Monday, May 17, 2010

vi) Continued ...

"மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி
சூலமும் திகிரிச் சங்கும் கரகமும் துறந்து தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்"

"இவனுக்கு ஒரு தொடக்கமோ, நடுவோ அல்லது முடிவோ இல்லை. இறப்பு, நடப்பு, பிறப்பு எனும் முக்காலத்தையும், அதன் கணக்குகளையும் கடந்தவன் இவன். அந்தப் பரம்பொருள் சூலம், சக்கரம், சங்கு, கமண்டலம் இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, வில் ஏந்திய கையனாக, ஆலிலையும், தாமரை மலரையும், கயிலை மலையையும் விட்டு நீங்கி அயோத்தியில் இராமனாக வந்து பிறந்திருக்கிறான்".

"அவன் பிறப்பை அறுப்பவன்; அறத்தை வளர்ப்பவன். வேத நெறிகளின்படி வாழ்பவன். நல்லோர் வாழவும், தீயோர் அழியவும் திறன்படைத்து, தர்மத்தை நிலைநாட்டிய பின் தன் சொந்த இடம் திரும்பும்படியாக அவதாரம் செய்திருப்பவன். அந்த அருளாளனாகிய இராமபிரானுக்கு அடிமை செய்பவன் நான். அவன் மனைவி சீதா தேவியைத் தேடி நாலாபுறமும் வந்தவர்களில் வாலியின் புதல்வன் தலைமையில் வந்திருப்பவன் நான். அவனுடைய தூதனாக இங்கே வந்தேன். தனியாகத்தான் வந்திருக்கிறேன்" என்றான் அனுமன்.

அனுமன் வாலியின் பெயரைக் குறிப்பிட்டதாலோ என்னவோ, தன் பற்கள் தெரிய சிரித்துவிட்டு, "வாலியின் மகன் அனுப்பிய தூதனா நீ? வன் திறல் வாலி வலியன் கொல்! அரசின் வாழ்க்கை நன்று கொல்" என்றான் இராவணன்.

வாலியின் பெயரைச் சொன்னதுமே இராவணன் ஆட்டம் காண்பதைக் கண்டு அனுமன் கேலியாகச் சிரித்துக்கொண்டு, "அரக்கனே! அஞ்சாதே! வாலி இந்த உலகத்தை நீங்கி வானுலகம் சென்று விட்டான். இனி திரும்பி வர மாட்டான். அவன் மட்டுமல்ல. அவனோடு அவன் வாலும் போய்ச் சேர்ந்துவிட்டது. கருநிறத்து இராமன் விடுத்த ஓர் அம்பினால், அவன் உயிரை விட்டான். இப்போது வாலியின் தம்பி சுக்ரீவனே எமது அரசன்" என்றான்.

இது ஏதடா வம்பாய் போயிற்று. இராமன் மனைவியைக் காணவில்லை என்று சுக்ரீவன் தேடுவானேன்? தன்னை முன்பு வாலால் கட்டி மூவுலகத்துக்கும் அலைக்கழித்த வாலியின் புதல்வன் தேடி வருவானேன்? அவனது தூதனாய் இந்த பொல்லாத குரங்கு இவ்வளவு அழிவைச் செய்வானேன்? பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்ததே!

"வாலியை இராமன் ஏன் கொன்றான்? அந்த இராமன் இப்போது எங்கே இருக்கிறான்? இராமன் மனைவியைத் தேடி வாலியின் மைந்தன் அங்கதன் வருவானேன். எனக்கு விளக்கமாகச் சொல்" என்றான் இராவணன்.

"காட்டில் தேவியைப் பறிகொடுத்த இராமபிரான், எம் அரசன் சுக்ரீவனோடு நட்பு கொண்டான். அவரது துன்பம் தீர அன்னையைத் தேடிக் கண்டுபிடிக்க ஒப்புக் கொள்ள, இராமனும் ராஜ்ஜியத்தை சுக்ரீவனுக்குக் கொடுத்துவிட்டு, வாலியைக் கொன்றான்.
சீதையைத் தேடி நாலாபுறமும் வானர வீரர்கள் சென்றார்கள். தென்புலம் நோக்கி வந்த படையில் அங்கதன் தலைமையில் நானும் வந்தேன்" என்றான் அனுமன்.

"உங்கள் குலத்தலைவன் வாலியைக் கொன்ற இராமனிடம் அடிமையாக வேலை செய்கிறீர்களே! அவமானமாக இல்லையா? உங்கள் புகழ் இன்னும் உங்களோடு இருக்குமா? தன் சொந்த அண்ணன் வாலியை, இராமனை விட்டுக் கொன்று விட்டு, அவனிடம் அன்பு கொண்ட சுக்ரீவன் எனக்கு என்ன தூது விட்டான்? தூது வந்த நீ, போரிட்டு உயிர்களைக் கொன்றது ஏன்? தூதனாக வந்திருக்கிறாய், அதனால் உன்னைக் கொல்ல மாட்டேன், உண்மையைச் சொல்" என்றான் இராவணன்.

