Monday, May 17, 2010

ii) Continued ...

"மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை "ராம" எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்".

பிறவி ஒவ்வொன்றுக்கும், முற்பிறவி, இப்பிறவி, இனி வரும் பிறவி எனும் மூவகை உண்டு. இந்த மும்மைப் பிறவிகளுக்கும் இடமாக இருக்கின்ற இந்தப் பூவுலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் மூலமந்திரமாய் இருப்பது எதுவோ; தன்னை 'நான் யார்?' என்ற கேள்வி கேட்டு அதற்கான உண்மையான பொருளை அறிந்து கொள்ளும் "அஹம் பிரம்மாஸ்மி" எனும் ஞானப் பொருளை; இனி பிறவியில்லை எனும் நிலையை இந்தப் பிறவியிலேயே தரக்கூடிய அருமருந்தனைய மந்திரச்சொல்லாகிய, "ராம" எனும் பெருமை மிக்க இரண்டு எழுத்தைத் தன் கண்களால் தெரியக் கண்டான்.

"ராம" என்ற அந்த இரண்டெழுத்து மந்திரத்தின் பெருமையை விளக்கக்கூடிய பல சான்றுகளைச் சொல்லலாம். எல்லா மந்திரங்களிலும் மூலாதாரமான மந்திரம் 'ராம' என்பது என்பதற்கு, சம்பாதி தான் இழந்து போன சிறகுகள் திரும்ப முளைக்க, கூடியிருந்த அனுமன் முதலான அனைவரையும் 'ராம' மந்திரத்தைச் சொல்லுங்கள் என்று சொல்ல வைத்து அதனால் தான் முன்பு இழந்த சிறகுகளை திரும்ப அடையப் பெற்றதாக இதே இராம காதையில் பின்னால் வருகிறது.

தன் மீது அம்பு செலுத்தியது இராமன் என்பதைத் தெரிந்து கொண்ட வாலிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இராமனா இந்தக் காரியத்தைச் செய்தான். அறத்தின் நாயகன், உலகில் தீவினைகளை அழித்து அறவழியில் வாழ்பவன் என்றெல்லாம், தாரையிடம் சொல்லி, அத்தகைய இராமனா சுக்ரீவனுக்குத் துணையாக வந்திருப்பான் என்று அவளைக் கடிந்து கோண்டேனே!

"இல்லறம் துறந்த நம்பி எம்மனோர்க்காகத் தங்கள்
வில்லறம் துறந்த வீரன் தோன்றலால் வேத நன்னூல்
சொல்லறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை
நல்லறம் துறந்தது என்னா நகை வர நாணுக் கொண்டான்".

தன் தந்தை கொடுத்த வரத்தைப் பயன்படுத்திச் சிற்றன்னை காட்டுக்குப் போகச் சொன்ன காரணத்தால், தனது இல்லற தர்மத்தைத் துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்ட புருஷோத்தமனான இராமன், கேவலம் குரங்கு இனத்தவராகிய எமக்காக, விற்போருக்கு என்று அமைந்துள்ள தர்மத்தை கைவிட்டு மறைந்து நின்று எம்மீது அம்பு எய்த இந்த இராமன் வந்து பிறந்த காரணத்தால், பெருமைக்குரிய சூரிய குலமும் தனது நல்லறத்தைத் துறந்து விட்டதே என்று வாலி எண்ணிக் கொண்டிருந்த போது, எப்பேற்பட்ட இராமன் தனது குலப் பெருமையையும், தனது விற்போர் தர்மத்தையும் குரங்கினத்தானாகிய தனக்காக கைவிட்டான் என்பதை நினைத்து வெட்கப்பட்டான்.

இராமன் செய்த காரியத்தினால் வாலிக்கு வெட்கம் ஏற்பட்டுத் தலை குனிகிறான்; அவன் செய்த காரியத்தை எண்ணி ஏளனமாகச் சிரிக்கிறான்; மறுபடி ஆழ்ந்த சிந்தனை வயப் படுகிறான்; இவன் இப்படிச் செய்யலாமா? இது தர்மமா? என்கிறான். பெரிய குழி ஒன்றில் விழுந்துவிட்ட யானை அந்த குழியை விட்டு வெளியேற வழிதெரியாமல் எப்படித் தவிக்குமோ அங்ஙனம் துன்பம் கொண்டு தவிக்கிறான் வாலி. இராமன் அரசன் அல்லவா? அவனே இப்படி நடுநிலை தவறலாமா? அதிலும் எம்மைப் போன்ற குரங்கு இனத்துக்காக இப்படி தவறு செய்யலாமா? என்று இப்படி வாலி சிந்தித்துக் கொண்டிருந்த போது இராமபிரான் அவன் முன்பாக வந்து தோன்றினான்.

