Monday, May 17, 2010

5. சுந்தர காணடம்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
5. சுந்தர காணடம்.

"அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவெனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால்? அவர் என்பர், கைவில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதி ஆவார்!"

"மாலை நேரத்தில் வானத்தில் தோன்றும் அற்புதமான காட்சியில் பாம்பு போல தோன்றும் பிரமையைப் போல, பஞ்ச பூதங்களும் ஒலி, உணர்வு, உருவம், குணம், மணம் என்று மாறுபாடு அடைந்து பரம்பொருளை உணர்ந்து கொள்ளாமல், உலகியல் வாழ்க்கையில் ஏற்பட்ட பந்தம் எவரைக் கண்டால் அழிந்து போகுமோ, எந்த மூர்த்தியானவர் கையிலே வில்லை ஏந்தி இலங்கையில் போரிட்டு தீமையை அழித்தாரோ, அவரே வேதங்களுக்கெல்லாம் ஆதிமூர்த்தியாவார், அவரை வணங்குகிறேன்". (கவிச்சக்கரவர்த்தி கம்பர்)

ஜாம்பவானிடமும், அங்கதன், நீலன் உள்ளிட்ட வானர வீரர்களிடத்தும் விடைபெற்றுக் கொண்டு மகேந்திர மலையின் மீது ஏறிய அனுமன் அந்த மலையின் உச்சியில் தனது விஸ்வரூபத்தை எடுத்துக் கொண்டு நிமிர்ந்து நின்றபோது அவன் கண்களுக்கு தேவலோகம் தென்பட்டது. இங்குதான் இலங்கை இருக்கிறதோ என்று எண்ணிக் கொண்டு, பின்னர் இது தேவலோகமல்லவா என்று உணர்ந்து கொண்டு, தான் போகவேண்டிய இடம் இலங்கை அல்லவா, அது இங்கு இல்லையே என்று தெளிந்தான்.

அனுமன் விஸ்வரூபத்தை எடுத்துக் கொண்ட போது, அவன் கண்களுக்கு இலங்கை மூதூரும் தெரிந்தது. அங்குள்ள சோலைகள், பொன் வேய்ந்த மதிற்சுவர்கள், வட்டமான கோட்டைச் சுவர்கள், கோபுர வாயில், வெண்மையான மாடங்கள், வீதிகள் அனைத்தையும் கண்டான். அண்டங்கள், திசைகள் எட்டும் அதிர தோள்கொட்டி ஆர்ப்பரித்தான். மலையின் உச்சியிலிருந்து, காற்றையே பற்றுக் கோடாகக் கொண்டு, தாவி வான்வெளியில் எழுவதற்காகத் தன் கால்களை மலைமீது அழுத்த, அந்த மகேந்திர மலையானது பூமிக்குள் அழுந்தியது. அந்த மலை பூமிக்குள் அழுந்திய வேகத்தில் மலையின் வயிறு பிதுங்கியது. அதனால் அங்கு வாழ்ந்த நச்சுப் பாம்புகள் எல்லாம் நசுங்கி நஞ்சைக் கக்கின. வெளியே புரண்டு வந்து வீழ்ந்தன.

இப்படி அனுமன் வானில் புறப்பட்ட காட்சியை தேவர்களும், முனிவர்களும், மூவுலகத்தோரும் வரிசை வரிசையாக வான வெளியில் நின்று மலர்களையும், சந்தனம் முதலான வாசனைப் பொருட்களையும், இரத்தினங்களையும் அனுமன் மீது தூவி, "வீரனே! சென்று வா!" என்று வாழ்த்தி அனுப்பினார்கள்.

அனுமன் வானத்தில் எழும்பியபோது வாலை வேகமாக வீசி, கால்களை மடக்கி, மார்பு ஒடுங்கி, தோள்கள் பூரிக்க கழுத்தை உள்ளுக்கிழுத்துப் பின் முன்னே தள்ளி காலால் விசை உண்டாக்கி, தேவர்கள் கண்களுக்கும் படாவண்ணம் மேல் நோக்கி விரைந்து, பிரம்ம லோகத்தில் உராயும்படியாக எழுந்தான். அவன் எழுந்த வேகத்தில் குன்றுகளும், மரங்களும் மற்றும் பற்பல உயிரினங்களும் விசையால் மேலெழுந்து பின் கடலில் வீழ்ந்தன. கடல் நீர் பிளவுண்டது. கடல் அலைகள் வேகமாக வீசி இலங்கையின் கடற்கரையில் சென்று மோதின. வானத்தில் அனுமன் விரைந்து செல்லும் காட்சியைக் கண்டு அஷ்டதிக் கஜங்களும் நடுக்கமடைந்தன. கடலைக் கிழித்துச் செல்லும் படகு போல காற்றைக் கிழித்துக் கொண்டு வான வெளியில் அனுமன் சென்றான்.

"விண்ணவர் ஏத்த, வேத முனிவர்கள் வியந்து வாழ்த்த
மண்னவர் இறைஞ்சச் செல்லு மாருதி மறம்முன் கூர
அண்ணல் வாளரக்கன் தன்னை அமுக்குவென் என்னக்
கண்ணுதல் ஒழியச் செல்லும் கையிலையங்கிரியும் ஒத்தான்".

தேவர்கள் துதி செய்கிறார்கள்; வேதம் உணர்ந்த முனிவர்கள் வியந்து வாழ்த்துகிறார்கள்; பூமியில் உள்ளவர்கள் வணங்குகிறார்கள்; வான வீதிவழியே பறந்து செல்லுகின்ற அனுமன், சந்திரஹாசம் எனும் சிவன் தந்த வாளையுடைய இராவணனை கிழே போட்டு அழுத்துவேன் என்று விரையும் கயிலைமலையைப் போல காட்சியளித்தான்.

