Monday, May 17, 2010

v) Continued ...

இராமன் இவ்விதமாக பல நிகழ்ச்சிகளைக் கூறி இவற்றை சீதையிடம் கூறும்படி சொல்லி, தன் கணையாழியை சீதையிடம் அடையாளமாகக் காட்டும்படியும் கேட்டுக் கொண்டான். பிறகு அனுமன் அங்கதன், ஜாம்பவான் மற்றும் பெரிய படைகளுடன் தென்திசை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான்.

நாற்திசைகளுக்கும் சீதையைத் தேடிச் சென்ற வீரர்கள் ஒரு மாத காலத்துக்குள் திரும்ப வேண்டுமென்று ஆணையிட்டு அனுப்பி வைக்கிறான். இனி தெந்திசை நோக்கிச் சென்ற அனுமன் முதலான வீரர்களைத் தொடர்ந்து நாமும் நடப்பதைக் காண்போம்.

அனுமனோடு, அங்கதன் முதலான வீரர்கள் தென் திசைக்குச் சென்றார்கள் அல்லவா? அவர்கள் அனைவரும் விந்திய மலையை அடிகிறார்கள். அங்கெல்லாம் தேவியைத் தேடி அலைந்தார்கள். அங்கிருந்து நர்மதை ஆற்றைக் கடந்து அங்கெல்லாம் பிராட்டியைத் தேடி அலைகிறார்கள். பின்னர் நர்மதை ஆற்றைக் கடந்து ஹேமகூட மலையைச் சென்றடைகின்றனர். இந்த மலையின் அமைப்பையும் சூழலையும் கண்டு வானரர்கள் இது இராவணனின் இருப்பிடமாக இருக்கலாமென்று எண்ணுகிறார்கள். அவர்கள் அந்த மலையின் மீதேறி பிராட்டியைத் தேடுகையில் அங்கிருந்த யானைகளும், யாளிகளும் அகன்று ஓடின. சிங்கங்கள் அஞ்சி ஓடத் தொடன்கின. மலை முழுவதும் வானரர்கள் சுற்றித் திரிந்து தேடினார்கள். அங்கும் சீதையைக் காணாமல் அனுமன் முதலானோர் ஒரு கொடிய பாலைவனப் பகுதியை அடைகின்றனர். அங்கு எந்தப் பிராணிகளோ, தாவரங்களோ காணப்படவில்லை. கற்களும் பொடியாகி மண்ணோடு கலந்திருந்தன.

வெயிலின் கடுமை தாங்காது வானரர்கள் புழுப்போலத் துடித்தனர். நீர் வேட்கை மிகுந்து நாவரண்டு போய் தவித்தனர். கால்கள் கொப்பளித்தன. அனல் கல்லில் பொரித்தெழும் பொரி போலத் துள்ளினர். அந்தப் பாலை நிலத்தினின்றும் தப்பி வெளியேற முடியுமோ எனத் தவித்த போது அங்கே ஒரு பிலத்தைக் கண்டனர். அனைவரும் அந்த பிலத்துக்குள் சென்று தேடினர். அந்த பிலத்துக்குள் ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தில் தவம் புரிந்துகொண்டிருந்த சுயம்பிரபை மோட்சமடைந்து வானுலகம் செல்ல அனுமன் உதவி புரிந்துவிட்டு அனைவரும் அந்தக் குகைக்குள்ளிருந்து வெளியேறினர்.

பிறகு வானர வீரர்கள் வழியில் ஒரு பொய்கையைக் கண்டனர். அதிலிருந்த நல்ல நீரை அருந்தினர். சோலையிலிருந்த தேனையும், காய், கனிகளையும் பசியாற உண்டனர். பொய்கைக் கரையில் படுத்து இனிய நித்திரை கொண்டனர். அப்போது அங்கு நற்குணம் அற்றதோர் அசுரன் வந்து சேர்ந்தான். அவன் பெயர் துமிரன். தோற்றத்தில் மலை போன்று காட்சியளித்தான். அவன் பொய்கைக் கரையில் உறங்கும் வானரங்களைப் பார்த்தான். தனக்கே உரிய இந்த பொய்கையிடத்து உறங்கும் இந்த வானரங்கள் யார் என்று தூங்கிக் கொண்டிருந்த அங்கதன் மார்பில் அடித்துத் தூக்கினான்.

