Monday, May 17, 2010

i) continued ...

இதனைக் கண்டு உலகில் ஏழு ஏழாய் இருக்கும் பொருள்கள் அனைத்தும் அஞ்சினவாம். ஏழு கடல்கள்; ஏழு உலகம்; ஏழு குன்றங்கள், ரிஷிகள் எழுவர், புரவிகள் ஏழு, மங்கையர் எழுவர்; இப்படி ஏழு ஏழாய் இருப்பவை அனைத்தும் அஞ்சின. அவை முறையே:--

ஏழு கடல்கள்: உவர் நீர், கருப்பஞ்சாறு, மது; நெய், தயிர், பால், நன்னீர் கடல்கள்.
ஏழு உலகம்: பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், ஜநலோகம், மஹாலோகம், தபோலோகம், சத்யலோகம்.
ஏழு குன்றம்: கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஹேமகூடம், கந்தமாதனம்.
ஏழு ரிஷிகள்: அத்திரி, பிருகு, குத்ஸவர், வசிஷ்டர், கெளதமர், காசியபர், ஆங்கீரஸர்.
ஏழு புரவிகள்: சூரியன் இரதத்தில் பூட்டப்பட்ட வேத சந்தங்களாகக் கருதப் படுபவை. அவை:
காயத்ரீ, உஷ்ணிக், அநுஷ்டுப், பிருஹதீ, அங்க்தீ, திரிஷ்டுப், ஜகதி.
ஏழு மங்கைகள்: (சப்த கன்னிகைகள்) பிராஹ்மி, மாஹேஸ்வரி, கெளமாரி, நாராயணி, வாராகி, இந்திராணி, சாமுண்டி.

இராமபிரானது ஒரே அம்பு ஏழு மராமரங்களையும் துளைத்துச் சென்ற காட்சியைக் கண்ட சுக்ரீவன், அவனது பாதங்களில் வீழ்ந்து வணங்கிக் கூறுகிறான்: "வையமும் நீயே! வானும் நீயே! மற்றும் நீயே! பஞ்ச பூதங்களும் நீயே! அனைத்தும் நீயே! நான் நற்கதி அடைய என்னை நாடி வந்து திருவருள் புரிந்தனை என்றான். வாலியின் கொடுமைகளுக்கெல்லாம் ஆட்பட்டு வாடிக் கொண்டிருந்த வானரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியில் ஆடின, பாடின, அங்கும் இங்கும் ஓடின.

ருசியமுக பர்வதத்தில் முன்பு வாலியோடு போரிட்டு மடிந்த மாயாவியின் தம்பியும், எருமை வடிவத்தினான துந்துபி என்பவனின் எலும்புக் கூடு கிடந்தது. அதுவே ஒரு பெரிய மலைபோலக் காணப்பட்டது. அதனைக் கண்ட இராமன், இது என்ன என்று கேட்டான். அதற்கு சுக்ரீவன் சொல்கிறான்: "துந்துபி என்பவன் மலை போன்ற கருத்த உடலும் இரண்டு கொம்புகளும் உள்ள அரக்கன். அவன் திருமாலுடன் போரிட வேண்டுமென்று அவரைத் தேடிக்கொண்டிருந்தான். அப்போது திருமால் அவன் முன் தோன்றி என்னை ஏன் தேடுகிறாய் என்று கேட்டார். அதற்கு அந்த துந்துபி நீ என்னோடு போர் செய்யவேண்டுமென்பதற்காக உன்னைத் தேடிக்கொண்டிருந்தேன், வா! வந்து என்னுடன் போரிடு என்றான். அதற்குத் திருமால் உன்னோடு போர் புரியத் தக்கவன் அந்த சிவபெருமாந்தான், நீ போய் அவரோடு போரிடு என்றார்.

உடனே அந்த அரக்கன் சிவபெருமான் இருக்கும் கைலை மலையை அடைந்து, அந்த மலையைப் பெயர்க்கத் தொடங்கினான். இப்படி ஓர் அரக்கன் வந்து கைலை மலையை பெயர்ப்பதைக் கண்ட சிவபெருமான், அவனிடம் உனக்கு என்ன வேண்டும், ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்டார். நீ என்னுடன் போர் செய்ய வேண்டும், வா! இப்போதே போரிடலாம் என்றான். அதற்கு சிவன், அவனைத் தேவர்களிடம் போய் அவர்களோடு போரிடு என்கிறார். துந்துபியும் தேவர்களிடம் போகிறான். அவர்கள் உன்னோடு போரிடக் கூடியவன் அந்த வாலிதான், போய் அவனோடு போரிடு என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்கள்.

