Monday, May 17, 2010

iii) Continued ...

இந்த அரக்கிகளுக்கு வயிற்றின் இடையே வாய் அமைந்திருந்தது. முன் நெற்றியில் பதிக்கப்பட்டது போன்ற கண்கள். கொடிய பார்வையுடையவர்கள். ஒரு பல்லுக்கும் அடுத்த பல்லுக்கும் இடையே, யானை, யாளி, பேய் முதலியன தூங்கும். வாய் பெரிய குகை போன்றது. இவர்களுக்குப் பத்து கரங்கள். ஒற்றைத் தலை மட்டும் உண்டு. சிலர் இருபது தலைகளும் இரண்டு கைகளும் உடையவர்கள். இவர்கள் பயங்கரமான தோற்றமுடையவர்கள். மாறுபட்ட வடிவம் எடுப்பவர்கள். பருத்த மலைபோன்ற பல முலைகளை உடையவர்கள். பற்பல ஆயுதங்களைத் தாங்கியவர்கள். விஷத்துக்கு ஒரு உருவம் கிடைத்தாற்போன்ற உடல் அமைந்தவர்கள்; மண்டை ஓட்டைக் கையில் வைத்துள்ள வைரவ மூர்த்தியே பயங்கொள்ளும் அளவுக்குக் கொடூரத் தோற்றமுடையவர்கள்.

இவர்களது முகங்கள், யானை, குதிரை, வேங்கை, பெரிய கரடி, யாளி, பேய், சிங்கம், நரி, நாய் என மிருகங்களைப் போல அமைந்திருந்தன. முகம் முதுகில் இருக்கும்; சிலர் மூன்று விழிகளையுடையவர்கள்; கொடுந்தொழில் புரிபவர்கள்; கொண்ட சீற்றத்தினால் எப்போதும் புகைக்கும் வாயினர். இந்த அரக்கிகள் தன்னைச் சூழ்ந்து கொண்டு நின்றவுடன், சீதாபிராட்டி பேச்சு அடங்கி, அந்த கொடிய முகங்களைக் கண்டு அழத் தொடங்கினாள். இதைக் கவனித்துக் கொண்டிருந்தான் அனுமன். உடனே விரைந்து வந்து பிறர் அறியா வண்னம் அருகிலிருந்த ஓர் உயர்ந்த மரத்தின் கிளையில் வந்து அமர்ந்து கொண்டு கீழே நடப்பனவற்றைக் கவனிக்கத் தொடங்கினான். கூட்டமாக வந்து நின்ற அரக்கியருக்கிடையே கருநிறத்துச் செம்மல், இராமபிரானின் தேவியை, மேகக் கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு தோன்றும் மின்னலைப் போல கருமை நிற அரக்கியர் கூட்டத்தில் கண்டான். சுற்றிலும் அரக்கியர் கூட்டம். நடுவில் கண்ணீர் வெள்ளத்தில் வருந்துகின்ற தேவி, இவள் நிச்சயம் சீதாபிராட்டிதான் என்று மனதில் நிச்சயித்துக் கொண்டான்.

"ஆகா! இவள் சீதாபிராட்டியே தான். இதுவரை நான் பட்ட பாடு வீண் போகவில்லை. தர்மம் அழியவில்லை. நானும் இனி இறக்க மாட்டேன். இதுவரை தேடிய தேவியை நான் இங்கே கண்டு கொண்டேன். ஆகா! ஆகா! சீதா தேவியைக் கண்டு பிடித்து விட்டேன்" என்று ஆனந்த மிகுதியால் ஆடினான், பாடினான், அங்கும் இங்கும் தாவிப் பாய்ந்து ஓடினான், உலவினான். என்னதான் மகா பண்டிதன் ஆனாலும், என்னதான் வலிமை மிக்க வீரன் என்றாலும், என்னதான் விவேகி என்றாலும், தான் கொண்ட கோலம் வானரக் கோலமன்றோ! அதற்கேற்ப அவன் தனது மனதின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான்.

விலை மதிப்பற்ற இரத்தினக் கல் தூசு படிந்து கிடப்பது போல, சூரிய ஒளியினால் மங்கித் தெரியும் சந்திரன் போல, நெய் தடவி வாரி முடிக்காமல் கலைந்த கேசத்தோடு விளங்கும் பிராட்டியின் கற்பும், காவலும் மாசுபடாமல் நெருப்பாய் விளங்குகின்றதே. அறத்திற்கும் அழிவு உண்டோ? என்ன சொல்வேன். எதைச் சொல்லி புகழ்வேன். இராமபிரானின் வீரக் கழலணிந்த புயங்களைப் புகழுவேனோ? மங்கையர் திலகமாம் பிராட்டியின் மனத்தின் மாண்பைப் புகழுவேனோ? மன்னர்களில் சிறந்தோன் ஜனகனின் குலத்துப் பெருமையைப் புகழுவேனோ? எதனைப் புகழுவேன், எப்படிச் சொல்லுவேன்?

தேவரும் கெடமாட்டார்கள்; தெய்வ அந்தணரும் பிழை செய்ய மாட்டார்கள்; தர்மத்துக்கும் அழிவு கிடையாது; என் தலைவனான இராமபிரானுக்கு நான் செய்யும் பணியிலும் தவறு ஏற்படாது. இனி என்னால், செய்ய முடியாதது எது உண்டு? இராமபிரான் அருள் இருக்கும்போது.

