Monday, May 17, 2010

ii) Continued ..."கொன்றானோ? கற்பு அழியாக் குலமகளைக் கொடுந்தொழிலால்
தின்றானோ? அப்புறத்தே செறிந்தானோ சிறை, அறியேன்
ஒன்றானும் உணரகிலேன்; மீண்டு இனிப் போய் என் உரைக்கேன்
பொன்றாத பொழுது எனக்கு இக்கொடுந்துயரம் போகாதால்".

அன்னையைக் கொன்று விட்டானோ? அல்லது தின்றுவிட்டானோ? அல்லது வெகு தூரத்தில் எங்கேனும் சிறை வைத்து விட்டானோ? ஒன்றும் தெரியவில்லையே. இனி திரும்பிப் போய் என்னவென்று இராமனிடம் சொல்லுவேன். இந்த கொடிய வருத்தம் என்னை விட்டுப் போகாது போலிருக்கிறதே என்று வருந்துகிறான்.

நான் அன்னையைத் தேடி தென் திசைக்கு வந்திருப்பதால், நான் சீதாபிராட்டியைப் பார்த்துவிட்டு வருவேனென்றல்லவா இராமபிரான் எண்ணிக் கொண்டிருப்பார். என் மன்னன் சுக்ரீவனோ, நான் சீதாபிராட்டியைக் கொண்டு வந்துவிடுவேன் என்றல்லவா எதிர்பார்த்துக் கொண்டிருப்பான். என்னால் இரண்டையும் செய்ய முடியவில்லையே. எந்த முகத்தோடு நான் மீண்டும் இராமபிரான் முகத்தில் விழிப்பேன். அங்கதன் முதலானோருடன் நானும் சாகாமல் இப்படி வந்து தவிக்கிறேனே என்ன செய்வேன் என்று வருந்துகிறான்.

சுக்ரீவன் விதித்த தவணை நாளும் முடிவடைந்துவிட்டது. பிராட்டியை இன்னமும் காணமுடியவில்லையே. பிராட்டியைக் கண்டுபிடிக்க முடியாததால் இறந்து போகலாம் என்று சொன்னவர்களை யெல்லாம் மகேந்திர மலையில் இருக்கச் சொல்லிவிட்டு, நான் வந்த காரியத்தையும் முடிக்க முடியவில்லயே. இதன் பிறகும் நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்? நல்வினை என்னைவிட்டு நீங்கிப்போய்விட்டது போலும், என்று வருந்தினான் அனுமன்.

எழுநூறு யோசனை தூரம் கடற்பரப்புள்ள, மதில்களால் சூழப்பட்ட இலங்கை முழுவதிலும் எல்லா உயிரினங்கள் இடையேயும் தேடிவிட்டேன். பிராட்டியை எங்கும் காணவில்லையே. ஆழமுள்ள கடலைத் தாண்டி வந்து துயரமாம் கடலில் வீழ்ந்து அழிய வேண்டி நேர்ந்ததே என்று வருந்தினான். அந்த கொடிய அரக்கன் இராவணனை என் கையால் பற்றி இழுத்து வாயிலிருந்து உதிரம் கொட்டும்படி என் வலிய கரங்களால் அடித்து, பிராட்டி இருக்குமிடத்தைக் காட்டு என்று சொல்ல மாட்டேனா? இந்த நகரமும் இதனை ஆளுகின்ற இராவணனும் தீயில் கருகி மாயும்படி நெருப்பை வைத்து கொளுத்த மாட்டேனா? உயிரை இன்னமும் விடாமல் தாங்கிக் கொண்டிருக்கிற நான், தேவர்களிடம் சென்று பிராட்டி இருக்குமிடத்தைக் காட்டுங்கள் என்று கேட்கலாமென்றால், இராவணன் இருக்கும் போது, பதில் சொல்லும் வல்லமை இல்லாதவர்களாகி விட்டார்களே அவர்கள், பின்பு அன்னை இருக்குமிடத்தை எப்படி அறிந்து கொள்வேன்.

