Monday, May 17, 2010

iii) Continued ...

"எந்தையே, எந்தையே இவ்வெழுதிரை உலகத்து, யார்க்கும்
சிந்தையால் செய்கையால் ஓர் தீவினை செய்திலாதாய்!
நொந்தனை! அதுதான் நிற்க நின் முகம் நோக்கிக் கூற்றம்
வந்ததே அன்றோ, அஞ்சாது? ஆர் அதன் வலியைத் தீர்ப்பார்?"

"எந்தையே! ஒருவருக்கும் ஒரு தீங்கும் நினைக்காத உனக்கா இந்த கதி? அந்தக் கூற்றுவன் எப்படி உன் எதிரில் அஞ்சாமல் வந்தான். அப்படி வந்த எமனின் வலிமையை யார் அடக்குவது? என்ன தைரியம் அவனுக்கு, உன் உயிரைப் பறிக்க வருவதற்கு. அன்று தேவரும், நிருதரும் பாற்கடலைக் கடைந்து அமுதம் கிடைக்காதபோது நீ போய் மந்தர மலையை மத்தாகி, வாசுகிப் பாம்பை நாணாக்கிக் கடைந்து அமுதம் கொணர்ந்தனையே! இனி தேவைப்பட்டால் அவர்களுக்கு யார் இந்தச் செயலை செய்ய வல்லார்?"

"உமையொரு பாகனான அந்த பரமேஸ்வரனைத் தவிர வேறு யாரையும் வணங்கி அறியாத கைகளையுடைய தந்தையே! நீ அன்று பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தை உண்ட தேவர்கள் வாழ்ந்திருக்க, அதனை அருந்தாமல் பிறர்க்குக் கொடுத்த நீ இப்படிக் கீழே வீழ்ந்து கிடக்கிறாயே".

இப்படி பலவாறாகப் புலம்பியபடி அங்கதன் அழுது கொண்டிருந்தான். அழும் தன் மகனைத் தேற்றியபடி வாலி கலங்கிய கண்களோடு சொல்கிறான், "மகனே! இனி நீ வருந்தாதே!" என்று அவனை ஆதரவோடு அணைத்துக் கொள்கிறான். "நாம் முன்பு செய்த நல்வினைப் பயனால் இராமன் இதனைச் செய்திருக்கிறான்" என்றான்.

"பிறப்பதும், இறப்பதும் எல்லோர்க்கும் நிச்சயித்த ஒன்று. ஆனால், இராமபிரான் என்னைத் தேடி வந்து மோட்ச பதவி கொடுத்தது நான் செய்த முற்பிறவியிலும், இப்பிறவியிலும் செய்த புண்ணியத்தின் விளைவு. மகனே! இனியும் நீ சிறு பிள்லை இல்லை. நான் சொல்லும் இந்தக் கருத்தை மனதில் நன்றாக வாங்கிக் கொள். தன்னிகரில்லா மெய்ப்பொருளாம் நிலையான பரம்பொருள் கையில் ஓர் வில் ஏந்தி தன் பாதங்கள் தரையில் பட மானுட வடிவம் தாங்கி, நம் கண்களால் தரிசிக்கும் வண்ணம், நம் எதிரே பிறவி நோய்க்கு மருந்தாக வந்திருக்கிறான்."

"என் உயிருக்கு இறுதி செய்தவன் என்று இராமனைப் பற்றி எண்ணாமல், அவனது மலரடி தொழுது வணங்கித் தொண்டு செய்து வாழ்வாயாக!" என்று வாலி சொல்லி, மகனை ஆரத் தழுவிக்கொண்டு, இராமனிடம் சொல்லுகிறான் "இராமா! என் மகன் சுத்த வீரன். அரக்கர்கள் என்னும் பஞ்சுப் பொதிக்கு நெருப்புப் போன்றவன். பரிசுத்தமானவன். இவனை உன்னிடம் அடைக்கலமாகக் கொடுக்கிறேன்" என்றான்.

