Monday, May 17, 2010

3. ஆரணிய காண்டம்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
3. ஆரணிய காண்டம்.

பரதன் தன் சுற்றத்தார் பரிவாரங்களோடு காட்டுக்கு வந்து, இராமபிரானைச் சந்தித்து எவ்வளவோ வேண்டிக் கொண்டும் அவர் நாடு திரும்பி ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட நிலையில், வேறு வழியின்றி இராமனுடைய பாதுகைகளை வாங்கித் தன் தலைமேல் வைத்துக் கொண்டு அவரை நமஸ்கரித்துவிட்டு நந்திக்கிராமத்தை அடைவதற்காகச் சென்றுகொண்டிருந்தான். அதே நேரத்தில் ஆரண்யத்தில் இராமபிரன் தம்பி இலக்குவனோடும், சீதாபிராட்டியோடும் தெற்கு நோக்கிப் பயணப்பட்டார்கள்.

அப்படிப் பயணப்பட்டு வெகுதூரம் நடந்து அத்திரி மகரிஷி வாழும் ஆசிரமத்தை அடைகின்றனர். இந்த அத்திரி முனிவர் சப்த ரிஷிகளில் ஒருவர். காம, வெகுளி மயக்கங்களை வென்றவர். தனது ஆசிரமத்தை நாடி வந்திருக்கும் இவர்கள் யார் என்று கேட்டறிந்த முனிவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அன்று இராம லக்ஷ்மணர், சீதை ஆகியோர் அந்த முனிவருடனும் அவரது மனைவியான கற்பிற் சிறந்த அனுசூயை என்பாரோடும் தங்கினர். அனுசூயை என்றால் பொறாமையற்றவள் என்று பொருள்.

இந்த அனுசூயை தக்ஷபிரஜாபதி என்பவரின் புதல்வியருள் ஒருத்தி என்றும் இவள் ஒருமுறை கங்கை நதியைப் பெருகச் செய்து நாட்டின் பஞ்சத்தைப் போக்கினாள் என்றும், பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்து பெரும் பேறு பெற்றவள் என்றும், சீதையின் அருங்குணங்களைக் கண்டு புகழ்ந்து அவளுக்குக் கற்பின் சிறப்பை உபதேசித்து, என்றும் மாசுபடியாத பட்டாடைகளையும், நறுமணம் குன்றாக் கலவைச் சாந்தையும், என்றும் மாறா இளமைத் தோற்றத்தையும் வழங்கி ஆசீர்வதித்தாள் என்றும் வான்மீகத்தில் காணப்படுகிறது.

அனுசூயை சீதைக்கு விசுவகர்மாவினால் உருவாக்கப்பட்ட திவ்ய மங்களகரமான இரண்டு குண்டலங்கள், பொன்மயமான இரண்டு பட்டாடைகள், பரிமளக் கலவைப்பூச்சு முதலியனவற்றை, விரும்பி அளித்தாள் என்று அத்யாத்ம இராமாயணத்தில் வருகிறது.

அனுசூயையின் கற்பு நிலையைச் சோதிக்க வந்த திரிமூர்த்திகளையும் அம்மங்கை நல்லாள் குழந்தைகளாக்கித் தொட்டிலில் இட்டு ஆட்டி வளர்த்ததாக புராணங்கள் கூறும்.

அங்கிருந்து புறப்பட்டு, இராமன், இலக்குவன், சீதை ஆகியோர் தண்டகவனம் எனும் தண்டகாரண்யம் வந்து சேர்கிறார்கள். இந்த தண்டகாரண்ய வரலாறு வருமாறு:

இட்சுவாகு மன்னனின் மகன்களில் ஒருவன் தண்டன். இந்த தண்டன் தீய ஒழுக்கமுடையவன். எனவே மன்னன் இவனை நாட்டைவிட்டு வெளியேற்றிவிடுகிறான். அவன் தென்னாடு வந்து ஆங்கே ஓர் பகுதியைப் பிடித்துக் கொண்டு ஆண்டு வருகையில், அங்கு அசுரகுருவான சுக்கராச்சாரியாரின் மகள் ஒருத்தியைத் தகாத முறையில் காதலிக்க, அதனை அறிந்த அம்முனிவர் தண்டன் அழியவும், நாடு மணல்மாரி பெய்து பாழாகவும்படியும் சபித்தார். அப்பிரதேசமே பெரும் காடாக மாறி தண்டகாரண்யம் எனப் பெயர் பெற்றது என்பது புராணம்.

இராம லக்ஷ்மணர் தண்டகாரண்யம் சென்றடைந்தபோது, அங்கே விராதன் எனும் கொடிய அரக்கன் எதிரே வருகிறான். இவ்வரக்கன் பல யானைகள், அதைவிட இருமடங்கு சிங்கங்கள், பதினாறு யாளிகள் இவற்றின் பலங்கொண்டவன். அவன் கையில் கொடிய மும்முனை சூலம் ஏந்தியிருந்தான். அவன் ஐம்பெரும் பூதங்களும் ஒன்று சேர்ந்ததைப் போன்ற உருவத்தையுடையவன். இடி போன்ற உரத்த குரலையுடையவன். பிரமதேவன் அளித்த வரத்தால் இருபத்தையாயிரம் யானை பலம் கொண்டவன். இத்தகைய விராதன், இராம லக்ஷ்மணரின் எதிரில் வந்து நிற்கிறான்.

வந்தவன் ஒரே கணத்தில் சீதா பிராட்டியைத் தன் ஒரு கையால் அள்ளிக்கொண்டு ஆகாய மார்க்கத்தில் செல்லத் தொடங்குகிறான். திடீரென்று வந்து ஓர் அரக்கன் தேவியை தூக்கிச் சென்றதும், இராமனும் இலக்குவனும் திகைத்தனர். கோபம் மேலிட தங்கள் வில்லை எடுத்து நாணைப் பூட்டி, விராதனைக் கூவி அழைத்து "அடே! அற்பனே! இப்படியொரு வஞ்சகம் செய்துவிட்டு எங்கே போகிறாய்? திரும்பு" என்றார்கள்.

விராதன் சொல்லுகிறான், "மனிதப் பதர்களே! பிரமதேவன் அளித்துள்ள வரத்தினால் எனக்கு மரணம் இல்லை. உலகத்தில் உள்ளோர் அனைவரையும் ஆயுதம் இல்லாமலே அழித்துவிடவல்ல ஆற்றல் படைத்தவன் நான். போனால் போகிறது, உங்களுக்கு உயிர் பிச்சை அளிக்கிறேன். இந்த பெண்ணை என்னிடம் விட்டுவிட்டு உயிர் பிழைத்து ஓடிவிடுங்கள்" என்கிறான்.

இராமன் சிறிய புன்னகை புரிந்தான். இவன் அறியாமையை எண்ணி, தன் வில்லின் நாணை இழுத்து ஒரு பேரொலியை எழுப்பினான். அவ்வொலி ஏழு உலகங்களும் அஞ்சும் வண்ணம் பேர்முழக்கமாகக் கேட்டது. ஒரு கொடிய பூனையின் வாயில் சிக்கித் தவிக்கும் கூண்டுக் கிளிபோல அன்னை அவ்வரக்கன் பிடியில் அஞ்சிக் கதறிக்கொண்டிருந்தாள். பிராட்டியைக் கீழே விட்டுவிட்டு, அவ்வரக்கன் மிகுந்த கோபத்துடன் தன் கையிலிருந்த கொடிய மும்முனை சூலத்தை இராமன் மீது வீசினான்.

அவன் வீசிய அந்தச் சூலாயுதம் அஷ்டதிக் கஜங்களும் நடுங்க, அனைத்துலகங்களும் அஞ்சி நடுங்க, மின்னலோடு விரைந்து இராமனுடைய மார்பை நோக்கி வருகிறது. இராமன் தன் கோதண்டத்தினின்றும் ஓர் அம்பைப் பூட்டி அந்த அரக்கன் வீசிய சூலத்தின் மேல் எய்தலும், அந்த சூலம் இரண்டாக உடைந்து வானத்திலிருந்து நட்சத்திரங்கள் விழுவதைப் போல பூமியின் எல்லையில் போய் விழுந்தது. இதனால் அரக்கனின் கோபம் மேலும் அதிகமாகியது. மலைகளையெல்லாம் வேரோடு பிடுங்கி இராமன் மீது எறிகிறான். அப்படி ஒன்றன்பின் ஒன்றாக வரும் மலைகளை இராமன் தன் வாளியால் அடித்து, அவை மீண்டும் அவ்வரக்கன் மீதே விழும்படி செய்கிறான்.

காயங்களால் புண்பட்ட உடலோடு விராதன் ஒரு பெரிய ஆச்சா மரத்தைப் பிடுங்கி இராமன் மீது வீசுகிறான். இராமன் நன்கு அம்புகளை ஏவி, அந்த மரத்தைத் துண்டு துண்டாக்கி கீழே தள்ளிவிட்டு, பன்னிரெண்டு அம்புகளை அவ்வரக்கனின் உடலின் பல பாகங்களிலும் உட்புகுமாறு செலுத்த, அவன் அலறி மேலும் கோபத்துடன் காட்டுப் பன்றிபோலத் தன் உடலை உதறுகிறான்.

அவன் உடலில் அம்பு துளைத்த பகுதிகளில் இரத்த ஆறு பெறுக்கெடுத்து ஓடுகிறது. உடல் சோர்வுறுகிறது. இவன் சாகா வரம் பெற்றவன் அதனால் எந்த ஆயுதத்திற்கும் இவன் சாகவில்லை. மலைபோல கிடக்கும் இவன் கரங்களை வெட்டிவிடுவோம் என்று இராமனும் இலக்குவனும் முடிவு செய்து கொண்டு தங்கள் உடைவாளை எடுத்துக் கொண்டு அவன் தோள்மீது ஏறிவிடுகிறார்கள்.

மகா கோபமடைந்த அவ்வரக்கன், அவர்களை அப்படியே அழுத்திப் பிடித்துக் கொண்டு வானத்தில் எழுந்து செல்ல முயல்கிறான். இராம லக்ஷ்மணர்களைத் தூக்கிக் கொண்டு அரக்கன் வானத்தில் பறப்பதைக் கண்டு தரையிலிருந்த சீதை மனம் பதைத்தாள். "அரக்கனே! அவர்களை விட்டுவிடு. என்னை உண்டு கொள்" என்றாள், வாய் குழறி அழுதாள்.

இதனைக் கண்ட இலக்குவன் இராமனிடம் "தேவி மனம் வருந்தி அழுதுகொண்டிருக்க, நீங்கள் இவனிடம் இப்படி விளையாடலாமா?" என்று கேட்டதும், இராமன் "லக்ஷ்மணா! இந்த கொடிய காட்டை இவன் மீது அமர்ந்து கடந்துவிட எண்ணினேன். இவனைக் கொல்வது ஒரு பொருட்டே அல்ல. இதோ பார்!" என்று சொல்லிக்கொண்டே தன் காலால் அந்த அரக்கனை எட்டி உதைக்க, அவன் கீழே விழுந்தான்.

தங்கள் வாளால் அவன் தோள்கள் இரண்டையும் வெட்டி வீழ்த்தினர். பின் அவன் உடலினின்றும் கீழே குதித்தனர். அப்போதும் கோபம் வீறிட்டெழ, அந்த அரக்கன் தாக்குவதற்கு ஓடிவர, இராமன் "லக்ஷ்மணா! இவனை பூமிக்கடியில் புதைத்துவிடுவோம்" என்று சொல்லி காலால் உந்தித் தள்ளவும், அவன் போய் ஓர் ஆற்றின் கரையிலிருந்த பெரும்பள்ளத்தில் வீழ்ந்து புதைந்துபோனான்.

இந்த விராதன் ஒரு கந்தர்வனாக இருந்தவன். குபேரன் இட்ட சாபத்தால் கொடிய அரக்கப் பிறவி எடுத்தான். இராமன் காலால் உதைபட்டதும் அந்த சாபம் நீங்கி அவனுடைய பழைய கந்தர்வ உடல் கிடைக்கப்பெற்றான். மண்ணில் புதையுண்ட அந்த உடலினின்றும் ஹிரண்யகர்ப்பம் எனும் முட்டையிலிருந்து பிரம்மன் எழுந்ததைப் போல அந்த கந்தர்வன் எழுந்தான்.

அந்த கந்தர்வன் இராமபிரான் கால்களில் வீழ்ந்து பணிந்து போற்றுகிறான். "இராமா! உனது திருவடி என்மீது பட்டதால், என் இருவினைகளும் தீர்ந்து பிறவிக் கடல் கடந்தேன்" என்றான்.

"உனக்கு எப்படி இந்தக் கதி ஏற்பட்டு அரக்கனாக உருவெடுத்தாய்?" என இராமன் கேட்கவும், விராதன் சொல்லுகிறான் "பரம்பொருளே! இராமா! நான் வானுலகில் குபேரனது ஆட்சிக்கு உட்பட்டவன். தும்புரு எனும் கந்தர்வனாக வாழ்ந்து கொண்டிருந்தேன். தேவலோகத்தில் அரம்பை எனும் பெண்ணிடம் காதல் கொண்டு அவளோடு கூடினேன். இதைக் கண்டு என்னை அரக்கனாகப் பிறக்கும்படி குபேரன் சாபமிட்டான். அழுது புரண்டு என் தவறுக்காக வருந்தி, எனக்குச் சாப விமோசனம் வேண்டியபோது, குபேரன் "நீ இராமபிரான் காலடி பட்டு சாப விமோசனம் அடைவாய்" என்றான். ஆதிமூலமே! அன்று முதல் இன்று வரை அறிவற்ற நான் நன்மை தீமை தெரியாமல் தீய வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தேன். நின் பொற்பாதம் என்மேல் பட இன்று சாபம் நீங்கப் பெற்றேன்" என்றான் விராதன்.

"ஐயனே! இதுவரை நான் செய்த பிழைகளையெல்லாம் பொறுத்தருள்வாயாக!" என்று சொல்லி அந்த கந்தர்வன் வானுலகு சென்றான். அங்கிருந்து மூவரும் பயணப்பட்டு ஒரு சோலையை அடைகின்றனர்.

தண்டக வனத்திலே வாழ்ந்த முனிவர்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி. வரண்ட பாலைவனத்தில் தண்ணீருக்கு ஏங்குபவனுக்கு குளிர்ந்த நீரோடை கிடைத்தால் எப்படி மகிழ்வானோ அப்படி மகிழ்ந்தனர் அந்த முனிவர்கள். ஏனென்றால் அரக்கர்களின் தொல்லைகளால் அவதியுறும் அவர்களுக்கு இராமனின் வரவு மகிழ்ச்சியை அளித்தது. கன்றைப் பிரிந்து காட்டில் மேய்வதற்குச் சென்ற தாய்ப்பசு வீடு திரும்பும்போது அதன் கன்றுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அவர்களுக்கு. கடலில் மூழ்கி இறக்கும் தருவாயில் ஒரு மரக்கலத்தைக் கண்ட மகிழ்ச்சி அவர்களுக்கு. அனைவரும் ஒன்று சேர்ந்து இராமனிடம் சென்றனர். அவனது தோற்றத்தைக் கண்டு மெய்மறந்து நின்றனர். இராமன் தொழும் ஒவ்வொரு முறையும் ஆசிகூறி மகிழ்ந்தனர்.

அந்த முனிவர்கள் அம்மூவரையும் அழகிய ஓர் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றனர். இராமா! இனி நீங்கள் இங்கேயே தங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அன்று இரவு முனிவர்கள் அவரவர் இடம் சென்று தங்கிவிட்டு, மறுநாள் கூட்டமாக வந்து இராமனை தரிசித்தனர்.

"முனிவர்களே! உங்களுக்கு என்ன குறை?" என்று இராமன் வினவ, முனிவர்கள் சொல்கிறார்கள்: "இராமா! தசரதகுமாரா! எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்தைக் கேள்! இரக்கம் என்ற உணர்வு சிறிதும் இல்லாத அரக்கர்கள் இங்கே இருக்கிறார்கள். தர்மம் என்ற சொல்லுக்கே பொருள் தெரியாதவர்கள். அவர்கள் செய்கின்ற அநியாயங்கள் காரணமாக அறநெறி துறந்தோம்; தவச்செயல் நீத்தோம்; கடும் புலி வாழும் காட்டில் வாழ்கின்ற மான்களைப் போல ஆனோம். எங்களுக்கு நற்கதி கிடைக்குமா?"

"நாங்கள் தவவழி ஒழுகவில்லை; மறைகளை ஓதவில்லை; ஓதுவோர்க்கு உதவி செய்யவும் இல்லை; தீ வளர்த்து அக்னிஹோத்ரம் செய்யவில்லை; நெறிமுறைகளை நீத்தோம்; எனவே அந்தணர்களாக வாழ்வதையும் நீத்தோம்"

"இந்திரனிடம் சென்று முறையிடலாமென்றாலோ, அவனே அரக்கர்களுக்குப் பணிவிடை செய்பவனாக இருக்கிறான். பின்பு நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது? நாங்கள் செய்த தவத்தின் பயன்தான் இப்போது நீ இங்கே வந்திருப்பது. நாங்கள் இருட்டில் வாழ்ந்து கொண்டிருந்தோம், அருளுடைய இராமா! சூரியன் உதித்தது போல நீ வந்திருக்கிறாய். சூரிய ஒளியில் விலகும் இருளைப் போல எங்கள் துயரங்களும் நீங்கவேண்டும்".

உடனே ரவிக்குலத் தோன்றல் ஸ்ரீ இராமன் முனிவர்களைத் தேற்றி "கவலையை விடுங்கள். உங்களுக்கு இடர் புரிபவர் எவரே ஆயினும், அவர்களை வேறு அண்டத்திற்குச் சென்று ஒளிந்து கொண்டாலும் விடேன். அவர்கள் என் அம்புக்கு இரையாவது திண்ணம். அஞ்சவேண்டாம்" என்றான்.

"முனிவர்களே! என் தந்தை தசரத மகாராஜா மாண்டுபோனதும்; தாய்மார்கள் துயரம் அடைந்ததும்; அருமைத் தம்பி என்னுடன் கஷ்டப்படவும்; என் நகரத்து மாந்தர்கள் அளவற்ற துன்பமடைந்ததும்; நான் வனம் போந்ததும், நான் செய்த புண்ணியத்தின் பலன் என்று நினைக்கிறேன்.

இராமபிரான் இப்படிச் சொன்னதும் முனிவர்கள் "இராமா! இராமா! அப்படியானால் நீ வனத்தில் வாசம் செய்ய வேண்டிய காலம் முழுவதும் இங்கேயே தங்கி, எங்கள் துன்பங்களை நீக்கி வாழவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்கள்.

"முனிவர்களே! அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி இராமன் அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கி வழி அனுப்பி வைக்கிறான். அந்த இடத்தில் அவர்கள் பத்து ஆண்டுகளைக் கழிக்கின்றனர். பின்னர் அகத்திய முனிவரை தரிசிக்கக் கருதி அவ்விடம் விட்டு நீங்கினர். அகத்திய முனிவரை தரிசிப்பதற்காக வந்து கொண்டிருந்த இராமபிரானை 'நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்த முனிவர்' அகத்தியரே எதிர்கொண்டு வரவேற்றார்.

தேவர்களின் பகைவரான விருத்திராசுரன் முதலிய அரக்கர்கள் கடலில் புகுந்து ஒளிந்து கொண்டார்கள்; இந்திரன் முதலான தேவர்கள் அகத்திய முனிவரிடம் சென்று வேண்டுகிறார்கள்; அவர் ஏழு கடல் நீரையும் ஒரே முறை ஆசமனம் செய்து நீர் முழுவதையும் உண்டு விட்டார். தண்ணீர் வற்றியதும், அங்கே அடியில் ஒளிந்துகொண்டிருந்த அசுரர்கள் அகப்பட்டனர். தேவர்கள் அவர்களை கொன்றொழித்தனர். பிறகு தேவர்கள் வேண்டிக்கொள்ள, முனிவர் மீண்டும் உண்ட நீரை உமிழ்ந்து கடலை நீர் நிறையச் செய்தார் என்பது புராணம்.

அப்பேற்பட்ட அகத்திய முனிவர் இராமன் தன்னைத் தேடி வருவது கண்டு மகிழ்ந்தார். அவர்களைத் தம் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். இந்த பூவுலகம் செழித்து வாழ்வதற்காகத் தன் கையிலிருந்த கமண்டலத்தில் பிரம்ம லோகத்திலிருந்து காவேரி எனும் புனித நீரைக் கொண்டு வந்த அகத்திய முனிவர், இராமனைக் கண்டு தன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய நின்று வரவேற்றார்.

"நின்றவனை வந்த நெடியோன் அடிபணிந்தான்
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணான்
'நன்று வரவு' என்று பல நல்லுரை பகர்ந்தான்
என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்".

சுற்றிலும் நிற்கும் வேத விற்பன்னர்கள் வேத கோஷம் செய்கிறார்கள். முனிவர்கள் தங்கள் கமண்டல நீரைத் தெளித்து மலர்களைத் தூவி வரவேற்கிறார்கள். இப்படி அனைவரும் அகத்தியரின் தவச்சாலை சென்று அடைகின்றனர். அங்கு முனிவர் இராமனை நன்கு உபசரிக்கிறார். இங்கேயே தங்கிவிடும்படி இராமனை அகத்திய முனிவர் வேண்டுகிறார்.

அப்போது இராமன் "முனிவர் பெருமானே! இந்தக் காட்டில் தீங்கு செய்து வாழுகின்ற அரக்கர்களை அழிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. இதற்கு ஆசிகூறித் தாங்கள் என்னை அனுப்ப வேண்டும்" என்றான்.