அதன்படியே துந்துபி கிஷ்கிந்தைக்கு வந்து வாலியைப் போருக்கு அழைக்கிறான். உடனே வாலியும் அவனோடு பொருத வந்து சேர்கிறான். இருவருக்குமிடையே பெரும் போர் நடக்கிறது. உலகமே அஞ்சத்தக்க பெரும் போர் அது. இறுதியில் துந்துபியின் கொம்புகளை முறித்து அவனைத் தூக்கித் தலைக்குமேல் பல முறை சுழற்றி வீசி எறிய, அண்டசராசரங்களிலும் அவன் உடல் சுழன்று இந்த மலையில் வந்து விழுந்தது. அவனுடைய எலும்புக்கூடுதான் இது என்றான் சுக்ரீவன்.

துந்துபியின் வரலாற்றைக் கேட்ட இராமன் இலக்குவனை நோக்கி, "மைந்த! நீ இந்த துந்துபியின் உடலைத் தூக்கி எறி" என்று கூறவும், அவனும் தன் கால் விரலால் அவ்வுடலை உந்தி எறிய அவ்வுடல் மீண்டும் ஏழு உலகங்களிலும் சுழன்று வந்து கீழே விழுந்தது. வானரர்கள் வியந்து போய் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார்கள். பின்னர் அனைவரும் ஓர் சோலையில் போய் தங்கினர். அப்போது சுக்ரீவன் இராமனிடம், "ஐயனே! நான் தங்களிடம் மற்றொரு செய்தியையும் கூற வேண்டும்" என்றான்.

"சில தினங்களுக்கு முன்பு நாங்கள் இந்த மலையில் கூடியிருந்த நேரத்தில், அப்போது வான வழியாக ஒருவன் தன் ஊர்தியில் ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு சென்றான். அவள் அழுது அரற்றிக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். இப்போது நினைத்துப் பார்க்கும்போதுதான் தெரிகிறது, அந்தப் பெண் தங்களது தேவியாகத்தான் இருக்க வேண்டுமென்று" என்று கூறினான் சுக்ரீவன்.

அவன் மேலும் சொல்கிறான், "இராவணன் அந்தப் பெண்ணோடு இந்த மலையைக் கடக்கும் போது, அந்தப் பெண், தன் அணிகலன்களை ஓர் துணியில் சுற்றி நாங்கள் இருந்த இடம் நோக்கி வீசி எறிந்தாள். அதனை எடுத்து வைத்திருக்கிறோம். தாங்கள் அவைகளைப் பார்த்து, அவை தேவியினுடையதுதானா என்று பார்த்துச் சொல்லுங்கள்" என்றான்.

இராமனும் அவற்றை நன்றாகப் பார்த்தான். அவற்றைக் கண்டதும் மனம் துன்பமுற்று வருந்தினான், கதறினான், நெருப்பிலிட்ட மெழுகாய் உருகினான். உணர்ச்சிக் கொந்தளிப்பால் சீதையின் நினைவு வாட்ட மிகவும் துன்புற்று நின்றான். கண்களில் கண்ணீர் பெருகி உடலை நனைத்தன. இராமன் நினைவிழந்து மூர்ச்சித்து விழுந்தான். கீழே விழுந்து விடாமல் இலக்குவன் அவனைத் தாங்கிக் கொண்டான்.

பிறகு நினைவு திரும்பியதும் பலப்பல சொல்லி இராமன் புலம்பினான். தான் இந்த அணிகலன்களை இராமனிடம் காட்டியதால் அனொறோ இவனுக்கு இப்படி நேர்ந்தது என்று சுக்ரீவன் வருந்தியபடி இராமனிடம், "நூல்வலாய்! தூயரமடைய வேண்டாம். உலகில் எந்த மூலையில் கொண்டு போய் சிறை வைத்திருந்தாலும், அன்னையைக் கண்டு மீட்டுக்கொண்டு வந்து தங்களிடம் சேர்ப்பேன். மனம் தளரவேண்டாம்" என்றான் சுக்ரீவன்.

