப் படையின் திறம், கடலில் அணைகட்டித் தாண்டி வந்த பாங்கு இவற்றையெல்லாம் சொல்லி, இராமனோடு போர் புரிதல் சரியானதல்ல" என்றெல்லாம் அவனுக்கு விளக்கிக் கூறினான்.

அதற்கு இராவணன் "பாட்டா! நீ கொடுத்த ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி. நீ போய் அந்த விபீஷணனுடன் சேர்ந்து கொள். என்றும் வாழ்வாய்" என்றான்.

"நல்லது சொன்னால் உனக்குக் கசக்கத்தான் செய்யும், என்ன செய்வது?" என்று மாலியவான் மெளனமானான். அப்போது இராவணனுடன் அங்கிருந்த படைத் தலைவன் மாலியவானை ஏசுகிறான். அந்த நேரத்தில் இராமனால் உயிருடன் விடுவிக்கப்பட்ட இரண்டு ஒற்றர்களும் அவ்விடம் வந்து சேருகிறார்கள்.

வந்து வணங்கிய ஒற்றர்களிடம் இராவணன் "வானரப் படைகளின் பலம், விபீஷணனின் நிலைமை, இராம லக்ஷ்மணர்களின் திறமை இவை பற்றியெல்லாம் கண்டு வந்தபடி கூறுங்கள்" என்றான்.

அதற்கு அந்த ஒற்றர்கள் "வானரப் படையின் அளவை முழுமையாகக் காணமுடியவில்லை. இராமன் அழைத்ததும் வருணன் வந்து சேராததால், இராமன் அம்பு எய்து வருணனை வருத்தினான். குரங்குகள் மலைகளைக் கொண்டு வந்து போட்டு கடலின் மீது ஒரு அணையைக் கட்டி, கடலைத் தாண்டி வந்து விட்டன. இராமன் விபீஷணனுக்கு இலங்கை அரசின் முடிசூட்டி அளவற்ற செல்வத்துக்கு அதிபதியாக்கி விட்டான்" என்ற செய்தியைக் கூறினர்.

"அதுமட்டுமல்ல, நாங்கள் வானர உருவில் சென்று பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டுபிடித்து, நாங்கள் ஒற்றர்கள் என்ற விஷயத்தையும் விபீஷணனே சொல்லி எங்களைப் பிடித்துக் கொடுத்தான் எனினும் இராமன் எங்களைப் போகச் சொல்லி விடுவித்து விட்டான்" என்றனர்.

ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தியைக் கேட்ட இராவணன், தனது ஆலோசனை சபையைக் கூட்டினான். இராம லக்ஷ்மணர்கள் வானரப் படையுடன் கடல் கடந்து இலங்கைக்குள் வந்து விட்டனர், இனி நாம் செய்ய வேண்டியவை பற்றி ஆலோசிப்போம் என்று சபையோருக்குக் கூறினான்.

அப்போது சேனைத் தலைவன் எழுந்து "சீதையை இப்போது விடுவித்தால், நாம் அவர்களுக்குப் பயந்து செய்ததாகத் தேவர்கள் நினைப்பார்கள். போரைத் தவிர்க்க சமாதானம் செய்து கொள்ளலாமென்றால், உமது தம்பி விபீஷணன் அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டான். பகைவர் படை நம்மை நெருங்கிட்ட இந்த நேரத்தில் நாம் செய்யத் தக்கது எது என்பதைச் சொல்லி அருள வேண்டும்". ஆயிரம் வெள்லம் எனும் அளவுடைய நம் படை அழிந்தே போவதாயினும் அதற்குப் பல யுகங்கள் ஆகும். நீ உடனே படையெடுத்து அவர்களைத் தாக்கினால் குரங்குக் கூட்டம், சிங்கங்களைக் கண்ட நாய்க் கூட்டம் போல ஓடிவிடும்" என்றும் சொன்னான் படைத்தலைவன்.

நன்மதியும், கூர்ந்த அறிவும் உள்ல மாலியவான் எழுந்து பேசத் தொடங்கினான். நன்னெறிகளை இராவணன் உணறுமாறு எடுத்துச் சொல்லலானான். "வெற்றி நம் பக்கம் என்று இங்கே வீரம் பேசிக்கொண்டிருக்கும் அனைவருமே சிதைந்து அழியும் நிலையில் இருப்பவர்களே. திருமாலே தசரத குமாரனாக அவதரித்து இந்த இராமனாக இங்கே வந்திருக்கிறான். இந்தக் கடலைத் தாண்டி, யாரும் செய்ய முடியாத சாதனையைச் செய்து, நம்மை அழிக்க வந்திருப்பதாகவே அனைவரும் சொல்லுகிறார்கள்."