சம்பாதி அன்னையை இலங்கையில் கண்டதாகச் சொன்னானே, அவன் சொன்ன செய்தியும் தவறாகிப் போயிற்றே. இந்த இலங்கை நகரைக் கடலில் அழுத்தி மூழ்கச் செய்யாமல் இன்னம் இந்த உடலைத் தாங்கிக்கொண்டு இருக்கிறேனே. சீதாதேவியை பூலோக வாசிகளும் தேவர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தூக்கிக் கொண்டு வந்துவிட்ட அரக்கனை, நான் அழிக்கவில்லை யென்றால் என்ன பயன்? இந்த நகரத்தையும் கடலில் அழுத்தி நானும் இறந்து போவதே சரி என்று எண்ணினான்.

எள்ளளவு இடம்கூட மிச்சம் வைக்காமல் எங்கும் நிறைந்திருக்கும் இராமபிரான் போல எங்கும் சுற்றித் திரிந்த பின்பு, அடர்ந்த மலர் சோலையொன்றை அனுமன் அருகில் பார்த்தான். அது என்ன இடம்? நான் இதுவரை அந்த இடத்திற்குப் போய் பார்க்கவில்லையே, இப்போது பார்க்கலாம் என்று அங்கு போனான். இந்த வனத்திலாவது நான் அன்னையைக் கண்டுபிடித்துவிட வேண்டும். அப்படியில்லை யென்றால், இந்த இலங்கை நகரை அழித்து நானும் மாண்டு போவேன் என்று உறுதி பூண்டான்.

இப்படி உறுதி எடுத்துக் கொண்டு, அசோக வனம் எனும் பெயருள்ள அந்த சோலையுள் அனுமன் புகவும், தேவர்கள் ஒன்று திரண்டு வந்து பூமழை பொழிந்தனர். அந்த நேரத்தில் அந்த அசோகவனத்தின் ஓரிடத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாபிராட்டியின் நிலைமையைச் சற்று காண்போம் இப்போது.

அசோகவனம் எனப்படும் அந்த சோலையில், ஓர் மரத்தினடியில் வல்லரக்கியர்கள் சுற்றிலும் அமர்ந்து காவல் இருக்க, அன்னை ஜானகி, உடல் இளைத்து, அவளது எழில் வாடித் துயரம் வாட்ட வீற்றிருந்தாள். தூக்கம் என்பதே மறந்துபோன நிலையில், கண்களை இமைத்தலுமின்றி, அசதியினால் இமைகள் மூடுதலுமின்றி, நல்ல வெயில் நேரத்தில் ஏற்றப்பட்ட விளக்குபோல ஒளியிழந்த உடலோடு, மயில் போன்ற சாயலும், குயில் போன்ற இனிய குரலையுமுடைய சீதை, புலிக்கூட்டத்தில் அகப்பட்ட மான்குட்டி போல வருந்தியிருந்தாள்.

சதா இராமபிரானுடைய நினைவினால் சோர்ந்து போய் கீழே விழுவதும், விம்மி அழுவதும், உடல் சோர்வுற்று வருந்தலும், பயந்து மீண்டும் எழுவதும், ஏங்கி வருந்துவதும், பின்னர் அழுவதும், இராமனை மனத்தால் எண்ணி அவனைத் தொழுவதும், உடல் நடுங்குவதும், துயரம் மிகுந்து பெருமூச்சு விடுதலும், இவையன்றி வேறு எதுவும் தோன்றாமல் வாடியிருந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டிக் கொண்டு இருந்தது. இராமபிரானின் நினைவு பொழுதெலாம் அவளை வாட்டிக் கொண்டே இருந்தது.