வாலி முன்பாக வந்து நின்ற இராமனது தோற்றத்தை, கார் காலத்து மேகம் போன்ற மேனியும், தாமரை மலர் போன்ற ஒளிவீசும் முகத்தோடும், கையில் வில் ஏந்தி, தரைமேல் வருகின்ற காட்சியைக் கண்களால் கண்ட வாலி, மார்பில் இரத்தம் பொங்கி எழ, இராமனைக் கேட்கிறான், "என்ன நினைத்து இந்த காரியம் செய்தாய்? ஏன் செய்தாய்?"

"தாய் போன்ற அன்பும், வேதங்களைக் கற்று அதன் சாரங்களைப் புரிந்து கொண்டு, பிறரிடம் அன்பு பாராட்டி, தர்மத்தைக் கடைபிடித்து வந்த இராமா! சத்தியத்தையும், குல ஒழுக்கத்தையும் பழுதுபடாமல் காத்து அவற்றை நிலைநிறுத்துவதற்காகவே தனது உயிரையும் ஈந்த வள்ளல் தசரத சக்கரவர்த்தியின் மைந்தா! நீ எப்படி பரதனுக்கு அண்ணனாக வந்து பிறந்தாய்? பிறருக்கு வரக்கூடிய தீமைகளையெல்லாம் விலக்கிவிட்டு, தானே அந்தத் தீமையை செய்தால், அது தீமை இல்லாமல் போய்விடுமா? உன் குலம் சூரிய குலம், இக்ஷுவாகு வம்சம், ரகுகுலம் என்றெல்லாம் உலகமே பெருமைப் படக்கூடிய குலம். நீ கல்வி கற்றதோ மகாமுனிவர் வசிஷ்டரிடமும், கோசிக முனிவரிடமும். அவர்களிடம் கற்ற கல்வியின் மேன்மையை நீ காக்க மறந்து போனாயோ? ஓவியத்தில் கூட எழுத முடியாத பேரழகு வாய்த்த இராமா! உனது உயிருக்கு உயிரான உன் மனைவி ஜானகியை, ஜனக மகாராஜன் பெற்ற அன்னம் போன்றவளை, அமிழ்தத்தில் பிறந்த அன்னையைப் பிரிந்த பிறகு உன் அறிவு பிசகிப் போய் என்ன செய்கிறோம் என்பதை அறியவில்லை போலும்!"

"ஓர் அரக்கன் உனக்குப் பெரும் தீங்கிழைத்து விட்டான் என்பதற்காக, ஒரு குரங்கினத்து அரசனைக் கொல்லலாம் என்று நீ கற்ற அந்த மனுநீதி கூறுகிறதோ? அன்புக்கும் இரக்கத்துக்கும் பெயர் பெற்ற இராமா! உன் மனதிலுள்ள இரக்கத்தை எப்போது நீத்தாய்? நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன், என்மீது என்ன பிழை கண்டாய்? இத்தகைய பாவச் செயலை நீ செய்தாயானால், புகழை வேறு யார்தான் பெறுவார்கள்."

அரக்கனாகிய இராவணன் சீதையைக் கவர்ந்து சென்று இராமனுக்குப் பெரும் தீங்கு செய்துவிட்டான் என்பதை வாலி தெரிந்து வைத்திருந்தான் என்பது அவனது கூற்றின் மூலம் தெரியவருகிறது. அப்படியானால் அந்த தீங்கைத் தடுக்காமல் போனதுகூட, இராவணனுடைய செயலை வாலியும் சம்மதத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் என்றும் கொள்ளலாமல்லவா?

வாலி மேலும் பேசுகிறான். "மலைகளிலும், மரங்களிலும் ஊர்ந்து திரிகின்ற வானரங்களுக்கு, கலிகாலத்துக்கு உரிய கேடுகள் வந்து சேர்ந்தன போலிருக்கிறது. மேன்மையான குணங்களும், நல்ல நடத்தைகளும் உயர்ந்தோர்களுக்குத் தேவையில்லை, வலிமை குன்றியவர்களுக்குத்தான் அவைகள் என்று மாறிப் போயிற்றோ? வலியவர்கள் இழிதொழிலைச் செய்வாராகில் அவர்களுக்கு நிந்தனை இன்றி புகழைத் தரக்கூடியதோ?"

