Monday, May 17, 2010

4. கிஷ்கிந்தா காண்டம்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
4. கிஷ்கிந்தா காண்டம்.

இராம இலக்குவரிடம் கவந்தன் கூறியபடி, அவர்கள் காட்டில் நெடுந்தூரம் நடந்து சென்று சவரியைக் கண்டு அவளது உபசாரங்களை ஏற்றுக் கொண்டு, அந்த தவமாது பிறவிப்பிணி தீர்ந்து இப்புவியை நீத்து மேலோர் உலகம் சென்றபின், அவர் காட்டிய பாதையில் சென்று சுக்ரீவனைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். வழியில் பம்பை எனும் பொய்கையை அடைகின்றனர். அந்த பொய்கை தெளிந்த நீரினையுடையது, ஆழமானது. யானைகள் வந்து அங்கே நீராடிச் செல்லும்.

அந்த பம்பையின் அழகையும், நீர் வளம், நில வளம் மற்றும் இயற்கையின் அழகிய கோலங்களையும் கண்ட இராமனுக்கு, சீதாபிராட்டியின் நினைவு வந்து மிகவும் வாட்டியது. சீதையின் நினைவால் பலசொல்லிப் புலம்பித் தவித்தான். பின்பு அந்த பம்பையில் இறங்கி இராமன் நீராடினான். விரக தாபத்தால் சூடேறியிருந்த இராமனது உடல் நீரில் மூழ்கவும், கொல்லன் உலைக் களத்தில் இரும்பைச் சூடாக்கிப் பின் நீரில் அழுத்தும் போது சுறுசுறு வென்று அந்த நீரும் சூடாகுவது போல, அந்த பம்பையின் நீரும் சூடேறியது.

இராமன் பம்பையில் நீராடிவிட்டு இறைவனையும், முனிவர்களையும் தொழுது வழிபட்ட பிறகு, அந்தச் சோலையின் ஓர் புறத்தே தங்கினான். சூரியனும் அன்றைய பொழுது முடிந்து அஸ்தமனமானான். இரவு நேரம் நெருங்கவும், சீதையின் பிரிவு எனும் நெருப்பு இராமனைச் சுட்டது. சந்திரன் வானத்தில் தோன்றி வலம் வரத் தொடங்கினான். அவனது தண்ணென்ற ஒளிகூட இராமனுக்கு சூடாக இருந்தது. பறவைகள் கூண்டுகளில் அடைந்தன; மரங்களில் இலைகள் குவிந்தன; கிளிகள் நா ஒடுங்கின; மயில்கள் ஆட்டத்தை நிறுத்தின; குயில்கள் கூவுவதை நிறுத்தின; ஆண் யானைகள் பிளிறுவது நின்று போனது.

வாழும் உயிர்கள் அனைத்துமே துயில் கொண்டன. மலையிலுள்ள உயிர்களும் ஓசை அடங்கின. நீர்நிலைகளும் உயிர் வகைகளின் சலனமின்றி ஓசையின்றி அடங்கின. பனியும் உறைந்து போனது. ஆகாயமும் அடங்கியது. இரவில் ஆட்டமிடும் பேய், பிசாசுகளும் அடங்கின. இவ்வளவுக்கிடையேயும் பாற்கடலில் துயின்ற இராமபிரான் மட்டும் உறங்காமல் விழித்திருந்தான்.

மிக நீண்ட இரவாகத் தோன்றிய அந்த இரவு நேரம் மெல்ல விடிந்தது. கதிரவனின் கிரணங்கள் தன் மீது படவும் இராமன் விரகத் துயரம் நீங்கி மெல்ல எழுந்தான். இலக்குவன் அதற்கு முன்பாகவே தயாராக இருக்கவே, இருவரும் அந்தக் காலைப் பொழுதிலேயே சீதையைத் தேடிக் கொண்டு புறப்பட்டனர். நெடுந்தூரம் நடந்து சென்று, தூரத்தில் தெரிந்த ஒரு மலைப் பிரதேசத்தைக் கண்டனர். அந்த மலைப் பிரதேசம்தான் ருசியமுக பர்வதமாக இருக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டு இருவரும், அந்த மலைப் பிரதேசத்தை நோக்கி விரைவாக நடந்தனர். சவரி கூறிய பாதையை விடாது தொடர்ந்து நடந்து வந்த அவர்கள், அந்த ருசியமுக பர்வதத்தின் அடிவாரத்திற்கு வந்து அந்த மலையின் மீது ஏறத் தொடங்கினர்.

அப்போது அந்த மலைப் பிரதேசத்தில், தன் அண்ணன் வாலிக்கு பயந்து கொண்டு ஒளிந்து வாழும் சுக்ரீவன், தூரத்தில் நடந்து வரும் இவர்களைக் கண்டு துணுக்குற்று, வில் ஏந்தி வருகின்ற இந்த வீரர்கள் வாலியால் ஏவப்பட்டு நம்மை கொல்ல வரும் பகைவர்களோ என்று பயந்தான். என்ன செய்வது என்று அறியாமல், இவர்களிடமிருந்து தப்பி உயிர் பிழைக்க வேண்டி ஓர் குகைக்குச் சென்று ஒளிந்து கொள்கிறான். அருகில் இருந்த தனது அமைச்சனான அனுமனிடம் "வாயு குமாரா! அதோ வருகிறார்களே, வில்லேந்திய வீரர் இருவர், அவர்களைப் பார்! நீல மலை போன்ற மேனி படைத்தவனும், அவனுடன் மற்றொரு வீரனும், வாலியின் ஏவலால் நம்மைத் தேடி வருபவர்களாகத்தான் இருக்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே, ஓடிப் போய் அந்த குகைக்குள் பதுங்கிக் கொண்டான்.

பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து எழுந்த ஆலகால விஷத்தைக் கண்டு தேவாசுரர்கள் வருந்தியதைப் போல சுக்ரீவன் முதலானோர் அஞ்சி நிற்பது கண்டு, அன்று அச்சமுற்றிருந்த தேவாசுரருக்கு அபயம் அளித்துக் காப்பாற்றிய சிவபெருமானைப் போல அனுமன் அவர்களிடம், "அஞ்சாதீர்கள்! நீங்கள் இந்த மலையிடத்துத் தங்கி இருங்கள். நான் போய், வருவது யார் என்பதை அறிந்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

பாற்கடலைக் கடைந்த போது வெளியான ஆலகால விஷத்தைக் கண்டு அசுரர்களும் தேவர்களும் அஞ்சி நடுங்கியபோது அவர்களுக்கு அபயம் அளித்த சிவபெருமானைப் போல அனுமன் சுக்ரீவன் முதலானவர்களுக்கு அபயம் அளித்தான் என்று, கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான் கூறியது, அனுமன் சிவபெருமானின் அம்சம் என்பதை சுட்டிக் காட்டும் விதமாகவே அமைந்திருப்பதைப் படித்து ஆனந்திக்கலாம். இதுபோன்றே பல இடங்களில் அனுமனைப் பற்றிய செய்திகளில், அவனை சிவபெருமானோடு ஒப்பிட்டே கம்பர்பெருமான் எழுதியிருப்பதையும் நாம் படித்து அனுபவிக்கலாம்.