"தெய்வத் திருமகளனைய கற்பினாள் சீதாப்பிராட்டி அஞ்சும்படியாக, கொடியவன் இராவணன் செய்த கொடுமைக்காக, அவனது புயங்கள் பத்தும், இருபது தோள்களும், ஈரைந்து தலைகளும் மட்டுமல்ல, உன் ஒரு அம்புக்கு அந்த ஈரேழு உலகங்களும் ஈடு கொடுக்க முடியுமா என்ன? தாங்கள் இங்கே தங்கி இருங்கள். பதினான்கு உலகங்களிலும் தேவி எங்கே இருந்தாலும் நான் தேடிக் கண்டுபிடித்துத் தங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன். அனுமன் முதலான நாங்கள் அனைவருமே, தாங்கள் ஏவிய பணியைச் செய்து முடிக்கக் காத்திருக்கிறோம். பெருவலியமைந்த இந்த இலக்குவரும் உமக்குத் துணையிருக்கத் தாங்கள் வருந்துவது ஏன்? பெருமைக்கு உரியவர்கள் தாங்கள் செய்து முடிக்க வேண்டியவற்றை உறுதியுடன் செய்து முடிப்பார்களேயன்றி வீணில் வருந்தி இருப்பார்களோ?" என்றான் சுக்ரீவன்.

"நீ அந்த மும்மூர்த்திகளுக்கும் இணையானவன். இங்கு எனக்கு ஏற்பட்ட இன்னலை நீக்குவதைப் பிறகுகூட கவனித்துக் கொள்ளலாம். இப்போதே இராவணனால் துன்புற்று வருந்தும் சீதாபிராட்டியை மீட்டு வருவோம். அதுவே நாம் செய்ய வேண்டிய முதல் கடமையாகும்" என்றான்.

இராமன் சற்றுத் தெளிந்து அன்போடு சுக்ரீவனை நோக்கினான். இராமபிரானின் குறையைத் தீர்ப்பதையே பெரிதாகக் கருதியதைப் போன்றே இராமனும் சுக்ரீவனின் குறையை நிவர்த்திப்பதே தன் முதல் கடமை என்றான். இவ்வாறு இராகவன் சொன்னதும் அனுமன் இராமனை வணங்கிக் கூறுகிறான், "குன்றுநிகர் தோளினாய்! தங்களிடம் நான் தெரிவித்துக் கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உளது. எதிரியான வாலியைக் கொன்று சுக்ரீவனை கிஷ்கிந்தைக்கு அரசனாக்கி, அதன் பிறகு நாலா திசைகளிலிருந்தும் வானர வீரர்களை வரவழைத்து ஒன்றுதிரட்டி, அதன் பிறகு அரக்கர்களுடன் போரிட அவர்கள் இருப்பிடத்தைக் கண்டு பிடித்தல் எளிதாக இருக்கும். அப்படி நாம் எழுபது வெள்ளம் வானரப் படையைச் சேர்ந்துவிட்டால், அந்த அரக்கர்கள் அண்டத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைக் கண்டுபிடித்து அழித்துவிட முடியும்" என்றான்.

இராமனும், "ஆம்! அதுவே நன்று. அப்படியே செய்வோம்" என்று சொல்லி "நாம் அனைவரும் இப்போது வாலி இருக்குமிடம் செல்வோம்" என்று அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.

சுக்ரீவனும், அவனது வானரப் படைகளும் இராம லக்ஷ்மணர்களோடு கிஷ்கிந்தைக்கு நடந்து செல்லத் தொடங்கினர். இவர்கள் சென்ற காட்சி ஆண் யாளியும், வீரம் செறிந்த புலியும், விரைந்து செல்லும் யானையும் இரண்டு ஆண் சிங்கங்களோடு செல்வது போல இருந்ததாக கம்பர்பெருமான் வர்ணிக்கிறார்.

இராமன் சுக்ரீவனிடம், "நீ போய் வாலியை யுத்தத்துக்கு அழைத்து, அவன் வந்தபின் அவனோடு போர் செய். அப்படி நீ போரிடும்போது நான் ஓர் மறைவிடத்தில் நின்று அவன் மீது அம்பு செலுத்திக் கொல்வேன்" என்றான்.

எப்படியாவது வாலியிடமிருந்து தனக்கு விடுதலை கிடைத்தால் போதும் என்று நினைத்திருந்த சுக்ரீவன், இதற்கு சம்மதித்தான். மகிழ்ச்சியோடு பெருத்த ஓசை எழுப்பினான். பிறகு சுக்ரீவன் வாலியின் அரண்மனையருகில் சென்று அவனை கூவி அழைக்கிறான். "ஏ! வாலி! என்னுடன் போர் செய்ய வா! நான் உன்னைக் கொல்லுவேன்!" என்று இடிபோன்ற குரலில் முழக்கமிட்டுத் தன் தோளையும், தொடையையும் தட்டினான்.