"துணை எதுவும் இல்லாமல் தனியனாக நீயே எதையும் சாதிக்க வல்ல திறனுடைய வேந்தனே! உன் தந்தையிடமிருந்து உனக்குக் கிடைத்த அரிய செல்வத்தை உனது தம்பிக்குக் கொடுத்து விட்டு காட்டுக்கு வந்தபோது நாட்டிலே மரபுக்கு மாறான ஒரு காரியத்தைச் செய்தாய்; இங்கே காட்டுக்கு வந்த இடத்தில் என்னை வீழ்த்திவிட்டு என் தம்பிக்கு நாட்டைக் கொடுத்து இங்கே காட்டிலும் மரபுக்கு மாறான ஒரு காரியத்தைச் செய்தாய். இதனினும் சிறந்த செயல் வேறு யாதேனும் இருக்கிறதா என்ன?"

"வீரக்கழலணிந்த இராமா! ஆண்மைக்குரிய செயலைச் செய்வதுதான் வீரர்களுக்கு அழகு அல்லவா? கற்றறிந்த மேலோனான நீ! எனக்கு இத்தகைய தீங்கைச் செய்தாய் என்றால், தீங்கு புரிவதையே தொழிலாகக் கொண்ட இலங்கை அரசன் இராவணன் முறையற்ற செயலைச் செய்தான் என்று கோபப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது? அவன் மீது குற்றம் காணும் உரிமை உனக்கு இல்லாமல் போய்விட்டதே!"

"இரண்டு பேர் ஒருவரோடொருவர் எதிர் எதிரே போரிடுகின்றபோது, அவ்விருவரில் ஒருவன் மீது கருணை கொண்டு மற்றொருவன் மீது மறைந்து நின்று வில் எடுத்து அம்பைச் செலுத்தி, அவன் உயிரைக் கொல்வதற்குப் பெயர்தான் தர்மமா? அல்லது அதர்மமா? நீ செய்த காரியத்தை என்னவென்று சொல்வது?"

"நீ செய்த காரியம் வீரம் உடையதல்ல! யுத்த தர்மத்தின் நெறிகளுக்கு உட்பட்டதும் அல்ல! உண்மையின் எல்லைக்குள் இருப்பதும் அன்று! இந்த பூமிக்கு என் உடல் பாரமாய் இருக்கிறதா? இல்லையே! நான் என்ன உனக்கு விரோதியா? இல்லையே! உனது மேன்மை குணம் நீங்கி, இதயத்தில் இரக்கமும் இல்லாமல் இப்படியொரு காரியத்தை எதற்காகச் செய்தாய்?"

"இருவருக்குள் ஒரு பிரச்சினை என்றால், அவ்விருவருக்கும் பொதுவாக இருந்து நடுநிலை தவறாமல், எது நியாயமோ, அதன்படி நீதி வழங்குதல்தான் பெருமை தரக்கூடியது. அப்படியில்லாமல் ஒருதலைச் சார்பாக தான் விரும்பும் ஒருவனுக்குச் சாதகமாக நீர்ப்பு வழங்குதல் முறையான செயலா?".

"உன் சொந்த வாழ்வில் புகுந்து, தீமையான செயலைச் செய்த ஒருவனை அழிக்க வேண்டும் என்பதற்காக, வேறொருவன் துணையை நாடி உதவி பெறவேண்டுமென்றால், யானை இருக்க ஒரு முயலின் துணையை யாராவது நாடுவார்களா?"

"வானத்தில் ஒளி வீசும் சந்திரனுக்குத் தான் கருமையான ஒரு களங்கம் உண்டு. நீயோ, உன்னுடைய குலத்துக்கு முதல்வனான சூரியகுலத்தாருக்கோ, ஒரு களங்கமும் இல்லாமல் இருந்தது. இன்று நீ அதற்கொரு களங்கத்தை உண்டாக்கி விட்டாய்!"

"என் தம்பி சுக்ரீவன் என்னை போருக்குக் கூவி அழைத்தான். அவனோடு போரிடுவதற்கு நான் வெளிyஏ வந்து, அவனோடு போரிட்டுக் கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து, நீ ஒளிந்திருந்து என் மீது அம்பு விட்டுக் கொன்று என்னை இப்படி பூமியில் விழுந்து கிடக்குமாறு செய்துவிட்டு, போரில் வென்றுவிட்ட சிங்கத்தைப் போல பெருமையோடு நிமிருந்து நிற்கிறாயே! வெட்கமாக இல்லை?".

"நீ கற்ற அற நூல்களில் கூறப்படும் நெறிகளின்படியும் நடக்கவில்லை. உங்கள் குல முன்னோர்கள் போற்றிக் காப்பாற்றிய சீலம், ஒழுக்கத்தின்படியும் நடந்து கொள்ளவில்லை. நீ வாலியைக் கொல்ல வில்லை, அரச தர்மத்தின் வேலியைக் கொன்று விட்டாய்! உனது மனைவியை வேறொருவன் கவர்ந்து சென்று விட, நீ கையில் வில்லை ஏந்திருப்பதே, உன் வீரத்துக்கு இழுக்கு. மேலும் நேருக்கு நேர் நின்று என்னோடு போர் செய்யாமல் மறைந்து நின்று என் மீது அம்பு விட்ட வீரத்துக்காகவா உன்னை எல்லோரும் வில்வித்தையில் வல்லவன் என்று பெருமையாகப் பேசுகிறார்கள்?"