தூக்கம் கலைந்து எழுந்த அங்கதன் தன்னைப் பிடித்துத் தூக்கிய அவுணனைப் பார்த்தான். இவந்தான் இராவணனோ என்று எண்ணி அவனை ஓங்கி அறைந்தான். அந்த அரக்கன் அடி தாங்காமல் பிணமாகி கீழே விழுந்தான். மற்ற வானரங்கள் சந்தடி கேட்டு விழித்து எழுந்தனர். அனுமன் கேட்கிறான், அங்கதனைப் பார்த்து, "யாரப்பா இவன்?" என்று, அதற்கு அங்கதன் "தெரியவில்லை" என்கிறான். அப்போது ஜாம்பவான் அந்த அசுரனின் வரலாற்றைக் கூறுகிறான். "இவனை எனக்குத் தெரியும். இவன் பெயர் துமிரன் என்பது. இந்த பொய்கை தனக்கு உடைமை என்று எண்ணியிருந்தான்" என்றான்.

"இவனைப் போல வேறு யாரும் இருக்கிறார்களா?" என்று வானர வீரர்கள் கேட்டனர். பிறகு அனைவரும் பிராட்டியைத் தேடிக் கொண்டு பெண்னை நதிக் கரையை அடைந்தனர். அந்த நதி போக்குவதற்கரிய கொடிய பிறவிப் பிணியை நீக்கி நற்கதி அளிக்க வல்லது. உத்தரபிநாகினி என்னும் பெயரையும் உடையது. அந்த நதிக் கரையில் தங்கி இளைப்பாறிய பிறகு, ஆற்றைக் கடந்து சென்று, ஒரு பெரும் காட்டை அடைகின்றனர். தொடர்ந்து பற்பல மலைகள், காடுகள் இவற்றைக் கடந்து சென்றனர்.

அடுத்து இவர்கள் சென்றடைந்த இடம் விதர்ப்ப நாடு. அந்த நாட்டிற்குள் அந்தண சிறுவர்கள் வடிவம் தாங்கி சீதையைத் தேடி அலைந்தனர். பிறகு அங்கிருந்து நீங்கி தண்டகம் எனுமிடத்தை அடைந்தனர். பிறகு முண்டகம் எனும் பிரதேசத்திலும் தேடினர். அங்கிருந்து பாண்டுமலை எனும் வெண்ணிறம் கொண்ட மலைப் பகுதியை அடைகின்றனர். எங்கு தேடியும் தேவியைக் காண முடியவில்லை என்று வருந்தினர். பிறகு நெடுந்தூரம் பயணம் செய்து இராவணன் அபகரித்துச் செல்லும்போது விரிந்து கிடந்த சீதாபிராட்டியின் கூந்தலினின்றும் நழுவி வந்து பூமியை அடைந்தது போன்று கிடந்த கோதாவரி எனும் நதியை அடைந்தனர்.

இந்த சிறப்பு மிக்க ஆற்றைக் கடந்து பிறகு சோனை நதியையும் அடைகின்றனர். அங்கிருந்து குலிந்த நாடு எனப்படும் மேலைக் கடற்கரை நாட்டைக் கடந்து, கொங்கணப் பிரதேசத்தின் அருந்ததி மலையை அடைந்தனர். அந்த மலையைக் கடந்த பிறகு திருவேங்கட மலையை வலம் வந்து அதனைக் கடந்தபின் தொண்டை வளநாட்டை அடைகின்றனர். இங்கிருந்து பயணப்பட்டு பொன்னி நதி பாயும் சோழ நாட்டையும் தாண்டி, பாண்டிய நாட்டைச் சென்றடைகின்றனர். அங்கும் சீதையைக் காணாமையால், இனி கடல் அன்றி வேறு நாடு எதுவும் இலாமையால் ஊக்கம் தளர்ந்து இறுதி நிலையை அடைந்தாற்போல ஆயினர்.

இனி வேறு எந்த வழியும் தெரியவில்லை, தென் கடலையொட்டியிருந்த மயேந்திர மலை என சுக்ரீவன் குறிப்பிட்டிருந்த மலைப் பகுதியை வந்தடைந்தனர். அங்கு சென்றடைந்ததும் எதிரே பரந்து விரிந்து கிடந்த கடற்பகுதியைக் கண்டனர். ஹேமகூடத்தில், இவர்களிடமிருந்து பிரிந்து சென்ற வானர வீரர்களும் அங்கு வந்து சேர்ந்து கொண்டனர். வானர வீரர்கள் சீதையைக் கண்டு பிடிக்க முடியாமல் வருந்திச் சோர்ந்தனர். மன்னன் விதித்த கெடு நாளும் நெருங்கிவர, பிராட்டியைக் காணாமல் இராமனும் உயிர் வாழ்வாரா, மன்னனும் நம்மைத் தண்டிப்பான் என்று வருந்தினர். சீதையைக் கண்டுபிடிக்க முடியாமல் நாடு திரும்ப முடியுமா? இங்கேயே தங்கி தவம் செய்வதா? உயிரைப் பறிக்கும் கொடும் நஞ்சினை அருந்தி உயிரை விடுவோமா? என்ன செய்யப் போகிறோம்? என்று கவலையுற்றனர்.