இந்த அரக்கன் இராவணனுக்கு உலக நீதிகளை எடுத்துச் சொல்ல இதுவே நல்ல தருணம், சொல்லுவோம் என்று அனுமனும் சொல்லத் தொடங்கினான். "இராவணா! எம் அரசன் சூரியகுமாரன் சுக்ரீவன் சொன்னவற்றை உன்னிடம் சொல்லவே நான் வந்திருக்கிறேன். அவை இந்த சமயத்தில் பொருத்தமாக இருக்குமென்பதால் சொல்லுகிறேன். எம் மன்னன் கூறி அனுப்பியவை அனைத்தும் நீதி நிறைந்தவை; குற்றம் அற்றவை. அவற்றை நன்று என்று ஏற்றுக் கொள்வதானால், இப்போது நான் சொல்கிறேன். கேட்டுக் கொள்!"

"உன் வாழ்வை நீயே கெடுத்துக் கொண்டாய். அரச நீதியை அறவே மறந்து போனாய். தீய செயல்களையே செய்து அவற்றால் அழிவைத் தேடிக் கொண்டாய். என்றாலும் உனக்கு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு தருகிறேன். என் பேச்சைக் கேள்!. கற்பினுக்குத் தீ போன்ற சீதாபிராட்டியை நீ துன்புறுத்தியதாலேயே, உன் தவ வலிமை உன்னை விட்டு நீங்கிவிட்டது. சீதை மீது கொண்ட தகாத ஆசையால் உன் தூய்மை அழிந்து போயிற்று. முறையற்ற பிறன் மனை நயத்தலால், உன் காமச் செருக்கினால், அறத்தை மறந்தாய். அறம் மறந்து, அழியாமல் வாழ்தல் இயலுமோ? உன் அழிவும் நிச்சயம் என்று ஆகிவிட்டது".

"பெண்ணாசையும், பொருளாசையும் அழிவில் கொண்டு விடும் என்பதால், உன் முறையற்ற செயலுக்கு வருந்தி உடனே சீதையைக் கொண்டு போய் இராமனிடம் சேர்த்து விடு என்று சுக்ரீவன் சொல்லி அனுப்பினான்" என்றான் அனுமன்.

இப்படி அனுமன் கூறியதும், வெற்றியைத் தவிர வேறு எதையும் கண்டறியாத இராவணன் கோபத்தில் பெரும் சிரிப்பு சிரித்து, "எனக்கு இவற்றைச் சொல்லி அனுப்பியது ஒரு குன்றில் வாழும் அற்பக் குரங்கு! நன்று! நன்று!" என்றான்.

"சுக்ரீவன் எனும் குரங்கு சொன்னதும், இராமன், இலக்குவன் எனும் மானுடர் பெருமையும் ஒருபுறம் கிடக்கட்டும். தூதனாக வந்த நீ, எம் அரக்கர்கலைக் கொன்றது ஏன்? அதற்கு பதில் சொல்!" என்றான் இராவணன்.

"உன்னை எனக்கு அடையாளம் காட்ட ஒருவரும் இல்லை. அதனால் அசோகவனத்தை அழித்தேன். என் நோக்கம் புரியாமல் என்னைக் கொல்ல வந்த அரக்கர்களைக் கொன்றேன். உன்னிடம் கட்டி இழுத்து வந்தார்கள். சரிதான் உன்னைப் பார்க்கவேண்டும் என்பது தானே என் நோக்கம் அது இப்படி நிறைவேறுமானால் சரிதான் என்று அடக்கத்தோடு கட்டுப்பட்டு வருவது போல வந்தேன்" என்றான் அனுமன். இந்தக் கேலிப் பேச்சு இராவணனுடைய கோபத்தை அதிகப்படுத்தியது.

"இந்தக் குரங்கைக் கொல்லுங்கள்!" என்று ஆணையிட, கொலையாளிகள் வந்து அனுமனைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்போது இராவணனுடைய தம்பி விபீஷணன் எழுந்து, "நில்லுங்கள்!" என்று தடுத்தான்.

அந்த அரக்கர் அவையில் அறம் அறிந்தவன் விபீஷணன். அவன் எழுந்து இராவணனை வணங்கி "அண்ணா! உனது கோபம் நீதி முறைக்கு உகுந்தது அல்ல. தகுதிசால் மன்னா! வேதங்களில் வல்லவனே! முன்பு அறநெறியில் உலகங்களைப் படைத்த பிரமனின் மரபிலே தோன்றினாய்! உன் தவ வலிமையால், இந்திரன் முதலான தேவர்களும் உனக்குப் பணி செய்யும் அளவுக்கு உயர்ந்து விட்டாய். தூதனாக வந்தேன் என்று ஒருவன் சொன்ன பின்பு, அவனைக் கொல்லத் துணிவாயோ?".

