Monday, May 17, 2010
i) தொடர்ச்சி ...
"அவ்வழி அனுமனும் அணுகலாம் வழி
எவ்வழி என்பதை உணர்வில் எண்ணினான்
செவ்வழி ஒதுங்கினன் தேவர் ஏத்தப் போய்
வெவ்வழி அரக்கர் ஊர் மேவல் மேயினான்".
இலங்கை நகரம் அவனுக்குப் புதிய இடம். எந்த வழியில் போகலாம் என்பதையெல்லாம், அவனது உணர்வு வழிகாட்ட அவன் அந்த நகரத்துக்குள் நுழைந்து போகலானான். ஊழிக் காலத்தில் கடல் பொங்கி உலகெலாம் அழியும் நேரத்திலும் அழியாத இலங்கை மாநகரின் கோட்டை மதிற்சுவரைச் சென்றடைந்தான் அனுமன். இராவணனுக்குப் பயந்து கதிரவன் இலங்கை நகரைத் தாண்டிச் செல்வதில்லை என்பதுகூட சரியில்லை. இந்த மதிலைத் தாண்டுவது அரிது என்பதால்தான் கதிரவன் இலங்கையைத் தாண்டிச் செல்வதில்லை என்பதுதான் சரி. வலிய சிங்கத்தையும், ஆண் யானையையும் ஒத்த வலியனான அனுமன் தன்னந்தனியனாக அந்த கொடியவன் இராவணனின் கோட்டை வாயிலுக்கு வந்து சேர்ந்தான்.
அந்தக் கோட்டையை முன்னூறு வெள்ளம் படைவீரர்கள் இருபுறங்களிலும் நின்று காவல் புரிகின்றனர். கூரிய கோரைப் பற்களும், கையில் வாளும் ஏந்திக் கொண்டு அரக்கர்கள் காவல் நிற்கும் காட்சியை அனுமன் கண்டான். இந்த அரக்கர்களோடு போரிடுவதால், தாம் மேற்கொண்ட கருத்தும், நேரமும் பாழ்பட்டு போகும் என்று எண்ணியவனாய் அனுமன், இவ்வளவு காவலைக் கடந்து நேர்வழியில் உள்ளே நுழைவது இயலாது என்பது கருதி, வானரங்களுக்கே உரிய முறையில் மதில்மீதும் மரங்கள் மீதும் ஏறி உள்ளே நுழைவதென்று தீர்மானித்தான். அப்படி அனுமன் செல்லும் பாதையில் இலங்கையைக் காவல் செய்யும் இலங்காதேவி என்பவள் வந்து அவன் எதிரே நின்றாள். நான்கு முகங்களும்,எட்டுக் கரங்களும், சிவந்த கண்களும், வானை முட்டும் நெடிய உருவமும் கொண்டவள் அவல். நாலா திசைகளையும் திரும்பப் பார்த்துக் கொண்டு காவல் இருப்பவள். அவள் தோற்றமே அச்சம் தருவதாக இருந்தது. வேல், வாள், சூலம், கதை, பாசம், சங்கு, வில், அம்பு ஆகிய ஆயுதங்களைத் தன் எட்டு கரங்களிலும் ஏந்திக் கொண்டு நின்றாள். அனுமன் மதில் மீது வருவதைக் கண்டு அவள் "நில்! நில்!" என்று கத்திக் கொண்டு அவனிடம் ஓடிவந்தாள். மாருதியும் அவளை "வா! வா!" என்று கூறி வரவேற்றான். என்ன இருந்தாலும் வானர வடிவமல்லவா, அதன்படி அனுமன் அவளை வம்புக்கிழுத்தான்.
"யாரடா நீ! கேவலம் நீ ஒரு குரங்கு. உன்னிடம் கோபம் கொள்ளுதல் கூடாது, என்றாலும் என்ன தைரியம் உனக்கு? எவரும் செய்ய அஞ்சும் காரியத்தை நீ செய்யத் துணிந்தாய். இத்தனை பேர் காவல் இருப்பதைக் கண்டு, நீ அஞ்சவில்லையா? மதிலைத் தாண்டி உள்ளே வராதே, ஓடிப்போ!" என்றாள்.