அப்போது வருத்தத்துடன் இருந்த கூட்டத்திடையே அங்கதன் எழுந்து பேசுகிறான், "உங்களுக்கு நான் ஒரு செய்தி சொல்ல விரும்புகிறேன். இந்த பூவுலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் சீதையைத் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு வருவோம் என்று இராமபிரானிடம் ஆணையிட்டுக் கிளம்பினோம். இன்று நாம் நிந்தனைக்கு உரியவர்களாகி நிற்கிறோம். நாம் ஏற்றுக் கொண்ட காரியத்தை முடிக்கவில்லை. நமக்குக் கொடுக்கப்பட்ட காலமும் கடந்து போயிற்று. இனி நாம் மேற்கொண்ட காரியம் கைகூடும் என்பதற்கு ஒரு சிறிது இடமும் தெரியவில்லை. ஆதலின், நாம் இனி உயிரைத் தாங்கிக் கொண்டு வாழ்வது தகுதியன்று" என்றான். ஏவிய காரியத்தை முடிக்கவில்லை என்று எந்தையும் நம்மைத் தண்டிப்பான். எம் இறைவன் இராமபிரானும் மனம் வருந்துவான். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு உயிர் வாழ என்னால் முடியாது. எனவே, நான் எனது உயிரை மாய்த்துக் கொள்வேன், நீங்கள் உங்கள் அறிவுக்குப் பட்டதைக் கூறுங்கள்" என்கிறான் அங்கதன்.

அங்கதன் சொன்னதைக் கேட்ட ஜாம்பவான் எனும் கரடிகளின் அரசன் சொல்லுகிறான், "உருவிலும், வலிமையிலும் மலை போன்ற தோள்வலி கொண்டவனே! சிறப்பான வார்த்தைகளைக் கூறினாய். நீ இறந்து போன பின்பு நாங்கள் மட்டும் அழுதுகொண்டு இருப்போமா? எங்கள் அன்பு பாழ்படுமாறு கிஷ்கிந்தைக்குத் திரும்பச் சென்று சுக்ரீவனையும் இராமபிரானையும் தொழுது உயிர் வாழ்வோமா?
ஆண்தகையே! அரசகுமாரா! இனி நாம் என்ன செய்யப் போகிறோம்? உயிர் வாழ்ந்து என்ன பயன்? ஆனால் எங்களுக்கு ஓர் உறுதி மொழி வேண்டும். நாங்கள் இறந்த பிறகும் நீ உயிர் வாழ வேண்டும் என்பது எங்கள் விருப்பம்" என்றான் ஜாம்பவான்.

ஜாம்பவான் சொன்னதைக் கேட்ட அங்கதன் சொல்லுகிறான், "நீங்கள் அனைவரும் மாண்டுபோனபின், நான் மட்டும் உயிருடன் திரும்புவதோ? நன்று! நன்று!" என்று நகைத்துவிட்டு மேலும் சொல்லுகிறான், "நாம் அனைவரும் இங்கே இறந்து போவோமானால் அந்த செய்தி என் தாய் தாரைக்கும், சுக்ரீவனுக்கும் போய்ச் சேரும். அதனைக் கேட்டு அவர்களும் உயிர் துறப்பர். இதன் விளைவாக இராம லக்ஷ்மணரும் உயிரை விட்டுவிடுவார்கள். இந்த செய்தி அயோத்திக்கு சென்றடையும், அங்கு பரதன் முதலானோரும் உயிரை விடக்கூடும். இதன் விளைவாய் அவன் தம்பியும், தாய்மார்களும், ஏன்? அயோத்தி மக்களும் மடிந்து போவர். ஜானகி எனும் ஓர் மாதவத்தியால் இவ்வளவு அழிவும் நேருமே!" என்று அங்கதன் வருந்தினான்.

வயிரம் பாய்ந்த தோளையுடையவனும், போரில் அரிமா போன்றவனுமான அங்கதன் இப்படி உரை செய்தது கேட்டு வருந்தி, கரடிகளின் வேந்தன் ஜாம்பவான் சொல்கிறான், "நீயும், நின் தந்தையும் தவிர அரச பதவிக்கு உரியவர் எவரும் இல்லை என்பதால் உன்னை உயிர் பிழைத்திருக்கச் சொன்னேன். அனைவரும் உயிர் விடுதல் பற்றி பேசலாகுமோ? ஆகையால் நீ விரைந்து போய் இராமனைப் பார்த்து சீதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவே நாங்கள் அனைவரும் உயிரை விட்டுவிட்டோம் என்ற செய்தியை நீ போய் அவர்களிடம் தெரிவிப்பாயாக!" என்றான்.