அங்கு அரண்மனையில் படுக்கையில் படுத்திருந்த வாலிக்கு, யானையின் பிளிறல் கேட்ட சிங்கம் போல சிலிர்த்தது. படுக்கையை விட்டு எழுந்தான். தன்னிடம் அடிபட்டு உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்து கொண்ட தம்பி சுக்ரீவன், தன்னைப் போருக்கு அழைத்தது கண்டு வெகுண்டு ஒரு ஏளனச் சிரிப்புச் சிரித்தான். அவ்வொலி கிஷ்கிந்தை முழுவதும் எதிரொலித்தது.

படுக்கையிலிருந்து அவன் எழுந்து குதித்த வேகத்தில் மலைகள் ஆடின. தன் தோள்களைத் தட்டி போருக்குத் தயார் என்றதும், மலைகள் பெயர்ந்து விழுந்தன. கோபத்தில் கொடிய அனற் பொறிகள் எழுந்தன. கண்களில் வடவைக்கனல் எழுந்தது. மூச்சுக் காற்றில் புகை மண்டின. வந்த கோபத்தில் தேவலோகத்தையும் அழித்துவிடலாமா என்று எண்ணினான். கையோடு கையைக் குத்தினான்; அந்த ஓசையில் திக்கு யானைகள் மதங்கொண்டோடின; இடி இடித்தன, தேவலோகம் நிலை குலைந்தது. மலைகளும் பிளவுபட்டுத் தூள்தூளாயின.

"வந்தேன்! இதோ வந்துவிட்டேன்!" என்று வாலி கூறிய சொற்கள் எட்டுத் திசைகளிலும் எதிரொலித்தது. இவ்வொலியின் வேகத்தால் வானத்திலிருந்து நட்சத்திரங்கள் உதிர்ந்தன. அப்படி கோபத்தோடு எழுந்த வாலியை அவன் மனைவியான தாரை போருக்குப் போகவேண்டாம் என்று தடுத்தாள். பொதுவாக நிமித்தக் குறிகளின்படி, ஒருவன் ஒரு காரியமாய் எழுந்து செல்லும் போது, அவன் மனைவி தடுத்தால், அந்த காரியம் நிறைவேறாததோடு அவனுக்கும் கேட்டை விளைவிக்கும் என்பது நம்பிக்கை.

"என்னைத் தடுக்காதே! விடு! அன்று பாற்கடலைக் கலக்கி அமுதம் வரவழைத்தது போல இந்த சுக்ரீவனையும் அழித்து அவன் உயிரைக் குடித்துவிட்டு மீள்வேன்" என்றான் வாலி.

"மன்னா! இந்த சுக்ரீவன் ஏற்கனவே உன்னிடம் தோற்று உயிர் பிழைக்கத் தப்பி ஓடிப்போனவன். அப்படிப் பட்டவனுக்கு இப்போது புதிதாக என்ன பலம் வந்திருக்க முடியும். அப்படி அவன் திரும்ப வந்து உன்னைப் போருக்கு அழைக்கிறான் என்றால், ஏதோவொரு புதிய துணை அவனுக்குக் கிடைத்திருக்க வேண்டும் அல்லவா?" என்றாள் தாரை.

"பெண்ணே! அனைத்து உலகங்களிலும் இருப்போர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒன்றாக வந்தாலும் அவர்கள் என்னால் அழிக்கப்படுவார்கள் என்பது உனக்குத் தெரியாதா? என் பெயரைக் கேட்டதும் அந்த எமனும்கூட ஓடி ஒளிந்து கொள்வான். ஆகையால் என்னை எவர் எதிர்த்து வரமுடியும். அப்படி அறிவு இல்லாமல் எவரேனும் எதிர்த்தால்கூட அவர்கள் வசம் உள்ள வரங்களும், வலிமையும் பாதி என்னிடம் வந்து சேரும்படியான வரத்தைப் பெற்றவன் நான். பிறகு அவர்கள் வெல்வது எவ்வாறு? நீ பயத்தை ஒழி. துன்பத்தை விடு" என்றான்.

"அரசே! இராமன் என்று ஒருவன் அந்த சுக்ரீவனுக்கு உயிர்த் துணைவனாக வந்து சேர்ந்து கொண்டிருக்கிறான் என்று நம்மிடம் மிகவும் அன்பு கொண்டவர்கள் வந்து சொன்னார்கள்" என்றாள் தாரை.