இப்படியாகத் தான் சுக்ரீவனுடன் போரிடும்போது எதிர்பாராத விதமாக மறைந்து நின்று தன் மார்பில் பாணத்தை விட்டு வீழ்த்திய இராமன் மீது கடுங்கோபம் கொண்டு, பற்களைப் பொடியாகும்படி கடித்துக் கொண்டு, கண்களில் தீச்சுடர் எழ, இப்படி இராமனைக் கேள்விக் கணைகளால் தொளைத்தெடுத்ததும், இராமன் அவனுக்கு பதில் சொல்லத் தொடங்கினான்.

இராமன் சொல்கிறான், "வாலி! முன்பு மாயாவியோடு போரிட்டபடி பிலத்துக்குள் நுழைந்தாயல்லவா? நீண்ட நாட்களாகியும் நீ வெளிவரவில்லை என்பதனால் வருத்தமடைந்து, தானும் பிலத்தினுள் வந்து உன்னைத் தேட விரும்பினான் சுக்ரீவன். ஆனால் உங்கள் குலப் பெரியவர்கள் அவனைத் தடுத்து, நீயும் போய்விட்டால் வானரர்களை யார் காப்பாற்றுவது, நீ அரசனாக முடிசூட்டிக் கொள்ள வேண்டுமென்று கட்டாயப் படுத்தினார்கள். ஆனால் சுக்ரீவன் என்ன சொன்னான் தெரியுமா? என் அண்ணன் வாலியை அந்த மாயாவி கொன்றிருந்தால், அவனையும், அவன் குலத்தையும் பூண்டோடு அழித்தொழித்து விட்டு, நானும் உயிரை மாய்த்துக் கொள்வேன். இந்த அரச பதவியை ஏற்க மாட்டேன், நீங்கள் கூறும் ஆலோசனை ஏற்கக்கூடியதல்ல என்றான்."

"அப்படியும் கேளாமல் வானர வீரர்களும் படைத் தலைவர்களும், முற்றுமுணர்ந்த பெரியோர்களும் அவனைப் பிலத்துக்குள் செல்லாமல் தடுத்து 'நீ இல்லையேல் வானர குலம் அழிந்து விடும்' என்று வற்புறுத்தியும்கூட, அவன் முடிசூட்டிக் கொள்ள சம்மதிக்கவில்லை. பிறகு மாயாவியைக் கொன்று விட்டு நீ திரும்ப வந்ததும், அவன் வந்து உன்னை வணங்கி, எந்தையே, நம் இனத்தவர் வற்புறுத்தி எனக்களித்த அரசுரிமையை நான் ஏற்கவில்லை. இந்த அரசு உன் அரசு. நீதான் ஆட்சி செய்ய வேண்டுமென்று உன்னிடமே தந்து விட்டான். ஆனாலும் அவன் சொற்களை நீ ஏற்காமல் அவன் மீது ஆத்திரம் கொண்டு, அவனைக் கொல்லத் துணிந்தாய். அவன் மீது எந்தத் தவறும் இல்லை என்று தெரிந்தும் அவன் மீது நீ கருணை காட்டவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை, என்னை துன்புறுத்தாதே, என்னைத் தண்டிக்காதே என்று அவன் எவ்வளவு வேண்டியும் நீ ஏற்றுக் கொள்ளவுமில்லை, கருணை காட்டவுமில்லை".

"உன் வலிமைக்கு எதிராகப் போரிட வலிமை இல்லாதவன் நான் தோற்றவனாகவே ஆவேன் என்று அவன் உன்னிடம் கெஞ்சியபோதும் நீ அவனை விடவில்லை. கையெடுத்து உன்னைக் கும்பிட்டு சரணாகதி அடைந்தவனை நீ கொல்லத் துணிந்தாய். அதனால் அவன் ஓடி உயிர் பிழைத்து ஒளிந்து கொண்டான்."