அனுமனுக்குக் கோபம் வந்துவிட்டது. என்றாலும் அறிவாளியான அவன் கோபத்தை அடக்கிக் கொண்டு, "எனக்கு இந்த ஊரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை. அதனால் பார்க்கலாம் என்று வந்தேன். எளியவனான நான் இங்கு வருவதால் என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது?" என்றான்.
"ஓடிப்போ என்று நான் சொன்ன பிறகும் போகாமல் எதிர்வாதம் செய்து கொண்டா நிற்கிறாய். அடேய்! நீ யார்? முப்புரமும் எரித்த சிவபெருமானே இங்கே வர அஞ்சுவாரே, நீ எப்படி வரத் துணிந்தாய்? இதெல்லாம் உன்போன்றோர் வரக்கூடிய இடம் இல்லை. பதில் பேசாமல் ஓடிப் போய்விடு" என்று சொல்லிவிட்டு எகத்தாளமாகச் சிரித்தாள். சிரிக்கும் அரக்கியைப் பார்த்து அனுமன் மனத்துக்குள் சிரித்துக் கொண்டான். அவள் மறுபடி கேட்டாள், "யார் சொல்லி நீ இங்கு வந்தாய்? உன்னை அடித்துக் கொன்றாலொழிய நீ இங்கிருந்து போகமாட்டாய் போல இருக்கிறதே" என்றாள்.
"நான் இந்த ஊருக்குள் போகாமல் திரும்பிப் போகமாட்டேன்" என்றான் அனுமன்.
அந்த இலங்காதேவி சிந்திக்கிறாள். அந்த யமன்கூட என்னைக் கண்டு அஞ்சுவானே, இவன் என்னடாவென்றால், ஆலகால நஞ்சினை உண்ட சிவபெருமான் போல சிரிக்கிறானே. சரியான வஞ்சகனாயிருப்பான் போலத் தோன்றுகிறதே. இவன் சாதாரண குரங்கு இல்லை. சரியான ஆள் இவன் என்று நினைக்கிறாள். (இங்கும் அனுமனை சிவபெருமானுக்கு ஒப்பிடுவதைக் காண்க). இவனை இப்படியே விட்டுவிடக் கூடாது, கொன்றுவிட வேண்டும், இல்லாவிட்டால் இந்த இலங்காபுரிக்கு இவனால் தீங்கு ஏற்படும் என்று மனதில் எண்ணிக் கொண்டு இப்போதே இவனைக் கொன்று தீர்ப்போம் என்று "ஏய்! குரங்கே, முடிந்தால் சாவைத் தடுத்துக் கொள். இந்தா!" என்று ஓர் மும்முனை வேல் ஒன்றை அனுமன் மீது வேகமாக எறிந்தாள்.
சீறிக்கொண்டு வந்த சூலாயுதத்தைத் தன் பற்களால் கடித்துத் தன் கரங்களால் ஒடித்து வானத்தில் தூக்கி எறிந்தான்" அவன் அந்த சூலாயுதத்தை முறித்து எறிந்தது கருடன் ஓர் பாம்பை முறிப்பது போல இருந்தது. தான் வீசிய சூலம் ஒடிந்து தூள்தூளானது கண்டு அந்த அரக்கி வெகுண்டு எழுந்து, சக்தி மிக்கப் பற்பல ஆயுதங்களை அவன் மீது ஏவத் தன் கைகளில் எடுத்தாள். குற்றமற்ற அனுமனோ அவள் மீது பாய்ந்து அவற்றைப் பிடுங்கி வானத்தில் வீசி எறிந்தான். சக்தி மிக்கத் தன் ஆயுதங்கள் அனைத்தும் வானவெளியில் தூக்கி எறியப்பட்டது கண்டு கடும் கோபம் கொண்ட இலங்காதேவி, பல குன்றுகளைப் பெயர்த்து, பாறைகளை அம்மானை ஆடுவது போல அவன் மீது வரிசையாக வீசி எறிந்தாள். அவனைத் தன் கரங்களால் அடிக்க ஓடினாள். அவள் அப்படி ஓடிவந்து தன்னை அடிப்பதற்கு முன்பு, அனுமன் தனது ஒரு கையால் அவளது எட்டு கைகளையும் ஒன்றாய் சேர்த்துப் பிடித்துக் கொண்டு, ஒரு நொடி, ஒரே ஒரு நொடி, இவள் பெண்ணாயிற்றே, இவளை எப்படிக் கொல்வது என்று சிந்தித்துவிட்டு, அவள் நெஞ்சில் ஓங்கி விட்டான் ஒரு குத்து. அனுமன் விட்ட குத்து இடி தாக்கியதைப் போல அந்த அரக்கி மார்பில் விழுந்து, அவள் ஒரு மலை வீழ்ந்ததைப் போல சுய நினைவு இழந்து கீழே விழுந்தாள்.
