Monday, May 17, 2010

v) Continued ...

"இருந்தனன், எழுந்தனன், இழிந்தனன், உயர்ந்தான்
திரிந்தனன், புரிந்தனன், என நனி தெரியார்
விரிந்தவர் குவிந்தவர் விலங்கினர் கலந்தார்
பொருந்தினர், நெருங்கினர் களம்படப் புடைத்தான்".

மின்னலைப் போல விரைவாக எழுந்தான் அனுமன், நிமிர்ந்து பார்த்தான், போர்க்களம் முழுதும் கணப்பொழுதில் திரிந்தான், எதிரிகளை அடித்தான், அரக்கர் அனைவரையும் களத்தில் ஒன்றாக அழியும்படி இரும்புத் தடியால் அடித்துக் கொன்றான். அனுமனைப் பிடிக்க வந்த அரக்கர் படை அடியோடு அழிந்து போயிற்று. சம்புமாலி மட்டும் தனியனாக நின்றான். தனித்து நிற்கும் நீ உயிர் பிழைத்து ஓடிப்போ என்றான் அனுமன் சம்புமாலியிடம்.

சம்புமாலியும் மகா வீரனல்லவா? அப்படி கோழை போல ஓடவில்லை. கோபத்துடன் சரமாரியாக அனுமன் மீது அம்புகளைச் செலுத்தினான். அவற்றை அனுமன் இரும்புத் தடியால் அடித்து நொறுக்கினான். இரும்புத் தடியின் கூரான பகுதியைப் பார்த்து ஓர் அம்பினை எய்து சம்புமாலி அதன் ஒடித்தான். தன் ஆயுதம் அறுபட்டது கண்டு அனுமன் மனம் சலித்தான். சம்புமாலி விட்ட அம்புகளைத் தன் கையால் தடுத்தான். பின்னர் தாவிச் சென்று சம்புமாலியின் தேர்மீது குதித்து அவன் கையில் இருந்த வில்லைப் பிடுங்கி அவன் கழுத்தில் மாட்டி கீழே தள்ளினான். சம்புமாலி இறந்து கீழே விழுந்தான். அனுமன் தேரிலிருந்து கீழே குதித்து அந்தத் தேரை, தேரோட்டி குதிரைகளோடு தன் காலால் மிதித்து நொறுக்கி நசுக்கினான்.

கண்டவர்கள் ஓடிச் சென்று இராவணனிடம் "ஐயனே! நம்மவர்கள் அனைவரும் போர்க்களத்தில் இறந்து போனார்கள். சம்புமாலியும் இறந்து போனான். இவை அனைத்தையும் செய்தது அந்த குரங்கு மட்டுமே" என்றனர். இராவணனுக்குக் கோபம் தலைக்கேறியது. தானே சென்று அந்தக் குரங்கைப் பிடிப்பதாகச் சொல்லி கிளம்பினான். இதைக் கண்ட சேனைத் தலைவர் ஐவர், இராவணனிடம் சென்று, "இராவணேஸ்வரா! கேவலம் ஒரு குரங்கோடு நீங்கள் சென்று போர் புரிவது நமக்கு அவமானம் அல்லவா? வலிமையுள்ள ஒரு கருடன் கொசுவோடு மோதுவது போல இருக்காதா? நீங்கலே போருக்குப் போவதானால், உங்களுக்குத் துணைபுரிய வீரர்கள் இல்லை என்றல்லவா ஆகிவிடும். எனவே எங்களை அனுப்புங்கள், நாங்கள் போய் அந்தக் குரங்கைப் பிடித்து வருகிறோம்" என்று அந்த ஐந்து சேனாதிபதிகளும் கேட்டுக் கொண்டனர். அந்த ஐந்து பேரின் பெயர்களாவன: விரூபாட்சன், யூபாசன், துர்த்தரன், பிரகசன், பாசகர்ணன் என்பதாகும்.

சேனாதிபதிகளின் வேண்டுகோளை இராவணனும் ஏற்றுக்கொண்டு, அவர்கள் போருக்குப் போவதற்கு சம்மதித்தான். அந்த படைத்தலைவர்கள் முரசு அறைந்து அரக்க வீரர்களைத் திரட்டிக் கொண்டு ஐம்பெரும் பூதங்களைப் போல, சேனைகளோடு அணிவகுத்துச் சென்றனர்.