தாமரைச் செங்கணான் இராமபிரானும் தன் அடிபணிந்த அங்கதனைத் தூக்கி நிறுத்தி, அவனிடம் தன் உடைவாளை எடுத்துக் கொடுத்து "நீ இது பொறுத்தி!" என்றான். இராமனின் கருணையையும், அங்கதன் அடைந்த பெருமையையும் அனைவரும் வாழ்த்தி ஒலி எழுப்ப வாலியின் ஆவி பிரிந்து தேவருலகம் சென்றது.

(உடைவாளைக் கொடுத்ததன் மூலம், இராமன் அங்கதனை இளவரசாக ஏற்றுக் கொண்டான் என்பது மரபு வழி தன் வாரிசாக இளவரசாக ஏற்றுக்கொள்ளும்போது அவனிடம் உடைவாளைக் கொடுக்கும் வழக்கம் இருந்தது என்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் அதனால்தான் ஸ்ரீ இராம பட்டாபிஷேக காட்சியின் போது, "அரியணை அனுமன் தாங்க" .. எனும் பாட்டில் "அங்கதன் உடைவாள் ஏந்த" என்றும் கம்பர் பெருமான் அந்தக் காட்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.)

வாலியின் கை, தன் மார்பில் பாய்ந்திருந்த அம்பை இறுகப் பிடிந்திருந்தது. அவனுடைய உயிர் பிரிந்ததும் அவன் கை தளர்ந்தது; அதுவரை அவன் மார்பில் தங்கியிருந்த அம்பு மார்பினின்றும் கழன்று அவன் உடலை ஊடுறுவிச் சென்று தூய கடல் நீரில் தோய்ந்து, தூய மலர்கள் தூவ, ஐயன் இராமபிரானுடைய அம்புப்புட்டிலை வந்தடைந்தது. வாலி வானுலகம் சென்றான். அதன் பின் இராமன் சுக்ரீவனோடும், அங்கதனோடும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

வாலி இறந்த செய்தி கேட்டு தாரை ஓடி வந்து அவன் இறந்த உடல்மீது விழுந்து கதறி அழுகிறாள். செவ்வானத்தில் மின்னிக் கொண்டு கிளம்பும் மின்னலைப் போல தாரை, வாலியின் உடல்மீது விழுந்து அழுதாள். அவள் அப்படி நீண்ட நேரம் அழுது புரண்டபின் மாருதி வந்து அவளைத் தேற்றி, அவளது இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். அங்கதனைக் கொண்டு வாலிக்குச் செய்யவேண்டிய அந்ந்திமக் கடன்களையெல்லாம் செய்வித்துப் பிறகு இராமனிடம் நடந்த விவரங்களைச் சொல்லுவதற்கு விரைந்து சென்றான் அனுமன்.

இதுவரை மேல் நாம் கண்டது கம்பர் பெருமான் தனது இராம காதையில் கூறியுள்ளபடி கதையோட்டத்தைப் பார்த்தோம். இனி இதே பகுதி பற்றி வான்மீகத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்பதையும் ஓரளவு பார்க்கலாம்.

'வாலி மூர்ச்சையுற்றுக் கிடந்தானேயன்றி இறக்கவில்லை. வானரர்கள் வாலி இறந்தான் என்று அஞ்சி ஓட, அவர்களிடமிருந்து வாலி இராமபிரானால் கொல்லப்பட்டான் என்று தாரை கேள்விப் படுகிறாள். உடனே அவள் வாலி கிடக்குமிடம் சென்று வாலி இறந்து போய்விட்டான் என்று எண்ணி அழுது புலம்பி, அங்கதனை நினைத்து வருந்தி, சுக்ரீவனிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டுத் தானும் இறக்கத் துணிகிறாள். அப்போது அனுமன் அவள் அருகில் வந்து அவளைத் தேற்றி அங்கதனுக்காக அவள் உயிர் வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். ஆனால் அவளோ சுக்ரீவனே அரசனாகட்டும், அவனே அங்கதனைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று கூறி உயிரை விடத் துணிகிறாள்.