"இந்தப் பூவுலகில் பெருமை வாய்ந்த மன்னர்களில் மாதர்களைக் கொன்றவர்கள்கூட இருக்கிறார்கள், ஆனால் தூதர்களைக் கொன்றதாக வரலாறு இல்லை. எதிரியின் நாட்டிற்குச் சென்று, தன் பக்க செய்திகளைக் கூறி, எதிரிக்குக் கோபம் வந்தால் அதைத் தணித்து உண்மையை நிலைநாட்டும் அறிவுத் தொழிலை மேற்கொண்ட தூதர்களைக் கொன்றால், தீராத பழியை ஏற்பாய். ஏனையோர் சிரிப்பார்கள்" என்று விபீஷணன் உரைத்தான்.

உடனே இராவணன் விபீஷணனைப் பார்த்து, "தம்பி! நல்ல நீதியைக் கூறினாய். இந்த வானரம் குற்றம் புரிந்தவனே. ஆனாலும் இவனைக் கொல்வது குற்றமே" என்று சொல்லி விட்டு அனுமனைப் பார்த்து, "நீ உடனே இராம லக்ஷ்மனர்களிடம் சென்று இங்கு நடந்தவற்றைக் கூறி அவர்களை இங்கே அழைத்து வா!" என்றான்.

பிறகு தன் வீரர்களை நோக்கி, "இந்த குரங்கின் வாலை தீயிட்டுக் கொளுத்தி, இலங்கை நகரைச் சுற்றி வரச் செய்து, பிறகு நம் நாட்டு எல்லையைத் தாண்டி விரட்டி விடுங்கள்" என்றான். அரக்கர்களும் ஆர்வத்தோடு எழுந்தார்கள்.

அப்போது இந்திரஜித் எழுந்து, "பிரம்மாஸ்திரம் இவனைப் பிணைத்திருக்கும்போது இவன் மீது தீயிடக்கூடாது. வலுவான கயிற்றைக் கொண்டு இவனை இறுகக் கட்டுங்கள்" என்று கூறி பிரம்மாஸ்திரத்தை விடுவித்தான். அரக்கர்கள் கயிறு கொண்டு அவனைப் பிணித்தார்கள். அனுமன் பிரம்மாஸ்திரத்தை அவமதிக்கக்கூடாது என்று இதுவரை அதற்குக் கட்டுப்பட்டு சும்மா இருந்தான். இப்போது அதை நீக்கிவிட்டார்கள். என் வாலை எரிப்பது என்பது 'இந்த இலங்கைக்கு எரியூட்டுவது போலாகும்' என்று நினைத்துக் கொண்டான்.

அனுமனுடைய உடலைப் பிணித்திருந்த கயிறுகள் மிக எளிதாக அறுத்தெறியக்கூடியவை, எனினும் அவன் உடல் வாடியது போல பாவனை செய்யவும், அரக்கர்கள் அவனை அங்கும் இங்குமாக இழுத்து அலைக்கழித்தார்கள். அவனால் சுலபமாக அவர்களிடமிருந்து விடுபட்டிருக்க முடியும் என்றாலும், கட்டுப்பட்டவன் போல பொறுமையாக இருந்தான். அரக்கர்கள் அனுமனைக் கட்டி இழுத்துக் கொண்டு இராவணன் அரண்மனைக்கு வெளியே கொண்டு வந்தார்கள். அவன் வாலில் பிரி பிரியாகத் துணிகளைச் சுற்றி, வாலை நெய்யிலும், எண்ணெயிலும் தோய்த்து எடுத்தனர். பிறகு துணி சுற்றிய அனுமனது வாலில் தீயைப் பற்ற வைத்துவிட்டு ஆரவாரம் செய்து சிரித்தனர்.

அனுமனைக் கயிற்றால் பிணைத்து இருபுறமும் ஆயிரக் கணக்கானோர் இழுத்துப் பிடித்துக் கொண்டனர். காவலுக்கு பல இலட்சம் அரக்கர்கள் நின்றனர். 'நம் இலங்கை நகரையும், அசோக வனத்தையும் அழித்து, அட்சயகுமாரனை சிதைத்துக் கொன்று, சீதையைச் சென்று பார்த்துவிட்டு மானுடர் வலிமை மிக்கவர் என்ரு நம் மன்னரிடமே நீதி சொல்ல வந்த இந்த குரங்கின் கதியைப் பாருங்கள்" என்று கூக்குரலிட்டு அறிவித்தனர்.

ஆடியும், பாடியும் ஆர்ப்பாட்டம் செய்த அரக்கர்கள் அனுமனை அதட்டினார்கள்; துன்புறுத்தினார்கள். இப்போது என்னவாயிற்று உன் வீரம் என்று கேலி செய்தனர். சிலர் ஓடிப்போய் சீதையிடம் நடந்த விவரங்களைக் கூறினார்கள். சீதாபிராட்டி துடித்துப் போனாள். உடல் வியர்த்தாள்; விம்மினாள்; நிலத்தில் வீழ்ந்தாள்; பெருமூச்சு விட்டாள்.

"அக்னி தேவனே! தாய் போல் கருணை உள்ளவனே! வாயுவின் நண்பனே! நாய்க்குணமுள்ள அரக்கர்கள் அனுமனுக்கு இழைக்கும் தீங்கினைப் பார்! நான் ஒரு கற்புடைப் பெண் என்பது உண்மையானால், அக்னியே! நீ அனுமனைச் சுடாதே! என்றாள் சீதை.