சிறிய பிரம்மச்சாரி வடிவம் தாங்கி, அறிவில் பிரமதேவனுக்கு இணையான, உலகுக்கே அறத்தின் அச்சாணி போன்ற அனுமன், தன்னைவிட்டு நெடு நாட்களுக்கு முன்பு பிரிந்து சென்ற திரிகூடமலையைக் காண விரைந்து செல்லும் மேரு மலையைப் போல காட்சியளித்தான். அவன் வான வீதியில் விரைந்து செல்லும் வேகத்தில் வானத்து விண்மீன்கள் மேகத்தைக் கிழித்துக் கொண்டு கீழே உதிர்கின்றன. கடல்நீர் கரையைக் கடந்து பாய்ந்து ஓடுகின்றன. வானம் நிலை குலைந்து தளர்ந்து விழ, திசைகள் பிளவுபட, மேருமலை குலுங்க, பிரளய காலத்துக் காற்றைப் போல வானத்தில் விரைந்து செல்லுகிறான்.

இருபது கரங்களும், பத்துத் தலைகளும் உள்ள இராவணன் தன் ஐம்பொறிகளை அடக்கித் தவம் இருந்து பெற்ற அரிய பெரிய வரங்களின் பயன்களெல்லாம் அவன் செய்த கொடிய பிழையால் அறுந்து விழ, இயற்கையின் செய்கைகள் மாறி, கிழக்கே உதிக்கும் சூரியன் வடக்கில் உதித்து இலங்கை நோக்கித் தாவுகிறதோ என்பது போல அனுமன் விரைந்து வந்தான். ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்த தேவர்கள் வாழும் ஏழு உலகங்களையும், வானத்தையும், தன் காலினால் அளந்த வாமனாவதார மகாவிஷ்ணு போல, அனுமன் அவற்றைத் தன் வாலினால் அளந்தான்.

அகன்ற கடலைத் தாண்டும் போது, வேதங்களுக்கு நிகரான அனுமனது வால், தங்கள் உயிரைக் குடிக்க வருகின்ற நாகபாசமல்லவா இது என்று அரக்கர்கள் பார்த்து விடுவார்கள் என்று அனுமன் எனும் தலைவன் இருக்கும் தைரியத்தில் அவனுக்குப் பின்புறமாக ஒளிந்து கொண்டு வந்ததாம். அனுமனது வாலை கம்பர் பெருமான் வர்ணிக்கும் இந்த இடத்தில் நகைச்சுவையும் மிளிர்வதைப் பார்க்கலாம்.

தேவர்கள் வான்வெளியில் தங்கள் விமானங்களில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது சிங்கம் போன்ற அனுமன் காற்றைக் கிழித்துக் கொண்டு வான்வெளியை ஊடுறுவிக் கொண்டு செல்லுகையில் ஏற்பட்ட காற்றின் வேகம் காரணமாக, அந்தத் தேவர்கள் பயணம் செய்த விமாங்களெல்லாம் ஒன்றோடு ஒன்று மோதி சிதைந்து போய் கடலில் விழுந்தனவாம்.

"குன்றொடு குணிக்கும் கொற்றக் குவவுத் தோள் குரக்குச் சீயம்
சென்றுறு வேகத்திண்கால் எறிதரத் தேவர் வைகும்
மின்தொடர் வானத்தான விமானங்கள் விசையில் தம்மில்
ஒன்றொடு ஒன்று உடையத் தாக்கி மாக்கடல் உற்றமாதோ!"

வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்திய இந்திரனின் தேவலோகமும் கலக்கம் அடையும்படியாக விரைந்து செல்லும் இந்த அனுமனின் கருத்துதான் என்ன? போகிற வேகத்தைப் பார்த்தால் இலங்கைக்கும் அதற்கு அப்பாலும் போவான் போலிருக்கிறதே என்று இந்த உலகம் வியந்து பார்த்துக் கொண்டிருந்தது.

அனுமன் சென்ற வேகத்தில் கடலில் திமிங்கிலங்களைக் கூட விழுங்கும் வல்லமை பெற்ற "திமிங்கிலகிலங்கள்", திமிங்கிலம் உள்ளிட்ட பெரிய பெரிய மீன்களெல்லாம் இறந்து மிதந்தன. ஒப்புவமை இல்லாத பேருருவம் (விஸ்வரூபம்) கொண்ட அனுமன் கடலைக் கடந்து செல்லுங்கால், வேகத்தை உண்டாக்குவதற்காக முன்னும் பின்னுமாக அசைக்கின்ற அவனது இரு தடக்கைகளும், இராமனும், இலக்குவனும் இவனுக்கு வழிகாட்டி அழைத்துச் செல்வது போல இருந்தது.

இப்படி வானவெளியைக் கிழித்துக் கொண்டு அனுமன் விரைந்து சென்று கொண்டிருந்த போது மைந்நாகமலை எனும் பெயருடைய ஓர் பர்வதம் கடலினின்றும் மேலே எழுந்து வந்து வானளாவ நின்றது.

"இ நாகம் அனான் எறி கால் என ஏகும் வேலைத்
திக் நாக மாவில் செறி கீழ்த்திசை காவல் செய்யும்
கை நாகம் அந்நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற
மைந் நாகம் எனும் மலை வானுற வந்தது அன்றே!".