கீழே மயங்கி விழுந்த இலங்காதேவி, நினைவு திரும்பியபின் வருந்தினாள். தான் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டாள். முன்பு பிரமதேவன் தனக்கு இட்ட கட்டளையை நினைவு கூர்ந்தாள். உலகின் அனைத்து உயிர்களும் வணங்கும் இராமனது தூதனான அனுமன் முன் தட்டுத் தடுமாறி எழுந்து நின்று பேசுகிறாள், "ஐயனே! கேள்! தன்னை வந்தடைந்தோர்க்கெல்லாம் அடைக்கலம் தந்து அருள் தரும் பிரமதேவனின் இந்த இலங்கை நகரை நான் காவல் புரிகிறேன். என் பெயர் இலங்காதேவி. நான் செய்து வந்த தொழில் காரணமாக உன்னைத் தடுக்கும் தவறான காரியத்தைச் செய்து விட்டேன். உன்னிடம் குத்துப்பட்டு சிறுமை அடைந்தேன். எனக்கு உயிர் பிச்சை அளிப்பாயாக! நான் யார் என்கிற வரலாற்றை உனக்குச் சொல்கிறேன்" என்றாள்.
இந்த இலங்கை மூதூரைக் காவல் புரியும் தொழிலை நான் எத்துணை காலம் செய்ய வேண்டும் என்று பிரமனிடம் கேட்டேன். அதற்கு அவர் வலிமை மிக்க குரங்கு ஒன்று உன்னைத் தன் கையால் என்று பலமாகக் குத்து விடுகிறதோ, அன்றோடு முடிந்தது உன் பணி, உடனே என்னை வந்து பார், அதன் பிறகு அந்த இலங்கை நகரம் அழிந்து போகும் என்று எனக்குச் சொன்னார். ஐயனே! பிரமன் சொன்ன படியே நடந்துவிட்டது. அறம்தான் வெல்லும், பாவம் தோற்கும் என்பதுதான் சத்திய வாக்கு அல்லவா? இனி நீ கருதிய காரியம் எல்லாம் இனிதே நடக்கும். சர்வ வல்லமையுடைய உன்னால், முடியாத காரியமும் உண்டோ? இனி நீ தாராளமாக இலங்கை நகருள் செல்லலாம். என் பணி முடிந்துவிட்டது. நான் சென்று வருகிறேன்" என்று சொல்லி அந்த இலங்காதேவி அங்கிருந்து சென்றாள்.
அவள் மீது இரக்கம் கொண்டு அனுமன் அவளை அன்போடு நோக்கினான். அவள் கூறுவது உண்மைதான். அதுதானே நடக்கப் போகிறது என்று எண்ணிக் கொண்டு இராமபிரானின் தாமரைப் பொற்பாதங்களை வணங்கி, இலங்கை நகருக்குள் நுழைந்தான். அது கடல் போல பாலில் ஒரு துளி உறைமோர் சேர்ந்தது போல இருந்தது.
ஒளிமயமான அந்த ஊரின் சிறப்புக்களைக் கண்டு வியந்து போனான் அனுமன். இந்த நகரத்தில் தன்னுடைய சுய உருவத்தில் செல்லுதல் இயலாது என்று எண்ணி தன் உருவத்தைச் சுருக்கிக் கொண்டு, சிறிய உருவமாக, மாளிகைகளின் ஓரமாகவே சென்றான். அவ்வூரில் பல இடங்களிலும் புகுந்து பார்த்து ஆராய்ந்து கொண்டு, எங்கும் தங்காமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான். மாட்டுக் கொட்டில்களும், யானைகள் தங்கும் கொட்டடிகளும், பல்வகை விலங்குகள் வாழுமிடங்களிலும், குதிரை லாயங்கள், சோலைகள், பூன்சோலைகள் ஆகிய இடங்களிலெல்லாம் வண்டு புகுந்து செல்வது போல சீதாதேவி இருக்குமிடத்தைத் தேடிக் கொண்டே சென்றான்.