அஞ்சனை புதல்வன், அனுமன், ஒரு நல்ல மாணவ பிரம்மச்சாரி வடிவத்தோடு, இராம லக்ஷ்மணர்கள் வரும் பாதையில் மறைந்து நின்று அவர்களை உற்று நோக்குகிறான். அனுமனிடம் ஒரு விசேஷ குணமொன்று உண்டு. அது அவன் எதனையும் தன் உணர்வினால் உணர்ந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்ததுதான். இந்த விசேஷ குணத்தை அனுமன் பல இடங்களில் தன் உணர்வினால் உணர்ந்து செயல்பட்டதை இந்த காப்பியம் முழுவதும் காணலாம்.

கைகளில் வில்லேந்தி, புழுதி படர்ந்த தோற்றத்தோடு, நடந்த களைப்பு முகத்தில் தென்பட, ஏதோ விலைமதிக்கமுடியாத பொருள் ஒன்றை தொலைத்து விட்டு அதனைத் தேடுவது போல நாலா புறமும் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். தோற்றத்தில் மாபெரும் வீரர்கள் என்பதையும், கையில் வில் ஏந்தியிருந்தமையால், வில் வித்தையில் தேர்ந்தவர்கள் என்பதையும் முதலில் தன் உணர்வினால் உணர்ந்து கொண்டான். இதோ வருகின்ற இருவரும் தவ வேடம் தரித்திருக்கிறார்கள், ஆயினும் கையில் வில் ஏந்தியவர்களாகவும் இருக்கிறார்கள். அமைதியான உயர்ந்த குணத்தோராகக் காணப்பட்டாலும், ஏதோ ஒரு காரணம் பற்றி மிகக் கோபமடைந்திருக்கிறார்கள், இவ்வாறு அவர்களது தோற்றத்தைக் கண்டே, அனுமன் அவர்களை எடை போட்டு விடுகிறான். இவர்கள் தோற்றத்துக்கும், செயல்பாடுகளுக்கும் ஏன் இந்த வேற்றுமை என்பதையும் தன் தீர்க்கமான அறிவினால் ஆராய்கிறான். இவர்கள் தவமெய்யர், கைச்சிலையர், வெஞ்சினத் தொழிலர், எனின் இவர்கள் யார்?

ஒப்பற்ற முதல் தேவர் மூவர் என இவர்களைக் கருதலாமோ? ஆனால் அவர்கள் மூன்று பேர் ஆயிற்றே, இவர்களோ இரண்டு பேர்தானே இருக்கிறார்கள். எனவே இவர்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் அல்லர். இவர்களுக்கு ஒப்பாக யாருமே இல்லையே, ஆனால் இவர்கள் தேடி வருவது எதை? எப்படி அறிந்து கொள்வது? என்று சிந்திக்கிறான் அனுமன்.

இவர்களை உற்று நோக்கி ஆராய்ந்ததில் ஒன்று புரிகிறது. இவர்கள் மனம் சோர்வுற்று இருக்கிறார்கள். ஏதோ காரணத்தால் மனமும், உடலும் வருந்தி, துயரத்தால் வருந்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் கவனிக்குமிடத்து மானுட வடிவில் வந்திருக்கிற தேவர்களே இவர்கள் என்பது புரிகிறது. இவர்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கும் ஏதோவொரு பொருளைத் தொலைத்துவிட்டுத் தேடுகிறார்கள் என்பது தெளிவாகிறது.

"தருமமும் தகவும் தனம் எனும் தகையர் இவர்
கருமமும் பிறிதொர் பொருள் கருதி அன்று, அது கருதின்
அருமருந்து அனையது இடை அழிவு வந்து உளது, அதனை
இரு மருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள்"

இவர்கள் அறத்தையும், நன்னடத்தையும் கொண்டவர்கள். இவர்கள் தேடி வருவது எந்தவொரு ஆதாயம் கருதியும் இல்லை. தனக்கு முழு உரிமையுள்ள ஒரு பொருளை இழந்து விட்டதால் பெருந்துயரம் உற்று அதனை மீட்பதற்காக, இரு மருங்கிலும் தேடிப் பார்த்துக் கொண்டே வருகிறார்கள்.

இவர்கள் வீரர்க்குள்ள கோபத் தன்மை உடையவர்கள் இல்லை. கருணையில் கடல் போன்றவர்கள். நன்மை செய்வது தவிர வேறு ஒரு செயல் அறியாதவர்கள். இந்திரனும் கண்டு அஞ்சுகின்ற தோற்றப் பொலிவை உடையவர்கள். தர்மதேவனும் கண்டு அஞ்சக்கூடிய ஒழுக்க மேம்பாடு உடையவர்கள். மன்மதனும் கூட வெட்கப்படக்கூடிய மேனி அழகு வாய்த்தவர்கள். எமனும் அஞ்சத் தக்க வீரப் பெருமிதம் உடையவர்கள்.

"என்பன பலவும் எண்ணி இருவரை எய்த நோக்கி
அன்பினன் உருகுகின்ற உள்ளத்தன் ஆர்வத்தோரை
முன் பிரிந்தனையர் தம்மை முன்னினான் என்ன நின்றான்
தன் பெரும் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பிலாதான்".

தனக்கு ஒப்புவமை இல்லாத பெருமை குணங்கள் நிறைந்த அனுமன் இவ்வாறெல்லாம் எண்ணிக் கொண்டு வருகின்ற அந்த இருவரையும் எதிர் கொண்டு சென்று அடையக் கருதி உருகும் உள்ளத்தவனாகி, மிகவும் அன்புடையவர்களை முன்பு பிரிந்து மீண்டும் இப்போது காண்பதைப் போன்ற உணர்வினைப் பெற்றான்.

காட்டில் வாழுகின்ற கொடிய மிருகங்களான சிங்கங்களும், வேங்கைகளும் கூடத் தத்தமது கன்றுகளைக் கண்டது போல இவ்விருவரையும் நெகிழ்ந்து நோக்குவது ஏன் என்று சித்தித்தான் அனுமன். மணி நிறத்து இந்த இருவர் மீதும் வெயில் பட்டு வருத்துமே என்று எண்ணி மயில்கள் தம் தோகைகளை விரித்து இவர்கள் மீது வெயில் படாதவாறு குடை பிடித்தது போல அவர்களுக்கு மேலாக பறந்து வருகின்றன. கருத்த மேகக் கூட்டங்கள், சிறு மழைத் துளிகளை இவர்கள் மீது மெல்லத் தெளித்த வண்ணம் தாழ்ந்து தவழ்ந்து வருகின்றன. காட்டில் நிறைந்து கிடக்கும் சிறு கற்கள் எல்லாம் இவர்களது பாதங்களைக் குத்தாமல் மலர்களைப் போல மிருதுவாக அழுந்துகின்றன. செல்லுகின்ற பாதைகளில் எல்லாம் மரங்களும், செடிகளும் தங்கள் தலை சாய்த்து வணங்கி இவர்களை வரவேற்பது போல காட்சியளிக்கின்றன. எனவே, இவர்கள் தர்மமே மனித உருக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று அனுமன் நினைக்கிறான்.

பண்டைய பாவங்களையெல்லாம் போக்கி, வினைகளை அறுத்து, தென் திசையிலுள்ள எமலோகம் செல்லாமல் மோட்ச உலகத்திற்குச் செலுத்துகின்ற தேவர்கள் இவர்கள். இவர்களைக் கண்டதும் என் எலும்புகள் ஏன் உருகுகின்றன? மனதில் ஏன் அன்பு இப்படி மேலிடுகிறது? எதனால் இப்படியெல்லாம் நடக்கிறது என்று மனத்தில் எண்ணினான் அனுமன்.