எண் திசைகளையும் காவல் புரிகின்ற யானைகளில் கீழ்த்திசையைக் காப்பது ஐராவதும் எனும் யானை. அற்றை நாள் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க முயன்ற போது கடலில் தோன்றியது ஐராவதம். அதுபோல அனுமன் செல்லும் பாதையில் அன்று பாற்கடலில் தோன்றிய ஐராவதம் போன்று, இன்று மைந்நாகமலை வந்து தோன்றியது.

திருமாலுக்கு நாராயணன் எனும் பெயர், அவன் நீரிடை இருந்தமையால் வந்தது. ஊழிக்காலத்திற்குப் பிறகு நெடுநாள் அவன் கடலில் அறிதுயில் கொண்டு இருந்தமையால், அருள் தோன்றி சுவண அண்டம் (தேவலோகம்) உண்டாயிற்று. அதனின்று பிரமன் தோன்றி உலகங்களைப் படைத்தான். பிரமனுக்கு இரண்யகர்பன் என்று பெயர். நீரிலிருந்து சுவண அண்டம் எழுந்தது போல மைந்நாகமலை மேலே எழுந்தது. பிரளயகாலத்துக்குப் பிறகு முதன்முதலாக உருவான தேவருலகம் போல மைந்நாகமலை தோன்றியதாக உவமை கூறுகிறார்.

பிரளய கால வெள்ளத்தில் முதலில் தோன்றியவன் பிரமன். அவன் தன்னைத் தோற்றுவித்த தந்தையாகிய திருமாலைக் கண்டு மரியாதை செய்யாமல், வேறு எந்த செயலும் செய்ய மாட்டேன் என்று கடலில் மூழ்கி எழுந்தான். அதுபோல கடலில் இருந்து மைந்நாக மலையும் மேலே எழுந்தது.

திருமகளின் பூமாலையை இந்திரனுக்குக் கொடுக்க அவன் அதை இகழ்ந்ததால் துர்வாச முனிவர் சாபமிட்டார். அந்த சாபத்தின் பலனாய் இந்திரனின் செல்வம் அனைத்தும் கடலில் மூழ்கிவிட, தேவர்களும், அசுரர்களும் கடலைக் கடைந்து வந்த போது எழுந்தவற்றுள் சந்திரனும் ஒருவன், அதுபோல கடலில் இருந்து மைந்நாகமலை எழுந்தது.

நீரினுள் அழுந்திக் கிடந்த வரையிலும் நீர் ஓட்டமின்றிக் கிடந்த மைந்நாக மலையின் அருவிகள், மலை மேலே எழவும், நீர் ஓட்டம் மிகுந்து அருவியாய் கீழே விழ, அந்த அதிர்ச்சியில் மீன்களும் நீரோடு துள்ள மலை மேலே எழுந்தது.

குலப் பகை என்று கூறப்படும் பகைகள் ஆறு வகைப்படும். அவை, காமம், வெகுளி, கடுமையான பற்றுள்ளம், மானம், உவகை, மதம் ஆகியவையாகும். அதுபோல குற்றங்கள் மூவகைப் படும். அவை, ஐயம், திரிபு, அறியாமையால் விளையும் குற்றங்கள். இவற்றிலிருந்து விடுபட்டு கடைத்தேறிய பெரியோன் போல மைந்நாக மலை கடலில் இருந்து மேலே எழுந்தது.

அப்படி தனது வழியில் கடலில் இருந்து மேலே எழும் மலையைப் பார்த்த அனுமன் "இது என்ன?" என்று திகைத்தான். நீருக்குள் கிடந்த மலை இப்படித் தன் பாதையில் குறுக்கிட்டு மேலெழுந்தது கண்டு அதைத் தன் காலால் ஓர் உந்து உந்தி, அந்த மலை தலைகீழாக கடலுக்குள் மூழ்கும்படிச் செய்தான். அப்படி நீரினுள் அனுமனால் தலைகீழாய் அழுத்தப்பட்ட மைந்நாக மலை மனத்துயரம் அடைந்தது. மீண்டும் மனத்தில் அன்பு மேலிட, சிறு மானுட வேடம் எடுத்துக் கொண்டு, அனுமனை நெருங்கி வந்து "என் தந்தையே, நான் சொல்வதைச் சற்றுக் கேட்பாயாக!" என்றது.

"ஐயனே! நான் பகைவனும் அல்ல. பகைவனால் அனுப்பப்பட்டவனும் அல்ல. முன்பொரு நாள் இந்திரன் மலைகள் தங்கள் சிறகுகளை விரித்து பற்பல இடத்துக்கும் தாவிச்சென்று இன்னல் புரிகிறது என்ற காரணத்தால், தனது வஜ்ராயுதத்தால் மலைகளின் சிறகுகளை வெட்டிய போது, தங்கள் தந்தை வாயுபகவான் என் மீதுள்ள அன்பின் காரணமாக என்னை கடலுக்குள் ஒளித்து வைத்து என்னைக் காப்பாற்றினான். உயர்ந்தவற்றுள் எல்லாம் உயர்ந்தவனாகிய ஆஞ்சநேயா! நீ அந்த வாயுவின் குமாரன் என்பதால் உன்பால் அன்பு கொண்டு, நடுக்கடலாகிய இங்கு உனக்கு உதவி செய்யும் பொருட்டு, தங்கி இளைப்பாற வேண்டுமென்பதற்காக நான் கடலுக்கு மேலே வந்தேன்" என்றது மனித உருவில் வந்த மைந்நாகமலை.