"இராமா! நல்ல காரியம் செய்யத் துணிந்தாய். உனக்கு வெற்றி உண்டாகட்டும்" என்று கூறி முன்பு திருமால் கையில் வைத்திருந்த வில்லையும், எடுக்க எடுக்கக் குறையாத அம்புகளைக் கொண்ட அம்புறாத்தூணியையும் இராமனிடம் கொடுத்தார். இந்தப் புவனம் முழுவதும் ஒரு தட்டிலும் மற்றொரு தட்டில் ஒரு வாளையும் வைத்தால் எடையும் சக்தியும் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு வாளையும், சிவபெருமான் மேருமலையை வில்லாக வளைத்து திரிபுரங்களைச் சுட்டெரித்த வலிய அம்பையும் இராமனிடம் கொடுத்தார்.

பிறகு அகத்திய முனிவர் பஞ்சவடி எனுமிடத்தின் பெருமைகளையெல்லாம் கூறி, அங்கு சென்று நீங்கள் வாழுங்கள் என்று சொல்லி வழியனுப்பி வைக்கிறார். பின்னர் மூவரும் பஞ்சவடி நோக்கி பலகாத தூரம் பயணம் செய்கின்றனர். வழியில் பல நதிகளைக் கடந்து சென்றனர். மலைகளைக் கடந்து சென்றனர். அப்படிச் செல்லும் பாதையில் ஓரிடத்தில் ஜடாயு எனும் கழுகின் வேந்தனைக் கண்டார்கள். ஓங்கி உயர்ந்த மலையொன்றின் உச்சியில் உட்கார்ந்திருந்த கழுகுகளுக்கரசனான ஜடாயுவை இராம லக்ஷ்மணர்கள் ஐயங்கொண்ட மனத்தினராய் பார்த்துக் கொண்டே அருகில் சென்றனர்.

ஜடாயுவும் இவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். இவர்கள் தவ வேடத்தில் இருந்தாலும் தவசிகள் அல்லர்; வில்லேந்திய கையினராக இருப்பதால் தேவர்களாக இருப்பார்களோ என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தான் ஜடாயு. அடடா! இவர்கள் தோற்றத்தைப் பார்த்தால் மூவுலகங்களையும் வெல்லக்கூடிய வலிமை படைத்தவர்களாகத் தோன்றுகிறார்கள். உடன் வரும் தேவியோ, தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைப் போலத் தோன்றுகிறாள். இந்த வீரர்கள் யாராக இருக்கும் என்று யோசிக்கிறான் ஜடாயு.

ஒருவன் கருத்த மலைபோன்ற தோற்றமும், மற்றவன் சிவந்த மலைபோன்ற தோற்றமும் கொண்டிருக்கிறார்கள். மகாலட்சுமி வாசம் செய்யும் மார்பினர். இவர்களைக் காணும்போது எனது நண்பன் தசரத சக்கரவர்த்தியின் நினைவு வருகிறதே. இப்படி ஜடாயு எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் அருகில் வந்து விட்டனர்.

"வில்லேந்திய வீரர்களே! நீங்கள் யார் என்று எனக்குச் சொல்லலாமா?" என்றான் ஜடாயு அன்பு மேலிட.

"உண்மை தவிர வேறு எதுவும் பேசத் தெரியாத இராமன் "ஐயா! நாங்கள் அயோத்தி வேந்தன் தசரதனின் குமாரர்கள்" என்றான். இப்படிச் சொன்னதும் ஜடாயுவுக்கு உவகை மேலிட்டது. கீழே குதித்துத் தன் இறகுகளால் அவ்விருவரையும் ஆரத் தழுவிக் கொண்டான். "என் நண்பன் தசரதன் சுகமாக இருக்கிறானா?" என்றான் ஜடாயு.

"சத்தியத்தைக் காப்பதற்காக தசரதன் தன் ஊனுடம்பு நீங்கி புகழுடம்பு எய்தினான்" என்று இராமன் சொன்னதும் ஜடாயு மூர்ச்சித்து வீழ்ந்தான். உடனே இவர்கள் ஜடாயுவைத் தழுவி எடுத்தனர். கண்ணீர் விட்டுக் கதறினர். தன் உயிரினும் மேலான தசரதன் மாண்ட செய்தி கேட்டு ஜடாயுவும் வாய்விட்டு அரற்றினான்.

பின்னர் தசரதனுக்கும் தனக்கும் இருந்த ஆழ்ந்த நட்பு பற்றி கூறினான். அவன் சம்பராசுர யுத்தத்தின் போது, நீ உடல் நான் உயிர் என்று சொன்னானே! இன்று உடல் இங்கிருக்க உயிர் மட்டும் போய்விட்டதே என்று சொல்லி அழுதான். அவனோடு தானும் தீயில் வீழ்ந்து மாண்டுபோகாமல் வீணே புலம்புகிறேனே என்று வருந்தினான். பிறகு எழுந்து பேசுகிறான்:

"மைந்தர்களே! நான் அருணனின் புதல்வன். அவன் ஒளிபடும் இடமெலாம் நானும் செல்வேன். தசரதனின் உயிர் நண்பன். ஆதி காலத்திலேயே வந்து பிறந்து விட்டேன். கழுகு அரசன் சம்பாதியின் தம்பி நான். ஜடாயு என்பது என் பெயர்" என்றான்.

இப்படி ஜடாயு பேசிக்கொண்டிருந்தபோது இராம லக்ஷ்மணர்கள் கூப்பிய கரத்தோடு, கண்களில் நீர்சோர, அன்பின் மிகுதியால் இதயங்கள் கனக்க, நின்ற கோலத்தைக் கண்ட ஜடாயு, மாண்டுபோன தசரதன் மீண்டும் வந்து தன்னெதிரில் நிற்பது போல எண்ணினான். இருவரையும் தன் சிறகுகளால் மீண்டும் அணைத்துக் கொண்டான்.

"மைந்தர்களே! ஈருடல் ஓருயிராய் இருந்த தசரதன் உயிர்போன பின்பு நான் உயிர் வாழமாட்டேன். தீயில் பாய்ந்து உயிர்விடுவேன். உங்கள் தந்தைக்குச் செய்யும் ஈமக் கடன்களை நீங்களே எனக்கும் செய்வீர்களாக" என்றான்.

இதனைக் கேட்டு இராம லக்ஷ்மணர் கண்ணீர் சிந்தினர் "எங்கள் தந்தையும் இறந்து போனார். அவரது உயிருக்கு உயிரான தாங்களும் இறப்பேன் என்றால் எங்களுக்கு வேறு யார்தான் ஆதரவு?"

"நாட்டையும், தாய் தந்தையரையும் அரச பதவியையும் எல்லா நலன்களையும் நீங்கி வனம் வந்துவிட்ட எங்களை விட்டு நீயும் பிரிந்து போய்விட்டால் நாங்கள் என்ன செய்வோம்?"

"அப்படியானால் சரி! மைந்தர்களே! நான் இப்போது சாகமாட்டேன். நீங்கள் அயோத்தி நகருக்குத் திரும்பும்வரை உயிரோடு இருப்பேன், சரிதானே?" என்றான் ஜடாயு.

"அது சரி இராமா! தசரத சக்கரவர்த்தி இறந்து போனான் என்கிறாயே, அப்படியானால் நாட்டை ஆளவேண்டிய நீவிர் கானகம் வந்தது ஏன்? அதைச் சொல்" என்றான்.

"தேவர்கள், அசுரர்கள், நாகலோகத்தார் இவர்கள் எவரேனும் தீங்கிழத்ததனால் காட்டுக்கு வந்திருந்தால் சொல்லுங்கள், அவர்களைக் கொன்று குவித்து விடுகிறேன். நாட்டையும் மீட்டுக் கொடுக்கிறேன்"

இதைக் கேட்டதும் இராமன் இலக்குவனைப் பார்க்கிறான். குறிப்பறிந்து அவனும் நடந்த வரலாற்றை ஒன்று விடாமல் எடுத்துக் கூறுகிறான். தந்தையை சத்தியத்தைக் காக்கச் செய்து, தாய் கேட்ட ராஜ்யத்தை தம்பிக்குக் கொடுத்துவிட்டு கானகம் வந்த வள்ளலே என்று சொல்லி ஜடாயு இராமனை உச்சி முகர்ந்தான்.

"இராமா! உனது வாய்மையால் உன் தந்தையையும் என்னையும் பெருமைப் பட வைத்தாய்" என்று சொல்லி அகத்தியர் சொல்லியனுப்பிய இடத்திற்குச் சென்று அங்கு வாழுங்கள் என்று சொன்னான். பிறகு அவர்கள் மூவரும் நடந்து செல்ல அவர்களுக்குக் குடை விரித்தது போலத் தன் சிறகை விரித்து மேலே பறந்து வந்தான். பின்னர் அவர்கள் ஓர் அழகிய சோலையை வந்தடைந்தனர்.

அவர்கள் வந்து சேர்ந்த இடத்தில் இலக்குவன் ஓர் அருமையான குடில் அமைத்துத் தர, இராமனும் சீதையும் அந்தக் குடிலில் வாழ்ந்து வந்தனர். இங்கு இவர்கள் வாழ்க்கை இப்படி நடந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் .....

அரக்கர் குலத்தையே மூலநாசம் செய்யும் விரதம் பூண்டவளும், பிறக்கும் போதே உடன் பிறக்கும் நோயைப் போன்றவளுமான ஓர் அரக்கி அங்கு வந்து சேர்ந்தாள். அவள் வந்து இராமனை எட்டத்தில் இருந்து பார்த்தாள். ஆகா! என்ன தோற்றம், இவனது தோற்றம் என்று மயங்கி இராமன்பால் மோகம் கொண்டாள், மயங்கினாள். அவனிடம் உடனே சென்று பழகி உறவாட ஆசை கொண்டாள். இந்த அரக்க உருவில் சென்றால் அவன் வெறுத்துவிட்டால் என்ன செய்வது என்று எண்ணி ஓர் அழகிய பெண்ணின் உருவத்தை எடுத்துக் கொண்டாள். தளிர் நடையோ, அன்ன நடையோ அப்படி நளினமாக நடந்து சென்று, மெல்ல அடி எடுத்து வைத்து இராமன் முன்பாக வந்து நின்றாள். அந்த அரக்கி அழகிய பெண் வடிவம் கொண்டு மென்மையாக அடியெடுத்து வைத்து நடக்கும் பாங்கை, கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான் எவ்வளவு அரிய சொற்களை அடுக்கி கவிதை வடித்திருக்கிறார் பாருங்கள்.

"பஞ்சியொளி விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிகர் சீறடி பெயர்ப்பாள்
அஞ்சொல் இள மஞ்சையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்".

பஞ்சினால் ஒற்றி எடுப்பதுபோல அவ்வளவு மென்மையாக அவள் நடந்தது மட்டுமல்ல, கவிச்சக்கரவர்த்தி பாடிய பாடலின் சொற்களும் பஞ்சினால் ஒற்றி எடுப்பதுபோல அமைந்திருப்பதைப் படித்து இன்புற வேண்டும்.

"யாரம்மா நீ? எங்கு வந்தாய்? உன் வரவு தீமை தராத வரவாக இருக்கட்டும். உன் ஊர் எது? உன் பெயர் என்ன? உனது உறவினர்கள் யார்?" என்று வினவினான் வேதமுதல்வன்.

அதற்கு அவள் பதிலளித்தாள் "பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி" என்று. அதாவது பூவிலிருப்பவன் பிரம்மன், அவனுடைய மகனின் மகன் வழியில் மகள் நான் என்று. பிரம்மனுடைய புதல்வன் புலஸ்தியன், புலஸ்தியனின் மைந்தன் விஸ்ரவசு, விஸ்ரவசுவின் புதல்வி சூர்ப்பனகை. அவள்தான் இப்போது வந்திருக்கும் அரக்கி.

அடுத்ததாகச் சொல்கிறாள்: "முப்புரங்கள் செற்ற சே வலோன் துணைவனான செங்கையோன் தங்கை". திரிபுரங்கள் அதாவது முப்புரங்களை எரித்த ரிஷப வாகனனான சிவபெருமானின் நண்பன் குபேரனின் தங்கை.

அடுத்து "திக்கின் மா எலாம் தொலைத்து வெள்ளி மலை எடுத்து உலக மூன்றும் காவலோன் பின்னை". திக்கின் மா எனப்படும் அஷ்டதிக் கஜங்கள் எனும் திசை யானைகளை வென்று, வெள்ளி மலையாம் கைலாச மலையைப் பெயர்த்து, மூவுலகங்களையும் ஆளுகின்ற இராவணனுக்குப் பின் பிறந்தவள்.

இறுதியாகத் தன்னை விளக்குகிறாள் "காமவல்லியாம் கன்னி" என்று. காமவல்லி என்பது என் பெயர். நான் ஒரு கன்னிப் பெண் என்று தன்னுடைய வரலாற்றை மிக விஸ்தாரமாக எடுத்துரைக்கிறாள்.

இதனைக் கேட்ட இராமன் சொல்கிறான்: "அப்படியா? நீ இராவணனின் தங்கையா? அப்படியானால் அரக்க உருவம் நீங்கி இப்படி அழகிய தோற்றம் எங்ஙனம் பெற்றாய், முதலில் அதனைச் சொல்".

இராமன் அப்படிக் கேட்டதும் சூர்ப்பனகை எனும் காமவல்லி சொல்கிறாள் "அந்த மாய அரக்கர்களோடு வாழப் பிடிக்காமல் தவம் செய்து அந்த தேவர்களிடம் வரம் பெற்று அழகிய உருவம் பெற்றேன்" என்று மனதார பொய் சொன்னாள்.

"இந்திரனும் ஏவல் புரியக்கூடிய இராவணனின் தங்கை என்றால், அவனுடைய செல்வச் சிறப்பின் ஆடம்பரம் உன்னிடம் இல்லையே! உனக்குத் துணையாகவும் எவரும் இல்லையே. ஏன் இப்படி?"

"விமலனே! அந்த அரக்கர்களோடு சேர விரும்பாமல், தேவர்களோடும், முனிவர்களோடும் பழகி வருகிறேன். இறைவா! உன்னிடம் நான் ஒரு காரியம் தனித்துப் பேச விரும்பியே தனியாக வந்திருக்கிறேன்" என்றாள்.

அவள் மேலும் பேசுகிறாள்: "உயர் குடியில் பிறந்த மகளிர் தம் காம விழைவைத் தாமே சொல்ல முடியுமா? எனக்குத் தூது செல்லவும் வேறு துணை இல்லை. உயிர் போவது போல வருந்துகிறேன். எனவே வேறு வழியின்றி நானே நேரில் உன்னிடம் உரைக்க வந்தேன். எனவே காமன் என்னிடம் செய்யும் கொடுமையைத் தவிர்த்து நீ என்னை ஆண்டு அருள்வாயாக".

இவள் சரியான வெட்கங்கெட்டவளாக இருக்கிறாளே. அற்பமானவள் கூட. இப்படிப் பேசும் இவள் நல்லவள் இல்லை. இவளிடம் இனியும் பேசுவது ஒழுக்கமுள்ள தனக்கு ஏற்றதல்ல என்று இராமன் எண்ணமிட்டிருக்க, அந்த அரக்கி மேலும் பேசுகிறாள்.

"நீ இங்கு வந்திருப்பது எனக்குத் தெரியாது. நான் பணிவிடை செய்து வரும் முனிவர்கள்தான் சொன்னார்கள். அதனால் என் வேலைகளையெல்லாம் செய்து முடித்துவிட்டு உன்னைத் தேடி ஓடோடி வந்திருக்கிறேன்"

"நீயோ முனி வேடம் கொண்டிருக்கிறாய். தனிமையிலும் இருக்கிறாய். இராவணனோ முனிவர்களிடம் பகைமை கொண்டவன். நீ என்னை மணம் செய்து கொள்வாயானால், இராவணனுக்கு முனிவர்கள்பால் உள்ள பகை தீர்ந்து போகும். அரக்கர்களும் உனக்கு ஏவல் செய்வார்கள். உனக்கு விண்ணுலக ஆட்சியும்கூட கிட்டும். நீ என்னைத் திருமணம் செய்துகொள்" என்றாள்.

இராமனுக்குச் சிரிப்பு வந்தது. என்ன இவள் பிச்சி போல பேசுகிறாளே! "அடே பெண்ணே! நான் என்ன பாக்கியம் செய்தேன். பெரிய செல்வத்தோடு உன்னையும் கிடைக்கப் பெற்றேன். அரக்கரின் அன்பையும் பெற்றேன். நான் அயோத்தியை விட்டு வந்த பிறகு எவ்வளவு நன்மைகள் எனக்கு" என்று கேலியாகச் சொல்லி சிரித்தான்.

அந்த சமயத்தில் சீதை அங்கே வந்தாள். சுடரொளி போலும் உருவத்தோடு, அரக்கர்களின் காட்டை சுட்டெரிக்கும் எரிதணல் போல கற்பு எனும் தீயான பிராட்டி தோன்றினாள். அரக்கி அன்னையை உற்றுப் பார்த்தாள். அவள் பேரழகில் சற்று தன்னையும் மறந்து போய் நின்றாள். அடடா! இவளைக் கண்ட எனக்கே மயக்க நிலை அடைகிறதே. இவளைக் காணும் ஆடவர்க்கு என்ன நிலை ஆகுமோ? என்று எண்ணமிட்டாள். சீதைமேல் பொறாமைத் தீ மேலிடுகிறது. எதனைச் செய்தாவது இவளை இகழ்ந்து அகலும்படி செய்வேன் என்று தீர்மானித்தாள். இராமனிடம் சீதையைக் காட்டி சொல்கிறாள்:

"இதோ வருகிறாளே, இவள் ஒரு மாயக்காரி. வஞ்சனை செய்யும் அரக்கி. இவள் நினைப்பதை மறைப்பவள். இவளை நம்பாதே! இவள் அழகானவள் என்று எண்ணாதே! இது பொய்யான வேஷம். இவள் மாமிசம் உண்டு வாழும் தொழிலையுடையவள். எனக்கே இவளைப் பார்க்க பயமாக இருக்கிறது. இவளை உடனே இங்கிருந்து விரட்டிவிடு" என்றாள்.

இராமன் மறுபடியும் கேலியாக சூர்ப்பனகையைப் பார்த்து "பெண்ணே! நீ மிகவும் புத்திசாலி. உன்னை யாரால் ஏமாற்ற முடியும்? உன் அறிவினால் ஆராய்ந்து எப்பேர்ப்பட்ட உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறாய்" என்று சொல்லி சிரித்தான். அப்போது சீதை இராமனை நெருங்கி வருகிறாள். சூர்ப்பனகை ஆத்திரத்தோடு "அரக்கியே! நீ ஏன் எங்களுக்கு குறுக்கே வருகிறாய்?" என்று கத்திக்கொண்டு சீதையை நோக்கி பாய்ந்து வருகிறாள்.

இவள் பாய்ந்து வந்ததைக் கண்டு சீதை பதறிப்போய், தனது பஞ்சுபோன்ற மெல்லடி நோவ ஓடிச்சென்று இராமனைக் கட்டிக்கொண்டாள். அரக்கர்களோடு விளையாடுவது தீமையென்றுணர்ந்த இராமன், சூர்ப்பனகையை நோக்கி "பெண்ணே! கொடிய காரியங்களைச் செய்யாதே! என் தம்பிக்கு நீ இப்படி நடந்து கொள்ளும் விவரம் தெரிந்தால் உன்னை தண்டித்து விடுவான். அதனால் ஓடிவிடு இங்கிருந்து" என்றான்.

"பிரம்மனும், திருமாலும், சிவபெருமானும், தேவர்கள் அனைவரும் என்னை அடைய தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க இந்த கள்ளத்தனமுடைய பெண்ணை விரும்பி நீ என்னை இகழ்கிறாய். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்" என்று அதட்டினாள் அரக்கி.

எவ்வளவு எடுத்துச் சொல்லியும் மனம் தெளியாத இந்த அரக்கியிடம் இனிப் பேசிப் பலனில்லை என்று இராமன் சீதையின் பின்னால் போய் தன் பர்ணசாலைக்குள் சென்றுவிட்டான்.

இராமன் போனபிறகு சூர்ப்பனகை நினைக்கிறாள்: என்ன இவன், இவ்வளவு பேசியும் நம்மிடம் ஆசை வைக்க மறுக்கிறானே. கொஞ்சம்கூட மோகம் அடையவில்லை. இதில் என் மேல் கோபம் வேறு வருகிறது. அந்தப் பெண்ணிடம் ஆசை கொண்டிருக்கிறான், அதனால்தான் இப்படி நடந்து கொள்கிறான், என்று எண்ணிக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றாள். இந்த அழகனுடைய மார்பினை இன்று நான் தழுவாவிட்டால் மாண்டுபோவேன் என்று ஒரு மலையடிவாரத்திலுள்ள சோலைக்குச் செல்கிறாள். அப்போது சூரியன் மலையடியில் மறைந்தான். அஸ்தமனமாகியது, செவ்வானம் படர்ந்தது.

அந்திமாலைப் பொழுது வந்ததும் சூர்ப்பனகை காம வசப்பட்டுப் போனாள். அந்த உணர்வு அவளை ஆட்டிப் படைத்தது. நரக வேதனைப் பட்டுத் தவித்தாள். மன்மத பாணம் அவள் நெஞ்சத்தைத் துளைத்தது. காமத்தீ அவள் உடலை சுட்டெரித்தது. சுடுகின்ற தனது தனங்களின் மேல் குளிர்ந்த நீரை ஊற்றிக்கொண்டு சூட்டைத் தணிக்க முயன்றாள். பனிக்கட்டிகளை எடுத்து மார்பில் போட்டுக் கொண்டாள். அவை சூடான பாறையில் வைத்த வெண்ணெய் போல உருகியது.

ஓடிச் சென்று ஒரு சுனையில் மூழ்கினாள். அந்தச் சுனையே சூடேறி கொதிக்கத் தொடங்கியது. தன் உடலை வருத்துகின்ற இந்த காமனை எங்கே கொண்டு சென்று ஒளிப்பது என்று தவித்தாள். வானத்தில் கருத்த மேகக் கூட்டம் தவழ்ந்து வருவதை, இராமன்தான் வருகிறானோ என்றெண்ணி
அந்த மேகத்தைத் தன் கொங்கைகளோடு அணைத்துக் கொள்கிறாள். அம்மேகங்கள் சிதைந்து அழிந்து போவதைக் காண்கிறாள். வாய்விட்டு அழுகிறாள், புலம்புகிறாள்.