பற்பல மணிகளாலும், இரத்தினங்களாலும் இழைக்கப்பட்ட மாளிகைகள், மாடங்கள் வழியாக அனுமன் செல்கையில் அவற்றின் ஒளியானது அவன் மீது பட்டு, ஒரு சமயம் இராமபிரானின் நிறம்போல கருமையாகவும், மற்றொரு சமயம் வெண்மையாகவும், மறுபடி ருத்ரன் போல சிவப்பாகவும் தோற்றமளித்தான். வழியில் அரக்கப் பெண்கள் நீராடும் காட்சிகளையும், அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விதானங்களின்கீழ் நாடக சாலைகளில் சிந்தாமணி எனும் இரத்தினக்கல் வீசும் ஒளியில் கந்தர்வப் பெண்கள் ஆடவும், அரக்கியர் கூட்டம் கண்டு ரசிக்கும் காட்சிகளை அனுமன் கண்டான்.
வழி நெடுக அனுமன் கண்ட காட்சிகள் அனேகம். ஊடல் கொண்ட அரக்கியர் ஊடலைத் தீர்க்கவும், காமம் வளரவும், போதைதரும் நறவினை அருந்தும் காட்சிகளையும், வழிநெடுக மாளிகைகளில் பணிபுரியும் தேவமாதர்கள் இனிய கீதங்களைப் பாடி பூஜை செய்யும் காட்சிகளையும், திருமணங்கள் நடக்கும் காட்சிகள், புதுமனை புகும் காட்சிகள், காதலர்களின் ஊடலையும், பின் கூடலையும் வழியில் அனுமன் கண்டான். வழியில் யக்ஷப் பெண்கள், அரக்கியர், நாகமாதர்கள், வித்யாதரர்கள் முதலான பெண்களைப் பார்த்துக் கொண்டே வந்து அனுமன் ஓரிடத்தில் மலை போல ஒரு அரக்கன் படுத்துக் கிடப்பதைக் காண்கிறான். அந்த அரக்கன் படுத்துக் கிடந்த மண்டபம், ஏழு யோசனை நீளமும், ஏழு யோசனை அகலமும், உயரமும் அமைந்ததாக இருந்தது.
அந்த மண்டபத்தின் நடுவில் ஓர் உயரிய படுக்கையில் மலைபோன்ற அரக்கன் படுத்திருந்தான். இந்தக் காட்சியானது ஆதிசேஷன் படுத்திருப்பது போலவும், இருள் எல்லாம் ஓர் வடிவு எடுத்தது போலவும், தீவினைகள் எல்லாம் ஓர் வடிவம் எடுத்தது போலவும் இருந்தது. தூங்குகின்ற அந்த அரக்கன்தான் கும்பகர்ணன். கற்பக மரங்களிலிருந்து வீசும் காற்று இனிமையாக அவன் மீது வீசியது. அந்த காற்று கற்பகமரக் காட்டில் தோன்றி, கடல் நீரில் ஈரப்பதம் ஏற்றிக் கொண்டு, மூவகை கதிகளாக (மந்த, மத்ய, துரித) வந்து அவன் மீது வீசித் தாலாட்டிக் கொண்டிருந்தது.
உறங்கிக் கிடக்கும் கும்பகர்ணனுக்கு தேவலோக மாதர்கள் கால் வருடிக் கொண்டிருக்கிறார்கள். உறக்கத்தில் அவன் விடும் மூச்சுக் காற்று அண்டத்தின் எல்லைவரை போய் பின் அவன் நாசிக்குத் திரும்புகிறது. இதனைக் கண்ட அனுமனுக்கு உடல் கூசுகிறது. அந்தக் காற்று தன் மீது படாமல் ஒதுங்கிக் கொண்டான். மலை போல கிடந்த கும்பன் மீது அனுமனுக்குக் கோபம் வந்தது. காரணம் அங்கு உறங்குபவன் இராவணனோ என்று அனுமன் நினைத்தான். அதனால் அவனை நெருங்கிப் போய்ப் பார்த்தான். இவனுக்குப் பத்துத் தலைகளும் இருபது தோள்களும், இருபது கரங்களும் இல்லையே. இவன் இராவணன் இல்லை என்று தெரிந்ததும் அவன் கோபம் சிறிது தணிந்தது. அவன் இராவணன் இல்லை என்று ஆனபிறகு, வேறு யாராக இருந்தால் என்ன? நன்றாகக் கிடந்து தூங்கட்டும். இப்படியே சில காலம் தூங்கிக் கொண்டிருக்கட்டும் என்று தன் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தான். அப்படி அவன் பல இடங்களிலும் சீதையைத் தேடினான்.
