Sunday, May 16, 2010

7. யுத்த காண்டம் - 2ஆம் பாகம்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
யுத்த காண்டம் - 2ஆம் பாகம்.

"அன்ன மாநகரின் வேந்தன் அரிக்குலப் பெருமை காண்பான்
சென்னி வான் தடவும் செம்பொன் கோபுரத்து உம்பர் சேர்ந்தான்".

இராவணன் வடக்கு வாயிலில் உள்ள செம்பொன்னாலான ஒரு மாளிகையின் உச்சிமீது ஏறி, வானரப் படையின் அளவைக் கண்டான். பொன் வேய்ந்த அந்த கோபுர உச்சியில் ஒரு மலை போல நெடிது நின்றான். போர் நெருங்கிவிட்டது என்று உணர்ந்தான். வானர சேனையைக் கண்டதும் அளவற்ற கோபம் கொண்டான். அவனது இடக்கண்ணும் இடது தோளும் துடித்தன.

இப்படியொரு தீய நிமித்தம் தோன்றவும், இராமபிரான் தூரத்தில் ஓர் மலை உச்சியில் நிற்பதையும் கண்டு மனம் புழுங்கினான். உடனே முன்பு ஒற்றனாகச் சென்று வானரப் படைகளை வேவு பார்த்துவிட்டு வந்தவனும், இப்போது தன் அருகிலிருந்தவனுமான சாரன் என்பவனை நோக்கி "அதோ அந்த மலை மீது கரிய நிறத்தில் நிற்பவன்தான் இராமன் என்பது தெரிகிறது. சரி அருகில் நிற்கும் மற்றவர்கள் எல்லாம் யார் சொல்?" என்றான்.

உடனே சாரன் "இராமனுக்கு அருகில் நிற்கிறானே அவன் தான் தங்கள் தங்கை சூர்ப்பனகையின் கொங்கை, நாசி, செவி இவற்றைக் கொய்த இலக்குவன்" என்றான். "இந்த இலக்குவன் கண் துயிலுதல் கூட செய்யாமல் அல்லும் பகலும் இராமனுக்குக் காவல் செய்கிறான். அதோ! அவன் கையைப் பிடித்துக் கொண்டு வாலோடு ஒருவன் நிற்கிறானே! அவன் தான் வாலியோடு போர் புரிந்த சூரியகுமாரன் சுக்ரீவன். யாவரினும் கொடுமையுடையவன் அவன்".

"அவன் அருகில் நிற்பவன் தான் வாலியின் புதல்வன் அங்கதன் என்பான். இவன் தந்தையாகிய வாலிதான் ஒருவனாகவே மந்தர கிரியைச் சுற்றி பாற்கடலைக் கடைந்து அமுதமெடுத்தான். அருகே ஒருவன் நடந்து கொண்டிருக்கிறானே, அவன் தான் சூரியனோடு தொடர்ந்து போய், அவன் தேருக்கு முன்பு சென்று அனைத்துக் கலைகளையும் கற்று, கடலைக் கடந்து இங்கே வந்து, நம் நகரத்துக்குத் தீமூட்டிவிட்டுச் சென்ற அனுமன்".

"அருகே நிற்பவன் பெயர் நீலன். அக்னியின் புத்திரன். இவன் கையில் சூலமும், பாசக் கயிறும் இல்லாவிட்டாலும், சிவபெருமானோ அல்லது எமதர்மனோ என்று பிறர் வியக்கும் அளவுக்கு ஆற்றல் மிக்கவன். இவர்களை விட்டுச் சற்று மாறுபட்டு நிற்பவன் பெயர் நளன். இராமனுக்கு மூன்றே நாளில் கடலுக்குள் சேது அமைத்துக் கொடுத்து, படைகள் கடலைக் கடந்து வர வழி செய்து கொடுத்தவன்".

"அதோ! கரடி போல ஒருவன் நிற்கிறானே, அவன் தான் ஜாம்பவான் எனும் பெயர் கொண்டவன். கரடிகளின் அரசன். முக்கால நிகழ்ச்சிகளையும் தன் அறிவால் உணரக்கூடிய ஆற்றலைப் பெற்ரவன். தேவாசுரர்கள் பாற்கடலைக் கடந்த காலத்திலிருந்து வாழ்கின்றவன். ஏழு உலகங்களையும் இன்று கூட தன் வலிமையால் பெயர்த்து எடுக்கக் கூடியவன்".

"சேனாதிபதியாகிய நீலனுக்கு இரு புறத்திலும் பொன் குன்று போல நிற்பவர்கள் அசுவினி தேவரின் புதல்வர்கள். வலிமை படைத்தவர்கள். கூட்டத்தின் நடுவில் நிற்பவன் பெயர் குமுதன். அருகில் குமுதாக்கன், மற்றொருவன் கவயன், அடுத்தவன் கவயாக்கன், அவனை அடுத்தவன் அனுமனைப் பெற்ற கேசரி என்பவன், மிக்க ஆற்றலுடையவன்".

"கூரிய நகங்களும் பற்களும் உடையவன் நரசிங்கம் போன்ற முரபன், அருகில் சரபன், இவன் மலைகளை வேரோடு பெயர்த்தெடுக்க வல்லவன். சதவலி எனும் மாவீரன் அதோ நின்று கொண்டிருக்கிறான். மூன்று கண்கள் இல்லையே தவிர பனசன் என்பவன் முப்புரங்களையும் எரிக்கும் ஆற்றல் மிக்கவன். இந்த போருக்கு உரிய அனைத்தையும் செய்பவன் இடபன் என்பவன், எதிரே இருப்பவன் சுசேடணன் என்பவன். அவனுக்கு அயல் நிற்பவன் ததிமுகன், அருகிலே சிங்கமென நிற்கும் சங்கன்" இப்படி வானர வீரர்களைப் பற்றிய அறிமுகம் கொடுத்த சாரன் இராவணனிடம் "இந்தச் சேனைக்கு எல்லையோ, அளவோ இருப்பதாகத் தெரியவில்லை. வானத்து மீன்களைக்கூட எண்ணிவிடலாம், கடலில் உள்ள மீன்களைக்கூட எண்ணிவிடலாம், கடற்கரை மணலையும் எண்ணிவிடலாம், இந்தச் சேனையை எண்ணுவது என்பது இயலாத காரியம்" என்றான் சாரன்.
சாரன் கூறிய செய்தி கேட்டு இராவணன் கோபத்துடன் புன்னகை செய்து "கொல்லையில் வாழும் இழி பிறவிகளான குரங்குகளை புகழ்கிறாய் போலும்! காடுகளிலும், மலைகளிலும் திரிகின்ற மான்கள் கூட்டம் சிங்கத்தினை என்ன செய்து விட முடியும்?" என்றான்.

இப்படி இராவணன் பொன்னால் கூரை வேயப்பட்ட கோபுரத்தின் மீது நின்றுகொண்டு சாரனிடம் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் இராமபிரான், விபீஷணனிடம் "அதோ நம் எதிர் புறத்தில் வானத்தை மூடி மறைக்கும்படியான கோபுரத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கும் அரக்க வீரர்களைப் பற்றிய விவரங்களைக் கூறு" என்றான்.

"ஸ்ரீ இராமா! அதோ பாருங்கள், அங்கே தேவலோகப் பெண்ணான திலோத்தமை முதலான தெய்வப் பெண்கள் கூட்டத்துக்கிடையில் நிற்கிறானே! தம் குலத்து உறவினர்கள் எனும் நாற்றைப் பிடுங்கி நரகத்தில் நடும் பொருட்டு அங்கு சேறு தயாரித்து வைத்திருக்கிறானே, அவன் தான் இழிதொழில் செய்த இராவணன்". அடுத்ததாக விபீஷணன் பேசுவதற்கு முன்பாக "அவன் தான் இராவணன்" என்ற சொற்களைக் கேட்டு அவனையும் பார்த்த மாத்திரத்தில் சுக்ரீவன் கண்கள் தீ உமிழ, அன்று சூரியனைப் பழம் என்று கருதிப் பாய்ந்த அனுமனைப் போல இராவணன் மீது இங்கிருந்தே பாய்ந்தான்.

சுவேல மலை மீதிருந்து இராவணனைக் கண்ட ஆவேசத்தில் வானத்தில் பாய்ந்து சென்று இலங்கை கோபுர உச்சியில் நின்று பார்வையிடும் இராவணன் மீது மேட்டிலிருந்து பாயும் நீர் போல விரைந்து பாய்ந்தான் சுக்ரீவன். சீதையைக் கடத்தி வந்த இராவணன் மீது பாய்ந்த ஜடாயுவைப் போல பாய்ந்து சாடினான் சுக்ரீவன். எதிர்பாராமல் இடி விழுந்ததைப் போல சுக்ரீவன் இராவணன் மேல் பாய்ந்து விழவும் சுற்றி நின்ற தேவலோகப் பெண்கள் எல்லாம் அஞ்சி ஓட்டமெடுத்தனர்.

எதிர்பாராத விதமாக வானத்தில் தாவி வந்து தன்மீது பாய்ந்து நின்ற சுக்ரீவனைப் பார்த்து இராவணன் "நீ இங்கு எதற்காக வந்தாய்?" என்றான்.

உடனே சுக்ரீவன் தன் வலிய கரங்களை மடக்கி அவன் நெஞ்சில் ஓங்கி ஒரு குத்து விட்டான். "நான் வந்த காரியம் தீயவனாகிய உன்னை ஒழிப்பதற்கே!" என்றான் சுக்ரீவன்.

நெஞ்சில் சுக்ரீவன் விட்ட குத்தினால் நிலைகுலைந்த இராவணன் பேரொலி எழுப்பி கத்தினான். சுக்ரீவனைத் தன் இருபது கரங்களைக் கொண்டு பிடித்து அடித்தான். சுக்ரீவன் இராவணன் கொடுத்த அடிகளால் உடல் முழுவதும் உதிரம் கசிய, அவன் எதிரில் சென்று மேலெழும்பி தன் கால்களால் இராவனனின் பொற்கிரீடங்கள் அணிந்த தலைகளில் பலங்கொண்ட மட்டும் உதைத்தான். தன் தலைகளிலும் முகங்களிலும் சுக்ரீவனின் உதை விழுந்ததும், அவனைத் திரும்பத் தாக்கினான் இராவணன். மதம் கொண்ட யானையொன்றும், சிங்கமொன்றும் மோதியது போல கடுமையான போர் நிகழ்ந்தது.

இருவருக்குமிடையே கடுமையான யுத்தம் நடந்தது. கட்டிப் புரண்டார்கள். கோபுரத்தின் கோட்டைச் சுவற்றில், அகழியில் என்று பற்பல இடங்களிலும் கட்டிப் புரண்டு அடித்துக் கொண்டார்கள். தொடர்ந்து இருவருக்குமிடையே மற்போர் நடந்தது. இவ்வாறு இவ்விருவருக்குமிடையே நடந்த கடுமையான போரின்போது, இராமபிரான், தன் அன்பிற்குரிய சுக்ரீவன், போனவன் திரும்பாதது கண்டு வருந்தி புலம்பித் தவித்தான்.

இந்த நேரத்தில் இராவணனோடு பொருதிய சுக்ரீவன் இராவணனின் மணிமுடிகளில் பதித்திருந்த விலை உயர்ந்த வைர மணிகளைப் பறித்துக் கொண்டு இராமனிடம் வந்து சேர்ந்தான். அங்கே இராவணன் ஒரு குரங்கு நம்மை இந்தப் பாடு படுத்தி விட்டதே என்று நாணமுற்று வருந்தி நின்றான். சுக்ரீவனுக்கு என்ன ஆயிற்றோ என்று வருந்திக் கொண்டிருந்த இராமன் முன்னால், அவன் இராவணன் முடியில் அணிந்திருந்த கிரீடத்திலிருந்து பறித்த மணிகளோடு வந்து நின்றதும், இராமன் நிம்மதியடைந்தான்.

இராமன் சுக்ரீவனை அன்புடன் தழுவி, உடலில் வழிந்த ரத்தத்தையும், இராவணனைத் தொட்டதால் ஏற்பட்ட தீட்டையும் தன் கண்ணீரால் கழுவினான். இராமன் சுக்ரீவனிடம் "நீ என் பொருட்டு பகைவன் இருக்குமிடம் சென்று தனி ஆளாகப் போய் போர் புரிய நேர்ந்ததே! இப்படியோர் முடிவை நீ ஏன் எடுத்தாய்? உனக்கு ஏதேனும் ஆகியிருக்குமானால் நான் எங்ஙனம் பொறுப்பேன்" என்றான்.

"ஒருக்கால் அவன் உன்னைக் கொன்றிருப்பானாகில், நான் அவர்களைப் பூண்டோடு அழிப்பேன் ஆயினும், உன் உயிரைக் காக்கத் தவறியவனாக ஆகிவிட மாட்டேனா?" இப்படி இராமன் கூறி வருந்தவும், சுக்ரீவன் சொல்லுகிறான்:

"காட்டிலே கழுகின் வேந்தன் செய்தன காட்ட மாட்டேன்,
நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்க மாட்டேன்;
கேட்டிலே நின்று கண்டு கிளிமொழி மாதராளை
மீட்டிலேன்; தலைகள் பத்தும் கொணர்ந்திலேன், வெறுங்கை வந்தேன்"

"காட்டிலே கழுகின் வேந்தன் ஜடாயு, இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும்போது அவனுடன் போரிட்டு தன் உயிரை விட்டானே, அதுபோல என்னால் செய்ய முடியவில்லையே! நாட்டிலே குகனார் காட்டிய அன்பினைக் காட்ட வல்லேன் நான்! கிளிபோன்ற மொழிபேசும் சீதாபிராட்டி துன்பத்தில் வீழ்ந்திருந்தும், அவரை மீட்டுக் கொண்டு வரவில்லையே நான், இராவணனுடைய பத்துத் தலைகளையுமாவது கிள்ளிக் கொணர்ந்திருக்க வேண்டும், அப்படியும் செய்யவில்லையே! வெறும் கையோடு வந்து நிற்கிறேனே" என்றான்.

இப்படி சுக்ரீவன் வருந்தி, வெட்கி நிற்கும் நேரத்தில், விபீஷணன் அங்கு வந்து இராமனிடமும் சுக்ரீவனிடமும் பேசுகிறான். "வானர மன்னா! நீ இராவணனது கிரீடங்களில் இருந்த மணிகளை அழித்து அவற்றில் உயர்ந்த மணிகளைக் கொண்டு வந்தாயே, இதனினும் பெருமைதரத் தக்கச் செயல் எதுவும் இல்லை. நீ வெறும் மணிகளையா கொண்டுவந்தாய்! இல்லை! இல்லை! இராவணனின் உயிருக்கும் மேலான பெருமையை அல்லவா கொண்டு வந்தாய்!. இதைக் காட்டிலும் வீரச் செயல் வேறு எதுவும் இல்லை" என்று சுக்ரீவனைப் பாராட்டினான். இராமபிரானும் சுக்ரீவனது செயலை மிகவும் பாராட்டிப் பேசுகிறான்.

சூரியன் மலைக்கு அப்பால் சென்று மறைந்த காட்சி, தன் மைந்தனான சுக்ரீவனால் அவமானம் அடைந்த இராவணன் தன்னைக் காண நேர்ந்தால் சினம் கொள்வான் என்று மறைந்தது போல இருந்ததாம். இலங்கையில் இராவணன், தான் பெற்ற அவமானத்தால் மனம் புழுங்கி, வருத்தத்தோடு அரண்மனை திரும்பினான். அவன் மனதில் சுக்ரீவன் இழைத்த அவமானம் திரும்பத் திரும்ப வந்து அவன் மனதை வருத்தியது. ஒரு குரங்கு தன்னைத் தாக்கி அலைக்கழித்து உடல் வருந்தச் செய்துவிட்டு, தலை முடிமீதிருந்த மணிகளைப் பறித்துக்கொண்டு சென்றுவிட்ட அவமானத்தால் தலை குனிந்தபடி தன் அரண்மனைக்குள் நுழைந்தான்.

மகிழ்ச்சி தரும் போதை பானங்களைப் பருகவில்லை. மனதிற்கு இன்பமளிக்கும் இசைப் பாடல்களைக் கேட்கவில்லை. நாடக மகளிரின் ஆடல்களைப் பார்க்கவில்லை. எவரோடும் பேச அவனுக்குப் பிடிக்கவில்லை. பேசாமல் தன் படுக்கையில் போய் படுத்துக் கொண்டான். உஷ்ணமான பெருமூச்சு விட்டான். மனதுக்குள் துன்பம் அவனை வாட்டுகிறது. அப்போது ஒரு காவலன் வந்து சார்த்தூலன் எனும் ஒற்றன் வந்திருப்பதாகச் சொல்ல, அவனை உள்ளே வரச் சொல்லுகிறான்.

உள்ளே வந்து இராவணனை வணங்கி நின்ற சார்த்தூலனிடம் இராவணன் "நீ எதிரியின் படைகளைக் கண்காணித்த வகையில் தெரிந்து கொண்ட விவரங்களைச் சொல்வாயாக!" என்றான். அந்த ஒற்றன் உடனே பேசத் தொடங்குகிறான்.

"மன்னா! வானரப் படைகள் நகரின் எல்லா வாயிலிலும் அணிவகுத்து நிற்கின்றன. இலங்கையின் மேற்குப் புற வாயிலில் அனுமன் தலைமையில் எழுபது வெள்ளம் சேனையில், பதினேழு வெள்ளம் தயார் நிலையில் நிற்கின்றன. இராமன் சுக்ரீவனையும் இந்தப் படைகளைப் பிரியாது இருக்கும்படி ஆணையிட்டிருக்கிறான்."

"வாலியின் மைந்தன் அங்கதன் பதினேழு வெள்ளம் வானரப் படையுடன் இலங்கையின் தெற்கு வாயிலில் போருக்குத் தயாராக படைகளை அணிவகுத்து நிற்கிறான். நீலன் எனும் படைத் தலைவன் அதே பதினேழு வெள்ளம் படையோடு கிழக்கு வாயிலில் நகருக்குல் புகுவதற்கு தயார் நிலையில் நிற்கிறான். வானரப் படைகளுக்குத் தேவைப்படும் உணவு, காய், கனி, கிழங்கு முதலியன கொண்டு வந்து தொடர்ந்து கொடுப்பதற்கு இரண்டு வெள்ளம் சேனையை பல திசைகளுக்கும் அனுப்பியுள்ளான்".

"உனது தம்பி விபீஷணனை அடிக்கடி இலங்கை நகரின் எல்லா வாயில்களுக்கும் சென்று, போரின் தன்மையைக் கண்காணிக்கும்படி நியமித்துள்ளான் இராமன். இராமனும் தம்பி இலக்குவனும் இலங்கை நகரின் வடக்கு வாயிலில் போரைத் தொடங்க ஆயத்தமாக நிற்கிறார்கள். இவைதான் இராமனின் போர்முனை ஏற்பாடுகள்" என்று அந்த ஒற்றன் கூறினான்.

ஒற்றன் இப்படிக் கூறியதைக் கேட்ட இராவணன் பற்களை 'நறநற' வென கடித்தான். "நாளையே மூண்டு வந்த பகையை போரில் அழிப்பேன்" என்றான்.

படுக்கையில் அவனுக்கு இருப்புக் கொள்ளாமல் எழுந்து மந்திராலோசனை மண்டபத்தை அடைந்தான். அமைச்சர்களை ஆலோசனைக்கு அழைத்துவரப் பணித்தான். பிறகு அமைச்சர்களிடம் "வானர சேனை நம் நகரத்தின் நாலா புறத்திலும் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறது. பெரும் போர் சூழ்ந்து விட்டது. மனம் உளையச் செய்து விட்டார்கள். இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன?" என்றான். அப்போது நிகும்பன் எனும் அரக்கன் சொல்கிறான்.

"கேவலம் எழுபது வெள்ளம் வானரப் படை நம் நகரைச் சூழ்ந்து கொண்டதற்காகக் கவலைப் படலாமா? அவற்றை அழித்துக் கொல்ல ஆயிர வெள்ளம் அரக்கர்சேனை நொச்சி மாலை அணிந்து போருக்குத் தயாராக இருப்பதைத் தாங்கள் அறியமாட்டீர்களோ? எழு, மழு, தண்டம், வேல், வாள், சூலம் என போர்க்கருவிகளைத் தாங்கிய நமது படைக்கு முன்பு, ஒரு ஆயுதமும் இல்லாமல் வெறும் கையோடு இந்த குரங்குகள் என்ன செய்து விட முடியும்? என்றான்.

அப்போது இராவணனின் மாமன்மார்களில் மூத்தவனான மாலி என்பான் எழுந்து சொல்கிறான். "காம உணர்வு துன்பத்தைத்தான் தரும். அந்த காம உணர்வுதான் இப்போது நம் குலத்தையே வேருடன் கெடுத்துவிட்டது. இலங்கைக்குள் புகுந்து வனங்களை அழித்து, நகருக்கு எரியூட்டி சாம்பலாக்கிய அனுமன் கையில் என்ன ஆயுதம் வைத்திருந்தான். அல்லது மன்னன் மணிமுடியில் இருந்த மணிகளைப் பறித்துச் சென்றானே சுக்ரீவன், அவன் கையில் இருந்த ஆயுதம்தான் என்ன?"

"இராமபிரான் தன் வில்லில் அம்புகளைப் பூட்டி, அவை நம் உயிரைக் குடிக்க வருவதற்கு முன்பாக சீதாதேவியைத் திரும்பக் கொண்டு போய் விட்டுவிட்டு, அரக்கர்களாகிய நாம் ஆயுதம் அற்ற வானரப் படையிடம் சரண் அடைவது ஒன்றே சரியான வழி" என்றான்.

கடுங்கோபம் கொண்ட இராவணன் மாலியிடம் "என் வலிமை எப்படிப்பட்டதென்று உணராமல் பேசுகிறாய். நீயே எனக்குப் பெரும் பழியைத் தேடித் தருவாய் போலிருக்கிறதே. என் மீது அன்பற்ற நீ, இனி இதுபோல பேசுவதை நிறுத்திக்கொள்!" என்று கூறவும், மாலியும் பேசாமலிருந்து விட்டான்.

உடனே இராவணன் தனது ஆயிரம் வெள்ளம் எனும் படைபலம் கொண்ட தனது சேனைக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தான். இருநூறு வெள்ளம் ஆயுதம் தாங்கிய அரக்கர் படையை இலங்கையின் கீழ்த்திசை வாயிலுக்கு அனுப்பி அங்கு போருக்குத் தயார் நிலையில் நிற்கும் வானரப் படை தளபதி நீலனோடு போரிடுவதற்கு அனுப்பி வைத்தான். தனது மைந்தன் மகோதரனை அழைத்து அவனை இருநூறு வெள்ளம் படையுடன் சென்று, தென் திசை வாயிலுக்குப் போய் அங்கே ஏற்கனவே படைகளை அணிவகுத்துத் தயாராக இருக்கும் அங்கதனுடன் போரிடத் தயாராகுமாறு அனுப்பி வைத்தான்.

இந்திரஜித்தை அழைத்து "மகனே! அன்று இலங்கைக்குள் நுழைந்து பேரழிவினைச் செய்துவிட்டுப் போந்த அந்த அனுமனை நீ நன்கு அறிவாய். பொழுது விடியுமுன் இருநூறு வெள்ளம் சேனையுடன் மேற்கு வாயிலுக்குச் சென்று அங்கே படைகளுடன் போருக்குத் தயார் நிலையில் நிற்கும் அனுமனோடு பொரிடத் தயாராக இரு!" என்றான்.

"விரூபாட்சா! நீ முன்னர் தேவர்களுடன் போர் புரிந்து வெற்றி பெற்றவன். இந்த வானரப் படையுடன் யுத்தம் செய்வது உனக்குப் பெருமை சேர்க்காது. எனவே நீ, நெடிய மூலபல சேனையோடு, அமைச்சர்களோடும், இலங்கை நகரத்தின் காவல் பொறுப்பை ஏற்றுக் கொள்!" என்றான். "மதங்கொண்ட யானைப் படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என இருநூறு வெள்ளம் படைகளுடன், நானே வடக்கு வாயிலுக்குச் சென்று, அங்கு இருக்கும் அந்த இராமனோடும், இலக்குவனோடும் போரிடத் தயாராக இருப்பேன்" என்று தனது படைகளின் அணிவகுப்பையும், நகரின் பாதுகாப்பையும் நிர்ணயித்து அவரவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தான்.

இலங்கை நகரின் முற்றுகையையும், அதன் பாதுகாப்புக்காக இராவணன் வகுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும், எந்தெந்த வாயிலில் யார் யார் எவருக்கு எதிராகப் போரிடத் தயாராக இருந்தனர் என்பதை இந்த வரைபடத்தில் பார்க்கலாம்.