"அதுவன்றியும், நீதி வழி நிற்கும் பெரியோய்! கரிய செம்மல் இராமபிரானின் கட்டளையை சிரமேல் ஏந்தி சீதையைக் காணும் பொருட்டு வருகிறாய். அவனுக்கு உதவி செய்வதைக் காட்டிலும் பெரும் பேறு வேறு இல்லை என்பதால் நான் வந்தேன்" என்றது மைந்நாகம். தாயினும் நல்ல மாருதி! தாங்கள் என்மீது சற்று தங்கி இளைப்பாறிவிட்டு, நான் அளிக்கும் உணவினை உண்டு மகிழ்ந்து செல்ல வேண்டும்" என்றும் உரைத்தது.

இந்த மலை குற்றமற்றது என்பதை உணர்ந்த அனுமன், முகம் மலர்ந்து முறுவல் பூத்தான். அந்த மைந்நாக மலை மீதுள்ள ஓர் சிகரத்தில் சிறுகொண்டு, "வருந்தாதே! என் தலைவன் இராமபிரான் கருணையினால் எனக்குப் பயணத்தில் களைப்பு ஏற்படாது. மேலும் நான் மேற்கொண்ட செயல் முடியும் வரை எதனையும் உண்ணுவதில்லை என்று விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அன்போடு நீ எனக்கு அளிக்க முன்வந்த உணவை, நான் உண்டதாகவே எண்ணிக் கொள். உன் அன்பை நான் ஏற்றுக் கொண்டேன். இதற்கும் மேல் என்ன இருக்கிறது? அன்புதான் பூஜைக்கு அடிப்படி. அவ்வன்பு அளவற்று இருக்கும்போது, உணவு உண்ணுதல் போன்ற புறத் தொழில்கள் அவசியமானதோ?".

சத்தியத்தையே விரதமாகப் பூண்ட அனுமன் அந்த மைந்நாகத்தை நோக்கி, "நான் இப்போது விரைந்து சென்று அத திரிகூடமலை மீதுள்ள இலங்கை நகரை அடைந்து, இராமபிரானின் கட்டளைப்படி பணிகளைச் செய்து முடிக்க வேண்டும். அதுதான் இப்போது எனது தலையாய கடமை. அப்படி அந்தக் காரியத்தை நிறைவேற்றிவிட்டுத் திரும்பி வரும்போது உன்னிடம் வருகிறேன். உன் உபசரிப்பை ஏற்றுக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு வானத்தில் எழும்பி விரைந்து சென்றான். மைந்நாக மலையும் அவன் கண்ணுக்கு மறையும் வரை அன்போடு பார்த்துக் கொண்டு இருந்தது.

வானம் செக்கச்செவேலென்று சிவந்த வண்ணமாய்த் திகழ்ந்தது. ஊழிக்காற்று போல அனுமன் சென்ற வேகத்தில், வான மண்டலம் அனைத்திலும் குழப்பம் ஏற்பட்டது. இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மாலைக் கதிரவன், இது என்ன? இளம் வயதில் நடக்கப் பழகிய அந்தத் தளிர் பருவத்தில் வானத்தில் தாவி, என் தேர்மீது குதித்த இவன் யார் மீது பாய்வதற்காக இவ்வண்ணம் விரைந்து செல்கிறான் என்று வியந்தான். வானத்தில் பறந்த போது அவனுக்கும் மேலே வான்பகுதி ஒளி வீசியும், அவன் உடல் மறைத்ததால், கீழ் பகுதி இருண்டு காட்சி தந்தது. சூரிய கிரணங்களை ராகு, கேது கிரஹங்கள் மறைத்து இருளை உண்டாக்குவது போல, அனுமன் உடல் ஒளியை மறைத்து இருளைத் தந்தது.

இதற்கிடையே தேவர்களுக்கு ஓர் ஐயப்பாடு. இந்த அனுமன் இராம கைங்கர்யத்தில் ஈடுபட்டு செயல்படவும், சாதிக்கவும் வல்லமை படைத்தவந்தானா? இவனது வலிமை என்ன என்பதை சோதிக்கும் பொருட்டு, சுரசை எனும் தூயவளை அனுப்பி, அவனைச் சோதிக்கும்படி கூறி அனுப்பினார்கள். அந்த சுரசையும் ஓர் அரக்கி வடிவம் தாங்கி, அனுமன் வரும் பாதையில் எதிரில் வந்தாள்.

இந்த சுரசை தக்கனின் மகளும் காசிப முனிவரின் மனைவியுமாவாள். இவளை நாகமாதா என்று வான்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த சுரசை அரக்கி வடிவம் தாங்கி, பெரிய குகை போன்ற வாயை உடையவளாக அனுமன் வரும் பாதையில் வந்து தோன்றி, "வலிமையுள்ள குரக்கினத் தோன்றலே! கொடிய எமனும் அஞ்சுகின்ற வாயை உடைய எனக்கு உணவாக வருகிறாய் போலும் நீ" என்று சொல்லிக் கொண்டு, தன் பெரிய வாயை அகலத் திறந்தாள்.

"பெரும் கொடையாளனே! இனி கடந்து செல்ல உனக்கு வழியில்லை. வானத்துக்கும் பூமிக்குமாக நான் வாய் பிளந்து நிற்கிறேன். நீயாகவே வந்து என் வாயில் புகுந்து எனக்கு இரையாகிவிடு!" என்றாள்.

இந்தச் சொற்களைக் கேட்ட அறிஞனான அனுமன், "நீ ஒரு பெண். பசி அதிகமாகி நீ வருந்துகிறாய். நான் இப்போது இராம காரியமாக அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறேன். போகிற காரியத்தை வெற்றிகரமாக முடித்து விட்டேனானால், திரும்பி வருகையில் நானே என் உடலை உனக்கு உண்ணுவதற்கு அளித்து விடுகிறேன்" என்றான்.