"அடப்பாவி! உலகில் தீவினைகளை அழித்து அறத்தின் வழியில் வாழும் இராமபிரானுடைய இயல்புக்கு ஒவ்வாதவற்றைச் சொல்லுகிறாயே. அபசாரம் செய்து விட்டாய். தவறு இழைத்து விட்டாய். நீ ஒரு பெண் என்பதால் உன்னைக் கொல்லவில்லை. பிழைத்தாய்" என்றான் வாலி.

"இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை தரும் இராமபிரானின் குண நலன்களுக்கு நீ கூறியவை பெருமை தர வல்லதோ? இவன் வந்து சுக்ரீவனிடம் நட்பு கொள்வதால் பெறப்போகும் நன்மைதான் என்ன? உலகத்தையே தருமத்தால் காக்கின்ற தர்மம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளுமோ? தந்தை தாங்கி வந்த உலக பாரத்தை முறைப்படி பெற்று, சிற்றன்னையின் விருப்பத்திற்கேற்ப, அவலது மைந்தன் பரதனுக்கு ஆட்சியை உவகையோடு அளித்த பெரியோனாகிய இராமனை பாராட்டாமல், இத்தகைய புன்மொழிகளைக் கூறுகிறாயே. உலகங்களெல்லாம் சேர்ந்து எதிர்த்து நின்றாலும், வெற்றி பெறும் அவனது வில்லான கோதண்டம் இருக்கும்போது வேறொரு துணையும் அவனுக்கு வேண்டுமோ? அவனுக்கு அப்படியொரு துணை வேண்டுமென்றாலும், கேவலம் ஒரு குரங்குடன் நட்பு கொள்வதை நினைத்துப் பார்க்க முடியுமா? தன் தம்பிகளே தனக்கு உயிர் போன்றவர்கள் என்று அன்பு செலுத்தி வாழ்கின்ற இராமன், அருட்கடலாக இருப்பவன். அப்பேற்பட்டவன் அண்ணன் தம்பியான எங்களுக்கிடையேயான போரில் இடையில் நின்று அம்பு செலுத்துவானோ? நீ இங்கேயே இரு. கண் இமைக்கும் பொழுதில் அந்த சுக்ரீவனுடைய உயிரைக் குடித்து அவனுக்குத் துணையாக யார் வந்திருந்தாலும் அவர்களையும், அழித்துவிட்டுத் திரும்பி வருவேன்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் வாலி.

இதற்கு மேலும் அவனிடம் பேசிப் பயனில்லை என்று தாரை அடங்கி விட்டாள். அங்கிருந்து புறப்பட்ட வாலி, தன் தம்பியுடன் போரிடுவதற்காக, மலைக்கு மேலே தம்பியைத் தேடிக் கொண்டு வந்தான். இரணியன் சுட்டிக் காட்டிய தூணைப் பிளந்து கொண்டு வந்த நரசிம்ஹத்தைப் போல வாலி அந்த மலைமீது வந்து தோன்றினான். அங்கே போருக்கு அழைத்துக் கர்ச்சிக்கின்ற தம்பி சுக்ரீவனைப் பார்த்தான். தானும் கர்ச்சனை செய்தான். இருவரின் போர் ஒலி வான்முகட்டை எட்டி இந்த அண்டமெல்லாம் எதிரொலித்தது.

அப்போது அண்ணன் தம்பியான வாலியையும், சுக்ரீவனையும் ஒருசேர பார்த்த இராமன் தம்பி இலக்குவனை அழைத்து "தம்பி! இவர் இருவரையும் நன்றாகப் பார்! இவ்வுலகிலுள்ல அரக்கர்கள், தேவர்கள், எந்தக் கடலும், மேரு மலையும், காற்று, தீ, இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால்கூட இவ்விருவரின் உடல் வடிவுக்கு ஒப்பாவார்களா? என்று வியந்தான்.

தனது அண்ணன் இராமனுக்கு வனத்தில் தீங்கு ஏற்படாமல் காத்து அவனுக்குத் தொண்டு புரிவதே, தனது கடமை எனக் கொண்டு தன் சுக துக்கங்களை மறந்து இரவு பகல் உறக்கமின்றி பணி புரிந்து வரும் இலக்குவன், பிறிதொருவன் தன் அண்னன் உயிருக்குத் தீங்கு இழைக்க முற்படுகையில் அதற்குத் துணைபுரியும் நிலை ஏற்பட்டதால், மனம் வருந்தி இருந்தான். தன் சொந்த அண்னனையே கொல்ல விரும்பும் இந்த சுக்ரீவன் மற்றவர் பால் எப்படி நடந்து கொள்வான் என்ற ஐயமும் ஏற்பட்டது. இப்படி இலக்குவனின் மனவோட்டம் போவதைக் கவனித்த இராமபிரான் சொல்லுகிறான்: "அப்பனே! இதைக் கேள்! மிருகங்களாகிய இவர்களது ஒழுக்க முறைகளை, மனித இனத்தின் ஒழுக்க முறைகளைப் போல எண்ணக் கூடாது. எந்தவொரு தாயின் வயிற்றில் உதித்த தம்பிகளில் பரதனைப் போல் உத்தமனாக இருப்பது சாத்தியமா? என்றான் இராமன்.