நன்னெறிப்படியே நடக்கின்ற அஞ்சனை புதல்வன் இவ்வாறெல்லாம் எண்ணிக் கொண்டு நின்ற இடத்திற்கு, இராமனும் இலக்குவனும் வந்து சேர்கிறார்கள். அனுமன் அவர்களுக்கு எதிராகப் போய் நின்று கொண்டு வணங்கி, அவர்களிடம் "தங்கள் வரவு துன்பம் இல்லாத வரவாக இருக்கட்டும்! வாருங்கள்" என்று இன்மொழி பகர்ந்தான்.

தன் எதிரே வந்து நின்று மிகவும் பணிவாக இன்சொல் பேசித் தன்னை வரவேற்கும் இவனை இராமபிரான் "நீ எங்கிருந்து வருகிறாய்? நீ யார்?" என்று கேட்கிறார். அதற்கு அனுமன் கூறுகிறான்:

"மஞ்செனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க் கெல்லாம்
நஞ்செனத் தகையவாகி நளிரிரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சமொத்த அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன்"

இராமபிரானைப் புகழ்ந்து அழைத்து, "ஐயனே நான் வாயு குமாரன். அஞ்சனா தேவியின் மகனாகப் பிறந்தேன். என் பெயர் அனுமன் என்பதாகும்" என்றான்.

"இந்த ருசியமுக பர்வதத்தின்கண் மறைந்து வாழுகின்ற செங்கதிர் பரிதிச் செல்வன் செம்மல் சுக்ரீவனிடம் பணிபுரிந்து வாழ்பவன். தேவ! நும் வரவைக் கண்டு எம் மன்னன் சுக்ரீவன் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறான். நீங்கள் யாவர் என அறிந்து வரும்படி எனக்குக் கட்டளையிட்டான், ஆதலால் நான் இங்கு வந்தேன்" என்று சொன்னான் பணிவாக.

இப்படிப் பணிவாகவும், பண்போடும், அடக்கமாகவும் பேசுகின்ற அனுமனைப் பார்த்த இராமன்:

"மாற்றம் அஃது உரைத்தலோடும் வரிசிலைக் குரிசில் மைந்தன்
தேற்றம் உற்று, இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி
ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் என்னும்
வேற்றுமை இவனோடு இல்லை, ஆம்! என விளம்பலுற்றான்!"

அனுமனின் தோற்றம், பண்பு, பேசும் முறை இவற்றால் கவரப்பட்ட இராமன் கல்வி, கேள்வி, ஞானம் இவற்றில் இவனுக்கு இணையானவர் உலகில் எவரும் இல்லை என்று மனதில் எண்ணிக் கொண்டு, தன் தம்பி இலக்குவனை அழைத்துச் சொல்லுகிறான்.

"இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள்கூற
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே! 'யார்கொல் இச் சொல்லின் செல்வன்?'
வில்லார் தோள் இளைய வீர! விரிஞ்சனோ? விடைவல்லானோ?"

"தம்பி! இவன் வேதக் கடல் எனும்படியாக ஒளி நிறைந்து காணப்படுகிறான். இவன் ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் பேசும் சிற்சில சொற்களிலேயே இவன் மேன்மை வெளிப்படுகிறதே. யாரப்பா இந்த 'சொல்லின் செல்வன்'? பிரம்ம தேவனோ அல்லது சிவபெருமானோ? இங்கு தேவர்கள் மூவரில் பிரம்மனையும், சிவனையும் மட்டும் சொல்லிக் கேட்பது, காத்தல் கடவுளாம் திருமால், தான் என்பதால் இராமன் இவ்வாறு கேட்கிறானோ?

"லக்ஷ்மணா! இவன் ஒரு பிரம்மச்சாரி வடிவத்தில் மாணாக்கனாகத் தோன்றுகிறான் அல்லவா? இது இவனது உண்மைத் தோற்றம் இல்லை. இவன் இந்த உலகுக்கே ஓர் அச்சாணி போன்றவன். இவன் பெருமைகளை எல்லாம் நான் உணர்ந்து கொண்டேன். நீயும் அவைகளைப் புரிந்து கொள்வாய்" என்றான் இராமன்.

பிறகு இராமன், அனுமனை நோக்கி "நீ சொன்ன கவிக்குலத்து அரசன் சுக்ரீவன் எந்த இடத்தில் இருக்கிறான். அவனைப் பார்ப்பதற்காகத்தான், நாங்கள் வந்திருக்கிறோம். அவன் இருக்குமிடத்திற்கு எங்களை அழைத்துச் செல்!" என்றான்.

அதற்கு அனுமன் "உயர்ந்த தோள்வீர! நுமக்கு நிகரான புனிதர் யாரே இவ்வுலகில் உளர்! எம் அரசன் சுக்ரீவனைக் காண விரும்புகிறீர்கள் என்றால், அது அவனது தவப் பயனன்றோ! வீரர்களே! சூரியனுடைய குமாரனான சுக்ரீவனை இந்திரனின் குமாரனான வாலி பகைகொண்டு துன்புறுத்தி துரத்தி விட்டான். சுக்ரீவன் உயிருக்கு பயந்து கொண்டு இந்த ருசியமுகப் பர்வதத்தில் எங்களோடு ஒளிந்து வாழ்கிறான். அவனுக்கு பெருஞ்செல்வம் கிடைத்தது போலத் தாங்கள் அவனிடம் வந்திருக்கிறீர்கள். உலகத்தில் செய்கின்ற அறங்கள் யாவினும் துயரத்தால் அஞ்சி நடுக்கமுற்றவர்களுக்கு அபயம் அளித்துக் காப்பாற்றுவது போன்ற சிறந்த அறம் வேறு ஏதும் உளதோ?. மும்மை உலகங்களையும் படைத்துக் காக்கும் முதல்வராகிய தாங்கள்தான், எங்களை உய்விக்க வந்த தலைவராவீர்! உங்களை சரண் என்று நாங்கள் அடைந்தோம். உங்கள் அருளன்றி வேறு எதுவும் எங்களுக்கு நன்மை பயக்கக்கூடியது இல்லை. ஐயா! என் அரசன் சுக்ரீவனிடம் சென்று வந்திருக்கும் நீவீர் யாவர் என்று சொல்லுவது என்று எனக்குக் கட்டளையிடுங்கள்" என்றான், உண்மைக்கும் சத்தியத்துக்கும் வேலி போன்றவனான அனுமன்.

"யார் என விளம்புகேன், எங்குலத்து இறைவர்க்கு உம்மை
வீரர் நீர் பணித்திர் என்றான், மெய்மையின் வேலி போல்வான்
வார்கழல் இளைய வீரன் மரபுளி வாய்மை யாவும்
சோர்விலன் நிலைமை யெல்லாம் தெரிவுறச் சொல்லலுற்றான்.

தங்களை யார் வந்திருப்பது என்று எம் மன்னனிடம் சொல்லுவது என்று அனுமன் கேட்கவும், இளைய வீரன் இலக்குவன் தங்களைப் பற்றி நடந்த வரலாறுகளை எடுத்துக் கூற ஆரம்பித்தான். இந்தப் பாடலில் 'மெய்மையின் வேலி போல்வான்' என்ற அடைமொழியை அனுமனுக்கும், இலக்குவனுக்கும், இருவருக்குமே பொருந்துமாறு கம்பர் பெருமான் அமைத்திருப்பது படித்து மகிழக்கூடிய பகுதி.