இதைக் கேட்ட சுரசை சிரித்தாள். கோபமாக கர்ஜித்தாள். "ஏழு உலகங்களிலும் வாழ்வோர் அனைவரும் காணும் வகையில் நான் உன்னைத் தின்றே தீருவேன், இது சத்தியம்" என்றாள்.

அனுமன் ஒரு விஷமப் புன்னகையோடு "சரி, சரி, நான் உன் பெரிய வாய்க்குள் புகுந்து போகிறேன், உன்னால் முடியுமானால் என்னைத் தின்று விடு" என்று சொல்லிவிட்டு, குகை போன்ற தன் வாயை அந்த சுரசை முடிந்த மட்டும் பெரிதாக்கிக் கொண்டு நிற்க, அனுமன் தன் உருவத்தைப் பெரிய உருவமாக ஆக்கினான், அந்த அரக்கியின் வாயும் அதற்கேற்றவாறு பெரிதாகிக் கொண்டே வந்தது. அப்போது அனுமன் திடீரென்று தன் பெரிய உருவத்தை மிகச் சிறிய உருவமாக மாற்றிக் கொண்டு (வான்மீகத்தின்படி கட்டை விரல் அளவுக்கு) அவள் வாய்க்குள் புகுந்து, அவள் மூச்சுவிடும் முன்பாகக் கண் இமைக்கும் நேரத்தில் வெளியில் வந்தான். இந்தக் காட்சியைக் கண்ட தேவர்கள், நாம் இவனால் பிழைத்தோம் என்று அனுமன் மீது மலர்மாரி பொழிந்தனர், வாழ்த்தினார்கள்.

நினைத்தபடி உருவத்தைப் பெரிதாக்கும் வல்லமை பெற்ற சுரசை தனது சுய வடிவை எடுத்துக் கொண்டு தாயினும் அன்பு மேலோங்க, அனுமனைப் பார்த்து, அவன் எடுத்த காரியங்கள் யாவும் வெற்றிபெற வாழ்த்துக் கூறினாள். அனுமனும் அவளை வாழ்த்தி விடைபெற்றுச் சென்றான்.

தென்றல் காற்று, இனிமையாக வீசியது. கின்னரர்கள் எனப்படுவோர், கீதங்கள் இசைத்தனர். பெண்கள் வகைவகையான பாடல்களைப் பாடினர். ஆடலில் வல்ல பூதங்கள் புகழுரைகளைக் கூறின. அந்தணர்கள் வேதங்களை ஓதி வாழ்த்தினர். அனுமன் வானவெளியில் தட்டுத் தடங்கலின்றி விரைந்து இலங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அவன் கடலைத் தாண்டி செல்கையில் ஏற்பட்ட முதல் இரு தடைகளும் அன்பினால் நிகழ்ந்தது. இப்போது வேறொரு தடை பகையினால் ஏற்படுகிறது.

அனுமன் விரைந்து வரும் பாதையில் கடலிலிருந்து எழுகின்ற மற்றொரு கடல் போல, தணலின் கொழுந்து போல, அங்காரதாரை எனும் அரக்கியொருத்தி எழுகிறாள். "அடேய்! இங்கு என்னைத் தாண்டிக் கொண்டு செல்வது யார்?" என்று கர்ஜித்துக் கொண்டு எழுகிறாள். அவன் பறந்து செல்லும்போது கடலில் பட்ட அவனது நிழலைப் பிடித்து கீழே இழுத்து விடுகிறாள்.

அந்த அங்காரதாரை எனும் அரக்கி ஒரு காததூரம் வரை இருக்கும் பொருளைக் காண வல்லவள். மது கைடவர் என்ற அரக்கர்களை ஒத்திருந்தாள் இவள். இந்த மது, கைடவர் எனும் பெயர் கொண்ட இரு அரக்கர்கள், ஒரே மாதிரியான செயல்களைச் செய்யக் கூடியவர்கள். இவர்கள் இருவரும் ஒரு முறை வேதங்களைப் பிரம்ம தேவனிடமிருந்து பறித்துக் கொண்டு கடலுக்குள் சென்று மறைந்து கொண்டனர். பிரமதேவன், மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட, அவர் ஹயக்ரீவ அவதாரம் எடுத்து அவர்களை அழித்தார். இந்த இரு அரக்கர்களில் மது என்பவன் கும்பகர்ணனாகவும், கைடவன் அதிகாயனாகவும் பிறந்து இராம இலக்குவர்களால் பின்னால் வதைக்கப்பட இருக்கின்றனர்.

அங்காரதாரை கொடிய கடைவாய் கோரைப்பற்களைக் கொண்டவள். நிழலைப் பிடித்து இழுத்தே உருவங்களை இழுக்கும் ஆற்றல் பெற்றவள். வானத்துக்கும் பூமிக்குமாக நின்ற அரக்கியைப் பார்த்த மாத்திரத்தில் இவள் மிகக் கொடியவள் என்று அனுமன் உணர்வால் உணர்ந்தான். இவள் கருணையையும், தர்மத்தையும் ஒருங்கே கைவிட்டவள் என்பதையும் புரிந்து கொண்டான். இவளைக் கடந்து செல்லுதல் அரிது, எனவே இவள் வாயில் புகுந்து வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியேறுவது ஒன்றே வழி என்று நினைத்து அவளிடம் கூறுகிறான்: "நிழலைப் பிடித்து என்னை இழுத்துவிட்ட பெண்ணே! என் பெரிய உருவத்தையும் செயலையும் பார்த்தும், எனது வலிமையை உணராமல் இருக்கிறாய். வானுக்கும், பூமிக்குமாக உன் பாதாள வாயைப் பிளந்து கொண்டு நிற்கிறாய். நீ யார்? இந்தக் கடலிடையே இருப்பது ஏன்?" என்றான்.