தன் பொருட்டு எல்லா சுகங்களையும் தியாகம் செய்துவிட்டுத் தன்னுடன் சார்ந்து நிற்கும் இலக்குவனிடமே, அவனைச் சொல்லாமல் பரதனைப் புகழ்ந்து பேசியது ஏன்? என்ற ஐயம் நமக்கெல்லாம் ஏற்படுவது இயற்கையே. இதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும் என்று யோசித்தால் ஒரு காரணம் நமக்குப் புலப்படும். இலக்குவன் உணர்ச்சி மேலீட்டால் சில இடங்களில் உண்மையை உணராமல் பிழை செய்த நேரங்கள் உண்டு. தந்தை சொல் காக்க இராமனும் இலக்குவனும் கானகம் புறப்பட்ட போதும் சரி, பரதன் இராமனைத் தேடிக் கொண்டு சித்ரகூடம் வரும்போதும் சரி, அவன் இராமன்பால் கொண்ட அன்பின் காரணமாக மதி மயங்கிய நிலையில் பரதனை வெகுண்டு பேசியதுண்டு. இந்த இடத்திலும் சரணாகதி என்று தன் காலடியில் விழுந்து கெஞ்சிய சுக்ரீவனைக் கொல்ல வருபவனும், தனது சொந்த தம்பியின் மனைவியையே அபகரித்தவனுமான வாலியைக் கொல்வது அறத்தின்பாற்பட்ட செயல் என்று துணிந்த இராமனுக்கு, இலக்குவனின் எண்ணங்கள் ஒப்பவில்லையாதலின், தம்பிக்கு பரதனை உவமை சொல்லியிருக்கலாம் என்பது ஆன்றோர்கள் கருத்து. தம்பிகளில் சிறந்தவன் யார் என்ற இராம இலக்குவருக்கிடையே நடந்ததாக வரும் உரையாடல், கம்பன் தவிர வான்மீகத்திலோ, அத்யாத்ம இராமாயணதிலோ இருப்பதாகத் தெரியவில்லை. அண்ணன் தம்பிகளில் சிறந்தவர்கள் யார் என்பதற்கு விடை காணும் வகையில் அமைந்த ஓர் பழந்தமிழ் பாடலொன்றை இங்கே காணலாம். அது:-

"செஞ்சுடரோன் மைந்தனையும், தென் இலங்கை வேந்தனையும்
பஞ்சவரில் பார்த்தனையும் பாராதே! - துஞ்சா
விரதம் தனைக் கொண்டு மெய்யன்பு பூண்ட
பரதனையும் இராமனையும் பார்!".

இராமன் மேலும் சொல்லுகிறான், "உலகில் நல்லொழுக்கம் உடைய மேலோர் சிலராகவும், ஒழுக்க மேம்பாடு இல்லாதவர் பலராகவும் இருக்கிறபடியால், நாம் நட்பு கொள்பவரிடமுள்ள நற்குணங்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி, குற்றம் நாடுதல் தக்கதன்று".

"குணநாடிக் குற்றமும் நாடி அவற்றின்
மிகை நாடி மிக்க கொளல்" (திருக்குறள் 504)

இந்த திருக்குறளின் கருத்தைத்தான் இராமன் கூறுவதாக கம்பர் பெருமான் அமைத்திருக்கிறார். அதுபோலவே நெல்லுக்கு உமி உண்டு, நீர்க்கு நுரை உண்டு, புல்லிதழ் பூவிற்கும் உண்டு என்று நாலடியாரில் வரும் ஒரு செய்யுளையும் கவனத்தில் கொள்ளலாம்.