அப்போது வாலி மூர்ச்சை தெளிந்து, சுக்ரீவனிடம், அவனே தனக்குப் பிறகு அரசை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், அங்கதனையும், தாரையையும் காப்பாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறான். அங்கதனுக்குச் சில அறிவுரைகளையும் கூறிய பிறகு இறந்து போகிறான். தாரை மறுபடியும் கதறி அழுகிறாள். அவள் வாலியின் மார்பில் இருந்த அம்பைப் பிடுங்க முடியாமல் தவிக்க, நீலன் அதனைப் பிடுங்கி எடுக்கிறான். பிறகு அனைவரையும் இராமன் தேற்றிய பிறகு இறுதிக் கடன் நடைபெறுகிறது.'

வாலியின் அந்திமக் கிரியைகள் அனைத்தும் முடிந்த பிறகு இராமபிரான் தம்பி இலக்குவனிடம் "ஐய! கதிரோன் மைந்தனுக்கு உன் கைகளால் முறைப்படி முடி சூட்டுவாய்!" எனப் பணிக்கிறான்.

உடனே இலக்குவன் அனுமனிடம் அதற்கான எல்லா பொருட்களையும் கொண்டு வரும்படியாகப் பணித்தான். அவ்வண்ணமே அனுமனும் நீராட்டுக்கு வேண்டிய புண்ணிய தீர்த்தம், மங்கலப் பொருட்கள், பொன்னாலான மணிமுடி அனைத்தையும் கொண்டு வந்து சேர்த்தான். மறையவர்கள் ஆசிகூற, தேவர்கள் நன்மலர்களைத் தூவ, நன்னெறி ஒழுகும் இராமனின் இளவல் முறைப்படி சுக்ரீவர்க்கு முடியினைச் சூட்டினான்.

கிஷ்கிந்தை அரசுக்கு மன்னனாக முடிசூட்டிக் கொண்ட சுக்ரீவன் இராமனின் பாதங்களில் விழுந்து பணிந்தான். அவனைத் தூக்கி நிறுத்தித் தன் மார்போடு தழுவிக் கொண்டு, அவனுக்குப் பல அறிவுரைகளைக் கூறினான். "வீர! நீ இங்கிருந்து சென்று உன் இருப்பிடமான கிஷ்கிந்தையில் நீ புரிய வேண்டிய காரியங்களை முறைப்படி ஆராய்ந்து, நெறிப்படி செய்து முடித்து, உன் ஆட்சிக்குப் பெருமை சேர்க்கும்படி நடந்து கொண்டு, போரில் மாண்டு போன வாலியின் மைந்தன் அங்கதனோடும் சேர்ந்து நலமாக வாழ்வாயாக" என்று வாழ்த்தினான்.

"உன் அமைச்சர் முதலானோர் உன்னுடன் பழகுமிடத்து, உன்னை அகன்று நெடுந்தொலைவுக்குச் சென்று விடாமலும், அல்லது உன்னை மிகவும் ஒட்டிக் கொண்டு விடாமலும், நிற்பாயாக. மன்னன் எனும் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வாயாக. பகைவரிடத்தும் இனிமையான பேச்சும், இன்முகமும் கொண்டவனாக இரு. அரசன் நேர்மையின்றி, நட்பு, பகைமை, நொதுமல் (உதாசீனம் செய்வது) என்ற வேற்றுமையால் அளவு மிஞ்சிய ஈகை, இவறல் (பேரவா, ஈயாமை, பொருள் கொடாமை), இகழ்ச்சி முதலியன கொள்ளலாகாது. எவரையும் சிறியர் என்று கருதி சிறுமை செய்யாதே. மங்கையர் பொருட்டே மாந்தர்க்கு மரணம் கிட்டும் எனும் உண்மையை வாலியின் மரணத்தால் தெரிந்து கொள். மேலும் துன்பமும் வசையும்கூட பெண்களாலே வந்து சேரும் என்பதினை எங்களிடமிருந்து தெரிந்து கொள்."