இராம இலக்குவன் (17 வெள்ளம் படை)
{ வடக்கு வாயில் }
(இராவணன் (200 வெள்ளம்)

அனுமன் (17 வெள்ளம் நீலன் ( 17 வெள்ளம்)
{மேற்கு வாயில்} {கிழக்கு வாயில்}
இந்திரஜித் (200 வெள்ளம்) படைத் தலைவன் (200 வெள்ளம்)


அங்கதன் (17 வெள்ளம்)
{தெற்கு வாயில்}
மகோதரன் (200 வெள்ளம்)

* விரூபாட்சன் {நகரக் காவல், மூலபல சேனை)

இரவு நேரம் கழிந்து, பொழுதும் புலரத் தொடங்கியது. கதிரவன் கீழ்த்திசையில் தன் கிரணங்களை வீசிக்கொண்டு தோன்றினான். இராமபிரான் தன் பாசறையை விட்டு வெளியே வந்து தன் வானரப் படைகளைப் பார்த்துவிட்டுப் போருக்குத் தயாராகப் புறப்பட்டான். இலங்கை நகரத்தின் நான்கு வாயில்களிலும் வானர சேனைகள் கடல்போல் சூழ்ந்திருக்கப் போர் முழக்கங்கள் எங்கும் கேட்டன. போர் தொடங்கியது.

இராமன் வடக்கு வாயிலுக்கு வெளியே தனது பதினேழு வெள்ளம் படையுடன் போருக்கு ஆயத்தமாக வந்து நின்றான். கையில் இராமனது கோதண்டம் போருக்குத் தயாராக இருந்தது. வடக்கு வாயில் திறக்கப்பட்டு இராவணன் போருக்கு வருவான் என்று எதிர்பார்த்து இராமன் காத்திருந்தான். நேரம் போய்க்கொண்டே இருந்ததே தவிர இராவணன் வரும் வழியாகத் தெரியவில்லை.

உடனே இராமபிரான் அருகில் நின்றுகொண்டிருந்த விபீஷணனை அழைத்து, தான் அடுத்து மேற்கொள்ள வேண்டிய செயல் பற்றி விவாதிக்கத் தொடங்கினான்.

"தூதன் ஒருவனை நாம் இப்போதே இராவணனிடம் அனுப்பி, நீ இப்போதாவது சீதையை சிறையினின்றும் விடுவித்து எங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பாயானால் உயிர் பிழைப்பாய் என்று தெரிவிப்போம், அவன் உடன்பட மறுத்தால் அவனைக் கொன்றொழித்து சீதையை மீட்பது நமது கடமை என்று நான் நினைக்கிறேன். தர்மமும் அஃதே. அரசியல் நீதி முறையும் அதுவே!" என்றான் இராமன்.

அதைக் கேட்ட விபீஷணன் "ஆம்! அதுதான் நல்லது" என்றான். அருகிலிருந்த சுக்ரீவனும் "ஆம்! வெற்றித் திறம் வாய்ந்த வேந்தர்க்கு ஏற்படைய செயலிது" என்றான்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த இலக்குவனோ "அண்ணா! கொடியவனான இராவணனுக்கு இரக்கம் காட்டுவதென்பது நமக்கு இழிவு பயப்பதாகும். இந்தக் கட்டத்தில் போர் செய்து அவர்களை அழிப்பதன்றி, சமாதானத்துக்குத் தூது அனுப்புவது நன்மை பயப்பது அன்று. வஞ்சகன் இராவணன் அன்னையைச் சிறையில் வைத்தான்; தேவர்களைத் துன்புறுத்தினான்; அந்தணர்களை அலற வைத்தான்; உயிர்களைக் கொன்று தின்றான்; எல்லா திசைகளின் எல்லையளவில் தானே ஆளவேண்டுமென எண்ணினான்; இந்திரனைத் துரத்திச் சென்று அவனைத் தோற்கடித்து அவனது செல்வங்களைக் கவர்ந்தான். மன்னுயிர்க்கெல்லாம் நல்லவராகிய நும் தேவியைக் கவர்ந்தான்; நம் தந்தை போன்ற ஜடாயுவின் உயிரைப் பறித்தான்."

"அப்படிப்பட்ட கொடியோனாகிய இராவணனுக்கு அருள்செய்து, சீதாதேவியை விட்டுவிட்டால் உயிரைப் பறிக்காமல் விட்டுவிடுகிறேன் என்று சொல்வாயானால், நின்னைச் சரண் என்றடைந்த விபீஷணனுக்கு 'என் பெயர் உலகில் உள்ளவரை இலங்கை உனக்கே என்று பட்டம் சூட்டினாயே, உன் வாக்கு என்னாகும்? தண்டக வனத்து முனிவர்களுக்குக் கொடுத்த வாக்கு என்னாகும்?" என்றான் இலக்குவன்.

இதனைக் கேட்ட இராமன் "லக்ஷ்மணா! நீ கூறிய அனைத்தையும் நான் மறுக்கவில்லை. இறுதியாக நடக்கப்போவதும் நீ கூறும் அந்தப் போர்தான். ஆனால், அரச தர்மத்தை வகுத்துக் கொடுத்த நீதிமான்கள் காட்டிய பாதையிலிருந்து நாமே விலகிச் செல்லலாமா? போர் ஆற்றல் மிகுதியும் உடையவரேனும், பொறுமை குணத்தையும் ஏற்று நடப்பது பெருமை தரும் செயல் அல்லவா?" என்றான். அறவழியும் அதுவே என்பதை இராமன் இலக்குவனுக்கு எடுத்துரைத்தான்.

இராவணனிடம் தூதுவனாக யாரை அனுப்பலாம் என்று விபீஷணனுடன் ஆராய்ந்தான். சுக்ரீவன் முதலானவர்களும் அங்கு இருந்தனர். வாயு குமாரனாகிய அனுமனை மீண்டும் தூதாக அனுப்புவோம் என்றால், இவர்களுக்கு தூதுசெல்ல இவனை விட்டால் வேறு ஆட்களே இல்லை போலும் என்று இழிவாக அரக்கர்கள் நினைக்கக்கூடும்.

அனுமனைத் தவிர வேறு தகுதியானவர் யார் இருக்கிறார்கள்? எதிரிகள் அவனுக்குத் தீங்குகள் இழைத்தாரேனும் அவற்றையெல்லாம் எதிர்த்து நின்று மீண்டு வரும் வல்லமை பெற்றவர் அனுமனைப் போல வேறு யார்? என்று சிந்தித்தபோது வாலியின் மைந்தன் அங்கதன் நினைவுக்கு வந்தான். அங்கதனை தூது அனுப்பலாம் என்று இராமன் சொன்னதுமே அனைவரும் அதை ஒப்புக் கொண்டனர்.

அங்கதனை உடனே அழைத்து வரும்படி செய்தி அனுப்பினார்கள். அங்கதனும் உடனே கிளம்பி இராமன் இருக்குமிடம் வந்து பணிந்து, அவன் ஆணையை எதிர்பார்த்து நின்றான். இராமன் அங்கதனிடம் "பெருங்குணமுடைய அங்கதா! நீ இராவணனிடம் தூதனாகச் சென்று நான் கூறும் இரண்டு விஷயங்களை அவனிடம் சொல்லி, அவன் மறுமொழியை எனக்கு வந்து சொல்லுவாயாக!" என்றான்.

அங்கதன் அடைந்த பெருமைக்கு அளவேயில்லை. அவன் தோள்கள் பூரித்தன. அவன் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். அவன் மகிழ்ச்சிக்கும் எல்லை உண்டோ? அங்கதன் இராமனிடம் "ஐயனே! இராவணனிடம் நான் சொல்ல வேண்டிய செய்தி என்ன?" என்று கேட்கவும், இராமன் சொல்லுகிறான்.

"அங்கதா! நீ இராவணன் இருக்குமிடம் சென்று, அவனிடம், சீதையை இராமனிடம் திரும்ப ஒப்படைத்து விட்டு உயிர் பிழைத்திருத்தல் நல்லதா அல்லது உன் பத்துத் தலைகளையும் சிதைத்து அழிக்கும்படி போர்க்களத்தில் எம்மை சந்திப்பது நல்லதா, இவை இரண்டில் ஒன்றை தேர்ந்து சொல் என்று இராவணனிடம் சொல்வாயாக!" என்றான் இராமன்.

"இவ்விரண்டையும் செய்யாமல் ஊருக்குள் பதுங்கி இருப்பது என்பது அறவழிப்பட்ட செயல் அல்ல! வீரனுடைய இலக்கணமும் ஆகாது. ஆகையால் போருக்கு ஆயத்தமாக கோட்டைக்கு வெளியே வந்து என்னோடு போர் செய்யும்படி அவனுக்கு எடுத்துரைப்பாயாக!" என்றான் இராமன்.

அனுமன் அன்றி வேறொருவன் தூது செல்ல வேண்டும் என்ற நிலையில் இராமபிரான் என்னை தூதனாக தேர்ந்தெடுத்தது போன்ற பெருமை வேறு என்ன இருக்கிறது என்ற இன்ப மகிழ்வில் அங்கதன் சிங்கம் ஒன்று வான வெளியில் நடந்து செல்வது போலவும், இராமனது வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போலவும் விரைந்து சென்றான்.

அங்கதன் இலங்கை கோட்டை மதில்களை அனாயசமாகத் தாண்டி உள்ளே சென்று இராவணன் இருக்குமிடத்தைச் சென்றடைந்தான். அப்படி அவன் அங்கு போய்ச் சேர்ந்த போது, முன்பு இலங்கையைக் கொளுத்திவிட்டுச் சென்றவன் மறுபடி வந்து விட்டானோ என்று அஞ்சி அரக்கர்கள் ஓட ஆரம்பித்தனர். அங்கதன் இராவணனைப் பார்த்து வியந்து போனான். இவனை வெல்லவும் முடியுமோ? அப்படி ஒருவன் இருக்கிறானா? நம் இராமன் கையில் வில் உண்டு, அந்த வில்லின் முன்பு இவன் எம்மாத்திரம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டான்.

இராமனையன்றி வேறு எவராலும் இவனை வெல்லுதல் அரிது. இவனது முடிமேல் இருந்த மணிகளையா என் சிறிய தந்தை தன்னந்தனியனாக வந்து இவனை அடித்துத் துவைத்து மணிகளையும் பறித்துக் கொண்டு வந்தான்? என் சிறிய தந்தை எல்லோரிலும் பெரும் வலிமை படைத்தவன் அல்லவா? அதனால்தான் இப்படிப்பட்ட வேலையை அவனால் செய்ய முடிந்தது. இப்படியெல்லாம் எண்ணியபடியே, அங்கதன் இராவணன் முன்பு போய் நின்றான். கண்கள் தீ உமிழ இவனை நிமிர்ந்து பார்த்த இராவணன் "யார் நீ?" "இங்கு எதற்காக வந்தாய்?" "உன்னைக் கொன்று இவர்கள் தின்பதற்கு முன்பு உண்மையைச் சொல்" என்றான்.

இதைக் கேட்டு அங்கதன் பெரிதாகச் சிரித்துவிட்டுச் சொல்கிறான்.

"பூதநாயகன், நீர்சூழ்ந்த புவிக்கு நாயகன், அப்பூமேல்
சீதைநாயகன், வேறு உள்ள தெய்வ நாயகன், நீ செப்பும்
வேதநாயகன், மேல் நின்ற விதிக்கு நாயகன், தான் விட்ட
தூதன் யான்; பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன் என்றான்".

"பஞ்ச பூதங்களுக்கெல்லாம் தலைவனும், கடல் சூழ்ந்த நில மடந்தைக்குத் தலைவனும், தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளாம் சீதாதேவியின் கொழுநனும், நீ தினம் ஓதும் வேதங்களுக்கு நாயகனும், அனைத்தையும் வழி நடத்தும் விதிக்கு நாயகனுமான ஸ்ரீ இராமபிரான் அனுப்பிய தூதன் நான். அவர் கூறிய சில வார்த்தைகளை உமக்குச் செல்ல வந்தேன்" என்றான்.

"அடேய்! யாரடா அவன்? சிவபெருமானா? அல்லது பாற்கடல் திருமாலோ? நான்முகனோ? மக்கள் வியந்து போற்றும் இந்த மூவரையன்றி, கேவலம் குரங்குகளைக் கூட்டிக் கொண்டு குட்டை போன்ற சமுத்திரத்தில் ஒரு அணையைக் கட்டிக் கடந்து வந்து நிற்கும் இந்த மானுடனா உன் தலைவன்? என்னிடம் வந்து தூது சொல்லச் சொன்ன அந்த மானுடனா உலக நாயகன்?" என்று இராவணன் கேலியாகச் சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தான்.

"அரன் கொலாம், அரிகொலாம்? மற்று அயன் கொலாம்? என்பார் அன்றி
குரங்கு எலாம் கூட்டி, வேலைக் குட்டத்தைச் சேது கட்டி
இரங்குவான் ஆகின் 'இன்னம் அறிதி' என்று உன்னை ஏவும்
நரன் கொலாம் உலக நாதன்? என்று கொண்டு அரக்கன் நக்கான்".

"அடேய்! வானரமே! அந்த சிவனோ அல்லது திருமாலோகூட இலங்கைக்குள் தைரியமாக நுழைய முடியாதபோது, கேவலம் ஒரு மனிதனுக்காக தூது வந்திருக்கிற நீ யார்?" என்று ஆணவத்தோடு கேட்டான் இராவணன்.

அங்கதன் சொல்லுகிறான்:

"இந்திரன் செம்மல், பண்டு ஓர் இராவணன் என்பான் தன்னைச்
சுந்தரத் தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றி
சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன், தேவர் உண்ண
மந்தரக் கிரியால் வேலை கலக்கினான், மைந்தன் என்றான்".

"என்னையா யாரென்று கேட்கிறாய். சொல்கிறேன் கேள்!. முன்பொருநாள், உன்னைத் தன் வாலில் கட்டி, மலைகள் தோறும் தாவிப் பாய்ந்து திரிந்தவனும், தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைந்தபோது அவர்களால் முடியாமல் சோர்ந்துவிட்ட நிலையில், அவர்களுக்காகத் தான் ஒருவனாகவே கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்த இந்திரன் மைந்தன் வாலியின் புதல்வன் நான். என் பெயர் அங்கதன்" என்றான்.

அதுவரை ஆணவமும், அடங்காத் திமிரோடும் இருந்த இராவணன் வாலி என்ற பெயரைக் கேட்டமாத்திரத்தில், "அடடே! வாலி என் உற்ற நண்பன் அல்லவா? நாங்கள் உயிருக்குயிரான நண்பர்கள் அல்லவா? அப்பேற்பட்ட வாலியின் மகன், ஒரு மனிதனுக்காக தூது வருவது கேவலமல்லவா? என் மைந்தனே! வானர குலத்தின் தலைமைப் பதவியை நான் உனக்குத் தருகிறேன். நல்ல காலம், நீ என்னிடம் வந்து சேர்ந்தாய்" என்றான் இராவணன்.

"என்னப்பா இது! உன் தந்தையைக் கொன்றவனாகிய பகைவனுக்கு ஏவல் செய்து, அவன் பின்னே தலையையும் சுமந்து கொண்டு, இரு கரங்களையும் தோங்கவிட்டுக் கொண்டு போகும் பேதை இவன் என்று உலகத்தார் உன்னைப் பார்த்துப் பரிகசிக்க மாட்டார்களா? நல்ல காலம் நீ என்னிடம் வந்து சேர்ந்தாய். சீதையை எனக்கு உரியவளாகப் பெற்றேன்; உன்னை என் புதல்வனாகவும் பெற்றேன். இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்?"

"அந்நரர் இன்று, நாளை அழிவதற்கு ஐயம் இல்லை
உன் அரசு உனக்குத் தந்தேன், ஆளுதி, ஊழி காலம்
பொன் அரி சுமந்த பீடத்து, இமையவர் போற்றி செய்ய
மன்னவன் ஆக, யானே சூட்டுவென் மகுடம் என்றான்".

"நீ எந்த மானுடனுக்காக ஏவல் செய்பவனாக இங்கு வந்திருக்கிறாயோ அவன் இன்றோ அல்லது நாளையோ இறந்து போவது உறுதி, உனக்கு உன் தந்தை வாலியின் கிஷ்கிந்தை அரசை நானே உனக்குத் தந்தேன். சிங்கங்கள் சுமந்த அரசுக் கட்டிலில் நீ ஊழிக்காலம் அந்த தேவர்களும் போற்றி வணங்கும்படியாக ஆட்சி செய்து வருவாய், உனக்கு நான் கிஷ்கிந்தை அரசின் முடிசூட்டுகிறேன்" என்றான்.

இராவணன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு கைகொட்டி சிரித்தான் அங்கதன். "எனக்கு, நீ அரசு தருகிறாயா? நல்லதுதான். இங்கு உள்ள நீங்கள் எல்லோருமே பூண்டோடு அழியப் போவது நிச்சயம் என்று உணர்ந்து, உன் தம்பி விபீஷணன் எங்களிடம் வந்து சரணடைந்து விட்டான் என்பதை நீ
அறியமாட்டாயோ? வஞ்சனையான சொற்களைப் பேசி என்னை உன் பக்கம் இழுக்க நினைத்தால் உனக்கு ஏமாற்றமே மிஞ்சும். தூதனாக வந்தவன் எதிரி கொடுக்கும் பதவியை ஏற்றுக் கொள்வது எப்படிப்பட்ட துரோகம். அறமற்ற தூர்த்தனாகிய நீ கொடுப்பதை நான் பெற்றுக் கொள்வதோ, வலிமையற்ற நாய் கொடுப்பதை சிங்கம் ஏற்றுக் கொள்ளுமோ?" என்று அங்கதன் நகைத்தான்.

அங்கதன் கூறிய பதிலைக் கேட்ட இராவணன் கடுமையான கோபம் கொண்டான். என்னை மதிக்காத இந்த அங்கதனை ஒழிப்பேன் என்று சினம் பொங்கி எழுந்த இராவணன், பிறகு போயும் போயும் இந்த குரங்கைக் கொல்வதற்கு என் கையைப் பயன்படுத்தலாமோ? என்று கோபத்தை அடக்கிக் கொண்டு 'நான் தர விரும்பிய அரச பதவியை வேண்டாம் என்கிறாய், நீ வந்த காரியத்தைச் சொல்' என்றான். அங்கதன் சொல்கிறான்:

"கூவி இன்று என்னை, நீ போய் 'தன் குலம் முழுதும் கொல்லும்
பாவியை, அமருக்கு அஞ்சி அரண்புக்குப் பதுங்கினானை,
தேவியை விடுக! அன்றேல், செருக்களத்து எதிர்ந்து தன்கண்
ஆவியை விடுக! என்றான், அருள் இனம் விடுகிலாதான்".

இராமபிரான் என்னைக் கூவி அழைத்து, நீ போய், தனது அரக்கர் குலம் முழுவதும் அழிவதற்குக் காரணமாக இருக்கப் போகும் அந்த பாவி இராவணனைக் கண்டு, போருக்கு பயந்து அரண்மனைக்குள் பதுங்கிக்கொண்டிருப்பவனைப் பார்த்து, சீதாபிராட்டியை உடனே விடுவித்து இராமனிடம் கொண்டு வந்து சேர்த்துவிடு, இன்றேல் உடனே போர்க்களத்துக்கு வந்து இராமனை எதிர்த்துப் போரிட்டு உன் ஆவியை விடு, என்று சொல்லச் சொன்னான் இந்த நேரத்திலும் கூட அருளோடு அன்பு காட்டும் இராமபிரான் என்றான்.

இராமன் சொன்ன செய்தியை மேலும் தொடர்ந்து சொல்லுகிறான் அங்கதன். "உனது பாட்டியாகிய தாடகையைக் கொன்று பருந்துகளுக்கு உணவாக்கிய நேரத்திலும், மாமன் சுபாஹுவையும் அவனது படை வீரர்களையும் கொன்று குவித்த போதும், நாங்கள் பஞ்சவடியில் தங்கியிருந்தபோது, காமம் கொண்டு எம்மிடம் வந்த உனது தங்கை சூர்ப்பனகையின் செவி, மார்பு, மூக்கு இவற்றை என் தம்பி இலக்குவன் அரிந்து தண்டித்த போதும், எம் மீது போர் செய்ய வரவேண்டிய கடமை உனக்கு இருந்தும், எமக்கு அஞ்சி, போரிட வராமல் இருந்த உனக்கு எம்மை எதிர்க்கும் துணிவுகூட இருக்கிறதா என்ன?"

"காட்டில் கரன் முதலிய உன் தம்பிமார்களை நான் கொன்றது கண்டும், இலக்குவனை நேருக்கு நேர் சந்திக்க அஞ்சி, சீதைக்குக் காவல் இருந்த அவனை மாயையால் அங்கிருந்து நீங்கும்படி செய்துவிட்டு, சீதையைக் கோழைத்தனமாகக் கவர்ந்து சென்ற நீ போர் செய்ய வருபவனா என்ன?" என்று சொல்லும்படி சொன்னார் இராமபிரான்.

"கடல் கடந்து வந்து உனது இலங்கை நகரை அடைந்து, அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த சீதா பிராட்டியைப் பார்த்து விட்டு, எதிர்த்து வந்த அரக்கர்களையெல்லாம் கொன்று, உனது புதல்வனை தரையோடு தரையாகத் தேய்த்துக் கொன்றுவிட்டு, நகரையும் தீ வைத்துக் கொளுத்திவிட்டு மீண்டும் கடல் தாண்டி அனுமன் வந்த போது, போர் செய்ய முடியாதவன் இனிமேல்தான் போர் புரிய வரப்போகிறானா?" என்றும் கேட்டார் இராமபிரான்.

"உன் தம்பி விபீஷணனுக்கு இலங்கைக்கு அரசன் என்று முடிசூட்டிய போதும், அதை நிறைவேற்ற வானர சேனையுடன் கடலுக்குக் குறுக்கே அணைகட்ட முயன்ற நிலையில் வருணன் வந்து வணங்கிய போதும், உனது ஒற்றர்கள் பிடிபட்டபோதும், அவர்களைக் கொல்லாமல் விடுவித்து அனுப்பியபோதும், எமது ஆற்றலை உணர்ந்து போர்புரிய வெளியே வராத நீ, இனிமேல்தான் போர்புரிய வரப்போகிறாயா என்ன?" என்றும் கேட்கிறார் இராமபிரான்.

"முன்பு உன்னால் தோற்கடிக்கப்பட்டு ஆற்றல் அழிந்து போன தேவர்களும், உனது காதல் மகளிர் அருகேயிருந்து பார்த்திருக்க நேற்று சுக்ரீவன் உன் முடியில் இருந்த மணிகளைப் பறித்துக்கொண்டு வந்த போது போரிட முடியாத நீ இனிமேல்தான் போர் செய்யப் போகிறாயா? என்று கேட்கிறார் இராமபிரான்.

"இவற்றையெல்லாம் உன்னிடம் சொல்லிவிட்டு, நீ உன் சுற்றத்தாரோடு வாழ விரும்பினால் சீதா தேவியை உடனே கொண்டு போய் இராமனிடம் சேர்த்து விட்டு சரணாகதி அடைந்துவிடு. இல்லையேல் இப்போதே என்னுடன் புறப்படு. போருக்குத் தயாராக இருக்கும் எம் தலைவன் இராமபிரானோடு போரிட்டு உன் சுற்றத்தாரோடு அழியலாம்" என்றான் அங்கதன்.

"உலகின் எட்டு திசைகளையும் போரில் வென்ற பெரு வீரன் என்ற பெயர் பெற்ற நீ, உன் நகரத்தை மாற்றார் சேனை; வந்து வளைத்துக் கொண்டபோது போருக்குச் செல்லாமல், பயந்துகொண்டு உன் அரண்மனைக்குள் புகுந்து கொண்டால் உனக்கு பழியைத் தவிர வேறு என்ன கிடைக்கும்". என்று இராவணனின் மனம் வேதனையடையும்படியாக எடுத்துச் சொன்னான் அங்கதன்.

அங்கதன் இப்படிக் கூறியவுடன், மிகக் கோபம் கொண்ட இராவணன் "காவலர்களே! உடனே இவனைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்! இவனை தரையில் அடித்துக் கொல்லுங்கள்! என்று கட்டளையிட்டான். இராவணனின் கட்டளையைக் கேட்ட நான்கு வீரர்கள் அங்கதனைப் பிடிக்கப் பாய்ந்து வந்தனர். அப்படி வந்த அந்த நான்கு வீரர்களையும் ஒரே பிடியாக ஒருசேரப் பிடித்துத் தூக்கிக் கொண்டு வானத்தின் மீது பறந்தான் அங்கதன். அப்படி வானத்தில் பறந்து செல்லுங்கால் அந்த நான்கு வீரர்களைப் பிய்த்து அவர்கள் தலைகள் கோட்டை வாயிலில் விழும்படி தூவிவிட்டு, அதனைக் காலால் நன்கு தேய்த்துவிட்டு, போருக்கு அறைகூவல் விடுக்கிறான்.