குற்றமற்ற பிராட்டிக்கு ஏதேனும் கேடு ஏற்பட்டிருக்குமானால், இராமபிரானின் கோபம் எனும் கடல் பொங்கி இந்த உலகையே அழித்திருக்கும். பிராட்டிக்கு எந்த குறைவும் ஏற்படவில்லை, எனி என்ன? எல்லையற்ற காலம் இவ்வுலகம் அழியாமல் நிலைத்திருக்கும். நல்ல குலத்திலே உதித்து, உயர்ந்த குணங்களும், நற்பண்புகளும் சிறந்து விளங்க, இல்லற தர்மத்தில் சிறப்புற்று கற்பின் நெறியில் வாழும் பெண்களின் தவச் சிறப்புக்கு முன்பாக, தீயின் நடுவில் நின்றும், ஐம்புலன்களை அடக்கியும், உண்பதும், பருகுவதுமான உணவுகளை நீக்கித் தவம் செய்பவர்களின் சிறப்பும்கூட எதிர்நிற்கமுடியுமா?

பிராட்டியின் தவச் சிறப்பால், இராவணன் முதலான கொடிய அரக்கர்கள் அழிவார்கள். இனி முனிவர்கள், அருந்தவர் முறையின் ஒழுகுவர். பெண்களின் அறத்தின் மாண்பினால்தான் சமூகம் நெறியில் வாழ்கிறது. அன்னையை தருமம்தான் காத்ததோ? ஜனகன் செய்த நல்வினை காத்ததோ? இவர் மேற்கொண்ட கற்பு நெறியே இவரைக் காத்ததோ? அருமை! அருமை! யாரால் இப்படிப்பட்ட தவ ஒழுக்கத்தை மேற்கொள்ள முடியும். இவர்தம் பெருமை என்னால் உரைக்க முடியுமோ?

அரக்கர்கள் செல்வத்தில் சிறந்து விளங்குகின்றனர். கொடுந்தொழிலை மேற்கொண்டனர். அவர்கள் இட்ட பணியைச் சடுதியில் முடித்திட தேவர்களும் காத்திருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் அரக்கர்களுடைய செல்வத்தை விரும்பியோ, அல்லது அவர்களது கொடுமைக்கு அஞ்சியோ, உதவிக்கு வர ஒருவரும் இல்லை என்ற அச்ச உணர்வாலோ, பிற மகளிர் அரக்கரின் ஆசைக்கு அடிபணிந்து விடலாம். ஆனால், பிராட்டியின் கற்புத் தீ உயர்ந்த தர்மத்தையும், நற்பண்பையும், நிலை நிறுத்தி விட்டது. இவ்வாறு எண்ணியபடி அனுமன் ஓர் பெரிய மரத்தில் மறைந்து கொண்டு என்ன நடக்கிறது என்று கவனித்தான், அப்போது இராவணன் அங்கு வந்து சேருகிறான்.

மலைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தது போன்ற தோற்றமும், இருபது தோள்களும் பளிச்சிட தலையில் அணிந்த மகுடங்கள் ஒளிவீச இராவணன் வந்து சேர்ந்தான். இராவணன் வந்ததும், அவன் பின்னே, பரிவாரங்கள் உபசரித்த வண்ணம் வந்த காட்சியும் பார்க்க சுவாரசியமாக இருந்தது. இன்றைய அரசியல் தாதாக்களை ஒத்திருக்கும் இந்தக் காட்சி எந்தக் காலத்திற்கும் பொருந்தும் போலிருக்கிறது.

தேவலோகத்தார் எல்லாம் இராவணனிடம் ஏவல் புரிபவர்களாக இருக்கிறார்களல்லவா, அந்த வகையில் தேவலோக அழகி ஊர்வசி, இராவணனுடைய உடைவாளை ஏந்திக் கொண்டு அவன் பின்னால் வருகிறாள். மேனகை அவனுக்குத் தாம்பூலம் மடித்துக் கொடுக்கிறாள். திலோத்தமை அவன் காலணிகளைச் சுமந்து வர, மற்ற தேவலோகத்து மாதர்கள் அவனைச் சூழ்ந்துவர, உடலில் பூசிய நறுமணச் சாந்தும் அணிந்துள்ள மலர் மாலைகளும் மணம் வீச, இராவணன் ஆடம்பரமாக நடந்து வந்தான்.

தூங்கிக் கொண்டிருந்த இராவணனுக்கு சீதை தன் ஆசைக்கு இணங்கவில்லை என்கிற கோபம், தன் மோகத்துக்கு இடையூறு ஏற்பட்டுவிட்டது கண்டு தூக்கத்தைத் தொடர முடியாமல் எழுந்து வந்து விட்டான். இந்தக் காட்சியை மறைந்து இருந்த அனுமன் என்னதான் நடக்கிறதென்று பார்க்கலாமென்று "ராம" நாமத்தைச் ஜெபித்துக் கொண்டு இருந்தான். கூட வந்த தேவ மகளிர் ஒதுங்கி நிற்க, இராவணன் மட்டும் சீதையை நெருங்கி வந்து நின்றான். அவனைக் கண்டதும் அன்னைக்கு உடல் கூசியது, உயிர் நடுங்கியது. காமவசப்பட்டு இராவணன் பதற்றத்துடன் நிற்கிறான். இதைக் கண்ட அனுமன் சீதையின் மேன்மையை எண்ணிக் கொண்டு 'வாழ்க சீதாபிராட்டி, வாழ்க இராமபிரான், வாழ்க வேதங்கள், வாழ்க அந்தணர், வாழ்க நல்லறம்' என்று மனதுக்குள் வாழ்த்துகிறான். ஒவ்வொரு யுகத்திலும் புகழை மேன்மேலும் வளர்த்துக் கொள்ளும் மாருதி.

உலகமே கண்டு அஞ்சும் இராவனன் சீதையிடம் சென்று, "நீ என்னிடம் இரக்கம் கொள்ளப் போவது எப்போது?" என்கிறான். சிவபெருமானிடத்தும் தன் வலிமையும், பெருமிதமும் குறையாத இராவணன், காமவசப்பட்டதனால், சீதையிடம் மண்டியிட்டுக் கெஞ்சுகிறான்.