சீதை படும் துயரத்தைப் பார்த்து அக்னி தேவன் அச்சம் கொண்டான். அக்னியின் தீ ஜ்வாலை அனுமனுக்குச் சுடவில்லை. ஜில்லென்று இருந்தது. இது ஜனககுமாரி ஜானகியின் செயல் என்பதை உணர்ந்து கொண்டான். மகிழ்ச்சியோடு அன்னையை மனத்தால் வணங்கினான். முன்னர் இரவு நேரத்தில் இலங்கை நகரம் முழுவதும் சீதையைத் தேடியதால், அந்த நகரத்திலுள்ள இடங்களை இவன் நன்கு அறிந்திருந்தான். போதாதற்கு அறிவற்ற அரக்கர்கள் அவனைக் கயிற்றால் கட்டி ஊர் முழுவதும் சுற்றியதால், தெரியாத இடங்களையும் தெரிந்து கொண்டான். அப்படி அவர்கள் அவனைக் கட்டி இழுத்துக் கொண்டு ஊர் எல்லையை அடையவும், இதுவே தக்க தருணம் என்று நினைத்து, தன்னை இழுத்துச் சென்ற அரக்கர் கூட்டம் கயிற்றில் இரு புறமும் தொங்கும்படியாக விட்டு அப்படியே வான் வெளியில் எழுந்தான்.

வானத்தில் பறக்கும் அனுமன் உடலிலிருந்தும், கயிற்றிலிருந்தும் அரக்கர்கள் தொங்கமுடியாமல் கீழே விழுந்தனர். விழுந்த அதிர்ச்சியில் இறந்தும் போனார்கள். உடல் முழுதும் கயிறு பிணைத்திருக்க, அறுந்த கயிறுகள் தொங்க அனுமன் வானத்தில் போன காட்சியானது, பாம்புகளை இழுத்துக் கொண்டு வானத்தில் பறக்கும் கருடனைப் போல இருந்தது. இந்த பாதக அரக்கர்களின் நகரம் தீக்கு இரையாகட்டும் என்று எண்ணி, இராமனை வாழ்த்திக் கொண்டே, எரியும் தன் வாலை ஆங்காங்கே தொட்டு எரியவிட்டான். வீடுகள், மாளிகைகள், தெருக்கள் என இலங்கை நகரம் முழுவதும் புகைவிட்டுக்கொண்டு எரியத் தொடங்கியது.

அனுமன் இட்ட தீ இலங்கை நகரத்தில் எல்ல இடங்களிலும் ஜெகஜோதியாக பற்றி எரிந்து கொண்டிருந்தது. நகரமே தீயின் ஒளியில் பிரகாசமாகவும், வானமண்டலம் முழுவதும் புகையால் இருண்டும் காணப்பட்டது. சோலைகள் எரிந்தன; குதிரை லாயங்கள் எரிந்தன; பச்சைக் கிளிகள் தாம் இருந்த கூடுகளுடன் எரிந்தன; ஊழிக்காலம் வந்துவிட்டதோ என்று எண்ணும்படியாக தீயின் கங்குகள் எங்கும் சூழ்ந்து கொண்டன.

நெருப்புக்கு அஞ்சி அரக்கர்கள் கடலில் குதித்தனர். ஆயுத சாலையில் படைக் கலன்கள் அழிந்தன. யானை கொட்டில்கள் தீப்பற்றிட, யானைகள் பிளிறிக் கொண்டு நாலா திசைகளிலும் தறிகெட்டு ஓடின. இறகுகள் தீப்பற்றி பறவைகள் கடலில் விழுந்து இறந்தன. இராவணன் அரண்மனையை தீ எரித்துச் சாம்பலாக்கத் தொடங்கியது. அங்கிருந்த தேவமாதரும், கந்தர்வ மகளிரும் கலங்கி நிலை குலைந்து திக்கு திசை புரியாமல் ஓடினர். எங்கும் அரக்கர்தம் மயிர் எரிந்த தீய்ந்த வாடை பரவியது. இலங்கை நகரம் முழுவதும் தீயினால் அழிந்தது. இவற்றையெல்லாம் கண்ட இராவணன் "இலங்கை தீப்பற்றி எரியும் காரணம் என்ன?" என்று கேட்டான்.

உயிர் பிழைத்து ஓடிவந்த அரக்கர்கள் சொன்னார்கள், "அரசே! கடலைவிட பெரிய வாலைக் கொண்ட அந்த குரங்கு வைத்த தீ இலங்கையை சுட்டது" என்று.

ஓர் அற்பக் குரங்கு இட்ட நெருப்பால் இலங்கை எரிந்து சாம்பலாயிற்றா? நன்று! நன்று! இதைக் கேட்டால் தேவர்கள் பரிகசித்துச் சிரிக்க மாட்டார்களா? நன்று நம் வீரம்! என்று கோபம் கொண்டு சிரித்தான்.