"ஏவினார் பிடித்தாரை எடுத்து எழத்
தாவினான், அவர் தம் தலை போய் அறக்
கூவினான், அவன், கோபுர வாயிலில்
தூவினான், துகைத்தான், இவை சொல்லினான்."

"இலங்கை நகரத்து மக்களே! இராமபிரான் போருக்கு வந்து விட்டார். அவரது அம்புகள் இந்த நகரத்தைச் சுட்டெரிப்பதற்கு முன்பாக, எல்லோரும் பிழைத்துப் பாதுகாப்பாக ஓடிப் போய்விடுங்கள்." என்று அறிவித்துவிட்டு வான வெளியில் ஏறிச் சென்று இராமபிரான் இருக்குமிடம் சென்று அவன் பாதங்களை வணங்கினான்.

அங்கதனைப் பார்த்து இராமபிரான், இராவணனைப் பார்த்துப் பேசினாயா? அவன் என்ன சொன்னான் என்று கேட்டார். அதற்கு அங்கு நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் அங்கதன் எடுத்துரைத்தான். அவன் சொன்ன அனைத்தையும் சொல்லி என்ன பயன்? அவன் தலைகள் அறுபட்டு விழப் போகிறதேயன்றி, அவன் கொண்ட ஆசையை விட்டபாடில்லை. வேறு என்ன சொல்வது" என்றான் அங்கதன்.

அங்கதன் இராவணனிடம் தூது சென்றதையும், அங்கு நடந்தவை அனைத்தையும் அவன் இராமனிடம் சொன்னதையும், இனி நடக்கப் போவது பெரும் போரேயன்றி சமாதானம் அல்ல என்று அனைவரும் அறிந்து கொண்டனர். இந்த உணர்வை எதிரொலிப்பதுபோல நாலாபுறத்திலுமுள்ள பாசறைகளிலிருந்து முரசுகள் முழங்கத் தொடங்கின. அவை 'போர் போர்' என்பது போல ஓசை எழுப்பின. முதல் நாள் போர் தொடங்கியது.

இலங்கை நகரைச் சுற்றியுள்ள அகழிகளை, முன்பு கடலைத் தூர்த்து சேதுவைக் கட்டியது போல, மரங்களையும், பாறைகளையும் கொண்டு வந்து போட்டு மூடிவிடுங்கள் என்று வானரப் படைக்கு இராமபிரான் ஆணையிட்டார். அவரது உத்தரவுப்படி வானர வீரர்கள் இலங்கை நகரத்தின் நாலா புறத்திலுமுள்ள அகழிகளைத் தூர்த்தனர். வலிமை மிக்க இராவணன் அகழியை எளிய வானரர்கள் தூர்த்தது, வலிமையும், செல்வமும் ஓர் இடத்துக்கு நிரந்தரம் அல்ல, மாறக் கூடியதே என்பதை விளக்கும்படியாக இருந்தது.

அகழியைத் தூர்த்தபின் வானரப் படை, கோட்டை மதிலின் உச்சிக்கு ஏறிச்சென்று ஆரவாரம் செய்யத் தொடங்கின. இவர்கள் அங்கு செய்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கோட்டை மதிற்சுவர்கள் தரையில் அழுந்தின.

அதே நேரத்தில் இலங்கை நகரத்துக்குள் அரக்கர் படையும் போருக்கு எழுந்தன. முரசுகள் முழங்கின. ஊது கொம்புகள் ஒலித்தன. யானை குதிரைகள் இவற்றின் கழுத்திலிருந்த மணிகள் ஒலி எழுப்பின. இரு புறத்துப் படைகளும் ஒன்றுக்கொன்று நேரெதிராக நின்று மோதத் தொடங்கின. வானரப் படைவீரர்கள் மரங்களையும், கற்களையும், தத்தம் பற்களையும் ஆயுதமாகக் கொண்டு போர் புரிந்தனர். அரக்கர்கள் வில், அம்பு, வேல், மற்ற பல கொடிய படைக் கலன்களைக் கொண்டு போர் செய்தனர். இரண்டு புறத்திலும் மிகக் கடுமையாகப் போர் நடந்தது.

வானர வீரர்கள் வீசிய கற்களையும், மரங்களையும் அரக்கர்களது அம்புகள் பொடித்தன. மலை மேல் நின்று கொண்டு வானரர்கள் வீசிய மலைகளும் பாறைகளும் அரக்கர்களை நசுக்கிக் கொன்றன. காணுமிடங்களில் எல்லாம் பிணங்களும், இரத்த வெள்ளமுமாகக் காட்சி அளித்தது. தாங்கள் வீசிய மரங்கள் செயலிழந்த நிலையில் வானர வீரர்கள் பற்களாலும், கைகளாலும் அடித்து அரக்கர்களைக் கொன்றனர். அரக்கர்கள் வீசிய தண்டங்களாலும், செலுத்திய அம்புகளாலும் பல்லாயிரக் கணக்கில் வானர வீரர்கள் மாண்டு போயினர்.

இலங்கை நகரத்தின் மதில்கள் இரத்தக் கறை பட்டு சிவந்த நிறமாக மாறின. பெருக்கெடுத்தோடும் குருதி வெள்ளம் கடலில் போய் சங்கமமாகியது. பிரளய காலத்தில் கடல் வெள்ளம் மேரு மலையின் உச்சிக்குச் சென்று பிறகு வடிவது போல வானரப் படை பெரிய மதிலில் ஏறிப் பின் தரையில் இறங்கி போரிட்டன. அரக்கர் படை தாங்கள் அம்பும், வேலும் வீசுவதற்கு ஏற்ற இண்டு இடுக்குகளில் எல்லாம் நின்று கொண்டு போரிட்டனர்.

பெருக்கெடுத்து ஓடும் இரத்த வெள்ளத்தில் அரக்கர்களும், வானரர்களும் நீந்திச் சென்றனர். சிலர் பிழைத்துக் கரை ஏறினர். சிலர் அடித்துச் செல்லப்பட்டு மாண்டு போயினர். கடலில் அலைகள் எழுப்பும் ஒலிக்கும் மேலாக போர்க்களத்தில் எழும் முரசங்களின் ஒலியும், மத்தள ஒலியும், முரலுகின்ற சங்கின் ஒலியும், எக்காள ஒலியும், ஆகுளி எனும் சிறு பறையொலியும் மேலெழுந்து ஒலித்தன. இலங்கையின் நான்கு கோபுர வாயில் வழியாகவும் வெள்ளம் போல அரக்கர் படை புறப்பட்டு வந்துகொண்டிருந்தது.

யானைப் படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை இவை ஒருமிக்க எழுந்தபோது புழுதிப் படலம் வானுயர எழுந்தது. அரக்கர் சேனையின் பெரும் பலத்துக்கு முன்பாக தாக்குப் பிடிக்க முடியாமல் வானர சேனை சிதறி ஓடியது. இதனைக் கண்டு கடும் கோபமடைந்த சுக்ரீவன் ஓர் பெரிய கடம்ப மரத்தை வேரோடு பிடுங்கிக் கொண்டு போர் செய்யலானான். அரக்கர்களின் நானாவிதப் படைகளையும் தன் கை மரத்தால் தாக்கி அதாஹதம் செய்தான்.

போர்க்களத்தில் பேய்க்கணங்கள் ஆடியும், பாடியும் களித்துக் கொண்டாடின. தலையற்ற முண்டங்கள் எழுந்து நின்று ஆடுகின்றன. கற்புடை மாதர்கள் களத்தில் மாண்ட தத்தமது கொழுனனைத் தேடி அலைந்தனர். அரக்கர்கள் தோல்வி முகத்தில் இருப்பதைக் கண்ட கொடிய அரக்கன் வச்சிரமுட்டி என்பான், கண்களில் தீப்பொறி பறக்க, பருந்துக் கூட்டம் பின் தொடரத் தன் தேரில் ஏறி, கடலைக் கிழித்துக் கொண்டு வரும் கப்பல் போல வந்து சேர்ந்தான்.

வச்சிரமுட்டி செய்த கடுமையான போரில் வானரங்கள் அழிந்து போயின. இந்திராதி தேவர்கள் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தனர். தன் படை வீரர்கள் மடிந்து போவதை சுக்ரீவனும் மனம் நொந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான். இதனால் கடும் கோபம் கொண்ட சுக்ரீவன் அந்த வச்சிரமுட்டியின் தேர் மீது பாய்ந்தான். பாய்ந்து அவனது வில்லையும், அம்புறாத் தூணியையும் அறுத்து எறிந்து விட்டு வச்சிரமுட்டியையும் கொன்று போட்டான். வச்சிரமுட்டி இறந்ததும், அரக்கர் படை நிலை குலைந்து ஓடத் தொடங்கியது. வானரர்கள் இதனைக் கண்டு ஆரவாரம் செய்தனர்.

இது இங்ஙனமிருக்க, இலங்கையில் கிழக்கு வாயிலில் அரக்கர் படை வந்து குவிந்தது. சூலம், வாள், அயில், தோமரம், சக்கரம், வாலம், வாளி முதலான ஆயுதங்களால் தாக்கி வானர வீரர்களைக் கொன்றனர். பதிலுக்கு வானர வீரர்கள் வீசிய குன்றுகளாலும் பெரிய மரங்களாலும் அரக்கர்கள் மாண்டு வீழ்ந்தனர். அப்போது நெருப்பின் மகனான வானரப் படை தளபதி நீலன் பெரிய கடம்ப மரத்தைப் பிடுங்கிக் கொண்டு அரக்கர் படை மீது வீசினான். அரக்கர்கள் பக்கம் தேர்களும், குதிரைகளும், அரக்க வீரர்களும் அடிபட்டு மாண்டு வீழ்ந்தனர். வெறி கொண்டு தாக்கும் நீலனை எதிர்க்க கும்பானு எனும் அரக்க வீரன் வந்து சேர்ந்தான். அப்போது இடும்பன் எனும் கரடிப்படை வீரன் கும்பானுவை எதிர்த்துத் தாக்கத் தொடங்கினான். இருவருக்கும் கடும் யுத்தம் நடந்தது. நீண்ட நேர யுத்தத்துக்குப் பின், கும்பானு எனும் அரக்கனை இடும்பன் தன் கைகளால் பிடித்து, அவன் தலையைத் தன் வாயால் கடித்து துண்டாக்கி அவனைக் கொன்றான்.

அரக்கர் படை தோற்பதைக் கண்ட சுமாலியின் மகன் பிரஹஸ்தன், போர் புரியத் தொடங்கினான். இதைக் கண்டு வானரப் படைத் தலைவன் நீலன் ஒரு பெரிய மலையை எடுத்து வீச, அது பிரஹஸ்தன் விட்ட அம்புகளால் பொடிப்பொடி ஆகிக் கீழே விழுந்தது. நீலன் சளைக்காமல் மீண்டும் மரங்களைப் பிடுங்கி பிரஹஸ்தனின் தேர், வில், கொடி முதலியனவற்றை அறுத்தெறிகிறான். நீலனும், பிரஹஸ்தனும் தரையில் இறங்கி நேருக்கு நேர் போர் புரியத் தொடங்கினர். நீலன் பிரஹஸ்தனை வானத்தில் தூக்கி எறிந்தான். கீழே விழும் முன்பாக பிரஹஸ்தன் நீலனைத் தன் கதையால் தாக்க, நீலன் அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான், அவன் முகத்திலிருந்து குருதி கொட்டியது. அதோடு அவன் நீலன் மார்பில் குத்த வரவும், நீலன் திரும்ப குத்தினான். அடடா! இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த போரை எங்ஙனம் வர்ணிப்பது?

பிறகு நீலன் பிரஹஸ்தனை இரு புறமும் வாலினால் சுற்றி தோளிலும், மார்பிலும் நெற்றியிலும் மாறி மாறி குத்தினான். பிரஹஸ்தன் உயிர் இழந்து பெரிய மலை விழுந்தது போல விழுந்து இறந்தான். இந்த போரைப் பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள், பிரஹஸ்தன் மாண்டு விழுந்ததும் "இறந்து விழுந்தனனே பிரஹஸ்தன்" என்று ஆவலம்* கொட்டினர். (ஆவலம் = வியந்து ஆரவாரம் செய்தல்). அரக்கர்கள் வெருண்டு ஓடித் தத்தமது ஊருக்குள் ஓடி ஒளிந்தனர். இங்ஙனம் கிழக்கு வாயிலில் போர் நடந்து கொண்டிருக்க, தெற்கு வாயிலில் அங்கதன் நடத்திக் கொண்டிருந்த போரைச் சிறிது பார்ப்போம்.

கோட்டையின் தெற்கு வாயிலில் அங்கதனை எதிர்த்து சுபாரிசன் எனும் அரக்கன் போரிட்டான். அங்கதனுடைய தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல், அந்த சுபாரிசன் போர்க்களத்தில் இறந்து வீழ்ந்தான். தங்கள் படைத்தலைவன் சுபாரிசன் இறந்த செய்தி கேட்டு அனைத்து அரக்கர் படை வீரர்களும் ஓட்டம் பிடித்தனர்.

அதே நேரம், நகரத்தின் மேற்கு வாயிலில் மேலோன் அனுமன், துன்முகன் எனும் அரக்கனையும் அவனது நூற்றிரண்டு வெள்ளச் சேனைகளையும் எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தான். அனுமன் தன் கைகளால் விட்ட குத்தில் ஏராளமான அரக்கர்கள் மேல் உலகம் விரைந்தனர். நான்கு வாயில்களிலும் நடந்த போரைப் பற்றி தூதுவர்கள், இராவணனிடம் போய்ச் சொல்லுகிறார்கள்.

கிழக்கு வாயிலில் பிரஹஸ்தன் மாண்டுபோனதையும், தென் திசையில் சுபாரிசன் இறந்த செய்தியையும், வடக்கு வாயிலில் வச்சிரமுட்டியும், மேற்கு வாயிலில் துன்முகனும் மாண்ட செய்திகளைத் தூதுவர்கள் வந்து சொல்ல, இராவணன் சினத் தீ மூள, கண்களில் தீப்பொறி பறக்க, ஒன்றும் பேசாமல் பெருமூச்சு விட்டான்.

"பிரஹஸ்தனைக் கொன்றவன் யார்?" என்று இடி இடிப்பதைப் போலக் கேட்டான் இராவணன்.

"பிரஹஸ்தனின் நெற்றியில் அடித்து அவனைத் துடிதுடிக்கக் கொன்றவன், வானரப்படைத் தலைவன் நீலன்" என்றனர் தூதர்கள். பிரஹஸ்தனோடு சென்றவர்களில் மீண்டவர் நாங்கள் மட்டுமே என்றனர்.

"ஆஹா! எப்பேர்ப்பட்ட ஆயுதங்களை உடையவன் பிரஹஸ்தன். அவனை வெறும் மரங்களைக் கொண்டு போர் புரியும் குரங்குகள் கொன்றனவா?" என்று மனம் புழுங்கினான் இராவணன். "இந்திரனை வென்று வீழ்த்திய பிரஹஸ்தனை ஒரு சிறிய குரங்கா கொன்றது? இந்தச் செய்தியே என் செவிகளைச் சுட்டது. அது மேலும் என் நெஞ்சையும் சுட்டதே" என்று வருந்தினான் இராவணன்.

கோபம் தலைக்கேறிய இராவணன் தானே போர்க்கோலம் பூண்டு ஒரு தேரின் மீது ஏறினான். அந்தத் தேர் ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட தேர். கடல் ஒலி போல அதிரும்படி ஓசை எழுப்பும் தேர் அது. தேவர்தம் விண்ணுலகுக்கும் சென்று வரும் வலிமை பெற்றது. இந்திரன், முன்பு போரில் தோற்றபோது இராவணனுக்குக் கொடுத்த தேர் அது. தான் வழிபடுகின்ற ருத்ரனை மனதால் எண்ணி, உடம்பால் வணங்கி, தன் வில்லை கையிலே எடுத்து, நாணின் ஒலியை எழுப்பினான். சிறந்த படைக்கலன்களைத் தேடி எடுத்துக் கொண்டான். மார்பில் கவசம் அணிந்தான். தும்பைப்பூ மாலையை கழுத்தில் அணிந்து கொண்டான்.

அவன் தலைக்கு மேல் வெண்கொற்றக் குடையைப் பிடித்துக் கொண்டனர். இருபுறமும் கவரி வீசினர்; முரசுகள் முழங்கின; கடல் சிதற தேவர்கள் உடல் நடுங்க, அண்ட முகடு வெடிக்க, சங்குகள் முழங்க இராவணன் முதல் நாள் போருக்குப் புறப்பட்டான். அவனது தேரின் மீது வீணைக் கொடி பறந்து கொண்டிருந்தது. தேவர்கள் மனம் கலங்கினர். இராவணனது கண்கள் சினத்தால் சிவந்து புகை கக்கின. இந்தக் கோலத்தில் இராவணன் போர்க்களம் புகுந்தான்.

பெரும்படையோடும், கடும் சினத்தோடும் இராவணன் போருக்குப் புறப்படும் செய்தியை ஒற்றர்கள் இராமனிடம் சென்று தெரிவித்தனர். இராமன் போர் என்றதும் தோள் பூரித்து எழுகிறான். போர்க்கோலம் பூண்டு, வில்லையும், அம்புறாத் தூணியையும் கட்டிக் கொண்டு, தும்பை மாலை சூடிக் கொண்டு புறப்பட்டான். இலக்குவனும் இராமனோடு எழுந்து போர்க்கோலம் பூண்டு இராவணனைப் போர்க்களத்தில் சந்திக்கத் தயாராகிறான். இரு புறத்திலும் அரக்கர் சேனையும், வானர சேனையுமாக எதிரும் புதிருமாக போருக்குத் தயாராக நின்றனர். போர் தொடங்கியது. இரு புறத்திலும் மிகக் கடுமையான போரில் வீரர்கள் ஈடுபட்டனர், காரணம் ஒரு புறம் இராமனே படைகளுக்குத் தலைமை வகித்துப் போரிடுவதும், எதிர்ப்புறம் இராவணன் தன் அரக்கப் படைகளோடு மிக உக்கிரமாக வந்து போரில் ஈடுபட்டிருப்பதுமே.

இந்தப் போரில் வானர சைன்யம் மிகக் கடுமையாகப் போர் புரிந்தது. வடக்கு எது, தெற்கு எது என்று திக்கு திசை புரியாத அளவில் போர் மிகக் கடுமையாக நடைபெற்றது. ஒரு புறம் பொற்குவியல் போல வானர சைன்யம், மறுபுறம் கருங்கல் குவியல் போல அரக்கர் சைன்யம், இரண்டும் மோதிய மோதலில் கொத்துக் கொத்தாக மாண்ட வீரர்களின் பிணக் குவியல் ஆங்காங்கே காணப்பட்டது. இராவணன் தனது வில்லில் நாணேற்றி எதிரிகள் மீது அம்பு மழை பொழியத் தொடங்கினான். அப்போது சுக்ரீவன் அங்கே வந்து இராவணனுடன் போர் புரியத் தொடங்குகிறான். இருவருக்கும் மிகக் கடுமையான யுத்தம் நடக்கிறது. இராவணனுடைய கடுமையான தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் சுக்ரீவன் சற்று தளர்ச்சி அடைகிறான். இதைக் கவனித்துக் கொண்டிருந்த மாருதி உடனே அங்கு வந்து சேருகிறான்.

மேற்கு வாயிலில் இருந்த மாருதி, வடக்கு வாயிலுக்கு நொடிப் பொழுதில் வந்து சேர்ந்தான். எம் மன்னன் தெளிந்து எழுவதற்கு முன் இராவணா! வா! என்னோடு போரிடு! என்று அறைகூவல் விடுத்தான். அப்படிச் சொல்லிக் கொண்டே ஒரு பெரிய மலையைப் பெயர்த்து எடுத்து இராவணன் மீது வீசினான். அதை இராவணன் ஓர் அம்பால் அடித்துத் தூள்தூளாக்கினான்.

அனுமன் மீண்டும் ஒரு மலையைப் பெயர்த்து எடுத்து வலிமையோடு இராவணன் மீது வீசவும், அது மேலும் வேகம் எடுத்து இராவணன் அதைத் தடுக்கும் முன்பாகவே அவனது தோளைத் தாக்கி அவன் அணிந்திருந்த 'வாகுவலயம்' என்ற கவசத்தைப் பொடிப்பொடியாக்கியது. இதனால் கடும் கோபம் கொண்ட இராவணன், மறுபடியும் ஒரு மலையைப் பெயர்த்துக் கொண்டிருந்த அனுமன் மீது தொடர்ந்து பத்து அம்புகளைச் செலுத்தினான். அது அவன் கைகள், தோள், மார்பு இவற்றில் புகுந்தது, எனினும் அனுமன் அவற்றைப் பொருட்படுத்தாது போர்புரிந்தான்.

இராவணன் விட்ட அம்புகள் அனுமன் உடலில் பாய்ந்து நிற்க, சற்றும் அதனைப் பொருட்படுத்தாமல் இருந்ததைக் கண்டு தேவர்கள் "யார் இதனை நிகழ்த்த வல்லார்?" என்று மகிழ்ந்து நோக்கினார்கள். அனுமன் ஒரு வெண் கடம்பு மரத்தைப் பிடுங்கி எடுத்து சுழற்றி இராவணன் மீது எறிந்தான். அந்த மரம் இராவணனது தேர்ப்பாகனை வீழ்த்தி, பல அரக்கர்களையும் கொன்று போட்டது. இறந்த பாகனுக்குப் பதிலாக வேறொரு தேரோட்டி உடனே தேரில் ஏறி அமர்ந்து தேரை ஓட்டத் தொடங்க, இராவனன் நூறு அம்புகளை அனுமன் மீது விட்டான். அவை உடலைத் துளைத்ததால், அனுமன் வேதனை அடைந்தான்.

"கற்களாலும், மரங்களைக் கொண்டும், வெறும் கையாலும் போரிடுகிறீர்களே என்று பொறுத்தேன், இனி என் கையில் வில் எடுத்தால் நீங்கள் தாங்குவீர்களோ?" என்றான் இராவணன்.

இப்படிச் சொல்லிவிட்டு ஆயிரம் கோடி அம்புகளை ஒன்றையொன்று விஞ்சுமாறு இடிபோல தாக்கத் தொடங்கினான். வானரப் படை காற்றால் அடித்த கடல் போல சிதறியோடியது. இராவணனது வில்வித்தையைக் கண்ட இலக்குவன், இவனை என் அம்புக்கு இலக்கு ஆக்குவேன், தடுக்கிறேன் இப்போதே என விரைந்து வந்தான். தன் வில்லின் நாணை இழுத்து ஒலி எழுப்பினான். ஊழிக் கால மழையின் இடி என உலகம் அஞ்சியது. அரக்கர்கள் நிலையைக் கேட்கவும் வேண்டுமோ?. இராவணன் இந்த ஒலியைக் கேட்டதும் "இது என்ன?" மனிதன் எழுப்பும் ஓசையா இது? என்று வியந்து போனான்.

இலக்குவன் வில்லின் நாணை இழுத்து அம்புகளை மழை போல செலுத்தினான். அவை சரமாரியாக அரக்கர்கள் மீது விழுந்து பேரழிவை ஏற்படுத்தின. எங்கு பார்த்தாலும் குருதியாறு பெருக்கெடுத்து ஓடியது. அரக்கர் சேனையும் இலக்குவனைச் சூழ்ந்து கொண்டு திருப்பித் தாக்கத் தொடங்கியது. இவன் நம் அரசன் இராவணனை நெருங்கி விடக்கூடாது என்று உறுதிகொண்டு போராடினர். அரக்கர்கள் பெய்த அம்பு மழையை எதிர்த்துத் தன் அம்பு மழையால் அவற்றை அறுத்துத் தள்ளினான் இலக்குவன். அதையும் மீறி வந்து தாக்கிய அம்புகளைத் தன் உடலில் தாங்கிக் கொண்டான். சண்டமாருதம் போல இலக்குவன் வில்லினின்றும் புறப்பட்ட அம்புகள் அரக்கர்களை அழித்து ஒழிக்கவும், இராவணன் கடும் கோபத்துடன் தன் தேரை விரைந்து செலுத்தி இலக்குவன் அருகில் கொண்டு வந்து நிறுத்தினான். எமனைப் போல வெறி கொண்டு அரக்கர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த இலக்குவன் இடம் பெயறாது கடும் சினத்துடன் நின்றான். இராவணன் தனக்கு முன்னால் கொண்டு வந்து தேரை நிறுத்தியதைக் கண்டதும் இலக்குவன் கோபம் அதிகமாகியது.