"அந்த இராமனுடன் வந்திருக்கும் அவன் தம்பி இலக்குவன், அந்த திருமால் பாற்கடலில் பள்ளி கொள்ளும் அரவணையான ஆதிசேடனே என்றும் சொல்லுகிறார்கள். அவர்களது வில்லும் அம்பும் காலச் சக்கரத்தின் ஆற்றலைப் பெற்றவை, யாராலும் வெல்ல முடியாதவை". மேலும் கேள்:-

"வாலி மாமகன் வந்தானை 'வானவர்க்கு இறைவன்' என்றார்,
நீலனை 'உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன்' என்றார்,
காலனே ஒக்கும் தூதன் 'காற்று எனும் கடவுள்' என்றார்
மேலும் ஒன்று உரைத்தார் அன்னான் விரிஞ்சன் ஆம் இனிமேல்!"

"வாலியின் பெருமைக்குரிய மைந்தனாம் அங்கதன் வானவர்களின் தலைவன் இந்திரன் என்கிறார்கள்; வானரப் படைகளின் தலைவனான நீலன் இருக்கிறானே அவனை அக்னி தேவன் என்கிறார்கள்; கூற்றுவனின் ஆற்றலைப் பெற்றவனும், இலங்கைக்குத் தூதனாக வந்தவனுமான அனுமனை காற்றுக் கடவுள் என்கிறார்கள்; அதுமட்டுமல்ல இனி வரக்கூடிய பிறவியில் அவனே பிரமதேவனாக ஆகப் போகிறான் என்றும் சொல்லுகிறார்கள்".

"அப்பதம் அவனுக்கு ஈந்தான் அரக்கர் வேர் அறுப்பதாக
இப்பதி எய்தினான் அவ் இராமன் என்று எவரும் சொன்னார்
ஒப்பினால் உரைக்கின்றாரோ? உண்மையே உணர்த்தினாரோ?
செப்பி என்? குரங்காய் வந்தார் தனித்தனி தேவர் என்றார்".

அனுமனுக்குப் பிரம பதவியை அளிக்கப் போகிறவனான இராமன், அரக்கர்களை வேரோடும் ஒழிக்கப்போவதாக விரதம் ஏற்று இந்த நகரத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் பேசிக்கொள்ளுகிறார்கள். ஒருக்கால் இந்த மானுடர்களும், வானரங்களும் மேற்சொன்ன தேவர்களையும் கடவுளர்களையும் போல ஒத்த தன்மையுடையவர்களாக இருப்பதால் அப்படிக் கூறுகிறார்களோ, அல்லது உண்மையிலேயே அவர்கள் அந்த தேவர்களாகவும், கடவுளாகவுமே வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துதான் சொல்லுகிறார்களா தெரியவில்லை. எப்படி இருந்தால் என்ன, இதைப் பற்றி சொல்லி ஆகப் போவது என்ன?

தீப்போன்ற கற்புடைய சீதையை ஏதோ எளியவள் என்று எண்ணிவிடாதே. அவள் தூய்மையே உருவானவள். திருப்பாற் கடலில் அமிழ்தோடு பிறந்தவள் இந்தத் திருமகள் ஆவாள். உலக மாந்தர்க்கெல்லாம் கண்ணுக்குப் புலப்படாத தாயாய் நின்று அருள் புரிபவள் அவளே என்றும் எல்லோரும் கூறுகிறார்கள். அறத்தின் மூர்த்தியான திருமாலை தேவர்கள் வேண்டிக் கொள்ள, அவரும் இராவணனின் தவத்தின் வலிமையை உணர்ந்து, மனித உருவம் தாங்கி இங்கே உன்னை அழிப்பதற்காக வந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

எண்ணற்ற தீய நிமித்தங்கள் இலங்கையில் தோன்றுகின்றன. தாயினும் நல்லாள் சீதாப் பிராட்டியைத் தேடி இராம தூதனாக வந்த அனுமனால் தாக்கப்பட்ட இலங்கையின் காவல் தெய்வம், இலங்கிணி இந்த நகரத்தை விட்டு நீங்கி ஓடிப் போய்விட்டாள். இந்த நகருக்குள் போர் நுழைந்துவிட்டது.