"சூரிய குலத்தில் தோன்றி மிகப் பெருமையோடு இந்த உலகத்தை ஆண்டு வந்த பெருமையுடையவனும், தேவர்களின் பொருட்டு சம்பரன் எனும் அசுரனோடு போரிட்டு போரில் அவனைக் கொன்ற புகழையுடையவனும், க்ஷத்திரியர்களுக்கே உரிய பற்பல யாகங்களைச் செய்து முடித்தவனும், கார்மேகம் போல உயிர்களின்பால் கருணையுள்ளவனுமான அயோத்தி மன்னன் தசரத சக்கரவர்த்தியின் கட்டளையின்படி, தசரத குமாரனாகிய இந்த ஆண்தகை இராமன் தனக்கு உரிமையுள்ள ராஜ்ஜியத்தைத் தன் தம்பியான பரதனுக்கு பெருந்தன்மையோடு கொடுத்து விட்டு கானகம் வந்துள்ளான். இந்த வில்வீரனான இராமனுக்கு ஏவல் செய்யும் அடியவன் நான்" என்று தங்களை அறிமுகம் செய்துகொள்கிறான் இலக்குவன்.

இவ்வண்ணம் இராமன் திருஅவதாரம் தொடங்கி, இராவணன் இழைத்த புன்தொழில் ஈறாக அனைத்தையும் ஒன்று விடாமல் அனுமனிடம் சொல்லுகிறான் இலக்குவன். அந்த வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்த அனுமன், மனம் மகிழ்ந்து, கண்களில் நீர் சோர, அன்பின் மிகுதியால் நெடுஞ்சாண் கிடையாக அவர்கள் காலில் விழுந்து வணங்குகிறான். இப்படி ஒரு மாணவ பிரம்மச்சாரி வடிவம் தாங்கிய அனுமன் தன் பாதங்களில் விழுந்து பணிந்ததும், இராமன் சொல்கிறான்:

"கேள்வி நூல் மறை வலாளா! நீ தகாதன செய்கிறாய். இது தர்மம் ஆகாது. உன் பிரம்மச்சரிய ஆசிரமத்துக்கு ஏற்புடைய செயல் அல்ல இது" என்றான்.

இராமன் இங்ஙனம் சொல்லக் கேட்ட தடந்தோள் வெற்றிவீரனான மாருதி சொல்லுகிறான்: "செந்தாமரைக் கண்ணாய்! நான் அரிக்குலமாம் வானர குலத்தவன் ஆவேன். எனவே நான் செய்த செயல் பிழையன்று". இப்படிக் கூறிவிட்டு நான் இப்போது ஏற்றுக் கொண்டிருக்கிற இந்த பிரம்மச்சாரி உருவம் எனக்கு உரியதல்ல, என் உண்மை உருவத்தை இப்போது தங்களுக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே:

"மின் உரு கொண்ட வில்லோர், வியப்புற வேத நன்னூல்
பின் உரு கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் நாணப்
பொன் உரு கொண்ட மேரு புயத்திற்கு உவமை போதாத்
தன் உரு கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான்".

இந்தப் பூவுலகில் தர்மம் தனியாக இருக்கக்கூடாது அதற்கு துணையாக ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக வந்தவன் இந்த அனுமன் எனும்படி, வேதங்கள் எல்லாம் ஓர் உருக்கொண்டு, பொன் மயமான தேஜசுடன், பெரிய தோள்கள் பூரிக்க தன் சுய உருவைக் காட்டி வானுயர நின்றான். . உலகம் மூன்றையும் தன் காலடிகளால் அளந்த புண்டரீக ஆழிப் புரவலனான, தாமரை இதழ் போன்ற கண்களும், சக்கராயுதத்தையும் கொண்ட திருமாலான இராமபிரானால்கூட அப்படி விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அனுமனின் குண்டலங்கள் ஒளிவீசும் முகத்தைக் காண முடியவில்லை என்றால், சூரிய பகவானிடம் கல்வி கற்ற அந்த அனுமனின் பெருமையை ஒருவரால் எடுத்துக் கூறல் ஆகுமோ?

இராமபிரான் தம்பி இலக்குவனை அழைத்து, "தம்பி! இந்த அனுமன் சாதாரணமானவன் அல்ல அப்பா! பிரளய காலத்திலும் அழிவுறாத வேதங்களும், பிரபோத ஞான நிலையுமே இப்படியொரு குரங்கு வடிவம் எடுத்து நம்முன் வந்து நிற்கிறது. தம்பி! இவன் வரவால் நமக்கு நல்ல நிமித்தம் உண்டாகியிருக்கிறது. இனி நமக்குத் துன்பங்கள் இல்லை இன்பமே நிலைபெற்றிருக்கும். இப்பேற்பட்ட அனுமன் சுக்ரீவனிடம் ஏவல் செய்பவன் என்றால், அந்த சுக்ரீவனது பெருமை எப்படி இருக்குமென்று சொல்லவும் வேண்டுமோ?"

அப்போது தனக்கு எதிரே மனமகிழ்வோடு நிற்கும் இராமபிரானிடம் அனுமன் "நான் விரைந்து சென்று சுக்ரீவனை அழைத்து வருகிறேன். சற்று இங்கே காத்திருங்கள்" என்று சொல்லிவிட்டு, அவன் இருக்குமிடம் நோக்கி விரைந்து சென்றான்.

இராமனிடம் விடைபெற்றுக் கொண்டு சுக்ரீவனிடம் செய்தி சொல்லுவதற்காக விரைந்த அனுமன், சுக்ரீவன் இருக்குமிடம் சென்று வணங்கி "அடியேனும், வானர குலமும், இந்த உலகமும் ஈடேறினோம்" என்று சொல்லிக் கொண்டே, அவன் முன் போய் நின்றான். மகிழ்ச்சி மேலீட்டால் அனுமன், சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடியது போல ஆடினான். (இங்கும் அனுமனை சிவபெருமானுக்கு உவமையாகக் கூறுகிறார் கம்பர்). "வாலியின் உயிரை போக்கிட ஓர் காலன் வந்து விட்டான். நாமெல்லாம் துன்பம் எனும் கடலைத் தாண்டிவிட்டோம்" என்றான். பிறகு வந்திருக்கும் இராம, இலக்குவர் பற்றிய முழு விவரங்களையும் சுக்ரீவனிடம் உணர்ச்சி வயப்பட்டு உரைத்தான்.

"அவர்கள் புவி, வான், பாதலம், அவற்றின் வேறான பிற இடங்கள், திசைகள், இங்கெல்லாம் உறைபவர்களுக்கு உயிரளிக்கும் அமுதம் போல உதவுபவர்கள் என்று புகழ்ந்துரைத்தபின், அவர்களது குலச் சிறப்பு, உள்ளழகு, புறவழகு, இவற்றை விளக்கிச் சொல்லி அவர்களால் சுக்ரீவன் அடையப் போகும் நன்மைகளையும் எடுத்துக் கூறினான். இராமன் தாடகையை வதம் செய்ததையும், அவனது கால் துகள் பட்டு அகலிகை சாபம் நீங்கி உயிர்பெற்று எழுந்ததையும் எடுத்துரைத்தான். மிதிலைக்குச் சென்று சிவபிரானின் திரியம்பகம் எனும் வில்லை ஒடித்ததையும், மிதிலைச் செல்வி ஜனக குமாரி ஜானகியைத் திருமணம் செய்து கொண்டதையும் எடுத்துரைத்தான். தாய் கைகேயி வரம் கேட்க, தந்தை அதனைக் கொடுக்க, அதன்படி தனக்கு உரிமையான் ராஜ்ஜியத்தைத் தன் தம்பியிடம் கொடுத்துவிட்டு, கானகம் வந்த செய்தியையும் எடுத்துச் சொன்னான்.