"இதுநாள் வரை வீணாகிவிட்டது. இனி வரும் நாட்களும் வீணாகாமல், அருள் செய்ய மாட்டாயா? உன்மீது மோகம் கொண்ட என்னைக் கொன்ற பின்னர்தான் மனம் மாறுவாயோ? என் செல்வத்தைத் துச்சமென் இகழ்ந்து விட்டாய். நீ இராமனோடு கானக வாழ்க்கையை முடித்துக் கொண்டு அயோத்தி சென்று வாழ்வது என்பது அற்ப வாழ்க்கை அல்லவா? வாழ்நாள் ஒவ்வொன்றும் கழிந்து போனபின் இளமை திரும்ப வரப்போவதில்லை. இன்பம் பெற வேண்டிய இளவயதை வீணடித்து விட்டால், அதனைப் பெறுவது எப்போது?. உன் மனம் வாழுமானால், என் உயிர் நீங்கிவிடும். உன் அழகுக்கும் ஏற்றவர் இவ்வுலகில் என்னத் தவிர வேறு யார் உளர்? பெண்மையும், பேரழகும் பிறழாத மனத் திட்பமும் உன்னிடம் உள்ளன. கருணையும், கொடையும் மறந்தது ஏன்?"

"அன்று இராமன் ஓ சீதா! ஓ இலக்ஷ்மணா! என்று அலறியதைக் கேட்ட பின்னும் அவன் உயிருடன் இருப்பதாகவா நினைக்கிறாய். உனக்கு நல்வாழ்வு காத்திருக்க, நீ அதை வேண்டாமென்று ஒதுக்குதல் நன்றோ? நான் உயிர் துறந்தால் என் செல்வம் எல்லாம் அழிந்து விடும். நீ என்னிடம் வந்து விட்டால், என் செல்வம் மேலும் செழித்து வளரும். மாறாக நீ என்னிடம் வந்ததால், செல்வம் அழிந்தது எனும் பெரும் பழியை ஏற்கப் போகிறாயா? நீ என்னிடம் சேர்ந்துவிட்டால், மூவுலகங்களுக்கும் தலைமை உனக்கு வந்து விடும். அதை வேண்டாம் என்கிறாயே, உனக்கு அறிவு இல்லையா?"

"மூவுலகங்களையும் வெற்றி கொண்ட நான், உனக்கு அடிமை என்னை அருளோடு ஏற்றுக் கொள்" என்று கரங்களைக் கூப்பிக் கொண்டு, மண்ணில் வீழ்ந்து சீதையை வணங்கினான்.

இராவணனுடைய தீய சொற்கள், அன்னையின் செவிகளைத் தீய்த்தன. அவள் மனம் கொதித்தது. கள்களில் குருதி கொட்டியது. தன் உயிர் போவதையும் பொருட்டாக எண்ணவில்லை. அந்த இராவணனை நோக்கி கடுமையான சொற்களில் பேசலானாள்.

"நீ ஒரு துரும்புக்குச் சமானமானவன். நீ பேசுகின்ற சொற்கள் இல்லறம் மேற்கொண்ட நல்லறப் பெண்களுக்கு ஏற்றதல்லை. என் மனம் கல் போன்று உறுதியானது. உலகில் கற்பெனும் திண்மையைக் காட்டிலும் உயர்ந்தது உண்டோ? நான் சொல்வதைக் கேள்! அறிவற்றவனே! இராமன் விடும் அம்பின் வலிமை உனக்குத் தெரியுமா? இராமனது அம்பு மேரு மலையைத் துளைக்க வல்லது. வானைக் கிழிக்க வல்லது. அதனைக் கடந்து அப்புறம் சென்று பதினான்கு உலகங்களையும் அழிக்க வல்லது. இதனை அறிந்திருந்தும், பழிபடும் சொற்களைப் பேசி உன் பத்துத் தலைகளையும் சிதற வழி வகுக்கிறாய்".

"இராமனது அம்பின் வலிமைக்கு அஞ்சித்தானே நீ, ஓர் மாயமானை ஏவிவிட்டு அதன் பின்னால் இராமன் சென்ற நேரம் பார்த்து, வஞ்சகத்தால் மாறுவேடம் பூண்டு ஓர் துறவியைப் போல வந்தாய். உனது அரக்கர் குலத்தையே வேரறுக்க வந்த என் நாயகனை, அவர் போரிட வரும் போது நேருக்கு நேராக உன்னால் பார்க்க முடியுமா? உனக்கு உன் உயிர் பிழைக்க வேண்டும் என்று ஆசை இருந்தால், இப்போதே என்னை என் இராமனிடம் கொண்டு போய் சேர்த்து விடு!".

"ஜடாயுவால் தாக்கப்பட்டு தரையில் விழுந்தவன் தானே நீ! உன் பத்துத் தலைகளும் இருபது தோளும் போர்க்களத்தில் இராமனுக்குத் திருவிளையாடல் புரியத் தக்க இடமாகத்தான் இருக்கும். ஜடாயுவிடம் தோற்றாய். அதனால் அவனை சிவன் தந்த வாளால் வெட்டிக் கொன்றாய். அந்த வாள் மட்டும் உன்னிடம் இல்லையென்றால், அன்றே நீ மாண்டு போயிருப்பாய். எமனிடமிருந்து வப்பிக்க வரங்களைத் தவம் செய்து பெற்றய். இராமனின் அம்புகளிடமிருந்தும் நீ தப்பிக்க விரும்பினால், தவறுகளைத் திருத்திக் கொள்."