இவர்களது உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த அனுமன் சொல்லுவான், "நாம் மூவுலகங்களிலும் பிராட்டியைத் தேடி முடிக்கவில்லை. நமக்கு வலிமை இருந்தும் தேடமுடியவில்லை. தேடும் எண்ணம் இல்லை என்றால் உங்கள் வீரத்துக்கும், நேர்மைக்கும் இழுக்கு அல்லவா? பிராட்டியை எவ்வகையிலும் தேடிக் கண்டு பிடித்து வரவேண்டுமென்பதே சுக்ரீவனின் விருப்பம். அவன் குறித்த காலத்திற்குள், வேலை முடியவில்லை என்பதைப் பொருட்படுத்த மாட்டான். ஆகையால் நாம் பிராட்டியைத் தொடர்ந்து தேடுவதுதான் தக்கது. அதுதான் சரி. அப்படித் தேடும்போது அந்த பணியின் காரணமாக நாம் ஜடாயுவைப் போல உயிர் துறக்க நேரிட்டால் அதுவன்றோ சிறப்பு. வீணில் பழி சுமந்து மாள்வதா சிறப்பு?" என்றான்.

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் 'ஜடாயு' என்ற பெயரை அனுமன் சொல்லவும், சற்றுத் தொலைவில் ஓர் மலையில் அமர்ந்திருந்த சம்பாதி எனும் கழுகின் வேந்தன், தன் தம்பியாகிய ஜடாயு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டு துணுக்குற்று, சோகத்தால் அழுது புலம்பியவாறு, ஓர் குன்று நகர்ந்து வருவது போல வானர வீரர்களை நோக்கி வந்தான்.

"என் தம்பியாகிய ஜடாயுவா இறந்து போனான்? எப்படி இறந்தான்?" என்று கேட்டுக் கொண்டே வந்தான்.

முன்பு மலைகளுக்கெல்லாம் சிறகுகள் இருந்தனவாம். அவை பல இடங்களுக்கும் பறந்து சென்று உலகில் பல கேடுகளை விளைவித்தனவாம். இதனைக் கண்ட இந்திரன் அதன் சிறகுகளைத் தன் வஜ்ராயுதத்தால் அறுத்து கீழே விழச் செய்துவிட்டான். அப்படிப்பட்ட ஒரு மலை சிறகை இழந்து நகர்ந்து வருவது போல சம்பாதி நகர்ந்து வந்தான் என்பதிலிருந்து, அவன் சிறகுகளை இழந்தவன் எனத் தெரிகிறது. சம்பாதியின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓட, "என் தம்பியைக் கொல்லும் ஆற்றலுடையவரும் உண்டோ? யார் அந்தச் செயலைச் செய்தது? என்றான் கோபத்தோடு.

சம்பாதி வயது முதிர்ந்தவர். சிறகுகளை இழந்து, கண்கள் சுருங்கி அவற்றில் கண்ணீர் பொங்கி வர இவர்களை நோக்கி வந்ததும், வானரர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இவன் யாரோ? என்று அச்சத்துடன் மற்றவர்கள் ஓட, அனுமன் சம்பாதியை நோக்கி, "வஞ்சக அரக்கனே! கள்ள வேடம் பூண்டவனே! யார் நீ? இனி உயிர் பிழைத்துப் போவாயோ?" என்று வினவினான்.

இப்படி அனுமன் சொன்னானே தவிர, எதிரே வந்த கழுகு கோபம் இல்லாதவனாய், பொங்கும் துக்கத்தால் கண்ணீர் சோர கதறிக் கொண்டிருக்கிறான் என்பதைக் கண்டு, சரி இவன் சந்தேகத்திற்கு இடமான ஆள் இல்லை என்று உணர்ந்து கொள்ளுகிறான். அப்போது சம்பாதி மறுபடியும் "ஜடாயுவின் உயிரைப் பறித்தவர் யார்? சொல்ல மாட்டீர்களா?" என்று மறுபடியும் கேட்டான். அது கேட்ட மாருதி, "முதலில் நீ யார் என்பதைக் கூறினால், பிறகு நான் நடந்த வரலாற்றைக் கூறுகிறேன்" என்று சொன்னதும், சம்பாதி தன் வரலாற்றைச் சொல்லுகிறான்.