ஒழுக்க சீலனும், தவத்தில் சிறந்தவனுமான விபீஷணன் கூட, அரக்கர்களும், இராவணனும் இராம லக்ஷ்மணர்களின் அம்புக்கு இரையாகிவிடுவர் என்று சொல்லிவிட்டாராம். பகைவர்களைப் பற்றி நான் கேட்டு அறிந்த அனைத்தையும் நான் உனக்கு உரைத்து விட்டேன். முன்பு நம் அரக்கர் குலம் இந்தத் திருமாலால் கெட்டழிந்தது எனும் வருத்தத்தாலும், என் குலத்தோன்றலாகிய உன் மீது நான் கொண்ட அன்பு காரணமாகவும், மனம் வருந்தி கூறுகின்றேன். "சீதையை இப்போதாவது கொண்டு போய் இராமனிடம் விட்டுவிடு!". உனக்கு வந்த தீமைகள் அனைத்தும் நீங்கிவிடும் என்றான் மாலியவான்.

"நீ சொன்ன மற்ற செய்திகள் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இந்த தேவர்களும் மும்மூர்த்திகளும் தத்தமக்குரிய அறிவு, திரு ஆற்றல்களோடு வானுலகில் இந்நாள் வரை இறவாமல் வாழ்ந்திருந்தும், எனக்கு அஞ்சி வாழ்ந்தார்கள். இன்று, கேவலம் இவர்கள் குரங்குகளாகவும், மனிதர்களாகவும் வந்தா என்னை எதிர்த்துப் போரிட்டு வென்றுவிடுவார்கள்? இவர்களிடம் போய் நான் தோற்றுவிடுவேன் என்று சொல்கிறாயே! நன்றாய் படித்தாய் அறிவு நூல்களை!" என்று இராவணன் மாலியவானை இகழத் தொடங்கினான்.

"சீதையின் காரணமாக இவர்கள் என்னுடன் போரிட வருகிறார்கள் என்றால், அதற்காக சிறிதும் பின்வாங்க மாட்டேன். என் கையிலுள்ள அம்புகள் ஒன்றல்ல, இரண்டல்ல, உலகம் அனைத்தையும் வென்ற புகழுடையவை அவை. ஊழ்வினையைக் காட்டிலும் முந்திச் சென்று பழி தீர்க்க வல்லவை. போர் என்றதும் எதிரியின் மார்பில் புகுந்து முதுகு வழி செல்லும் வலிமையுடையது. கேவலம் இந்த குரங்குகள் எம்மாத்திரம்? அந்த சிவபெருமானே ஒரு குரங்காக உருவெடுத்து என் முன் வந்து நின்றாலும், தோற்று ஓடுவான். என் ஆற்றலை உணராமல் பேசுகிறாய்" என்றான் இராவணன்.


அன்றைய இரவுப் பொழுது நீங்கி பகல் தோன்ற கதிரவன் வந்து உதித்தான். இராமபிரான் தன் பரிவாரங்கள் புடைசூழ சுவேல மலைமீது ஏறுகிறான். அப்படி வில்லினை கையில் ஏந்திக் கொண்டு அவன் வரும் தோற்றம், ஓர் இராஜ சிங்கத்தினை ஒத்திருந்தது. மலைமீது ஏறி நின்று, இலங்கை நகரத்தின் எழில் மிகு காட்சிகளைக் காண்கிறான். அந்த அழகைத் தன் தம்பி இலக்குவனிடம் காட்டி அதன் அழகைப் போற்றுகிறான்.

இவ்வாறு இலங்கை நகரத்தின் அழகு, அமைப்பு இவற்றை இலக்குவனுக்குச் சொல்லி வியந்து நிற்கும் அதே நேரத்தில், அங்கே அந்த இலங்கை நகரத்தில், அதன் மன்னனான இராவணன், இராமனின் வானர சேனையின் மிகுதியைக் காண எண்ணி செம்பொன்னால் ஆன ஓர் மாளிகையின் கோபுரத்தின் மீது ஏறி அதன் உச்சியை அடைந்தான்.

(யுத்த காண்டம் முதற் பாகம் நிறைவு பெறுகிறது)

No comments:

Post a Comment

Please give your comments here