"கீழ்குடிகள் மாட்டு அன்பு காட்டி ஒழுகுதல் நன்று! அங்ஙனம் ஒழுகுமிடம் குற்றம் புரிந்தாரைத் தண்டித்தல் அரசுமுறை என்பதை உணர்ந்துகொள்! ஆக்கத்திற்குக் காரணம் அறம்; அதன் அழிவுக்குக் காரணம் பாவம்! ஆகவே ஆக்கம் தரும் அறத்தைக் கடைப்பிடித்தலே நலம் பயக்கும். வறுமையைத் தரும் பாவத்தைக் கைக்கொள்ளுதல் தகாது! அறிஞர்கள் கூறிய இயல்பின்படி நீ சென்று ஆட்சி செய்து, மழைக்காலம் கழிந்த பிறகு உன் பெரும் சேனையைத் திரட்டிக் கொண்டு, இங்கு வந்து சேர்வாயாக! இப்போது நீ செல்லலாம்" என்று சொன்னான் இராமன்.

(ஆவணியும் புரட்டாசியும் கார்காலம், முன்னாலுள்ள ஆடியும் பிறகு ஐப்பசியும் சேர்த்து நான்கு மாதங்களையும் மாரிக்காலம் என்பதால், அது முடிந்து படையுடன் வா என்று பணித்தான்).

நகரத்துக்குள் வந்து தங்கும்படி சுக்ரீவன் இராமனை வேண்டிக் கொள்கிறான். தாம் தவ விரதம் பூண்டமையால் அரசர்க்குரிய அரண்மனை வாழ்வு கூடாது என்று இராமன் நகரத்துக்குள் வர மறுத்துவிடுகிறான். அதோடு சீதையைப் பிரிந்து துன்புறும் தனக்கு சுக வாழ்க்கை தேவையில்லை என்றும் சொன்னான்.

இராமன் இப்படிக் கூறியதற்கு சுக்ரீவன் மறுத்து எதுவும் கூறாமல், இராமனது மிக உயர்ந்த தவ வடிவைக் கருதி, அன்னானது விருப்பத்துக்கு மாறாக எதையும் செய்ய விரும்பாதவனாய், கண்களில் நீர் பொங்கி வர, நெடுஞ்சாண் கிடையாகக் கீழே விழுந்து வணங்கி, அளவற்ற துன்பத்தைத் தன் மனத்தகத்தே வைத்துக் கொண்டு கிஷ்கிந்தை நகரை நோக்கிச் சென்றான்.

இங்கே கம்பர் பெருமான் 'நெடிது தாழ்ந்து' எனும் பதத்தை உபயோகப்படுத்துகிறார். நெடிது தாழ்தல் என்றால் உடலின் எட்டு உறுப்புகள் பூமியில் படும்படி வீழ்ந்து வனங்குதல். இதனைத் தான் சாஷ்டாங்க நமஸ்காரம் அல்லது நெடுஞ்சாண் கிடை என்பர்.

அப்போது அங்கதன் இராமபிரானின் காலில் விழுந்து வணங்குகிறான். தன் காலில் வீழ்ந்து வணங்கிய அங்கதனை இராமன் கருணையோடு நோக்கி, "அங்கதா! அருமை மைந்தா! நீ சீரிய ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும். சுக்ரீவனை உன் சிறிய தந்தை என்று எண்ணாமல், அவனை உன் தந்தையாகவே மதித்து நடக்க வேண்டும்" என்றான்.