"நீ சிவனிடம் பெற்ற சந்திரஹாசம் எனும் வாளும், பிரம்மதேவன் முதலானோர் கொடுத்த அரிய பெரிய வரங்களும், இராமன் வில்லில் அம்பைத் தொடுத்த அடுத்த கணம் உன்னைவிட்டு விலகிச் சென்று அழிந்து போகும். இது சத்தியம். விளக்கின் முன்பாக இருள் நிலைத்திருக்க முடியுமா? கயிலை மலையை நீ பெயர்த்து எடுத்த போது, கால் விரலால் மலையை அழுத்தி உன்னை வாட்டியெடுத்து வென்ற சிவபெருமான், திரிபுரங்களை எரிப்பதற்காக மேருமலையை வில்லாக வளைத்துத்தான் அம்பைச் செலுத்தினார். அந்த வில்லை இராமன் தூக்கி முறித்து வலுவிழக்கச் செய்த ஒலியை நீ கேட்கவில்லையோ? என்ன அதிசயம்!".

"கயிலை மலையைப் பெயர்த்தவன், திசக் களிறுகளை வென்றவன் என்றெல்லாம் தற்பெருமை பேசிக் கொள்ளுகின்ற நீ, வில்லேந்திய கையனாக இலக்குவன் எனக்குக் காவல் இருந்தபோது, அவன் முன்பு வரத் துணிவில்லாத நீ, அந்த அவமானம் போதாதென்று, பெண்களின் காலில் வந்து விழுகிறாயே, சீ! அறிவற்றவனே! நீ வாழும் இடத்தைக் க்ண்டு பிடித்து என் தலைவன் இராமன் இங்கே வருகின்ற நாளில், இந்த இலங்கையும், இதைச் சூழ்ந்த கடலும் அழிந்து போகும். அதோடு மட்டும் இராமபிரான் கோபம் அடங்கி விடுமோ? உன் உயிரப் போக்கிய பின் அடங்குமோ? அவரது கோபத்தால் இந்த உலகமே நிலைகுலையப் போகிறது".

"மூவுலகமும் நடுங்கக் கொடுஞ் செயல் புரிந்து வாழும் கொடியவனே! நீ புரியும் இந்தக் கொடுந்தொழிலை நீக்கும் எண்ணமே உனக்கு இல்லை. பிரமனையும், சிவபெருமானையும் போல என் இராமனை எண்ணிவிட்டாயோ? இராம லக்ஷ்மனர் சாதாரண மனிதர்கள் இல்லை. காட்டில் உயர்ந்து நின்ற கார்த்தவீரியார்சுனனை, பரசுராமன் என்றொரு மனிதன் வென்று ஒடுக்கினான். அந்த பரசுராமனை வலி அடங்கச் செய்தவன் இராமன் என்பதையும் தெரிந்து கொள்!."

""ஒப்பற்ற உனது செல்வங்களை மட்டுமல்ல, உனது உயிரையும் நீ இழக்கப் போகிறாய். இராம லக்ஷ்மணர் இருவர் மட்டும் என்று அலட்சியமாய் எண்ணாதே. யுகத்தின் முடிவில் பிரளயத்தை உண்டு பண்ணுபவர் ஸ்ரீமன் நாராயணன் என்பதை உணர்ந்து கொள். இராம லக்ஷ்மணரோடு, நீ போர் புரியும் போது, இந்த உண்மைகளைப் புரிந்து கொள்வாய்".

"இரண்யாட்சனும் அவன் தம்பி இரண்யகசிபுவும், இவர்களைப் போன்ற மற்ற அரக்கர்களும் பற்பல அக்கிரமங்களும் கொடுந்தொழிலும் புரிந்தார்களேனும், பிறன் மனைவியை விரும்பி அவர்கள் தவறு இழைத்தது இல்லை. புலன்கள் விரும்பியபடி வாழுகின்ற அரக்கனாயிருந்தும், புலன்களை வென்று அற வழியில் நடந்து கொண்டதால், நீ இவ்வளவு செல்வத்தையும் பெற்றய். இப்போது புலன்களின் இச்சைப்படி நடந்து கொண்டு தவறு செய்து அழிவைத் தேடிக் கொள்ளாதே!".

"சிவபெருமான் உனக்கு அரிய செல்வத்தைக் கொடுத்தது, நீ தவநெறியில் தப்பாது ஒழுகி, செல்வத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அறிவில்லாத நீ, செல்வத்தையும் இழந்து உற்றார் உறவினரையும் இழந்து அழிந்து போகும் நிலைக்கு மாறாக அறவழியில் போக மாட்டாயா? அறமும், அருளுமற்றோர் வலியராயினும் அழிந்து போவர். தவம் செய்து, பற்றுகளை நீக்கி காமம், வெகுளி, மயக்கம், எனும் உட்பகைகளை வென்றவர்கள், பிறப்பு, இறப்பு நீங்கி நற்கதி அடைகின்றனர்".

"தண்டக வனத்துள் இராமன் புகுந்த போது, இனிய தமிழ்மொழி வளர்த்த குறுமுனி அகத்தியர் முதலான முனிவர்கள் அரக்கர்களின் கொடுமைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று முறையிட்டதை நானும் கேட்டேன். உன்னைப் பற்றியும் இராமன் கேள்விப்பட்டார். உன் வலிமை, வரத்தால் நீ பெற்ற நீண்ட ஆயுள், உனது அரக்கர் படையின் வலிமை ஆகியவற்றை முனிவர்கள் சொல்லக் கேள்விப்பட்டார். அவற்றைத் தெரிந்த பிறகுதான் சூர்ப்பனகையின் உறுப்புகளை அறுத்து, உன் தம்பியர் கரன் தூஷணன், திரிசிரன் ஆகியோரையும் கொன்று போட்டார் என்பதையும் சிந்தித்துப் பார்!"