"சீதையைக் காவல் புரிந்த என்னை வஞ்சனையால் நீக்கி அன்னையைச் சிறை எடுத்த கள்வனே! இன்று நீ என்னிடமிருந்து தப்பிப் போக முடியாது" என்று சொல்லிக்கொண்டே போர் செய்தான்.

இலக்குவன் விட்ட அம்புகளை இராவணன் செயலிழக்கும்படி செய்தான். இலக்குவனின் அம்புறாத் தூணியையும் இராவணன் அறுத்துத் தள்ளினான். அப்போது அருகில் இளைப்பாறிக் கொண்டிருந்த அனுமன் "தீ எழ விழித்து" "இராவணா! இனி பொய்யான போர்களைச் செய்யாதே" என்று சொல்லிக் கொண்டே தேருக்கு எதிரே வந்து நின்று "நீ பின்னே செய்ய வேண்டிய போர் நிறைய இருக்கிறது. இப்போது நான் சொல்வதைக் கேள்!" என்றான்.

இப்படிச் சொல்லிக் கொண்டு இராவணனுக்கு முன்பாக நின்று கொண்டிருக்கும்போதே அனுமன் தனது விஸ்வரூபத்தை எடுத்து, வானுக்கும் பூமிக்குமாக நின்றான். அவன் இராவணனைப் பார்த்து "வா! இராவணா! வா! வந்து என் முன்னால் என்னை எதிர்த்து நில்!" என்றான். இராவணனும் அங்ஙனமே துணிவோடு அவன் எதிரில் நின்றான்.

"இராவணா! உன் வீரத்தையும், புகழையும், ஆண்மையையும் ஒரே குத்தினால் இப்போதே ஒழித்து விடுகிறேன். குரங்கு ஒரு கையால் விடும் குத்தினை வலிமை குன்றாமல் தாங்குவாயோ?" என்றான்.

"இராவணா! என் தோள் வலிமையால், நான் உன்னை ஓங்கி ஒரு குத்து விடுகிறேன். அதன் பின்பும் நீ இறக்காமல் இருப்பாயானால், நீ உன் வலிய கரங்களால் என் மீது குத்துவாயாக! அவ்வாறு நீ குத்தினாலும் நான் இறவேன். ஆனால், அதன் பிறகு உன்னுடன் நான் எதிர்த்துப் போர் புரிய மாட்டேன்" என்றான் அனுமன்.

இப்படி அனுமன் சொன்னதும் மகிழ்ந்து இராவணன் "வெற்றியுடைய அனுமனே! ஒரு வீரனுக்கு ஏற்ற சொல்லினைச் சொன்னாய். தனி ஒருவனாக எனக்கு எதிராக நிற்க உன்னைத் தவிர வேறு யாரால் முடியும்? உன் புகழ் உலகத்தையே சிறியதாக ஆக்கி விட்டதப்பா!" என்று அனுமனைப் புகழ்ந்தான்.

"அஞ்சநேயா! உன்னிடம் ஆயுதம் எதுவும் இல்லை. தன்னந்தனியனாய் உள்ள நீ என் உறவினர்களைக் கொன்று ஒழித்தாய். தேரில் ஏறி கொடிய ஆயுதங்களோடு வந்திருக்கிற எனக்கு எதிராக வந்து நின்றுகொண்டு, என்னைப் போருக்கு அழைக்கிறாய். உன் வீரத்துக்கு யாரும் நிகர் ஆகமாட்டாரப்பா!" என்றான் இராவணன்.

"நின்ற இடத்தில் அசையாமல் நின்று, என் மார்பில் குத்து என்கிறாயே. என்னப்பா உன் துணிவு. சொல்லும் தரமன்று!. இவ்வளவு துணிச்சலோடு நீ வந்து நின்ற பின்னும் உனக்குக் கிடைக்க வேண்டிய வெற்றி வேறு என்ன இருக்கிறது. இனி போர் செய்வதும் தேவையில்லை. சூளுரைத்து எனக்கு இவற்றைச் சொன்னாய். காலம் ஓடுகிறது. பேசி என்ன பயன்? இதனால் எனக்குப் பழி ஏற்படினும் அதற்காக நான் வெட்கப்படப் போவதில்லை. ஏனெனில் நீ ஒரு மாபெரும் வீரன். ஆண்மையாளன். வா! உலகமே காணும்படி என் மார்பில் கடுமையாகக் குத்து" என்றான் தீவினைகளை விட்டு நீங்காத இராவணன்.

அனுமன் இராவணனிடம் "உன் வீரத் திறம் சிறப்புடையது" என்று வியந்து பெரிய ஆரவாரம் செய்து கொண்டே, கண்களை அகல விரித்து, தீப்பொறி எழ இராவணனின் கவசமணிந்த உடல் சிதறிப்போகும்படி, வைரம் போன்ற தன் கையால் இராவணனின் விரிந்த மார்பில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

அந்தக் குத்தின் விளைவாக, பெரிய பெரிய மலைகள் எல்லாம் சிதறி உடைந்து விழுந்தன. இராவணன் கண்கள் நெருப்பைச் சிந்தின. அவன் பத்துத் தலைகளின் மூளைகள் தயிர் போல கீழே சிந்தின. அரக்கர்கள் அதிர்ச்சியால் உயிரை விட்டர்கள். வானர வீரர்கள் அதிர்ந்து போய் மயிரையும், பற்களையும் உதிர்த்தனர். மேகங்கள் நிலை குலைந்து மழையைப் பொழிந்தன. அந்த அதிர்ச்சியால் வில்லில் பூட்டப்பட்ட நாண்கள் உதிர்ந்தன. கடல் நீர் கரை தாண்டி உட்புகுந்தது. மலைகள் கற்களை உதிர்த்தன. திசையானைகளின் பற்கள் சிதறி விழுந்தன. வீரர்கள் கையில் பிடித்த ஆயுதங்கள் நழுவி விழுந்தன. இராவணன் மார்பில் நெருப்பு எழுந்தது".

"கைக்குத்து அது படலும் கழல் நிருதர்க்கு இறை கறை நீர்
மைக்குப்பையின் எழில் கொண்டு ஒளிர் வயிரத் தடமார்பில்
திக்கில் சின மதயானைகள் வய வெம்பணை செருவில்
புக்கு இற்றன, போகாதன புறம் உக்கன புகழின்".

அனுமன் தனது கை முஷ்டியை மடக்கி இராவணன் மார்பில் விட்ட குத்தானது, அவன் மார்பில் விழுந்த மாத்திரத்தில், முன்பு திசை யானைகளோடு (அஷ்ட திக் கஜங்கள்) மோதி அவற்றின் தந்தங்கள் ஒடிந்து அவன் மார்பில் தங்கிவிட, அவை இப்போது அனுவன் விட்ட குத்து விழுந்த வேகத்தில், பின் புறமாக முதுகைத் துளைத்துக் கொண்டு பொலபொலவென கீழே விழுந்தன. இராவணன் தலை சுற்றித் தள்ளாடினான். இதனைக் கண்டு வானர வீரர்கள் ஆர்த்தனர். உயிர் அவன் உடலைவிட்டுப் பிரிந்து சென்று மீண்டும் அவனுள் சேர்ந்தாற் போன்ற உணர்வினைப் பெற்றான் இராவணன்.

பிறகு சுய உணர்வு திரும்பப் பெற்ற இராவணன் "உனக்கு ஒப்பானவர் எவரும் இல்லாதவனே! இதுவரை நான் அடைந்திராத துன்பத்தை நான் இன்று அடையச் செய்து விட்டாய். இப்போது என் முறை, ஆகையால் வா! என் குத்தை வாங்கிக் கொள்" என்றான்.

"உலகில் எனக்கு நிகரான வலிமை யாரிடமாவது இருக்கிறதெ என்றால், ஆம்! அது உன்னிடம் இருக்கிறது. உலகில் உனக்குப் புறம்பாய் இருப்பவர் ஆண்மையற்றவர் எனும்படியான திறன் படைத்தவன் நீ. பிரம்மனே சாபமிட்டு என் வலிமையைக் குறைத்தாலும் குறைவடையாத என் வலிமை இப்போது உன்னால் தளர்ச்சி அடைந்து விட்டது. நீ வேற்றி உடையவன்" என்று இராவணன் அனுமனைப் பாராட்டினான்.

இராவனன் மேலும் தொடர்ந்து சொல்கிறான் "இப்போது நான் உன் மார்பில் குத்தவும், நீ மாளாது இருப்பாயானல், நினக்கு ஒப்பானவர் உலகில் எவரும் இல்லை. நினக்கு பகை ஒருவரும் இல்லை. இன்றும், என்றும் நீ நிலைத்து இருப்பவன் ஆவாய்!".

இப்படிச் சொல்லிக் கொண்டே இராவணன் அனுமன் முன் சென்று நின்றான். "என் குத்தில் உயிர் பிழைத்தாய் என்பதே நீ வென்றாய் என்று பொருள்" என்று சொல்லிக்கொண்டே அனுமன் "இந்தா! உன் கடனைக் கொள்க!" என்று தன் மார்பைக் காட்டினான்.

இராவணன் தன் பிலம் போன்ற வாயை மடித்துக் கொண்டு, ஒளி வீசும் பற்களால் இதழைக் கடித்துக் கொண்டு, கண்களில் தீப்பொறி பறக்க, தன் விரல்களை பலமாக மடித்துக் கொண்டு, கையைப் பின்னே தள்ளி குறுக்கி, தோள்புறத்தை நிமிர்த்திக் கொண்டு, விட்டான் ஒரு குத்து அனுமன் நெஞ்சில்.

அப்போது பூமியே பிளந்து பெயர்ந்தாலும் நடுங்காதவனும், வலியவர்களுக்கெல்லாம் வலியவனான அனுமன், வெள்ளிப் பனி மலை தளர்ந்தது போலத் தளர்ந்தான். எதற்கும் தளராத அனுமன் இராவணன் விட்ட குத்தில் தளர்ந்ததைக் கண்ட தேவர்கள் நடுங்கினர். தர்மம் தளர்ந்தது; வாய்மை தளர்ந்தது; மேன்மை குணங்கள் தளர்ச்சியுற்றன; புகழும் சுருதிகளும் சோர்வுற்றன; நீதிகளும் தளர்ந்தன; கருணையும் தவமும் சோர்வுற்றன. போர் மட்டும் தொடர்ந்து நடந்தது.

வானர வீரர்கள் பாறைகளையும், கற்களையும் எடுத்து அரக்கர்கள் மீது பொழிய அவற்றை இராவணன் தன் அம்பினால் பொடியாக்கினான். இராவணன் போர் புரிதலைக் கண்டு இமையவரும் வியந்து போனார்கள். இக்கணமே இவ்வானரக் கூட்டத்தை அழிப்பேன், இரு மானிடரையும் கொல்வேன் என்று இராவணன் கோபம் கொப்பளிக்க, பத்து வலிமையுள்ள நீண்ட விற்களைத் தன் கரங்களில் ஏந்தி வில்லை ஒருசேர வளைத்துச் சுடுசரங்களை எய்தான். பத்து விற்களிலும் ஆயிரம் அம்புகளைப் பத்து கைகளாலும் விரைவுடன் தொடுத்து எய்ததனால் எங்கும் அம்புகளாகவே சீறிக்கொண்டு சென்றன. வானர வீரர்கள் வரிசை வரிசையாக மடிந்து வீழ்ந்தனர். அவர்களுடைய பிணங்கள் போர்க்களம் முழுவதும் மலையாகக் குவிந்தன.

இராவணன் எய்த அம்பு தாக்கியதால் வானர படைத்தலைவன் நீலன் மயங்கி வீழ்ந்தான். அனிலன் என்ற வீரன் நிற்க முடியாமல் சாய்ந்தான். கவயன் என்ற வானர வீரன் இறக்கும் தருவாயில் மயங்கிக் கிடந்தான். நஞ்சனைய அம்புகள் தாக்கி அங்கதனும் சோர்ந்து போனான். ஜாம்பவான் சூலம் போன்ற ஒரு ஆயுதம் தாக்கி கீழே விழுந்து கிடந்தான். இந்த காட்சிகளையெல்லாம் கண்ட இலக்குவன் வெகுண்டு எழுந்தான். தன் கை வில்லை எடுத்தான், அம்புகளை அதில் தொடுத்து இராவனன் விட்ட அம்புகளைத் தகர்த்து எறிந்தான். ஓர் அம்பினால் இராவணன் கை வில்லை அறுத்தெறிந்தான்.

இலக்குவனின் வீரம் செறிந்த போரைப் பார்த்து இராவணன் அவனைப் புகழ்ந்து "நினது போர் வலிமை நன்று! போரைக் கையாளும் வலிமையும் நன்று! நின் வீரமும் நன்று! நின் வீரப் பார்வையும் நன்று! அம்பு தொடுக்கும் உன் கையின் விரைவும் நன்று! நின் வில்லின் கல்வியும் நன்று! நினது ஆண்மையும், அழகும் நன்று!" என்று இராவணன் இலக்குவனைப் புகழ்ந்துவிட்டு "நீ ஒப்பற்றவன்" என்று புகழ்ந்தான். "லக்ஷ்மணா! காட்டில் கரனை அழித்த இராமனும், இந்திரனை வில்லின் வலிமையால் வென்றுவிட்ட இந்திரஜித்தனும், கட்டமைந்த வில்வீரனான நானும் தவிர உனக்கு நிகர் வேறு யாரும் கிடையாது" என்றான்.

வில் கொண்டு இவனை வெல்லுதல் முடியாது என்று பிரம்மன் கொடுத்த ஒளிமிக்க வேல் ஒன்றைக் கையில் எடுத்து இலக்குவன் மீது வீசினான் இராவணன். அந்த வேல், இலக்குவன் விட்ட அம்புகளையெல்லாம் பொடிப்பொடியாக்கி விட்டு இலக்குவன் மேல் பாய்ந்தது, இலக்குவன் மயங்கி கீழே விழுந்தான். இலக்குவன் விழுந்து விட்டான் என்பதைக் கண்ட வானரப் படை களத்தை விட்டுச் சிதறி ஓடினர். போரைப் பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் வருந்தினர்; முனிவர்கள் துடிதுடித்தனர்; அரக்கர்கள் ஆரவாரம் செய்தனர்.

எவர்க்கும் அஞ்சாத இலக்குவன், பிரமன் தந்த வேல் தாக்கிய போதும்கூட உயிர் நீங்கினான் இல்லை. சிறிதளவு சோர்வடைந்தான், அவ்வளவே! இதைத் தெரிந்து கொண்ட இராவணன், இலக்குவனைத் தூக்கிக் கொண்டு போகக் கருதி விழுந்து கிடந்த இலக்குவன் அருகில் வந்தான். தன் கைகளால் அவனை அள்ளி எடுக்க முனைந்தான். அவனால் இலக்குவனைத் தூக்க முடியவில்லை. தன் இருபது கரங்களாலும் பலங்கொண்ட மட்டும் முயற்சி செய்தும் இலக்குவனை அசைக்கக் கூட முடியவில்லை. தோல்வியுற்று இராவணன் பெருமூச்செறிந்தான்.

அப்போது ஒரு மூலையில் இளைப்பாறிக் கொண்டிருந்த அனுமன் ஓடிவந்து இடையில் புகுந்து இலக்குவனைத் தன் இரு கரங்களாலும் எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு விரைந்து நீங்கினான். இராம லக்ஷ்மணர் மீது அவன் கொண்ட அன்பினால், அனுமனுக்கு இலக்குவனைத் தூக்குவது மிக எளிதாக இருந்தது, ஒரு குழந்தையைச் சுமந்து செல்வது போல தூக்கிக் கொண்டு சென்றான். அப்போது அவனைப் பார்த்தால், தன் மகவை மடியில் கவ்விக் கொண்டு மரத்தின் மீது செல்லும் பெண் குரங்கைப் போல தோன்றினான்.

சிறிது நேரத்தில் இலக்குவன் மயக்கம் தெளிந்து எழுந்தான். உடனே அனுமனையும் அழைத்துக் கொண்டு இருவரும் இராமன் இருக்குமிடம் சென்றனர். இராமன் இராவணனுடன் போரிடுவதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். இராவணனும் தன் தேரை இராமனுக்கு எதிராகக் கொண்டு வந்து நிறுத்தினான். போர் புரிய இராவணன் தேர்மீது வந்து நிற்க, இராமன் மட்டும் தரையில் நடந்து சென்று போரிடுவதா என்று அனுமன் வருந்தி, இருவரும் ஒத்த நிலையில் போரிடவேண்டுமெனக் கருதி, இராமனைத் தன் தோள்மீது ஏறிக்கொண்டு போரிடுமாறு வேண்டிக் கொண்டான். இராமனும் 'நன்று' என்று சொல்லி அனுமனின் தோள் மீது ஏறிக் கொண்டு போர் புரியச் சென்றான்.

இராமபிரானை அனுமன் தாங்கிக்கொண்டு செல்லும் காட்சியை, முன்னாளில் திருமாலைத் தாங்கிச் சென்ற கருடனும், அந்தப் பெருமாளுக்கு படுக்கையாக இருந்துவரும் ஆதிசேடனும் (அனந்தன்) கண்டார்கள். இந்த இராம இராவண யுத்தத்தைக் காண ருத்ரன், பிரமன், முதலான தேவர்கள் வானத்தில் வந்து கூடினர். முனிவர்கள் இராமனை வெற்றி பெற வாழ்த்தினார்கள். தருமம் தன் நெடிய கைகளால், இராமனை ஆசீர்வதித்தது. அஞ்சன வண்ணன் இராமன் இராவணனுடன் போர் புரிய ஆயத்தமாகி, தனது ஒப்பற்ற வலிமையான கோதண்டத்தின் நாணை இழுத்து ஓர் பேரொலி எழுப்பினான். அவ்வொலி விண்ணிலும், மண்ணிலும் சென்று மோதி எதிரொலித்தது.

அந்த பேரொலி கேட்டு அரக்கர்களும், இயக்கர்களும் நா வரண்டு, மனம் கலங்கி, உடல் நடுங்கி ஓடத் தொடங்கினர். அண்ட சராசர்ங்களும் நடுங்கின. எதற்கும் அஞ்சாத ருத்ரனும், பிரமனும்கூட நிலை குலைந்தனர். இராவணன் ஒரே நேரத்தில் வில்லை வளைத்து கணக்கற்ற அம்புகளைத் தொடுத்தான். ஊழிக்காலத்துத் தீயைப் போல வெம்மையுடைய, கடல் நீரை வற்றச் செய்வது போன்ற, திசைகளையெல்லாம் அளக்கவல்ல, விண்ணையும் மண்ணையும் துளைக்கவல்ல ஏழு கொடிய கணைகளை விடுத்தான்.

இராவனன் எய்த ஏழு கணைகளையும், தனது ஏழு அம்புகளால் பதினான்கு துண்டுகளாக்கி, அனல் கக்கி அகிலத்தையே அழிக்கவல்ல ஐந்து கொடிய கணைகளை இராமன் விடுத்தான். இவ்வைந்து அம்புகளையும் இராவணன் அந்தரத்தில் அறுத்தெறிந்து மேலும் பல கணைகளை ஏவ, அவற்றையும் இராமன் அழித்து ஒழித்தான். இவ்வண்ணம் இராம இராவணருக்கிடையே உக்ரமான போர் நடந்தது.

போர்க்களக் காட்சிகளை என்னவென்று வர்ணிப்பது?

போர்க்களத்தில் தலையற்ற முண்டங்கள் எழுந்து ஆடுகின்றன; அந்த முண்டங்களோடு பேய்களும் ஆடுகின்றன; அவைகள் பாடுகின்றன; துதிக்கை துண்டிக்கப்பட்ட யானைகளும், குதிரைகளும் இரத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன.

"ஆடுகின்றன கவந்தமும்; அவற்றொடு ஆடிப்
பாடுகின்றன அலகையும்; நீங்கிய பனைக்கை
கோடு துன்றிய கரிகளும் பரிகளும் தலைக் கொண்டு
ஓடுகின்றன, உலப்பு இல, உதிர் ஆறு உவரி".

இராமபிரான் போர்க்களத்தில் தன் கோதண்டத்திலிருந்து விடுத்த அம்புகள், இராவணன் ஒருவன் மட்டும் உயிருடன் நிற்க, ஒரு இலட்சம் அரக்கர்களின் தலைகளை அறுத்தும், பல கோடி சேனைகளைச் சிதைத்தும் அழித்து வீழ்த்தின. எந்தத் திசை நோக்கினாலும், பிணக் குவியல்கள் குவிந்து கிடந்தன. யானைகளும், குதிரைகளும், அரக்கர்களும் உடல்கள் பின்னி மலை போல குவிந்து கிடந்தன. இவற்றைக் கண்டு இராவணன் பாம்பு போலச் சீறினான்.

கோபம் கொண்ட இராவணன் தன் வில்லை எடுத்து இரு வலிய அம்புகளை இராமன் மீது செலுத்தினான். அதனை விலக்கிவிட்டு இராமன் ஓர் அம்பை எடுத்துச் செலுத்தி இராவணனின் வில்லை அறுத்தான். மேலும் பல அம்புகளைச் செலுத்தி அவனது தேரில் பூட்டப் பட்டிருந்த குதிரகளின் தலைகளையும் அறுத்துத் தள்ளினான்.

இராவனனுக்கு புதிது புதிதாக தேர்கள் அறுந்த தேர்களுக்கு மாற்றாக வந்து கொண்டிருந்தன. அப்படி வரிசை வரிசையாக வந்த தேர்களையெல்லாம் இராமன் அறுத்து ஒடித்தான். ஓர் அம்பினால் இராவணனின் தலைகளை அலங்கரித்துக் கொண்டிருந்த மகுடங்களை அடித்துக் கீழே விழ்த்தினான். அந்த மகுடங்கள் கடலில் போய் விழுந்தன.

காலம் காலமாய் இராவணன் தலைகளை அலங்கரித்த மகுடங்களை இழந்தான். அப்போது அவன் சந்திரன் இல்லாத இரவு போலவும், சூரியனை இழந்த பகலைப் போலவும் காட்சியளித்தான். நல்ல கவிஞனொருவன் வசைபாடிய பின் செல்வம் முழுவதையும் இழந்த செல்வந்தனை ஒத்திருந்தான் இராவணன்.

போர்க்கருவிகள் எதுவும் இல்லாமல், ஏறிக்கொண்டு போரிட தேர் இல்லாமல், தலையில் மகுடங்கள் இல்லாமல் வெறும் கையனாய், உலகத்தோர் பார்த்து "தர்மத்தைக் கடந்த பாவிகளின் நிலை இதுதான்" என்று சொல்லிக் கொண்டு ஆரவாரம் செய்ய, அவனது கருமை நிறம் மேலும் கருகிடவும், கால் விரல்களால் தரையில் கீறிக் கொண்டும், நாணி தலை குனிந்து நின்றான் இராவணன்.

தன் எதிரில் நாணித் தலை குனிந்து நிற்கும் இராவணனைப் பார்த்து மனமிரங்கி, தனித்து வெறுங்கையனாய் நிற்கும் இவனைக் கொல்வது நன்றன்று என்று 'உன் தீமை இப்போது அடங்கிவிட்டதா?' என்று இராமன் கேட்டு விட்டு, மேலும் சொல்கிறான் "தர்மத்தால் மட்டுமே பெரிய போர்களில் வெல்ல முடியுமே தவிர, வலிமையினால் மட்டும் அல்ல என்பதை மனதில் கொள்க! பாவி! இறந்த நின் சுற்றத்தாரோடு உன்னையும் கொன்றிருப்பேன். ஆனால் உனது இந்த தனித்த அவல நிலை கண்டு நான் உன்னைக் கொல்லவில்லை. எனவே ஓடிப் போ! உன் நகரத்துக்குச் சென்று ஒளிந்து கொள்!" என்றான் இராமன்.

"அறத்தினால் அன்றி அமரர்க்கும் அரும் சமம் கடத்தல்
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி;
பறத்தி, நின் நெடும் பதிபுக, கிளையொடும், பாவி!
இறத்தி; யான் அது நினைகிலென், தனிமை கண்டு இரங்கி".

'சிறு தொழில் கீழோய்!' "போர் செய்யும் வலிமை உனக்கு இருந்தால், உன் நகருக்குள் சென்று ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, படைகளைத் திரட்டிக் கொண்டு மீண்டும் போருக்கு வா! போர் புரியும் ஆற்றல் இல்லையாயின் கோட்டைக்குள் ஒளிந்து கொள், போ!" என்றான் இராமன்.