விஷத்தை உண்டவள் போல உடல் நடுங்குகிறாள். 'நீலமலைபோன்ற மேனியுடையவனே!' என்று இராமனை விளிக்கிறாள். என்மீது கருணை வைத்து அருள் செய்யமாட்டாயா? என்கிறாள். தன் உயிரே பிரிந்து போனாலும், இராமன் மீது கொண்ட ஆசை அடங்காது என உணர்ந்த அந்த அரக்கி, அந்த அழகிய பெண்ணைப் பக்கத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அவனது கண்கள் என்னையும் பார்க்குமோ? இப்படி காமாக்னியில் அவள் வெந்து தவித்து இரவு முழுவதும் அரற்றியபின், பொழுதும் விடிந்தது. கதிரவன் உதயமானான்.

பொழுது விடிந்ததும் சிறிது மனம் தேறிய சூர்ப்பனகை, அந்தப் பேரழகி அவன் அருகில் இருக்கும்வரை அவன் என்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். எனவே அவளைத் திருடிக் கொண்டுபோய் எங்காவது ஒளித்து வைத்துவிட்டுப் பின் அவள் உருவில் வந்து அவனோடு கூடி வாழ்வதே அறிவுடைமை என்று நினைத்தாள்.

பிறகு மெதுவாக இராமன் இருந்த இடம் வந்து பார்த்தாள். இராமன் தூரத்தில் ஓர் ஆற்றங்கரையில் சந்தி செய்து கொண்டிருப்பதைக் கண்டாள். அவன் தம்பி சீதைக்குக் காவல் இருந்தான் என்பதை அவள் அறியவில்லை. 'இவள் தனியாகத்தான் இருக்கிறாள், இவளை இப்படியே பற்றித் தூக்கிக் கொண்டு ஓடிவிட வேண்டும்' என்று எண்ணி மெதுவாக சீதை இருக்குமிடம் சென்றாள். இதனை அங்கு காவல் செய்து கொண்டிருந்த இலக்குவன் கவனித்து விட்டான்.

"அடீ! நில்!" என்று அதட்டிக்கொண்டே இலக்குவன் அரக்கியை நெருங்கினான். இவள் ஒரு பெண்ணாயிற்றே என்று தன் வில்லை எடுக்கவில்லை. அவள் கூந்தலைப் பற்றி இழுத்து நிறுத்தினான். தன் காலால் அவளை எட்டி உதைத்தான். தன் இடையில் இருந்த உடைவாளை உருவி எடுத்தான்.

இவனையும் அவளோடு சேர்த்து எடுத்துக் கொண்டு ஆகாய மார்க்கத்தில் செல்வேன் என்று அவர்களைத் தூக்கிக் கொண்டு மேலே கிளம்பியவளை, இலக்குவன் இலகுவாக கீழே தள்ளி "இப்படிக் கொடுந் தொழிலைச் செய்யாதே" என்று சொல்லிக் கொண்டே, அரக்கியின் மூக்கையும், செவிகளையும், முலைக்காம்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாகத் தன் வாளால் அறுத்து எறிந்தான். பிறகு அவளது கூந்தலை விட்டான். அப்போது அந்த அரக்கி சூர்ப்பனகை அலறிய அலறல் இருக்கிறதே, அது எட்டு திக்கிலும் கேட்டு எதிரொலித்தது. தேவலோகத்திலும் சென்று கேட்டது. அவள் உறுப்புகளிலிருந்து வழிந்த இரத்தம் உலகம் முழுவதும் படர்ந்தது.

சூர்ப்பனகையின் மூக்கும், காதுகளும், முலைக்காம்புகளும் அறுபட்ட காட்சி, இராவணனின் மணி மகுடமும், பத்துத் தலைகளும் துண்டிப்பதற்குக் குறித்த முஹூர்த்தம் போலத் தோன்றியது.

தன் அங்கங்களைப் பறிகொடுத்து, பெருங்குரல் எழுப்பிக் கூக்குரலிட்டு எகிறி எகிறி குதிக்கிறாள் சூர்ப்பனகை. மேலே எழுந்து குதித்து மீண்டும் மண்மீது விழுகிறாள். தரையில் கிடந்து ஊளையிடுகிறாள். கைகளைப் பிசந்துகொண்டு செய்வதறியாமல் திகைத்து மூர்ச்சை அடைகிறாள். மூர்ச்சை தெளிந்து எழுந்து மீண்டும் பலமாக ஓலமிடுகிறாள். பெண்ணாய்ப் பிறந்த எனக்கு நேர்ந்த கொடுமை இது என கதறுகிறாள்.

இரத்தம் ஒழுகும் மூக்கை மேலாடை கொண்டு துடைக்கிறாள். கொல்லன் உலைக்களத்தில் எழும் தீ போல பெருமூச்சு விடுகிறாள். கையால் தரையை ஓங்கி அடிக்கிறாள். தன் இரு முலைகளையும் கைகளால் எடுத்துப் பார்த்துவிட்டு கதறி அழுது உடல் வேர்க்கிறாள். வலி தாங்கமுடியாமல் சற்று தூரம் ஓடுகிறாள், இரத்தப் பெருக்கினால் சோர்ந்து கீழே விழுகிறாள்.

அருவி போல இரத்தம் பெருகி ஓடிவருகிறது. இவள் அலறல் கேட்டு காடு, நாடு, தேவலோகம் அனைத்திலும் உள்ளவர்கள் பயந்து ஓடுகிறார்கள். தன் குலத்து அரக்கர்கள் பெயர்களையெல்லாம் கூவிக் கூவி அழைத்து பலவாறு புலம்பி அழுகிறாள்.

"நிலை எடுத்து நெடு நிலத்து நீ இருக்கத் தாபதர்கள்
சிலை எடுத்துத் திரியும் இது சிறிது அன்றோ தேவர் எதிர்
தலை எடுத்து விழியாமை சமைப்பதே தழல் எடுத்தான்
மலை எடுத்த தனி மலையே இவை காண வாராயோ?"

தன் அண்ணன் இராவணனை எண்ணி கூக்குரலிடுகிறாள். சிவபெருமானின் மலையைப் பெயர்த்த நீ இருக்கும்போது, வில் எடுத்து கானகம் வந்த இந்த தவக்கோல மனிதர் செய்த அலங்கோலம் காணலையோ அண்ணாவே! என்கிறாள்.

அண்ணா! இராவணா! இந்திரனும், பிரம்மாவும் தேவர்களும் உனக்குப் பணிவிடைகள் செய்து கொண்டு ஏவல் புரிய, தேவ மாதர்கள் உனக்குப் பல்லாண்டு பாடி பணிபுரிய, ஏழு உலகங்களையும் தனிக்குடையில் ஆண்டுகொண்டு நீ சந்திரன் போல் வீற்றிருக்கும் சபைக்கு வந்து எப்படி நான் என் முகத்தைக் காட்டுவேன்.

"காற்றினையும் புனலினையும் கனலினையும் கடுங்காலக்
கூற்றினையும் விண் இயங்கு கோளினையும் பணி கோடற்
காற்றினை நீ ஈண்டு இருவர் மானிடவர்க்கு ஆற்றாது
மாற்றினையோ, உன் வலத்தை சிவன் தடக்கை வாள் கொண்டாய்!"

"சிவபெருமான் உனக்களித்த 'சந்திரஹாசம்' எனும் வாளைக் கைக்கொண்ட இராவணா! காற்றையும் (வாயு) புனலினையும் (வருணன்) கனலினையும் (அக்னி) கடுங்காலக் கூற்றினையும் (எமன்) விண் இயங்கு கோளினையும் (கிரஹங்கள்) இவையெல்லாம் உன் ஏவல் கேட்டுப் பணிசெய்ய வைத்த உனக்கு வில்லேந்திய இரண்டு மானிடர்களை எதிர்கொள்ள முடியாமல் போயிற்றோ?"

"என் அங்கங்களை அரிந்து என்னைக் கீழே தள்ளி உருட்டிவிட்டு ஒரு மனிதன் தன் வீரத்தை மெச்சிக் கொள்ளும்படி விட்டு, நான் மட்டும் இப்படி ஓர் ஆதரவும் இன்றி புலம்பிக் கொண்டு இருப்பதோ? கரன் இருக்கும் வனம் அல்லவா இது. நமக்கு உரிமை உள்ள இடத்திலேயே எனக்கு இப்படிப்பட்ட நிலையா?".

"அஷ்டதிக் கஜங்களோடு போரிட்டு அவற்றின் தந்தங்களை ஒடித்துப் போரில் வென்ற இராவணா! இராவணா! ஆசையும், காமமும் கண்களை மறைக்க நான் மூக்கறுபட்டு இப்படிப் புலம்பித் தவிப்பது உனது வீரத்துக்கு இழுக்கு ஆகாதா?"

"அசுரர்களையெல்லாம் வென்றுவிட்டு, தேவேந்திரனையும் வென்று அவனைச் சிறைப்படுத்தி, தேவர்களை உனக்குக் குற்றேவல் செய்ய வைத்த மருமகனே! மருமகனே! (இந்திரஜித்) காட்டில் ஒரு மனிதன் என் காதும் மூக்கும் அரிய நான் கதறி அழுது சாக வேண்டியதுதானா?".

"இராவணன் திக்விஜயம் சென்றபோது நீயும் (இந்திரஜித்தும்) கூடச் சென்று ஏழுலகும் உரு அழிய இந்திரனை வென்ற மருமகனே! மேகநாதா! இந்த மானிடரோடு போரிட்டு உன் வலிமை காட்ட வாராயோ?"

"வலிமை கொண்ட ஆயுதங்களைத் தாங்கிய கர தூஷணர்களே! நீங்கள் எல்லோரும் எனக்கு நேர்ந்த இந்த அவமானத்தைக் கவனியாமல் எங்கே போனீர்கள்? கும்பகருணனைப் போல தூங்குகிறீர்களா?"

சூர்ப்பனகை இப்படி அழுது புரண்டு அரற்றிக் கொண்டிருக்கும் வேளையில் நதிக்கரையில் சந்தி முடித்து, கையில் வில்லோடும் வந்த இராமன் இவளை கவனித்தான். வருகின்ற இராமனைப் பார்த்து அந்த அரக்கி, உடலில் குருதி ஆறாக ஓட, கண்கள் நீர் சொரிய, என் தலைவனே! ஐயோ! உன் திருமேனிக்கு ஆசைப்பட்டு அன்பு காட்டியதால் நான் படும் துன்பம் இது! பாராயோ, பாராயோ!".

இந்தக் காட்சியைக் கண்ட இராமன் ஏதோ பெரிய தீங்கிழக்க இவள் முயன்றிருக்கிறாள். காதும், மூக்கும் அரியப்பட்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான். முன்பு எழில் நிறைந்த உருவில் இருந்தவள் இப்போது கோர அரக்கியாக இருப்பதறிந்து "நீ யார்?" என்றான்.

"என்னை உனக்குத் தெரியவில்லையா, நான்தான் இராவணனின் தங்கை" என்றாள்.

"அரக்கர்கள் வாழும் பகுதியை விட்டு நீங்கி, நாங்கள் தவம் செய்யும் இடத்திற்கு நீ ஏன் வந்தாய்?" என்றான் இராமன்.

"நேற்றும் நான் வந்தேனே!" என்றாள் அவள்.

உடனே இராமன் இலக்குவனை நோக்கி "வீரனே! இப்படி இவள் காதையும், மூக்கையும் இழக்கும்படியாக இவள் செய்த கொடிய தீங்கு என்ன?" என்றான்.

நடந்தவற்றை இளையவன் எடுத்துரைத்தான். சீதையைத் தின்ன இந்த அரக்கி ஓடிவந்தாள் என்றான். அரக்கி சொல்கிறாள்: "நீ என்னை மணந்து கொள். எனக்கு இழைத்த தீமைக்காக என் அண்ணன் இராவணன் உன்னைக் கொல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்" என்றாள். இராமன் கோபத்துடன் அவளை அங்கிருந்து போகும்படி கூறுகிறான். அவள் போக மறுக்கவும் இலக்குவன் இவளால் பெருந்தொல்லை, இவளைக் கொல்வதே சரி என்கிறான்.

இவ்வளவு பேசியும் அவள் போகவில்லையென்றால், அவளைக் கொல்வதே சரி என்கிறான் இராமனும். "இதோ போகிறேன். உங்களைக் கொன்று அழிக்க கரனை அழைத்து வருகிறேன்" என்று கோபமாய் கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றாள் சூர்ப்பனகை.

இராமன் துரத்திவிட அங்கிருந்து ஓடிப்போன சூர்ப்பனகை, உடலிலிருந்து குருதி ஒழுக, அவிழ்ந்த கூந்தலோடு, மூக்கு இருந்த இடத்தில் இரத்தம் வழியும் இரண்டு துவாரங்கள் தெரிய, மதகு போன்ற வாயோடு, செவ்வானம் மேல் படர்ந்த மேகம்போல, அந்தக் காட்டில் அதிகாரம் செய்துவரும் கரன் எனும் அரக்கன் காலில் போய் விழுந்தாள், அழுதாள், அரற்றினாள். இந்த கரன், தூஷணன் ஆகியோர் அவளுடைய சகோதரர்கள்.

கரனுக்கு கோபம் வந்தது. காதிலும் மூக்கிலும் அவனடைந்த கோபத்தின் காரணமாக புகை வந்தது. "உனக்கு இந்த கேட்டை செய்தவர் யார்?" என்று கேட்டான்.

"இரண்டு மானுடர்கள்; தவசிகள்; கையில் வில் ஏந்தியவர்கள்; வாளேந்திய கரத்தினர்; மன்மதன் போன்ற மேனியர்; தர்மவழி நடப்பவர்கள்; தசரத குமாரர்கள்; அரக்கர்களை அழிக்கும் நோக்கில் வந்து கொண்டிருப்பவர்கள்" என்றாள்.

"அவர்களோடு ஒரு பெண். வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத பேரழகி அவள். அவளை இலங்கை வேந்தர்க்குக் கொண்டு செல்ல நான் முயன்றபோது இப்படிச் செய்து விட்டார்கள்" என்றாள்.

"அப்படியா? என்னுடன் வா. அவர்களை எனக்குக் காட்டு" என்றான் கரன்.

கரன் சூர்ப்பனகையுடன் கிளம்பி இராம லக்ஷ்மணருடன் போர்புரியச் செல்ல தயாராகும்போது, அவனுடைய படைத்தலைவர் வந்து, தானே சென்று அந்த மானுடர்களை வென்று வருவதாகக் கூறுகிறான். சூலம், வாள், மழு, தோமரம், சக்கரம், காலபாசம், கதை முதலான ஆயுதங்களோடு படை புறப்பட்டது.

கரனுடைய படை இராமன் தங்கியிருந்த பர்ணசாலை சென்றடைந்தது. அங்கு இருந்த இராமனை படைத்தலைவனுக்குச் சுட்டிக் காட்டினாள் சூர்ப்பனகை. உடனே அரக்கர்கள் "கொல்லுவோம்", "வெட்டுவோம்" என்று கூச்சலிட்டுக் கொண்டு அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர். இந்த சந்தடிகளையெல்லாம் கேட்டு இராமன் நிலைமையைப் புரிந்து கொண்டான். மூக்கறுபட்ட அரக்கி உதவிக்கு ஆட்களோடு வந்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான்.

இலக்குவனை அழைத்து "தம்பி! நீ இங்கே காவல் இரு. சீதையப் பார்த்துக் கொள். நான் போய் அவர்களை கவனித்துக் கொள்கிறேன்" என்று சொல்லி புறப்பட்டான்.

"போருக்கு வாருங்களடா!" என்று விளித்து தன் வில்லில் அம்பைப் பூட்டினான் இராமன். அரக்கர்களின் ஆயுதங்கள் இராமன் அம்பினால் துண்டிக்கப்பட்டுத் தூள்தூளாயின. அரக்கர் நெஞ்சங்களில் இராமபாணம் துளைத்துச் சென்றன. இது கண்டு சூர்ப்பனகை அஞ்சி ஓடினாள். ஓடிப்போய் கரனிடம் அவனுடைய படை அழிந்துபோன செய்தியைக் கூறினாள். கரனுக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. தன் படைகளை ஒன்று திரட்டிக் கொண்டு தேரில் ஏறிக்கொண்டான். பெரும் படையோடு போருக்கு எழுந்தான்.

கடல்போன்ற கரனுடைய சேனை, இராமன் இருக்குமிடம் சென்றடைந்தது. இராமனும் போருக்கு ஆயத்தமானான். இலக்குவனும் போருக்கு ஆயத்தமாக வந்து நின்றதைக் கவனித்த இராமன், அவனிடம் தானே போரை கவனித்துக் கொள்வதாகவும், அவன் போய் சீதைக்குக் காவலாக இருக்கும்படி கூறிவிட்டு கரனுடைய படையுடன் போருக்குத் தயாரானான்.

கரனுக்கு இராமனை அடையாளம் காட்டுகிறாள் சூர்ப்பனகை. அரக்கர் சேனை நாலாபுறமும் சூழ்ந்து கொள்ள இராமன் தனியனாய் தன் வில்லினை ஏந்தி போர் புரிகிறான். இருளுக்கு இடையே ஒரு விளக்கினைப் போல காட்சி தந்தான் இராமன். கடுமையான யுத்தம் நடந்தது. இராமனின் அம்புகள் அரக்கர்களையும், அவர்களுடைய ஆயுதங்களையும் வீழ்த்தின. தலைகள் துண்டிக்கப்பட்டு அரக்கர் சேனை அழிந்தது. குருதிப் பெருங்கடலில் யானைகள், குதிரைகள் மிதந்தன. அரக்கர்களின் செத்த உடல்கள் மலை போல குவிந்து கிடந்தன. மழை பொழிவது போல இராமனின் அம்புகள் சிந்தின. அதனால் அரக்கர்களின் தலைகளும் சிந்தின. அவர்கள் விழிகள் தெறித்து வீழ்ந்தன; தழல் சிந்தின; எதிர்த்து வந்த யானைகள் தரையில் வீழ்ந்தன; தேர்கள் உடைந்து சிதறின; தொலைதூரம் தீப்பொறிகள் சிந்தின; அரக்கர்தம் உயிர்களும் சிந்தின.

படைத் தலைவர்கள் பதினான்கு பேர் எதிர்த்து வந்து இராமன் செலுத்திய அம்பிற்கு இரையாயினர். இராமனை சுற்றிலும் அரக்கர்கள் சூழ்ந்துகொண்டு போரிட்டனர். அனைவரையும் இராமனின் அம்புகள் துளைத்தன. திரிசிரன் என்பவன், மூன்று தலைகள் உள்ளவன் அளவற்ற வலிமையுடையவன், அவன் இராமனை எதிர்த்துப் போர் செய்யத் தொடங்கினான். கடுமையான போர் நிகழ்ந்தது. இராமன் அவனையும் கொன்று வீழ்த்தினான். போரில் இராமன் பாணங்களால் உயிர் துறந்த அரக்கர்கள் தேவர்களாயினர். கூட்டமாய் அரக்கர் போரிட இராமன் தனியனாய் உள்ளானே என்று தேவர்கள் வருந்தினர்.

திரிசிரன் வானத்தில் எழுந்து போரிட்டு இராமன் பாணத்திற்கு பலியானான். அவனது மூன்று தலைகளையும் இராமபாணம் அறுத்துத் தள்ளியது. அரக்கர்கள் பயந்து சிதறி ஓடினர். ஓடிய அரக்கர்களை தூஷணன் எனும் அரக்கன் தடுத்து நிறுத்தினான். ஒரு மனிதனை எதிர்த்துப் போரிட முடியாமல் ஓடலாமா என்று ஏளனம் செய்தான். பின் அவர்களைத் தேற்றி போருக்கு அழைத்துச் சென்று போரிடச் செய்கிறான். தூஷணனுக்கும் இராமனுக்கும் கடுமையான போர் நிகழ்ந்தது.

போர் நடந்துகொண்டிருந்த போது அரக்கர்களின் உயிர்களைப் பறித்து பறித்து எமன்கூட அயர்ந்து போனான். இராமனது வாளிக்கு தூஷணனும் அடிபட்டு மாண்டுபோனான். கரன் மட்டும் தனித்து நின்று போர் புரிந்தான். கடுமையான போர் கரன் இராமன் இடையே நடைபெறுகிறது. இறுதியில் கரனும் இராமன் கணையால் அடிபட்டு மாண்டு போகிறான்.

இதனைக் கண்டு தேவர்கள் ஆர்த்தனர். எழுந்து மகிழ்ச்சியில் ஆடினர். கற்பக மலர்களை இராமன் மீது தூவினர். அரக்கர் கூட்டத்தைக் கர, தூஷண, திரிசிரன் ஆகிய மூவரோடும் அழித்த பிறகு இராமனும் ஆசிரமம் திரும்பினான். வெற்றி வீரனாகத் திரும்பி வந்த இராமனை சீதையும், இலக்குவனும் கண்களில் நீர் சோர வரவேற்றுத் தங்கள் கண்ணீரால் அவனது பாதங்களைக் கழுவினர்.

அங்கே .....

போர்க்களத்தில் கரன், தூஷணன், திரிசிரன் ஆகியோர் மாண்டது கண்டு சூர்ப்பனகை கதறி அழுதாள்.