"அவன் தவறு செய்யாதவன் என்று அறிந்து கொண்டு அவனிடம் நீ இரக்கம் காட்டவில்லை. அவன் உன் சொந்த தம்பி என்பதையும் கருதவில்லை. மதங்க முனிவரின் சாபத்தால் உன்னால் போகமுடியாத அந்த மலையில் போய் இவன் ஓளிந்து கொண்டதால் நீ அங்கு போகவில்லை. பிறன் ஒருவனது மனைவி என்பது தெரிந்து அவன் மனைவியை வலிமையால் கவர்ந்து கொள்வதென்பது எத்தகைய ஈனச் செயல்? மனதில் ஈரம் உள்லவன் இந்தக் காரியத்தைச் செய்வானா? அன்பும் இரக்கமும் உள்லவன் இப்படிச் செய்வானா? வீரம் உள்ளவன் செய்யக் கூடிய காரியமா? கல்வி கற்று நன்னெறி உணர்ந்தவன் செய்யக்கூடிய காரியமா இது? பிறன் மனை கவர்தல் என்பது யாவர் செயல்?".

"புனிதமான இல் வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள பெண்களிடம், நாம் வலிமையுடையவன் என்பதால் முறைதவறி நடந்து கொள்ளுதலும், மனசாட்சிக்கு மாறாகத் தவறு செய்தலும், நம்மைவிட வலிமை குறைந்தவன் என்பது தெரிந்திருந்தும் அவர்களை வம்புக்கு இழுத்து துன்புறுத்துவதும் தருமத்துக்கு மாறுபட்ட செயல்களாகும். தர்மம் இன்னது என்று அறியும் ஆற்றலும், இம்மைக்கும் மறுமைக்கும் எது நல்வழி என உணரும் ஆற்றலும் இருந்திருந்தால், உன் தம்பியின் மனைவியை அபகரித்து அதர்ம வழியில் சென்று ஆற்றாத பழியை ஏற்றிருப்பாயோ?".

"தவறு செய்யாத தம்பியைத் தண்டித்தது, உன்னையே அடைக்கலம் என்று அடைந்தவனைக் கொல்ல முயன்றது, அறத்துக்குப் புறபாக உன் தம்பியின் மனைவியைக் கவர்ந்தது ஆகிய காரணங்களாலும், சுக்ரீவன் எனது உயிருக்கு உயிரான நண்பன் என்பதாலும், நான் உன்னை பயிருக்கு இடையே வளரும் களையை எடுப்பது போல எடுத்தொழித்தேன். அதுமட்டுமல்ல, குற்றமற்றவர்களையும் எளியோரையும் அவர்களுக்குத் துன்பம் நேரும் போது காப்பதும் என் கடமையும் கோட்பாடுமாகும்." இப்படி வாலி செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டி இராமன் பேசுகிறான்.

இராமனது குற்றச்சாட்டுகளைக் கேட்டுக் கொண்ட வாலி சொல்கிறான், "இராமா! நீ இதுவரை சொல்லிவந்த தர்மங்களும், வாழ்க்கை நெறிமுறைகளும் மனிதர்களாகிய உங்களுக்குப் பொருந்துவன. ஆனால் நாங்கள் வானரங்கள். உங்களது தர்மங்கள் எப்படி எங்களுக்கும் பொருந்துவனவாகும்? நாங்கள் விரும்பியபடி வாழ்வதே எங்களது தர்மம் என்பதை நீ தெரிந்துகொள்ள வில்லையா? ஐயா! உங்கள் மனித ஜாதியாருக்குத் திருமணம், கணவன், மனைவி என்ற புனிதமான நெறிமுறைகளை ஆன்றோர்கள் வகுத்து வைத்திருக்கின்றனர். ஆனால் எங்களுக்கு அப்படிப்பட்ட நெறிமுறைகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை. வானரங்கள் நேர்ந்தபோது சேர்வது என்பதை பிரமன் எங்களுக்கென்று ஆக்கிவைத்தான்".

"எங்களுக்கு மனம் போனபடி வாழ்கின்ற முறையும், குணமும் அமைந்தன. வேத நெறியும், கற்பு நிலையும் வானரர்களுக்குக் கிடையாது. வானரர்களின் குண விசேஷங்களும், மனிதர்களின் குணங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எனவே எங்கள் பிறப்புக்குரிய தன்மைகளின்படி, நான் யாதொரு குற்றமும் செய்தவனல்லேன். இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்" என்று வாலி கூறினான்.

வாலியின் இந்த பதிலைக் கேட்டு இராமன் கூறுகிறான், "வாலி! நீ தேவர்களைப் போல பிறந்து, அறங்களையும், சாத்திரங்களையும் நன்கு கற்று, நீதிகளை உணர்ந்தவன். ஆதலின் உன்னை மிருக இனமாகக் கருத முடியாது. மனிதரிலும் மேம்பட்ட சிந்தனைகளும், செயலும் உடைய நீ கூறுகின்ற சமாதானம் ஏற்கக்கூடியவை அல்ல. எல்லா உயிர்களுக்கும் ஐம்பொறிகள் உண்டு. அவை பொதுவானவை. புலன் அறிவு என்பது அந்தந்த உயிர்களின் உயர்வுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது. நீ அறிவில் சிறந்து விளங்குபவன். அறநெறிகளின் சிறப்பையும், தன்மைகளையும் நன்கு உணர்ந்தவன், அப்படிப்பட்ட நீ செய்த குற்றத்தை, உன்னை வானரம் என்று கூறிக் கொண்டு தவறிழைத்தல் தகுடியுடையது அல்ல".