வானத்தில் நீருண்ட கரிய மேகத்தைக் கண்டால், உடனே இராமனது வண்ணத்தை நினைத்துப் பார்த்துக் கண்ணீர் சிந்துவாள். கண்களில் தீட்டுகின்ற மையைக் கண்டாலும் இராமனது நினவு வந்து அவளைத் துன்புறுத்தும். விதியின் வலிமையை யாராலும் வெல்ல முடியாது என்று அறிந்திருந்த போதிலும் இராமபிரான் தன் மீது கொண்ட அன்பின் காரணமாக வந்து தன்னை மீட்காவிட்டாலும்கூட, தன் குலப் பெருமையைக் காப்பாற்றும் பொருட்டாகவாவது, தன் மனைவியைப் பிறனொருவன் கவர்ந்து சென்றதற்கு பழிதீர்க்க நிச்சயமாக வருவான் என்ற நம்பிக்கையில் நாலாபுறமும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். உடலுக்கு உயிர் போன்ற ஆடை அணிவதைத் தவிர வேறு மாற்று உடை இல்லாமலிருந்தாள். குளிக்காமலும், மாற்று உடை அணியாமலும் புகை படிந்த சித்திரம் போல தோற்றமளித்தாள்.

மானைப் பிடிக்கச் சென்ற இராமன் குரல் கொடுக்க, அவருக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பார்க்கச் சென்ற இலக்குவன் அவரைப் பார்க்கவில்லை போலிருக்கிறது. அப்படி கண்டுபிடித்திருந்தாலும் இப்படி கடல் தாண்டி இலங்கை இருப்பதை அறியமாட்டார் போலும். இந்த அரக்கன் இராவணன் என்னைக் கவர்ந்து வந்ததை அவர்கள் அறியமாட்டார்களோ என்னவோ? என இவ்வாறு பலவாறு சிந்தித்து ஏற்கனவே புண்ணாகியிருந்த தன் நெஞ்சத்தை தீயால் சுட்டதுபோல மேலும் புண்ணாக்கி வருந்தியிருந்தாள்.

இராவணன் என்னைக் கவர்ந்து வரும் வழியில் அவனைத் தடுத்து போர் புரிந்தானே கழுகினத்து அரசன் ஜடாயு, அவன் இறந்து போய்விட்டான் போலும். அதனால் இராமனிடம் என் நிலைமையை எடுத்துரைக்க ஆள் இல்லாமல் போய்விட்டது போலும். இனி இப் பிறவியில் இராம லக்ஷ்மணர்களைப் பார்ப்பது என்பது முடியாத காரியம் என்ற எண்ணம் அவளை மீண்டும் மீண்டும் வருத்தியது.

இராமனது குரலைப் போல அந்த மாயமான் எழுப்பிய கூக்குரலைக் கேட்டு இலக்குவனைப் போய் பார்க்கச் சொல்லி, அவனை நிந்தித்துப் பேசிய செய்தி கேட்டு, 'இவள் அறிவில்லாதவள்' என்று என்னை வெறுத்து நீக்கி விட்டாரோ? அல்லது முற்பிறப்பில் செய்த ஊழ்வினையோ? என்று வாய் உலர்ந்து போக, உணர்வு தேய்ந்து போக வருந்தி துயர் உறுவாள்.

தான் உட்கார்ந்த இடத்தைவிட்டு சற்றும் அகலாத சீதை, இனி இராமனுக்கு இலை போட்டு யார் உணவு பரிமாறுவார்கள்? விருந்தினர் யாரேனும் முனிவர்கள் வந்து விட்டால், அவர்களை இராமன் எப்படி உபசரிப்பார் என்றெண்ணி வருந்துவாள். இரவானாலும் சரி, பகலானாலும் சரி, எப்போதும் வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாள் சீதாபிராட்டி. தன்னைக் கவர்ந்து கொண்டு வந்து கொடுமையும், வஞ்சனையும் உடைய அரக்கர்கள் என்னை இவ்வளவு நாட்கள் உயிரோடு வைத்திருக்க மாட்டார்கள், தின்றிருப்பார்கள் என்று தீர்மானித்திருப்பாரோ? அல்லது தன் குலப் பெருமைக்கு ஏற்ப பொறுமையைக் கடைப்பிடித்து, கோபத்தைத் தணித்துக் கொண்டாரோ? என்னவென்று எண்ணுவது என்று வருந்தினாள்.