பரசுராமனை கர்வ பங்கம் செய்ததையும், விராடன் எனும் அரக்கனை வீழ்த்தியதையும் விவரமாகச் சொன்னான். காட்டில் கரன் முதலான பதினான்காயிரம் அரக்கர்களைக் கொன்றதையும் எடுத்துச் சொன்னான்.

"ஆய மாநகர் தாழ் ஆழியானே அலால்
காயம் மான் ஆயினான் யாவனே! காவலா
நீ அ மான் நேர்தி, நிருத மாரீசனார்
மாய மான் ஆயினான், மா எமன் ஆயினான்".

"மாய மானாக வேடமிட்டு வந்த அரக்கன் மாரீசனது உயிருக்கு பெரிய எமனாக வந்த இராமபிரானை நீ வந்து பார்த்து, நட்பு செய்து கொள்வாயாக!" என்றான்.

சவரி என்ற தவத்தி வீடு பேறு அடைந்ததும், கவந்தன் எனும் அரக்கன் உயர் பதம் புக்கதும் என்னால் இயம்பக் கூடியவையோ?" முனிவர்களும், பிறரும், இராமன் வந்து தங்களுக்கு அருள் புரிந்து மோட்சம் தருவார் என்று காத்திருந்து, அவ்வண்ணமே கிடைக்கப் பெற்றார்கள். அதனை எங்ஙனம் எடுத்துரைப்பது?"

"ஐயா! அறிவற்ற அரக்கர் கோன் இராவணன், மாயையால் இராமபிரானின் மனைவி சீதாதேவியைக் கவர்ந்து சென்று விட்டான். அவனைத் தேடிவருகையில் நீ செய்த தவப்பயனாலும், தூய்மையானவன் என்பதாலும் உன்னோடு நட்பு கொள்ளும் பொருட்டு இங்கே வந்துள்ளார்".

மரபுப்படி அரசனுக்கு மந்திராலோசனை சொல்லும் திறமையுள்ள அனுமன் சுக்ரீவனை நோக்கி, "அறிவார்ந்த மன்னா! உன் மீது அருள் கொண்டு இராமன் இங்கு வந்துள்ளான். இந்திரகுமாரன் வாலிக்கு இறுதிக்காலம் இவர்களால் வந்துற்றது. எனவே வா! வந்து இவர்களோடு நட்பு செய்து கொள்!" என்றான்.

அனுமன் கூறியவற்றைத் தன் அறிவாற்றலால் அறிந்து உண்ர்ந்த சுக்ரீவன், அனுமனை நோக்கி, "பொன்னை நிகர்த்த அனுமனே! உன்னைத் துணைவனாகக் கொண்ட எனக்கு என்ன குறை?" என்று சொல்லி, அனைவரும் புறப்பட்டு இராமன் இருக்குமிடம் வந்து சேருகிறார்கள். சுக்ரீவன் இராமபிரானை தரிசிக்கிறான். அந்தக் காட்சியை கம்பர் வாக்கால் கேட்பதுதான் சிறப்பு.

"கண்டனன் என்ப மன்னோ, கதிரவன் சிறுவன் காமர்
குண்டலம் துறந்த கோல வதனமும் குளிர்க்கும் கண்ணும்
புண்டரீகங்கள் பூத்துப் புயல் தழீஇப் பொலிந்த திங்கள்
மண்டலம் உதயம் செய்த மரகதக் கிரி அன்னானை".

இராமனையும் இலக்குவனையும் நேரில் தரிசித்த சுக்ரீவன், அவர்களது செளந்தர்யத்தில் ஈடுபட்டு நெடுநேரம் வியப்புற்று நின்றான். பிரம தேவன் இவ்வுலகினைப் படைத்த காலம் தொட்டு இன்று வரை செய்த நல்வினைப் பயன்கள் எல்லாம் ஒன்று திரண்டு இரு மனித உருவில் இங்கு வந்து தோன்றியது போல காட்சியளித்தனர். இவர்கள் தோற்றத்தில்தான் மனிதர்கள் போல இருக்கிறார்களே தவிர, தேவர்களுக்கெல்லாம் உயர்ந்த தேவர் ஆவார். சிவன், பிரமன், முதலானவர்களை ஆதியாகக் கொண்ட தேவர்களையெல்லாம் இந்த மனித குலம் வென்று விட்டது! கம்பர் பெருமான் மானுடத்தின் பெருமையைக் கூறிய இந்தப் பகுதி அனைவர் நெஞ்சத்திலும் குடிகொண்டிருக்க வேண்டிய பாடல் இது.

"தேறினன் அமரர்க்கெல்லாம் தேவராம் தேவரென்றே
மாறி இப் பிறப்பில் வந்தார் மானுடராகி மன்னோ
ஆறு கொள் சடிலத் தானும் மயனும் என்று இவர்கள் ஆதி
வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதென்றே!".

சுக்ரீவன் இராமனிடம் "உம்முடைய மங்கள குண விசேஷங்களை மாருதி சொல்லக் கேட்டேன். என்னோடு நட்பு செய்து கொள்ளத் தாங்கள் விரும்புவது எனக்கு மேன்மையும், பெரும் சிறப்பும் ஆகும். என்னுடைய நட்பை உறுதி செய்ய, என் கரங்களை உமது கையால் பற்றி உறுதி செய்யுங்கள்" என்று சொல்ல, இராம பிரானும் மிகவும் உற்சாகமடைந்து தம் கையால் சுக்ரீவன் கையைப் பற்றி, அவனைத் தழுவிக் கொண்டார்.

இராமபிரானும் சுக்ரீவனும் கூடியிருந்த காட்சி, குறித்த செயலை முடிப்பதற்கு முன் செய்த தவமும் இப்போது செய்யும் முயற்சியும் ஒன்று கூடி பயன் தருவது போலவும், அஞ்ஞான இருளை ஓட்ட நூல் அறிவும் சுய அறிவும் கூடி அமைந்தது போலவும் இருந்தது. முற்பிறவியின் தவப் பயனால்தான் இராமனிடம் வந்து சேர்ந்ததாக சுக்ரீவன் மகிழ்ச்சியடைந்தான்.

சுக்ரீவனை நோக்கி இராமன் சொல்கிறார், "ஐய! குற்றமற்ற தவசியான சவரி எனும் மாது, நீ இந்த ருசியமுக பர்வதத்தில் இருப்பதையும், எங்களுக்கு நேர்ந்த துன்பம் உன்னால் தீரும் என்றும் கூறி எங்களை இங்கு அனுப்பி வைத்தாள்" என்றான்.

"அண்ணலே! என் தமையனான வாலி என்னிடம் பகைமை கொண்டு என்னைத் துரத்த, அவன் வரமுடியாத, வந்தால் அவன் தலை வெடித்து இறப்பான் என்று மதங்க முனிவர் சாபமுள்ள, இந்த ருசியமுக பர்வதத்தில் நான் ஒளிந்து வாழ்கிறேன். இப்போது உம்மையே அடைக்கலமாக வந்து தங்களிடம் சேர்ந்தேன். என்னை ஏற்றுக் கொண்டு காப்பாற்றுதல் தர்மம் ஆகும்" என்றான் சுக்ரீவன்.