சுக்ரீவனைத் தொடர்ந்து அங்கதனும் கிஷ்கிந்தை நோக்கிச் செல்லத் தொடங்கினான். அப்போது இராமன் அனுமனை அழைத்து, "பேரெழில் வீர! நீ போய் அவர்களுடைய அரசுக்குத் துணையாக இரு" என்றான். பொய் என்பதே அறியாத அனுமன் "அடியேன் இங்கேயே தங்கி தங்களுக்கு என்னால் இயன்ற அளவு குற்றேவல் செய்கிறேன்" என்று இராமன் பாதங்களில் விழுந்து வணங்கி வேண்டிக் கொண்டான். அதற்கு இராமன், "அரசுக்கு இன்றியமையாத குணங்கள் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடமை முதலிய நற்பண்புகளாகும். இவை நிறையப் பெற்ற வாலி இந்த ராஜ்ஜியத்தை ஆண்டான். இப்போது அவன் இல்லாத நிலையில் புதியவன் சுக்ரீவன் ஆளுகின்றபோது எதிரிகள் எவரேனும் நாட்டைக் கைப்பற்ற வரலாம். எனவே, நீ போய் அவனுடன் இருந்து நல்லாட்சி செய்து எனக்கு உதவ படைகளையும் திரட்டிக் கொண்டு வந்து சேர்வாயாக" என்றான்.

"ஆழியான் அனைய கூற, ஆணை ஈதாகின், அஃதே
வாழியாய்! புரிவன் என்று வணங்கி மாருதியும் போனான்
சூழிமால் யானை அன்ன தம்பியும் தானும் தொல்லை
ஊழி நாயகனும் வேறோர் உயர் தடம் கின்றம் உற்றான்".

இராமபிரான் அப்படிக் கூறவும், தங்கள் ஆணை அதுவாகின் நான் அதன்படியே நடக்கிறேன் என்று சொல்லி அவர்களை வணங்கிய பிறகு மாருதி அங்கிருந்து போனான். அவன் போன பிறகு இலக்குவனுடன் வேறொர் மலையைச் சென்றடைந்தான். நகரத்துக்குத் திரும்பிய சுக்ரீவன், தனது அமைச்சர், பரிவாரங்கள் சுற்றியிருக்க, தாயைப் போன்ற, அண்ணன் வாலியின் மனைவியான தாரையை வணங்கி, அவள் கூறு அறவுரைகளின்படியும், சான்றோர் மொழிகளுக்கு ஏற்பவும் செங்கோல் வளையாமல் ஆட்சி செய்யத் தொடங்கினான். அங்கதனை இளவரசாக இருந்து ஆட்சிபுரியுமாறு கட்டளையிட்டு இனிமையாக தனது நகரத்தின் கண் வீற்றிருந்தான். இந்த நிலையில் கார் காலமும் வந்து சேர்ந்தது.

சுக்ரீவனை கிஷ்கிந்தைக்கு அனுப்பிவிட்டு இராமனும் இலக்குவனும் சென்று தங்கிய மலைக்கு பிரஸ்ரவண மலையென்று பெயர். அவர்கள் அங்கு சென்று தங்கிய காலம் தக்ஷிணாயண காலம், சூரியன் தெற்கு நோக்கி நகருகின்ற காலம். ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள ஆறு மாதங்கள் தக்ஷிணாயண புண்ணிய காலம் ஆகும். இராமன் தெந்திசை நோக்கி ஏவிய தூதனைப் போல சூரியனும் தெந்திசை நோக்கிப் பயணமானான். பின்னால் அனுமன் தெந்திசைக்குத் தூதனாகப் போகப் போகிறான் என்பதை இப்போது சூரியன் தெந்திசை நோக்கிப் பயணமாவதற்கு ஒப்பிட்டு கம்பர்பெருமான் வர்ணிக்கிறார்.