"கண்டவர்களையெல்லாம் கடித்துக் கொல்லும் பாம்புகள்கூட மந்திரத்துக்குக் கட்டுப் பட்டு அடங்கும். செருக்குற்று நிற்கும் உனக்கு தக்கதி இது, தகாதது இது என்று இடித்துரைக்கும் நல் அமைச்சர்கள் இல்லை போலும். நீ நினப்பது போலவே தீமைகளை எண்ணும் அமைச்சர்கள்தான் உனக்கு அமிந்திருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது உனக்கு அழிவு நிச்சயம் என்பதைத் தவிர வேறு என்ன கூறமுடியும்?".

சீதாபிராட்டி இவ்வாறு கூறிய அறிவுரைகளைக் கேட்ட இராவனனின் கண்களில் தீப்பொறி எழுந்தன. வாய் பிளந்து, பெருத்த குரல் எடுத்து, ஆரவாரம் செய்தான். என்னவென்று சொல்வது? சீதை மீது அவன் கொண்ட காமத்தையும், அவனது கோபம் வென்று வீரிட்டு எழுந்து ஒலி எழுப்பியது. ஒரு பெண் தனக்கு தர்ம உபதேசம் செய்ய நேர்ந்ததே என்று வருந்துகிறான். கோபம் அவன் தலைக்கேறியது. இவளை இப்போதே கொன்று தின்பேன் என்கிறான். இப்படி இராவணன் சீதை மீதுள்ள மோகத்தால், முன் செல்வதும், கோபத்தால் பின்னுக்கு வருவதுமாக ஊசலாடிக் கொண்டிருந்தான்.

இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த அனுமன் "அருந்ததிக் கற்புடைய, என்னை ஆட்கொள்ளும் இராமனின் தேவி, சீதாபிராட்டியை என் முன்பாக தாறுமாறாகப் பேசிய இந்த நீசன் தன் கையால் தேவியைத் தொடுவதற்கு முன்பாக, இவனை மிதித்து வருத்தி, சீதையை சிறை மீட்பேன்" என்று மனதுக்குள் உறுதி பூண்டான்.

"தனியன் நின்றனன் தலை பத்தும் கடிது உகத் தாக்கி
பனியின் வேலையில் இலங்கையைக் கீழ் உறப் பாய்ச்சி
புனித மாதவத்து அணங்கினைச் சுமந்தனென் போவேன்
இனிதின் என்பது நினைந்து தன் கரம் பிசைந்திருந்தான்".

இப்போது இவன் தனியனாகத்தான் இருக்கிறான். இவனது பத்துத் தலைகளையும் சிதைவுறத் தாக்கி, இலங்கையை கடலுக்குள் அழுத்தி அழித்துவிட்டு, தவமிருந்த செல்வி ஜானகியைச் சுமந்து சென்று இராமனிடம் சேர்ப்பேன், என்று கைகளைப் பிசைந்தபடி எண்ணினான் அனுமன்.

சீதாபிராட்டி செய்த உபதேசங்களைக் கேட்டதும், இராவணனது கோபம் பிரளய காலத்துத் தீயினைப் போல வளர்ந்தது. ஆனால், அவன் மனதில் எழுகின்ற காமம் அத்தீயை நீர் ஊற்றி அணைத்தது. பிறகு காம வயப்பட்டு மனம் அடங்கி சிந்திக்கிறான். பிறகு எழுந்து சீதையை நோக்கிப் பேசலுற்றான்.

"உன்னைக் கொல்வதற்கு எழுந்தேன். ஆனால் கொல்லவில்லை. என்னைப் பற்றி நீ கூறியவை அனைத்தும் உண்மை. அதற்குக் காரணங்களைக் கூறுகிறேன் கேள். என்னால் எதுவும் முடியும், முடியாது என்பது இல்லை. எல்லாம் விளையாட்டாகச் செய்தவை. உன்னிடம் ஒரு இரகசியத்தைச் சொல்லுகிறேன். கேள்! நீ உயிர் என மதிக்கும் இராமனைக் கொன்று உன்னைக் கவர்ந்து வந்திருந்தால், நீ உயிரை விட்டுவிடக் கூடும். அப்படி நீ இறப்பாயானால், நானும் இறந்து போவேன். அதை நன்கு உணர்ந்த பிறகுதான் வஞ்சனையால், உன்னைக் கவர்ந்தேனே தவிர, போருக்கு பயந்து அல்ல. நான் போர் செய்வதானால் என்னை எதிர்த்து யார் நிற்க முடியும்?"

"தேன்மொழியாளே! மாயமானை நிஜ மான் என்று எண்ணி அதன் பின்னால் போன மானுடர்கள் திரும்ப வரமாட்டார்கள். அப்படித் திரும்பி வந்தாலும் உன்னைக் கவர்ந்து சென்றது நான் என்றறிந்தபின் உன்னை மீட்க வரமாட்டார்கள். அவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பது உன் அறியாமை. சீதையைக் கவர்ந்தது இராவணன் என்பதை அறிந்தால், தேவர்களும் அஞ்சிப் பின் வாங்குவார்கள். கேவலம் மானுடர்களால் என்ன செய்துவிட முடியும்?"