முன்பொருகாலத்தில் பெரும் செல்வத்துக்கு அதிபதியான குபேரனைத் தாக்கி, அவனது நகரமான அளகாப்ரியோடு அவன் செல்வத்தையும் இராவணன் கவர்ந்து கொண்டு, குபேரனை அங்கிருந்து துரத்தி விடுகிறான். அப்படி குபேரனிடமிருந்து கவர்ந்த பொன் நகைகளையெல்லாம், இந்த ஐந்து படைத்தலைவர்களும் மேலே அணிந்திருந்தனர்.

அரக்கப்படை அனுமனை எதிர் கொண்டது. இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் பதைத்தனர். அனுமன் இந்த அரக்கர் படையை இன்றே அழிப்பேன் என்று அலைகடல் போன்ற அவர்களைப் பார்த்துப் பின் தனது தோள்களையும் பார்த்துக் கொண்டான். இந்தச் சின்ன குரங்கா இவ்வளவு அரக்கர்களைக் கொன்றது என்று அதிசயித்தது அரக்கர் படை. இதே நேரத்தில் அனுமனும் இந்திரனின் தலைநகரிலிருந்து கொண்டு வந்து அசோக வனத்தில் வைக்கப்பட்டிருந்த தோரண வாயிலின் மீது ஏறி நின்று கொண்டு தன் விஸ்வரூபத்தை எடுத்துக் கொண்டான். அனுமனுடைய இந்த பெரிய உருவத்தைப் பார்த்ததும் அரக்கர்கள் கோபம் கொண்டனர். அவன் மீது சரமாரியாக அம்புகளை எய்தனர். சங்குகள் முழங்கின. முரசுகள் ஒலித்தன, போர்ப்படை வாத்தியங்கள் அதிர்ந்தன.

அரக்கர்கள் ஏராளமான ஆயுதங்களை அனுமன் மீது ஏவினர். அவைகளெல்லாம், அவனது உடலைத் தடவிக் கொடுப்பது போல இருந்தன அனுமனுக்கு. அவனும் ஆனந்தமாக அந்த சுகத்தை அனுபவித்தான். அரக்கர்கள் ஒருமித்துத் தாக்க வேண்டும், அப்போது தான் அவர்களை ஒரேயடியாக அழிக்க முடியுமென்று எண்ணி, ஒரு பெரிய இரும்புத் தூணைக் கையில் எடுத்துக் கொண்டான் அனுமன். அதால் அடித்து அலை அலையாய் வந்த அரக்கர்களைக் கொன்று குவித்தான்.

அரக்கர் படை வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகு, ஐந்து படைத் தலைவர்களும் அனுமனைச் சூழ்ந்து கொண்டனர். அனுமன்மீது அம்பு மழையைப் பொழிந்தனர். அவற்றை அவன் தன் கைகளால் தடுத்து விலக்கினான். படைத் தலைவன் ஒருவனது தேருக்குள் புகுந்து அதை வேகமாக இயக்கச் செய்யும் எந்திரம் ஒன்றை உடைத்தெறிந்தான். கடுமையான போர் நடந்தது. அனுமன் அந்த ஐவரையும் ஒருவர் பின் ஒருவராக எமனுலகம் அனுப்பி வைத்தான். அரக்கர் படையில் உயிர் பிழைத்தவர் எவரும் மிஞ்சவில்லை.

இப்படி ஐந்து படைத்தலைவர்களும், அவர்கள் அரக்கர் படையும் அனுமனால் அழித்து ஒழிக்கப்பட்ட செய்தி இராவணனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அசோக வனத்தை பருவத் தேவர்கள் காவல் புரிந்து வந்தனர். அவர்கள் போய் இராவணனிடம் படைத்தலைவர்களும், படைகளும் அழிந்த செய்தியைச் சொன்னார்கள். இராவணன் கோபப் பெருமூச்சு விட்டான். நானே போருக்குப் போகிறேன் என்று முடிவு செய்து கிளம்பினான். ஆனால் இராவணனுடைய மகனான அட்சயகுமாரன் தந்தையைத் தடுத்துத் தானே போருக்குப் போவதாகக் கூறினான்.