"தன் காலை ஓர் முதலை பற்றியிழுக்க, உயிர் பிழைக்க வேண்டி அந்தத் திருமாலை வேண்டி கூவி அழைத்து, வீடுபேறு பெற்ற கஜேந்திரனை சாமானியமான மிருகம் என்று நினைத்துவிடலாமோ? சீதாபிராட்டியை இராவணன் கவர்ந்து செல்லும்போது, அதனைக் கண்டு எதிர்த்து அவனுடன் போரிட்டு மாண்டுபோன கழுகரசன் ஜடாயு, நல்லறத்தில் சிந்தையுடையவன் ஆதலால் அநீதியைக் கண்டு பொறுக்காமல் அந்த இராவணனை எதிர்த்துப் போரிட்டு மாளவில்லையா? அவனை பறவை இனம் என்று எண்ணிவிடலாமோ?".

"நல்லது எது, தீயது எது என்று பகுத்து உணர்கிற நல்லறிவு இல்லாமல் வாழ்வதல்லவோ மிருக இயல்பு. நீ உலகிலுள்ள நன் மார்க்கங்கள் அனைத்தையும் கசடற கற்றுணர்ந்தவன் என்பதும் உனக்குத் தெரியாத நீதிநெறிமுறைகள் எதுவும் இல்லை என்பதும், உன் பேச்சில் தெளிவாகத் தெரிகிறதே!. நீ உருவத்தில் வேண்டுமானால் விலங்காக இருக்கலாம், ஆனால் அறிவினாலும், செயல்களாலும் மானுடன் ஆவாய்". விலங்குகளாய் பிறந்திருந்தாலும், அறிவும், ஒழுக்கமும் உடையவராயிருந்தால் அவர்கள் தேவர்களுக்குச் சமமாகக் கருதப்படுவார்கள். அதுபோலவே, மானுடர்களாகப் பிறந்து, மேற்சொன்ன குணாதிசயங்கள் இல்லாமல் போகுமானால் அவர்கள் மிருகங்களாக எண்ணத் தக்கவர்களே!. எமனுடைய ஆற்றலைக் கடிந்து, மார்க்கண்டேயனுக்கு வாழ்வளித்த சிவபெருமானை நீ பக்தியோடு வழிபாடு செய்து வேண்டிக்கொண்டதின் பயனாக, அவன் அருளால் நான்கு பூதங்களான காற்று, தீ, நீர், பூமி என்பனவற்றின் ஆற்றலைப் பெற்றிருக்கிறாய்."

"பிறப்பால் உயர்ந்தவர்கள் தீமை புரிவதும், இழிந்த பிறப்பாளர்கள் அறநெறியில் நிற்றலும் உலகில் சாதாரணமாக நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள்தான். அது உலகத்தின் இயற்கை. ஆகவேதான் பிறப்பால் விலங்கு என்று உன் தவறுகளை நியாயப் படுத்துவது சரியல்ல".

"ஒருவரது மேன்மையும், கீழ்மையும் அவரவர் செய்த வினைப் பயன்களால் அமைவது. இந்த உண்மைகளை நீ நன்கு அறிந்திருந்தும் பாவங்களில் எல்லாம் கொடிய பாவமான பிறன்மனை நயத்தல் எனும் கொடும் பாவத்தைச் செய்திருக்கிறாய். அதனால், நான் உன்னை அம்பு எய்து கொன்றது அறத்தை நிலை நிறுத்துவதற்காகவே என்பதை உணர்ந்து கொள்" என்று இராமன் கூறினான்.

இராமனுடைய சொற்களைக் கேட்ட வாலி சொல்கிறான், "ஆன்ற செவ்வியோய்! நீ கூறிய அனைத்தும் உண்மையே ஆகட்டும். ஆனால் போர்க்களத்தில் நேருக்கு நேர் நின்று போரிட வராமல், காட்டில் விலங்குகளை மறைந்து நின்று கொல்லும் வேடனைப் போல என்மேல் ஒளிந்து நின்று அம்பு எய்தது என்ன நியாயம்? சொல்!" என்றான்.