"கொண்டு வா அந்த அக்னி தேவனை. அவன் தானே இலங்கையை எரித்தவன்".

"இப்படி அழிவு செய்த குரங்கை, அது தப்பிச் செல்வதற்கு முன்பாகப் பிடித்து வாருங்கள்" என்றான்.

அரக்கர்கள், "அப்படியே செய்கிறோம்" என்று ஓடினார்கள், ஓடி அனுமனைச் சூழ்ந்து கொண்டார்கள். "இவனைப் பிடியுங்கள், இவனை அடியுங்கள்" என்று கூச்சலிட்டனர்.

இவ்வளவையும் கற்றுணர்ந்த அறிஞனான அனுமன் கவனித்தான். பற்றி எரியும் தன் வாலால் அவர்களை உள்லடக்கி வளைத்துக் கொண்டான். கைக்கெட்டிய ஓர் பெரிய மரத்தைப் பிடுங்கி அதால் அவர்களை நையப் புடைத்தான். அரக்கர்கள் மடிந்தார்கள். சிலர் ஓடினார்கள், சிலர் ஒளிந்து கொண்டார்கள். அனுமன் பற்றி எரியும் தன் வாலைக் கொண்டு போய் கடலில் தோய்த்து அணைத்தான். உடனே கடல் நீர் காய்ச்சிய நீர் போல கொதிப்படைய, கடலில் வீழ்ந்த அரக்கர்களும் மாண்டார்கள்.

அப்போது அனுமன் இருந்த இடத்தைக் கடந்து சென்ற வித்யாதரர்கள், 'இலங்கையில் அனுமன் இட்ட தீ, சீதை இருந்த பகுதியை மட்டும் எரிக்கவில்லை' என்று சொல்லிக்கொண்டே சென்றார்கள். இதைக் கேட்ட அனுமன் மகிழ்ந்து 'நான் தீவினையிலிருந்து தப்பினேன்" என்று எண்ணிக்கொண்டு மேலெழுந்து சென்று அசோகவனத்தில் குதித்தான்.

தன் முன் வந்து நின்ற அனுமனை சீதை பார்த்தாள். அவள் உடல் முழுவதும் குளிர்ந்தது. அவளிடம் அனுமன் "அன்னையே நடந்தது அனைத்தும் தாங்கள் அறிவீர்கள். நான் சொல்ல என்ன இருக்கிறது. தங்களை வணங்குகிறேன்" என்று சீதையை வணங்கிவிட்டு அவ்விடம் விட்டுப் புறப்பட்டான்.

போதும்! போதும்! இந்த இலங்கை விஜயம். விரைவில் இந்த இடத்தைவிட்டு நீங்குவோம் என்று அனுமன் ஓர் மலைச் சிகரத்தைச் சென்றடைந்தான். அங்கு அவன் திரிவிக்கிரமனைப் போல நெடிது வளர்ந்தான். இராமன் திருவடிகளைச் சிந்தித்தபடியே வான் வெளியில் பறந்து செல்லலானான். துதிக்கை உடைய ஒரு பெரிய யானை பறந்து செல்வது போல அனுமன் பறந்து சென்றான். முன்பு அனுமனை வழி மறித்து தன்மீது அமர்ந்து ஓய்வெடுத்துச் செல்லும்படி வேண்டிக்கொண்ட மைந்நாக மலையின் மீது சிறிது நேரம் அமர்ந்து, இலங்கையில் நடந்தவற்றை அதற்குக் கூறினான். அங்கிருந்து விரைந்து புறப்பட்டு தனது வரவை எதிர்பார்த்து நிற்கும் அங்கதன் உள்ளிட்ட வானர வீரர்கள் காத்திருக்கும் மகேந்திர மலையைச் சென்றடைந்தான்.

இரை கொண்டு வரச் சென்ற தாய்ப் பறவை பாய்ந்து வந்து காட்டிற்குள் புகும்போது, கூட்டிலே இருக்கும் குஞ்சுகள் தாய்ப் பறவையின் வரவு கண்டு மகிழ்ந்து ஆரவாரம் செய்வது போல அங்கதன் முதலான வானர வீரர்கள் மகிழ்ந்து ஆரவாரம் செய்தார்கள். சிலர் உணர்ச்சிப் பெருக்கால் அனுமனைக் கண்டதும் அழுதனர். சிலர் ஆரவாரம் செய்தனர். சிலர் அவனை வனங்கினர். சிலர் அவனைத் தழுவிக் கொண்டனர். சிலர் அவனைத் தலைமுடிமேல் தூக்கிக் கொண்டு ஆடினர்.