அட்சயகுமாரனோடு பன்னிரெண்டாயிரம் இளைஞர்கள் மற்றும் நான்கு இலட்சம் வீரர்கள் புடைசூழ எந்திரப் பொறி அமைந்த தேர்களில் போருக்குக் கிளம்பினார்கள். தனக்கு எதிரில் பெருத்த ஆரவாரத்துடன் கூச்சலிட்டுக் கொண்டு வந்து நிற்கும் கடல் போன்ற சேனையை அனுமன் பார்த்தான். போருக்கு வந்திருப்பவன் யார்? இந்திரசித்தனோ அல்லது அந்த இராவணனோ? என்று ஐயுற்றான். அதனால் அவனுக்கு உற்சாகம் ஏற்பட்டது.

இராமபிரானை மனத்தால் நினைத்து வணங்கினான். சுக்ரீவனுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்தினான். இதோ எதிரில் வந்து நிற்கும் அரக்கர்களின் உயிரைக் கொண்டு போக எமனும் வந்துவிட்டானே என்று எதிரே நின்றவனை உற்றுப் பார்த்தான். அடடா! இவன் இராவணனும் இல்லை, இந்திரனை வென்ற இந்திரஜித்தனும் இல்லை, இவனோ குற்றமற்ற இளைஞன். போர்த்தொழிலில் வல்ல முருகனும் அல்லன், இவன் யாரோ? என்று எண்ணினான்.

அனுமனைப் பார்த்துவிட்ட அட்சயகுமாரன், "அரக்கர் கூட்டத்தைக் கொன்றது இந்தக் குரங்குதானா?" என்று அலட்சியமாகக் கேட்டான். அப்போது அட்சயகுமாரனுடைய தேர்ப்பாகன் அவனிடம், "ஐயனே! எவரையும் உருவத்தைப் பார்த்து எள்ளி நகையாட வேண்டாம். நம் மன்னன் இராவணனை வென்ற வாலியும் ஓர் குரங்குதான் என்பதை உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. இதை மனதில் கொண்டு போர் செய்" என்றான்.

"இலங்கைக்கு இந்த குரங்கு செய்துவிட்ட அழிவின் காரணமாக, இவனை மட்டும் அல்ல, உலகின் மூலைமுடுக்குகளுக் கெல்லாம் சென்று ஆங்காங்குள்ள குரங்குக் கூட்டம் அனைத்தையும் அழிப்பேன்" என்றான் அட்சயகுமாரன்.

அரக்கர் கூட்டம் அஞ்சனை குமாரனைச் சூழ்ந்து கொண்டது. அவன் மேல் ஆயுதங்களையும், அம்புகளையும் ஏவியது. இந்த உக்கிரமான போரால் விண்ணும் மண்ணும் அதிர்ந்தன. அனுமன் தனியனாக அந்தப் படையுடன் போர் புரிந்தான். அட்சயகுமாரனும் அனுமனும் நேருக்கு நேராகப் போர் புரிந்தனர். கையில் வில் ஏந்தி அட்சயகுமாரன் அனுமன் எதிரில் வந்து நிற்க, அந்த வில்லைத் தன் கையால் பற்றிக் கொண்டான் அனுமன். இருவரும் இழுத்த இழுப்பில் வில் முறிந்துவிட்டது. உடனே அட்சயகுமாரன் தன் வாளை எடுத்து அனுமனைக் குத்தினான். அதைப் பிடுங்கி உடைத்து எறிந்தான் அனுமன்.

இரு கரங்களாலும் அந்த அரக்ககுமாரனைப் பிடித்து தரையோடு தரையாக அம்மியில் அரைப்பது போல அறைத்தான் அனுமன். அட்சயகுமாரன் தேய்ந்து நசுங்கி மாண்டுபோனான். அரக்கியர் அலறினர். அட்சயகுமாரனின் தாய் மண்டோதரி இராவணன் காலடியில் விழுந்து அழுதாள். தன் தம்பி அனுமனால் கொல்லப்பட்ட செய்தியை இந்திரஜித் கேட்டான். உலகம் நடுங்கும்படியாக கடும் கோபம் கொண்டான். தம்பியை நினைத்து தாரைதாரையாகக் கண்ணீர் சிந்தினான்.