"இப்போதும் உனக்கு ஓர் வாய்ப்புத் தருகிறேன். சீதையை விடுவித்து என்னிடம் கொண்டு வந்து விட்டுவிட்டு, அந்தணர் வரிசையில் வைத்து மதிக்கத்தக்க உன் தம்பி விபீஷணனுக்கு உன் ராஜ்யத்தின் முடிசூட்டிவிட்டு, நீ அவனுக்கு ஏவல் செய்து இருப்பாயானால் உன் தலையை நான் அறுக்க மாட்டேன். அப்படி இல்லையானால், போர் செய்யும் ஆற்றல் உனக்கு இருக்குமானால், உன் படைகளை எல்லாம் திரட்டிக் கொண்டு என் முன் வந்து 'நில் ஐயா!' என என்னை எதிர்த்துப் போரிட்டு இறப்பாயாக! அவ்வாறு இறந்து போனாலும் நீ நல்லவனாக ஆவாய், அதை விடுத்து இனி உயிர் பிழைக்கலாம் என்று மட்டும் எண்ணாதே!" என்று இராமன் உரைத்தான்.

இந்த இடத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான் இயற்றியுள்ள ஒரு பாடல், பலமுறை படித்துப் படித்து இன்புறத் தக்க பாட்டு. அது இதோ:

"ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா! என நல்கினன் - நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்".

இங்கு இராமன் இராவணனை நோக்கிச் சொன்ன சொற்கள் இவை. இங்கு ஆள் ஐயா! என்றமைக்கு பற்பல வகைகளில் பொருள் கொள்ளும்படி கவிச்சக்கரவர்த்தி எழுதியிருப்பது இன்புறத்தக்கது. மூவுலகங்களையும், ஆளுகின்ற வல்லமை பொருந்திய ஐயா! எனவும், வேதங்களைக் கற்று சிவபெருமானையே வசப்படுத்தியவனாகிய நீ, கேவலம் பெண்ணாசையால் தகுதிழந்து நிற்கிறாயே, நீ என்ன ஆளய்யா என்றும், திசையானைகளை வென்று, கைலயங்கிரியைப் பெயர்த்து, நாரத முனிவருக்கு நிகராக சாம கானம் பாடி, தலையில் மணிகளமைந்த முடிகளை அணிந்து, சங்கரன் கொடுத்த சந்திரஹாசம் எனும் வாளைக் கொண்ட, வீரனான நீ இன்று அடைந்திருக்கும் நிலைமையைப் பார் ஐயா! என்றும் பலவிதங்களில் பொருள் கொள்ளும் இந்தப் பாடல் மிக அருமையான பாடலாகும்.

கமுக மரத்தில் வாளை மீன்கள் தாவிக்குதிக்கும் வளமிகுந்த கோசல நாட்டின் வள்ளலான இராமபிரான், வெறும் கையனாய்ப் போர்க்களத்தில் நிற்கும் இராவணனைப் பார்த்து "என்ன ஆள் ஐயா நீ! உனது படைகள் எல்லாம் சண்டமாருதத்தில் சிதைந்த பூளைப் பூக்கள் போல சிதறுண்டு அழிந்து போனதைக் கண்டாயல்லவா? போ! இன்றைக்கு உன் அரண்மனைக்குத் திரும்பிப் போய், போருக்கு வேண்டிய ஆயுதங்களோடு நாளைக்கு வா! என்று கருணை மேலிடச் சொன்னான் வள்ளல் இராமபிரான்.

தோல்வி என்பதையே அறியாத இராவணனால் பேச முடியவில்லை. என் வீரத்திற்கு இழுக்கு நேர்ந்துவிட்டது. இன்று ஒரு மானிடன் என்னைப் பார்த்து 'இன்று போய் நாளை வா போர்க்கு' என்று சொல்லும் அளவிற்கு நான் தாழ்ந்து போனேன். அந்த மானிடன் நன்றாகத்தான் சொன்னான், என்று வருத்தத்துடன் ஏளனமாய்ச் சிரித்துக் கொண்டு, நிலமகள் முகம் நோக்கி, அயல் நின்றார் எவரையும் காணாமல் தன் ஊருக்குத் திரும்பி அரண்மனையைச் சென்றடைந்தான். முதல் நாள் போர் முடிவுக்கு வந்தது.

இராமபிரான் கருணையோடு முதல் நாள் யுத்தத்தில் தோற்று வெறுங்கையனாய் நின்ற இராவணனுக்கு உயிர் பிச்சை அளித்து அரண்மனைக்குத் திரும்பப் போகும்படி பணித்த பின் இராவணன் ஊருக்குத் திரும்பிய காட்சி பரிதாபமானது. தலை குனிந்த வண்ணம், தலையில் மகுடங்களின்றி, கையில் ஆயுதங்கள் ஏதுமின்றி, உடலெங்கும் காயங்களுடன் மன வருத்தத்தோடு இராவனன் நடக்கும் காட்சியை நமக்குப் படம் பிடித்துக் காட்டும் கவிச்சக்கரவர்த்தி, இந்த இடத்தில் இராவணனின் பெருமைகள் அனைத்தையும் நமக்குப் பட்டியலிட்டுவிட்டு, அத்தகைய இராவணன் இதோ போகிறான் வெறும் கையோடு என்கிறார்.

"வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு, வெறுங்கையோடு இலங்கை புக்கான்".

இந்த இராவணனுக்கு இருந்த பெருமைகள் எவை தெரியுமா? வாரணம் பொருத மார்பன் இவன். அஷ்டதிக் கஜங்கள் எனும் திசையானைகளோடு பொருதி அதனால் அவற்றின் தந்தங்கள் தனது மார்பில் புகுந்து நிற்க, அவற்றை ஒடித்து, மார்பில் தந்தங்கள் பதியப் பெற்றதான பெருமையை உடையவன். வரையினை எடுத்த தோளையுடையவன். கைலாய மலையை வேரோடு பெயர்த்துக் கொண்டு போவதற்காக அதனைப் பெயர்த்த தோள் வலிமையுடையவன். நாரத முனிவரும் ஏற்றுக் கொள்ளும்படியாக சாம கானத்தைப் பாடி சிவபெருமானைக் கவர்ந்தவன், மாலைகள் சூடிய பத்து மணிமுடிகளைத் தாங்கியவன், சிவபெருமான் இவனது தவத்தை மெச்சி இவணுக்கு அளித்த 'சந்திரஹாசம்' எனும் அறவழியில் போரிடும்போது எவரையும் வெல்லும் ஆற்றல் மிக்க வாளுக்கு உரியவன் எனும் பெருமையுடையவன். வீரம் என்பது இவனது சிறப்பான குணம், இவ்வளவு பெருமைகளையும் போர்க்களத்தில் போட்டுவிட்டு வெறும் கையனாய் இலங்கை நகருக்குத் திரும்பினான் இராவனன்.

இவ்வளவு பெருமைகளையுடைய இராவணன் எங்ஙனம் அந்த பெருமைகளை இழந்தான் என்பதையும் பார்க்க வேண்டுமல்லவா? வாரணம் பொருத மார்பன் எனும் பெருமை, முதல் நாள் யுத்தத்தில் அனுமனோடு நேருக்கு நேர் நின்று போரிட்டு, அந்த அனுமன் விட்ட குத்தில் தன் மார்பில் பொருந்தியிருந்த அஷ்டதிக் கஜங்களின் தந்தங்கள் முதுகின் வழியாகப் பொலபொல வென்று கொட்டிவிட்ட அந்தக் கணமே அந்தப் பெருமை போய் ஒழிந்தது. கைலாய மலையைப் பெயர்த்தெடுத்த பெருமை அவன் தோள் வலிக்கு பெருமை சேர்ப்பதாகும். அந்தப் பெருமை முதல் நாள் போரில் அடிபட்டு கீழே விழுந்த இலக்குவனை தூக்க எவ்வளவோ முயன்றும் இராவணனால் முடியவில்லை, ஆனால் அந்த அனுமனோ இலக்குவனை குரங்கு தன் குட்டியை அணைத்துத் தூக்கிச் செல்வது போல தூக்கிக் கொண்டு போனானே, அப்போதே இவனது தோள் வலி போய்விட்டது. நாரத முனிவருக்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவு, இராமன் போருக்கு இன்று போய் நாளை வா என்றதும் வாயடைத்து சொற்களின்றி போனபோது அந்தப் பெருமையும் போய்விட்டதே. தாரணி மவுலி பத்தையும் இராமன் ஓர் அம்பினால் அடித்து வீழ்த்திய போது அந்தப் பெருமையும் போயிற்று. சங்கரன் கொடுத்த சந்திரஹாசம் எனும் வாள், அதர்மமாக, ஜடாயு எனும் கழுகின் வேந்தனை வெட்டிய போது அதன் வலிமையும் இழந்து அந்தப் பெருமையும் போய்விட்டதே. இறுதியாக அவனிடம் இருந்தது வீரம் ஒன்றே. அந்த வீரமும் போர் களத்தில் போரிட்டு உயிரை விடாமல், இராமன் உயிர் பிச்சை அளித்த போது ஊருக்குத் திரும்பிய போது அந்தப் பெருமையும் போய்விட்டதே. இப்போது எந்த பெருமையும் இல்லாத வெறும் இராவணன் மட்டும் ஊர் திரும்புகிறான்.

தேவர்களையெல்லாம் வென்ற பெருமையுடைய இராவணன், மூவுலகங்களையும் காக்கும் தொழிலைக் கொண்டவன், போரில் தோற்று வெறுங்கையனாக இலங்கையுள் புகுந்தபோது, சூரியனும் மலை வாயில் விழுந்து மறைந்தான்.

'வெற்றி என்பது எவர் ஒருவரிடத்தும் நிரந்தரமாக இருந்ததில்லை'. அது மாறி மாறித்தான் வந்து சேரும்.

"மாதிரம் எவையும் நோக்கான், வள நகர் நோக்கான், வந்த
காதலர் தம்மை நோக்கான், கடல் பெருஞ்சேனை நோக்கான்
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்க, தன் அப்
பூதலம் என்னும் நங்கை தன்னையே நோக்கிப் புக்கான்".

தோற்று ஊர் திரும்பும் இராவணன் எந்தத் திசையிலும் பார்க்கவில்லை. தரையை மட்டும் பார்த்துக் கொண்டு நடந்தான். வளம்பொருந்திய நகரத்தைப் பார்க்கவில்லை. தன் அன்புப் பிள்ளைகளைப் பார்க்கவில்லை. கடல் போன்ற படை வீரர்களைப் பார்க்கவில்லை. மலர் அணிந்த கூந்தலையுடைய மகளிர் எல்லாம் இவனைப் பார்க்க, இவன் எவரையும் பார்க்காமல் நில மடந்தையின் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டு அரண்மனை புகுந்தான்.

போரில் தோற்று அவமானப்பட்டுத் திரும்பி வருகின்றபடியால், அவனது அன்பு மனைவிமார்கள் காதலோடு பார்க்கும் பார்வைகூட வாட்படையால் பிளப்பது போலத் தோன்றுகிறது. மக்கள் அன்போடு கூறுகின்ற சொற்கள்கூட இராமபிரான் அம்புகள் போல அவன் உடலைப் பிளக்கும் துன்பத்தைத் தருகின்றன. வழக்கமாக இராவணன் அரண்மனைக்குள் வரும்போது ஏற்படும் பரபரப்பு ஒன்றையும் அங்கே காணவில்லை. ஆங்காங்கே அமைச்சர்களும், சேனைத் தலைவர்களும், மனைவிமார்களும், உறவினர்களும் எந்தச் சலனமுமின்றி நின்று கொண்டிருக்க, யானை ஒன்று தன் கொட்டடிக்குச் செல்வது போல இராவணன் சென்றான்.

அரண்மனைக்குத் திரும்பிய இராவணன், போரில் எங்ஙனம் வெல்லுவது என்ற ஆழ்ந்த சிந்தனையில், தன் மெய்க்காப்பாளனை விட்டு, தூதர்களை அழைத்துக் கொண்டு வரும்படி சொன்னான். அவனும் அவ்வண்ணமே சென்று தூதர் நால்வரை அழைத்து வந்தான். அந்த தூதர்கள் மனகதி, வாயுவேகன், மருத்தன், மாமேகன் எனும் பெயர் கொண்டவர்கள். இவர்களை அழைத்து இராவணன் "நீங்கள் வாயுவேகம் மனோவேகமாகச் சென்று நாலா திசைகளிலுமுள்ள, அரக்கர்களை ஒன்றுதிரட்டிக் கொண்டு வாருங்கள்" என்றான். பிறகு ஒருவரையும் பார்க்க விருப்பமின்றி தன் மலர் மஞ்சத்தில் சென்று படுத்தான்.

சீதை மட்டுமே நிறைந்திருந்த அவனது மனத்தில் இப்போது தோல்வியால் ஏற்பட்ட நாணம் மட்டுமே நிறைந்திருந்தது. அந்த நாணத்தோடு இப்போது கவலையும் சேர்ந்து கொண்டது. கண்துயில முடியவில்லை. கொல்லன் உலைக்களத்து ஊதுலை போல பெருமூச்சு விட்டான்.

நான் பெற்ற தோல்வி கண்டு தேவர்கள் சிரிப்பார்கள்; மண்ணுலகத்தோர் சிரிப்பார்கள்; என் பகைவர்கள் எல்லாம் சிரிப்பார்கள்; இவர்கள் எல்லாம் சிரிப்பதற்காக நான் வெட்கப்படவில்லை, அந்த வேல் போன்ற நெடிய கண்களையுடையவளும், சிவந்த வாயும், மென்மையான இயல்புகளுடைய மிதிலைச் செல்வி ஜானகி சிர்ப்பாளே! என்ன செய்வேன் என்று நாணத்தால் சாம்புகிறான்.

"வான் நகும்; மண்ணும் எல்லாம் நகும்; நெடு வயிரத் தோளான்
நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று, அதற்கு நாணான்,
வேல் நகு நெடுங்கண் செவ்வாய் மெல்லியல் மிதிலை வந்த
சானகி நகுவாள் என்றே நாணத்தால் சாம்புகின்றான்".

அப்போது அவனது தாய் வழிப் பாட்டன் மாலியவான் அங்கே வந்து ஓர் ஆசனத்தில் அமர்கிறான். பிறகு இராவணன் இருந்த நிலை கண்டு, இவன் போரில் தோற்றுவிட்டான் போலும் என்றெண்ணி, "இராவணா! மனம் சோர்ந்திருக்கிறாய். உடலும் வாடியிருக்கிறது. என்ன நடந்தது?" என்றான்.

"பல வெற்றிகளைப் பெற்று இங்கே வந்திருக்கிற மானுடர்க்கும், எமக்கும் போர் மூண்டது. தேவர்கள் வேடிக்கைப் பார்த்தார்கள். கொடும் போர் நிகழ்ந்த போர்க்களத்தில் நம் குலம் கண்டிராத தோல்வியை, அதிலும், மானுடர்களிடம் தோற்றோம் என்ற அவமானம் நேர்ந்துவிட்டது" என்றான் இராவணன்.

"கொடும் அம்புகளை விட்டு எண்ணற்ற அரக்கர்களைக் கொன்ற இராமன், முன்னர் கூனி என்பவளின் முதுகில் அம்பு விட்டதைப் போல விளையாட்டாகப் போர் புரிந்தானே தவிர, சினத்தோடு போரிட்டதாகத் தெரியவில்லை."

காகுத்தன் மரபில் தோன்றிய இராமனுடைய அம்புகளின் இயல்பு, நல்ல புலவர்கள் கவிதையில் கையாண்ட தேர்ந்த சொற்களைப் போலவும், அச்செய்யுளில் அமைந்த தொடை, ஓசை, பொருள், அணி போன்ற பண்புகள் அனைத்தும் உடையது. இராமனின் அம்புகளுக்கு, நல்ல புலவர்கள் இயற்றும் செய்யுளுக்கு உவமை கூறியது சிறப்பு.

"இந்திரன், சிவன், திருமால் ஆகிய மூவரையும் வென்ற பேராற்றல் உடைய யானே, இராமனின் அம்புகளால் நொந்தேன் என்றால், அவற்றின் ஆற்றலை என்னவென்று சொல்வேன். நான் திக் விஜயம் செய்தபோது இந்திரன், திருமால், பிரமன், ஈசன் என அனைவரையும் வென்று விட்டேன். இவர்களால் எனக்குத் தோல்வி வராமல் இவர்களினும் ஆண்மை மிகுந்த இராமனால் அழிவு வந்ததே என்பதற்கு மகிழ்கிறேன்".

"வாசவன், மாயன், மற்றை மலருளோன், மழுவான் அங்கை
ஈசன், என்று இனைய தன்மை இனிவரும் இவரால் அன்றி,
நாசம் வந்து உற்றபோதும் நல்லதோர் பகையப் பெற்றேன்;
பூசல் உண்டு உறையும் தாராய், இது இங்குப் புகுந்தது என்றான்".

இதுதான் நடந்தது என்று இராவணன் மாலியவானிடம் கூறினான்.

"இராவணா! நீ போருக்குப் போவதற்கு முன்பு, நான் இராமனுடைய ஆற்றலை உனக்கு எடுத்துக் கூறி எச்சரித்த போது என் மீது கோபம் கொண்டாய். என்றும் நல்லதையே சொல்லும் விபீஷணன் சொல்லையும் நீ கேட்கவில்லை. இப்படி நாங்கள் கூறுவதற்குக் காரணங்கள் உண்டு என்பதையும் நீ ஏற்கவில்லை. உன்னை எதிர்த்துப் பேச இங்கு யாரும் இல்லை".

இப்படி மாலியவான் சொன்னவுடன், அப்புறத்தில் இருந்த மகோதரன் விரைந்து வந்து, தீப்பொறி பறக்க "நீ சிறுமை தரும் சொற்களைப் பேசுகிறாய். போதும் நிறுத்து" என்று அடக்கிவிட்டு இராவணனுக்கு நடைபெறமுடியாத உறுதிமொழிகளைக் கூறுகிறான்.

ஒரு கொள்கையை மேற்கொண்டு விட்டால், அதனால் வெற்றியோ, தோல்வியோ எது நேரினும், அதில் உறுதியாக நிற்றல் உத்தமனுக்கு உரிய செயல். இராவணன் வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் தான் கொண்ட கொள்கையில் உறுதியாய் நிற்பதே நன்று என்று மகோதரன் கூறுகிறான். இராவணனை ஊக்கப் படுத்துவதற்காக, அவன் முன்பு பெற்ற வெற்றிகளையெல்லாம் நினைவு படுத்துகிறான்.

"வென்றவர் தோற்பர்; தோற்றோர் வெல்குவர்; எவர்க்கும் மேலாய்
நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர் உயர்குவர்; நெறியும் அஃதே,
என்றனர் அறிஞர் அன்றே! ஆற்றலுக்கு எல்லை உண்டோ?
புன்தவர் இருவர் போரைப் புகழ்தியோ? - புகழ்க்கு மேலோய்!"

"மன்னா! மாலியவான் கூறியபடி சீதையை விடுதியாயின், வலிமை நீங்கியவனாய். ஆதலால், சீதையின் பொருட்டு போர் செய்து ஆவியை விடுவது சிறப்பு" என்கிறான் மகோதரன்.

"இப்படி நீ வருந்தி இருப்பாயாயின், குரங்குக் கூட்டம் பழ மரங்களை அழிப்பது போல இலங்கை நகரையும் அழித்து விடும். மூவரை வென்று தேவர்களை ஏவல் கொண்டு, மூவுலகங்களையும் அடிமைப் படுத்திய நீ இராம இலக்குவர்களை ஒரு பொருட்டாக மதிக்கலாகாது" இவ்வாறு மகோதரன் இராவணனை ஊக்கப் படுத்தி ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான்.

தனக்கு ஆறுதல் கூறிய மகோதரனிடம் இராவணன் "பேரறிவாளனே! எனக்கு உறுதிப் பொருளைக் கூறினாய்" என்று சொல்லி மனம் தேறினான். பிறகு தம்பி கும்பகர்ணனை எழுப்பி அவனைப் போருக்கு அனுப்பலாம் என்று எண்ணி, தூதர்களை அழைத்து 'விரைந்து சென்று கும்பகர்ணனை இவ்விடம் வருமாறு அழைத்து வாருங்கள்' என்று கட்டளையிட்டான்.

தூதர்கள் நால்வர் கும்பகர்ணன் மாளிகையைச் சென்றடைந்தனர். அங்கு ஆழ்ந்து துயின்றுகொண்டிருந்த கும்பகர்ணனை, எழுப்ப முயன்றனர். அது முடியாமல் போகவே, தம் கையிலிருந்த இரும்புத் தூணால் அவன் தலையிலும் செவியிலும் மோதினார்கள். அதற்கும் அவன் துயில் நீங்கி எழவில்லை. எழுப்பச் சென்ற கிங்கரர்கள் கும்பனைத் தம் இரும்பு உலக்கையினால் இடித்து எழுப்ப முயல்கிறார்கள். அவர்கள் தூங்கும் அவன் மேனியில் இரும்பு உலக்கையால் குத்தி துயில் எழுப்பும் காட்சியில் கம்பர் பெருமான் இயற்றியுள்ள ஓசைநயமுள்ள பாடல் இங்கே:

"உறங்குகின்ற கும்பகன்ன! உன்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்றது இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே
உறங்குவாய், உறங்குவாய்! இனிக்கிடந்து உறங்குவாய்".

"என்றும் ஈறு இலா அரக்கர் இன்பமாய வாழ்வு எலாம்
சென்று தீய, நும் முனோன் தெரிந்து தீமை தேடினான்
இன்று இறத்தல் திண்ணமாக இன்னும் உன் உறக்கமே
அன்று அலைத்த செங்கையால் அலைத்து அலைத்து உணர்த்தினார்".

இப்படிக் கிங்கிரர்கள் கும்பகர்ணனை அடித்து அடித்து எழுப்ப முயன்றும், அவன் எழுந்திருக்கும் வழியாக இல்லை. அந்த கிங்கரர்கள் இராவணனிடம் சென்று என்ன முயன்றும் கும்பகர்ணனை உறக்கத்தினின்றும் எழுப்ப முடியவில்லை என்று சொல்ல, ஒன்றன் மேல் ஒன்றாக யானைகளையும், யாளிகளையும் விட்டு மிதிக்கச் செய்து எழுப்புங்கள் என்று ஆணையிட்டான்.

அப்படி யானைகளும், யாளிகளும் மிதித்த போதும் உறக்கத்திலிருந்து கும்பகர்ணனை எழுப்ப முடியவில்லை. உன்னால் அனுப்பப்பட்ட படைகளும் திரும்பிவிட்டனர் என்ன செய்வது என்று கிங்கரர்கள் வந்து சொன்னார்கள். ஆயிரம் மல்லர்களை அழைத்துச் சென்று கும்பகர்ணனை எழுப்பச் செய்யுங்கள் என்று மறுபடியும் உத்தரவிட்டான்.

உறங்கும் கும்பகர்ணனை அருகில் சென்று பார்த்த மல்லர்கள், அவன் வாயையும், மூக்கையும் கண்டு மெய் நடுங்கினார்கள். அவனை அடித்து எழுப்ப அஞ்சி, அவன் காதருகில் சென்று சங்கு, தாரை, சின்னம் முதலான ஊது கருவிகளைக் கொண்டு பெருத்த ஓசை எழுப்பினார்கள். ஊகூம். அவன் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.

கொம்பு, வலிமையுடைய தண்டு, சம்மட்டி, ஈட்டி ஆகிய படைக்கலன்களில் தேர்ச்சி பெற்ற வல்லவர்களைக் கொண்டு தாடைகளிலும், மூட்டுகளிலும், மார்பிலும், தலையிலும் அடித்துப் பார்த்தும், அவன் எழுந்திருக்காதது கண்டு சோர்ந்து போனார்கள். இராவணனுக்குச் செய்தி போயிற்று. அவன் பெரிய குதிரைப் படைகளை மேலே ஓடவிட்டு எழுப்பும்படி சொன்னான். அதுவும் பயனற்றுப் போயிற்று. குதிரைகள் ஓடியது அவனைத் தாலாட்டித் தட்டிக் கொடுப்பது போல இருந்தது போல, அவன் மீண்டும் ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொண்டான். எல்லா உபாயங்களும் செய்து பார்த்தாகி விட்டது. அனைத்திலும் தோல்விதான். என்ன முயன்றும் கும்பகர்ணனை எழுப்ப முடியவில்லை. இனி என்ன செய்யலாம் என்று இராவணனிடம் சென்று ஆலோசனை கேட்டனர்.