சில வானரர், "அனுமானே! உன் முகப் பொலிவு, நீ சீதையைக் கண்டுவிட்ட செய்தியைச் சொல்லுகிறது. உனக்காக காய்களும், கனிகளும் தயாராகச் சேகரித்து வைத்திருக்கிறோம். உண்பாயாக! உண்டு நன்கு இளைப்பாறு!" என்றனர். அனுமனின் உடல் முழுவதும் போரில் பட்ட புண்கள். அதைக் கண்டு


வானரர்கள் வருந்தி பெருமூச்சு விட்டனர். அனுமன் முடிவில் வாலியின் புத்திரன் அங்கதனை வணங்கினான். பிறகு கரடிகளின் அரசனான ஜாம்பவான் பாதங்களைத் தொட்டு வணங்கி எழுந்தான். பிறகு மற்றவர்களை உரிய முறையில் வணங்கி எழுந்தான். பிறகு ஓரிடத்தில் சாவகாசமாக அமர்ந்து "இங்குள்ள அனைவருக்கும், உலக நாயகன் இராமனின் தேவி சீதாபிராட்டி நன்மை தரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்" என்றான்.

உடனே அனைவரும் எழுந்து சின்று, கைகளைக் குவித்து உவகை மேலிட சீதையைப் போற்றினார்கள். அனைவரும் ஒருமுகமாக அனுமனிடம் "பெருமையுடைய அனுமான்! நீ இங்கிருந்து சென்றது முதல் நடந்தவற்றை எங்களுக்குச் சொல்" என்றனர், அனுமனும் சொல்லத் தொடங்கினான்.

அனுமன் சீதையின் கற்புத் திறத்தையும் தவத்தின் மேன்மையையும், அவளிடமிருந்து அடையாளமாக சூளாமணியைப் பெற்றுக் கொண்டதையும் சொன்னான். தற்பெருமை என்பது அறவே இல்லாத அனுமன் இலங்கையில் அரக்கரோடு தான் போர் புரிந்ததையும், தன் சாகசங்களையும் தன்னடக்கத்தோடு சொல்லாமல் விட்டான்.

"நீ சொல்லாவிட்டால் என்ன. நீ அங்கு போரிட்டதை உன் உடலில் உள்ள புண்கலே சொல்கின்றன. அந்தப் போரில் நீ வெற்றி பெற்றய். அதனால்தான் நீ திரும்பி வந்தாய். நகரை தீயிட்டு கொளுத்தி விட்டாய். உன் மேல் வீசும் புகை நெடியே அதைச் சொல்லுகிறது. சீதை உன்னுடன் வராததே, பகைவனின் சிறப்பைத் தெரிவிக்கிறது. நீ சொல்லாமலே இவற்றை நாங்கள் உன்னைப் பார்த்து புரிந்து கொண்டோம்" என்றனர் வானரர்கள்.

"இனி தாமதிக்கக்கூடாது. உடனே சென்று, இராமனிடம் தேவியைக் கண்ட செய்தியைச் சொல்ல வேண்டும்" என்று அனைவரும் எழுந்தனர்.

"நாங்கள் உயிரை விட்டிருக்க வேண்டியவர்கள். நீ சீதையைக் கண்டதால் உயிர் பிழைத்தோம். காலம் கடந்து விட்டது.நீ முதலில் சென்று இராமனிடம் செய்தியைச் சொல்" என்று அனைவரும் அனுமனை விரைந்து செல்லும்படி அனுப்பி வைத்தனர்.

"அதுதான் சரி" என்று ஒப்புக்கொண்டு அனுமன் முன்னதாக விரைந்து சென்றான். இதுவரை அனுமன் சென்றது, செய்தது, திரும்ப வந்தது பற்றியெல்லாம் பார்த்தோமல்லவா? இனி, சற்று, இராமன் இருந்த நிலைமையைப் பார்ப்போம்.

சிவந்த கண்களையுடைய இராமன், சீதையின் பிரிவால் கண்ணீர் சிந்திய வண்ணம் இருந்தான். சுக்ரீவன் ஆறுதல் சொல்ல தேற்றிக் கொண்டு இருந்தான். வடக்கு, கிழக்கு, மேற்கு திசைகளுக்கு சீதையைத் தேடிச் சென்ற வீரர்கள், வழியில் தடை எதுவும் இல்லாத காரணத்தால், விரைவில் திரும்ப வந்து சீதையக் காணவில்லை என்று கூறிவிட்டனர். ஆனாலும் தென் திசைக்குச் சென்ற அனுமன் நிச்சயம் நல்ல செய்தியோடு வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான்.

இராமன் சுக்ரீவனிடம் "நாம் கொண்ட முயற்சியில் வெல்வோமா? தீர்க்க முடியாத பழி நம்மை வந்து அடைந்து விடுமோ?" என்றெல்லாம் அஞ்சினான். நாம் விதித்திருந்த கெடு முடிந்து விட்டது. தென் திசைக்குச் சென்றவர்கள் திரும்பவில்லை, இறந்து விட்டார்களோ? அல்லது வேறு என்ன ஆயிற்றோ? சீதை இறந்து போயிருப்பாள், அவள் இறந்த செய்தியை வந்து எப்படிச் சொல்வது என்று இவர்களும் இறந்து போயிருப்பார்கள்; அல்லது இன்னமும் சீதையைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்களோ? இராவணன் முதலான அரக்கர்கைளைக் கண்டு கோபம் கொண்டு போரிட்டு அவர்களது மாயையினால் இறந்து போனார்களோ? அல்லது தப்ப முடியாமல் வெஞ்சிறையில் அடைக்கப் பட்டிருப்பார்களோ? நமக்கு விதித்த கெடு முடிந்து விட்டது, காரியம் ஆகவில்லை என்ற விரக்தியில் தவத்தினை மேற்கொண்டு போய் விட்டார்களோ? வேறு என்னதான் நேர்ந்திருக்கும் அவர்களுக்கு, சொல்! சுக்ரீவா சொல்!" என்றான் இராமன்.