"என்னை வென்றதாகச் சொன்னாயே கார்த்தவீரியார்சுனன், அவன் உயிருடன் இருக்கும் போதே, மும்மூர்த்திகளுக்கு எதிரிலேயே, இந்திரன் முதலான தேவர்கள் எனக்குப் பணி செய்யுமாறு மூவுலகங்களையும் ஆண்டவன் நான் என்பதைத் தெரிந்து கொள். இராம லக்ஷ்மணர்கள் பசுபோன்ற சாதுவான மனிதர்கள்; வலிமையற்றவர்கள். வீணான நோன்புகளை உடையவர்களான அவர்களை, நான் கொல்ல மாட்டேன். அப்படிச் செய்வது என் வீரத்துக்கு இழுக்கு. அவர்களை எனக்குப் பணி செய்யுமாறு இங்கே அழைத்து வரச் செய்வேன்."

"அழகியே! குற்றமற்ற அழகு வாய்ந்தவளே! அற்பமான இயல்பும், அற்பமான ஆற்றலும் உள்ள அற்பமான மனிதர்களிடம், எனக்குக் கோபம் தோன்றாது, என்றாலும் இன்றே போய் அவ்விருவரையும் என் ஒரு கையால் பற்றி இங்கே கொண்டு வந்து சேர்க்கிறேன் பார். இராம லக்ஷ்மணர்கள் கேவலம் மனிதர்கள் என்றாலும், உன்னை எனக்குக் கொடுத்தவர்கள் அவர்கள் செய்திருக்கிற இந்த உதவிக்காக அவர்களை நான் கொல்ல மாட்டேன். மாறாக அவர்களைக் கொல்வது உனக்கு விருப்பமானது என்றால் சொல், அதனையும் ஆராய்ந்து செய்து முடிக்கிறேன்."

"அற்ப ஆயுள் கொண்டவளே! நான் அயோத்திக்குச் சென்று பரதன் முதலானவர்களைக் கொன்று, பிறகு மிதிலைக்குச் சென்று அனைவரையும் கொன்ற பிறகு இங்கே வந்து உன்னையும் கொல்வேன். என்னைப் பற்றி நீ தெரிந்து கொள்ளவில்லை." இவ்வாறு இராவணன் கோபம் கொண்டு இவ்வளவையும் பேசிவிட்டுத் தன் உடைவாளைப் பார்த்தான். "நீ என் விருப்பத்துக்கு இணங்காததால், உன்னைக் கொல்ல வேண்டிய காலம் பன்னிரண்டு மாதத்திலிருந்து இரண்டு மாதங்களாகக் குறைந்தது. ஆகவே, உனக்கு நேரப் போகும் முடிவை நன்றாக எண்ணிப் பார். உன் அறிவுக்குத் தோன்றிய முறையில் என்ன செய்ய வேண்டுமென்பதை எண்ணிப் பார்" என்று இராவணன் சொல்லிவிட்டு அருகே காவல் இருந்த அரக்கியர்களிடம் "இதோ பாருங்கள்! சீதையை பயமுறுத்தியோ, அறிவுரைகள் கூறியோ, ஆறுதலான வார்த்தைகள் சொல்லியோ, வேறு எந்த உபாயத்தைக் கடைப்பிடித்தாவது அவளை வசப்படுத்தி, என்னிடம் தெரிவிக்க வேண்டும். அப்படி நீங்கள் செய்யாவிட்டால், நான் உங்களுக்குக் கடுமையான தண்டனை தரவேண்டியிருக்கும்" என்று எச்சரித்து விட்டுப் போனான்.

இவ்வாறு அசோக வனத்துக்கு இரவில் வந்து சீதையை பயமுறுத்திவிட்டு அரக்கியர்களையும் எச்சரித்துவிட்டு, இராவணன் அரண்மனை திரும்பினான்.

இராவனன் திரும்பிச் சென்ற பிறகு சீதாபிராட்டியை அரக்கிகள் சூழ்ந்து கொண்டனர். பிராட்டியை கடுமையான குரலில் அதட்டினார்கள். மனம் போனபடி பேசினார்கள். ஒருத்தியை விட மற்றவள் அதிகமாக மிரட்ட முயன்றனர். கண்களால் விழித்துத் தீப்பொறி பறக்க ஓடி வந்தனர். கையில் தாங்கிய சூலத்தையும், வேலையும் அன்னையை நோக்கி வீசியபடி "இவளைக் கொல்லுங்கள், கொல்லுங்கள், கொன்று தின்னுங்கள்' என்று கூச்சலிட்டனர்.

அவர்களில் ஒரு அரக்கி கேட்டாள், "இராவணன் யார் தெரியுமா? இந்த உலகங்களைப் படைத்த பிரம்மாவின் பிள்லையான புலஸ்தியனின் மகன் விஸ்ரவசுக்குப் பிறந்தவன். மூவுலகுக்கும் தலைவன். ஆயிரம் சாகைகள் (பிரிவுகள்) கொண்ட சாம வேதத்தில் கரை கண்டவன். ஆன்ற பரந்த அறிவுள்ளவன். தீவினைகளை வென்றவன். உன்னிடம் உண்மையான ஆசை வைத்ததைத் தவிர வேறு என்ன தவறு செய்தான்" என்றாள்.

மற்றொரு அரக்கி சொல்கிறாள், "கொடியவளே! எம் அரசன் இராவனேஸ்வரனிடம், புண்ணில் கோலிட்டுக் குத்தியது போல கொடுஞ்சொற்களைப் பேசி, இவ்வுலகத்தில் வாழ்வோர் அழிந்து போகுமாறு செய்து விட்டாயே!" என்று. மற்றும் சில அரக்கிகள் சீதையிடம் "அறிவற்றவளே! நீ புகுந்த குலத்துக்கும், பிறந்த குலத்துக்கும் ஒரு சேர தீங்கிழத்து விட்டாய். நீ இராவணேஸ்வரனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் உன் இனமே முற்றாக அழிந்து போகும். நீ இனி பிழைக்க முடியாது. சொல்ல வேண்டியவற்றை சொல்லி விட்டோம்" என்றனர். அத்தனை அரக்கிகளும் தன்னைக் கொல்ல வருவது போல வந்த போதிலும், மனம் தளராத சீதை, கண்ணீர் விட்டுக் கதறி அழுதாள். அழுகையினூடே, தனது அவல நிலையை எண்ணி சிரிப்பும் வந்தது.