ஜடாயு தனது தம்பி என்பதையும், அவன் பிரிவினால் துயர் மிகுந்து வாடுவதையும் கூறினான். அதைக் கேட்ட அனுமன், ஜட்டயு இராவணனை எதிர்த்ததையும், அந்தப் போரில் சிவன் கொடுத்த வாளால் வெட்டப்பட்டு இறந்த வரலாற்றையும் கூறினான். அனுமன் கூறிய சொற்களைக் கேட்ட சம்பாதி பேரிடியால் நிலைதவறிய மலை போல மயங்கி வீழ்ந்தான். பிறகு மனம் தேறியவாறு உரை செய்கிறான். "எதற்கும் சளைக்காத எனது சிறகுகள் வெயிலால் எரிந்து சிந்தி உதிர்ந்து போனது. உயிர் போகாமல் நின்ற எனக்கு, உயிர் போயிருக்கலாமே என்று வேதனைப் பட்டான். என்ன மாயம் இது? அருமைத் தம்பி! எப்படி நீ மாண்டாய்? என்று புலம்புகிறான்.

"பிரமனும், மண்ணும், விண்ணும், அறமும், கற்ப காலமும் அழியுமேல் நீயும் அழிவது என்பது நியாயமாகும். அவையெல்லாம் அழியாதிருக்க நீ மட்டும் அழிவுற்றது நியாயமன்று! அருணனுக்கு அரம்யென்னும் தேவமாதிடம் இரு முட்டைகளாய் பிறந்து, அடுத்தடுத்து, சம்பாதியும், ஜடாயுவும் பிறந்தார்கள். "இராவணனா உன்னைக் கொன்றான். இது என்ன விபரீதம்?" என்று வருந்தினான் சம்பாதி.

"என்ன காரணம் கருதி இராவணனுடன் ஜடாயு போர் புரிந்தான்?" என்று அனுமனைக் கேட்டான்.

"எம் கோமான் இராமபிரானுடைய மனைவி சீதாபிராட்டியைக் கொடும் வஞ்சனையாளன் மாயையால் கவர்ந்து செல்லும்போது, நீதிமானான ஜடாயு, இராவணனின் தேரையும் அழித்து, தோளையும் கிழித்து அவனைத் தோற்கடிக்க, கோபம் கொண்ட இராவணன், சிவன் கொடுத்த வாளால், அவன் சிறகுகளை வெட்டினான், அதனால் ஜடாயு இறந்து போனான்" என்றான் அனுமன்.

இராவணனுக்கும் ஜடாயுவுக்கும் யுத்தம் நடைபெற்ற போது, இராவணன் ஜடாயுவிடம் உனது உயிர்நிலை எங்கிருக்கிறது என்று வினவ அதற்கு பொய் சொல்லத் தெரியாத மெய்மையோன் ஜடாயு, தனது சிறகில் உயிர்நிலை இருப்பதாக உண்மையைக் கூறினான். ஆனால் அதே கேள்வியை ஜடாயு இராவணனிடம் கேட்டதற்கு, அவன் தன் உயிர்நிலை தன் கால் கட்டைவிரலில் இருப்பதாக பொய்யுரைத்தான் என்றும் ஒரு கதை உண்டு. மேலும் திருஞானசம்பந்தரின் புள்ளிருக்கும் வேளூர் தேவாரத்தில் (வைத்தீஸ்வரன்கோயில்) இராவணனைப் பற்றி குறிப்பிடும்போது "மெய்சொல்லா இராவணனை" என்று குறிப்பிடுவதையும் நாம் கவனிக்க வேண்டும். அந்த தேவாரப் பாடல் இதோ:

"கள்ளார்ந்த பூங்கொன்ற மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடிஎம் பெருமானார் உறையுமிடம்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே!

"தையலாள் ஒரு பாகஞ் சடைமேலான் அவளோடும்
ஐயந்தேர்ந் துழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம்
மெய்சொல்லா இராவணனை மேலோடி யீடழித்துப்
பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே!." (திருஞானசம்பந்தர் தேவாரம்)

ஆகா! ஜடாயு சீதாப்பிராட்டியைக் காக்கும் பணியில் உயிர் துறந்து என்றும் அழியாத புகழுடம்பு எந்தினான் என்றான். பிறகு சம்பாதி, வானர வீரர்களை பாராட்டுகிறான். அவர்களனைவரையும் 'ராம' எனும் நாமத்தைத் தொடர்ந்து உச்சரிக்கச் சொல்லுகிறான். அதன்படியே அவர்கள் அனைவரும் ஒன்றாக இராம நாமத்தை உச்சரிக்கவும், சம்பாதியின் சிறகுகள் முளத்து வளரத் தொடங்குகிறது. சிறகுகள் வரப்பெற்ற சம்பாதி வலிமை படைத்தவனாக எழுந்து நிற்கிறான்.

அனைவரும் இராமபிரானின் திருவருளைப் போற்றிக் கொண்டாடினார்கள். வானர வீரர்கள் சம்பாதியின் முந்தைய வரலாற்றைக் கேட்க, அவனும் சொல்லலானான்.