ஒரு முறை வாலி துந்துபி எனும் அசுரனோடு போர் புரிந்து அவனைக் கொன்று, அவன் உடலைத் தன் காலால் உந்தி எறிய, அஃது இந்த ருசியமுக பர்வதத்தில் தவம் செய்துகொண்டிருந்த மதங்க முனிவரின் ஆசிரமத்தில் போய் விழுந்தது. அங்கு ஒரே இரத்த வெள்ளமாகிப் போய் அசுசிப் படுத்தியது. அது கண்ட முனிவர் வெகுண்டு, "இதைச் செய்தவன் இவ்விடம் அடியெடுத்து வைத்தால், அவன் தலை பல துகள்களாக வெடித்துச் சிதறி அழிவான்" என்று சபித்தார். அந்த சாபத்தை அறிந்த வாலி அம்மலைப் பக்கம் வராமல் ஒதுங்கியே இருந்தான். அதன் காரணமாகவே வாலியிடமிருந்து உயிருக்கு பயந்து ஓடிய சுக்ரீவன் இந்த மலையில் வந்து தஞ்சம் புகுந்தான்.

உடனே இராமன் "உனக்கு வந்து சேர்ந்த துன்பங்களை நான் தீர்ப்பேன். இனி உனது இன்ப துன்பங்கள் என்னுடையவை. இனி இப்புவியில், வானத்தில், எல்லா இடங்களிலும் உன்னைப் பகைத்தவர் எனக்கும் பகைவர். உனது நட்புக்கு உரியவர் எனக்கும் நண்பராவர். உன் உறவினர் எனக்கும் உறவினர். என் அன்புக்கு உரிய நட்பும், சுற்றமும் உனக்கும் அவ்வண்ணமே ஆகும். நீ என் உயிர்த் துணைவன்" என்றான்.

இராமனின் வாக்கு வேத வாக்கல்லவா? அவன் வாயால் கூறிய இந்த உறுதிமொழியைக் கேட்டதும் வானரக் கூட்டம் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியடைந்தது. அனுமனின் உடலில் மயிர்க்கூச்சம் உண்டாயிற்று. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். மேகங்கள் பொன் மழை பெய்தன. இவ்வளவும் இராமனின் சொற்களைக் கேட்டபின் விளைந்த நிகழ்வுகள் என்றால், இராமனின் வாக்குக்குத்தான் எவ்வளவு பெருமை?

இராமனையும், இலக்குவனையும் அனுமன் சுக்ரீவனின் இருப்பிடத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டான். இராமனும் மகிழ்ச்சியுடன் அங்கு வருவதற்கு ஒப்புக்கொண்டு புறப்பட்டுச் சென்றான். அவர்கள் சுக்ரீவனின் இருப்பிடம் வந்து சேர்ந்ததும், அவனுடன் அளவளாவிய பிறகு நீராடிவிட்டு, அவர்கள் கொடுத்த விருந்தை உண்டு மகிழ்ந்து இருந்தான்.

வீட்டுக்கு வந்த அதிதியை இல்லறத்தான், தன் மனைவியோடு இருந்து உபசரிப்பதுதான் முறை. இங்கு அப்படியில்லாமல் சுக்ரீவன் தனியனாய் இருந்த விருந்தினரை உபசரிப்பதை இராமபிரான் கண்டு அவனிடமே அதற்கான காரணத்தைக் கேட்கிறான் "சுக்ரீவா! நீயும் உன் மனைவியைப் பிரிந்து இருக்கிறாயோ?" என்று. தானும் சீதையைப் பிரிந்து இருப்பதைக் குறிப்பால் உணர்த்தினான் இராமன். அப்போது மாருதி எழுந்து நின்று இராமனை வணங்கி "ஐயனே! தங்களிடம் நான் சொல்லவேண்டிய வரலாறு ஒன்று உளது" என்று, வாலி-சுக்ரீவன் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கலானான்.

"இந்த சுக்ரீவனின் அண்ணன் வாலி, கைலாய மலையில் இருக்கும் சிவபெருமானின் பூரணமான அருளைப் பெற்றவன். தேவர்களும், அசுரர்களும் இருபுறமுமாய்ப் பிரிந்து நின்று வாசுகி எனும் பாம்பைக் கயிறாகவும், மந்தர மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலில் அமுதம் எடுப்பதற்காகப் பல காலம் வலிந்து கடைந்து கொண்டிருந்தார்கள். அப்படி நெடுங்காலம் கடைந்தும் அமுதம் வெளிவராமல் அவர்கள் தவித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த வாலி, அந்த தேவர்களையும், அவுணர்களையும் விலகிப் போகச் சொல்லிவிட்டுத் தான் ஒருவனாகவே தன் வாலை மந்தரகிரியில் சுற்றி கயிறாகக் கொண்டு கடைந்து, அமுதத்தை எழச் செய்து, அவ்வமுதத்தை தேவர்களுக்கு அளித்தான் என்பது வரலாறு".

"இந்த வாலி பஞ்ச பூதங்களின் ஆற்றலை ஒருங்கே பெற்றவன். வாலி தினமும் எட்டு திக்குகளின் எல்லைகளுக்குச் சென்று ஆங்காங்கே உள்ள சிவத் தலங்களில் வழிபட்டு வரும் கடமை உடையவன்.

"கால்* செலாது அவன் முன்னர்க், கந்தவேள்                      கால் = காற்று
வேல் செலாது அவன் மார்பின், வென்றியால்
வால் செலாது வாய் அலது ராவணன்
கோல் செலாது அவன் குடை செலாது அரோ!".

அவ்வளவு வலிமையுடைய வாலியின் முன்பாக காற்றுகூட புகமுடியாது; அவனுடைய மார்பில் கந்தவேளின் வேலும் செல்லாது; அவனுடைய வால் செலாத இடங்களில் அல்லாமல் இராவணனின் ஆட்சி அதிகாரம் செல்லமுடியாது, அதுமட்டுமா, இராவணனின் குடையும் செலாது. வாலி தன்னுடைய இடத்தை விட்டுப் பெயர்ந்து எழும்பிச் செல்லுவானானால் அவனுடன் மலைகள் எல்லாமும் உடன் எழும்; அவன் தோள் மோதினால் அண்டங்கள் மோதிக் கொள்ளும். அன்று, வராக அவதாரமும், கூர்மாவதாரமும் எடுத்த திருமாலோடு ஒப்பிடத்தக்க வலிமையுடையவன் வாலி. அன்று இரண்யனின் மார்பைப் பிளந்த நரசிம்ஹத்தாலும்கூட பிளக்கமுடியாத வலிமை படைத்தவன் வாலி.

இரண்யாக்ஷன் எனும் அசுரன் பூமியைச் சுருட்டிக் கொண்டு பாதாளத்துக்குள் சென்று விடுகிறான். தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட, அவர் ஓர் வராகம் (பன்றி) உருவம் எடுத்துக் கொண்டு அந்த அசுரனைப் பின்பற்றி பாதாளத்துக்குள் சென்று, அந்த அசுரனைக் கொன்று, பூமியைத் தன் கொம்பில் ஏந்திக் கொண்டு வந்து முன்போல் நிலை நிறுத்தினார். தேவர்களும், அசுரர்களும் திருப்பாற் கடலைக் கடைந்த போது, மத்தாக நடப்பட்டிருந்த மந்தர மலை கீழே ஆழ்ந்து போய்விடாமல் இருக்கத் திருமால் ஒரு பெரிய ஆமை உருவம் எடுத்துக் கொண்டு கடலுக்கடியில் இருந்த அந்த மலையைத் தாங்கிக் கொள்கிறார். இந்த இரு அவதார புருஷர்களாக திருமால் வந்தார், அந்த வராகமும், கூர்மமும் கூட இவன் வலிமையோடு ஒப்பிட முடியாது என்று அனுமன் கூறுகிறான்.