தன் வில்லைப் பார்த்து இந்திரஜித் கேட்டான் "மரத்தில் வாழும் ஒரு குரங்கு என் தம்பியைக் கொன்றதா? இல்லை. என் தந்தை இராவணனின் புகழை அல்லவா கொன்றது! என்றான். தம்பியை நினைத்து அழுது புலம்பிய இந்திரஜித் இராவணனின் காலடியில் போய் விழுந்து வணங்கினான். அஞ்சாத இராவணனும் அவன் தோள்களைப் பிடித்துத் தூக்கி நிறுத்தித் தழுவிக் கொண்டான்.

""அரசே! நீ நன்மை தரக்கூடிய ஒரு விஷயத்தை உணரவில்லை. துன்பம் வந்த பிறகு வருந்துகிறாய். கொடிய குரங்கின் வலிமையை அறிந்த பிறகும், மேலும் மேலும் நம் வீரர்களை அனுப்பி எமனுலகம் அனுப்பி வைக்கிறாய். அப்படி கிங்கரர்கள், சம்புமாலி, ஐந்து படைத் தலைவர்கள் என்று ஒருவர் பின் ஒருவராக இறந்து போனார்கள். இப்போது அருமைத் தம்பி அட்சயகுமாரனும் அந்தக் குரங்குக்கு பலியாகி விட்டான். இவ்வளவு பேர் போனபிறகும் அதை வெல்வோம் என்று சொன்னால் அறிவுடைமை ஆகுமா?".

"ஆனாலும் ஐயனே! அந்தக் குரங்கை நான் பிடித்து வருகிறேன். கண நேரத்தில் அந்தக் காரியத்தை செய்து முடிக்கிறேன். கவலையை விடு" என்றான். பிறகு இராவணனிடம் ஆசிபெற்று போருக்குக் கிளம்பினான் இந்திரஜித்தன். அங்கிருந்து கிளம்பி போர்க்களம் நோக்கிப் போகின்ற போது அனுமன் செய்த போர் ஆற்றலை எண்ணிப் பார்க்கிறான் இந்திரஜித். இவனது பேராற்றல்தான் என்னே என்று சிந்தனை வயப்பட்டுப் போகிறான்.

காட்டிலே மூக்கறுபட்டு அத்தை சூர்ப்பனகை அவமானப்பட்டதையும், கரன் முதலானோர் இறந்து போனதையும், தம்பி அட்சயகுமாரன் இறந்து போன கொடுமையான காட்சியையும் எண்ணிப் பார்க்கிறான் இந்திரஜித். இவை அனைத்தையும் செய்தது ஒரு வானரம். அந்த வானரத்தை அனுப்பியது இரண்டு மானுடர்கள் என்ற நினைவு அவனது கோபத்தை அதிகரித்தது. இந்திரஜித், தன் தம்பி அனுமனுடன் போரிட்டு தரையோடு தரையாகத் தேய்க்கப்பட்டு இறந்துபோன இடத்தைப் போய் பார்த்தான். நெருப்பில் காய்ச்சிய செம்பு போல அவன் முகம் பழுக்க, சோகம் அவனைக் கப்பிக் கொண்டது.

இப்படிக் கோபமும், ஆத்திரமும், சோகமுமாகப் போர்க்களம் வந்த இந்திரஜித்தை அனுமன் பார்க்கிறான். இதற்கு முன்பாக வந்து போரிட்டவர்களை, நான் கொன்று விட்டேன் என்று மகா கோபத்தோடு இவன் வருகிறான். இந்த இந்திரஜித்தை நான் கொல்வதால் பல நன்மைகள் ஏற்படும். தேவர்கள் துன்பத்திலிருந்து மீள்வர். இவனைக் கொல்வது இராவணனைக் கொல்வதற்குச் சமம் என்று நினைத்துக் கொள்கிறான். அப்போது அரக்கர்களின் படைகள் பெருத்த ஆரவாரத்துடன் அனுமனை சூழ்ந்து கொள்ள, அவன் ஒரு பெரிய ஆச்சா மரத்தைப் பிடுங்கிக் கொண்டான். தனது பெரிய உருவத்தை எடுத்துக் கொண்டு போரிடத் தயார் ஆனான்.