அந்த மலைப் பகுதியில் காணப்பட்ட கார்கால மேகம் எப்படி இருக்கிறது? கவிச்சக்கரவர்த்தியின் வர்ணனையை நாம் படித்து ரசிக்க வேண்டிய பகுதி. பூமியாகிய அகள் விளக்கில், கடல் நீராகிய நெய்யை ஊற்றி, மேருமலையை திரியாக அதிலே இட்டு, சூரியனாகிய ஒளிக்கற்றையில், வானமாகிய கலயத்தில் மைகூட்டியது போல இருந்ததாம். நீர் கொண்ட கருத்த மேகம் வான் பரப்பை மூடியிருந்த காட்சி கலயத்தில் மைகூட்டியது போல இருந்தது என்பது நல்ல கற்பனை. இந்த இடத்தில் பொய்கை ஆழ்வாரின் "வையம் தகளியா, வார்கடலே நெய்யாக" எனும் 'முதல் திருவந்தாதி' பாடலையும் இதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாமே!

"வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினென் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று".

நீல நிறம் கொண்ட அந்த வான்பரப்பு, கரிய மழை மேகங்கள் கவிந்த வண்ணம் விளங்கிய காட்சியானது, நஞ்சுபோல நீலமாகவும், நெடுங்கடல் போன்றும், பெண்களின் மைதீட்டிய கரிய நெடுங்கண்கள் போன்றும், அவர்களுடைய அவிழ்ந்து பரந்த கூந்தலைப் போலவும், அரக்கர்களுடைய நெஞ்சம், செயல் போன்றும் இருண்டு காணப்பட்டது.

கருத்த மேகங்கள் திட்டுத் திட்டாக பெரிய யானைகளைப் போலவும், இடையே வெட்டி வீசுகின்ற மின்னல்கள், அவற்றை போரிடை வீசும் வாட்கள் போலவும் காட்சியளித்தன. அந்த யானைகளின் பேரொலியாக இடியோசை நாலா திசைகளிலும் கேட்கின்றன. தேவர்களின் அணிகலன்கள் மின்னுவது போலவும், காட்டுத் தீ பற்றி எரிவது போலவும், திசைகள் ஒன்றையொன்று பார்த்து சிரிப்பது பொலவும் மின்னல்கள் வெட்டியடித்து ஒளிவீசின.

சீதாபிராட்டியைப் பிரிந்த இராமன் மேல் மன்மதன் மலர்கணைகளைத் தூவினாற்போல மழைத்துளிகள், அந்த மலைகளின் மீது சொரிய ஆரம்பித்தன. மேகங்களின் முழக்கமானது, இராமபிரானும் வானரப் படைகளும் ஒன்று சேர்ந்தமையால், தம் பகைவர்கள் அழிவர் என்று தேவர்கள் செய்கின்ற ஆரவாரம் போல இருந்தது. இராவணன் சீதாபிராட்டியை வான வழியாக எடுத்துச் செல்கையில் அன்னை சிந்திய கண்ணீரே மழைத் துளிகளாக வந்து வீழ்ந்தது போல காட்சியளித்தது. அடிக்கடி திசைமாறி வீசும் காற்றின் வேகத்தால் மழைத் துளிகள் எதிர் எதிரே வீசுவது திசைகள் சண்டையிடுவது போல இருந்தது. இராமனுக்கு தனிமையும், சீதையின் பிரிவும் விரக தாபத்தை உண்டாக்கி மிகவும் வருந்துகிறான். இலக்குவன் இராமனைத் தேற்றுவதனால், இராமன் ஒருவாறு ஆறுதல் அடைகிறான். இப்படியே மாரிக்கால இறுதியைக் குறிக்கும் விதமாகப் பின்மாரி பொழிகிறது.

குறைவிலா பெருநிதியம் கொடுத்துக் கொடுத்து, அது தீர்ந்துபோன பின்னர், கொடுக்க ஏதும் இல்லையே என்று வருந்தி முகம் வெளுக்கும் கொடை வள்ளல் முகம் போல வானம் வெளுத்துக் காணப்பட்டது. பெருமழைக்குப் பிறகு நீர்நிலைகள் நன்கு தெளிந்திருந்தன, காமக் குரோதத்தால் கலங்கிய மனம் கல்வி கேள்வியினாலும், சத்சங்கங்களாலும் தெளிவடைவது போல அவைகள் இப்போது தெளிந்து காணப்பட்டன. கார்காலமும் முடிந்தது. மழை நின்று வானம் வெளுத்தது. வாக்களித்தபடி சுக்ரீவன் படைதிரட்டி வந்திருக்க வேண்டும். ஆனால் அவன் சொன்னபடி படைகொண்டு வரவில்லையே என்று இராமன் சினம் கொண்டான். இலக்குவனை அழைத்து, சுக்ரீவன் முன்பு வாக்களித்தபடி வராதது குறித்துத் தனது கோபத்தை வெளிப்படுத்துகிறான்.