"ஆக்கினேன் மனத்து ஆசை, இவ்வாசை என்
மூக்கினோடு முடிய முடிந்திலேன்
வாக்கினால் உங்கள் வாழ்வையும், நாளையும்
போக்கினேன், கொடியேன் என்று போயினாள்"

இராமன் மீது நான் கொண்ட ஆசை, என் மூக்கோடு மட்டும் போகவில்லை, என் வாக்கினால் உங்கள் உயிர்களையும் பலி கொடுத்தேன் பாவி நான், என்று புலம்பினாள். பிறகு நான் போய் இராவணனிடம் சென்று முறையிடுகிறேன் என்று இலங்கைக்கு ஓடுகிறாள்.சூர்ப்பனகை தனது சகோதரர்கள் இறந்த துக்கத்தையும் மறந்து, இராமன் மீது வைத்த ஆசை மனத்தில் மேலோங்க, சீதையின் அழகையெல்லாம் இராவணனித்தில் கூறிவிட ஓடோடி வருகிறாள்.

இலங்கை அரண்மனையில் ஓர் ஒப்பற்ற மணிமண்டபத்தில் இராவணன் சிறப்புடன் அமர்ந்திருக்கிறான். அவனுடைய சிறப்புக்களைக் கண்டு மும்மூர்த்திகளும் தேவர்களும் மனம் வெதும்பும்படியாக ஆடம்பரமாக வீற்றிருக்கிறான். அந்த சபா மண்டபத்தில் கூடியிருந்த அரசர்கள் எல்லாம் எப்போது இராவணன் தங்கள் பக்கம் திரும்புவானோ என்று எதிர்பார்த்துத் தலைக்கு மேல் தங்கள் கரங்களைக் கூப்பிக்கொண்டு பணிவாக நின்று கொண்டிருந்தார்கள்.

தன்னருகில் நிற்கும் பணியாளனிடத்தில் ஏதாவது இராவணன் கூறினாலும், தங்களிடம் தான் கூறுகிறானோ என்று தலை ஆட்டிக் கொண்டு நிற்கிறது அந்தக் கூட்டம். அங்கு கின்னரர்கள் என்று ஒரு வகையினர். இவர்கள் யாழைக் கையில் கொண்டு இசை பாடுபவர்கள். ஒருவகை தேவ ஜாதியினர். இவர்களுக்கு மனித முகங்களும், ஒருவகை பறவையின் உடலும் அமைந்தவர்கள். இவர்கள் ஆண், பெண் இருபாலரும் இணைபிரியாமல் இருக்கக்கூடியவர்கள். இவர்கள் அந்த அவையில் இருக்கிறார்கள். இராவணன் எப்போது யாரிடம் என்ன சொன்னாலும் இவர்கள் உடல் நடுங்குகின்றன.

அவையில் தும்புரு என்னும் கந்தர்வன், இராவணனின் தோள் வலிமையை இசையில் பாடுகிறான். நாரத முனிவர் தனது வீணையில் தேவகானம் இசைக்கிறார். தேவ குருவான பிரஹஸ்பதியும், அசுர குருவான சுக்கிராச்சாரியும் அவன் அவையில் அடக்க ஒடுக்கமாய் அமர்ந்திருக்கின்றனர். காண்போர் நடுநடுங்கும் எமன்கூட இராவணன் சபையில் தன் ஆயுதங்களையெல்லாம் நீக்கிவிட்டு தன் ஆடையாலும், கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டு அடக்கத்தோடு, நாள், கிழமை, நாழிகை இவற்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

இப்படி தேவர்கள் எல்லாம் இராவணன் சபையில் கைகட்டிச் சேவகம் செய்து கொண்டிருக்கின்றனர். இவ்வளவு ஆடம்பரத்தோடு அரசவையில் வீற்றிருக்கையில் அவனது தங்கை சூர்ப்பனகை அலங்கோலமாய், தலைமீது கைகளை வைத்துக் கொண்டு கதறி அழுது ஊளையிட்டுக் கொண்டு, அரண்மனையின் வடக்கு வாசலுக்கு வந்து சேர்ந்தாள்.

இப்படி வந்து நின்ற சூர்ப்பனகையைப் பார்த்து இலங்கை அரக்கர்கள் வருத்தப்படுகின்றனர். இராவணனது தங்கை இவள் என்பது தெரிந்திருந்தும் 'அன்னையே!' என்று இவளை வணங்காமல், இப்படிச் செய்திருக்கிறார்களே என்கிறார்கள். அதுநாள் வரை அந்த இலங்கை நகரத்தில் முழவின் ஒலி, வீணை இசை, நல்ல யாழின் ஒலி, குழல் ஒலி போன்ற மங்கல இசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது போக, இன்று புதுமையிலும் புதுமையாக ஓர் அழுகுரல் அமங்கலமாக கேட்கிறதே. அந்த அழுகுரலை எழுப்புபவள் இராவணனின் தங்கை சூர்ப்பனையாயிற்றே என்று அரக்கர்கள் பயந்தனர். சூர்ப்பனகை அழுதுகொண்டு ஓடிவந்து அரசவையில் வீற்றிருக்கும் இராவணனின் காலடியில் விழுந்து புரண்டு அழுகிறாள்.

"முழவினில் வீணையின் முரல் நல் யாழினில்
தழுவிய குழலினிற் சங்கிற் தாரையில்
எழுகுரல் அன்றியே என்றும் இல்லதோர்
அழுகுரல் பிறந்தது அவ்விலங்கைக்கு அன்றரோ!"

மூவுலகங்களும் இந்தக் காட்சியைக் கண்டு அஞ்சின. எங்கும் இருள் சூழ்கிறது. ஆதிசேடனும் தன் உடலை நெளிக்கிறான்; பூமி அதிர்ந்தது. மலைகள் ஆடின. சூரியனும் பயந்து இருண்டான். அஷ்டதிக் கஜங்கள் பயந்து ஓடின. தேவர்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள்.

இராவணன் புருவத்தை நெறித்தான்; அவன் கண்கள் தீ உமிழ்கின்றன. இருபது தோள்களும் புடைத் தெழுந்தன. உலகங்கள் நிலைமாறி சுழன்றன. தேவர்கள் திகைத்தனர். அப்போது அவன் அடைந்த நிலையை கம்பர்பெருமான் வாக்கால் பார்க்கலாம்.

"மடித்த பில வாய்கள் தொறும் வந்து புகை முந்தத்
துடித்த தொடர் மீசைகள் சுறுக்கொள உயிர்ப்பக்
கடித்த கதிர் வாள் எயிறு மின் கஞல மேகத்து
இடித்தஉரும் ஒத்து உரறி, "யாவர் செயல்?" என்றான்".

இராவணனின் குகை போன்ற வாய்களில் கோபத் தீயால் புகை எழுகிறது. மீசைகள் துடிக்கின்றன, அவை கருகிவிடுமோ என பெருமூச்சு கிளம்ப, இடிபோன்ற குரலில் தன் தங்கையைப் பார்த்து "உன்னை இப்படிச் செய்தது யார்?" என்கிறான்.

"புவி காவல் புரியும் அரசர்கள், மானுடர்கள், தங்கள் வாளை உருவி இந்தச் செயலைச் செய்தார்கள்" என்றாள்.

"என்ன? மனிதர்கள் செய்தார்களா?" இராவணன் வெடிச் சிரிப்புச் சிரித்தான். ஏளனமாகச் சிரித்தான். கண்களில் தீப்பிழம்புகள் தோன்றின. "பொய் சொல்லாதே! பயத்தை விடு. மனிதர்களாவது, இப்படிச் செய்வதாவது, உண்மையைச் சொல்" என்றான் இராவணன்.

அதற்கு சூர்ப்பனகை சொல்கிறாள். "அண்ணா! உண்மைதான். மானுடர்கள்தான் இப்படிச் செய்தார்கள். மன்மதனைப் போல உருவம் கொண்டவர்கள். தங்கள் தோள் வலியால் மேரு மலையையும் அழிக்கக்கூடிய ஆற்றலுடையவர்கள். தங்கள் வில் வலியால் ஏழு உலகங்களின் பலத்தையும் அழிப்பார்கள்" என்றாள்.

"அண்ணா! அவர்கள் மரவுரி தரித்தவர்கள். முனிவர்களை வணங்குகிறார்கள். வீரக்கழல் அணிந்திருக்கிறார்கள். வில்வித்தையில் நன்கு தேர்ந்தவர்கள். வேதத்தை ஓதுகிறார்கள். சத்திய வழி நடப்பவர்கள் கலைகள் அனைத்தையும் கற்றவர்கள். கையில் வில்லும், தோளில் அம்புராத் தூணிகளும் சுமக்கிறவர்கள். உன்னை துளியளவுகூட மதிக்காதவர்கள் அவர்கள்"

"அண்ணா! மன்மதன் என்பவன் ஒருவன் தானே? ஆனால் இவர்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஈடு இணை யாருமில்லை. முதற் தேவர் மூவருக்கும் இணையானவர்கள்".

"இவர்கள் ஒரு சபதம் செய்திருக்கிறார்கள். அது என்ன சபதம் தெரியுமா? அரக்கர் குலத்தையே வேரோடு அழிக்கப் போகிறார்களாம்".

"இவர்கள் தசரத சக்கரவர்த்தியின் குமாரர்கள். இராமன், இலக்குவன் என்பது அவர்களது பெயர்கள்" என்றாள். தன் தங்கைக்கு இப்படியொரு தீங்கு செய்தவர்கள் மானுடர்கள்; அப்படித் தீங்கு செய்த பின்னும் அவர்கள் உயிரோடு இருப்பது அவமானம். என் கையில் சிவபெருமான் கொடுத்த வாள் இருக்கிறது. அவன் கொடுத்த முக்கோடி வாழ்நாள் இருக்கிறது. அந்த கைலாயத்தையே பெயர்த்தெடுத்த தோள்கள் உண்டு. நானும் உயிரோடு இருக்கிறேன், என்று சொல்லிக்கொண்டே நகைத்த இராவணன் காட்டில் காவல் இருக்கும் கரன் தூஷணனிடம் நீ முறையிடவில்லையா, அவர்கள் இந்த மானுடர்களைக் கொல்லவில்லையா? என்று கேட்டான்.

இப்படி இராவணன் கேட்டதும் சூர்ப்பனகை மீண்டும் 'ஓ' வென்று ஒப்பாரி வைத்து அழுதாள். கைகளால் தன் வயிற்றில் அடித்துக் கொண்டு அலறினாள். தரையில் விழுந்து புரண்டாள். பின்பு சிறிது மனம் தேறி சொல்லுகிறாள், "நான் போய் கரனிடம் நடந்ததைச் சொல்லி அழுதேன். அவன் பெரும் படையோடும் வீரர்களோடும் புறப்பட்டுச் சென்று அந்த இராமனுடன் போரிட்டான். மூன்றே நாழிகைப் பொழுதில் இராமனின் அம்புகளுக்கு கரனும் தூஷணனும் இரையாகி மேலே சென்று விட்டார்கள்" என்றாள்.

தனி ஒருவனாய்ப் போரிட்டுத் தன் தம்பியான கரன் தூஷணன் இருவரும் படையோடு அழிந்த செய்தி கேட்டு இராவணன் கண்களில் நீர் வழிய தீயைக் கக்கின. அவன் உள்ளத்தில் எழுந்த கோபத் தீயில் துன்பம் சேர்ந்து தீயிடை இட்ட நெய்போல கொழுந்து விட்டு எரிந்தது.

"அது போகட்டும், அந்த மானுடர்கள் உன் அங்கங்களை அரியும்படியாக நீ என்ன குற்றம் செய்தாய்? அதைச் சொல்"

"அதுவா? அது, அது ... ஹூம்.. சித்திரத்தில் எழுத முடியாத பேரழகு படைத்த அந்த இராமனோடு, தாமரை மலரில் இருந்து நீங்கி வந்த மகாலக்ஷ்மி போன்ற பேரழகி ஒருத்தி வந்திருக்கிறாள் அண்ணா! அவள் பொருட்டு இப்படி நடந்து விட்டது" என்றாள்.

"யார் அவள்?" என்றான் இராவணன்.

"நீ வாழ்க! அண்ணா! அவள் இருக்கிறாளே, அவளை எங்ஙனம் வர்ணிப்பேன். அவள் அல்குல் ஒரு தேர். அவள் கொங்கைகள் செம்பொன்னால் ஆன சிவந்த செப்புகள். அவள் பாதம் படுவதற்கு பூமி புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவள் பேர் சீதை"

"அவள் பேச்சு இனிய கனியின் சுவை; தேனூறும் மலர்களையுடைய கூந்தலை உடையவள்; தேவ மகளோ எனும்படியான அவளுக்கு திருமகள் சேடியாகக் கூட இருக்கமுடியாத உயர்ந்தவள்"

"ஐயா! அவள் சொற்கள் அமுதம் போன்றவை; அவளது நீண்ட அழகிய கூந்தல் நீருண்ட மேகம் போன்றது; பொழியும் மழையைப் போன்றது; அவள் பாதங்கள் செம்பஞ்சு போன்றது; விரல்களோ செம்பவழம் போன்றது, அவளது முகம் தாமரை மலர் போன்றது, கண்களோ பெரிய கடல் போன்றது".

"சிவன் காமனை எரித்து அழித்துவிட்டதாகச் சொல்வது பொய். அவன் இந்தப் பெண்ணின் அழகைக் கண்டு காம நோய் பிடித்து மெல்லத் தன் உருவம் தேய்ந்து போனான். இவளைப் போல அங்க லக்ஷணங்கள் உடைய பெண்ணை நீ எந்த உலகத்திலும் காணமுடியாது. அவளது பேரழகை எப்படி எடுத்துரைப்பேன்".

"தோளையே சொல்லுகேனோ, சுடர் முகத்து உலவுகின்ற
வாளையே சொல்லுகேனோ, வல் அவை வழுத்துகேனோ
மீளவும் திகப்பது அல்லால் தனித்தனி விளம்பல் ஆற்றேன்
நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னா".

அவளது தோள் அழகை வர்ணிப்பேனா, முகத்தில் அங்கும் இங்குமாக அலையும் கருமையான கண்களை வர்ணிப்பேனா, எழில் கொஞ்சும் அவளது கொங்கைகளை வர்ணிப்பேனா, பார்த்துப் பார்த்துத் திகைத்துப் போனேன், எப்படி ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியாக வர்ணிப்பேன், நீதான் அவளை நாளையே பார்க்கப் போகிறாயே, பிறகு நான் அதைப்பற்றிச் சொல்லுவானேன்".

"அவளது நெற்றியை வில் போன்றது என்று சொல்லலாமா, அவளது கருவிழிகள் வேல் போன்றது என்று சொல்லலாமா, அவளது பற்கள் இருக்கின்றனவே அவற்றை முத்துக்களுக்கு ஒப்பிடலாமா, அவளது சிவந்த இதழ்களை பவழம் போன்றது என்று சொல்லலாமா, என்றாலும் கூட சொற்கள் பொருந்துவது போல பொருள் சரியாகப் பொருந்தவில்லையே."

இப்போது சூர்ப்பனகை சீதையின் அழகையும், அவளது அங்கங்களின் அளவற்ற அழகு சிறப்பு இவைகளையும் சொல்லி இராவணன் மனதில் மோகத்தீயை மூட்டுகிறாள். "ஐயா! தேவேந்திரனுக்கு சசி எனும் இந்திராணி கிடைத்து விட்டாள்; அறுமுகனாம் முருகனுடைய தந்தையாகிய சிவபெருமானுக்கு உமாதேவியார் கிடைத்து விட்டார்; தாமரைச் செங்கணான் திருமால் திருமகளைப் பெற்றான்; அதுபோலவே இப்போது நீ சீதையைப் பெறப் போகிறாய். இதில் நான் கூறியவர்கள் எல்லோரையும் காட்டிலும் உனக்குத்தான் பெருமை அதிகம்" அந்தப் பாடல் இதோ:

"இந்திரன் சசியைப் பெற்றான், இருமூன்று வதனத்தோன் தன்
தந்தையும் உமையைப் பெற்றான், தாமரைச் செங்கண்மாலும்
செந்திரு மகளைப் பெற்றான், சீதையை நீயும் பெற்றால்
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இல்லை உனக்கே ஐயா!".

இந்த பாடலின் கடைசி வரியை வேறு விதமாகவும் பொருள் கொள்ளும்படி கவிச்சக்கரவர்த்தி ஆக்கியிருப்பதைப் படித்துப் படித்து இன்புறத்தக்கது. அதாவது "அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு, உனக்கு இல்லை ஐயா!" என்றும் பொருள் கொள்ளும்படி இருக்கிறது.

"உயர்ந்த தோள் வீர! மும்மூர்த்திகளில் ஒருவனான பரமேஸ்வரன் உமையம்மையைத் தன் உடலில் ஒரு பாதியாக வைத்துக் கொண்டான்; அந்தத் திருமால் இருக்கிறானே, அவன் தாமரை மலரிலுள்ள திருமகளைத் தன் மார்பில் வைத்துக் கொண்டான்; பிரம்மதேவன் கலைமகளைத் தன் நாவில் வைத்துப் பாதுகாக்கிறான்; பரந்த ஆகாயம் போன்ற விரிந்த தோளையுடைய இராவணா! மின்னல் போன்ற துடி இடையாளான சீதையை நீ அடைந்தால் எங்ஙனம் வைத்து வாழ்வாய்?". சுவையான அந்த பாடலைப் பாருங்கள்.

"பாகத்தில் ஒருவன் வைத்தான்; பங்கயத்து இருந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான்; அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தின் மின்னை முன்னே வென்ற நுண் இடையினாளை
மாகத் தோள் வீர! பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி?"

"ஐயனே! கொடை வள்ளலே நீ தவறு செய்ய மாட்டாய். கிளி போன்று பேசுகின்ற சீதைக்கு உன் அனைத்துச் செல்வங்களையும் கொடுத்து விடு. உனக்கு எப்பேர்ப்பட்ட நன்மை செய்திருக்கிறேன் பார்த்தாயா? ஆனால் பாவம், உன் அரண்மனையில் வாழும் அனைவருக்கும் தீமையல்லவா செய்கிறேன்". அந்த சீதையைக் கவர்ந்து வருவதன் மூலம், அவன் தன் உயிரையே இழக்கப் போகிறானல்லவா, அதனை எண்ணியோ என்னவோ, சூர்ப்பனகை அவனை வள்ளலே என்று அழைக்கிறாள். "நீ பிழைக்கல் ஆற்றாய்" என்று நீ தவறு செய்ய மாட்டாய் என்று பொருள்பட இருந்தாலும், இனி நீ பிழைக்கப் போவதில்லை என்ற பொருளிலும் கொள்ளலாமே! அத்தகைய வஞ்சக எண்ணத்தோடுதானே அந்த சூர்ப்பனகை இராவணனிடம் வந்திருக்கிறாள். முதன் முதலாக இந்த சூர்ப்பனகையை அறிமுகம் செய்யும் இடத்திலேயே, கம்பர் 'இவளை அரக்கர் குலத்தையே பூண்டோடு அழிக்கும் விரதம் கொண்டவள்' என்று அறிமுகப் படுத்துகிறார். தன் கணவனுக்கு இராவணன் செய்த தீங்குக்குப் பழிவாங்கவே அவள் இப்படியொரு நாடகத்தை நடத்துகிறாள்.

"அண்ணா! இந்த சீதை எந்தப் பெண்ணின் வயிற்றிலும் பிறந்தவளல்ல. தேவாசுரர்கள் பாற்கடலைக் கடையும் போது, இந்த பூமிக்கு இவள் கிடைத்து பெருமை சேர்த்தாள். அப்பேற்பட்ட சீதையை நான் உனக்குத் தந்தேன். அதற்குப் பிரதியாக, நீ அந்த இராமனை எனக்குக் கொடுத்து விடு" என்று பேரம் பேசுகிறாள்.

"நன்மையோ, தீமையோ, ஒருவனுக்கு அவை ஊழ்வினை காரணமாகத்தான் கிட்டுகிறது. என்றாலும், அது எப்போது கிடைக்க வேண்டுமோ அப்போதுதான் கிடைக்குமே தவிர, வேறு காலங்களில் கிடைத்து விடுமா? பத்து முகங்களும், மார்பும், இருபது தோள்களும், இருபது கண்களும் படைத்த நீ, இந்த சீதையைப் பெற்ற பின்தான் முழு செல்வமும் பெற்றவனாக ஆகிறாய்" என்று அவனுக்கு சீதை மேல் ஏற்பட்டுள்ள மோகத்தைத் தூண்டுகிறாள். அவளது அடிமனத்தில் இதுவரை உன்னை அழிக்கும் காலம் வரவில்லை, ஊழ்வினை இப்போது இராமன் உருவத்தில் உன்னை அழிக்க வந்திருக்கிறது என்று நினைத்துத்தான் அப்படிப் பேசினாளோ என்னவோ!

"அத்தனை சிறப்புக்களைக் கொண்ட சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து உன்னிடம் சேர்க்க வேண்டுமென்றுதான், நான் அவள் அருகில் சென்றேன். அப்போது அந்த இராமனின் தம்பி இலக்குவன் இடையில் புகுந்து, நான் அவளைப் பிடிக்கும் முன்பாக, என் மூக்கையும் காதையும் அரிந்து விட்டான். அதனால் என் வாழ்வும் முடிந்து விட்டது. நடந்த விஷயங்களையெல்லாம் உன்னிடம் சொல்லிவிட்டு என் உயிரை விட்டுவிட தீர்மானித்து விட்டேன்" என்கிறாள். இப்போது இப்படிப் பேசுபவள் சற்று முன்பாக, சீதையை நான் உனக்குத் தந்தேன் அல்லவா, பதிலாக நீ அந்த இராமனை என்னிடம் தந்துவிடு என்கிறாளே, அப்படியென்றால், அவளது பேச்சு வஞ்சகமான பேச்சு அல்லவா?

நீ இழைத்த குற்றம் என்ன என்று இராவணன் கேட்டதற்கு, சாங்கோபாங்கமாக, அந்த அரக்கி இப்படி பதில் சொல்லி, அவன் மனத்தில் காமத் தீயை நன்றாக மூட்டிவிட்டாள். பெரும்பாலும் ஆண்கள் அழிவது இந்த காமப் பசிக்குத் தானே!