பெரிய புயல் வீசுவது போல அனுமன் தாக்கியதில் அரக்கர் படையில் தேர்கள் முறிந்து விழுந்தன. யானைகள் கும்பல் கும்பலாக அழிந்தன; குதிரைகள் கால்கள் முறிந்து கீழே விழுந்தன; மார்பு ஒடிந்தன, குளம்புகள் நொறுங்கின; கழுத்துகள் ஒடிந்து மாண்டன. அரக்கர்களைப் பிடித்து அனுமன் அக்கு அக்காக தலை வேறு கால் வேறாக பிய்த்து எறிந்தான். உடல் பிளந்து முண்டங்களாக இறந்து விழுந்தனர் அரக்கர்கள். அவன் மீது எறியப்பட்ட அம்புகள் அனைத்தும் கருகி உதிர்ந்தன.

"போருக்கு வாருங்கள்! வாருங்கள்!" என்று அனுமன் அவனை அழைத்தான். தன் மலை போன்ற தோள்களைத் தட்டி இடிமுழக்கம் செய்தான் அனுமன். "கொடியவர்களே! உங்கள் வாழ்நாளுக்கு முடிவு வந்துவிட்டது. இவ்வுலகை ஆளும் உரிமைக்கு முடிவு வந்துவிட்டது; உமது கொடிய செயல்களுக்கெல்லாம் முடிவு வந்து விட்டது; எங்கள் இராமனின் வலிமைக்கு முடிவு என்பது என்றுமே இல்லை என்பதைப் புரிந்து கொள்."

அனுமனுக்கு இந்திரஜித் பதில் சொல்லுகிறான், "உன் எண்ணத்தை அழிக்கிறேன் பார்!" என்று அம்புகளை விட்டான். அனுமனது தலையிலும் மார்பிலும் அம்புகள் பட்டு இரத்தம் வழிந்தது. தேவர்கள் திகைத்தனர். அனுமனது உடல் மேலும் மேலும் பெரிதாகிக் கொண்டே போயிற்று. நன்னெறியில் நிற்கும் இராமனது புகழைப் போல!.

அனுமனை முழுமையாக இந்திரஜித்தால் பார்க்க முடியவில்லை. அரக்கன் விட்ட அம்புகளைப் பிடித்துத் திரும்பவும் அவன் மீதே அனுமன் வீசினான். அப்போது புதிய தேரொன்று போர்க்களத்துக்கு வந்து இந்திரஜித்தை அதில் ஏற்றிக் கொண்டது. அனுமன் தனது உடலை அசைத்துத் தன் மீது பாய்ந்திருந்த அம்புகளைக் கீழே உதிர்த்தான். இந்திரஜித்தினுடைய தேர் மீது பாய்ந்து ஏறி, அவன் கை வில்லைப் பிடுங்கி ஒடித்தான் அனுமன். உடனே இந்திரஜித் தனது வஜ்ராயுதத்தை கையில் எடுத்தான். இந்த வஜ்ராயுதத்தால்தான் இந்திரஜித் இந்திரனை வென்றான். இப்போது அந்த ஆயுதத்தை அனுமன் மீது பிரயோகிக்க எண்ணி கையில் எடுத்தான். அதிலிருந்து ஒன்றை நூறாக்கி அம்புகளை மழைபோல அனுமன் மேல் பொழிந்தான். அனுமனும் சற்று அயர்ந்தான்.

போரில் அனுமன் தளர்ந்து போனது கண்ட தேவர்கள் துன்பம் அடைந்தார்கள். அனுமன் ஓர் மரத்தைப் பிடுங்கி வீசி அடித்து தன் மீது பாய்ந்து வரும் அம்புகலைச் சிதற அடித்தான். அந்த மரத்தால் இந்திரஜித்தின் தலைமீது இருந்த மணி முடியில் ஓங்கி அடித்தான். மணிமுடி உடைந்து கீழே விழ, இந்திரஜித் நடுங்கி நின்றான். இதனால் உச்சகட்ட கோபத்தை அடைந்த இந்திரஜித் ஓர் ஆயிரம் அம்புகளை அனுமன் மீது செலுத்த, அவை அனுமன் உடல் முழுவதும் பாய்ந்தன. இதனால் வெறுப்புற்ற அனுமன் இந்திரஜித்தை அவன் தேரோடு தூக்கி வானத்தில் வீசி எறிந்துவிட்டுக் கூச்சலிட்டான்.