இவ்வாறு இராமன் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தென் திசையில் வான வெளியில் அனுமன் தோன்றினான். இருக்கையிலிருந்து எழுந்து மனமெல்லாம் அன்பு நிறைந்திருக்க அருட் கரங்களைக் கொண்ட இராமன் அனுமனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். விரைந்து வந்த அனுமன் இராமன் இருக்குமிடத்தை அடைந்ததும், இராமனின் திருவடிகளை வணங்கவில்லை; மாறாகத் தான் வந்த சீதை இருக்கும் தென் திசை நோக்கி இரு கரங்களைக் கூப்பி நிலத்தில் வீழ்ந்து வணங்கினான். இவ்வளவும் சில நொடிகளில் நடந்து முடிந்து விட்டன எதுவும் பேசாமலே.

இந்தக் காட்சியின் குறிப்புகள் மூலம் இராமபிரான் வைதேகி நன்றாக இருக்கிறாள்; கற்பு நிலையும் களங்கமற்று உள்லது; இந்த அனுமன் அவளையும், அவள் நிலைமையையும் கண்டுணர்ந்து வந்துள்ளான் என்று ஊகித்துத் தெரிந்து கொண்டான். இராமனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். அதுவரை வாய்திறவாத அனுமன் வாய் திறந்து இராமனிடம் பேசுகிறான். அவன் சொன்ன முதல் செய்தி:

"கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தென் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்
அண்டர் நாயக இனி துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும், என்று அனுமன் பன்னுவான்".

"கண்டேன் சீதையை!" அண்டர் நாயகா! இராமா! கவலையை விடு!" என்று அனுமன் சொன்னதும், இராமனது முகம் தெளிவடைந்தது.

"ஐயனே! உன் பெருமைக்குரிய மனைவியாகவும், தசரத சக்கரவர்த்தியின் மருமகள் என்ற பெருமைக்கும், மிதிலையின் ஜனகனின் மகள் என்ற தகுதிக்கும் ஏற்றவாறு தெய்வமெனத் திகழ்கிறாள் சீதாபிராட்டி" என்றான் அனுமன்.

"தங்கத்துக்கு நிகராக வேறு எது இருக்க முடியும், தங்கத்தைத் தவிர? பொறுமையின் சிகரமாக உள்ளார் சீதாபிராட்டி. என் அன்னை சீதை உன் குலத்துக்குப் பெருமை சேர்த்தாள். தன்னை வருத்திய இராவணன் குலத்தை எமனுக்குக் கொடுத்தாள். அதன் மூலம் தேவர் குலம் வாழச் செய்தாள். அன்னையின் சிந்தையில் எப்போதும் நீ இருக்கிறாய். அவள் வாய் உதிர்க்கும் சொற்களிலும் நீயே இருக்கிறாய். ஐயனே! தவத்தின் பயனாய் விளங்கும் அன்னை கடலுக்கு நடுவே விளங்கும் இலங்கை என்னும் விரிந்த நகரத்தின் ஓர் புறத்தஏ, ஓர் பிரகாசமான கற்பகச் சோலையில், இலக்குவன் வடித்துத் தந்த பர்ணசாலையில் வீற்றிருந்தாள். முன்பு பிரமதேவன் இட்ட சாபம் ஒன்று இராவணனுக்கு உண்டு. உன்னை விரும்பாத ஒரு பெண்ணை நீ வலிந்து தீண்டுவாயானால், உன் தலை வெடித்துச் சிதறி நீ மாண்டு போவாய் என்று. அந்த சாபத்துக்கு அஞ்சி அவன் அன்னையைத் தீண்டாமல் தரையோடு பர்ணசாலையைத் தூக்கிச் சென்றிருக்கிறான்."

"இராவணன் அன்னையைத் தீண்டவில்லை என்பதற்குச் சான்று, பிரமன் படைத்த அண்ட கோளம் சிதறவில்லை; ஆதிசேடனின் படம் கிழியவில்லை; கடல்கள் கரையினைத் தாண்டவில்லை; உலகம் கடலுள் மூழ்கவில்லை; சந்திர சூரியர் கீழே விழவில்லை; வேதங்கள் கூறும் நெறிகள் அழியவில்லை; எவற்றால் நீ உணர்ந்து கொள்வாய்".