அங்கே! இரு பெரும் யானைகள் மோதிக் கொள்வது போல வாலியும் சுக்ரீவனும் மோதிக் கொண்டார்கள். இரு குன்றுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது போல மோதினார்கள். வலிமை பொருந்திய இரு ஆண் சிங்கங்கள் மோதுவது போல மோதிக் கொண்டார்கள். இடம் வலமாக மாறி மாறி சுழன்று போரிட்டார்கள். குயவனது சக்கரத்தில் சுழலும் மண்பானை போல இருந்தது அவர்கள் சுழன்று மோதிக்கொள்ளும் காட்சி. வாலியும் சுக்ரீவனும் விண்மீதும், மலைகள் மீதும், தரை மீதும் எல்லைப் புறங்களிலும் சென்று தொடர்ந்து போரிட்டனர். ஓரிடத்தில் நின்று போரிடாததால், பார்க்கும் இடமெல்லாம், இவர்கள் போரிடுவது போன்றே தோற்றமளித்தது.

போர் செய்யும் போது அவர்கள் எழுப்பிய ஓசையும், ஒருவரை ஒருவர் பலமாகக் குத்திக் கொள்ளும் ஓசையும், யுக முடிவில் ஏற்படும் பிரளய கால இடிமுழக்கம் போல எங்கும் எதிரொலித்தன. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதின் விளைவாக இருவர் உடலினின்றும் இரத்தம் ஆறுபோல ஓடின. ஒருவர் மார்பில் மற்றவன் குத்துகிறான். இருவரும் காலால் ஒருவரை ஒருவர் உதைத்துக் கொள்கின்றனர்; வாயினால் கடிக்கிறார்கள்; எதிர் நின்று இடித்துக் கொள்கிறார்கள்; மரங்களைப் பிடுங்கி அடிக்கிறார்கள்; மலைகளை உடைத்து மேலே எறிகிறார்கள்; தீ உமிழ்வது போல கண்களை விரித்துப் பார்க்கிறார்கள். இப்படி இவர்கள் இருவருக்குமிடையே கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.

"எடுப்பர்; பற்றி ஒருவரை யொருவர் விட்டு எறிவர்; எதிர்வந்து மார்பை காட்டுவர்; கை முட்டி உள்ளே போகும்படி குத்துவர்; பறப்பர்; போரிடுவர்; கீழே விழுவர்;" ஒருவருக்கொருவர் சளைக்காமல் தொடர்ந்து போரிட்டார்கள். நேரம் ஆக ஆக, வாலியின் வலிமையால் சுக்ரீவன் உடல் வருந்தும்படியாகவும், நிலைகுலைந்து போகும்படியாகவும், தளர்ந்து போனான். சுக்ரீவன் உயிர் போகும் நிலைமைக்குத் தாக்கப் பட்டான். கண், காது, மூக்குகள் வழியாக இரத்தம் கொட்டியது. என்ன செய்வதென்று அறியாமல் திணறிக்கொண்டு நாலாபுறமும் பார்க்கிறான்.

இவனைப் பிடித்துத் தூக்கி பூமியில் அடித்துக் கொல்வேன் என்று சுக்ரீவனை வாலி தன் இரு கைகளாலும் இடுப்பிலும், கழுத்திலும் கொடுத்துத் தூக்கி மேலே கொண்டு போன சமயம் பார்த்து, இராமபிரான் தன் வில்லில் அம்பு ஒன்றைப் பூட்டி, நாணை இழுத்துச் செலுத்தினான். அந்த இராம பாணம் வாலியினுடைய வலிய மார்பை வாழைப் பழத்தினுள் செலுத்தப்பட்ட ஊசியைப் போல, இலகுவாக ஊடுறுவியது. அடடா! இந்தக் காட்சியை என்னவென்று சொல்ல! எப்படி வர்ணிப்பது?. தன் தம்பியைத் தரையில் மோதிக் கொல்வதற்காக தலைக்கு மேலே தூக்கியிருந்த நேரத்தில் இராமனின் அம்பு வாலியின் நெஞ்சிலே பாய்ந்து நிற்க, நெடிது வீழ்ந்தான் வாலி.

தன் மார்பில் அம்பு பாய்ந்துவிட்டதை அறிந்த வாலி, கடும் கோபம் கொண்டு, "வான முகட்டை இடித்தெறிவேன், நான்கு திசைகளையும் முறித்தழிப்பேன்; இந்த பூமியை வேரோடும் பறிப்பேன்; யார் அவன்? என் மார்பில் அம்பை எய்தவன்?" என்கிறான் வாலி. கீழே விழுந்து கிடந்தபடி தன் கைகளால் தரையில் ஓங்கி அடிக்கிறான். கண்கள் தீயினைக் கக்குகின்றன. நாற்புறமும் விழித்துப் பார்க்கிறான். தன் மார்பில் பாய்ந்த அந்த அம்பைத் தன் கைகளாலும், வாலாலும் பற்றி இழுக்கிறான். அம்பு உடலைவிட்டு வெளியே வராமல் மார்பில் புதைந்து கிடப்பதால் மனம் வருந்துகிறான். ஒரு மலை கிடந்து கீழே புரள்வது போல தரையில் புரள்கிறான்.