சம்பாதி சொல்லுகிறான், "நண்பர்களே! சம்பாதி, ஜடாயு எனும் சகோதரர்களாகிய நாங்கள் கழுகுகளின் அரசர்கள். வேகமும் வலிமையுமுள்ள சிறகுகளைக் கொண்டவர்கள். அருணன் எனும் கதிரவனின் பிள்ளைகள் நாங்கள். நாங்கள் பறந்து சென்று தேவருலகமும் சென்று வரும் ஆற்றல் படைத்தவர்கள். அப்படி நாங்கள் ஆகாய வழியாகப் பறந்து சென்றபோது, எரிக்கும் கிரணங்களையுடைய சூரியனைக் கண்டோம். அப்போது அவனது கிரணங்கள் என் தம்பியைத் தாக்கும் வேளையில் அவன் 'காப்பாற்று' என்று என்னிடம் வேண்டினான். உடனே நான் எனது சிறகுகளை விரித்து சூரிய கிரணங்கள் அவன் மீது படாவண்ணம் காத்தேன். ஆனால் என் சிறகுகள் எரிந்து கருகி, உயிர் மட்டும் பிழைத்து கீழே விழுந்தேன். இதைக் கண்ட கதிரவன் என்னிடம் 'வருந்தாதே, ஜனக குமாரி சீதா தேவியைத் தேடி வானர வீரர்கள் வருவர்கள். அவர்களை இராமபிரான் திருப்பெயரை உச்சரிக்கச் செய்து சிறகு முளைத்து மீண்டும் எழுவாயாக என்று அருளினான். சிறந்த வீரர்களே! இதுதான் எனது வரலாறு" என்றான்.

சம்பாதி இப்படிக் கூறியதும், அனைவரும் இராமபிரானைத் துதித்து, சம்பாதியிடம், "தந்தையே அந்தப் புன் தொழில் அரக்கன் சீதா பிராட்டியைத் தென் திசை நோக்கிக் கொண்டு சென்றான் என்று அறிந்து இவ்வழியாகத் தேடி வந்துள்ளோம்" என்றனர்.

"நன்று. நீவிர் வருந்த வேண்டாம்! இது விஷயமாக நான் அறிந்த செய்தியை உங்களுக்குக் கூறுகிறேன். அந்தப் பாதக அரக்கன் சீதாபிராட்டியைக் கவர்ந்து செல்வதை நான் பார்த்தேன். அவன் அவளைத் தூக்கிக் கொண்டு இலங்கை சென்று அடைந்தான். மனம் வருந்தி துன்பத்தில் ஆழ்ந்த அன்னையை அங்கே சிறை வைத்து விட்டான். அன்னை இப்பொழுது அங்கேதான் இருக்கிறார்கள், நீங்கள் உடனே அங்கு சென்று காண்பீராக!" என்றான்.

"யோசனை எழுநூறு உண்டால், ஒலிகடல் இலங்கை; அவ்வூர்
பாசவெம் கரத்துக் கூற்றும் கட்புலன் பரப்ப அஞ்சும்;
நீசன் அவ்வரக்கன் சீற்றம் நெருப்புக்கு நெருப்பு; நீங்கள்
ஏசறும் குணத்தீர் சேறல் எப்பரிசு இயைவது? என்றான்".

நீங்கள் எல்லோரும் அங்கே போவது என்பது எளியதன்று. அப்படி உங்களில் எவரேனும் ஒருவர் அங்கே செல்ல முடியுமானால் சென்று, தேவியைக் கண்டு, இராமபிரான் கூறியவைகளை அவரிடம் சொல்லி அவர் துயரை நீக்கி தெளிவுறச் செய்து மீண்டு வருவீராக என்றான் சம்பாதி. அப்படி உங்களில் ஒருவன் அங்கே போகமுடியாவிட்டால், திரும்பிப் போய் இராமபிரானிடம் பிராட்டி இலங்கையில் இருக்கும் செய்தியைச் சொல்லுங்கள் என்றான்.

இப்படிச் சொல்லிவிட்டு சம்பாதி, வானத்தில் எழும்பி பறந்து சென்றான். அவன் சென்ற பிறகு வானரர்கள், கழுகரசன் பொய் சொல்ல மாட்டான் என்றார்கள். கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்று அன்னையைத் தேடிக் கண்டுபிடித்தால் மட்டுமே, நாம் உயிர் பிழைக்க முடியும் என்றும் கூறினர்.