"நான் இலங்கை நகரம் முழுவதும் தேடினேன். மாட மாளிகைகளில் தேடினேன். இராவனன் அரண்மனையில் தேடினேன். குளிருந்த அசோகவனத்துக்குள் சென்றேன். அங்கே தேவமகள் சீதையைக் கண்ணீர் கடலில் மிதக்கக் கண்டேன். பேய்களின் கூட்டம் போல அரக்கியர் சூழ்ந்திருக்க, இரக்கம் என்னும் பண்பு, ஓர் பெண்ணாக வடிவெடுத்து கொடுமை எனும் சிறைக்குள் இருக்கும் தன்மை கண்டேன். தகுந்த நேரம் பார்த்து சீதையை வனங்க எண்ணியிருந்தேன். அப்போது இராவணன் அங்கே வந்தான். சீதையிடம் இறைஞ்சி நின்றான். கடுஞ்சொற்களை வீசிய சீதாபிராட்டியைக் கொல்ல முயன்றான். பிறகு சீதைக்கு புத்தி சொல்லுங்கள் என்று அரக்கியரிடம் சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றான்."

"சீதை அப்போது தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார்கள். ஓர் கொடியை எடுத்து மரத்தில் கட்டித் தன் கழுத்தில் மாட்டிக் கொண்டார்கள். அந்த நேரம் நான் போய்த் தடுத்து, திருவடிகளை வணங்கி, உன் திருப்பெயரைச் சொன்னேன். அப்படி நான் உன் பெயரைச் சொன்னதும் அருவி போல கண்ணீர் சிந்தினார். என்பால் நீ அருளுடையவன் நான் இறக்கப்போகும் நேரத்தில் இராமனின் பெயரைச் சொல்லி நீ என்னை மரணத்திலிருந்து மீட்டாய் என்று கூறினார்".

"என் தந்தை போன்றவனே! நான் சொன்ன அடையாளங்களைக் கேட்டுக் கொண்டார். நான் வஞ்சக எண்ணம் உள்லவன் அல்ல என்பதை புரிந்து கொண்டார். உன் கணையாழியைக் கொடுத்தேன். அதனை உற்றுப் பார்த்து கண்ணீர் வடித்தார். அது உயிர் காத்த சஞ்ஜீவினி அன்றோ? ஒரு கணப் பொழுதில் இரண்டு அதிசயங்களைக் கண்டேன். நான் கொடுத்த உனது கணையாழியைத் தன் மார்பு மீது வைத்ததும் உன்னைப் பிரிந்ததால் உண்டான வெப்பத்தால் கணையாழி உருகியது. உன் மோதிரத்தைத் தீண்டியதால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் உடல் குளிர்ந்து உருகிய கணையாழி மீண்டும் இறுகி விட்டது."

"கணையாழியைக் கண்ணீரால் அபிஷேகம் செய்தார். வாய் திறந்து பேசவில்லை. இளைத்த உடல் பூரித்தார். வியப்புற்றார். ஆனாலும் இமையாமல் கணையாழியைப் பார்த்த வண்ணம் இருந்தார். மன்னவா! அடியேன் சீதைக்கு உன்னை அவர் பிரிந்த பிறகு நடந்த செய்தியனைத்தையும் சொன்னேன். நீ இருக்குமிடம் தெரியாததால் கால தாமதம் ஆகிவிட்டது என்றும் கூறினேன். தான் இன்னும் ஒரு மாத காலம்தான் உயிரோடு இருப்பேன், அதன் பின் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றார். ஐயனே! அன்னை தன் உடையில் முடிந்து வைத்திருந்த தன் சூளாமணியை என்னிடம் அடையாளமாகக் கொடுத்தார். இதோ, சூடாமணியைக் காண்பாயாக!" என்று அனுமன் கொடுத்தான்.

தன் திருமணத்தின் போது சீதையின் கையைப் பற்றிய அதே உணர்வோடு அந்தக் கணையாழியைத் தன் கைகளால் வாங்கினான் இராமபிரான். இராமனது மயிர்க்கால்கள் சிலிர்த்தன. கண்ணீர் பெருக்கெடுத்தது. மார்பும், தோள்களும் பூரித்து விம்மின. வியர்வைத் துளிகள் துளிர்த்தன; உதடுகள் மடிந்தன; உயிர் போவதும் வருவதுமாக இருந்தது. உடல் பூரிப்பு அடைந்தது. இது என்ன வியப்பு!

"இனியும் கால தாமதம் வேண்டாம். சேனைகள் போரிடப் புறப்படட்டும்" என்று சுக்ரீவன் ஆணையிட்டான். எழுபது வெள்ளம் சேனை புறப்பட்டது. கடல் போல எழுந்த அந்த வானரப் படையினர் அனுமன் சொன்ன வரலாற்றைக் கேட்டுக் கொண்டே உற்சாகமாக வழிநடைப் பயணம் செய்தார்கள். இராம லக்ஷ்மண சுக்ரீவாதியர் முன் செல்ல வானரப் படை பதினோரு நாட்கள் பயணம் செய்து பன்னிரெண்டாம் நாள் தெற்குக் கடற்கரையைச் சென்றடைந்தனர்.

(அனுமனின் புகழ் பாடும் சுந்தர காண்டம் நிறைவு பெற்றது)

No comments:

Post a Comment

Please give your comments here