சூர்ப்பனகை ஏவிய அந்த மோகனாஸ்த்திரம் இராவணைனை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது. காமனுடைய கணைகள் அவன் நெஞ்சிலே பாய்ந்து, சூர்ப்பனகை வர்ணித்த சீதையை மறக்க முடியாதவனாகி, தன் தம்பி முறையாகும் கரன் முதலானவர்கள் இறந்ததைக் கூட மறந்தான். அதைவிட தன் தங்கை காமவல்லியாம் சூர்ப்பனகையின் காது மூக்கை அரிந்த இராம லக்ஷ்மணர்களின் வலிமையையும் உணர மறந்தான். இந்த நிகழ்ச்சியால் தனக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தையும் மறந்தான். முன்பு அவன் பெற்ற ஒரு சாபத்தால் மனைவி தவிர பிற பெண்களைத் தொட்டால் அவன் சிரசு வெடித்து இறப்பான் என்ற செய்தியையும் மறந்தான்; ஆனால், அவன் மனத்தில் காமத் தீயை உண்டாக்கிவிட்ட சீதையெனும் பெண்ணை மட்டும் மறக்க முடியாதவனாக ஆனான்.

மனம் உணர்ச்சி வசப்படும்போது அதனை மாற்றும் சக்தி ஞானத்துக்கு மட்டுமே உண்டு. அந்த ஞானம் இல்லையென்றால், உணர்ச்சி வசப்பட்டு தவறான காரியங்களைச் செய்து அழிவைத் தேடிக் கொள்ள வேண்டியதுதான். ஆயினும் உணர்ச்சி மனிதனை ஆட்கொள்ளூகின்ற சமயங்களில் ஞானம் வெளிப்படாமல் உள்ளே அழுத்தப்பட்டு விடுகிறது. அதனால்தான் உணர்ச்சிவசப் படுபவர் அனேகர் ஞானத்தால் தவறு செய்யாமல் காத்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது.

சீதையை சிறையெடுத்துக் கொண்டு வந்து இலங்கையில் வைக்கும் முன்னரே, அவன் தன் மனச் சிறையில் அவளைப் பூட்டி வைத்தான். அவன் மனம் சீதையின் நினைவால் வெயிலில் வைத்த வெண்ணெய் போல உருகியது. இராவணன் தனது இருக்கையை விட்டு எழுந்தான். கூடியிருந்த அவையோர் அவனுக்கு ஆசி கூறினர். ராஜ சபை முடிந்ததற்கு அடையாளமாகச் சங்கம் முழங்கியது. இராவணன் மீது பூமாரி பொழிந்தனர். காமநோய் தாக்கிய மனத்தோடு இராவணன் தன் அரண்மனையைச் சென்றடைந்தான்.

அவன் மலர் மஞ்சத்தில் படுத்துக் கிடந்தான். விரக வேதனையால் அவன் உடல் சூடேறி, படுக்கையில் கிடந்த மலர்கள் கருகிப் போயின. அஷ்டதிக் கஜங்களையும் வென்ற அவன் வீரத் தோள்கள் துவண்டு நைந்து போயிருந்தன. சேடிப் பெண்கள் குளிர்ச்சியான சந்தனம் முதலான பொருட்களைக் கொண்டு உபசாரங்கள் செய்தும், அவை அவனுக்கு சூடேறி மிகுந்த துன்பத்தைக் கொடுத்தன.

படுக்கையை விட்டு எழுந்தான். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினான். இனிய குழலுடைய பெண்கள் தீபங்களை ஏற்றிக் கொண்டு வழிகாட்ட, யாழைப்பழிக்கும் குரலுடைய பெண்கள் இன்னிசை பாட, ஒரு சோலையைச் சென்றடைந்தான். அங்கு பசுமையான செடிகள் சூழ்ந்த ஒரு மணிமண்டபத்தில் வெண்மையான பளிங்குக்கல்லில் போய் அமர்ந்தான். அங்கும் விரகதாபம் அவனை வாட்டி எடுத்தது.

ஏவலர்களை அழைத்தான். "உடனே ஓடிப்போய் சூர்ப்பனகையை இங்கு அழைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டான். சீதையைப் பற்றி அவளை மீண்டுமொரு முறை வர்ணிக்கச் சொல்லி அதனைக் கேட்க விரும்பினான். அவன் கற்பனையில் உருவாகியிருந்த சீதை அவன் முன் நிற்பது போலவும், அவள் சீதைதானா என்று அறிந்துகொள்ள சூர்ப்பனகையிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் விரும்பினான். ஏவலர் கூட்டிக்கொண்டு வந்த சூர்ப்பனகையிடம் அவன் "என் முன் நிற்கும் இவள்தான் நீ சொன்ன சீதையா?" என்று கேட்டான்.

சதாசர்வ காலமும் இராமனையே எண்ணிக் கொண்டிருக்கும் அவளோ, "இவன்தான் நான் சொன்ன கருமைநிறத்துச் செம்மல் இராமன்" என்றாள். காமவசப்பட்டவர் கற்பனையில்கூட, தான் காமவசப்பட்டவர் உருவமே எப்போதும் காட்சியளிக்கிறது. இராவணன் கேட்டான் "எனக்குப் பெண்ணாகத் தோன்றுகின்ற உருவவெளித் தோற்றம் உனக்கு எப்படி இராமனாகத் தோன்ற முடியும்?".

"இராவணா! நீ உலகாளும் கோமான், இப்படி வருந்தலாமா? அந்த மலர்க் குழலாள் சீதையை உடனே போய், அபகரித்துக் கொண்டு வந்து உன்னோடு வைத்துக் கொள். போ! இப்போதே போய் கொண்டு வா" என்றாள்.

உடனே இராவணன் தன் ஏவலர்களைப் பார்த்து, தெய்வத் தச்சனை அழைத்து வந்து ஒரு சந்திரகாந்தக் கல்லால் ஆன ஒரு மணிமண்டபம் அமைக்கச் சொல்லுகிறான். அப்படியோர் மண்டபமும் தயாராகிறது. இராவணன் வந்து அந்த மண்டபத்தைப் பார்வையிடுகிறான். தான் மனதால் நினைத்த காரியத்தை நிறைவேற்ற ஆலோசனை வழங்கக்கூடிய அமைச்சர்களை உடனே வரும்படி ஆணையிட்டான். அதன்படி அமைச்சர்கள் வந்து கூடினார்கள்.

அப்படிக் கூடி ஆலோசித்தபின், தான் நினைத்த காரியத்தை முடித்துக் கொடுக்கும் ஆற்றல் படைத்த, தவநெறியில் விளங்கும் மாரீசன் இருக்குமிடத்துகுத் தன் புஷ்பக விமானத்தில் ஏறிச் செல்கிறான்.

யார் இந்த மாரீசன்? சுகேது என்ற யக்ஷனின் பெண் தாடகை. இந்த தாடகைக்கு சுந்தன் எனும் யக்ஷர் தலைவனுக்கும் பிறந்தவன் இந்த மாரீசன் என்பதை பாலகாண்டத்தில் பார்த்தோம். இவனது தம்பி சுபாஹு. அகத்திய முனிவர் இட்ட சாபத்தால் தாடகையும் அவள் மக்களும் அரக்கர்களாகி, இராவணனின் தாய்வழிப் பாட்டனார் சுமாலியிடம் தஞ்சம் புகுந்தனர். இவர்களை சுமாலி தன் மக்களாகவே பாவித்தான். இந்த உறவு முறையால் இந்த மாரீசன் இராவணனுக்கு மாமன் முறையாகிறான். தாடகை முன்பு விஸ்வாமித்திரரின் யாகத்தைக் கெடுக்க வந்தபோது இராமன் விட்ட கணையால் சுபாஹு உயிர் துறந்தான், மாரீசன் கடலில் விழுந்து தப்பிப் பிழைத்தான் என்பதை பால காண்டத்தில் பார்த்தோம்.

இராவணன் தன்னை நாடித் தன் வீட்டிற்கு வந்ததைக் கண்டு மாரீசனுக்கு அச்சம் ஏற்பட்டது. எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனை மிக மரியாதையோடு வரவேற்று உபசரித்தான். அவன் உள்மனதில் இவன் எதற்கு இப்போது இங்கே வந்திருக்கிறான் என்ற கேள்வி எழுந்தது. இவன் வந்ததால் தனக்கு என்னென்ன தீமைகள் உண்டாகுமோ என்ற அச்சம் அவன் மனதை வாட்டியது.

"மூவுலகங்களையும் ஒரு குடைக்கீழ் ஆட்சி செய்துவரும் இராவணேஸ்வரனாகிய தாங்கள், ஏழையேன் இந்த எளிய இல்லம் நாடி வந்ததின் நோக்கம் என்னவோ" என்று வினவினான்.

எந்தக் காலத்திலும் வந்திருப்பவன் கெட்டவன், மோசமானவன், ஆனாலும் பலம் பொருந்தியவன் என்றால், மற்றவர்கள் எப்படி தங்கள் உள் மனது உணர்ச்சிகளை மறைத்து முகஸ்துதியாகப் பேசுவார்கள் என்பது அந்தக் காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கும் வழக்கம்தான் போலிருக்கிறது.

"எனக்கு வரவேண்டிய துன்பங்கள் அனைத்தும் வந்து விட்டன. அனைத்தையும் தாங்கிக் கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன். எனது பொலிவும், சிறப்பும், புகழும் போய்விட்டன. எனக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை என்ன சொல்லி உனக்கு விளக்குவேன். வீரவேலை கையில் ஏந்திய மாரீசா! மனிதர்கள் வலிமையுடையவர்கள் ஆகிவிட்டார்கள். தண்டகாரண்யத்தில் மானுடர் இருவர் உன் மருமகள் சூர்ப்பனகையின் மூக்கை வாளால் அரிந்து விட்டார்கள். இதைவிட நம் குலத்துக்கு வேறு ஓர் இழிவு நேரமுடியுமோ?".

"என் தம்பியர்களான கரன், தூஷணன் இருவரையும் ஒரு மானுடன் தன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளால் கொன்று போட்டுவிட்டான். இது நம் வீரத்துக்கும், புகழுக்கும் ஏற்பட்டுவிட்ட மிகப் பெரிய இழுக்கு அல்லவா? கரனும், தூஷணனும் வில்லினால் அடிபட்டு உயிர் துறந்து கிடக்க, நீயோ இரு கரங்களையும் தலைமேல் குவித்துத் தவம் செய்து கொண்டிருக்கிறாயே!".

"இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளால், நான் மனம் குமைந்து போய் கிடக்கிறேன். அந்த மானுடர்கள் என் வீரத்துக்கு இணையானவர்கள் இல்லை என்பதால், அவர்களோடு நான் போர் புரியச் செல்லவில்லை. ஆனால் அவர்களோடு வந்திருக்கிற ஒரு பெண்ணைக் கவர்ந்து வர விரும்புகிறேன். அதற்கு உன் உதவி தேவை. அதை நாடியே நான் இங்கு வந்தேன்" என்றான் இராவணன்.

இராவணனது சொற்கள் இரும்பைக் காய்ச்சி காதில் ஊற்றியதுபோல இருந்தது மாரீசனுக்கு. சீச்சீ என்ன செயல் இது என்று வெறுப்புற்றான். செவிகளைத் தன் கைகளால் பொத்திக் கொண்டான். பயத்தை நீக்கிச் சற்று தெளிவடைந்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசலானான்.

"மன்னா! இப்படிப்பட்ட செயலைச் செய்வாயானால் உன் வாழ்நாள் முடிந்து போகும். உனக்கு புத்தி இல்லாமல் போய்விட்டதோ? இது நீயாகச் செய்யும் காரியமாகத் தெரியவில்லை. விதி உன்னை இப்படிச் செய்யத் தூண்டுகிறது. உனக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் நான் உனக்குக் கூறவிரும்புவது சில உண்டு. சொல்கிறேன் கேள்!" என்று ஆரம்பித்தான் மாரீசன்.

"நீ எப்படிப்பட்ட தவங்களைச் செய்திருக்கிறாய் தெரியுமா? உன் கையாலேயே உன் தலைகளை வெட்டி நெருப்பில் ஆஹூதியாக இட்டாய். நெடுங்காலம் பசி தாகம் மறந்து, உணவு இன்றி உடல்வாட தவங்கள் செய்தாய். அதனால் அன்றோ மூவுலகும் ஆளும் பெரும் செல்வத்தைப் பெற்றாய். இவற்றை இழந்து விட்டால் மீண்டும் அவற்றை உன்னால் பெற முடியுமா?"

"நீ வேதங்களை நன்கு கற்றுத் தேர்ந்தவன். நீ செய்துள்ள கடும் தவத்தால் இந்தப் பெரும் செல்வத்தைப் பெற்றாய். அறம் தவறுவாயானால் அனைத்தையும் நீ இழந்து நிற்பாய்! பிறருடைய நாட்டுக்கு உரிமையான நீரைத் தன் வலிமையால் எவனொருவன் அபகரித்துக் கொண்டு தர மறுக்கிறானோ; எவனொருவன் பிறருக்கு உரிமையான நாட்டை அதர்ம வழியில் கைப்பற்றி வைத்துக் கொள்கிறானோ; எவனொருவன் தர்மத்துக்குப் புறம்பான வழியில் குடிமக்களிடம் அநியாய வரிகளை வசூலிக்கிறானோ; எவனொருவன் மாற்றான் இல்லத்தில் வாழும் அடுத்தவன் மனைவிமீது ஆசை கொண்டு அவளை அபகரிக்கிறானோ; ஆகிய இத்தகையவர்களை தர்ம தேவதை தண்டித்து அழித்து விடுவது உறுதி".

"தேவலோகத்துக்கு அதிபதி இந்திரன். அவன் அகலிகை மீது ஆசை கொண்டதால் சாபக் கேட்டை அடைந்தான். அவனைப் போலவே அழிந்துபோனவர் எண்ணிக்கை ஏராளம் ஏராளம். உனக்கு உரிமையுள்ள அழகியர் அனேகர் இருக்க, செய்யக்கூடாதவற்றை நீ என்னிடம் செய்யச் சொல்லுகிறாய்".

"நீ நினைத்ததை முடித்தாலும்கூட நீ அடையப் போவது தீவினையும் பழியுமே. அதுமட்டுமல்ல சீதையை நீ அபகரித்தால் இராமன் உன்னையும், உன் சந்ததியினரையும் பூண்டோடு அழிப்பது உறுதி. உன் படைத்தலைவன் கரனையும் அவன் படைகளையும் ஒரு கணையால் இராமன் கொன்று போட்டதை நீ ஏன் அறியவில்லை. அதுமட்டுமா? உன் குலத்தையே பூண்டோடு ஒழித்துவிட அவன் உறுதி கொண்டிருப்பது உனக்குத் தெரியவில்லையா? அதைப் பற்றி நீ சிந்திக்காதது ஏன்?"

"விராடன் வீரத்தைப் பற்றி அறியாதார் யார்? அந்த விராடன் இராமனால் கொல்லப்பட்ட செய்தியை நீ அறியவில்லையா? மாண்டு போனவர்கள் போனவர்களே! இனி நீயாவது வாழ முயற்சி செய். என் தாய் தாடகைக்கும், தம்பி சுபாஹுவுக்கும் இந்த இராமன் எமனாக வந்ததும், நான் அடிபட்டுத் தப்பிப் பிழைத்ததும் இப்போது நினைத்தாலும் அச்சம் உண்டாகிறது. அப்பேற்பட்ட இராமன் உனக்கு எதிரியாக வந்து வாய்த்து விட்டானே என்று மனம் வருந்துகிறேன். நான் சொல்லும் அறிவுரைகளைக் கேள்!" என்றான் மாரீசன்.

இராவணனுக்கு அடங்காத கோபம் உண்டாயிற்று. கைலாய மலையையே பெயர்த்தெடுத்த என் வீரத் தோள்களை ஒரு மனிதனுக்குக் கீழ்பட்டது போல பேசிவிட்டாயே!" என்று புருவத்தை நெறித்து "நடந்தவற்றை மறந்து விட்டாயோ? என் அருமைத் தங்கை சூர்ப்பனகையின் முகத்தைத் தோண்டி எடுத்து விட்ட இராமனின் புகழை என்னிடமே பேசுகிறாயா? போனால் போகட்டும் என்று பொறுத்துக் கொண்டேன்".

"இராவணா! நீ என் மீது கோபப்படுவதாக நான் நினைக்கவில்லை. உனது அரக்கர் குலத்தின் மீதே கோபப்படுகிறாய். இப்படிப்பட்ட காரியத்தை நீ செய்யலாமா? கைலாயம் எனும் இமய மலையின் ஒரு சிகரத்தைப் பெயர்த்ததையே பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கிறாயே, மனிதன் என்று இழிவாகப் பேசுகிறாயே அந்த இராமன், அவன் தன் பதினாறாம் வயதிலேயே சீதாபிராட்டியின் சுயம்வரத்தில் என்ன செய்தான் தெரியாதா? மேருமலை போன்ற அந்த பெரிய வில் எனும் மலையை வளைத்து ஒடித்ததை மறந்தாயா? இராமனது வலிமையை நீ உணரவில்லை. எனது அறிவுரைகளையும் கேட்பதாக இல்லை. இராமன் போருக்கு எழும்போதே நம் அரக்கர் குலம் முழுவதுமே அழிந்து போகும். சீதையை ஒரு சாதாரணப் பெண் என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறாய். அல்ல! அவள் அரக்கர்களை யெல்லாம் வேரறுக்க வந்தவள் என்பதை நீ அறியவில்லை".

"நீ இந்தத் தீச்செயலைப் புரிவதை நான் ஏற்றுக் கொண்டால், அஃது ஒருவன் விஷம் உண்கிறான் என்பது தெரிந்தும் அது நல்ல செயல் என்று அவனுக்குக் கூறுவது போலத்தான் இருக்கும். இராமனிடம் கோசிக முனிவர் கொடுத்த அஸ்திரங்கள் எதிரிகளை அழிக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன. கார்த்தவீரியனைக் கணப் பொழுதில் தன் மழுவால் கொன்றுபோட்ட பரசுராமனை கர்வபங்கம் செய்து அடக்கிய இராமனின் வலிமை சாதாரணமானதா? காம உணர்ச்சி மேலிட உடல் மெலிந்தாய்; அறிவு குன்றினாய்; அதனால் பேசக்கூடாத தீய சொற்களைப் பேசுகிறாய். உனது மாமன் என்ற முறையில் உன் நலனுக்காக இதுவரை பேசினேன். எனவே சீதையை அபகரிக்கும் எண்ணத்தைக் கைவிடு!" என்றான்.

மாரீசனை மறுபடியும் இராவணன் தகாத சொற்களால் வசை மாரி பொழிகிறான். "உன் அறிவுரைகள் எனக்குத் தேவை இல்லை. நான் இட்ட கட்டளைகளை மட்டும் செய்து முடி" என உத்தரவிடுகிறான். "மறுத்தால் உன்னைக் கொன்றுவிடுவேன்" என்றும் எச்சரிக்கிறான்.

"சரி! சரி! சொல். நான் என்ன செய்ய வேண்டும்" என்றான் மாரீசன்.

உடனே கோபம் தணிந்து இராவணன் மாரீசனைத் தழுவிக்கொண்டு "அந்த சீதையை எப்படியாவது என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடு" என்றான்.

இராவணன் கையால் சாவதைக்காட்டிலும் இராமனின் அம்புக்கு இரையாவதே நலம் எனக் கருதி மாரீசன் ஒப்புக் கொண்டான். "அதற்கு நான் செய்ய வேண்டியது என்ன?" என்று கேட்டான்.

"மாரீசா! உன் தாயைக் கொன்ற இராமனைக் கொல்வதாக நான் சங்கல்பம் செய்திருக்கிறேன். என்னிடம் வந்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறாயே. ஏதாவது மாயம் செய்து அந்த சீதையை என்னிடம் கொண்டுவந்து சேர்த்து விடு!".

"நான் என்ன மாயம் செய்ய வேண்டும், சொல்"

அதற்கு இராவணன் "மாரீசா! நீ ஒரு பொன் மான் வடிவம் எடுத்துக் கொண்டு, அந்த சீதையின் முன்பாகப் போ. அவளுக்குப் பொன்மான் மீது ஆசை ஏற்படும்படி செய்" என்றான்.

மாரீசனுக்கு நெஞ்சு துணுக்குற்றது. உடல் நடுங்கினான். உயிருக்கு இறுதி வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டான். கோசிக முனிவர் யாகம் செய்தபோது நலிவுறத் தொடங்கிய மாரீசன் உயிர் இப்போது இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது.

இராவணன் கேட்டுக் கொண்டபடி மாரீசன் நல்மான் அனைய சீதாபிராட்டி விரும்பும்படியான ஒரு பொன்மான் வடிவம் எடுத்துக் கொண்டான். அங்கிருந்து இராமபிரான் இருந்த தண்டகாரண்யம் சென்றடைந்தான். நிலையா மனம் கொண்ட வேசிகளிடம் காமுகர்கள் மயங்கிப் பின் செல்வது போல காட்டு மான்கள் எல்லாம் இந்த மாய மானின் பின்னால் ஓடின. அப்போது மலர் கொய்யும் நிமித்தமாய் சீதை, வனத்தில் அந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்தாள். அவளுடைய கண்களில் இந்த மாயமான் பட்டுவிட்டது. அதன் பேரழகு அவள் மனதைச் சுண்டி இழுத்தது.

அந்த மாயமானும் அவள் முன்னே வந்து நின்று பார்த்தது. இந்த அற்புதமான மானைப் பிடித்துத் தருமாறு இராமனிடம் கேட்பதற்காக சீதை இராமனிடம் விரைந்து போனாள். இராமனைக் கைகூப்பி வணங்கியபின் சொல்லுகிறாள் "பொன்னால் செய்தது போன்ற ஒரு மான், உடல் ஒளி பிரகாசிக்க அதன் கால்களும் செவிகளும் மாணிக்கம் பதித்ததுபோல மின்ன இங்கே வந்திருக்கிறது" என்றாள்.