"நீ என்னை ஒரு பெண் என்று கருதிவிடாதே. என்னை எதிர்த்தவர்கள் தேவரே ஆயினும் உயிர் விடுதல் நிச்சயம். எமனேகூட என்னை எதிர்த்து வருவானானால், அவனையும் பிடித்து நான் தின்னுவது உறுதி" என்றாள்.

இப்படிச் சொல்லிக் கொண்டே அங்காரதாரை எனும் அந்த அரக்கித் தன் வாயை அகலத் திறந்தாள். பெரியோன் அனுமன், அவள் வாய்வழியே வயிற்றினுள் புகுந்தான். அதைக் கண்ட தர்ம தேவதை வாய்விட்டுக் கதறி அழுதது. அனுமன் இறந்தான் என்று தேவர்கள் சோர்ந்து போனார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த அரக்கியின் வயிற்றைப் பிளந்து கிழித்துக் கொண்டு அன்று தூணைப் பிளந்து கொண்டு புறப்பட்ட நரசிம்ஹம்போல அனுமன் வெளியே வந்தான்.

கள் உண்ட வாயையுடைய அந்த அரக்கி அலறினாள். அவள் குடலைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டு வெளிப்பட்ட அனுமன் வானவெளியில் ஏறினான். ஓர் குகைக்குள் புகுந்து, அங்கு வாழும் பாம்புகளைக் கவ்விக் கொண்டு எழும் கருடனைப் போல அனுமன் தோன்றினான். சாகா வரம் பெற்ற சிரஞ்ஜீவியான அனுமன் கயிறு அறுந்து கீழே விழ மேலே ஏறும் காத்தாடிபோல பறந்தான். வானவர் ஆர்த்தனர். அசுரர்கள் மனம் புழுங்கி வெந்தனர். பிரமனும் வியந்து மலர்களைத் தூவினான். கயிலையில் சிவபெருமானும் இக்காட்சியைக் கண்டு மகிழ்ந்தான். முனிவர்கள் ஆசி மொழிந்தனர்.

அரக்கி அங்காரதாரை மாண்டு போக, அவள் வாய் முதல் வயிறு வரை கிழித்த அனுமன் வானத்தில் பறந்து தன் விஸ்வரூபம் கொண்டான். வான்வழியில் விரைந்து சென்றான். வழியில் நேரிடும் துன்பங்கள் தீர, அனுமன் 'ராம' நாமத்தை உச்சரிப்பதே நலம் என்று இராமநாம ஜபம் செய்யத் தொடங்கினான். இராமநாமத்தைச் சொல்லிக் கொண்டே வந்த அனுமன் இலங்கையில் ஓர் புறத்தில் பசுமையான சோலைகள் அடர்ந்த பவழ மலையில் சென்று இறங்கினான். இம்மலை 'இலம்பகம்' எனும் பெயர் கொண்டது.

அவன் பாய்ந்து இறங்கிய வேகத்தில் அந்தப் பவழ மலை அங்கும் இங்குமாக ஆடியது. புயலில் சிக்கிய மரக்கலம் போல அந்த மலை ஆடியது. இலங்கை நகரைப் பார்க்கிறான் அனுமன். அடடா! எப்பேர்ப்பட்ட நகரம். தேவர்களின் அமராவதி நகரம்கூட இந்த நகருக்கு ஒப்பாகுமா? அதனால்தான் இராவணன் இங்கு ஆட்சி புரிகிறான். சொர்க்கபுரிகூட இந்த இலங்கைக்கும் தாழ்ந்ததுதான். இந்த நகரம் எழுநூறு யோசனை பரப்பு உள்ளது. மூவுலகப் பொருட்களும் இங்கே உண்டு. அத்தகைய நகரத்துக்கு அனுமன் வந்து சேர்ந்தான்.

இலங்கை மாநகரத்தை அனுமன் பார்க்கிறான். இலங்கை நகர வீதிகளில் காணும் மாடங்கள் யாவும் பொன்னால் வேயப்பட்டவையோ, இரத்தினங்கள் பதிக்கப் பெற்றவையோ, மின்னலைக் கொண்டு அமைக்கப் பெற்றவையோ, வெயிலைக் கொண்டு ஆக்கப் பெற்றவையோ என்றெல்லாம் மயங்கும் அளவில் ஒளிவீசின. மாடமாளிகைகள், வான்முகட்டை முட்டுவதாக உள்ளன. தேவலோக வாசிகள் இலங்கையில் பணிசெய்யும் வேலைக்காரர்களாக இருப்பதால், அவர்களுடைய பாத ஒளி அருகில் கிடந்த மேகங்களை ஒளிவீசச் செய்கிறது, அரக்கியரின் செம்மை நிற தலை மயிரைப் போன்று தோற்றமளித்தது அந்த மேகங்கள். தேவலோகத்துக் கற்பக மலரில் ஊறுகின்ற சிறந்த தேனை உண்டு வெறுப்புற்ற வண்டுகள், இலங்கை நகரின் உப்பரிகையிலிருக்கும் ஆகாய கங்கையில் இருந்த செங்கழுநீர்ப் பூவின் தேனை உண்டு அதில் மயங்கித் துயில் கொண்டன.