ஆதிசேஷன் இந்த பூமியை ஓரிடத்தில் இருந்து கொண்டுதான் தாங்குவான். ஆனால், இந்த வாலியோ நடந்து கொண்டே தாங்குகிறான். கடல் ஓசையிடுவதும், காற்று வீசுவதும், சூரியன் தேரில் சுற்றுவதும் கூட வாலிக்கு இடையூறு இன்றி பயந்துகொண்டுதான் இயங்குகின்றன என்றால், வாலியின் வலிமையைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது?

இப்படி வாலியிடம் கொண்ட அச்சத்தினால், உலகில் உள்ள மற்ற உயிரினங்கள் யாவும், அவனது கருத்துக்கு மாறுபாடின்றி அவனுடன் ஒன்றுபட்டு உயிர்பிழைத்து வருகின்றன. இந்த வாலியின் வால் இருக்கிறதே, அதன் மகிமையைக் கூறுகிறேன், கேளுங்கள்! ஒரு சமயம் வாலி மாலை நேரத்தில் கடற்கரையருகே சாயங்கால சந்தி முதலான நியமங்களைச் செய்துகொண்டு இருந்தபோது, இராவணன் அவன் அறியாவண்ணம் பின்புறமாகச் சென்று தன்னுடைய இருபது வலிய தோள்களாலும் அந்த வாலியைக் கட்டிப் பிடித்தான். வாலி அதை உணர்ந்ததும் தனது சந்தி நியமத்துக்குக் குறைவு ஏற்படாமல் அந்த இராவணனைத் தன் வாலால் இறுகப் பிணித்து வைத்து சந்தியாவந்தனம் முடிந்தபிறகு தன் வாலில் அவனைத் தொங்கவிட்டபடி, அந்த அரக்கன் தன் பத்து வாய்களிலும் இரத்தம் சிந்தி வருந்தும்படி, உலகின் பல பாகங்களிலும் சுற்றித் திரிந்தான். துன்பம் தாங்காமல் அந்த இராவணன் வாலியிடம் வருந்தி வேண்ட, இனித் தன்னிடம் வம்புக்கு வரக்கூடாது என்று விரட்டியடித்துவிட்ட கதையையும் அனுமன் சொன்னான்.

இருக்ஷரஜசு என்ற வானர வீரன் பார்வதி தேவியின் சாபத்தால், பெண் வானரமாக உருவெடுத்தான். அவளை இந்திரனும் சூரியனும் விரும்பி அடைய முறயே இந்திரனுக்கு வாலியும், சூரியனுக்கு சுக்ரீவனும் பிறந்ததாகக் கூறுவர். எனவே இவர் இருவருக்கும் தாய் ஒருத்தியே ஆயினும், தந்தை வெவ்வேறானவர்.

அத்தகைய வாலி எங்கள் வானர குலத்துக்கு அரசனாகவும், சுக்ரீவன் இளவரசாகவும் இருந்து வந்தனர். இப்படி இருந்த காலத்தில், வாலியின் பழைய பகைவன் மாயாவி எனும் அசுரன் ஒருவன் வந்து வாலியைத் தாக்கினான். வாலிக்கும் மாயாவிக்கும் கடும் யுத்தம் நடந்தது. நீண்ட நெடிய அந்த துவந்த யுத்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இருவரும் போரிட்டுக் கொண்டே இருக்கையில் அந்த மாயாவி ஒரு குகைக்குள் சென்று விட்டான். கோபமடைந்த வாலி, சுக்ரீவனை அழைத்து 'நான் இந்தக் குகைக்குள் நுழைந்து அந்த மாயாவியைக் கொன்றுவிட்டு மீள்வேன், அதுவரை நீ இந்த பிலத்தின் வாயிலில் காவல் காத்துக் கொண்டிரு' என்று சொல்லிவிட்டு குகைக்குள் அவனும் நுழைந்தான்.

வாலி அப்படி குகைக்குள் நுழைந்து பதினான்கு பருவங்கள் (ஒரு பருவம் என்பது இரண்டு மாதம் - பருவங்கள் முறையே இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என ஆறு பருவங்கள்) ஆகியும் பிலத்துக்குள்ளிருந்து வாலி வெளியே வரவில்லை. சுக்ரீவன் காவல் காத்துக் கொண்டு நின்றான். அண்ணன் குகைக்குள்ளிருந்து வெளியே வராமையால் வருந்தி அழுதான் சுக்ரீவன். அங்கு அருகிலிருந்த வானரர்கள் அனைவரும் அவனைத் தேற்றி, தொழுது, வாலி இறந்திருக்கலாம். நாட்டுக்கு அரசன் தேவை. நீயே அரசனாக முடிசூட்டிக் கொள் என்றார்கள். சுக்ரீவன் அது தவறு, அவ்வாறு என்னால் செய்ய முடியாது என்று அண்ணன் மீதுள்ள அன்பின் காரணமாக மறுத்தான்.

நானே பிலத்துக்குள் நுழைந்து, என் அண்ணனுக்கு ஏற்பட்ட கதியைக் கண்டு அறிந்து வருவேன். அந்த மாயாவியைக் கொல்வேன், முடியாவிட்டால் அவனோடு போர் செய்து மாள்வேன் என்று அந்த குகைக்குள் நுழைய முயன்றான். ஆனால் வானர குல பெரியோர்கள், இதற்கு சம்மதிக்கவில்லை. சுக்ரீவனைக் கட்டாயப் படுத்தி அழைத்துச் சென்று முடிசூட்டிவிட்டனர். இப்படி அரசுரிமை, இவன் மீது திணிக்கப்பட்டதேயன்றி, இவன் விரும்பி அதனை ஏற்றுக் கொள்லவில்லை. சுக்ரீவன் மட்டும் வாலி இறக்கவில்லை என்றே நம்பி தனக்கு அரசுரிமை தேவையில்லை என்ற நிலையிலேயே இருந்த போது, அந்த குகையினின்றும் வாலி அந்த மாயாவியைக் கொன்றுவிட்டு வெளியே வந்தான். வானரங்கள் நாடு திரும்புகையில் குகை வாயிலை ஒரு பெரிய பாறையைக் கொண்டு அடைத்துவிட்டுத் திரும்பினர். அதை வாலி தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்தான்.

பிலத்தின் வாயை மூடிவிட்டு, நாட்டைத் தம்பி சுக்ரீவன் அபகரித்துக் கொண்டான் என்று வாலி கடும் கோபம் கொண்டான். வாலி வெளியே வந்துவிட்ட செய்தியறிந்து, சுக்ரீவன் ஓடிவந்து அவனது அடிபணிந்து வணங்கினான். சுக்ரீவன் மாறுபாடற்ற தூயமனம் உடையவன். தான் வேறு வாலி வேறு என்று நினைக்காத ஒருமித்த மனமுடையவன். நடந்த வரலாற்றையெல்லாம் வாலியிடம் சொல்லி, அவனையே நாட்டை ஆளும்படி கேட்டுக் கொண்டான். ஆனால் கடும் கோபமுற்றிருந்த வாலி, சுக்ரீவன் கூறிய சமாதானங்களையெல்லாம் ஏற்றுக் கொள்ளாமல், அவனை அடித்துப் புரட்டி எடுத்தான். உயிர் போய்விடும் என்கிற நிலையில் தப்பி ஓடிவிட்டான். வாலி வரமுடியாத இந்த ருசியமுக பர்வத்துக்கு வந்து இங்கேயே தங்கிவிட்டான்.