இதற்கு இராமன் பதில் சொல்லவில்லை, இளவல் இலக்குவன் இடையில் புகுந்து பதில் கூறுகிறான்: "முதலில் உன் தம்பி சுக்ரீவன் வந்து இராமனிடம் சரணாகதி என்று அடைக்கலம் புகுந்தான். முறைதவறி நடந்து கொண்ட உன்னைக் கொல்வேன் என்று சுக்ரீவனிடம் இராமபிரான் வாக்குக் கொடுத்தார். தீமைகளை அழித்து அறத்தை நிலைநாட்டவே இராமன் உறுதி பூண்டவர் என்பதும், அறத்துக்குப் புறம்பான எதையும் அவர் செய்யமாட்டார் என்பதையும் அடைக்கலம் என்று வந்தவரைக் காப்பதே தனது தலையாய கடனாகக் கொண்டவர் என்பதையும் நீ உணர்ந்து கொள்ள வேண்டும். உன்னோடு நேருக்கு நேர் நின்று போர் செய்ய இராமன் வந்தால், நீயும் இராமனிடம் சரணடைந்து விட்டால், தனது வாக்குறுதியிலிருந்து மாறுபட நேருமென்பதால், சுக்ரீவனுக்களித்த வாக்குறுதிப்படி உன்னை மறைந்திருந்து கொன்றார்" என்றான்.

கவிக்குல அரசான வாலியும் இலக்குவனின் இந்த மொழிகளைக் கேட்டான். கோபம் தணிந்து அமைதியடைந்தான். இராமபிரான் அறத்துக்குப் புறம்பான காரியங்களைச் செய்ய மாட்டான். அதர்மத்தை அழித்து அறத்தை நிலைநாட்ட வந்த பெருமான் என்று உணர்ந்து, தான் வீழ்ந்து கிடந்த நிலையிலும், தன் தலை நாய்த்து இராமனை வணங்கினான். இலக்குவன் கூறிய மொழிகளால் இராமனைப் பரம்பொருள் என்று வாலி உணர்ந்து கொண்டான். வாலி "சிறியன சிந்தியாதான்". உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவன். அற்பத்தனமில்லாத பெருந்தகையாளன். இராமன் பரம்பொருள் என்பதையும், தான் தகவில்லா காரியங்களைச் செய்தமையால் தண்டித்தான் என்பதையும் தெரிந்து கொண்டு இராமனிடம் வேண்டுகிறான்.

"தாயென உயிர்க்கு நல்கி தருமமும் தகவும் சார்வும்
நீயென நின்ற நம்ப நெறியினில் நோக்கும் நேர்மை
நாயென நின்ற எம்பால் நவை உறல் உணரலாமே
தீயன பொறுத்தி என்றான் "சிறியன சிந்தியாதான்".

"இராமா! அனைத்து உயிர்களிடத்தும் தாய்போன்ற கருணையும், தருமமும், நடுநிலைமையும் பற்றுக்கோடாய் கொண்ட பெரியோய்! எல்லா செயல்களையும் உயர்ந்த நெறிகளின்படி நின்று பார்க்கின்ற நின் சிறப்பை என் மனதில் கொண்டேன். நாய் போன்ற இழிநிலையில் இருக்கும் என் போன்றோரிடத்துள்ள குற்றங்களை பொருத்தருள்வாயாக!" என்று இரந்து கேட்டுக் கொண்டான் வாலி.

"எந்தையே! பிறவிப் பிணிக்கு மருந்தாக வந்த ஐயா! விரும்பிய வரம் தரும் வள்ளலே! எதையும் ஆராய்ந்தறியாமல் குரங்காகிய நான், உன்னை நிந்தித்துப் பேசியவற்றை மனதில் கொள்ள வேண்டாம்" என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து பேசுகிறான். "அண்ணலே! உனது கூரிய அம்பை என் நெஞ்சிலே பாய்ச்சி, நாயேனாகிய எனது உயிர் போகும் தருவாயில் நல்லறிவு தந்து அருளினாய். ஐயனே! முதல் மூவரும் நீ! ஆதி காரணமான முதல்வனும் நீ! முற்றும் நீ! மற்றும் நீ! பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீயே!".

மாயை எனும் திரை அவன் மனதி விட்டு நீங்கிய பின்னர், வாலி பரம்பொருள் இராமன் என்பதை உணர்ந்தவனாகி இறக்கும் தருவாயில் பூரண ஞானம் பெற்றுத் திகழ்ந்தான். வாலி மீண்டும் பேசுகிறான். "ஓவிய உருவத்தோனே! இராமா! எளியேனாகிய நான் உன்னிடம் கேட்கும் வரம் ஒன்று உண்டு. இராமா! என் தம்பிக்கு ஒரு பழக்கம் உண்டு. அந்தப் பழக்கத்தின் காரணமாக கள்ளை உண்டு புத்தி மாறுபாடு அடைந்து ஏதேனும் உன்னிடம் தவறு செய்வானானால், அவனைக் கோபித்து என்மீது ஏவிய இந்த கொடிய அம்பை அவன் மீது ஏவிவிடாதே!" என்று கேட்டுக் கொண்டான்.