குழல், வீணை, யாழ் எனும் இசைக் கருவிகளையும் பழிக்கும் இனிமையான குரலையுடைய பெண்கள், கிளிகளைப் பேசப் பழக்குகிறார்கள். இவர்கள் வசிக்கும் மாளிகையின் சுவர்களில் பதிக்கப்பட்டிருக்கிற மணிகள் அவர்களது பிம்பத்தைப் பலவாக பிரதிபலிப்பதால், தாம் இதில் யார் என்பது தெரியாத கட்டடங்கள் உள்ளன. திருமாலின் திருமார்பை அலங்கரிக்கும் "கவுஸ்த்துவம்" எனும் மணிக்கு ஈடானது ஏதேனும் உண்டா? அதுபோல தேவதச்சன் உறுதியாய் அமைத்த இலங்கை மாநகரிலும் சிறந்த நகரம் ஏதேனும் உண்டா?

அந்த சிறப்பு மிக்க இலங்கை மாநகரில் உள்ள மரங்கள் அனைத்துமே கற்பக மரங்கள்தான். வீடுகள் அனைத்தும் பொன்னால் ஆனவை. அங்குள்ள அரக்கியர்க்கு தேவ மாதர்கள் பணிப்பெண்களாக பணிபுரிகின்றனர். தேவர்கள் தங்கள் வலிமை இழந்து, இங்கு வந்து அரக்கர்களுக்குக் குற்றேவல் புரிகின்றனர். இவர்கள் செய்த தவத்தின் பயனாக விளைந்தவை இவை. தேவர்கள் அனைவரும் இராவணர்க்கு ஏவல் செய்ய, மூவரில் சிவபெருமானும், விஷ்ணுவும் மட்டும் அப்படிக் குற்றேவல் செய்யாமல் இருக்கிறார்கள் என்றால், அரக்கர்களின் தவத்தை என்னவென்று சொல்ல? போரில் இராவணனிடம் தோற்றுப் போய் அஷ்டதிக் கஜங்களும் ஓர் ஓரமாய் வருந்தி நிற்கின்றன. ஒப்பற்ற ஐயனார் எனப்படும் சாஸ்தாவின் வாகனமான யானையும், சூரியனின் ஒற்றைச் சக்கர தேரையும் தவிர மற்ற அனைத்தும் இந்த நகருக்கு வந்து சேர்ந்து விட்டன.

ஊழிக்காலத்தில் திருமாலின் திருவயிற்றை வந்தடையும் உயிர்க்கூட்டங்கள் போல இலங்கையில் மக்கட் கூட்டம் நிரம்பி வழிந்தது. சூரியனின் தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் தவிர மற்ற குதிரைகள் அனைத்தும், இந்த நகரத்தில்தான் இருக்கின்றன போலும். அந்த நகரத்தில் நாலாபுறத்திலும் கேட்பது முரசு அறையும் ஒலி, யானைகளின் பிளிறல், நாற்புறமும் சூழ்ந்துள்ள கடல் அலைகளின் முழக்கம், இது தவிர இனிய இசை போன்ற பெண்களின் குரல்களும், அவர்களது சிலம்பின் ஒலியும் எங்கெங்கும் கேட்டுக் கொண்டிருக்கும்.

மரகதங்களும், மற்ற பல ரத்தினங்களும் பதிக்கப்பட்ட தேர்கள் தங்கும் தேர்ச்சாலைகள் கதிரவனைக் காட்டிலும் ஒளிவீசிக் காட்சி அளிப்பதாவது, ஸ்வர்க்கத்தைக்கூட இதோடு ஒப்பிட்டால் நரகம் என்று சொல்லத் தோன்றும். எந்தப் பக்கம் பார்த்தாலும் ஒளி வெள்ளம் வீசுகின்ற இந்த நகரத்தில், வெளிச்சம் பரவி நிற்பதால் கரிய நிறம் கொண்ட அரக்கர்களும்கூட தம் கரிய நிறத்தில் தோன்றாமல், வெண்மை நிறம் கொண்டவர்களைப் போன்று தோற்றமளித்தனர். மறு உள்ள சந்திரன்கூட மறு நீங்கி வெண்மையாகக் காணப்பட்டது.

சூரியன் இலங்கை மாநகரின் உயர்ந்த மதில்களைக் கடந்து செல்லுதல் அரிதான காரியம் என்பதால் அதனின்றும் விலகிப் போவதைக் கண்டவர்கள், இந்த நகரின் மீது போனால் இராவணன் கோபிப்பான் என்று ஒதுங்கிப் போவதாக முன்பு அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். இந்த நகருக்குள் சுழன்று வீசும் காற்றுகூட நுழைய முடியாது. சூரியனுடைய கதிர்கள் புகமுடியாது. தீயின் சுடர் புகாது; எனவே தேவர்கள் புகமாட்டார்கள். உலகம் அழிகின்ற ஊழிக் காலத்தில் இந்த நகரத்துள் தர்மம் புகவில்லையாதலால், இந்த நகரம் நிச்சயம் அழிந்து போகும்.