இங்கே கடல்கடந்து இலங்கை செல்லும் வலிமையுடையார் நம்மிடையே யாவர் உளர் என்று கேட்டு ஒவ்வொருவரும் தத்தம் நிலைமையைக் கூறுகின்றனர். நீலன் முதலான பல வீரர்கள் தங்களால் கடலினைக் கடந்து செல்வது இயலாது என்று கூறினர். வாலியின் மகனான அங்கதன், தன்னால் இந்தக் கடலினைக் கடந்து செல்ல முடியும், ஆனால் மீண்டு வந்து சேரும் வலிமை தனக்கு இல்லையென்று உரைத்தான். சாம்பன் எனும் ஜாம்பவான் தனது இயலாமை குறித்து வருந்திச் சொன்னான். பிறகு ஜாம்பவான் அங்கதனை நோக்கி, "அரச குமாரா! நம்மில் யார் கடல் கடந்து செல்வது என்று ஆலோசனை செய்து கொண்டிருப்பது நமக்கு இழிவு அல்லவா? எனவே எல்லா விதங்களிலும் தகுதியுடைய அனுமனே அதற்கு ஏற்ற ஆள்" என்றான்.

ஜாம்பவான் அனுமனை நோக்கி, "மாருதி! பிரமதேவனே மாண்டால்கூட சிரஞ்ஜீவியாக வாழக்கூடிய வாழ்நாள் உடையவரே! நுண்ணிய சாத்திரங்கள் பல கற்ற மகா பண்டிதன் நீர்! ஒன்றை எடுத்துச் சொல்வதிலும் வல்லவர் நீர். காலனும் அஞ்சும் வலிமையுடையீர் நீர். கடமை தவறாத கர்ம வீரர் நீர்! ஆலகால விஷத்தை உண்ட நீலகண்டனைப் போல போரிட்டு எதிரிகளை வதம் செய்யும் ஆற்றல் பெற்றவர் நீர்! (இந்த இடத்திலும் அனுமனை சிவபெருமானுக்கு உவமையாகக் கூறியிருப்பதை கவனிக்கலாம்).

"பஞ்ச பூதங்களால் அழிவுறாதவர் நீர்! பல்வகைப்பட்ட தெய்வத்தன்மை பொருந்திய படைக்கலன்களாலும் அழிக்க முடியாதவர் நீர்! ஆராய்ந்து பார்க்கும்போது உமக்கு நிகர் நீரன்றி, வேறொருவர் இலர். இந்தக் கடல் என்ன? இந்த அண்டங்களையே தாண்ட வல்ல ஆற்றல் படைத்தவர் நீர். நல்லவை மட்டுமல்ல, தீயவையும் ஆராய்ந்து பார்த்து குற்றம் நீக்கி உண்மையைச் சொல்ல வல்லவர் நீர். எது செய்யத்தக்கக் காரியம், எனத் துணிவுறும் ஆற்றல் படைத்தவர் நீர்! அப்படித் துணிந்த பின் வெல்லவும் வல்லவர் நீர்! சென்று, வென்று, மீளும் வல்லமை படைத்தவர் நீர்! புயவலி என்றும் குறைவடையாதவர் நீர்!".

"மேரு மலையும் தோற்கும் வண்ணம், பேர் உருக் கொண்டவர் நீர். மழையின் துளிகளுக்கிடையேயும் புகுந்து செல்லும் ஆற்றல் படைத்தவர் நீர்! பெரு உருவைச் சின்னஞ்சிறு உருவமாக மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவர் நீர்! இந்த பூமியையே பெயர்த்து எடுக்கும் ஆற்றல் படைத்தவர் நீர்! இவ்வளவு ஆற்றல் இருந்தும் குற்றம் புரியாதவர் நீர்! மேலே சென்று அந்த சூரியனையே தொடவும் வல்லவர் நீர்! புகை புகா வாயிலிலும் புகவல்லீர் நீர்! தர்மம் கெடாமல் வாலியைப் போரில் வீழ்த்தி அருளிய அறிவில் சிறந்தவர் நீர். இந்திரன் தன் வஞ்ராயுதத்தை உம் மீது ஏவியும் அது உமது உடல் உரோமத்தைக் கூட இழக்கச் செய்யாமல் மீண்டு வந்தவர் நீர்!".

"மூவுலகங்களிலும் உள்ளவர்கள் உம்மை எதிர்த்து நின்ற போதிலும், வீழ்த்த முடியாத தோள் வலிமை கொண்டவர் நீர்! உலகுக்கு இருளை நீக்கும் கதிரவனின் தேருக்கு முன்பாகவே சென்று வடமொழி நூல்கள் அனைத்தையும் கேட்டுத் தெரிந்து உணர்ந்தவர் நீர்!". (கதிரவன் எப்போதும் வானவீதி வழியாக உலகங்களைச் சுற்றி சஞ்சரிப்பவன், ஆதலால் ஓரிடத்தில் இருந்து அனுமனுக்குப் பாடம் சொல்ல இயலாது என, அனுமன் அந்தக் கதிரவனின் தேருக்கு முன்பாகவே பயணம் செய்து கொண்டே பாடம் கேட்டு நவவியாகரண பண்டிதன் ஆயினன் என்பது புராணம்).''