"சீதா! நீ சொல்லுவது போன்ற ஒரு மான் இந்த பூமியிலேயே கிடையாதே" என்று கூறிய இராமன், எனினும் இதை உணர்ந்தும் அவள் ஆசையைப் பூர்த்தி செய்ய எண்ணி அந்த மானைப் பிடிக்கக் கிளம்பினான். அப்போது இலக்குவன் அண்ணனின் கருத்தை அறிந்து "அண்ணா! வேண்டும் என்று ஆசைப்படக்கூடிய பொருள் இது அல்ல. வேண்டாம் இது. உடல் பொன் நிறமாக இருக்கிறது. காலும் செவியும் மாணிக்கம் போல் இருக்கிறது. இவை மானின் தன்மைக்கு ஏற்றதாக இல்லையே. ஆதலால் இது ஏதோவொரு மாயம். இது நிஜமான மான் அல்ல" என்றான்.

"லக்ஷ்மணா! நீ சிறுவன். உனக்குத் தெரியாது. நாம் கண்டும் கேட்டுமிராத எத்தனையோ வகைகள் இருக்கின்றன" என்றான் இராமன். இவர்கள் இருவரும் இப்படி விவாதம் செய்து கொண்டிருந்தால் அந்த மான் ஓடிப் போய்விடும் என்று அஞ்சினாள் சீதை.. உடனே இராமன் சீதையுடன் சென்று அந்த மானை எனக்குக் காட்டு என்றான்.

தன் கூரிய அறிவினால் ஆராய்ந்து பார்க்காத இராமனும் "இது அழகாகத்தான் இருக்கிறது" என்று தம்பியை அழைத்து "லக்ஷ்மணா! பார் இந்த மானுடைய அழகை" என்றான்.

இலக்குவன் இராமனைத் தடுக்க முயன்றான். "இது அரக்கர்கள் செய்யும் மாயம் அண்ணா! இதன் பின்னால் நீங்கள் போக வேண்டாம்" என்று தடுத்தான். "இந்த மானை நம் முன்பாக அனுப்பிவிட்டு இதற்குப் பின்னால் பலர் இருக்கிறார்கள்" என்றான்.

"அப்படியானால் அவர்களைத் துரத்திச் சென்று என் அம்புக்கு இரையாக்கிவிட்டு வருவேன்" என்றான் இராமன்.

இந்த நேரத்தில் சீதை இராமனிடம் 'இந்த மானைப் பிடித்துத் தர மனம் இல்லையோ என்கிறாள்.

"லக்ஷ்மணா! நான் இந்த மானின் பின்னால் விரட்டிச் சென்று பிடித்து வருவேன். விரைவில் வந்து விடுகிறேன். அதுவரை நீ சீதைக்குக் காவலாக இங்கேயே இரு" என்று கூறிவிட்டு இராமன் விரைந்து சென்றான்.

உடனே இலக்குவன் இராமனை நோக்கி "ஐயா முன்பே தாடகையைக் கொன்றபோது வந்த மூன்று அரக்கர்களில் ஒருவன் தப்பி உயிர் பிழைத்து ஓடிவிட்டான். அந்த மாரீசன்தான் இப்போது மான் உருவில் வந்திருக்கிறான் என்று நினைக்கிறேன். நீங்களும் இதனை உணர்ந்து கொள்வீர்கள்" என்று சொல்லிவிட்டு சீதைக்குக் காவலாக நின்றான்.

இராமன் தன்னைத் துரத்தி வருவது கண்டு அந்த மாயமான் முதலில் மெல்ல நகர்ந்தது; பின்னர் வெறித்துப் பார்த்தது, அச்சம் கொண்டது போல மேலே துள்ளிக் குதித்தது; காதுகளை விரைத்துத் தூக்கிக் கொண்டு விரைந்து தாவிக் குதித்து ஓடியது. மான் ஓடவும், இராமனும் தொடர்ந்து ஓடினான். அன்று மாவலிக்கு மூவடி மண் அளந்தவன் இன்று மனித அடியால் அளந்திட ஓடினான், ஓடினான், எல்லை காணும் அளவுக்கு ஓடினான்.

ஒரு சமயம் அந்த மான் இராமனை நெருங்கி வரும். பின்னர் அவனை விட்டுத் தொலைதூரம் ஓடிவிடும். பின்னர் சற்று தாமதித்துத் தொடும் தூரம் வந்தவுடன் மீண்டும் ஓடும். பணத்திற்கு ஆசைப்பட்டு, பணம் கிடைக்கும் வழியில் மனத்தைச் செலுத்தும் விலைமாதர் மனம் போல அது தாவித் தாவிச் சென்றது.

மான் உருவில் வந்த மாரீசன், இராமன் தன்னைப் பிடிக்கமாட்டான், அம்பைச் செலுத்திக் கொல்லவே முயல்வான் என்று எண்ணி, தாவிக் குதித்து மேலெழுந்து பாய்ந்து செல்லலானான். அதே நேரம் இராமனும் ஒரு கொடிய அம்பை எடுத்து வில்லில் பூட்டி 'இவன் சென்ற இடம் தொடர்ந்து சென்று அவன் உயிரை அழித்து விடு' என்று சொல்லி செலுத்தினான். இராமன் செலுத்திய பாணம் மான் உருக் கொண்ட அரக்கனின் நெஞ்சில் பாயவும், அவன் எட்டு திசையும் கிடுகிடுக்கும்படியாக "ஹா! சீதே! லக்ஷ்மணா!' என்று இராமனுடைய குரலில் கூவி அழைத்து, மான் உருவம் மறைந்து அரக்கன் உருவில் ஒரு குன்று போல கீழே விழுந்தான்.

மான் உருவம் மாறி, அரக்கனின் நிஜ உருவத்தோடு மாரீசன் விழவும், "அடடா! தம்பி லக்ஷ்மணன் இது வஞ்சக பொய்மான் என்று சொன்னது எவ்வளவு சரியானது. அவன் சமர்த்தன். என் உயிர் போன்ற தம்பி லக்ஷ்மணன் சமர்த்தன். நான் உய்ய வந்தவன் அல்லன்" என்று நடந்தவற்றுக்காக வருந்தினான்.

பின்னர் சொந்த உருவத்தில் வீழ்ந்து கிடந்த அவனது உடலை அருகில் சென்று பார்த்து, இவன் கெளசிக முனிவனின் வேள்வியில் உயிர் தப்பி ஓடிய மாரீசனே என்று புரிந்துகொண்டான். இந்த அரக்கன் என் குரலில் உரக்கக் கத்தினானே, அதைக் கேட்டு சீதையும் இலக்குவனும் கவலை அடைவார்களே என்று நினைத்தான்.

ஆனால், இலக்குவன் புத்திசாலி. இந்தக் குரலுக்குடையவன் அந்த அரக்கனே என்பதை புரிந்து கொண்டான். சீதையையும் தேற்றலாம் என்று ஆறுதல் அடைந்தான். என்றாலும் இதனால் ஏதேனும் தீங்கு விளைவதற்கு முன்பாகத் தான் பொய்விடுவது நல்லது என்று இராமனும் உடனே திரும்பிச் செல்வானாயினான்.

"ஹா! சீதே! லக்ஷ்மணா! என்று மாய அரக்கன் எழுப்பிய மரண ஓலத்தைக் கேட்ட சீதை துயரமடைந்தாள். தன் கைகளால் வயிற்றில் அடித்துக் கொண்டு தரையில் விழுந்தாள். "மானைப் பிடித்துத் தரச்சொல்லி, இப்போது என் வாழ்வுக்கு ஆதாரமான கணவனையே இழந்து நிற்கிறேன்" என்று புலம்பி அழுதாள்.

"அரக்கன் புரிந்த வஞ்சகத்தால் அண்ணன் உயிரற்று வீழ்ந்த பின்னும், உதவிக்கு ஓடாமல் இன்னமும் இங்கேயே நின்று கொண்டிருக்கிறாயே" என்று இலக்குவனை நோக்கிக் கடிந்து பேசினாள். இந்த இடத்தில் சீதை இலக்குவனைப் பார்த்து மிகக் கடுமையான வார்த்தைகளைப் பேசினாள் என்று வான்மீகத்தில்

குறிப்பிடப்பட்டிருந்தாலும், கம்பர் பெருமான் இந்த ஒரே வரியில் நிறுத்திக் கொண்டார். இவ்வளவு காலம் பார்த்துப் பழகிய இலக்குவனை அந்த அளவுக்கு சந்தேகித்து பேசியிருக்க மாட்டாள் என்பது கம்பரின் நம்பிக்கை.

"அன்னையே, அந்தக் குரல் அண்ணனுடையது அல்ல. அந்த மாய அரக்கன் செய்த சூழ்ச்சி. இந்த உலகில் அண்ணனையும் மிஞ்சிய வீரன் ஒருவன் இருக்கிறானா? நீங்கள் உண்மை உணராமல் வருந்துகிறீர்கள்" என்றான் இலக்குவன்.

"இல்லை எம்பெருமானுக்கு நேர்ந்த கதியை அறிந்த பிறகும் நீ கவலையின்றி இப்படிப் பேசுவது நெறியல்ல" என்று கடிந்து பேசினாள். "இராமபிரானிடத்து ஒரே ஒரு நாள் பழகியவர்கள்கூட இராமனுக்காகத் தன் உயிரையும் கொடுத்து உதவி புரிவர். ஆனால், லக்ஷ்மணா! இராமனின் குரலைக் காதால் கேட்டும் வருந்தாமல் என் எதிரில் நின்று கொண்டிருக்கிறாய். இனி எனக்கு வேறு வழி ஏது. இப்போதே தீ மூட்டி அதில் விழுந்து இறந்து போகிறேன்" என்றாள்.

இலக்குவன் மனக் கலக்கம் அடைந்தான். சீதையைத் தீயில் விழாமல் தடுத்தான். அவள் பாதங்களில் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். "தாங்கள் கூறிய சொற்களுக்கு அஞ்சுகிறேன். தாங்கள் ஏன் இறக்க வேண்டும். உமது கட்டளையை சிரமேல் கொள்வேன். தங்கள் மனவருத்தம் நீங்கி இங்கே இருப்பீர்களாக! விதி நம்மை மிகவும் கோபத்தோடு சோதிக்கிறது. விதியை நம்மால் வெல்ல முடியுமா? அடியனேன் இப்போதே போகின்றேன். பெரிய கேடு ஒன்று நம்மைத் தேடி வருகிறது. என் ஐயன் என்னை இங்கே இரு என்று சொன்னதை அவர் கட்டளையை மீறி போகச் சொல்கிறீர்கள். தாங்கள் துணையின்றி தனித்து இருக்கின்றீர்கள். என் மனம் துயரத்தால் வெந்து போகிறது. அன்னையே விடைபெறுகிறேன்".

இங்கே இருந்தால் அன்னை தீயில் விழுந்து விடுவாள், இராமனைத் தேடி நான் போவேனேயானால், இங்கு ஏதோ தீங்கு வந்து சேரும். நான் என்ன செய்வேன் என்று இலக்குவன் வருந்தினான். பிறகு ஜடாயு இந்தக் காட்டில் நம்மை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான், அப்படி ஏதேனும் தீங்கு வருமானால் அவன் பார்த்துக் கொள்வான் என்று தேறி இலக்குவன் இராமனைத் தேடிச் சென்றான்.

இலக்குவன் அவ்விடத்தை விட்டு நீங்கியதும், அங்கு மறைந்திருந்த இராவணன், ஒரு தவசி உருவம் தாங்கி சீதை இருக்குமிடம் வந்து சேர்ந்தான். அவன் தவசி வேடத்தோடு, கையில் ஒரு திரிதண்டகம் எனும் கோல் ஏந்தி வந்தான். ("முளைவரித் தண்டொரு மூன்றும் முப்பகைத் தளை அரி தவத்தவர் வடிவும் தாங்கினான்" என்று கம்பர் கூறுகிறார். இது மூன்று மூங்கிற் கம்புகளை ஒன்றாக இணைத்துக் கட்டப்பெற்ற தண்டு எனப்படும். இதனை "திரிதண்டகம்" என்பார்கள். காமம், வெகுளி, மயக்கம் எனும் முப்பகைகளை வென்றதற்கு அடையாளமாக இத்திரிதண்டம் துறவிகள் கைகளில் வைத்திருப்பர். பொதுவாக வைணவத் துறவிகள் 'திரிதண்டிகள்' ஆவர். மற்றொரு வகை துறவியர் "ஏகதண்டியர்". இவர்கள் ஒரெ தண்டத்தை உடையவர்கள். இங்கே இராவணன் திரிதண்டம் ஏந்தி தவத்தவர் வடிவம் தாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இராவணன் காவி உடை, குடுமி, குடை, திரிதண்டம், கமண்டலம் முதலியன கொண்டு வந்ததாக வான்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது).

பசியால் வருபவன் போல சோற்றை யாசித்தபடி கையில் வீணையின் நாதத்தோடு வேதத்தைப் பாடிக்கொண்டு அங்கே வருகிறான். தோற்றத்தில் உடல் நடுக்கம் கொண்ட ஒரு முதியவனைப் போல தோன்றினான். அவன் பர்ணசாலையின் வாயிலை வந்தடைந்து "யாவர் இவ் இருக்கை உள் இருந்தீர்!" என்று குரல் கொடுக்கிறான்.

"யாரம்மா குடிசைக்குள்?" என்று அவன் கூவிய சொல் கேட்ட சீதை "யாரோ பாவம்! இந்த வனத்திடை வாழும் ஒரு பரதேசி இவன் என்று எண்ணிக்கொண்டு "வாருங்கள், இங்கு எழுந்தருள்க! என்று கனிவோடு வரவேற்றாள்.

பார்த்தான் தேவியை இராவணன் முதன்முதலாக. உடல் வியர்த்தது; உள்ளம் ஆசை எனும் வெள்ளம் கரை புரள, அழகுக் கெல்லாம் அழகு செய்யும் அழகை, புகழின் இருப்பிடத்தை, கற்பினுக்கு அரசியைத் தன் கண்ணால் நோக்கினான். தேவியின் திருவுருவைக் கண்டு அவன் தோள்கள் பூரித்தன. அவளை எப்படி அடைவது என்ற கவலையில் உடனே அவை மெலிந்தன. பிராட்டியைப் பார்த்ததும் இராவணனுக்கு இவள் திருமகளே என்ற எண்ணம் உண்டாயிற்று. சூர்ப்பனகைக்கும் முதன்முதலில் சீதையைப் பார்த்ததும் இதே உணர்வுதான் ஏற்பட்டது.

"இங்கே அமர்ந்து கொள்ளுங்கள்" என்று பிரம்பினால் செய்த ஆசனத்தை அந்த போலி சந்நியாசிக்கு இட்டாள் சீதை. தன் திரிதண்டத்தை ஓர் ஓரமாக சாத்திவிட்டு அமர்ந்தான் இராவணன். இந்தக் காட்சியைக் கண்டு காட்டில் மலைகளும், மரங்களும்கூட மருண்டன. பறவைகள் ஒலி எழுப்ப மறந்து மரங்களில் ஒளிந்துகொண்டன. விலங்குகள் இரை தேடாமல் அஞ்சி ஓடின; பாம்புகளும் படத்தைச் சுருக்கிக் கொண்டு புற்றில் ஒளிந்தன. பாதகத் தொழில் புரியும் விலங்குகளும் விஷ ஜந்துக்களும்கூட அஞ்சும்படியான மாபாதகச் செயலைச் செய்ய இராவணன் துணிந்தான்.

"இந்த இடம் யாருடையது? இங்கு வசிக்கும் தவசி யார்? நீங்கள் யார்?" என்று அந்த இராவண சந்நியாசி கேட்டான்.

"பெருமைக்கு உரியீர்! பழமையான இக்ஷுவாகு வம்சத்தில் வந்த தசரத சக்கரவர்த்தியின் குமாரர், தன் தம்பியோடு, தன் தாயின் கட்டளைப்படி, அவர் உத்தரவை சிரமேல் தாங்கி வனம் புகுந்து இவ்விடம் வந்து வசிக்கிறார். அவர் பெயர்கூட தங்களுக்கும் தெரிந்திருக்குமே!" என்கிறாள் சீதை.

"ஆம்! நீங்கள் சொன்ன செய்திகளைக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆயினும் நேரில் கண்டதில்லை. அந்த கங்கை நதி வளப்படுத்தும் கோசல நாடு போயிருந்தேன். தாங்கள் யாருடைய மகள்? இந்தக் கொடிய காட்டில் வாழ்கிறீர்களே!" என்றான்.

அதற்கு பிராட்டி "அடிகளே! தங்களைப் போன்ற தவசிகளைத் தவிர வேறு தெய்வத்தை நினையாத ஜனக மகாராஜனின் மகள் நான். காகுத்தனின் மனைவி" என்றாள்.

அப்படித் தன் வரலாற்றை எடுத்துரைத்த அன்னை ஜானகி, சந்நியாசியை நோக்கி "பெரியோய்! இந்தக் கொடிய காட்டு வழியில் வந்து வருந்துகிறீர்களே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்றாள்.

அதற்கு அந்தப் போலி சந்நியாசி வேடத்திலிருந்த இராவணன் பதில் சொல்கிறான்.

"தேவர்களுக்கெல்லாம் தேவனாகவும், சித்திரத்தில் எழுத முடியாத அழகு உடையவனும், பிரமனின் வழித் தோன்றலுமான ஒரு சுந்தரன், வானுலகம் உள்ளிட்ட எல்லா உலகங்களையும் ஆண்டு கொண்டிருக்கிறான். அரிய வேதங்களை ஓதி கரை கண்டவன். கைலாய மலையையே வேரோடு பெயர்த்து எடுக்கும் வல்லமை பெற்றவன்; எண்திசை காவல் யானைகளோடும் போரிட்டு வென்றவன், தேவர்கள் அவன் அருள்நாடி நிற்கும் சிறப்புடையவன்; அழிவு இல்லாத வாழ்வை உடையவன்; சிவபெருமான் அருளிய 'சந்திரஹாசம்' எனும் வாளுக்கு உரியவன்; நவகிரஹங்களைச் சிறையில் அடைத்து வைத்தவன்; மேலான குணங்களையுடையவன்; நல்ல கல்விமான்; நடுநிலையாளன்; மன்மதனும் கண்டு பொறாமைப் படும் அழகன்; உலகத்தோர் தெய்வம் என்று வழிபடும் தன்மையன்; அகில உலகத்திலுமுள்ள பெண்கள் அவன் அருளுக்காக ஏங்கும் தன்மையன்; அப்பேற்பட்ட ஒருவன் தன் மனம் நாடிய பெண்ணுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறான்" என்கிறான். இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சீதை முகம் சுளிக்கிறாள்.

"அப்பேற்பட்ட தலைவன் வாழுகின்ற ஊரான இலங்கையில் சில காலம் தங்கி இருந்தேன். அவனைப் பிரிய மனமில்லா விட்டாலும் அவன் மனக் குறை தீர்க்க மீண்டும் திரும்பினேன்" என்றான்.

"முற்றும் துறந்த தாங்கள், உடல்கூட பாரம் என்று எண்ணுகின்ற சந்நியாசி, வேதங்களைக் கற்ற அந்தணர்களை அணுகாமல், மனித உயிர்களைத் தின்னும் அரக்கர்களிடையே சென்று வாழக் காரணம் என்ன? தவசியர்களோடு தங்காமல், நீர்வளம் மிக்க நாடுகளில் தங்காமல், நல்ல குடும்பங்கள் வாழும் புகழ்மிக்க நாட்டில் போய் தங்காமல், தர்ம வாழ்வை நினையாத அரக்கர்களிடையே தங்கி வாழ்ந்தேன் என்று சொல்லுகிறீர்களே, என்ன தகாத காரியம் செய்தீர்!" என்றாள் சீதை.

"பெண்ணே! அரக்கர்கள் தேவர்களைப் போல கொடியவர்கள் அல்லர். எம்போன்ற தவசியற்கு இந்த அரக்கர்களே நல்லவர்கள்" என்றான் அந்த போலி சந்நியாசி. இவன் உண்மையான தவசியல்ல என்பதையோ, அரக்கர்கள் இப்படி உருவத்தை மாற்றிக் கொண்டு வரக்கூடியவர்கள் என்பதையோ அறியாத அன்னை, இவன் மேல் சந்தேகப் படாமல் மேலும் பேசுகிறாள். "என்னதான் இருந்தாலும் கெட்ட குணமுடையவர்களோடு பழகுபவர்கள், நல்லவர்களாக எப்படி இருக்க முடியும்?" என்றாள் சீதை.

சீதையின் ஐயத்தைப் போக்குபவன் போல இராவண சந்நியாசி நைச்சியமாகப் பேசலானான். இவர்களிடையே வாக்குவாதம் தொடர்ந்தது. சீதை சொன்னாள்: "பெரியவரே! சிங்கம் போன்ற இராமன் கையால் அரக்கர் குலமே அழியப் போகிறது. தர்மத்தை பாவம் எங்காவது வெல்ல முடியுமா? இதைத் தாங்கள் அறியீரோ? நீங்களும்தான் பார்க்கப் போகிறீர்கள், அரக்கர்கள் அழியப் போவதை" என்கிறாள்.

இதைக் கேட்டதும் இராவணனுக்குக் கோபம் எழுந்தது. சீற்றம் கொண்டு பேசலானான். "விராடன் போன்ற அரக்கர்களை இராமன் கொன்றான் என்று பெரிதாகச் சொல்ல வந்து விட்டாயே! நாளை நடக்கப் போவதைப் பார்! அந்த இராவணன் வீரத்தின் முன்பாக இந்த இராம லக்ஷ்மண மானுடர்கள் அழிந்து போவார்கள்".