மேகங்கள் தவழ்கின்ற பெரிய அலைகள் ஒலிக்கின்ற கடலின் இடையே, வானளாவிய மாளிகைகள் ஒளிவீசுவதால், இந்த அணிநகர் திருமால் தன் உந்தியில் பெற்ற அண்டமான இரண்ய கர்ப்பத்தை ஒத்திருந்தது. இலங்கை மாநகர் வாழ் மக்களின் வாழவு எப்படி இருந்தது? பாடுபவர்கள் இங்கே பலர் என்றால், ஆடுபவர்கள் அவர்களிலும் அதிகம். இவர்களைக் காட்டிலும் பக்க வாத்தியங்கள் வாசிப்போர் இன்னும் அதிகம். இப்படி வீட்டுக்கு வீடு ஆட்டமும் பாட்டும் நிறைந்திருந்தது. இங்கு வீடுகள், கற்பகத் தோட்டம், சோலைகள் அனைத்திலும் கள் அருந்தி ஆடிப் பாடி மகிழ்பவர்கள்தான் அதிகமே தவிர, கவலையால் வருந்துபவர் என்று எவருமே இல்லை. அரக்கர்களுக்கு அரக்கியர் கொடுத்த மதுவைப் பருகி, அவர்கள் பாடிய பாடலை ரசித்துக் கேட்டனர். மகளிர் உதடுகளில் ஊறிவரும் அதரபானம் அருந்தி மகிழ்ந்தனர்; அவர்களது இனிய பேச்சைக் கேட்டு ரசித்தனர், ஊடல் கொண்டு பிணங்கிட பின்கூடலும் கொண்டனர். அரக்கியரின் இளம் மார்பில் பூசிய குங்குமக் குழம்பு அரக்கர்களின் கரிய உடல்களில் படிந்து கிடந்தன. ஊடலில் கண் சிவந்த அரக்கியரின் பாதங்களில் பூசப்பட்ட செங்குழம்பு, அரக்கர் தலை மயிரில் தெரியவில்லை. (ஊடலின் போது தலைவிகளின் காலில் தலைவைத்து தலைவன் வணங்குவான், ஆகையால் அவன் தலைமயிரில் அவள் பாதச் செங்குழம்பு பட்டு சிவப்பாக இருக்கும். இங்கு அரக்கனின் தலைமயிர் நிறமே சிவப்புதான், ஆகையால் அவன் தலைவியின் காலில் தலைவைத்தாலும் நிறவேறுபாடு தெரியவில்லை) அந்த நகரத்தில் ஒரு தெருவிலிருந்து மற்றொரு தெருவுக்குச் செல்லுதல் ஒரு நாடு விட்டு மற்றொரு நாடு செல்வது போல இருந்தது.

இங்கே உள்ள படைகளில் எது பெரியது என்று இராமனிடம் போய் சொல்லுவேன். விற்படை பெரியதா, வேல்படை பெரியதா, மல்யுத்த வீரர்கள் படை பெரியதா, வாட்போர் செய்யும் வீரர்களின் படை பெரியதா, பற்பல ஆயுதங்களைக் கொண்டு போரிடும் வீரர்படை பெரியதா, எந்தப் படை பெரிது என்று சொல்லுவேன். அவர்கள் பயன்படுத்திய பல ஆயுதங்களில் கப்பணம் என்று ஒன்று. இது முள்முள்ளாக அமைந்த இரும்புத் தடி. பிண்டிபாலம் என்பது எதிரி மீது வீசித் தாக்கும் ஓர் ஆயுதம்; தண்டு, தடி போன்றவை நேரடியாகத் தாக்கக் கூடிய ஆயுதங்கள்.

இலங்கையில் பகல் நேரம் முடிந்து இரவு நேரம் கவியத்தொடங்கியது. முற்பிறப்பில் செய்த நல்வினைப் பயனால், எல்லையற்ற செல்வம் பெற்றும் நன்கு ஆராய்ந்து செயல் புரியும் ஆற்றல் இல்லாதவனும், அறிஞர்களுடைய சொற்களைக் கேட்டு நடக்காதவனும், தான் பெற்ற அறிவுக்கேற்ப செயல் படாதவனும், உண்மை பேசாதவனுமான ஒருவன் செய்த பாவம் எனும்படியாக எல்லா புறங்களிலும் இருள் கவியத் தொடங்கியது. கொடிய போர்த்தொழிலை மேற்கொண்ட இராவணனின் ஏவலால் அரக்கர்கள் இந்திர லோகம் சென்றனர். அழகிய சந்திர மண்டலத்தையும் சென்றடைந்தனர். கோபமுள்ள கூற்றுவன் இருக்கும் இடத்துக்கும் சென்றனர். தேவலோகத்துப் பெண்கள், வித்யாதர மகளிர், நாக கன்னியர்கள், யக்ஷ பெண்கள், இலங்கையில் பணி மகளிராகத் தத்தம் பணிகளை முடித்துவிட்டு ஒருவரை யொருவர் முண்டியடித்துக் கொண்டு மின்னலைப் போல வான மார்க்கத்தில் செல்வார்கள்.

தேவர்களும், அவுணர்களும், நாகர்களும், யக்ஷர்களும், வேந்தர்களும் தத்தமது பணிமுடிந்து இருள் பிரியும்படி வான்வெளியில் செல்கின்றனர். இரவு நேரம் முழுமையாகக் கவிந்தது, நிலவும் தோன்றியது. "அதோ, இராம தூதன் வந்து விட்டான்; எந்தை இந்திரன் பிழைத்துக் கொள்வான் என்று மகிழ்ச்சியடைந்து கீழ்வானத்தில் நிலவு உதயமாகியது".

இந்திரனின் மகிழ்ச்சி வெளிப்படுவது போல சந்திரன் அவனது வெண்கொற்றக் குடை போலவும், கடலில் மெல்ல வீசும் அலைகள் கவரி வீசுவது போலவும் தோன்றியது. வானவர்கள் அனுமனை வாழ்த்தித் தூவிய பூமழையானது, இராவணனுக்கு பயந்து மண்மீது விழாமலும், திரும்பவும் மேலே செல்ல முடியாமலும் விண்ணிடை நிற்பது போல நட்சத்திரங்கள் ஒளிர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தன.

No comments:

Post a Comment

Please give your comments here