இந்த நேரத்தில் சீதையிடம் அன்பு கொண்டவளான திரிசடை "தாயே! நான் கண்ட கனவின் பலனை முன்பே நான் உனக்குச் சொன்னேன் அல்லவா? அதற்குப் பிறகும் நீ ஏன் வீணாகக் கவலைப் படுகிறாய்?" என்றாள்.

அதற்குச் சீதாபிராட்டி, "என் தாய் போன்றவளே! நீ சொன்னது நல்லது. இனி நான் வருந்த மாட்டேன்" என்றாள். பிறகு அரக்கியர் ஓரளவு அடங்கி விட்டார்கள். நல்ல அறிஞனும், இராவணனின் தம்பியுமான விபீஷணனின் மகளும், நல்ல அறிவாளியுமான அந்த திரிசடை என்பாள் சுற்றியிருந்த அரக்கியரிடம் சொன்னாள்: "இராவணனுக்கு பயந்து, நீங்கள் இந்தப் பெண்ணுக்குக் கொடுமை செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். இவள் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வில்லை" என்றாள். பிறகு அவர்களும் சீதையை மிரட்டுவதை நிறுத்திவிட்டனர்.

இதுவரை அந்த அசோகவனத்தில் சீதை இருந்த மரத்தடியில் நடந்த அவ்வளவையும், அதாவது, இராவணன் நள்ளிரவில் கண்விழித்துக் கொண்டு வந்து சீதையிடம் மன்றாடியது, காலில் விழுந்து கெஞ்சியது, மிரட்டியது, பின்னர் காவல் நின்ற அரக்கியர்க்கு உத்தரவிட்டுச் சென்றது, அரக்கியர் சீதையை அச்சுறுத்தியது, திரிசடை சீதையிடம் பேசியதும் பின்னர் அரக்கியர்களை அடக்கியதும் கவனித்துக் கொண்டு ஒரு மரக்கிளையில் மறைவிடத்தில் அமர்ந்திருந்த அஞ்சனாபுத்திரன், சரி, இதுவே சரியான தருணம் அன்னையின் முன் போய் தன்னை அறிமுகம் செய்து கொள்ள, என்றெண்ணி, ஓர் மந்திரத்தை உச்சரித்துச் சுற்றியிருந்த அரக்கியரைத் தூங்குமாறு செய்தான். அவர்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்ந்து போயினர்.

என்றுமில்லாத் திருநாளாக உறங்காத அரக்கியர் அனைவரும் ஒருசேற தூங்குவதை சீதை கண்டாள். தனக்குத் தாங்க முடியாத துன்பம் ஏற்பட்டுவிட்டதை உணர்ந்தாள். இதிலிருந்து தப்புவதற்கு எந்த வழியும் இல்லை என்று தீர்மானித்தாள். அவள் உள்ளத்தில் பயம் கவ்விக் கொண்டது. இராமன் மீதுள்ள அன்பால், தனக்குள் புலம்பத் தொடங்கினாள்.

"வலிமை மிக்க விதியே! கருங்கடலை ஒத்த என் இராமன், என்ன இந்தத் துயரத்திலிருந்து மீட்பானா? இராமனுடைய வில்லின் ஒலி இங்கே கேட்குமா? ஏ! சந்திரனே! விரைவில் விடியாத இரவே! அடர்ந்து அச்சுறுத்தும் இருளே! நீங்கள் பெண்ணாய்ப் பிறந்த என்னை மட்டுமே வருத்துகிறீர்களே, என்னைப் பற்றியும், நான் படும் துயரங்கள் பற்றியும் நினையாமல் இருக்கிற இராமபிரானை வருத்த மாட்டீர்களோ?"

"பூங்கொடிகளே! அனல் வீசி உலாவி வரும் வாடைக் காற்றைத் துணையாகக் கொண்டு என்னைத் துன்புறுத்துகிறீர்கள். என் உயிர் படும்பாடு உங்களுக்குத் தெரியவில்லையா? காட்டிலே இராமனிடம் சென்று இங்கு நான் படும் பாட்டைச் சொல்ல மாட்டீர்களா? ஆயிரம் கோடி துன்பங்கள் நேர்ந்த போதும், என் இராமன் என்னைக் காப்பாற்ற வராமல் இருக்க மாட்டார், என்ற துணிவில்தான் நான் உயிரை விடாமல் இருக்கிறேன்."

"நானும் இராமனுடன் காட்டிற்கு புறப்பட்டபோது, நீ மரங்கள் அடர்ந்த காட்டிற்கு வரவேண்டாம். நான் சில நாளில் திரும்பி வருவேன், அதுவரை அயோத்தியில் இரு என்று கூறினாரே. அவர் கருணை இவ்வளவுதானா? அவரைப் பிரிந்து அரக்கர்களுக்கிடையே நான் தவிக்க வேண்டியதுதானா?" இப்படியாகப் பலவாறு வருந்தி பெருமூச்சுவிட்டு, 'என் உடம்பில் உயிர் இருக்கும் வரை துன்பமும் என்னுடன் இருக்கும். உயிர் பிரிந்த பின்னர் தான் துன்பங்கள் விலகும்போலிருக்கிற்து என்று எண்ணினாள். எப்படியும் இராமன் வந்து என்னை மீட்பான் என்றுதான் நான் உயிர் வாழ்கிறேன். இவ்வளவு காலம் அரக்கியர் இடையில் நான் சிறை இருந்த பிறகு இராமன் என்னை ஏற்றுக் கொள்வானோ, மாட்டானோ? நான் இவ்வளவு பெரிய பழியை என்று அடைந்தேனோ, அன்றே நான் உயிரை விட்டிருக்க வேண்டும். நான் இன்னமும் உயிர் வாழ்தல் சுவர்க்கம் அடைவதற்காகவா?"