இராமபிரானின் தூதனான அனுமன் சீதையைத் தேடி அலையாத இடம் இல்லை. மாடகூடங்கள், மாளிகைகள், மகளிர் ஆடரங்குகள், அம்பலம், தேவர் ஆலயங்கள், பாடல் வேதிகை (மேடை), பட்டி மண்டபங்கள் முதல் பல இடங்களிலும் தேடினான். அந்த நகரில் பெண்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் சீதை அங்கு இருக்கலாமோ என்று எண்ணித் தேடினான். இப்படிப் பார்த்துக் கொண்டு வருகையில் அரசர்கள், வேதியர்கள், மேலோர், கீழோர் இப்படி அனைவரும் விரும்புகின்ற புண்ணியனான விபீஷணனின் இல்லம் வந்து சேருகிறான்.
பளிங்கினால் ஆன மேடை மீது, பவழ மண்டபத்துக்குள், தேன் சிந்தும் கற்பக மலர்களையுடைய விதானத்தின் கீழ், சுற்றிலும் கருப்பு நிறத்தவர் இருக்க, தான் மட்டும் வெண்மை நிறத்தினனாக இருத்தல் அரிது என்றெண்ணி அந்த அரக்கர் கூட்டத்திற்கிடையே, தன்னை மறைத்துக் கொண்டு வாழும் தர்ம தேவதை போல விபீஷணன் இருந்தான். அங்கு படுத்திருந்த விபீஷணனை அனுமன் அருகில் நெருங்கிப் பார்த்தான். உறங்குகின்ற விபீஷணனை அனுமன் தன் உணர்வினால் எடை போட்டான். குற்றம் இல்லாத உயர்ந்த குணவான் இவன் என்று மனத்தால் அறிந்து கொண்டான். தூய்மையான சிந்தையான் இவன் என்று அவன்பால் பகைமை இன்றி, அவ்விடம் விட்டு நீங்கி வேறு பற்பல மாளிகைகளிலும் சென்று தேடினான்.
வழியில் முழு மதியோ எனும்படி முகம் படைத்த அரம்பையர் பலரையும் கண்டு, பல மாளிகைகளைக் கடந்து, தன் மனோ வேகத்திலும் கடிய வேகத்தில் அனுமன் செல்கிறான். அப்படி வருகையில் முன்பு இந்திரஜித்தால் பிடிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த இந்திரன் இருந்த சிறை வாயிலை அடைந்தான். பின் அதனையும் கடந்து போனான்.
காவலுக்கு இருந்த அரக்கர்கள் கதை பேசிக்கொண்டு நிற்கையில் அனுமன் அவர்களைக் கடந்து சாமர்த்தியமாக உள்ளே புகுந்து சென்றான். புகை நுழைய முடியாத இடத்திலும் புகவல்ல அனுமன் அங்கே பெண்களுக்கிடையே முருகக் கடவுள் போல எழிலுள்ல இந்திரஜித் படுத்திருப்பதைப் பார்த்தான். அடடா! மலைக் குகையில் வாழும் சிங்கம் போல தோற்றமளிக்கிறானே இவன். அரக்கனா அல்லது முருகப் பெருமானா? வேறு யாரோ? தெரியவில்லையே. நிச்சயம் இளைய பெருமாளும் இவனும் நெடுநாள் போரிட வேண்டியிருக்கும் என்று நினைத்துக் கொண்டான். இவனுக்கு நிகராகப் போரிடக் கூடியவர்கள், பிரம்ம, சிவன், விஷ்ணு இவர்களைத் தவிர வேறு யாரால் முடியும்? இவனைத் துணைக்கு வைத்திருக்கும் இராவணன் மூவுலகங்களையும் வெல்வது என்பது அரிய காரியமே அல்ல.