இந்திரஜித் தேரோடு தரையில் விழுந்தான். பின் எழுந்து வானில் சென்றான். வேறு வழி எதுவும் தெரியாததால் அவன் பிரம்மாஸ்திரத்தை அனுமன் மீது ஏவ முடிவு செய்தான். மானசீகமாக பிரம்மாஸ்திரத்திற்கு பூஜைகளும், அர்ச்சனை வழிபாடுகளும், சகல கோடி தெய்வங்களையும் வணங்கி, அந்த அஸ்திரத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டான்.

பெரிய வில் ஒன்றினை எடுத்து பிரம்மஸ்திரத்தை அதில் பொருத்தி அனுமன் மீது ஏவினான். பூமி நடுங்கியது; திசைகள் நடுங்கின; சந்திர சூரியர்கள் நடுங்கினர்; வானமும் மேரு மலையும் நடுங்கின. எவராலும் அடக்க முடியாத வலிமை கொண்ட பிரம்மாஸ்திரம் நெருப்பை உமிழ்ந்து அச்சம் தரும் நாகப் பாம்புகளின் தலவன் உருக்கொண்டு, அனுமனின் தோள்களைச் சுற்றிக் கொண்டு கட்டிப் போட்டது. அஸ்திரத்தால் கட்டுண்ட அனுமன் கீழேவிழ, அறக் கடவுளும் அவனுடன் கீழே விழுந்தான். தன்னைக் கட்டிக் கீழே சாய்த்தது பிரம்மாஸ்திரம் என்பதை அனுமன் உணர்ந்து கொண்டான். அந்த அஸ்திரத்தை மதித்துக் கட்டுப்படுவதுதான் முறை என்று அதற்குக் கட்டுப்பட்டான். கண்மூடி இருந்தான் அனுமன். இதைக் கண்ட இந்திரஜித் 'ஒழிந்தது இவன் வலிமை' என்று நினைத்துக் கொண்டு, அவன் அருகில் வந்தான்.

இதுவரை அனுமனுக்குப் பயந்து கொண்டு ஓடிப்போய் ஒளிந்து கொண்டிருந்த அரக்கர்கள், ஓடி வந்து விழுந்து கிடக்கும் அனுமனைச் சூழ்ந்து கொண்டார்கள். அவனைச் சுற்றிக் கொண்டு இறுகப் பிணைத்திருக்கும் பாம்பை சீண்டினார்கள். அனுமனை அதட்டினார்கள்; ஆனந்தத்தால் ஆரவாரித்தார்கள். அரக்கர் கூட்டம் ஆண்களும் பெண்களுமாக எங்கிருந்தெல்லாமோ வந்து, விழுந்து கிடக்கும் அனுமனைச் சுற்றி நின்று ஆர்ப்பரித்துக் கூச்சலிட்டனர். அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

"இந்தக் குரங்கை அம்பினால் குத்துங்கள்! வாளால் வெட்டுங்கள்! ஈட்டியால் குத்துங்கள்! கோடர்ியால் பிளவுங்கள்! குடலை உறுவுங்கள்! தரையோடு அவனைத் தேயுங்கள்! இவன் சதையைக் கடித்துத் தின்னுங்கள்!" என்று கூச்சலிட்டுக் கொண்டு, "இவன் உயிர் பிழைத்தால், நமக்கு உயிர் இருக்காது" என்று ஓடினார்கள். "இந்தக் குரங்குப் பயலை இன்னமும் விட்டு வைப்பதோ?" என்று வெகுண்டனர். "இவனைக் கடலில் கொண்டு போய் தள்ளி மூழ்கடியுங்கள், இல்லையேல் தீ வைத்து கொளுத்தி விடுங்கள்" என்றனர். "நீ கொன்று போட்ட எங்களவர்களை எங்களுக்குத் திரும்பத் தா!" என அடம்பிடித்தனர் சிலர். "அந்த தேவர்களே இவனை இங்கே அனுப்பியது. அவர்களைத் தொலைத்து விடுவோம்" என முழக்கமிட்டனர் சிலர்.