ஒருவேளை, பெற்ற தாய்மார்களும், தம்பி பரதனும் காட்டிற்கு வந்து மறுபடியும் வருந்தி அழைத்துக் கொண்டு நாட்டிற்குக் கூட்டிக் கொண்டு போய்விட்டார்களோ? ஆனால் வாக்களித்தபடி பதினான்கு ஆண்டுகள், காட்டில் வாழாமல் நிச்சயம் நாடு திரும்ப மாட்டார், அதனால் அவ்விருவருக்கும் ஏதோ ஆபத்து ஏற்பட்டிருக்க வேண்டுமென்று எண்ணி மனம் நொந்தாள். முன்பு முரன் என்ற அசுரனைத் திருமால் வதம் செய்தாரே, அவனைப் போன்ற அசுரர்கள் எவரோடும் போர் ஏற்பட்டு விட்டதோ?

முன்பு கைகேயி கோசல நாடு இனி உன் தம்பி பரதனுக்கு என்றபோது, முன்னிலும் மும்மடங்கு முகப் பொலிவுடன் ஏற்றுக் கொண்ட இராமபிரானுடைய முகத்தை இனி என்று நான் காண்பேன்? உண்மையான ராஜ்ஜியம் என்கிற செல்வம் இனி உனக்கு என்று தந்தை தசரதன் கூறிய போதும், இந்தச் செல்வங்களைத் துறந்து காட்டுக்குப் போ என்று கைகேயி சொன்ன போதும், அன்றலர்ந்த செந்தாமரை என முகம் மலர்ந்து ஏற்றுக் கொண்ட இராமபிரான் திருமுகத்தை என்று நான் காண்பேனோ?

"ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, 'எம்பி நின்தம்பி, நீ
தோழன், மங்கை கொழுந்தி ' எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்".

கங்கைக் கரை வேடன் குகனிடம் நட்பு கொண்டு என் தம்பி, இனி உனக்குத் தம்பி என்றும், நீ எனக்குத் தோழன் என்றும், சீதை உனக்குக் கொழுந்தி என்றும் சொன்ன அந்தப் பரிவை எண்ணி மயங்குகிறாள். என்னைத் திருமணம் புரிய வந்து, ஜனகன் சபையில் இருந்தோர் வியப்புற வடவரை போன்ற சிவதனுசை நொடியில் வளைத்து ஒடித்த பெருமான் இன்று என்னை வந்து மீட்காமல் இருக்கிறாரே என்று வருந்துவாள்.

காட்டில் கரன், தூஷணன் முதலியவர்களோடு பெரும் அரக்கர் படையைக் கணப் பொழுதில் வென்று அழித்த இராமபிரான் என்னை மீட்க வராமல் இருக்கிறாரே. தன் மணநாளில், திருமண வைபவத்தின் போது நிகழ்ந்த பாணிக்ரஹணம் ஸப்தபதியின் போது தந்தை ஜனகன் என் கரங்களைப் பற்றி அவர் கரங்களில் ஒப்படைக்க, அவர் என் பாதத்தைத் தன் ஒளிக்கையால் பற்றி ஒன்பது அடிகள் எடுத்து வைத்ததை நினைவுகூர்ந்து வருந்துகிறாள்.

தன் தாய் வாங்கிக் கொடுத்த ராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொண்டு பொன்முடி தரிக்க வேண்டிய பரதன், திரித்து விட்ட சடைமுடியோடு மரவுரி தரித்து கானகம் வந்த அவன் அன்பை எண்ணி இராமபிரான் வருந்தியதை எண்ணிப் பார்க்கிறாள். தந்தை சொற்படி கானகம் செல்ல புறப்படும் முன்பாக கோதானம் செய்ய வேண்டி திரிசடன் எனும் அந்தணனுக்கு ஓர் பசுக் கூட்டத்தைத் தானமாகக் கொடுத்தபோது, தன் ஆசையை வெளிக் காட்டிக் கொண்டு நின்ற அந்த பிராமணனைப் பார்த்து சிரித்த இராமனை எண்ணி மருகுகிறாள். விராடன் எனும் அரக்கனின் பாவ வினைகளைப் போக்கி, சாபத்தைப் போக்கிய இராமனின் செயலை எண்ணிப் பார்க்கிறாள்.