"யார் செய்திருப்பர் இந்தக் காரியத்தை? தேவர்களோ? ஆ! அந்த தேவர்களுக்கு இதனைச் செய்ய இயலுமோ? வேறு அயலார் எவரேனும் செய்திருப்பாரோ? இப்படி நினைத்ததும் அவனுக்குக் கோபம் வருகிறது. கோபத்தில் சிரிக்கிறான். அந்த மும்மூர்த்திக்கு ஒப்பான ஒருவனே இந்தக் காரியத்தைச் செய்திருப்பான் என்று நினைத்து வெகுள்கிறான்.

"தேவரோ? என அயிர்க்கும், தேவர் இச்செயலுக்கு
ஆவரோ? அவர்க்கு ஆற்றல் உண்டோ? எனும் அயலார்
யாவரோ? என நகை செயும், 'ஒருவனே, இறைவர்
மூவரோடும் ஒப்பான் செயல் ஆம்! என மொழியும்".

"எனது மார்பில் பாய்ந்துள்ள இந்த படைக்கலம் திருமாலின் சுதர்சன சக்கரமாக இருக்குமோ? அல்லது சிவபெருமானின் திரிசூலமாக இருக்குமோ? கிரெளஞ்சம் எனும் குன்றை ஊடுருவிச் சென்ற குமரக் கடவுளின் வேலாயுதமாக இருக்குமோ? அல்லது இந்திரனின் வஜ்ராயுதமோ? அந்த வஜ்ராயுதத்துக்கு என் மார்பைப் பிளக்கும் வலிமையும் உண்டோ? இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு மனம் புழுங்குகிறான்.

தன் மார்பில் ஆழப் புதைந்திருக்கும் அம்பைக் குனிந்து பார்க்கிறான் வாலி. ஒரு வில் இந்த அம்பை ஏவியிருக்க முடியுமா? முனிவர்கள் தங்கள் தவவலிமையால் மந்திரம் சொல்லி ஏவியிருப்பார்களோ? இப்படி எண்ணமிட்டுக் கொண்டே, தன் பலம் கொண்டமட்டும் அந்த அம்பைத் தன் பற்களால் கடித்துப் பறிக்க முயல்கிறான். இது ஓர் அம்புதான். என் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கும் அம்பை மார்பிலிருந்து உருவி அதில் பொறித்திருக்கும் பெயரைப் பார்க்கலாம் என்று தனது இரு கைகளாலும், வாலாலும், கால்களாலும் அந்த அம்பைப் பிணித்து பிடுங்க முயல்கிறான். அவன் தாங்கமுடியாத வலியோடும், எப்படியும் அந்த அம்பை வெளியே உருவிவிடவேண்டுமென்று செய்யும் இந்த விடாமுயற்சியைக் கண்ட அமரர்களும், அவுணர்களும், பிறரும் 'என்னே இவனது வலிமை, என்னே இவனது வீரம்' என்று வியக்கின்றனர்.

மார்பினுள் அம்பு பாய்ந்து, இரத்தம் அருவியென கொட்ட, குருதி வெள்ளத்தில் விழுந்து, மார்பில் பதிந்த அம்பைப் பிடுங்க அவன் படும் பாட்டை அவன் உடன்பிறந்த தம்பியான சுக்ரீவனும் பார்க்கிறான். அவனுக்கு நெஞ்சு பதறுகிறது. இரத்த பாசம் காரணமாக கண்கள் ஆறுபோல கண்ணீர் பெருக்க, மயங்கி நெடுமரம்போல் தரையில் விழுகிறான். மேரு மலையைக்கூட இரண்டாய் முறித்துவிடக் கூடிய ஆற்றலுள்ள என்னால் இந்த அம்பை முறிக்க இயலவில்லையே என்று அதனைத் தன் பலம் கொண்ட மட்டும் இழுத்துப் பறித்தான். இரத்தம் வெள்ளம் போல் பெருக்கெடுக்கிறது. அப்படிப் பறித்த அந்த வாளியில் பொறித்திருந்த பெயரைப் பார்க்கிறான். அதில் ---

No comments:

Post a Comment

Please give your comments here