சூலம், மழு, வாள் இவற்றைக் கொண்டு அவன் உடலில் தாக்கியாவது எழுப்புங்கள் என்றான் இராவணன். ஆயிரம் வீரர்கள் கும்பகர்ணனின் இரு கன்னங்களிலும் உலக்கையால் அடிக்க, இறந்தவன் எழுந்ததைப் போல கும்பகர்ணன் புரண்டு படுத்து துயில் நீங்கி எழுந்து அமர்ந்தான். உறக்கத்திலிருந்து விடுபட்டு எழுந்த கும்பகர்ணன் உறக்கத்தில் மட்டுமல்ல, எண்ணத்தாலும் மிக உயர்ந்தவன். இராவணனின் தம்பியாகிய இவன், திருமாலின் விஸ்வரூபம் போலத் தோற்றமளித்தான். அவன் முடி வானத்தை முட்டியது, உடலானது அண்ட வெளியை மறைத்தது, கண்கள் இரண்டும் இரு பெரும் கடல் போல இருந்தன.

உறக்கத்திலிருந்து விடுபட்டு எழுந்ததினால் கும்பகர்ணனுக்குப் பசி தாங்கமுடியவில்லை. உடனே அவனுக்கு வேந்திய உணவு வகைகள் கொண்டு வரப்பட்டுத் தரப்பட்டது.

"ஆறு நூறு சகடத்து அடிசிலும்
நூறு நூறு குடம் கள்ளும் நுங்கினான்!
ஏறுகின்ற பசியை எழுப்பினான்
சீறுகின்ற முகத்து இரு செங்கணான்".

வண்டி வண்டியாக சமைக்கப்பட்ட சோறு, அறுநூறு வண்டிகள் நிறைய வந்தன, அவற்றை எடுத்து உண்டான், பின் நூற்றுக்கணக்கான குடங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்ட கள்ளையும் குடித்தான், இவ்வளவுக்கும் பிறகு அவன் பசி அதிகமாகியது. இது வரை சாப்பிட்டது அனைத்தும் பசியை எழுப்புவதற்காக அருந்தியவை போல இருந்தது. பசி தீராததால் ஆயிரத்து இருநூறு எருமைக் கடாக்களையும் தின்று சிறிது பசியாறினான். கும்பகர்ணன் உட்கார்ந்தால், இராவணன் நிற்கும் உயரத்திற்கு சமமாக இருப்பான். இவன் வாயில் எப்போதும் இறைச்சியும், நிணமும், இரத்தமும் ஒழுகியபடி இருக்கும். எலும்பும், தோலும், இறைச்சியும், ரத்தமுமாக உண்ணும் இயல்புடையவன். நெற்கதிர் போன்ற வாள் ஒன்றைத் தன் உறுதியான கையில் ஏந்தியபடி இருப்பான். மற்றொரு கையில் ஒரு சூலம். சூல் கொண்ட மேகம் போன்ற கருத்த நிறத்தையுடையவன். எமனுடன் கூட போர் புரியும் ஆற்றல் படைத்தவன். செம்மயிர் தொகுதியுள்ள தலையை உடையவன். கும்பம் என்றால் குடம், கர்ணம் என்றால் காது, குடங்களைப் போன்ற காதுகளையுடையவன் இவன்.

இந்த கும்பகர்ணனை துயிர் எழுப்பியவர்கள், அவன் முன்னால் பயந்து வந்து நின்று "உன் தமையன் உன்னைத் துயிர் எழுப்பி அழைத்து வரச் சொன்னான்" என்றனர்.

உடனே கும்பகர்ணன் இராவணனது அரண்மனையைச் சென்றடைந்து, அண்ணன் இராவணனை நிலத்தில் வீழ்ந்து வணங்கினான். வணங்கிய தம்பியைத் தோளோடு தழுவினான் இராவணன். நிறைய மாமிசங்களை அளித்து, குடம் குடமாகக் கள்ளையும் குடிக்கக் கொடுத்து, நல்ல உடையகளையும், விசேஷமான ஆபரணங்களையும் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தான். சந்தனக் குழம்பைக் கொண்டு வரச் செய்து,
அதை அவன் உடலெங்கும் பூசிக்கொள்ளச் செய்தான். மார்பில் கவசத்தை அணிவித்துக் கும்பகர்ணனை போருக்குத் தயார் செய்தான் இராவணன்.

"இவ்வாறு எனக்குச் சிறப்பு செய்வதெல்லாம் எதற்காக" என்றான் கும்பகர்ணன்.

அதற்கு இராவணன், "மானுடர் இருவர், பெரிய குரங்குப் படையோடு, இலங்கையைச் சூழ்ந்து கொண்டு என்னையும் வெற்றி கொண்டார்கள். நீ போய் அவர்களது உயிரைக் குடித்து விட்டு வரவேண்டும்" என்றான். உடனே கும்பகர்ணன் சொல்கிறான்:-

"ஆனதோ வெஞ்சமம்? அலகில் கற்புடைச்
சானகி துயர் இனம் தவிர்த்தது இல்லையோ?
வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்
போனதோ? புகுந்ததோ, பொன்றும் காலமே?"

போர் வந்து விட்டதோ? எல்லையற்ற கற்புடைய சீதாதேவியின் துயர் இன்னமும் தீரவில்லையோ? தேவலோகத்திலும், மண்ணுலகத்திலும் வளர்ந்த நமது புகழ் அழிந்து போனதோ? நாம் அனைவருமே அழியப் போகும் காலம் வந்து விட்டதோ?

"கிட்டியதோ, செரு? கிளர் பொன் சீதையைச்
சுட்டியதோ? முனம், சொன்ன சொற்களால்
திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ? இது விதியின் வண்ணமே".

திருமகளாம் சீதையின் காரணமாக போர் வந்து விட்டதோ? திட்டி விஷம் போன்ற சீதாதேவியைக் கொண்டு போய் இராமனிடம் ஒப்படைத்து விடு என்று நான் மந்திராலோசனையின் போது சொன்னேனே, கேட்கவில்லையோ? எல்லாம் விதியின் செயல் என்ன செய்வது?

"கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும்
சொல்லலாம்; பெருவலி இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது, சீதை மேனியைப்
புல்லலாம் என்பது போலுமால் - ஐயா!"

"ஐயா! பூமியைக் கூட தோண்டி எடுத்து விடலாம். அதனைச் சுற்றி வேலி கூட கட்டிவிடலாம், ஆனால் மிக்க வலிமையுடைய இராமனுடைய தோள்களை வென்று விடலாமென்று நீ நினைக்கிறது இருக்கிறதே, அது நீ சீதையைத் தழுவலாம் என்று நினைப்பது போன்றே முற்றும் இயலாத காரியமாகும்".

"புலஸ்தியன் முதலான குற்றமற்ற உனது குலத்தின் பெருமை உன்னால் அழிந்தது. வெற்றி பெறுதல் நம்மால் இயலுமோ? நம் வலிமை இழப்பதற்கு என்ன காரணம் என்று உனக்குத் தெரிகிறதா? வானிழிந்து வரும் நீரின் தன்மை நிலத்தின் தன்மையை ஒக்குமல்லவா? அதுபோலத்தான். நீ சீதையைக் கொண்டு வந்த புன்மைத் தன்மை காரணமாக, இழந்த நாட்டை இந்திரன் மீண்டும் பெறப் போகிறான். உன் பரந்த உறவினர்களையும், நண்பர்களையும் அழிக்கப் போகிறாய். நீயும் அழியப் போகிறாய். சிறையில் அடைபட்ட தேவர்களை விடுவிக்கப் போகிறாய். தீவினையிலிருந்து விடுபட உனக்கு இனி ஒரு மார்க்கமும் இல்லை".

"தர்மதேவதை உனக்கு அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டு விட்டது. முன்பு நீ தர்மத்தைக் கடைப் பிடித்ததால் வலிமையும், செல்வமும் உனக்குப் புகழைத் தந்தன. எப்போது நீ தர்மத்தைவிட்டு நீங்கி விட்டாயோ, அப்போதே உனது அழிவைத் தேடிக் கொண்டு விட்டாய். இனி உன்னைக் காப்பாற்ற எவராலும் ஆகாது".

"நீ கூறும் அந்த மானுடர்களின் எண்ணமும், சொல்லும், செயலும், சரண் அடைந்தோரைக் காக்கும் குணமும், அறவழியில் நிற்றலுமே ஆகும். நடுவுநிலையும், உண்மையும் அவர்களது இயல்பு. மாறாக வஞ்சனையும், பாவமும், பொய்யும் மேற்கொண்ட நாம் பிழைத்தல் என்பது முடியுமா? அவர்களது அறநிலைக்கு அழிவு ஏது? நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். தலைவனே! உனக்கு நான் இறுதியாகச் சொல்ல வேண்டுவது ஒன்று உண்டு. அதை நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்வாயேல் நல்லது. இல்லையேல் நீ இறப்பதைத் தவிர வேறு வழியே இல்லை".

"கரிய கடலைத் தன் காலாலே கடந்து வந்த குரங்கு நம் பகைவர்க்குத் துணையாக இருக்கிறது. சீதையும், சிறையிலேயே சிந்தை துவண்டு கிடக்கிறாள். வாலியின் மார்பைத் துளைத்த அம்பும் இராமனின் அம்புறாத் தூணியில் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. நமக்கு இதைவிட வேறு என்ன வேண்டும் சொல்!".

"நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது, தையலாளைக் கொண்டு போய் விட்டுவிட்டு இராமனின் சரணம் தாழ்ந்து, உன் தம்பி விபீஷணனை அன்பு செலுத்தி அழைத்துக் கொண்டு வந்து வாழ்வாயேல் நன்று. அப்படி இல்லையென்றால், நீ பிழைக்க ஒரே ஒரு வழி இருக்கிறது. அதைச் சொல்கிறேன் கேள்! படைகளைச் சிறிது சிறிதாக போருக்கு அனுப்பாமல், அனைத்துப் படைகளையும் ஒன்று திரட்டி, போருக்கு அனுப்புதலே நல்லது. அதையாவது செய்து உயிர் வாழ முயற்சி செய்!" என்றான் கும்பகர்ணன்.

இராவணனுக்குச் சினம் பொங்கி எழுந்தது. "அற்பராகிய மானுடர்கள் நம்மைக் கொன்று விடுவார்கள் என்று சொல்வதற்காகவா உன்னை எழுப்பி அழைத்து வந்தேன். இனி என்ன நிகழப்போகிறது என்றா உன்னிடம் கேட்டேன். எனக்கு அறிவுரை கூற நீ எனக்கு அமைச்சனும் அல்ல. பகைவர்களிடம் உனக்கு பயம். உனது வீரம் பயனற்றுப் போய்விட்டது. நீ போருக்குப் போகும் தகுதி இல்லாதவனாக ஆகிவிட்டாய். நிறைய மாமிசமும், கள்ளும் உண்டுவிட்டு, போய்க் கிடந்து உறங்கு!" என்றான் இராவணன்.

"மானிடர் இருவரை வணங்கி, மற்றும் அக்
கூனிடைக் குரங்கையும் கும்பிட்டு, உய்தொழில்
ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்;
யான் அது புரிகிலேன்; எழுக போக! என்றான்".

"நீ போகலாம்!" என்று கும்பகர்ணனை அனுப்பிவிட்டு இராவணன் ஏவலாளர்களை அழைத்து "என் தேரையும், ஆயுதங்களையும் கொணர்க! போருக்கு நானே வருகிறேன் என்று அந்த இரு மானுடச் சிறுவர்களுக்கும் சொல்லி என் முன் வரச் சொல்க!" என்றான்.

கும்பகர்ணன் அண்ணனைப் பணிந்து "நீ பொறுத்துக் கொள்ள வேண்டும்!" என்று சொல்லித் தன் பெரிய சூலத்தைத் தனது வலக் கரத்தில் ஏந்திக் கொண்டு "இன்னொன்றும் சொல்ல வேண்டியிருக்கிறது, கேட்பாயாக!" என்று பின்வருவனவற்றைச் சொன்னான்.

"தலைவனே! நானே போருக்குப் போகிறேன். போய் அவர்களோடு போரிட்டு வென்று திரும்பி வருவேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஊழ்வினை என் கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறது. ஆகையால், போரில் நான் இறப்பேன். அங்ஙனம் நான் இறப்பேனானால், சீதையை உன் நன்மை கருதி விட்டுவிடுதல் நன்று. இன்னொன்றும் புரிந்து கொள்! உன் மகன் இந்திரஜித்தும், இலக்குவன் கை வில்லினால் இறக்கப்போவது நிச்சயம். உன் படைகள் காற்றில் பட்ட சாம்பல் போல சிதறப்போவதும் நிச்சயம். பிறகு உனக்கு ஏற்படப் போகும் முடிவை அறிந்துகொண்டு, நன்மை பயப்பனவற்றைச் செய்ய முயற்சி செய்!" என்றான்.

"என்னை வென்றுளர் எனில், இலங்கை காவல!
உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால்
பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப்பெய்வளை
தன்னை நன்கு அளிப்பது தவத்தின் நன்றரோ".

"அவர்கள் என்னை வெல்வார்களானால், உன்னை வெல்வதும் நிச்சயம். பிறகு யோசித்துப் பயன் ஒன்றுமில்லை. சீதையை விட்டுவிடுவதே சிறந்த தவம்".

"அரசே! இறுதியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். முன்னை நாள் முதல் இந்நாள் வரைக்கும் யான் செய்த குற்றங்கள் இருந்தால், அவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்வாயாக! இனி உன்னைக் காணும் பேறு எனக்கு இல்லை. தலைவனே! உன்னிடம் விடை பெற்றுக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமல் சென்றான்.

இராவணன் கண்களில் கண்ணீரும், இரத்தமும் கலந்து வந்தன. கூடியிருந்தவர்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். கும்பகர்ணன் சென்று இலங்கை நகரத்தின் வாயிலை அடைந்தான். கும்பகர்ணனுக்குத் துணையாக ஏராளமான படைகளை இராவணன் அனுப்பி வைத்தான். தன்னுடன் வரத் தயாராக இருந்த படைகளைத் தம்பியுடன் செல்லுமாறு பணித்தான்.

கும்பகர்ணன் ஒரு தேரில் ஏறினான். ஆயிரம் சிங்கங்கள், யாளிகள், யானைகள், பூதங்கள் இவைகள் இழுக்கக்கூடிய அந்தத் தேரில் ஏறி பெரும் ஆயுதங்களை ஏந்திய படைகள் புடைசூழ கும்பகர்ணன் போர்க்களம் நோக்கிப் புறப்பட்டான். போகிற வழியில் மக்கள் அவனுக்குக் கொடுக்கும் இறைச்சியையும், கள்ளையும் வாங்கி உண்ட வண்ணம் செல்கிறான். இப்படி பெரிய மலை ஒன்று தேரில் வருவது போல போர்க்களத்துக்குள் நுழைந்த கும்பகர்ணனை இராமபிரான் பார்க்கிறார். இவனது தோற்றத்தையும், வீரத்தையும் பார்த்து வியந்த இராமன், அருகிலிருந்த விபீஷணனிடம் "இதோ வருபவன் யார்?" என்கிறான். அதற்கு விபீஷணன் சொல்லுகிறான்:

"ஆரியன் அனைய கூற, அடி இணை இறைஞ்சி, 'ஐய!'
பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன்; எனக்கு முன்னோன்,
கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும்
கூரிய சூலத்தான்' என்று அவன் நிலை கூறலுற்றான்."

அண்ணலே! இவன் இலங்கை வேந்தன் இராவணனுக்குப் பின் பிறந்தவன், அடியேனுக்கு மூத்தவன். காலனையொத்த, சூலத்தைக் கையிலேந்திய இந்த வீரனின் பெயர் கும்பகர்ணன், என்று சொல்லி அவனைப் பற்றிய விவரங்களை இராமனுக்கு எடுத்துரைக்கிறான் விபீஷணன்.

"ஐயனே! இவன் எமனுக்கே எமன் போன்றவன். காற்றைவிட விரைந்து செல்லும் கால்களையுடையவன். திருமாலைத் தன் சூலாயுதத்தால் வென்று வெற்றிமாலை சூடியவன். இவனுக்கு ஒரு குறை. தான் தவறாகக் கேட்டுவிட்ட ஒரு வரத்தினால் எப்போதும் உறங்கிக் கொண்டே இருப்பவன். சிவபெருமான் இவனுக்கு அளித்த சூலப்படை இவனிடம் இருக்கிறது. அந்தச் சூலாயுதத்தைக் கொண்டு இவன் போரில் தேவர்களை புறமுதுகிட்டு ஓட வைத்தவன்".

"இவன் தனது அண்ணன் இராவணனிடம் சீதையைச் சிறை எடுத்து வந்தது தவறு, இந்தச் செய்கையால் நமக்கு அழிவு உண்டாகும் என்று ஒருமுறைக்கு இரண்டு முறையாக எடுத்துச் சொன்னான். அதை ஏற்காத அண்ணனைக் கடிந்தும் பேசினான். இவனது அறிவுரைகளை இராவணன் கேட்காததோடு, நீ போர் செய்ய பயப்படுகிறாய். போய் மாமிசத்தையும் குடம் குடமாகக் கள்ளையும் அருந்திவிட்டுக் கிடந்து தூங்கு என்று இழிவாகப் பேசிய பிறகு, தான் இறப்பது உறுதி என்று சொல்லிவிட்டு உன் முன்பாக போருக்கு வந்திருக்கிறான்" என்றான் விபீஷணன்.

இப்படி விபீஷணன் சொல்லவும், அருகிலிருந்த சுக்ரீவன், இராமனை நோக்கி, "இவனைக் கொல்வதால் என்ன பயன்? இவனை நம்மோடு சேர்த்துக் கொண்டால், விபீஷணனும் தன் தமையனை இழக்க மாட்டான். நமக்கும் இது நன்மை பயக்கும்" என்றான்.

"அப்படியானால், இதை அவனிடம் சென்று யார் உரைப்பது?" என்று இராமன் கேட்க, விபீஷணன் "தாங்கள் அனுமதி அளித்தால் அடியேன் சென்று கும்பகர்ணனிடம் எடுத்துச் சொல்லி அவனை நம்முடன் சேரும்படி அழைத்து வருகிறேன்" என்றான்.

"நல்லது போய் வா!" என்று விபீஷணனை அனுப்பி வைத்தான் இராமன்.

உடனே அங்கிருந்து புறப்பட்ட விபீஷணன், வழியில் கடல் போல நிறைந்திருந்த வானர சேனைகளையெல்லாம் கடந்து கும்பகர்ணன் இருக்கும் இடம் சென்றான். அங்கு சென்று அண்ணன் கும்பகர்ணனை வணங்கினான்.

கண்களில் நீர் வழியத் தன் எதிரே வந்து வணங்கிய தம்பியைத் தாங்கி அணைத்து ஆரத் தழுவி "நம்முள் நீ ஒருவனாவது பிழைத்துக் கொண்டாய் என்றல்லவா மகிழ்ந்திருந்தேன். அம் மகிழ்ச்சி கெடுமாறு பின்னும் நீ திரும்ப இங்கே வந்தது எதற்காக? தம்பி! விபீஷணா! நீ இராமனிடம் அடைக்கலம் என்று சென்றதையும், இராமனால் அபயம் கொடுத்து ஏற்றுக் கொள்ளப் பட்டதையும் கேள்விப்பட்டேன். இம்மைக்கும், மறுமைக்கும் சிறப்பு அடைந்தாய் என்பதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். அப்படியிருக்க எமன் வாயில் நின்று களிக்கும் எம்மிடம் நீ திரும்பவும் வந்தது ஏன்? அமுதத்தை உண்ணும் நீ, நஞ்சை விரும்புவானேன்?" என்றான்.

"தம்பி! சீதையைக் கவர்ந்து வந்ததால், நம் குலப் பெருமை அழிந்ததாயினும், புலஸ்தியன் முதல் வந்த நம் குலம் கெடாமல் உன்னால் நன்மை அடைந்தது. உன்னை அடைக்கலமாக ஏற்றுக் கொண்ட இராமபிரான், உன்னைக் கைவிட மாட்டான். நீ அவர்களிடம் போய்ச் சேர்ந்தமையால் இறப்பு எனும் பயம் நீங்கப் பெற்றாய். இராமன் எனும் பெயர் இருக்கும் வரை இறப்பும், பிறப்பும் இனி உனக்கு இல்லை. அப்படியிருக்க நீ ஏன் அவர்களை நீங்கி இங்கே வந்தாய்?'.

"தர்மமே வடிவாய் வந்த இந்த இராமனுக்கு அடிமையாக ஆனாய். அதனால், காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்றும் உன்னிடம் இல்லாமல் போனது. தீவினைகள் அனைத்தும் நீங்கப் பெற்று, மெய்ஞான செல்வத்தைப் பெற்ற அருமை விபீஷணா! மாற்றான் மனைவியைக் கவர்ந்து வந்த எங்களை உனக்கு உறவினர்களாகவா நினைக்கிறாய்? தவங்களைச் செய்து, ஒழுக்கம், தர்மம், இவற்றை ஏற்றுக் கொண்டிருக்கிறாய். பிரம தேவன் உனக்கு அழிவு இல்லாத ஆயுளைக் கொடுத்திருக்கிறான். அப்படியிருந்தும் நீ பிறந்த குலத்தின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும்!"

"எங்களைக் கொல்ல இராமன் நாண் ஏற்றிய வில்லோடு நிற்கிறான். இலக்குவன் அவனுக்குத் துணையாக நிற்கிறான். படை வீரர்கள் காத்துக் கொண்டு தயாராக இருக்கிறார்கள். எமனும் எங்கள் உயிரைக் கொண்டு போக தயாராக வந்திருக்கிறான். விதியும் காத்துக் கொண்டு நிற்கிறது. அழியப் போகும் எங்களிடம் உன் ஆற்றல் எல்லாம் தொலையும்படி ஏனப்பா இங்கு வந்து சேர்ந்தாய்?"

"தம்பி! விபீஷணா! நீ அயோத்தி அரசன் இராமனிடம் அடைக்கலம் என்று போனதாலேதான், இராமனின் கணைக்கு பலியாகப் போகும் அரக்கர் கூட்டத்துக்கு, உன் கையால் எள்ளும் நீரும் சொரிந்து பிதுர் கடன்களைச் செய்ய முடியும். அதற்கு உன்னை அன்றி வேறு யார் இருக்கிறார்கள்? நீ இலங்கைக்கு வரும் காலம் இப்போது அல்ல. நாங்கள் இழிதொழிலையுடைய அனைவரும் போர்க்களத்தில் இராமன் கணைகளால் மாண்ட பிறகு, திருமகள் குடிகொண்டிருக்கும் இராமபிரானோடு, இலங்கைக்கு வந்து ஒப்பற்ற அரச செல்வத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்போது நீ திரும்ப இராமனிடமே போய்விடு!" என்றான் கும்பகர்ணன்.

அதற்கு விபீஷணன் தயங்கியபடியே "அண்ணா! தங்களிடம் நான் சொல்ல வந்த செய்தியே வேறு. அதை நான் தங்களிடம் சொல்லலாமா?" என்றான்.

"அப்படியா? சரி. அந்தச் செய்தியைக் கூறு" என்றான் கும்பகர்ணன்.

"இருண்டு கிடந்த மனமுள்ள எனக்கும் கருணையைப் பொழிந்த இராமன், தாங்களும் அவனுடன் சேர்ந்து கொண்டால் உங்களுக்கும் அருள் புரிவான். உங்களை அடைக்கலமாக ஏற்றுக் கொண்டு இறப்பு, பிறப்பு எனும் மாயையிலிருந்து மீட்டுவிடுவான். இராமன் எனக்களித்த இலங்கை அரசு முதலான செல்வங்களையெல்லாம் உங்களிடமே அளித்து விடுகிறேன். உங்களுக்கு ஏவல் செய்யும் பணியையும் ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் தம்பியாகிய என் மன வருத்தத்தையும் போக்கி, நம் குலத்தையும் சிறப்புறச் செய்ய தங்களை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். இராமனுடைய வில்லுக்கு யாரும் தப்ப முடியாது. அப்படித் தப்பிப் போனாலும், வேறு புகலிடம் கிடையாது. இறக்கப் போவது சத்தியம். நீங்களும் அறவழியில் நிற்பீர்களானால் வீணில் ஆவியைத் துறக்க வேண்டியிருக்காது. வேத நாயகனான இராமன் உங்கள் மீது கொண்ட இரக்கத்தாலும், என்பால் உள்ள அன்பாலும், உங்களை அழைத்துக் கொண்டு வரும்படி என்னை அனுப்பியிருக்கிறார். இதுதான் நான் தங்களிடம் சொல்ல வந்த காரியம். ஐயனே! அறவழியில் மாறுபடாமல் நீங்கள் என்னுடன் வரவேண்டும்" என்றான் விபீஷணன்.