இந்திர குமாரனாகிய சயந்தன் என்பவன், காகம் உருவில் வந்து தனக்கு தொல்லை கொடுக்க, அவன் மீது ஒரு புல்லை எடுத்து மந்திரம் சொல்லி அக்னி அஸ்திரமாக ஏவ, அது சயந்தன் கண்ணை மட்டுமல்ல, காக்கைக் கூட்டம் முழுதுக்குமே ஒரு கண் போன செயலை எண்ணிப் பார்க்கிறாள். இது குறித்து பெரியாழ்வார் பாசுரம் "நெறிந்த கருங் குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்" எனத் தொடங்கும் "சீதைக்கு அனுமன் தெரிவித்த அடையாளம்" என்ற தலைப்பில் வரும் பாடல் நினைவு கூரத்தக்கது:

"சித்திரக் கூடத் திருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி
'வித்தகனே! இராமாவோ! நின் அபயம்! என்றழைப்ப
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓரடையாளம்".

அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாபிராட்டிக்குக் காவலாக கொடிய அரக்கியர் பலர் சுற்றி இருந்தனர். அவர்களுள் திரிசடை என்பாள் மட்டும் சீதையிடம் அன்பு பாராடுபவளாகவும் இன்சொல் பேசுபவளாகவும் இருந்தாள். அனுமன் அந்த அசோகவனத்தை அடைந்த நேரம் இரவு நடுச்சாமத்தை அடைந்துவிட்ட படியால், திரிசடை தவிர மற்றவர்கள் தூக்கமாகிய போதை மயக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். மற்ற அரக்கியர் தூங்கிவிட்ட படியால் சீதை அந்தத் திரிசடையிடம், நீ என்னிடம் அன்பு கொண்டவளாக இருக்கிறாய், உன்னிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் என்று பேசத் தொடங்கினாள்.

"அன்பு கொண்ட திரிசடை! எனக்கு இடப்பக்கக் கண் துடிக்கிறது. இதனால் விளையப் போவது என்ன? என் துயரங்கள் நீங்கி நன்மை விளையப் போகிறதா? அன்றி மேலும் தணியாத தீமைகள் விளையுமா? என்று புரியவில்லை" என்கிறாள் சீதை.

"முன்பு இராமன் விஸ்வாமித்ர முனிவருடன் மிதிலையில் வந்து சேர்ந்த அன்றும், என் இடக் கண் துடித்தது. இன்றும் அதுபோல துடிக்கிறதே. இதன் காரணத்தை எனக்குச் சொல்" என்றாள். "இன்னொன்றும் சொல்ல மறந்து விட்டேனே, அதையும் கேள். அறம் தரும் சிந்தையனாகிய ஆதிநாயகன் இராமபிரான் தனக்கு உரிமையுள்ள நாட்டைத் தன் தம்பிக்குக் கொடுத்து விட்டு, நாங்கள் கானகம் புகுந்தபோது, எனது வலம் துடித்தது. கானகத்தில் இராவணன் என்னைக் கவர்ந்து செல்ல வந்த நேரத்திலும் எனது வலப்புறம் துடித்தது. இப்போது இடப்புறம் துடிக்கிறது. இதனால் விளையப் போவது என்ன என்பதை எனக்குச் சொல்லேன்" என்கிறாள்.

இப்படி பிராட்டி திரிசடையிடம் கேட்டதும், அவள் சொல்கிறாள், "மங்களம்! சுப சோபனம்! நன்மையே உண்டாகும். இவ்வாறு உனக்கு இடக்கண் துடிப்பதால், நீ உன் கணவனை அடைவது நிச்சயம். அதுமட்டுமல்ல, நான் கூறப்போவதையும் கேள்" என்று அவள் மேலும் பேசுகிறாள்.