இங்கேயே நின்றிருந்தால் நேரம் ஆகிவிடும் என்று அங்கிருந்து புறப்பட்டு இந்திரஜித்தின் தம்பியான அக்ஷ்யகுமாரன் மாளிகையைக் கடந்தான். அதிகாயன் மற்றும் தம்பியர் இருந்த மாளிகைகளையும் கடந்தான். இராமனின் அம்பு புகுவது போல அனுமன் எல்லா இடங்களிலும் புகுந்து தேடினான். இந்திரஜித், அக்ஷயகுமாரன், அதிகாயன் மற்ற தம்பிகள் இராவணனின் புத்திரர்கள். அதாவது இராவனனின் பட்டத்து ராணி மண்டோதரியின் புதல்வர்கள் இந்திரஜித் மற்றும், அக்ஷயகுமாரன். இராவணனின் வேறொரு மனைவி தான்யமாலினி என்பாளுக்குப் பிறந்தவன் அதிகாயன். பிற மனைவியருக்குப் பிறந்த மற்ற தம்பிகளும் உண்டு.
இலங்கை நகரின் நாலாபுறங்களிலும் கடல் சூழ்ந்து அகழியைப் போல பாதுகாப்பளித்தது. நகரத்தின் இடையில் ஓர் அகழியும், இராவணனது மாளிகையைச் சுற்றி ஓர் அகழியும் இருக்க, இவற்றுள் நடுவண் அகழியைச் சென்றடைந்தான் அனுமன். அந்த கடல் போன்ற நடுவண் அகழியைக் கடந்து இடை நகருக்குள் புகுந்தான். காலனும் பயந்து ஓடும் அந்தப் பெரு நகரத்தில் நட்ட நடுநிசியில், கருமை படர்ந்த இருளில், பன்னிரெண்டு யோசனை பரப்பளவுள்ள மூன்று லட்சம் தெருக்களிலும், தான் ஒருவனாகவே சீதாப்பிராட்டியைத் தேடினான் அனுமன். அந்த நள்ளிரவில் 'நித்த நியமத்தொழில் ம்டித்து நெடுவானத்து உத்தமர்களும்' உறங்கிக் கொண்டிருந்தார்கள். யோகியரும் துயின்றார்கள்; மதங்கொண்ட யானைகளும் உறங்கின; பித்தர்களும் உறங்கினார்கள்; ஆனால் உறங்காத அனுமன் மட்டும் தேவியைத் தேடிக் கொண்டிருந்தான்.
இப்படி நகரமே உறங்கிக் கிடந்த நேரத்தில், அந்த நகரத்தினுள் புகுந்த அனுமன், வழியில் இருந்த வீடுகளில் இருந்த அரக்கியரைக் கண்டான். வித்யாதர மாதர்கள் வசிக்கும் பகுதியைக் கண்டான். அங்கெல்லாம் பெண்கள் இருந்த நிலை கண்டு இங்கெல்லாம் சீதாபிராட்டி இல்லை என்று தேறி, மேலும் தேடிக் கொண்டிருந்தான். இப்படிப் பல இடங்களிலும் தேடிக் கொண்டே இராவணனின் பெரிய அரண்மனையைச் சென்றடைந்தான். அங்கு பூரண சந்திரனைப் போன்று ஒளிவீசிக் கொண்டிருந்த மண்டோதரியின் மாளிகையைக் கண்டான். அந்த மாளிகையைத் தன் கண்களாலும், கருத்தாலும் துருவி ஆராய்ந்தான். மற்ற மாளிகைகள் போல் இல்லாமல் இந்த மாளிகை தனித்திருந்ததை கவனித்தான். மற்ற இடங்கள் எல்லாம் சாதாரண மணிகளோடு ஒப்பிடுவதென்றால், இந்த மாளிகையை, திருமாலின் திருமார்பை அலங்கரிக்கும் கவுஸ்துபத்துக்கு ஒப்பிடலாம்.