"இராவணனை சாமானியமாக நினைத்து விட்டாயா? மேருமலையை வேரோடு பெயர்க்க வேண்டுமா? வான மண்டலத்தை இடித்துத் தகர்க்க வேண்டுமா? கடல்களைக் கலக்க வேண்டுமா? கடலுக்கடியில் சுடரும் வடவாக்கினியை அவிக்க வேண்டுமா? பூமியைப் பெயர்த்து எடுக்க வேண்டுமா? இவை எதுவும் இராவணர்க்கு அரிய காரியமே அல்ல. இராவணனை என்னவென்று நினைத்தாய்? அந்த இராம லக்ஷ்மணர் எனும் மானுடர் இராவணன் தோள்வலி முன் பூளைப்பூ போல சிதைந்து பறந்து போவார்கள். பார்!" என்கிறான் சந்நியாசி வேடத்திலிருந்த இராவணன்.

"இருபது தோள்கள் உள்ளவன் என்பதனால், அவன் பெரிய வீரனாகி விடுவானோ? இலங்கைக்கு வேந்தனான அவனை சிறையில் அடைத்த மாவீரன் கார்த்த வீரியார்ச்சுனனைத் தன் இளவயதிலேயே இரண்டு தோளுடைய பரசுராமன், தன் மழுவினால் வெட்டி எறிந்த விவரம் உனக்குத் தெரியாதோ?" என்றாள் தேவி.

இப்படி அன்னை சொன்னவுடனே இராவணனது கண்கள் அக்னி ஜ்வாலையென எரிந்தன. கோபத்தில் கைகள் ஒன்றோடு ஒன்று மோதின. பற்களை நறநறவென கடித்தான்; இந்த கோப நாடகத்தின் உச்ச கட்டமாக அவனது போலி சந்நியாசி வேஷம் கலைந்து இராவணன் உருவம் கொண்டு நின்றான். என்னதான் நல்லவன் போல வேஷம் போட்டு நடித்தாலும், கோபம் தலைக்கேறும் போது, ஒருவனது உண்மையான குணம் வெளிப்பட்டு அவனை அடையாளம் காட்டிவிடும் என்பதற்குச் சரியான எடுத்துக் காட்டு இது.

இராவணன் துறவி வேடம் கலைந்து, பத்துத் தலைகளோடும், இருபது தோள்களோடும், தீ உமிழ்கின்ற கண்களோடும் எழுந்து நின்ற தோற்றமானது பல தலைகளையுடைய ஒரு நாகம் சீற்றம் கொண்டு தன் படத்தை விரித்து எழுந்தது போல இருந்தது.

இராமபிரானுக்கு என்ன நேர்ந்ததோ எனும் பெரும் கவலையில் ஆழ்ந்திருக்கும் சீதா பிராட்டிக்கு, இப்படியொரு கொடிய ஆபத்து கபட சந்நியாசி உருவத்தில் வந்து சேர்ந்ததை எண்ணி, கூற்றுவன் வரும் நேரத்தில் உயிர் படுகின்ற பாட்டை அனுபவித்தாள்.

இராமனை எண்ணி கவலைப் படுவாளா? எதிரில் நின்று சீறுகின்ற இந்த அரக்கனைக் கண்டு அஞ்சுவாளா? அந்த அரக்கன் இராவணன் சீற்றத்தோடு மேலும் பேசுகிறான்.

"தேவர்கள் எல்லாம் எனக்கு ஏவல் செய்கிறார்கள். வாயு எனக்கு விசிறுகிறான். அக்னி எங்கள் அரண்மனையில் சமையல் செய்கிறான். அப்பேற்பட்ட என் வீரத்தை எண்ணிப் பார்க்காமல், கேவலம் அற்பப் புழுக்களைப் போன்ற மானுடர்களை நீ வலிமை மிகுந்தவர் என்று என் முன்னே புகழ்கிறாயே! நீ ஒரு பெண் என்பதால் பிழைத்திருக்கிறாய். இல்லையேல் உன்னைப் பிசைந்து தின்றிருப்பேன். அப்படிச் செய்த பிறகு உன்மீது ஆசை வைத்திருந்து, உன்னை அடையமுடியாமல் சாப்பிட்டுவிட்டதற்காக என் உயிரையும் விட்டுவிடுவேன்".

"பெண்ணே! நடுங்காதே! இதுவரை என் தலைகள் எவரையும் வணங்கியது இல்லை. என் பத்துத் தலைகள் மீதும் வீற்றிருக்கும் கிரீடங்களைப் போல நான் உன்னை என் தலைமீது வைத்துப் போற்றுவேன். தேலோகப் பெண்டிரெல்லாம் உனக்கு ஏவல் செய்ய, நீ ஏழு உலகங்களையும் ஆளும் செல்வச் செழிப்பில் வாழும்படி பார்த்துக் கொள்வேன்" என்றான்.

இதைக் கேட்ட பிராட்டி, தன் செவிகளைக் கரங்களால் பொத்திக் கொண்டாள். பின்னர் சொல்லுகிறாள்:

"அரக்கனே! பூமியிலுள்ள நல்லொழுக்கம் எதுவுமே இல்லாத கடையனே! கவிகளாலும் கற்பனை செய்ய முடியாத வெற்றிப் பெருமிதமுடைய இராமபிரானின் மனைவியாகிய என்னை, முனிவர்கள் அக்னியில் இடுகின்ற புனிதமான ஆஹுதியை, கேவலம் ஒரு நாய் விரும்புவதைப் போல பேசுகிறாய். என்ன வார்த்தை சொன்னாய்?" என்று சொல்லி மேலும் பேசுகிறாள்.

"உன் கருத்துக்கு நான் இணங்காவிடில் நீ எனைக் கொன்று விடுவாய் என அஞ்சி என் குலப் பெருமையை இழக்க மாட்டேன். புல் நுனியில் நிற்கும் பனித்துளி ஆவியாவது போன்ற உயிருக்கு அஞ்சமாட்டேன். இராமனது பாணங்கள் உன்னைக் கொன்று அழித்துவிடும். அதற்கு முன் எங்கேனும் ஓடி ஒளிந்து உன் உயிரைக் காத்துக் கொள்" என்றாள்.

பிராட்டி இங்ஙனம் சொல்லவும் இராவணன் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டு "உன் இராமனுடைய பாணங்கள் எண்திசை யானைகளுடன் பொருத என் மார்பில் பூச்செண்டுகள் போல வந்து விழும். உன்னைத் தேடி வந்திருக்கும் சிறப்பான பதவியை மறுக்காமல் நீ ஏற்றுக்கொள்" என்று சொல்லிக் கொண்டே, சீதாபிராட்டியை இராவணன் கீழே விழுந்து வணங்கினான்.

அரக்கன் இராவணன் தன் காலில் விழுந்து வணங்கியது கண்டு துணுக்குற்று கொலைவாள் தன்மீது பட்டுவிட்டதைப் போல ஆவி குலைந்து வருந்தினாள்.

"இறைவா! என் தலைவா! பெருமானே! இளையோய்!" என்றெல்லாம் வாய்விட்டுக் கூவிக் கதறினாள்.

உடனே இராவணன் சீதை இருந்த இடத்தில் பூமியைக் கீழாகவும், பக்கவாட்டிலும் ஒரு யோசனை அளவு பெயர்த்து எடுத்தான். (பிரமன் சாபப்படி இவன் வேறொரு பெண்ணைத் தீண்டினால் இறந்து போவான் என்பதனால், சீதையைக் கைகளால் தீண்டாமல் தரையைப் பெயர்த்து பூமியோடு எடுத்தான்). அப்படிப் பெயர்த்தெடுத்த நிலத்தோடு கூடிய சீதையைத் தன் தேரில் வைத்தான். சீதை மூர்ச்சையாகி வீழ்ந்து விட்டாள். அப்போது இராவணன் வான மார்க்கமாகச் செல்ல தன் தேரோடு மேலே எழும்பினான்.

மூர்ச்சை தெளிந்து எழுந்த சீதாபிராட்டி தன் நிலை அறிந்து அரற்றினாள். புரண்டாள்; அழுதாள். "ஏ! தர்மமே! இது என்ன சோதனை. இந்த துயரத்திலிருந்து காப்பாற்று!" என்று அலறினாள். "ஏ! மலைகளே! ஏ! மரங்களே! மயில்களே! குயில்களே! கலைமான்களே! யானைகளே! என் நிலையை அந்த இராமனிடம் சென்று சொல்லுவீர்களா?" என்று கதறினாள்.

"மலையே! மரனே! மயிலே! குயிலே!
கலையே! பிணையே! களிறே! பிடியே!
நிலையா உயிரேன் நிலை தேறினீர் போய்
உலையா வலியார் உழை நீர் உரையீர்!"

இங்ஙனம் மேகங்களை, சோலைகளை, காட்டில் உறையும் தெய்வங்களை எல்லாம் கூவி அழைத்துப் புலம்புகிறாள். கோதாவரி நதியைப் பார்த்து "நீ போய் இராமபிரானிடம் என் நிலைமையை எடுத்து உரைத்துக் காக்கமாட்டாயா?" என்கிறாள்.

பிராட்டியின் புலம்பலைக் கேட்ட இராவணன் கோபமடைந்தான். "அந்த இராமன் என்னோடு போரிட்டு முடிந்தால் என்னைக் கொன்றுவிட்டு உன்னை மீட்டுச் செல்லட்டும்" என்று சொல்லி சிரித்தான்.

"உன் மாயையால் மாயமானை உருவாக்கி அதன் மூலம் உன் உயிரை விடுவதறுகு இராமனை அதன் பின் போகச் செய்தாய். அவர் இல்லாத போது என்னை கவர்ந்து செல்கிறாய். அப்படி அவரோடு போரிட்டு வெல்லும் திறமை உனக்கு இருந்தால் இங்கேயே நில். ஓரடிகூட நகராதே!" என்று சொல்லி அன்னை தொடர்ந்து பேசுகிறாள்.

"நீயும் ஒரு வீரனா? பதினாலாயிரம் போர்ப்படை வீரர்களோடு கர தூஷணாதியர்கள் போரிட வந்தபோது அவர்களைக் கொன்று, சூர்ப்பனகையின் மூக்கையும், மார்பையும் அறுத்துத் துன்புறுத்திய மானுடர்கள் இந்த வனத்தில் இருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டும் இப்படியொரு மாயம் செய்வது அச்சத்தினாலன்றி வேறென்ன?" என்று பிராட்டி சொன்ன அளவில், இராவணன் அவளை நோக்கி "பெண்ணே! வலிமையற்ற அந்த மானுடர்களோடு போர் செய்வது, கைலாயத்தையே பெயர்த்து எடுத்த எனது வீரத் தோள்களுக்கு இழுக்கு. அதனினும் இத்தகைய மாயம் புரிவதே நல்லது" என்றான்.

"பகைவன் என்று அறிந்த பின்னரும் அவர்களோடு போரிடுவதற்கு நாணம் போலும்; கற்புடைய பெண்டிரைக் கள்ளத் தனமாய்க் கவர்ந்து செல்லுதல் வீரம் போலும்; இரக்கமற்ற அரக்கர்களுக்கு எதுதான் நியாயம் என்பது புரியவில்லையே" என்றாள் அன்னை. இப்படி பிராட்டி கூறிய தே கணத்தில் இடி இடிப்பது போன்ற குரல் ஒன்று "அடா! எங்கேயடா போவது நீ! அங்கேயே நில்!" என்று கேட்டது. அப்போது எதிரில் கழுகரசன் ஜடாயு தன் பெரிய சிறகுகளை விரித்து எதிர்த்து வந்தான்.

ஜடாயு பறந்து வந்த வேகத்தில், மலைகள் பெயர்ந்து ஒன்றோடொன்று மோதின. கடலும் உலகமும் அழிந்ததுபோன்ற காட்சி தோன்றியது.

"உத்தமன் இராமனின் தேவியை ஒரு தேரில் வைத்து எங்கே போகிறாய்? வானம் முதல் அத்துணை வழிகளையும் என் சிறகால் மறைப்பேன்" என்று முழக்கமிட்டான் ஜடாயு. அருகில் வந்து பிராட்டியைப் பார்த்து "நீ பயப்படாதே!" என்று தைரியம் கூறிவிட்டு இராவணன் சீதையைத் தொடவில்லை என்று தெரிந்துகொண்டு, கோபத்தை அடக்கிக் கொண்டு அவனிடம் பேசலானான்.

"நீ இப்படியொரு காரியம் செய்தொழிந்தாய். மரியாதையாக இவளை இங்கே விட்டால் பிழைத்தாய். இன்றேல் செத்தாய். அறிவில்லாதவனே! அன்னையை யாரென்று நினைத்தாய்? தாய் போன்ற இவளை என்ன நினைத்துத் தூக்கி வந்தாய்? இனி உனக்கு வாழ்வளிக்கப் போவது யார்?" என்றான் ஜடாயு.

அவன் பேசியவைகளைக் கேட்ட இராவணன் ஆத்திரமடைந்தான். "நிறுத்து! மேலே ஒரு வார்த்தையும் பேசாதே. கொண்டுவா அந்த மனிதர்களை என் முன்பாக. உயிர் பிழைத்து இருக்க வேண்டுமாலால் ஓடிப்போ இங்கிருந்து" என்றான் இராவணன்.

ஜடாயு சேதையைப் பார்த்து "தாயே! அஞ்சாதே! உன் கணவன் இராமன் வில் எடுத்து உன்னைக் காக்க வரவில்லையே என்று எண்ணாதே. நான் இருக்கிறேன். இப்போதே இவன் உடலை சின்னபின்னமாக்கி விடுகிறேன்" என்றான்.

பின்னர் ஜடாயு இராவணனுடன் போரிடுகிறான். அவன் தலை மீதிருந்த கிரீடங்களைத் தன் காலால் தட்டி விடுகிறான். அவன் தேரை அடித்து, கொடியை அறுத்து வீசுகிறான். இருவருக்கும் கடுமையான துவந்த யுத்தம் நடைபெறுகிறது. தேவர்கள் அஞ்சினார்கள். அச்சத்தின் காரணமாக அவர்கள் பெருமூச்சு விட்டார்கள்.

இராவணன் உடல் முழுவதும் ஜடாயு ஏற்படுத்திய காயங்களிலிருந்து குருதி கொட்டியது. இராவணனின் காது குண்டலங்களை அறுத்தெறிந்தான்; கவசத்தை உடைத்தான்; மூக்கால் குத்தினான்; கால்களால் பிராண்டினான்; அவனது கை வில்லைத் தன் அலகுகளால் பிடுங்கினான்; வானத்தில் பறந்து சென்று அந்த வில்லைத் தன் கால்களால் ஒடித்து எறிந்தான்.

இராவணன் ஒரு சூலாயுதத்தை எடுத்து ஜடாயு மீது வீசுகிறான். அதனை அவன் தன் மார்பில் தாங்குகிறான். செயலற்றுப் போய் அந்த சூலாயுதம் கீழே விழுகிறது. இராவணன் ஒரு பொன்னால் ஆன தண்டாயுதத்தை எடுத்து ஜடாயுமீது வீச, அவன் அடிபட்டுக் கீழே விழுகிறான். அந்த நேரம் பார்த்து இராவணன் தேரை வானத்தில் செலுத்தினான். சீதாபிராட்டி துன்பம் மிகுதியால் புரண்டு அழுதாள். இதைக் கண்ட ஜடாயு சீதைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே மேலெழுந்து தேரின் மீது விழுந்தான். தேரில் பூட்டியிருந்த குதிரைகளைத் தன் அலகால் கொத்திக் கொன்றான்.

இராவணனும் மூர்ச்சித்து விழுந்தான். பின் எழுந்தான். அடக்க முடியாத கோபம் அடைந்தான். தன்னிடமிருந்த ஆயுதங்களையெல்லாம் ஜடாயு அழித்து விட்டதை உணர்ந்தான். எஞ்சியிருந்த தன் உடைவாளை உறுவி எடுத்தான். அதனை ஜடாயு மீது வீசினான். அந்த வாள் சிவபெருமான் இராவணனுக்குக் கொடுத்த 'சந்திரஹாசம்' எனும் வாள். அந்த வாள் ஜடாயுவைத் தாக்கி கீழே சாய்த்தது. அந்த காட்சியைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் தாங்கொணா துயரமடைந்தனர்.

ஜடாயு வீழ்ந்தது கண்டு இராவணன் ஆரவாரம் செய்தான். சீதையோ, தன் உதவிக்கு வந்த ஒரே ஆதாரமும் வீழ்ந்துவிட்டது பற்றி நிலை குலைந்தாள். நான் இனி என்ன செய்வேன் என்று புலம்பினாள். எனக்குக் காவல் இருந்த இலக்குவனை கடும் மொழி பேசி துரத்தினேனே என்று வருந்தினாள். உதவிக்கு வந்த ஜடாயுவும் விழுந்து விட்டானே, இனி என்ன செய்வேன் என்று வருந்தினாள். அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்ற வேத மொழி பொய்யாகப் போய்விடுமோ? என்று ஏங்கினாள். பலபல சொல்லி விம்மினாள்; அழுதாள், இரங்கி ஏங்கினாள், உணர்விழந்தாள்.

இராவணன் சீதையோடு மேலெழும்பிச் செல்வது கண்டு செயலிழந்து கிடந்த ஜடாயு வருந்தினான். என் குமாரர்கள் இராம லக்ஷ்மணர் இன்னும் இங்கு வரவில்லையே. மருமகள் சீதைக்கு உண்டான கெடுதியை நீக்கிய புகழை அவர்கள் பெறவில்லையே. இனி என்னவாகுமோ என்று ஜடாயு வருந்தினான்.

எப்படியும் இராமன் வருவான். அரக்கர்களை மூலநாசம் செய்து பழிதீர்ப்பான். இராவணனுக்கு உள்ள சாபம் காரணமாக அவனால் பிராட்டியைத் தொடமுடியாது என்று மனத்தைத் தேற்றிக் கொண்டான்.

அரக்கனாகிய இராவணன் சீதையோடு வானவழியில் சென்று இலங்கை அடைந்து அங்கே சிஞ்சுவ (அசோக) மரத்தடியில் அரக்கியர் காவல் இருக்க சிறை வைத்தான். இனி அங்கே இலக்குவனைச் சற்றுப் பின் தொடர்ந்து சென்று அங்கே என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.

இராமன் குரல் போல ஒலித்த கூக்குரலைக் கேட்டு சீதை ஏவ, இலக்குவன் இராமனுக்கு என்ன நேர்ந்தது என்று அறிய வந்தாலும், அவன் மனம் அன்னை சீதை, துனையின்றி தனிமையில் இருக்க நேர்ந்த நிலை குறித்து வருந்திய வண்ணம் இருந்தான். இராம பிரானை விட்டுப் பிரிந்திராத இலக்குவன், சிறிது நேர பிரிவுக்குப் பிறகு இராமன் அங்கு நலமாக இருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தான். தன்னைப் போன்ற குரலில் அந்த அரக்கன் அபயக் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து சீதையும் இலக்குவனும் கலக்கமடைவார்களே என்று நினைத்த இராமனுக்கு, இலக்குவனைக் கண்டதும் மகிழ்ச்சி உண்டாயிற்று.

நீ சீதைக்குக் காவலாக அங்கே இரு என்று சொல்லியிருந்தும், இவன் ஏன் இங்கே வந்தான், என்று நினைத்த இராமன், இலக்குவன் தன்னருகில் வந்து நமஸ்கரித்ததும், அவனைத் தழுவி எடுத்து நீ இங்கே வந்த காரணம் என்ன என்று வினவினான். இலக்குவன் நடந்தவற்றை விவரமாக எடுத்துரைத்தான். அன்னை, தன்னை கடிந்து பேசி அனுப்பியதையும் குறிப்பிட்டான். நடந்தவற்றையெல்லாம் கேட்டறிந்த இராமன், இலக்குவன் சீதை இருவர் மீதும் கோபம் கொள்ளாமல், அனைத்துக்கும் தானே காரணம் என்று மனம் வருந்தினான்.

அங்கு பிராட்டி தனியாக இருப்பாளே என்று இருவரும் அவசரமாக பர்ணசாலைக்குத் திரும்பினார்கள். அங்கே சீதாபிராட்டி இல்லாதது கண்டு திகைத்துப் போய் நின்றார்கள். இராமனுக்கு --

"மண் சுழன்றது; மால்வரை சுழன்றது; மதியோர்
எண் சுழன்றது; சுழன்றது அவ்எறிகடல் ஏழும்
விண் சுழன்றது; வேதமும் சுழன்றது, விரிஞ்சன்
கண் சுழன்றது; சுழன்றது கதிரொடு மதியும்".

என்ன செய்வது? யாரை கோபிப்பது?

"அறத்தைச் சீறும் கொல், அருளையே சீறும் கொல்
திறத்தைச் சீறும் கொல், முனிவரைச் சீறும் கொல், தீயோர்
மறத்தைச் சீறும் கொல், என்கொலோ முடிவென்று மறையின்
நிறத்தைச் சீறும் கொல், நெடுந்தகையோன் என நடுங்க".

நடந்துவிட்ட காரியங்களுக்காக யாரிடம் கோபிக்க முடியும்? யார் இவைகளுக்குப் பொறுப்பு? அப்போது இலக்குவன் சொல்கிறான் "இங்கே தேரின் சுவடு சிறிது தூரம் தெரிகிறது. அன்னை இருந்த பர்ணசாலை மண்ணோடு பெயர்த்து எடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி அன்னையத் தூக்கிக் கொண்டு போகிறவன் நெடுந்தூரம் போயிருக்க முடியாது. உடனே விரைந்து போய் தேடுவோம்" என்றான்.

"ஆம், நீ சொல்வதுதான் சரி, வா! உடனே பின் தொடருவோம்" என்று சொல்லி வில்லைக் கையில் தாங்கி, அம்புறாத்தூணியைத் தோளில் அணிந்துகொண்டு இருவரும் விரைந்து சென்றனர். தேரின் தடம் சிறிது தூரம் சென்றதும் மறைந்து விட்டது. "தம்பி! இனி என்ன செய்வது" என்று இராமன் திகைத்தான்.

"அண்ணா! நாம் திகைத்து நிற்பதில் என்ன பயன்? தேரின் தடம் மறைந்தால் என்ன? தேர் தென் திசை நோக்கிச் சென்றது தெரிகிறது. நாமும் தென் திசையில் தொடர்ந்து தேடிச் செல்வோம்" என்றான்.