அனுமனைக் கயிற்றலும் கொடிகளாலும் கட்டி தெருவோடு இழுத்துச் சென்றனர். இந்தக் காட்சியை ஊரே வேடிக்கை பார்த்தது. கூடிநின்று கூத்தாடிய கூட்டத்தையும் இடிந்து விழுந்த மாளிகைகளையும் பார்த்தவாறு அரக்கர்கள் இழுத்த இழுப்புக்கு ஏற்ப அனுமன் போய்க்கொண்டிருந்தான். பலர் அவனைப் பார்க்க அஞ்சி ஓடினர். சிலர் மறைந்து கொண்டனர். சிலர் அவனை இரங்கி 'எங்களை கோபிக்காதே' என்று வேண்டிக் கொண்டனர்.

கட்டிப் பிணைக்கப்பட்ட அவன் உடலை ஐம்பதினாயிரம் கிங்கரர் இழுத்துச் சென்றனர். இப்படியே இவர்கள் இழுத்த பக்கம் போனால், இராவனனைப் பார்க்கலாம் என்ற நினைப்பில், அனுமனும் வாளவிருந்தான். என் தந்தை வாயுபகவான். அருளாலும், இராமன் திருவடிகளின் பலத்தாலும், சீதையும் தேவர்களும் அளித்துள்ள பலத்தாலும், இந்த பிரம்மாஸ்திரத்தை இப்போதே அறுத்தெறிய முடியும். எனினும் அப்படிச் செய்யாமல் இருப்பதே இப்போது நல்லது என்று நினைத்தபடி அரக்கர்களின் விருப்பப்படி இழுத்துச் செல்லும்படி விட்டுவிட்டான்.

அனுமனை இழுத்துக் கொண்டு அரக்கர்கள் இந்திரஜித் தலைமையில் இராவணன் அரண்மனையை அடைந்தனர். இராவணனுக்கு முன்கூட்டியே தகவல் சொல்லி அனுப்பப்பட்டது. இதனைக் கேட்டதும் அவன் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டான். அந்தக் குரங்கை என்முன் கொண்டு வந்து நிறுத்துங்கள் என்று ஆணையிட்டான்.

இந்த நிலையில் அசோகவனத்தில் இருந்த அன்னை சீதாதேவியின் நிலைமையைச் சற்று பார்ப்போம். அனுமன் அசோகவனத்தை அழித்துவிட்டான், எண்ணற்ற அரக்கர்களைக் கொன்று விட்டான் என்ற செய்தி சீதைக்குத் தெரிய வந்தபோது அன்னை மகிழ்ந்தாள். இந்திரஜித் நாகபாசத்தால் அனுமனைக் கட்டி இராவணன் சபைக்கு அழைத்துச் சென்ற செய்தி கேட்டு வருந்தினான். சீதை அனுமனைப் பற்றி சிந்திக்கலானாள். வான்முகட்டைத் தொடும்படியான பேருருவை எடுத்தானே, கடலை நொடிப் பொழுதில் கடந்து வந்தானே, அரக்கர்களைக் கொன்று குவித்தானே, இன்று வஞ்சக அரக்கன் உன்னை நாகபாசத்தால் கட்டிவிட்டான் என்கிற துயரச் செய்தி எனக்குத் துன்பமளிக்கிறதே என்று வருந்தினாள்.

இராமபிரானுடைய கணையாழியை எனக்குக் காட்டி, நான் உயிரை விட்டுவிடாமல் என்னைக் காத்தானே. அவனுக்குச் சிரஞ்ஜீவித் தன்மை வழங்கி வாழ்த்தினேனே, என் வாக்கு பலிக்குமே, அப்படியிருக்க, வஞ்சக அரக்கனிடம் எப்படி கட்டுண்டான்? ஏ! மாருதி! உன்னால், உன் உதவியால் இராமன் இங்கு வந்து என்னை மீட்டுச் செல்வான் என்று நம்பினேனே, இப்போது அந்த நம்பிக்கை வீண்போகி விடும் போல் இருக்கிறதே. இவ்வாறெல்லாம் எண்ணி சீதாபிராட்டி மனம் தளர்ச்சியுற்றாள்.