விபீஷணன் பேசுவதைக் கண்களில் நீர் சோர கேட்டுக் கொண்டிருந்தான் கும்பகர்ணன். தான் பேச வேண்டியவற்றைப் பேசி முடித்தவுடன் விபீஷணன் கும்பகர்ணனின் காலில் வீழ்ந்து வணங்கினான். வீழ்ந்து வணங்கிய விபீஷணனை தோள்களைப் பிடித்துத் தூக்கித் தழுவிக் கொண்டு பேசுகிறான் கும்பகர்ணன். "மைந்தனே! நீரின் மேல் எழுதிய எழுத்துப் போல் அழியக்கூடிய செல்வ வாழ்க்கையை விரும்பி இதுவரை எனக்கு ஊனும் கள்ளும் ஊட்டி வளர்த்து, பிறகு போர்க்குரிய ஒப்பனைகளைச் செய்து என்னை போருக்கு அனுப்பிய அண்ணன் இராவணனுக்காக என் உயிரை விடாமல் இராமனிடம் நான் வரமாட்டேன். என் துன்பத்தை நீ நீக்க விரும்பினால், விரைந்து இராமனிடம் போய்விடு. பிரமன் அளித்த வரத்தினால், நீ சிரஞ்ஜீவியாக வாழப் போகிறவன். நீ அறவழியில் இராமன் பக்கம் இருப்பதே நியாயம். எனக்கு இழிவு பொருந்திய மரணமே புகழுக்குரியதாகும்" இவ்வாறு கும்பகர்ணன் கூறினான்.
போர்க்களத்தில் கும்பகர்ணனைப் பார்த்து விபீடணன் அவனைத் தன்னுடன் வந்து இராமனுடன் சேர்ந்து கொள் என்று வேண்டிய போது கும்பன் மறுத்துச் சொன்ன பாடல்களை கீழே காணலாம்.

செம்பு இட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வம் தேறி
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர்கொண்ட பகையை வாழ்த்தி
அம்பு இட்டுத் துன்னம் கொண்ட புண்ணுடை நெஞ்சோடு ஐய
கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன்.

அனுமனை வாலி சேயை அருக்கன் சேய்தன்னை அம்பொன்
தனு உடையவரை வேறு ஓர் நீலனை சாம்பன் தன்னை
கனி தொடர் குரங்கின் சேனைக் கடலையும் கடந்து மூடும்
பனி துடைத்து உலகம் சுற்றும் பரிதியின் திரிவென் பார்த்தி.

ஆலம் கண்டு அஞ்சி ஓடும் அமரர்போல் அரிகள் ஓட
சூலம் கொண்டு ஓடி வேலை தொடர்வது ஓர் தோற்றம் தோன்ற
நீலம்கொள் கடலும் ஓட நெருப்பொடு காலும் ஓட
காலம் கொண்டு உலகும் ஓட கறங்கு எனத் திரிவென் காண்டி.

செருவிடை அஞ்சார் வந்து என் கண் எதிர் சேர்வர் ஆகின்
கருவரை கனகக் குன்றம் என்னல் ஆம் காட்சி தந்த
இருவரும் நிற்க மற்று அங்க்கு யார் உளர் அவரை எல்லாம்
ஒருவரும் திரிய ஒட்டேன் உயிர் சுமந்து உலகில் என்றான்.

தாழ்க்கிற்பாய் அல்லை என் சொல் தலைக்கொளத் தக்கது என்று
கேட்கிற்பாய் ஆகின் எய்தி அவரொடும் கெழீ இய நட்பை
வேட்கிற்பாய் இனி ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு என்று
சூழ்க்கிற்பாய் அல்லை யாரும் தொழ நிற்பாய் என்னஸ் சொன்னான்.

போதி நீ ஐய பின்னைப் பொன்றினார்க்கு எல்லாம் நின்ற
வேதியர் தேவன் தன்னை வேண்டினை பெற்று மெய்ம்மை
ஆதி நூல் மரபினாலே கடன்களும் ஆற்றி ஏற்றி
மாதுயர் நரகம் நண்ணா வண்ணமும் காத்தி மன்னோ.

ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்திப்
போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்
சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்.

என்று அவன் தன்னை மீட்டும் எடுத்து மார்பு இறுகப் புல்லி
நின்று நின்று இரங்கி ஏங்கி நிறை கணால் நெடிது நோக்கி
இன்றொடும் தளிர்ந்தது அன்றே உடன்பிறப்பு என்று விட்டான்
வென்றி வெந்திறலினானும் அவன் அடித்தலத்து வீழ்ந்தான்.

அனுமனையும், வாலியின் சேயையும், அருக்கன் சேய் சுக்ரீவனையும், இராம இலக்குவரையும், நீலனை, சாம்பன் முதலான வானர சேனையையும் வெற்றி கொண்டு பனி மூட்டத்தைக் கிழித்துக் கொண்டு வரும் கதிரவன் போல நான் வருவேன், நீ பார்ப்பாய். நீ தாமதியாமல் உடனே இராம இலக்குவரிடம் சென்றடைவாயாக! என்னுடன் இனி ஒரு பேச்சும் பேச வேண்டாம். நீ, இராமனின் அனுமதியோடு நாங்கள் இறந்த பிறகு, ஆற்ற வேண்டிய பிதுர் கடன்களையெல்லாம் செய்து, நாங்கள் நரகத்துக்குச் செல்லாமல் காப்பாயாக!" என்று சொல்லி கும்பகர்ணன், விபீஷணனை மீண்டும் மார்போடு தழுவிக் கொண்டு கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்து பார்வையை மறைக்க "நாம் இருவரும் கூடிப் பிறந்த உறவு இன்றோடு முடிந்து விட்டது. திரும்ப சந்திக்க முடியாத பிரிவு நமக்குள் ஏற்பட்டு விட்டது. இங்கிருந்து போ!" என்றான் கும்பகர்ணன். விபீஷணனும் அழுதபடியே, அவன் கால்களில் வீழ்ந்து வணங்கினான்.

கண்களும், முகமும், மனமும் வாடிய நிலையில் விபீஷணன் உயிரும் உடம்பும் ஒடுங்கினான். இவனோடு இனி வாதாடிப் பயன் இல்லை, திரும்பச் செல்வதே நல்லது என்று மற்றவர் கைகூப்பி வணங்கிட அங்கிருந்து புறப்பட்டான். திரும்பச் செல்லும் விபீஷணன், இவனை இனி என்னால் பார்க்க முடியுமா? இறுதியாக ஒரு முறை இவனை பார்த்து விடுகிறேனே என்று போகும் வழியில் அண்ணனைத் திரும்பிப் பார்க்கிறான். போகிற தம்பியைப் பாசத்தோடு கும்பகர்ணனும் பார்க்கிறான். இருவர் கண்களிலும் கண்ணிர் பெருக்கெடுத்துப் பார்வையை மறைக்கிறது. துக்கத்தை மனதில் தாங்கி அவரவர் தத்தம் வழியில் சென்றனர்.

கும்பகர்ணனைப் பிரிந்து சென்ற விபீஷணன், இராமபிரான் இருக்குமிடம் சென்றடைந்தான். அங்கு நடந்தவற்றை இராமனிடம் எடுத்துச் சொன்னான். இராமனும் அது கேட்டு இலேசாகத் தலையசைத்து "ஐயனே! உன் எதிரில் உன் அண்ணனை அம்பு எய்தி கொல்லுதல் நல்லதல்ல என்றுதான் நான் அவனை அழைத்து வரச் சொன்னேன். இதன் பிறகும், நாம் என்ன செய்ய முடியும்? விதியை யாரால் வெல்ல முடியும்?" என்றான்.

இப்படி இராமன் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் அரக்கர் சேனை குரங்குச் சேனையைச் சுற்றி வளைத்துக் கொண்டது. போர்க்களத்தில் ஒரே அமளி ஏற்பட்டது.

"ஓடின புரவி, வேழம் ஓடின, உருளைத் திண்தேர்
ஓடின; மலைகள் ஓட, ஓடின உதிரப் பேர் ஆறு
ஆடின கவந்த பந்தம்; ஆடின அலகை மேல் மேல்
ஆடின பதாகை; ஓங்கி ஆடின, பறவை அம்மா!".

போர் தொடங்கியது. போர்க்களத்தில் குதிரைகளும், யானைகளும், தேர்களும் ஓடின. இரத்த ஆறு ஓடியது. தலையை இழந்த முண்டங்கள் எழுந்து ஆடின. இறைச்சியை உண்ட பேய்களும் ஆடின. தேர்களின் மீதும், யானைகளின் மீதும் கட்டியிருந்த கொடிகள் ஆடின, அவற்றைச் சுற்றி போர்க்களத்தில் இறந்து விழுந்த மாமிசங்களைத் தின்ன கழுகுகளும் பறந்து ஆடின.

போர்க்களத்தில் வானர வீரர்கள் வீசிய கற்களாலும், மரங்களாலும் அர்க்கர்கள் உருக்குலைந்து அழிந்தனர். அரக்கர்கள் வீசிய சூலமும், வேலும் குரங்குகளை உருக்குலையாமல் கொன்று போட்டன. அரக்கர்களின் வில்லிலிருந்து அம்புகள் புறப்பட்டு மழையென குரங்குகள் மீது பாய்ந்தன. பதிலுக்கு வானரர்கள் கல்லால் அடிக்க, அரக்கர்கள் அந்தக் கற்களைப் பிடித்து திரும்பவும் அவர்கள் மீதே எறிகின்றனர். இப்படி கடுமையான யுத்தம் நடைபெற்றது. தேவர்கள் பார்த்துத் திகைத்தனர். அந்த நேரத்தில் கும்பகர்ணன் யுத்த களத்துக்குள் புகுந்தான். அப்போது வானர வீரர்கள் அவனிடம் அகப்பட்டுக் கொண்டு பட்ட பாடு! அம்மம்மா!

ஊழிக் காலத்தில் உலகங்கள் அழிதல் போல வானரங்கள் எல்லாம் அரக்கர் படையாலும், யானைகளாலும், கும்பகர்ணனின் தேராலும் நசுங்கி இறந்தனர். வானரர்கள் மலைகளைப் பெயர்த்து கும்பகர்ணன் மீது வீசுகின்றன. அவற்றையெல்லாம் அவன் தன் கையால் பற்றி மீண்டும் வானரர் மீதே வீசினான். ஒரு வானர வீரனை கையால் பற்றி, அதனால் மற்றொரு வானரனை அடிப்பான். சிலரை காலால் எத்துவான். துகைப்பான்; சிலரை வாயிலிட்டு மென்று உமிழ்வான்; சிலரை தலைகளைப் பற்றி திருகுவான்; வானத்தில் எடுத்து வீசுவான். இரு கைகளாலும் பற்றித் தேய்த்து உடலில் பூசிக் கொள்வான்.

கும்பகர்ணன் செய்யும் அழிவைக் கண்டு தேவர்கள் அஞ்சி ஓடினர். பிணக் குவியல்களுக்குப் பருந்துகள் வந்து சுற்றின. கும்பகர்ணன் கொன்ற வானர வீரர்களின் உயிர்களை அள்ளிச் சென்று எமனும் அயர்வடைந்து போனான். கும்பகர்ணனை என்ன செய்வதென்று அறியாமல் வானரர்கள் திகைத்தார்கள். அப்போது வானர சேனைத் தலைவன் நீலன், ஒரு பெரும் மலையை வேரொடும் எடுத்து அவன் மீது வீசினான். அதனைத் தன் சூலாயுதத்தால் பொடிப்பொடியாக்கினான் கும்பகர்ணன். வேறொரு மலையைத் தேட நேரமின்றி நீலன், அவன் தேர் மீது தாவி, அதனுள் இருந்த முரசம் முதலானவற்றைக் கடலில் தூக்கி எறிந்து காலாலும் கையாலும் பலமுறை உதைத்தான்.

கையும் காலும் ஓய்ந்துவிட்ட நிலையிலும், கும்பகர்ணனை ஒன்றும் செய்யமுடியாமல் நீலன் சலித்தான். இவன் வெரும் கையோடு போர் புரிந்தமையால் கும்பகர்ணனும் இவன் மீது தனது சூலாயுதத்தைப் பாய்ச்சவில்லை. இடக் கையால் அவனைத் தட்டிவிட்டான். கும்பகர்ணன் நீலனை அடிப்பதைக் கண்ட அங்கதன் ஒரு மலையைப் பிடுங்கி அவன் மீது வீசினான். அதைத் தன் ஒரு தோளால் தாங்கி உடைத்தான் கும்பகர்ணன். ஒன்றும் செய்ய முடியாமல் அங்கதனும் தவித்து நின்றான்.

ஏழு முனைகளைக் கொண்ட வைரத்தாலான ஒரு தண்டத்தை எடுத்து 'போய் இவன் உயிரைக் குடி' என்று சொல்லி, அதனை அங்கதன் மீது வீசினான் கும்பகர்ணன். அதனைத் தன் பெரிய கைகளால் பிடித்துக் கொண்டான் அங்கதன். அதையே ஓங்கிக் கொண்டு கும்பகர்ணனைத் தாக்க ஓடினான். தன் எதிரே ஓடிவந்த அங்கதனைக் கும்பகர்ணன் கண்களில் தீ எழப் பார்த்து, "நீ இறப்பதற்காகவே இங்கு வந்த வானர அரசன் சுக்ரீவனா? அல்லது அவனது மகன் முறையாகும் அங்கதனா? அல்லது எம் ஊரை எரித்து அரக்கர்களை வென்ற அனுமனா? யார் நீ?" என்றான் கும்பகர்ணன்.

"உன் அண்ணன் இராவணனைத் தன் வாலில் கட்டி நான்கு திசைகளிலும் தாவி சிவபெருமான் காலடியில் சென்று வணங்கினானே வாலி, அவனது மகன் நான். அங்கதன் என்பது என் பெயர். உன்னை நானும் என் வாலில் கட்டி பகைவரது போர் முனையில் பொருகின்ற இராமபிரானின் பாதங்களில் கொண்டு போய் போடுவேன்" என்றான் அங்கதன்.

"உன் தந்தையை ஓர் கணையால் கொன்ற இராமனுக்கு நீ செய்யும் தொண்டு பாராட்டப்பட வேண்டியதுதான். உனது நற்செயலை உலகமே பாராட்டும்" என்று கேலி செய்தான் கும்பகர்ணன். "மேலோர் உன்னை வணங்கிப் போற்றுவார்கள்" என்கிறான்.

"நீ இங்கு வந்தது என்னை உன் வாலால் கட்டி இராமன் முன்பு கொண்டு செல்ல அல்ல! என் சூலத்தால் உன் முதிகில் குத்தப்பட்டு உன் கால்களும், வாலும் தொங்கும்படி கீழே தரையில் கிடக்கத்தான்" என்றான்.

முன்பு கும்பகர்ணன் வீசிய தண்டத்தைத் தன் கையில் வைத்திருந்த அங்கதன், அந்தத் தண்டினால் கும்பகர்ணனை அடிக்க, அது சிதறுண்டு துண்டு துண்டாய் உடைந்தது. தண்டு சேதமடைந்தது கண்டு, அவனைப் பற்றி எடுக்க எண்ணி அவன் மீது தாவினான் அங்கதன், அப்போது கும்பகர்ணன் அவனை ஓங்கி குத்த, அங்கதன் மயங்கி நிலம் பிளக்கும்படியாக கீழே விழுந்தான். அப்போது இடைமறித்து அனுமன் அங்கே வந்து சேர்ந்தான். அவன் மீது கூறிய வேல் ஒன்றை கும்பகர்ணன் வீச, அனுமன் ஓர் பெரிய மலையை எடுத்து கும்பகர்ணன் நெற்றியில் அடித்து, பெரிதாக ஆரவாரம் செய்தான். கும்பகர்ணன் தலையில் மற்றொரு தலை போல பதிந்துவிட்ட அந்த மலையைப் பிடுங்கி அனுமன் மீதே திரும்ப வீசிவிட்டு தோள்தட்டி ஆர்ப்பரித்தான் கும்பகர்ணன்.

அப்போது அங்கதனை வானர வீரர்கள் தூக்கிக் கொண்டு சென்றனர். அனுமன் மற்றொரு பெரிய மலையை எடுத்துக் கொண்டு கும்பகர்ணனிடம், "இந்த மலையை உன் மேல் எறிவேன். உன்னால் இதைத் தவிர்க்க முடியுமானால் உன் வலிமையை எல்லோரும் போற்றுவார்கள். பிறகு உன்னோடு நான் போர் செய்ய மாட்டேன், போய்விடுவேன். வல்லவனே! இவ்வுலகில் நீ பெரும் புகழைப் பெருவாய்!" என்றான்.

"நீ வீசிய மலையால் நான் தளர்ச்சி அடைவேனாயின், உனக்குத் தோற்றவனாவேன். என் வலிமை உனக்குக் குறைந்தது என்று ஒப்புக் கொள்வேன்" என்றான் கும்பகர்ணன்.

அனுமன் கும்பகர்ணன் மீது அந்த மலையை எறிகிறான். அந்த மலையைத் தன் தோளால் முட்டி, தூள்தூளாகச் செய்தான் கும்பகர்ணன். இதைக் கண்ட அனுமன் இவன் மிக்க வலிமை உடையவன். இவன் நெஞ்சை இராமன் அம்புதான் பிளக்கும் என்று எண்ணி அவ்விடத்தை விட்டு அகன்று சென்றான்.

எழுபது வெள்ளம் வானர சேனையில் இதுவரை இறந்துபோன வானர வீரர்கள் தவிர, மற்றவர்களை இந்த கும்பகர்ணனே அழித்து ஒழித்துவிடுவான் போலிருக்கிறதே என்று தேவர்கள் மனம் கலங்கினர். குரங்குகள் குன்றுகளைப் பெயர்த்து கும்பகர்ணனைத் தாக்குகின்றனர். இலக்குவன் அவனோடு போர் புரிய வந்து சேருகிறான். தன் வில்லின் நாணை இழுத்து ஓசை எழுப்பினான். இவ்வொலியைக் கேட்ட அரக்கியர்கள் தத்தம் கணவர்கள் இனி மாண்டார்கள் என மங்கல நாண்களை எடுத்தெறிந்தனர்.

இலக்குவன் கும்பகர்ணன் போர் உக்கிரமாக நடந்தது. இலக்குவனின் போர்த் திறமையைக் கும்பகர்ணான் பாராட்டுகிறான். அனுமன் இலக்குவனைத் தன் தோள் மேல் தாங்கிக் கொள்கிறான். கும்பகர்ணன் அம்புறாத் தூணியைக் கட்டிக் கொள்கிறான்.

"நீ இராமனின் தம்பி. நான் இராவணனின் தம்பி. நாம் இருவரும் செய்யும் இந்த யுத்தத்தைக் காண தேவர்கள் வந்துள்ளனர். எங்கள் குலத்துப் பெண்கொடி சூர்ப்பனகையின் மூக்கினை அரிந்தாய். உன் கையை தரையிடைக் கிடத்துவேன்" என்றான் கும்பகர்ணன்.

"உன்னைப் போல சொல்லினால் பேச நான் விரும்பவில்லை. என் வில்லினால் பேசுவேன் "என்றான் இலக்குவன்.

இருவருக்குமிடையே கடும் யுத்தம் நடந்தது. கும்பகர்ணனின் தேரில் பூட்டியிருந்த சிங்கம் முதலான கூட்டங்களை அம்பு எய்து கொன்றானோ அன்றி மந்திரத்தால் கொன்றானோ என்று ஏனையோர் திகைத்து நிற்க, அவைகளைக் கொன்றதோடு, தேரையும் வில்லையும் இழந்த கும்பகர்ணனையும் தாக்கினான். கும்பகர்ணன் கடும் கோபம் கொண்டான்.

'இப்போதே இவன் உயிரைக் குடிப்பேன்' என்று மூன்று முனைகள் உள்ல சூலாயுதத்தை இலக்குவன் மீது செலுத்த கையில் எடுத்தான் கும்பகர்ணன். அவன் தேர் இழந்து தரையில் நிற்பதைக் கண்ட இலக்குவன், தானும் அனுமனின் தோளிலிருந்து இறங்கி போர் செய்தான். அப்போது இராவணன் புதிதாக அனுப்பிய சேனையொன்று கும்பகர்ணனுக்குத் துணையாக வந்து சேர்ந்தது. இந்த புதிய சேனையக் கண்டு வானரர்கள் சிதறி ஓடினர்.

அரக்கர் படையுடன் வானரப் படை மோதி பெரும் அழிவு ஏற்பட்டு எங்கும் பிணக் குவியல்களாக இருக்க, கும்பகர்ணன் வேறொரு திசையில் போரிட்டுக் கொண்டிருந்த சுக்ரீவன் இருக்குமிடம் சென்று அவனோடு போர் செய்யத் தொடங்கினான். சுக்ரீவன் மீது கூர்மையான ஒரு சூலாயுதத்தை வீசுகிறான் கும்பகர்ணன். அந்த சூலம் வந்த வேகத்தைப் பார்த்தவர்கள் 'ஐயோ! இறந்தான் இறந்தான்' என்று வாய்விட்டு அலறினார்கள். அது ஆகாயத்தில் விரைந்து செல்லுகையில், அனுமன் மின்னல் போல பாய்ந்து அதனைப் பிடித்து ஒடித்துப் போட்டான். இதனைக் கண்ட கும்பகர்ணன் அனுமனது வலிமையைப் புகழ்கிறான். "நீ என்னுடன் போர் செய்ய வா! போர் நூலில் சொன்ன வகையெல்லாம் நாமிருவரும் போர் செய்யலாம்" என்றான்.

அனுமன் "இனி உன்னை எதிர்த்துப் போர் செய்யேன்" என முடிவு செய்த பிறகு, உன்னோடு போர் செய்தல் பழுதாகும்" என்று மறுத்து விட்டான். அங்கிருந்து நீங்கி வேறிடம் சென்றான்.

அப்போது கும்பகர்ணன் வேறொரு ஆயுதத்தை எடுக்கவுமில்லை; இடம் விட்டு நகரவுமில்லை. இந்த நேரம் பார்த்து சுக்ரீவன் அவன் எதிரில் பாய்ந்து சென்று அவனைக் கையால் பற்றிக் கொண்டு, தன் வலிய கைகளால் தாக்கினான்; தன் பலம் கொண்ட மட்டும் அவனைக் கைகளால் குத்தினான். கும்பகர்ணன் அவனைப் பார்த்து "உன் ஆண்மை நன்று; ஆயினும் உன் செருக்கு இன்றோடு அழிந்து விடும்" என்று சொல்லிக் கொண்டே சுக்ரீவனைப் பற்றி நெருக்குகிறான். இருவரும் எதிர் எதிராக அடியிட்டு வட்டமாகச் சுற்றி வந்து சாரிகை செய்து போரிட்டதை தேவர்களும் காணமுடியவில்லை; அவ்வளவு வேகம். வானத்தில் இடி இடிப்பது போல போர் நிகழ்ந்தது. இருவன் வாயிலும் இரத்தம் கொட்டின. ஆனால் இருவரும் சோர்வடையாமல் போர் செய்தனர்.

கும்பகர்ணன் சுக்ரீவன் தொள்களை வளைத்துக் கட்டி அவன் பொறுக்க முடியாதபடி இருக்கினான். அதனால் சுக்ரீவன் சிறிது உணர்வு மயங்கினான். மயங்கிய சுக்ரீவனைத் தூக்கிக் கொண்டு இலங்கை நகருக்குள் போனான் கும்பகர்ணன். பார்த்துக் கொண்டிருந்த வானரர்கள் அலறினர். தாய்ப் பறவையை வல்லூறு தூக்கிக் கொண்டு போகும்போது அதன் குஞ்சுகள் கதறுவது போல வானரர்கள் கதறினர். அது கண்டு அரக்கர்கள் இன்ப ஆரவாரம் செய்தனர்.

சந்திரனை கருநிற பாம்பு விழுங்குவதைப் போல வெண்மைநிறமான சுக்ரீவனை கருமைநிறமான கும்பகர்ணன் தூக்கிச் சென்றான். இதைக் கண்டு அனுமன், இந்த கும்பகர்ணனோடு போர் செய்வதில்லை என்று சத்தியம் செய்து விட்டேனே, இவன் சுக்ரீவனைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறானே, என்ன செய்வேன் என்று கைகளைப் பிசைந்து கொண்டு அவன் பின்னாலே போகிறான். வானரர்கள் அலறிக் கொண்டு "எங்கள் அரசன் சுக்ரீவனை அரக்கன் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டான், இனி எங்களுக்கு யார் துணை" என்று இராமனிடம் போய் முறையிட்டு அழுதார்கள்.