அப்படி அவர்கள் தென் திசை நோக்கி இருகாத தூரம் சென்றிருப்பார்கள். அங்கே ஒரு போர் நிகழ்ந்திருப்பதற்கான அறிகுறி தென்பட்டது. வீணைக் கொடியொன்று அறுபட்டு விழுந்து கிடந்தது. சீதையை விடுவிக்கும் பொருட்டு, அவளைத் தூக்கிச் சென்ற கொடியவர்களோடு தேவர்கள் போரிட்டிருப்பார்களோ என்று எண்ணிய இராமனிடம் இலக்குவன் அன்னையைத் தூக்கிச் சென்றவன் இராவணனே என்றும், அவனுடன் சண்டையிட்டு தேரை உடைத்து கொடியை அறுத்தவர் ஜடாயுவே என்றும் திண்ணமாக உணர்ந்தான்.

அப்படியானால் ஜடாயு எங்கே என்று தேடிக்கொண்டு செல்கையில், அங்கே ஒரு கொடிய வில் முறிந்து கிடப்பதைக் கண்டனர். அருகே மும்முனைகள் கொண்ட சூலமொன்றும், அம்புறாத்தூணிகள் இரண்டும் கிடப்பதைக் கண்டனர். மேலும் சற்று தூரத்தில் ஒரு கவசமும் அறுந்து உடைந்து கிடப்பதைக் கண்டனர். அங்கே சதையும், இரத்தமும் சிதறிக் கிடப்பதையும் கண்டனர். அப்போது இராமன் சொல்லுகிறான் "தம்பி! இங்கு கிடக்கும் பொருட்களைக் கண்டால், ஜடாயுவோடு பலர் போர் செய்திருக்கிறார்கள் போலும்" என்றான்.

இலக்குவனோ, இராவணன் ஒருவன் மட்டும்தான் போர் புரிந்திருக்க வேண்டும் என்றான். இப்படி பேசிக் கொண்டு மேலும் சற்று தூரம் சென்றதும், அங்கே இரத்த வெள்ளத்தில் ஜடாயு வீழ்ந்து கிடப்பதை இருவரும் கண்டு துன்பம் மேலிட ஜடாயுவின் மீது விழுந்து கதறினர். இராமன் உணர்வு இழந்தான். ஒரு நாழிகைப் பொழுது அவன் மூச்சும் அடங்கியது. பின்னர் தேறி எழுந்து அரற்றினான்.

"என் பொருட்டு தந்தை தசரத சக்கரவர்த்தி மாண்டு போனார். என் தந்தைக்கு இணையான ஜடாயுவே, நீங்களும் என் பொருட்டு உயிரை இழந்தீரோ? என்ன துர்பாக்கியசாலி நான்" என்றான்.

ஜடாயுவைப் பற்றி பற்பல சொல்லி புகழ்ந்து, மனம் நொந்து வருந்தினான்.

"மாண்டேனே அன்றோ! மறையோர் குறை முடிப்பான்
பூண்டேன் விரதம் அதனால் உயிர் பொறுப்பேன்
நீண்டேன் மரம்போல நின்று ஒழிந்த புன் தொழிலேன்
வேண்டேன் இம்மாயப் புன் பிறவி வேண்டேனே".

"என் தாரம் பற்று உண்ண, என்றாயை சான்றோயைக்
கொன்றானும் நின்றான், கொலையுண்டு நீ கிடந்தாய்
உன்தாள் சிலை ஏந்தி வாளிக் கடல் சுமந்து
நின்றேனும் நின்றேன் நெடுமரம் போல் நின்றேனே".

இப்படிப் பலப்பல சொல்லி இராமன் புலம்பினான். அப்போது சற்று உணர்வு திரும்பிய ஜடாயு கண் திறந்து இவர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தான்.

"குழந்தைகளே! என் உயிர் நீங்கும் தருணத்தில் உங்களைக் கண்டதில் மகிழ்கிறேன். வாருங்கள்!" என்று கூறி அவர்களை உச்சி மோந்தான்.

"நடந்த காரியம் வஞ்சனையால் நடந்தது என்பதை நான் ஊகித்தேன். பிராட்டியைத் தனியே விட்டு எங்கே போனீர்கள்?" என்றான் ஜடாயு.

இலக்குவன் நடந்த வரலாற்றை ஒன்று விடாமல் கூறினான். ஜடாயு இவர்களுக்கு தைரியம் சொல்லித் தேற்றினான். ஒருவருக்கு தீங்கு வருவதும், பின்னர் அது நீங்குவதும் தொன்று தொட்டு நடந்து வருவதுதான் என்றான். பிறகு இராவணன் சீதையை மண்ணோடு பெயர்த்துத் தேரில் வைத்துக் கொண்டு போனதையும், தான் தன் பலம் முழுவதும் கொண்டு அவனுடன் போரிட்டதையும், அவனோ சிவன் கொடுத்த வாளால் தன்னை வெட்டிவிட்டு ஓடிவிட்டதையும் தெரிவித்தான்.

இதைக் கேட்டதும் இராமன் கடும் கோபம் கொண்டான். தனியே இருந்த சீதையை அரக்கன் அபகரித்துக் செல்கையில் சும்மா பார்த்துக் கொண்டிருந்த அனைத்து உலகங்களையும், தேவர்களையும் இப்போதே அழித்து விடுகிறேன் என்று சூளுரைத்தான். இராமன் கொண்ட கோபத்தால் உலகம் அஞ்சி நடுங்கியது. ஜடாயு அன்போடு இராமனிடம் "செவ்வியோய்! இராமா! நீ கோபம் கொள்ளாதே. தேவர்களும், முனிவர்களும் நீ அரக்கர்களை வெல்வாய் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீ அவர்கள் மீது கோபப்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள். நீ முதலில் சீதையை மீட்டு தர்மத்தைக் காப்பாற்று. பிறகு அரக்கர்களை அழித்து உலகத்தைக் காப்பாற்று" என்றான்.

இராமன் அமைதியடைந்து சமாதானமானான். பின்னர் ஜடாயுவிடம் "ஐயனே! அந்த அரக்கன் ஜானகியைத் தூக்கிச் சென்ற இடம் எதுவோ?" என்று வினவினான்.

அப்போது ஓய்ந்து போன ஜடாயுவும், தன் ஆவி நீங்கினான். ஜடாயு இறந்தது கண்டு தேவர்கள் அழுதனர். இராம இலக்குவர் அழுதனர். பின்னர் கரங்களை சிரம் மேல் கூப்பி அவனைத் தொழுதனர். பிறகு தன் தந்தை தசரதனுக்கு ஈமக்கடன்களைச் செய்ய முடியாமல் போன இராம லக்ஷ்மணர், தன் தந்தையைப் போன்ற ஜடாயுவுக்கு ஈமக்கடன்களைச் செய்தனர்.

ஜடாயுவின் ஈமக் கடன்கள் அனைத்தையும் செய்து முடித்த பிறகு, இராம லக்ஷ்மணர் இருவரும் சிறிது தூரம் நடந்து சென்று ஓரிடத்தில் அன்றைய இரவைக் கழித்தனர். இரவெல்லாம் இராமனுக்குத் தூக்கம் வரவில்லை, தவிக்கிறான், பின் தாகம் எடுக்கிறது. உடனே தன் அண்ணனின் தாகம் தீர்க்கத் தண்ணீர் எடுத்து வர இலக்குவன் புறப்படுகிறான்.

அப்போது அயோமுகி எனும் ஓர் அரக்கி எதிர்ப்படுகிறாள். அயோமுகி என்றால் இரும்பு போன்ற வலிமையும், கருமையும் உடைய முகத்தையுடையவள் என்பது பொருள். அந்த அரக்கி இலக்குவனைக் கண்டு அவன் அழகில் மயங்கி அவனைத் தூக்கிச் சென்று விடுகிறாள். அவனிடம் தான் கொண்ட மோகத்தை வெளியிடுகிறாள். தன்னை யாரும் இதுவரை தீண்டியதில்லை, நீ என்னைத் தழுவிக் கொள் என்கிறாள் அந்த அரக்கி. இலக்குவன் கோபம் கொண்டு "நீ இப்படிப் பேசினால் உன்னைக் கொன்றுவிடுவேன்" என்கிறான். அயோமுகி அவனைக் கெஞ்சுகிறாள்.

உன் அங்கங்களை அறுத்து நான் சிதைக்கும் முன்பாக இவ்விடம் விட்டு ஓடிவிடு என்கிறான் இலக்குவன். நீண்ட நேரம் ஆகியும் தண்ணீர் கொண்டு வரச் சென்ற தம்பியக் காணாதது கண்டு இராமன் கவலையடைகிறான். அயோமுகி இலக்குவனை விடாமல் துன்புறுத்தவே, இலக்குவன் அவள் மூக்கை அரிந்து விடுகிறான், பிறகு இராமன் இருக்குமிடம் வந்தடைகிறான். மறுநாள் வழி நடை நடந்து ஒரு மலையை அடைகிறார்கள். சீதையைப் பிரிந்த இராமன் துயரம் மிகுந்து மிகவும் வருந்துகிறான். இரவெலாம் தூக்கமின்றி சீதையின் நினைவால் வாட இறுதியில் பொழுது விடிகிறது. கதிரவன் தோன்றுகிறான்.

மறுநாள் எழுந்து இராமனும் இலக்குவனும் சீதையை இராவணன் எடுத்துச் சென்ற தென் திசை நோக்கிப் பயணமாகினர். ஐம்பது காத தூரம் காட்டில் தேடி அலைகின்றனர். நண்பகலும் வந்தது. அப்படி இவர்கள் வந்து சேர்ந்த இடம் கவந்தன் எனும் அரக்கன் உயிர் இனங்களைத் தன் வயிற்றில் அடக்கும் கொடிய இடமாகும். அவன் கைகளை நீட்டி அள்ளினால் யானை முதல் எறும்பு வரை அனைத்து உயிர்களையும் எடுத்துத் தின்றுவிடுவான். இந்த அரக்கன் கைபட்டு இயற்கையே அழிந்து மாறுபட்டுப் போயிருந்தது.

மலை போன்ற உருவமுடைய கவந்தன் இராம லக்ஷ்மணர் உள்ளிட்ட வனப்பகுதி முழுவதும் தன் கைகளால் அள்ளி எடுத்தான். அரக்கர் படைதான் தங்களைச் சூழ்ந்து கொண்டதோ என்று முதலில் இராமன் நினைத்தான். இருவரும் நடந்து சென்று மலைபோல உருவத்துடன் நிற்கும் கவந்தனைக் காண்கின்றனர்.

கவந்தன் உருவம் வர்ணனைக்கு அடங்காதது. அவனது கைப்பிடியில் அகப்படுமனைத்தையும் பெரிய குகை போன்ற வாயில் இட்டுத் தின்றுவிடுபவன். இப்போது நால் அவன் கைப்பிடிக்குள் அகப்பட்டு விட்டோம். என்ன செய்யப் போகிறோம் என்கிறான் இலக்குவன். இராமன் மிகுந்த விரக்தியில் இருந்தமையால் "தம்பி! லக்ஷ்மணா! சீதையும் காணாமல் போய்விட்டாள். தந்தையும் மாண்டுபோனான். தந்தை போல நம்மிடம் அன்பு செலுத்திய ஜடாயுவும் இறந்துவிட்டான். இனி நான் வாழ விரும்பவில்லை. இந்த பூதத்திற்கு நான் இறையாகி விடுகிறேன். நீ பத்திரமாக ஊருக்குப் போய்ச் சேர்" என்றான்.

அதற்கு இலக்குவன் சொல்கிறான், "நாம் வனம் புகுமுன்பு என் அன்னை சுமித்திரா தேவி என்ன சொன்னாள் தெரியுமா? இராமனுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் அவனுக்கு முன்பாக நீ உயிர் துறந்துவிடு என்றாள். இப்போது நீங்கள் உயிர் துறக்கவும், நான் நாடு திரும்பவும் முடியுமா? சொல்லுங்கள்" என்றான்.

"துன்பம் வரும்போது அதனை எதிர்கொண்டு நிற்பதுதான் வீர லக்ஷணம். மூத்தோர் துன்பப்படும்போது இளையோர் அதனைத் தடுக்காமல் இருப்பது பழியாகும்" என்கிறான் இலக்குவன். சீதை காணாமல் போனதால் இராமன் மனம் தளர்ந்து போய் இப்படிப் பேசியதை இலக்குவன் அவனுக்கு எடுத்துச் சொல்கிறான்.

ஓர் பழி வந்துற்றபோது அதனை நீக்குவதற்குப் பாடுபடாமல், பழிக்கு அஞ்சி உயிர் துறப்பது அவமானம் என்று இலக்குவன் எடுத்துக் கூறுகிறான். இவ்வளவு எடுத்துக் கூறியும், இராமன் விடாப்பிடியாக கவந்தனுக்கு இரையாக விரும்பவே, இலக்குவன் சரி அப்படியானால் அவனுக்கு நானே இரையாகிறேன் என்று போகிறான்.

இப்படி இந்த இருவருக்குள் வாதம் செய்துகொண்டு கவந்தன் முன்னால் வந்து சேர்கிறார்கள். நீங்கள் யார் என்கிறான் கவந்தன். இவர்கள் கோபம் மேலிட கவந்தனைப் பார்த்தனர். தங்கள் வாட்களை உருவி மேலெழும்பி அவன் தோள்களை வெட்டி வீழ்த்தினர். இரத்த வெள்ளத்தில் விழுந்த கவந்தன், தன் அரக்க உருவம் நீங்கி ஒரு கந்தர்வன் உருவம் பெற்றான். இந்த கவந்தன் விசுவாவசு எனும் ஒரு கந்தர்வனாக இருந்தவன். ஸ்தூலசிரஸ் எனும் ஓர் முனிவர் இட்ட சாபத்தால் அரக்கனாக மாறியவன். அப்படி அவனை சபித்தவர் அஷ்டவக்ர முனிவர் என்பவர் என்று அத்யாத்ம இராமாயணத்தில் கூறப்படுகிறது.

சாபம் நீங்கி சுய உருவம் அடைந்த கவந்தன் இராமனை வணங்கித் தன் சாபம் நீங்கியமைக்காக நன்றி கூறினான். சாபம் நீங்கிய கவந்தனை இராமன் பார்த்தான். பிறகு இலக்குவனை நோக்கி "நம்மால் கொல்லப்பட்ட இவன் இப்படியொரு ஒளிமயமான தேஜசோடு நிற்கிறானே! இவன் யார் என்று கேள்!" என்கிறான். கவந்தன் தன் வரலாற்றைக் கூறுகிறான்.

"என் பெயர் தனு. நான் ஒரு கந்தர்வன். சாபத்தினால் இந்த கீழ்ப்பட்ட அரக்கப் பிறப்பினை அடைந்தேன். தங்கள் மலர் கரங்கள் என்மீது பட்டவுடனேயே, என் முந்தைய உருவினைப் பெற்றேன். என் தந்தைக்கும் தந்தையாகிய ஐயா! நான் கூறுவதைக் கேளுங்கள். "இராமா! பிறர் யாருடைய உதவியும் தங்களுக்குத் தேவை இல்லை எனினும் சீதையத் தேடிக் கண்டுபிடிக்கத் தக்க யோசனைகளை நான் சொல்வேன். கேளுங்கள். படகு இன்றி ஆற்றைக் கடப்பது அரிது அல்லவா? அதுபோல தங்களுக்கும் அரிய உதவி தேவை அல்லவா? அதற்கான உபாயத்தை நான் உரைக்கிறேன்."

"அறநெறியில் நடந்து, தீயவர் பக்கம் சாராமல் நல்லோர்களைச் சார்ந்து, செயல்படுதலே நன்மை பயக்கும். காட்டில் எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு செலுத்துகின்ற சபரி என்னும் தவமாது இருக்கிறாள், அவள் இருப்பிடம் சென்றடைந்து, அவர்கள் கூறும் வழிகளைப் பின்பற்றி நடந்து கலைமான் பெயரைக் கொண்ட ருசியமுக பர்வதத்தில் ஏறி (ருசியமுககிரி என்பது சிருங்கேரி) அங்கே வாசம் செய்கின்ற சூரியனுடைய குமாரனான சுக்ரீவன் என்பவனுடன் நட்பு கொண்டு, அவனது துணையோடு சீதாப் பிராட்டியைத் தேடி கண்டுபிடிப்பாயாக!" என்றான் கவந்தனாக இருந்து உருவம் மாறிய கந்தர்வன்.

இராமனிடம் பின்னால் வாலி பேசும்போது தன்னிடம் வந்திருந்தால் தான் இராவனனை வென்று சீதையை மீட்டுக் கொடுத்திருப்பேனே என்கிறான். அதற்கு பதிலளிக்கும் விதமாக, கவந்தன் இராமனிடம் சொல்லும்போது "அறநெறியில் நடந்து தீயவர் பக்கம் சாராமல் நல்லோர்களைச் சார்ந்து செயல்படுதலே நன்மை பயக்கும்" என்று சொல்லும்போதே, வாலியைத் தவிர்க்கவும், அவன் சொன்ன கோட்பாடுகளுக்கு உட்பட்ட சுக்ரீவனை அணுகவும் அவன் ஆலோசனை கொடுத்திருப்பதை நாம் கவனிக்கலாம்.

பிறகு இராம லக்ஷ்மணர்களை வணங்கி கவந்தன் வான் செல்கிறான். இருவரும் காடு மலைகளைக் கடந்து இரவு நேரம் வந்தபோது யானைகள் மிகுதியும் வாழ்வதான மதங்க மகரிஷி வாழ்கின்ற இடத்தைச் சென்றடைந்தனர்.

மதங்க மகரிஷி வாழும் ஆசிரமம் துன்பம் என்பதே இல்லாத நல்வினை புரிந்தோர் வாழும் சுவர்க்கம் போன்ற இடம். இந்த மதங்கருடைய ஆசிரமத்தில், அவருடைய சீடர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டு அங்கேயே தங்கியிருந்தாள் சபரி எனும் மூதாட்டி. காட்டில் வாழ்ந்த முனிவர்கள் சபரியிடம் நீ இந்த மதங்கரின் ஆசிரமத்தில் தங்கி தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிரு. இராமபிரான் இவ்விடம் தேடி வந்து உனக்கு அருள் புரிவான் என்று சொல்லியிருந்தார்கள். அதற்கிணங்க சபரி எனும் அந்த அம்மையார் நெடுங்காலம் இராமன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தாள்.

சபரி வாழும் அந்த மதங்க முனிவரின் ஆசிரமத்துக்கு இராமனும் இலக்குவனும் வந்து சேர்ந்தார்கள். சபரிக்குத் தாங்கமுடியாத மகிழ்ச்சி. அவர்களை அன்போடு வரவேற்றாள். இராமனைக் கண்டதும் சவரிக்கு கண்களில் அன்பினால் கண்ணீர் பொங்கியது. உன்னை இங்கு தரிசித்ததால் இராமா! எனது பொய்யான உலகப் பற்றும் பாசமும் அழிந்து போயிற்று. அளவற்ற காலம் நான் செய்த தவத்தின் பலன் இன்று நிறைவேறிவிட்டது. பிறவித் துன்பம் இன்றோடு எனக்கு நீங்கி விட்டது. இவ்வாறு இராமனுக்கு முகமன் கூறி, இவர்கள் வரவை எதிர்பார்த்துத் தான் நல்லதாகத் தேர்ந்தெடுத்துச் சேகரித்து வைத்திருந்த கனி கிழங்குகளைக் கொடுத்து விருந்து படைத்து அதிதிகளை உபசரித்தாள்.

வழி நடந்த களைப்பு தீர இருவரும் விருந்துண்டு இனிது இருந்தபோது, சபரி சொல்லுகிறாள்: "இராமா! சிவபெருமானும், பிரம தேவனும் மற்றுமுள்ள தேவர்களும், இந்திரனும் இங்கு வந்து என்னிடம் சபரியே! உனது குற்றமற்ற தவத்திற்கு சித்தி பெறும் காலம் வந்துவிட்டது. இராமபிரான் வரவுக்காக காந்திருந்து வழிபாடுகளைச் செய்து கொண்டிரு. பின்னர் இந்த மண்ணுலகத்தைத் துறந்து எம்மிடம் வந்து சேர்!" என்று சொன்னார்கள். "இங்கு நான் செய்த புண்ணியமே நீவிர் இங்கு வருகை புரிந்தது" என்று கூறுகிறாள்.

"அன்னையே! எங்கள் துயரம் தீர்த்தாய். வழி நடந்த களைப்பும் நீங்கியது, நீ வாழ்வாயாக!" என்று அந்த சபரியை வாழ்த்திவிட்டு அன்று அங்கேயே தங்குகிறார்கள். பின்னர் சபரி இராமபிரானின் துன்பங்களை அறிந்து, சுக்ரீவனை நாடிச் செல்லுமாறு கூறி, அவன் வாழும் மலைக்குப் போகும் வழியையும் கூறுகிறாள். வீடுபேறு அடையும் மார்க்கத்தை ஒரு ஆச்சாரியாரிடமிருந்து மாணாக்கர்கள் கேட்டுத் தெரிந்து கொள்வது போல, இராமன் சபரியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

பிறகு சபரி இவ்வுலக வாழ்வை நீக்கிவிட்டு வீடுபேறு அடைந்தாள். இராம இலக்குவர் சபரி குறிப்பிட்ட பாதையில் நடந்து சுக்ரீவன் இருக்குமிடம் தேடிச் செல்லலாயினர். வழியில் பல காடுகளையும், மலைகளையும், அவர்கள் கடந்து சென்றனர். ஆறுகள் குறுக்கிட அவற்றையும் கடந்து சென்றனர். இங்ஙனம் இவர்கள் கிஷ்கிந்தையை நெருங்கிச் சென்றனர்.

(ஆரணிய காண்டம் முற்றும்)

No comments:

Post a Comment

Please give your comments here