நிச்சயமாக நான் தேடி வந்த பணி முடியப் போகிறது என்று நினைக்கிறேன். சீதாப்பிராட்டியை இராவணன் நிச்சயம் இந்த மாளிகையில்தான் வைத்திருக்க வேண்டும். உள்ளே இருப்பது யார் என்று மெல்ல எட்டிப் பார்த்தான். அங்கே, அரம்பையோ! திலோத்தமையோ! என ஐயப்படும்படி அழகியப் பெண்கள் மலரடி வருட, சாமரம் வீச, மெல்லிய காற்றும், இன்னிசை பொழியவும், கற்பக மலர்கள் மணம் பரப்ப ஓர் அழகிய மாது துயின்று கொண்டிருந்தாள்.
இப்படி ஆடம்பரமாகவும் சகல சுகபோக வசதிகளுடன் உறங்குவது யார்? இவள்தான் தான் நாடிவந்த ஜானகியோ? என்று தன் மனத்துள் எழுந்த ஐயத்தோடு, கொடிய தீ தன் உடலைத் தீண்டியது போல வருந்தினான். தான் தேடி வந்த பிராட்டியா இந்த மாது? உத்தம லட்சணங்கள் அமைந்தவளாகக் காணப்படுகிறாள். நம் பிராட்டிதான் மனம் மயங்கி தவறு இழைத்து விட்டார்களோ? இந்தத் துயரைத் தாங்க முடியவில்லையே என்று வருந்துகிறான். மீண்டும் அந்தப் பெண்ணை உற்றுப் பார்க்கிறான். அவள் அங்க லட்சணங்களைப் பார்க்கிறபோது இவள் மானுடப் பெண்ணாகத் தோன்றவில்லையே. அவள் முகத்தில் தன் தலைவனாம் இராமபிரானைப் பிரிந்த துயரம் காணப்படவில்லையே. அப்படியானால் இவள் சீதாபிராட்டியாக இருக்க முடியாது என்று அனுமன் உணர்ந்தான்.
ஒருவரது தோற்றத்தை வைத்து அவரைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளக் கூடிய சாமுத்ரிகா லட்சனத்தை அனுமன் அறிந்திருந்தான் என்பது இந்தக் கூற்றால் தெரிய வருகிறது.
இந்தப் பெண்ணிடம் உத்தமப் பெண்களுக்குரிய சில இலக்கணங்கள் உள்ளன. ஆனால் எல்லையற்ற துன்பத்தை இவள் விரைவில் அனுபவிக்கப் போவதும் தெரிகிறது. இவள் உறக்கத்தில் வாய் குழறி ஏதோ பேசுகிறாள். இவளது கருங்குழல் கலைந்திருக்கிறது. குழலில் சூடிய மலர் வாடி உதிர்ந்திருக்கிறது. இவள் கணவன் விரைவில் இறந்து போவான். இந்த எழில் நகரும் அழிந்து போகும் என மனதுக்குள் சொல்லிக் கொண்டான். இவ்வளவு நேரம் அனுமன் பார்த்ததும், அவளைப் பற்றி அனுமானித்ததும் இராவணனுடைய பத்தினியும், இந்திரஜித், அக்ஷயகுமாரன் ஆகியோரின் தாயாருமான மண்டோதரியாகும்.
இவள் எப்படியோ போகட்டும்! நாம் சென்று பிராட்டியைத் தேடுவோம் என்று அங்கிருந்து அனுமன் புறப்பட்டு, இராவணனுடைய உயர்ந்த அரண்மனையை அடைந்தான். இராவணனுடைய மாளிகைக்குள் அனுமன் அடியெடுத்து வைத்த போது, பூமி அதிர்ந்தது; இலங்கை முழுவதும் பூமி அசைந்தது; நீண்ட மலைகள் நிலை குலைந்து அசைந்தன; அரக்கர் குலப் பெண்களுக்கெல்லாம் வலப்புறம் துடித்தன; திக்குகள் எட்டும் ஆடின; வானத்தில் மேகங்கள் சிதறி ஓடி மோதி இடித்தன; மங்களச் சின்னங்களாக வைக்கப்பட்டிருந்த நீர் நிறைந்த பூர்ண கும்பங்கள் வெடித்துச் சிதறின.