ஐயனே! இன்னொன்றும் நான் சொல்ல வேண்டியிருக்கிறது. சுக்ரீவனுக்கு உரிமையான ருமை எனும் பெயர் கொண்ட அவனது மனைவியையும், வாலி விரும்பி அபகரித்துக் கொண்டான். இவன் நாட்டையும் இழந்தான்; மனைவியையும் இழந்து உயிர் பிழைத்து இந்த மலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான், என்று இந்த வரலாற்றை அனுமன் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்த இராமனுக்கு உதடுகள் துடித்தன. கோபத்தில் அவன் தாமரை முகம்கூட செவ்வல்லி போல சிவந்து போனது.

தனது சிற்றன்னை கேட்ட வரத்துக்காக தம்பி பரதனுக்கு நாட்டைக் கொடுத்துவிட்டு, கானகம் வந்த இராமனுக்கு, தம்பியின் மனைவியை வாலி அபகரித்துக் கொண்டான் என்ற செய்தி கடும் கோபத்தை உண்டாக்கியது. இப்படிப்பட்ட கொடும் தொழில் புரிந்த வாலி உயிர் வாழக் கூடாது. எங்கே அவன்? இப்போதே அவன் உயிரை என் அம்பினால் குடித்து, உனது நாட்டையும், உன் மனைவியையும் மீட்டுத் தருகிறேன் என்று சூளுரைத்தான்.

"உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி
விலகும் எனினும் வில் இடை வாளியின் விட்டு இத்
தலைமையொடு, நின் தாரமும் உனக்கு இன்று தருவேன்
புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு எனப் புகன்றான்".

சுக்ரீவனுக்கு, இனி வாலியின் வலி ஒழிந்தது என்ற உறுதி ஏற்பட்டது. தன் இருக்கையை விட்டு எழுந்து வந்து, இராமனிடம் 'இதுபற்றி நாம் ஆலோசிக்க வேண்டிய ஒரு விஷயமும் இருக்கிறது' என்றான். வாலியை வெல்லும் ஆற்றல் இராமனுக்கு உண்டா என்பதில் அவனுக்கு ஐயம் ஏற்பட்டதால், தன் அமைச்சர்களிடம் அதுகுறித்து ஆலோசனை பெற எண்ணினான். அவ்வாறு அவன் தன் அமைச்சர்களுடன் இதுகுறித்து தனிமையில் ஆலோசித்தான்.

அப்போது அனுமன் சொல்லுகிறான், "சுக்ரீவா! உன் மனதில் ஓடும் எண்ணங்களை நான் ஊகித்துத் தெரிந்து கொண்டேன். வாலியைக் கொல்லும் ஆற்றல் இவர்க்கு உண்டோ என்று நீ சந்தேகிக்கிறாய். இதுபற்றி இனி நான் சொல்வதை மட்டும் கேட்டு நடப்பாயாக" என்றான்.

"இராமனுடைய கைகளிலும், கால்களிலும் சங்கு சக்கர ரேகைகள் உள்ளன. இந்த உத்தம லட்சணங்கள் திருமாலைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. இந்த இராமபிரான் அந்த திருமாலின் அவதாரமேயன்றி வேறில்லை. பூமியில் அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டவே அவதரித்துள்ளார்".

"என்னை ஈன்ற எனது தந்தை வாயுபகவான் எனக்கு என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? இவ்வுலகங்கள் அனைத்தையும் படைத்தவனான பிரமதேவனை ஈன்றவரான திருமாலுக்கு அடிமை செய்து வாழ்வதே உனது வாழ்வின் குறிக்கோளாகக் கொள்க. நான் கடைத்தேற எனக்கு நீ செய்ய வேண்டிய கடன் அதுவே என்று சொல்லியிருக்கிறான். அந்த திருமால் அவதாரத்தை, அவர்தான் திருமால் என்று நான் எப்படி அறிந்து கொள்வது என்று என் தந்தையிடம் கேட்டேன். உலகில் எவர்க்கும் துன்பம் நேரிடுகின்ற போது அதனைத் துடைத்து நீக்கும் பொருட்டு தோன்றி அருளுவான். அவனைக் கண்டவுடன் உன் உள்ளத்தில் பேரன்பு உண்டாகி இதயம் நெகிழ்வடையும். அதுவே நீ திருமாலை உணர்ந்து கொண்டதற்கு அறிகுறி என்றான். நான் இராமனை முதன்முதலாகக் கண்டபோது அத்தகைய அனுபவம் கிடைக்கப் பெற்றேன். எனவே இவர்தான் திருமாலின் அவதாரம் என்பதில் வேறு ஐயப்பாடு எதுவும் உண்டோ?" என்றான் அனுமன்.

"ஐயனே! அந்த இராமனின் வலிமையை நீ தெரிந்து கொள்ள இன்னொரு உபாயமும் இருக்கிறது. நாம் போகும் வழியில் ஏழு மராமரங்கள் இருக்கின்றன. அதனை இராமன் ஒரே அம்பினால் துளைத்தால் அதுவே அவனது திறமைக்குச் சான்றாகும்" என்றான் அனுமன் சுக்ரீவனிடம்.

அது கேட்ட சுக்ரீவன் "நன்று! நன்று!, நீ கூறிய உபாயம் மிகவும் நல்லது" என்று சொல்லி அனுமனைத் தழுவிக் கொண்டான். பிறகு அனைவரும் அவ்விடம் விட்டு அகன்று இராமபிரான் இருக்குமிடத்தை அடைகின்றனர். இராமபிரானிடம் சென்று சுக்ரீவன் "ஐயனே! நான் தங்களிடம் செய்து கொள்ளும் விண்ணப்பம் ஒன்று உளது" என்றான்.

"கேள்!" என்றான் இராமன்.

உடனே சுக்ரீவன் சொல்கிறான், "வாருங்கள், நாம் இந்த வழியாகப் போகவேண்டும்" என்று தொலைவில் ஓரிடத்திற்குக் கூட்டிச் செல்கிறான். அங்கு ஐந்தோடு இரண்டு, ஏழு மராமரங்கள் வரிசையில் இருந்தன. இவற்றைத் தாங்கள் ஒரே அம்பினால் துளைத்து, என் நெஞ்சின் துன்பம் தீர்ப்பீராக!" என்றான். வாலி அந்த மரங்களை அசைத்து அவற்றின் இலைகள் யாவும் உதிருமாறு செய்திருந்தான். அதன் பொருட்டு இராமனை அவற்றை ஓர் அம்பினால் துளைக்கும்படி கேட்டுக் கொண்டான்.

இராமன் ஒரு புன்முருவல் பூத்தான். இவன் நம் வலிமையைச் சோதிக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டு, தன் வில்லில் நாண் ஏற்றி அந்த மரங்களின் அருகில் சென்றான். தன் வில்லின் நாணை இழுத்து பெருத்த ஓசையை எழுப்பினான். பின்னர் ஓர் அம்பை எடுத்து வில்லில் பூட்டி நாணை நன்கு இழுத்து அம்பை விரைந்து செலுத்தினான். இராமபிரான் செலுத்திய அந்த அம்பு, ஏழு மராமரங்களையும் துளைத்து, கீழ் மேலாக அமைந்துள்ள ஏழு உலகங்களையும் உட்புகுந்து, பின்னர் ஏழு என்னும் தொகையில் பொருள் எதுவும் இலாமையால் இராமனிடமே அந்த அம்பு திரும்ப வந்து சேர்ந்தது.

No comments:

Post a Comment

Please give your comments here