"தக்கோய்! இராமா! நான் தங்களிடம் வேண்டும் மற்றொரு வரமும் உண்டு. கேட்பாயாக! உன்னுடைய தம்பிமார்கள் உன்னிடம் எத்துணை அன்பும், பாசமும் கொண்டுள்ளனர் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் ஒருக்கால் என் தம்பி சுக்ரீவனை இவன் தன் சொந்த அண்ணனையே கொல்லுவித்தவன் என்று இகழாமல் பார்த்துக் கொள். ஏன் தெரியுமா? நீ இவனோடு நட்பு கொள்ளும்போது, இவன் குறையை முடித்த பின்பு, உனது வேலைகளை செய்து முடிக்க இவன் இருக்க வேண்டுமல்லவா?".

"கொற்றவ! தீச்செயலை செய்த அந்த இராவணனை என் வாலினால் சுற்றிப் பிணைத்து உன் வசம் கொண்டு வந்து நிறுத்தி குரங்கின் வலிமை இத்தகையது என்று காட்டத் தவறிவிட்டேன். இனி பேசி என்ன பயன்?. இதோ இருக்கிறானே அனுமன். இவனை சாதாரணமாக எண்ணிவிடாதே. இந்த வேலையை செய்து முடி என்று நீ கட்டளையிட்டால் போதும், செய்து முடிக்கும் வல்லமை படைத்தவன் இவன். ஆழி ஐய! இந்த அனுமனை நின் கையிலுள்ள கோதண்டமாகிய வில் என்றே கருதிக் கொள். என் தம்பி சுக்ரீவனை இனி உன் தம்பியாக நினைத்துக் கொள். இவர்களிலும் உயர்ந்த துணை உனக்குக் கிடைத்தல் அரிது. இவர்களது உதவி கொண்டு சீதையைக் கண்டுபிடித்து மீட்டுக் கொண்டு வா" என்றான் வாலி.

பிறகு பின்னால் நின்றுகொண்டிருந்த சுக்ரீவனை அருகில் அழைத்து அன்போடு அவனைக் கட்டித் தழுவிக்கொண்டு, "மைந்தா! குன்றினும் உயர்ந்த தோளாய்! உனக்கு நான் ஒன்று சொல்ல வேண்டும். அதனை நன்கு உணர்ந்து ஏற்றுக் கொள். வருந்தாதே!. வேதங்களும் முனிவர்களும், பிரமனும் தேர்ந்த முடிவாயுள்லதான, பரம்பொருள் இன்று மனித உருவம் தாங்கி கையில் வில்லினை ஏந்திக் கொண்டு பூமியில் அறநெறியை நிலைநிறுத்த வந்திருக்கிறது, இந்த இராமன் உருவில் என்பதைப் புரிந்து கொள்."

"அப்படிப்பட்ட இராமனுக்கு துணை புரியும் பாக்கியத்தை நீ பெற்றிருப்பதே பெரும் பாக்கியம். இம்மைக்கும், மறுமைக்கும் நற்பயன்களைப் பெற்றிருக்கிறாய். இனி சொல்ல என்ன இருக்கிறது. திருமகளைத் தன் மார்பில் கொண்ட இராமனது ஏவல்களை, மனதை ஒருமுகப்படுத்தி செய்து முடி! மூவுலகத்திலும் நீ நல்ல கதியடைவாய்!" என்று தம்பிக்குப் பல புத்திமதிகளை வாலி வழங்கினான்.

பிறகு வாலி தன் தம்பியையும் மற்றவர்களையும் அருகில் அழைத்து வைத்துக் கொண்டு, இராமனிடம், "சக்கரவர்த்தித் திருமகனே! இதோ என் தம்பி சுக்ரீவனும் இவனது சுற்றமும் இனி உனது அடைக்கலம்" என்று சொல்லிவிட்டுத் தன் இரு கரங்களையும் தலைக்கு மேலே தூக்கிக் கூப்பி இராமனை வணங்கினான்.

தனது மகன் அங்கதனை உடனே அழைத்து வருமாறு பணித்து ஆட்களை அனுப்பினான். அவ்வண்ணமே அங்கதனை அந்த இடத்திற்கு அழைத்து வந்தனர். வந்த இடத்தில் தனது தந்தை வாலி, இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதைக் கண்டு அவன் மீது விழுந்து புரண்டு அழுதான். துக்கம் மேலிட்டு சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் வாலியின் மீது விழுந்து அழுது கொண்டிருந்தான். பிறகு எழுந்து கதறுகிறான்.

No comments:

Post a Comment

Please give your comments here