"ஒளி மிகுந்த சீதே! உன் உடலின் பசப்பு நிறம் நீங்க, உன் உயிர் உயிர்ப்புற, இனிய இயல்பும், நல்லிசையும் கொண்ட பொன் நிற வண்டு ஒன்று உன் காதருகே வந்து பாடிச் சென்றதை நான் கண்டேன். இப்படியொரு பொன்வண்டு வந்து உன் காதருகே பாடினால், உன் கணவனால் அனுப்பப்பட்ட தூதன் ஒருவன் இங்கு உன்னைக் காண வரப்போவது உறுதி. கொடியவர்களுக்கு தீமை ஏற்படப் போவதும் திண்ணம். நான் சொல்லப்போகும் செய்திகளையும் கேள்!".

"வேல்விழியாளே! நீ தூங்குவதே இல்லையாதலால் உனக்குக் கனவுகள் வருவது இல்லை. நான் ஒரு கனவு கண்டேன். என் கனவு பழுதின்றி எப்போதும் பலிக்கும். என் கனவைச் சொல்கிறேன் கேள்! சீதே! பெருமை பொருந்திய இராவணன், சிவப்பு நிற ஆடை அணிந்து கொண்டு, தன் பத்துத் தலைகளிலும் வழிய வழிய எண்ணெய் தடவிக் கொண்டு, கழுதைகளும், பேய்களும் பூட்டப் பெற்ற வலிய பெரிய தேரின் மீது ஏறிக்கொண்டு, தென் திசை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறான். இராவணனைச் சேர்ந்த மற்றவர்களும், உறவினர்களும் அதே தென் திசை நோக்கிப் போகின்றனர். போனவர் ஒருவரும் திரும்பி வரவில்லை. இக்கனவை தடையின்றி கண்டேன். இது தீமை விளையப் போவதின் அறிகுறி. இதைவிட அதிகமான செய்திகளும் என் கனவில் வந்தன, அவற்றையும் சொல்கிறேன், கேள்!"

"இராவணன் நித்ய அக்னிஹோத்ரம் செய்வதற்காக வீட்டில் அக்னி வளர்த்து பாதுகாத்து வருகிறான். அந்த புனித அக்னி அணையாமல் இறுதிவரை பாதுகாக்க வேண்டிய ஒன்று. ஆனால், அது அணைந்து போனது. அந்த அக்னி இருந்த இடத்தில் செம்மை நிறத்தில் கரையான்கள் கூட்டம் கூட்டமாகத் தோன்றி வளர்ந்தன. இல்லத்தில் எப்போதும் ஒளி வீசிக் கொண்டிருக்கும் மணி விளக்குகள் நெடுங்காலமாக இருந்து வந்தன. வானத்தில் தோன்றிய பேரிடி ஒன்று விடியற்காலையில் அவற்றைத் தாக்கி அனைத்தும் அணைந்து போயின. பெண் யானைகள் மதநீர் சொரிந்தன. அரண்மனை முரசங்கள் ஒருவரும் முழங்காமலே தானாக இடிபோல் முழங்கின. வானத்தில் மேகமே இல்லாமல், மின்னலும், இடியும் தாக்கி நட்சத்திரங்கள் உதிர்ந்தன."

"பொழுது விடியும் முன்பே கதிரவன் உதித்து பகல் தோன்றியது. அரக்கர்களின் பிள்ளைகள் சூடியிருந்த கற்பக மலர்கள் நறுமணம் வீசாமல், புலால் நாற்றம் வீசின. இந்த இலங்கை நகரமும், எட்டுத் திக்குகளும் தீப்பிடித்து எரிகின்றன. மங்கல சின்ஙங்கள் அழிந்து சிதறிப் போயின. நகரத்தின் விளக்கின் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்தது. தோரணக் கம்பங்கள் முறிந்து விழுகின்றன. யானைகளின் தந்தங்கள் முறிந்து விழுகின்றன. அந்தணர்கள் ஸ்தாபித்த பூரணகும்பத்தின் புனித நீர் கள்ளைப் போல பொங்கி மேலே எழுகின்றன. வானத்தில் நட்சத்திரங்கள் சந்திர மண்டலத்தைப் பிளந்துகொண்டு மேலே செல்கின்றன."