இராமபிரான் நெருப்பு போல கண்கள் சிவக்க, வில் அம்புகளோடு, இரண்டு மாத்திரைப் பொழுதில் இலங்கை நகர வாயிலை அடைந்தான். என் நண்பன் சுக்ரீவனை இந்த அரக்கன் இலங்கை நகருக்குள் கொண்டு சென்று விட்டால், கேடு நேரும் என்று கோட்டையின் வாயிலை தன் அம்புகளைச் செலுத்தி முழுமையாக அடைத்து விட்டான். இராமன் வில்லிலிருந்து இப்படிச் சரங்கள் சென்ற வேகத்தில், திசைகள் திகைத்தன. சூரிய கதிர்கள் பூமிக்கு வருவது தடைப்பட்டது. கோட்டை வாயில் முழுவதுமாக அம்புகளால் அடைபட்டுப் போயிற்று. அந்த அம்புச் சுவற்றைக் கடந்து போக கும்பகர்ணனால் முடியவில்லை. மதிலைத் தாண்டிப் போக நினைத்தவனுக்கு அங்கும் அம்புகள் அணைகட்டியது போல மறைத்துக் கொண்டிருந்தது. இதைச் செய்தவன் யார் என்று திகைத்துப் போய் திரும்பிப் பார்த்தான். அங்கே தாமரைச் செங்கணான் இராமபிரானைக் கண்டான்.

இராமபிரானை நேரில் கண்டதும், கும்பகர்ணன் பெரிதும் வெகுண்டான். அவனுக்கு ஏற்பட்ட கோபத்தின் காரணமாக அவனிடம் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்ப்போம்.

"மடித்த வாய் கொழும்புகை வழங்க, மாறிதழ்
துடித்தன; புருவங்கள் சுறுக்கொண்டு ஏறிட
பொடித்ததீ, நயனங்கள்; பொறுக்கலாமையால்
இடித்தவன் தெழிப்பினால், இடிந்த, குன்று எலாம்".

அவனுடைய வாயிலிருந்து புகை எழுகிறது; உதடுகள் துடிக்கின்றன; புருவங்கள் வளைந்து ஏறுகின்றன; கண்கள் தீப்பொறி கக்குகின்றன, அவன் அதட்டிய ஒலியால் குன்றுகள் அந்த ஓசையை எதிரொலித்தன. "வலிமை இழந்த கவந்தனைப் போலவும், பூவும், காயும், கனியும் உண்ணும் வாலி போலவும், என்னை எண்ணிவிட்டாயோ? இந்த சுக்ரீவனைக் காக்கும் பொருட்டு என்னைத் தாக்க வந்தாயோ?"

"வில்லேந்திய இராமா! ஒத்த வலிமையுடையோர் செய்கின்ற போரில் யான், நின் தம்பி இலக்குவனுடன் வெகுண்டு போர் செய்யவில்லை, அவனுக்கு வாகனமாக வந்த யானை போன்ற அனுமனோடு வெகுண்டு போர் செய்யவில்லை, உன்னிடம் தோற்ற வாலியின் தம்பி சுக்ரீவனுடனும் வெகுண்டு போரிடவில்லை, ஏன் தெரியுமா? அவர்கள் எனக்கு நிகரானவர்கள் இல்லை. எனக்கு நிகரானவனாக உன்னைத்தான் தேடினேன். நீ கிடைக்கவில்லை. நான் விளையாட்டாகச் செய்த போரில் உன் வானரப் படைகள் சிதறுண்டு போயின. உன் தம்பி வலி இழந்து ஒதுங்கிப் போனான். அனுமன் தன் பலம் சிதைந்தான். எனக்கு ஈடு கொடுத்துப் போர் செய்ய வந்த இந்த சுக்ரீவனை தடுப்பார் இன்றி எளிதாகத் தூக்கி வந்தேன். இவனைக் காப்பாற்றுவதற்காக நீயே வந்தாய். இதுவே என் பாக்கியம். உன்னோடு போர் செய்து என் அண்ணன் அடைந்துள்ள துன்ப நோயைப் போக்குவேன். இதோ! என் பிடியிலுள்ள சுக்ரீவனை உன் வில் வீரத்தால் விடுவிப்பாய் என்றால், சீதையும் சிறை மீண்டாள் என்று கொள்!" என்றான் கும்பகர்ணன்.

கும்பகர்ணன் இப்படி பேசியதும், இராமன் ஒரு புன்னகை செய்து "என் இனிய நண்பன் சுக்ரீவனைத் தூக்கிய உனது தோள் எனும் மலையை நான் வெட்டி சாய்க்கவில்லையாயின் உனக்குத் தோற்றவன் ஆவேன். அதன் பின், இந்த வில்லையும் நான் தொடமாட்டேன்" என்று சபதம் செய்தான்.

வில்லால் செலுத்தப்பட்டு சுவர்போல கோட்டை வாயிலை மறைத்திருக்கும் அடைப்பைத் திறக்க எவ்வளவு முயன்றும் கும்பகர்ணனால் முடியவில்லை. அப்போது இராமபிரன் அவனது நெற்றியைக் குறி வைத்து கூரிய முனையுள்ள இரண்டு அம்புகளைச் செலுத்தினான். அந்த அம்புகள் கும்பகர்ணன் நெற்றியில் பாய்ந்து புகுந்தது, அந்த இடத்திலிருந்து குருதி கொப்பளித்துக் கொட்டியது. அந்த குருதி வெள்ளம் சுக்ரீவன் முகத்தில் பட்டு அவன் மயக்கம் தெளிந்து எழுந்தான். இதுவரை வீரப்போர் புரிந்த கும்பகர்ணன் இராமனின் கணையால் அடிபட்டு மயங்கி கீழே விழுந்தான்.

கும்பகர்ணன் நெற்றியில் இராமனது அம்புகள் பாய்ந்திருந்ததை சுக்ரீவன் பார்த்தான். இராமன் எங்கே என்று சுற்றிலும் பார்த்தான், அங்கே இராமனைக் கண்டு கைகளைக் கூப்பித் தொழுது வணங்கினான். இராமனைக் கண்டதும் மகிழ்ந்தான். அந்த மகிழ்ச்சியில் அங்கே மயங்கி கீழே விழுந்து கிடந்த கும்பகர்ணன் மீது தாவிப் பாய்ந்து, அவனது மூக்கையும், காதையும் அடியோடு கடித்துக் கவர்ந்து கொண்டு எழுந்து சென்று தன் கூட்டத்தாருடன் சேர்ந்து கொண்டான். என்ன இருந்தாலும் பிறப்பால் வானரந்தானே! அவன் இயல்பான முறையில், முன்பு பாய்ந்து சென்று இராவணன் மணிமகுடத்திலிருந்த விலைமதிப்பற்ற மணிகளைப் பிடுங்கிச் சென்றான், இப்போது மயங்கி கீழே கிடக்கும் கும்பகர்ணன் மீது பாய்ந்து அவன் காதையும் மூக்கையும் அடியோடு கடித்து எடுத்துச் சென்றான்.

கும்பகர்ணனது மூக்கையும், காதையும் சுக்ரீவன் கடித்துத் துண்டித்து விட்டதைக் கண்டதும் அங்கே ஒரே ஆரவாரம்.

"வானரம் ஆர்த்தன; மழையும் ஆர்த்தன
தானமும் ஆர்த்தன; தவமும் ஆர்த்தன
மீன் நால் வேலையும் வெற்பும் ஆர்த்தன
வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே".

வானரக் கூட்டத்துக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. நம் அரசன் சுக்ரீவன் அந்த அரக்கனுடைய காதையும் மூக்கையும் கடித்து எடுத்து விட்டான் என்று ஆரவாரம் செய்தன. மேகமும்கூட மகிழ்ந்து ஆரவாரம் செய்து மழையைப் பொழிந்தது. தானமும், தவமும் கூட இந்த காட்சியைக் கண்டு ஆர்ப்பரித்தன; நான்கு கடல்களும் மலைகளும்கூட அரவாரம் செய்தன. தேவர்களோடு நின்ற தர்மதேவனும் ஆர்ப்பரித்தான்.

சிறிது நேரமானதும், சுக்ரீவன் மயக்கம் தெளிந்து எழுந்தான். அவன் மயக்கம் தெளிந்ததைக் கண்டு இராமனும் மகிழ்ந்தார். மயக்கம் தெளிந்து எழுந்த கும்பகர்ணன், தன் பிடியில் மாட்டிக்கொண்டிருந்த சுக்ரீவன் தப்பி ஓடிவிட்டதையும், அவன் போகும் போதே தன் மூக்கையும், காதையும் கடித்துத் துண்டித்துக் கொண்டு போய்விட்டதையும் உணர்ந்து தாங்கமுடியாத வருத்தம் அடைந்தான். அவனுக்கு அவன் மீதே இரக்கம் வந்தது.

"ஏசியுற்று எழும், விசும்பினரைப் பார்க்கும்; தன்
நாசியைப் பார்க்கும்; முன் நடந்த நாளுடை
வாசியைப் பார்க்கும்; இம்மண்ணைப் பார்க்குமால்
சீசீ உற்றது! எனத் தீயும் நெஞ்சினன்."

சீ சீ என்ன இது இப்படி நேர்ந்துவிட்டதே என்று வெறுப்புற்று நெஞ்சு தீய்கிறான். இப்படிச் செய்த பகைவனை வாய் நிறைய ஏசிக் கொண்டு எழுகிறான்; விண்ணிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் தேவர்களைக் காண்பான்; பின் தோண்டி எடுக்கப்பட்ட தன் மூக்கும் காதும் இருந்த இடத்தைப் பார்ப்பான்; முன்பு தான் இருந்த மகோன்னதமான வாழ்வையும், இன்றைய இழிநிலையையும் ஒப்பிட்டுப் பார்ப்பான்; இதனால் ஏற்பட்ட அவமானத்தால் தலை குனிந்து மண்ணைப் பார்ப்பான்.

என் மூக்கை அறுத்த அவனுக்கு இதே தீங்கை நான் செய்து காட்டுவேன் என்று சொல்லி, தன் வாளையும் கேடயத்தையும் கையில் எடுத்தான் கும்பகர்ணன். மிகுந்த கோபத்தினால் அறுபட்ட அவன் காதிலும், மூக்கிலும் உதிரம் கொட்டியது. முதலில் எடுத்த கேடயம் தன் ஆற்றலுக்கு ஏற்றதல்ல என்று அதனைத் தூக்கி எறிந்து விட்டு புதியதாக ஒன்றை எடுத்துக் கொண்டான்.

"விதிர்த்தனன், வீசினன், விசும்பின் மீன் எலாம்
உதிர்த்தனன், உலகினை அனந்தன் உச்சியோடு
அதிர்த்தனன், ஆர்த்தனன் ஆயிரம் பெருங்
கதிர்த்தலம் சூழ் வடவரையின் காட்சியான்"

கையில் பிடித்திருந்த வாளால் வீசினான், விண்ணில் உள்ள மீன்கள் எல்லாம் மண்ணில் விழும்படி உதிர்த்தனன்; இம்மண்ணுலகத்தைத் தாங்குகின்ற ஆதிசேடன் உட்பட அனைத்தையும் அதிரச் செய்தான்; பெருத்த ஆரவாரம் செய்து கொண்டே கும்பகர்ணன் ஆயிரம் கதிர்களையுடைய சூரியன் வலம் வரும் மேருமலையினைப் போல காட்சியளித்தான். தன் கையிலிருந்த கேடகத்தை வீசி கடும் போர் புரிந்தான். குரங்குப் படை திசைதோறும் சென்று விழுந்தன. ஆயிரம் நாமங்களையுடைய இராமபிரான் அந்த கேடகத்தைத் தன் வில்லினின்றும் புறப்பட்ட ஓர் அம்பினால் உடைத்தெறிந்தான்.

கேடகம் உடைந்ததும், தன் வாளை எடுத்துப் போரிட்டான் கும்பகர்ணன். சரஞ்சரமாய் வானரங்கள் செத்து மடிந்து வீழ்ந்தன. அப்போது ஜாம்பவான் இராமனிடம் இப்போது நீ இவனைக் கொல்லாவிட்டால் வானர சேனை முற்றிலும் அழிந்துவிடும் என்றான். உடனே இராமன் 'எமனை இன்று இவன் முன் நிறுத்துவேன்' என்ற உறுதியோடு அவனுக்கு முன்பாகச் சென்றான். பதிமூன்று இடி போன்ற அம்புகளைக் கும்பகர்ணன் மீது செலுத்தினான். போரில் வல்ல கும்பகர்ணன் அவற்றைத் தடுத்துச் சிதைத்தான். இராமன் வேறொரு அம்பை செலுத்தி கும்பகர்ணன் கை வாளை முறித்தெறிந்தான்.

கையிலிருந்த வாள் முறிந்ததும், வேறொரு வாளை எடுத்துக் கொண்டு, "முடித்தேன்! முடித்தேன்!" என்று வெறியோடு கும்பகர்ணன் இராமன் மீது தாக்கத் தொடங்கினான். இராமன் தனது தொடர்ந்த அம்புகளால் அவனுடைய வாள், கேடகம், கவசம் அனைத்தையும் அறுத்தெறிந்தான். அப்போது இராவணன் அனுப்பிய மற்றொரு படை அவனுக்கு உதவிக்கு வந்து சேர்ந்தது. கும்பகர்ணனும் ஒரு சூலப் படையை எடுத்துக் கொண்டு போரிடுகிறான். இராமன் எய்த அம்புகள், அரக்கர் படையை முற்றிலுமாக அழித்து விடுகின்றன.

கும்பகர்ணன் தனித்து விடப்பட்ட நிலையில், அவன் நின்ற கோலம் கண்டு இரக்கத்துடன் இராமன் ஐயோ! பாவம். இவன் தனியனாக நிற்கிறானே என்ற கனிவுடன் "கும்பகர்ணா! உன் தீவினை இன்னம் முடியவில்லை. அதனால்தான், நான் அழைத்த போது நீ என் பக்கம் வரவில்லை. சாவதற்கே தயாராக இருக்கிறாய். நீ விபீஷணனுடன் பிறந்தவன் என்பதால் உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். ஊருக்குத் திரும்பி போய் நாளை வருகிறாயா, அல்லது இப்பொழுதே போரிட்டுச் சாகிறாயா? எது உசிதமோ அப்படியே செய்" என்றான்.

"ஏதியோடு எதிர் பெருந்துணை இழந்தனை, எதிர் ஒரு தனி நின்றாய்
நீதியோனுடன் பிறந்தனை, ஆதலின் நின் உயிர் நினக்கு ஈவன்
போதியோ? பின்றை வருந்தியோ? அன்று எனின் போர் புரிந்து இப்போதே
சாதியோ? உனக்கு உறுவது சொல்லுதி, சமைவுறத் தெரிந்து அம்மா!"

"இராமா! நீ கொல்வது இருக்கட்டும். உங்களால் உறுப்பு அறுபட்டு பிரிந்து சென்ற சூர்ப்பனகை போல என்னால் மூக்கு அறுபட்ட இந்த முகத்தோடு உயிரோடு இருக்க முடியாது. இராவனன் செய்த அடாத தவறைத் தடுக்க முயன்றேன். அவன் கேட்கவில்லை. அதன் விளைவாக இன்று மூக்கறுபட்டு, தலை குனிந்து உன்முன் நிற்கிறேன். உங்களையெல்லாம் கொன்றுவிட்டு வெற்றி வீரனாகத் திரும்ப வேண்டிய நான், சூர்ப்பனகை போல மூக்கறுபட்டுப் போய் நிற்கிறேனே!" என்றான் கும்பகர்ணன்.

பிறகு கும்பகர்ணனுக்கும், இராமனுக்கும் கடுமையான போர் நிகழ்கிறது. இராமன் விடுகின்ற அம்புகள் எல்லாம், கும்பகர்ணன் அணிந்திருந்த சிவபெருமான் கொடுத்த கவசத்தைத் துளைத்துக் கொண்டு உள்ளே செல்ல முடியவில்லை. அதனால் சிவபெருமான் அருளிய பாசுபதாஸ்திரத்தை எடுத்து, அவன் மேல் ஏவி, அவனது கவசத்தை உடைத்தான் இராமன். மற்றொரு அம்பினால் அவனுடைய ஒரு கரத்தை அறுத்து எறிந்தான். அறுந்து கீழே விழுந்த கையை மற்றொரு கையால் எடுத்துக் கொண்டு அதனால் வானர சேனையைத் தாக்கி கணக்கற்ற வானரர்களைக் கொன்றான் கும்பகர்ணன்.

தேவர்களெல்லாம் கூடி நின்று "இராமா, அவனுடைய இன்னொரு கையையும் அறுப்பாயாக!" என்றனர். அவ்வாறே இராமன் இன்னொரு அம்பைச் செலுத்தி அவனுடைய இன்னொரு கையையும் துண்டித்து விடுகிறான். இரண்டு கைகளும் இழந்த பின்னரும், தன் கால்களால் எதிரிகளை உதைத்துப் போரிடுகிறான். முதலில் ஒரு காலைத் துண்டித்த பிறகும், அவன் மற்றொரு காலால் போரிடத் தொடங்கவும், அந்தக் காலையும் துண்டித்தார் இராமன். முண்டமாக கீழே விழுந்த கும்பகர்ணன் தனது வாயினால் மலைகளைக் கவ்வி எறிந்து அழிவைச் செய்தான். இவன் தீரமான போரைக் கண்டு இராமன் அதிசயித்தான்..

கை, கால்களை இழந்த நிலையில் கும்பகர்ணன் இராமனைப் புகழ்கிறான். காலவரம்பின்றி வாழ வேண்டிய இராவனன் காம நோயினால் வீழ நேரிட்டதே! இந்த இராமனது ஆற்றலுக்கு முன் ஆயிரம் இராவணர்களும் ஈடு ஆவார்களோ? என்று எண்ணுகிறான்.

"இராமா! சிபிச் சக்கரவர்த்தியின் மரபிலே வந்த நீ, அடைக்கலம் அடைந்தவரை காக்கும் பண்புடையவன். அரக்கர் குலத்தில் பிறந்தவனாயினும் என் தம்பி விபீஷணன் உன்னை அடைக்கலமென்று அடைந்தான். முழுமுதற் கடவுளே! அரச உருவம் தாங்கி வந்த வேத நெறி பூண்ட அந்தணனே! என் தம்பி விபீஷணனைக் காப்பாயாக!".

"விபீஷணன் மீது கொண்ட கோபத்தால், என் அண்ணன் இராவணன் அவனைக் கொல்ல முயல்வான். நீ அவனை இராவணனிடமிருந்து காப்பாற்று. உன் தம்பி இலக்குவனும், அனுமனும், நீயும் விபீஷணனைப் பிரிந்து இல்லாமல் உங்களுடனேயே இருக்கும்படி பார்த்துக் கொள். தம்பி என்றும் பாராமல் தகவிலியான இராவணன் அவனைக் கொல்ல முயல்வான். இராமா! அருட்கடலே! பரம்பொருளே! இறுதியாக உன்னிடம் நான் ஓர் வரம் கேட்கிறேன். மறுக்காமல் நீ அதனைத் தந்திடல் வேண்டும். அருள் புரிவாயா?" என்றான் கும்பகர்ணன்.

"கேள்! கும்பகர்ணா" என்றான் இராமன்.

இந்த யுத்தத்தை தேவர்களும், முனிவர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்னை மூக்கில்லாத முண்டம் என்று ஏள்னம் செய்யாவண்ணம் என் கழுத்தைத் துண்டித்து, அதை மிக எட்டத்தில் கண்காணாமல் சமுத்திரத்துக்குள் போடச் செய்து விடு. என் முண்டம் ஒருவர் கண்ணிலும் படவேண்டாம். இந்த வரத்தை மட்டும் நீ அருள வேண்டும்!" என்றான் கும்பகர்ணன்.

உடனே இராமன், ஒரு அம்பை எடுத்து, அவன் தலையைத் துண்டித்து, மிக தூரத்தில் கடலில் கொண்டு போய் போடச் செய்தான். அறுபட்ட கும்பகர்ணன் தலை கடலில் ஆழ்ந்தது. அது கண்டு:

"ஆடினர் வானவர்கள்; அரமகளிர் அமுத இசை
பாடினர்; மாதவரும் வேதியரும் பயம் நீத்தார்
கூடினார் படைத்தலைவர் கொற்றவனை; குடர் கலங்கி
ஓடினார், அடல் அரக்கர், இராவணர்க்கு உணர்த்துவான்".


(யுத்த காண்டம் இரண்டாம் பகுதி நிறைவுற்றது.)

3 comments:

 1. ஓம் நமோ நாராயணாய நம!

  உயர்திரு ராஜகோபால் ஐயா வணக்கம்,
  தங்களின் இந்த சீரியப் பணிக்கு பாராட்டும் பரிசும் தரும் சக்தி, அந்த எங்கும் நிறை இறையோன் பரந்தாமனுக்கு மட்டுமே உண்டு என்றால், அது மிகையாகாது. அதனாலே தங்களை மீண்டும் பணிகிறேன், ஆசிர்வதியும் பெருந்தகையே!

  யுத்தகாண்டம் மூன்றாம் பாகம் படித்து விட்டு தான் பின்னூட்டம் போடலாம் என்று இருந்தேன் இருந்தும் இராகவனின் திருக்கைகளிலே அவன் விரும்பியவண்ணமே வேண்டி நற்கதி பெற்ற கும்பகர்ணன் மரணம் என் கண்களைப் பனித்துவிட்டது. ஒரு விசுவாசச் செம்மல் மடிந்தான் என்ற வருத்தம் தான். இருந்தும் அவன் ஸ்ரீ ராமனால் நற்கதி பெற்றான் என்ற ஆறுதல் ஒருபுறம் என்னைத் தேற்றியது. நான் இராமயணத்தை அறிந்திருந்தக் காலத்திலிருந்தே கும்பகர்ணன் பால் அவனின் சத்திய தர்ம நோக்கும், அதே நேரத்தில் உப்பிட்டவனை உள்ளளவும் நினை என்ற பழமொழிக்கேற்ப, நன்றி உணர்வோடு மகாபாரத கர்ணனைப் போல் செய் நன்றியைக் காக்க தனது உயிரையே கொடுத்த, அந்த செய்நன்றி அறிதல் என்ற அந்த உயரியப் பண்பு தான் எனக்கு அவன்பால் ஒரு மெல்லிய ஈர்ப்பைத் தந்திருக்கிறது என்றால், அதுவே சாலப் பொருந்தும். வாழ்வு என்பது நீர்குமுழிப் போன்றது, அது விரைவில் அழிந்து போகக்கூடியது, அப்படியான வாழ்வைப் பெரிதென்று எண்ணி செய் நன்றியைக் கொல்லமாட்டேன், அது அறமாகாது, ஆக, நீ தர்மத்தின் பக்கம் சென்றுவிடு...... என்னால் தர்மத்தை கூறி இராவணனை திருத்தமுடியாத நிலையில் அவனிடம் கொண்ட நன்றிக்காக அவனுக்காகப் போரிட்டு அவனுக்கு முன்பே!!! இறந்து போகிறேன்..... அந்த கம்பனின் வரிகளை முழுமையாக தட்டச்சு செய்து விடுங்கள், ஆழ்ந்த பொருள்கொண்ட அருமையான செய்யுள் அது என்போன்றோர் மீண்டு மீண்டும் படித்து இன்புற உதவும்.
  நன்றிகள் ஐயா!
  ஸ்ரீ ராமஜெயம், வேண்டும் ஸ்ரீ சீதாராமர் அருள்.

  ReplyDelete
 2. அருமை நண்பர் ஆலாசியம் அவர்களே, உங்கள் பின்னூட்டம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் கும்பகர்ணனுடைய இறப்பை எழுதும்போதும் கண்கள் குளமாகின. அப்படிப்பட்ட சிறந்த கதா பாத்திரம் கும்பகர்ணன். தங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். விரும்பியபடி கம்பனின் அந்தப் பகுதி பாடல்களைச் சேர்த்து விடுகிறேன். சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து நான் வெளியிட்டிருக்கும் மற்றொரு தளத்தையும் பாருங்கள். கருத்துக்களை எழுதுங்கள். நன்றி.

  ReplyDelete
 3. ஐயா! மிகச்சீரிய பணி. கம்பனில் உங்களுக்கு எவ்வளவு ஈடுபாடு. மெய் சிலிர்க்கிறது கம்ப ராமாயணமும் உங்களின் சேவையும். வாழ்க, வளர்க
  அன்புடன்
  சாந்தி லெட்சுமணம்

  ReplyDelete

Please give your comments here