இராவணனுடைய அரண்மனைக்குள் புகுந்து அனுமன் உற்று நோக்கினான். அவனைத் தன் அறிவுக் கண்களால் பார்த்துவிட்டு "அந்தோ! ஒப்பற்ற சிறப்பு வாய்ந்த இந்த நெடுநகரின் செல்வங்கள் யாவும் அழிந்து, நகரமும், இவன் பொருட்டு அழியுமே!" என்று இரங்கினான். எந்தக் குலத்தவராயினும், நல்வினை, தீவினை இவற்றின் பலன்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். விதி வலிமை மிக்கது என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான். கும்பகர்ணனைக் கண்டதும் சினங்கொண்ட அனுமன் இராவணனைக் கண்டதும், இவனால் இந்த நகரம் அழிந்து போகப்போகிறதே என்று வருந்தினான். இராவணன் துயில் கொள்ளும் காட்சியைக் கண்ணுற்றான் அனுமன்:
"கண்டனன் காண்டலோடும் கருத்தின் முன் காலச் செந்தீ
விண்டன கண்கள் சிந்தி வெடித்தன கீழும் மேலும்
கொண்டதோர் உருவம் மாயோன் குறளினும் குறுகி நின்றான்
திண்தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கி".
இராவணனைப் பார்க்கும் போது, அனுமன் வாமனனைக் காட்டிலும் மிகச் சிறிய உருவம் எடுத்துக் கொண்டு நிற்கிறான். அந்த இராவணனுடைய வலிய தலைகள் பத்தையும், இருபது தோள்களையும் பார்த்து இவன்தான் இராவணன் என்பதைத் தெரிந்து கொண்டான். அப்படி அவனைப் கண்டதும் அனுமனுக்குக் கண்கள் சிவந்து ஊழிக்கால நெருப்பைப் போல கண்கள் தீ உமிழப் பார்த்தான். இவனை இப்படியே கொன்றுவிட்டால் என்ன என்று நினைத்தான்.
சீதாபிராட்டியை வஞ்சனையால் கவர்ந்து வந்த இவனை என் தோள்வலியால் நையப் புடைத்து, அவனது கிரீடங்களை எனது கால்களால் அடித்துச் சிதறச் செய்து, தலைகள் பத்தையும் பந்தாடி தலையில் உருட்டி என் ஆண்மையைக் காட்டாவிட்டால், நான் இராம பிரானுக்கு அடியவன் என்ற பெருமை இல்லாமல் போய்விடுமே! என் தோள் ஆற்றலுக்குத்தான் என்ன பெருமை? எதிர்காலம் என்னை என்ன சொல்லும்? இப்படி நினைத்துக் கொண்டு பற்களைக் கடித்து, கைகளைப் பிசைந்து கொண்டு, கோபத்தில் எழுந்து நின்று, பிறகு ஆராய்ந்து பார்த்து, ஒரு காரியத்தைச் செய்ய வந்த இடத்தில் அதை விடுத்து வேறொரு காரியத்தைச் செய்வது கூடாது. இராமபிரானும் அதனை ஒப்புக் கொள்ள மாட்டார், நான் குற்றம் புரிந்தவன் ஆகிவிடுவேன் என்று தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டான் அனுமன்.
கோபம் தணிந்த நிலையில் அனுமன் யோசிக்கிறான். இவனோடு மாதர்கள் யாரும் உடன் இல்லை. தனித்தே இருக்கிறான். காமத்தினால் வேறு நினைவு இன்றி தனித்திருக்கிறான். எனவே, பிராட்டி எங்கேயோ நல்ல நிலையில் இருக்கிறாள் என்று என் மனதுக்குத் தோன்றுகிறது என்று நினைத்துக் கொண்டான். தேவியை எங்கும் காணமுடியாமல், இன்னமும் இங்கே தாமதிப்பதால் எந்த பயனும் இல்லை, என்று இராவணன் இருப்பிடத்தைவிட்டு நீங்க முற்படும்போது, அந்தோ இந்த பெரிய நகரத்தில் சீதா பிராட்டியைக் காணவில்லையே, என்ன செய்வேன் என்று வருந்தினான். பிராட்டியை அந்த கொடியவன் இராவணன் என்ன செய்திருப்பான்? எங்கு சிறை வைத்திருப்பான்? என்று எண்ணமிடலானான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Please give your comments here