"வானத்திலிருந்து சொரியும் மழை குருதிப் புனலாக ஊற்றுகிறது. போர்க்கருவிகள் இயக்குவார் இன்றி தானாகவே ஒன்றுக் கொன்று பகைத்துப் போர் புரிகின்றன. அரக்க மாதர்கள் கழுத்திலிருந்த மங்கல நாண்கள் தானாகவே அறுந்து விழுகின்றன. இதுமட்டுமல்ல, இது போன்ற தீய சகுனங்கள் மேலும் பல உண்டு கேள்!" என்று திரிசடை சொல்லிக்கொண்டே செல்கிறாள்.

"இராவணனுடைய மனைவியும், மயன்மகளுமான மண்டோதரி தலைவிரி கோலமாகத் தோன்றுகிறாள். அவள் தலை மயிரில் தீப்பிடித்து, மயிர் தீய்ந்து போகும் நாற்றம் பரவுகிறது. இந்தக் கனவினால், அரக்கர்களுக்குத் தீமையும், அழிவும் ஏற்படப்போவது திண்ணம். இதுவரை நான் சொன்ன கனவுகள் ஒருபுறம் இருக்கட்டும், இப்போது சிறிது நேரம் முன்பாக, நான் உறங்கி எழும் முன்பு நான் கண்ட ஓர் கனவைக் கேள்! வலிமை வாய்ந்த இரண்டு ஆண் சிங்கங்கள், பெரிய புலிக்கூட்டத்தை அழைத்துக் கொண்டு, ஒரு மலையின் வழியில் வருவதாகக் கனவு கண்டேன். வலிமை கொண்டு தாக்கிப் போர் புரியும், மதம் கொண்ட யானைகள் நிறைந்த காட்டை, அந்த இரு ஆண் சிங்கங்களும், புலிக் கூட்டமும் எதிர்த்துத் தாக்கின. எண்ணற்ற யானைகளை அவை கொன்று வீழ்த்தி, இறுதியில் ஓர் மயிலைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு போகின்றன."

"சிவந்த நிறமுடைய ஒரு பெண், ஆயிரம் திரிகளைக் கொண்ட விளக்கு ஒன்றைக் கையில் ஏந்தி, இராவணன் மாளிகையிலிருந்து கிளம்பி, விபீஷணன் மாளிகையைச் சென்றடைகிறாள். பொன் மயமான விபீஷணன் மாளிகையில் அந்த மாதரசி நுழைந்த நேரத்தில், நீ என்னை உறக்கத்தினின்று எழுப்பி விட்டாய். என் கனவு முடிவு பெறவில்லை" என்று திரிசடை சொன்னாள்.

இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்து விட்டு சீதாபிராட்டி, "தாயே! உன் கனவின் எஞ்சிய பகுதியையும் கண்டுவிட்டு எனக்குக் கூறு, இப்போது கனவு காண்பதற்கு உறக்கம் கொள்!" என்றாள்.

இந்த சமயம் பார்த்து, இராமதூதனான அனுமன், அந்த இடத்திற்கு வந்து சேருகிறான். சீதாபிராட்டி இருக்கும் நிலைமையைப் பார்க்கிறான். அதுவரை தூங்கிக் கொண்டிருந்த காவல் அரக்கியர் தூக்கம் கலைந்து எழுந்தனர். அவர்கள் தத்தமது கைகளில் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சீதையைச் சூழ்ந்து கொண்டனர். அந்த அரக்கியரின் தோற்றத்தைச் சிறிது பார்ப்போமா?

No comments:

Post a Comment

Please give your comments here