அங்கு! அனுமன் இராவணனது சபைக்குக் கட்டி இழுத்துவரப்பட்டான். சபையில் இராவணன் ஆடம்பரமாகக் கொலு வீற்றிருந்தான். அவைக்குள் இழுத்துவரப்பட்ட அனுமன், இராவணனை நேருக்கு நேராகப் பார்க்கிறான். கரு நாகத்தைக் கண்ட கருடன் போல கோபம் கொண்டான். இந்த நாகபாசத்தை அறுத்தெறிந்து இப்போதே இந்த அரக்கனைக் கொல்வேன் என்று ஆவேசம் கொண்டான். முன்பு நான் இவனைப் பார்த்த போது இவன் தூங்கிக் கொண்டிருந்தான். அதனால் அவனைக் கொல்லவில்லை. இப்போது அவையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் இவனை நேருக்கு நேர் போரிட்டுக் கொல்வது தவறாகாது, என்று நாகபாசத்தை அறுக்க எண்ணியபோது, அது தவறு என்று தோன்றியது அவனுக்கு.

இவனால் என்ன வெல்லமும் முடியாது. நான் இவனை இங்கு வெல்வதும் முடியாத காரியம். இவனை வெல்வது இராமனுக்கு மட்டுமே முடியக்கூடிய காரியம். இவனைக் கொல்வதாக இராமபிரான் சபதம் செய்திருக்கிறார் அல்லவா? இவனை அவர்தான் கொல்ல வேண்டும். இவனோடு போரிட்டு நான் நாட்களைப் போக்கிக் கொண்டிருந்தால், எப்போது இராமனிடம் போவது, அன்னை இன்னும் ஒரு மாதம் மட்டுமே உயிரோடு இருப்பேன் என்று வேறு கூறியிருக்கிறார்கலே! எனவே, இந்த இராவனனுடன் இப்போது போர் செய்யாமல் தூதனாகச் சந்திப்பதுதான் முறை என்று முடிவு செய்தான்.

இராவணன் சபைக்குக் கொண்டுவரப்பட்ட அனுமனை இந்திரஜித் அறிமுகப்படுத்துகிறான். "குரங்கு உருவில் இருக்கும் இந்த ஆண்மை மிக்க வீரன், சிவபெருமானையும், திருமாலையும் போல வீரமிக்கவன்" என்கிறான்.

இராவனன் அனுமனை நோக்கி, "நீ யார்? இலங்கைக்கு ஏன் வந்தாய்?" என்கிறான்.

"நீ யார்? சொல்! திருமாலா? சிவபெருமானா? அல்லது பிரமனா? அல்லது ஆதிசேடனா? யார் நீ?" உயிர்களைக் கவர்ந்து செல்லும் யமனா? வீரத்தில் வல்ல முருகப் பெருமானா? அல்லது முனிவர்கள் ஏவிவிட்ட பூதமா? இலங்கை நகரை அழிக்க இந்திரன் அனுப்பிய தெய்வமா? யார் நீ? சொல்லி விடு!" என்றான் இராவணன்.

அனுமன் சொன்னான், "நான், நீ கூறிய எவரும் அல்ல. ஒப்பற்ற வில் வீரனான இராமபிரானின் தூதன் நான். இராமபிரான் யார் தெரியுமா? தேவன் அல்லன்; அசுரன் அல்லன்; திசை யானைகள் அல்லன்; திசைத் தெய்வமும் அல்லன்; கயிலை மலைவாழ் சிவபெருமானும் அல்லன்; மும்மூர்த்திகளும் அல்லன்; முனிவனும் அல்லன்; அவன் பூமண்டலத்தை ஆளும் ஓர் அரசனின் புதல்வன்."

"அவன், வேதங்களும், அறமும் போற்றுகின்ற உண்மை அறத்தின் வடிவாய் நிற்கும் பரம்பொருள். தர்மமே ஒரு இராஜகுமாரனாகப் பிறந்த காரணம் என்ன தெரியுமா? வேதங்களும், உபநிடதங்களும் இன்னது எனக் குறிப்பிட்டுக் கூறமுடியாத -- அறிவுக்கு அறிவாக இருப்பவன். அன்று முதலை, காலைக் கவ்விய போது 'ஆதிமூலமே!' என்று கதறிய யானைக்கு உதவ ஓடிவந்தவன். தேவர்களைக் காப்பாற்ற இன்று வந்திருக்கிறான்"

No comments:

Post a Comment

Please give your comments here