"லக்ஷ்மணா! நமது உதவியால், பெறற்கரிய அரசாட்சியைப் பெற்றதை அவன் எண்ணிப் பார்க்கவில்லையே. அறத்தை மறந்தான், சொன்ன சொல்லை மறந்தான்; செய்நன்றி மறந்தான். அதுமட்டுமல்ல, நம் வீரத்தையும் அல்லவா மறந்து விட்டான். சுகபோகத்தில் அமிழ்ந்து கிடக்கிறான் போலும்! நன்றி மறந்தவனைக் கொன்று விடுவது தவறல்ல. ஆயினும், நீ போய் அவன் மனநிலையை அறிந்து வா!".

"தீயவர்களை அழித்து அறவோரைக் காக்க நாம் கொண்ட நோக்கத்தை அவனுக்கு எடுத்துச் சொல். அதற்கான வில்லும் வீரமும் நம்மிடம் உண்டு. உயிரைக் கொண்டு செல்ல எமனும் இருக்கிறான் என்பதை அவனுக்கு நினைவுபடுத்து. வாலி சென்ற பாதையும் அப்படியே இருக்கிறது என்பதை அவனுக்குச் சொல்லிவிட்டு வா!. தம்பி! நீ போய் அந்த சுக்ரீவனிடம் சென்று அவன் கடமையை உணர்த்தி, நீதிகளைக் கூறி, நீ கோபப் படாமல் அவனது மறுமொழியை மட்டும் கேட்டு வா!" என்றான் இராமன்.

இராமனது ஆணைப்படி சுக்ரீவனை நாடி, இலக்குவன் கிஷ்கிந்தை நகருக்குச் சென்றான். மராமரத்தைத் தொளைத்த இராமன் அம்பு போல அவன் விரைந்து சென்றான். கிஷ்கிந்தை மலையைச் சென்று அடைந்து, அங்கு ஓர் குன்றின் உச்சியில் ஏறி ஒரு ஆண்சிங்கம் போல நின்று பார்த்தான். இந்தக் காட்சியைக் கண்ட வானரங்கள், ஓடிச் சென்று அங்கதனிடம், இலக்குவன் மிகுந்த கோபத்துடன் வந்திருக்கிற செய்தியைச் சொன்னதும், அவன் இலக்குவனின் குறிப்பறிந்து, தனது சித்தப்பன் சுக்ரீவனிடம் சென்றான்.

அங்கு அரண்மனையில், மெத்தென்று மலர்கள் பரப்பிய மஞ்சத்தில், இள மகளிர் பாதங்களை வருட, நித்திரை செய்து கொண்டிருந்தான் சுக்ரீவன். தெளிந்த அறிவு இன்றி, கள் குடித்த போதைக்கு ஆளாகி, இளம் மகளிரின் உறவு கொண்டு மதிமயங்கிக் கிடந்த சுக்ரீவனிடம் சென்று அங்கதன் அவனை மெல்ல எழுப்புகிறான். சூழ்நிலையின் இறுக்கத்தினைப் புரிந்து கொண்ட அங்கதன், இலக்குவனால் எந்த விபரீதமும் நிகழ்வதற்கு முன்பாக சித்தப்பனை எழுப்ப முயல்கிறான், "எந்தையே! இராமனின் இளவல், மிகுந்த கோபத்துடன் உன்னைத் தேடி வந்திருக்கிறான்" என்று.

1 comment:

Please give your comments here