"நீதியில் நிலைப்பவர் நீர்! வாய்மை உடையவர் நீர்! பெண்ணாசை என்பதே என்னவென்றறியாத பிரம்மச்சாரி நீர்! வேதங்கள் அனைத்தையும் ஓதி உணர்ந்தவர் நீர்! ஊழிக் காலத்தையும் கடந்தவர் நீர்! பிரம தேவனே நீர்தான் என சொல்லத்தக்கவர் நீர்! இராமனிடத்தில் அன்பு மிக்கவர் நீர்! அதனால் செய்ய வேண்டிய செயலை நன்கு அறிந்தவர் நீர்! அதன்படி காரியத்தை செய்து முடிக்க வல்லவர் நீர்! மனம் சோர்வடையாதவர் நீர்! என்றும் நிலையான செயல் புண்ணியம் ஒன்றுதான் என்பதை நன்கு உணர்ந்தவர் நீர்!".

"காலம் பொருந்திவராமல் போனால் அடங்கவும், நேர்ந்தால் போரிட்டு வெல்லவும் வல்லீர் நீர்! புத்தியால் ஆராய்ந்து செய்யத் தொடங்கிவிட்டால், முடிதே தீருபவர் நீர்! கொடிய இடையூறு ஏற்படினும் அஞ்சி பின் வாங்காதவர் நீர்! இந்திரன் முதலானோர் தங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்லொழுக்கமும், பொறுமையும் கைவரப் பெற்றவர் நீர்! எந்தச் செயலையும் ஆராய்ந்து ஊகித்துச் செய்யும் ஆற்ரல் பெற்றவர் நீர்! வேண்டியபோது வேண்டிய உருவத்தை அடையும் வல்லமை படைத்தவர் நீர்! நீரே இந்தக் கடலைத் தாண்டிச் செல்லும் வேகம் அமையப் பெற்றுள்ளீர். ஆதலின் நீரே கடல் கடந்து சென்று சீதாபிரட்டி பற்றிய நல்ல செய்தியினை கொண்டு வந்து கீர்த்தி பெறுவீர். அன்னையும் துன்பக் கடலினைத் தாண்ட ஏதுவாகும்" என்று ஜாம்பவான் கூறிமுடித்தான்.

(அனுமன் இந்தச் சிறிய கடலினைத் தாண்டிச் சென்றால், சீதாதேவியும் துயரக் கடலினைத் தாண்டிச் செல்வாள் எனும் கருத்தில் இப்படிக் கூறுகிறான் ஜாம்பவான்).

இவ்வாறு ஜாம்பவான் அனுமனது பெருமைகளையெல்லாம் சொல்லி முடிக்க, அறிவிற் சிறந்த அனுமன் தலை குனிந்து அல்லிப் பூ மலர்ந்தது போல ஒரு புன்னகை பூத்தான். சூழ்ந்து நின்ற வானரர்கள் மனம் மகிழும்படி அனுமன் பேசலுற்றான். ""தாங்களே இந்தக் கடலினைத் தாண்டிச் சென்று அன்னையைக் கண்டு வரும் ஆற்றல் உள்ளவராயிருந்தும், சிறியவனான என்னை இந்தக் காரியத்திற்கு ஏவினீர் எனும் போது நான் பெற்ற பெரும் பேறு இது என்றே கருதுகிறேன். உங்கள் ஆசியும், இராமபிரான் கட்டளையும் என் இருபுறமும் துணைவர யான் இப்போதே இந்தக் கடலை கருடனைப் போல கடந்து செல்வேன், காண்பீராக!"

"நான் இலங்கை சென்று மீண்டும் இங்கு வந்து சேரும் வரை, ஈண்டு இனிது தங்கியிருங்கள்; எனக்கு விடை கொடுங்கள்" என்று அனுமன் கூற, வானரர்கள் வாழ்த்துக் கூற, தேவர்கள் பூமாரி பொழிந்திட, அனுமன் மகேந்திர மலையின் உச்சியைச் சென்றடைந்தான். மூவுலகையும் ஈறடியால் அளந்த அந்த மாதவனின் பேருருவை எடுத்து, உலகோர் வியக்க நின்றான்.

(கிஷ்கிந்தா காண்டம் நிறைவு பெற்றது)

No comments:

Post a Comment

Please give your comments here