"மாய மானின் பின்னால், என் நாயகனைப் போக வைத்தேன். இலக்குவனை மனம் நோகும்படி ஏசி அனுப்பினேன். அதன் பயன் இராவணன் வீட்டிலே வந்து தங்கும்படி ஆகிவிட்டதே. இப்படிப்பட்ட நான் இனி உயிர் பிழைத்து வாழ்வதை உலகத்தார் ஏற்றுக் கொள்வார்களா? இராமபிரான் அரக்கர் கூட்டத்தை அழித்து என்னை சிறை மீட்கும் நாளில், "நீ இனி என் இல்லம் வரத் தக்கவள் அல்லள்" என்று தடுக்கும்போது நான் என் கற்பு நிலையை எங்ஙனம் நிரூபிப்பேன்? நான் இறந்து போவதே அறவழிக்கு ஒத்தது. இந்த அரக்கியரும் நன்றாகத் தூங்குவதால், என்னைத் தடுக்க இவர்களால் இயலாது. இதைவிட உயிரைவிட நல்ல நேரம் அமையாது" இப்படி நினத்த சீதை மலர்கள் நிறைந்த கிளைகள் அடர்ந்த ஒரு குருக்கத்தி மரத்திடை சென்றாள்.

அப்படிச் செல்லும் சீதாபிராட்டியின் உள்ளக் கருத்தை உணர்ந்த அனுமன் அச்சமடைந்தான். சீதையைத் தீண்டி தடுக்க அஞ்சி, "ராம், ராம்" என்று இராமபிரானின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே, அண்ட நாயகனின் அருள் தூதன் நான் என்று சொல்லிக் கொண்டே, அன்னை சீதாதேவியின் முன் சென்று குதித்துத் தொழுது வணங்கினான்.

"அடைந்தனென் அடியனேன் இராமன் ஆணையால்,
குடைந்து உலக அனைத்தையும் நாடும் கொட்பினால்
மிடைந்தவர் உலப்பிலர் தவத்தை மேவலால்
மடந்தை நின் சேவடி வந்து நோக்கினேன்".

"தாயே! இராமபிரானது ஆணையால் அடியனேன் இங்கு வந்தடைந்தேன். உலகத்தின் எல்லா பகுதிகளிலும் சென்று தங்களைத் தேடும்படி அனுப்பிய அளவற்ற பலரில், முற்பிறப்பின் தவப்பயனாய் அடியேன் தங்கள் சேவடியைத் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றேன். அன்னையே! தாங்கள் இங்கே இருப்பதை இராமன் அறியவில்லை. உன்னைப் பிரிந்த துக்கத்தில் உழன்று கொண்டிருக்கிறான். நான் யார் என்று என் மீது சந்தேகம் வேண்டாம். அதற்கு சரியான அடையாளம் என்னிடம் இருக்கிறது. உன்னிடம் சொல்லி, இராமன் சொல்லி அனுப்பிய சில உரைகளும் உண்டு, அவற்றையும் சொல்லுகிறேன்" இப்படிச் சொல்லிக் கொண்டே சீதையைத் தொழுதான் அனுமன்.

திடீரென்று வந்து குதித்து ஏதோ பேசுகின்ற இவனைப் பார்த்து சீதைக்குக் கடும் கோபம் ஒருபுறம். ஏனோ மனதில் தோன்றும் கருணை ஒருபுறம். இவன் அரக்கனாக இருக்கமுடியாது. ஐம்பொறிகளை அடக்கிய முனிவன் போலத் தோன்றுகிறான். ஒருக்கால் இவன் தேவனோ? இவன் இனிய சொற்களைப் பேசுகிறான், தூய்மையானவனாகத் தோன்றுகிறான்.

இவன் அரக்கனோ, தேவனோ, அல்லது குரக்கினத் தலைவனோ, யாராய் வேண்டுமானாலும் இருக்கட்டும். இவனால் ஏற்படப்போவது நன்மையோ, தீமையோ, எதுவானாலும் ஆகட்டும், என் எதிரில் வந்து இராமன் பெயரைச் சொல்லி, என்னை உருகச் செய்து விட்டானே. இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு? இப்படி நினைத்துக் கொண்டு சீதை அனுமனை உற்று நோக்குகிறாள்.

"வீரனே! நீ யார்?" என்று வினவினாள்.

சீதையின் சொற்களைத் தன் தலைமேல் கொண்ட அனுமன், தன் இரு கரங்களையும் தலைக்குமேலாகக் குவித்துக் கொண்டு பேசலானான்: "தாயே! உன்னைப் பிரிந்த பிறகு இராமனுக்கு ஒரு நண்பன் கிடைத்தான். அவன் சூரிய குமாரன், பெயர் சுக்ரீவன். குரக்கினத் தலைவன் அவன். அவனுடைய அண்ணனான வாலி முன்னர் இராவணனைத் தன் வாலில் பிணைத்து எட்டுத் திசைகளிலும் தாவி வெற்றி கொண்டவன். அவனை இராமன் ஒரே அம்பினால் கொன்றான். வாலியின் அரசை சுக்ரீவனுக்குக் கொடுத்தான் இராமன். நான் அந்த சுக்ரீவனுடைய அமைச்சன், என் பெயர் அனுமான்" என்றான்.

"சுக்ரீவனுடைய எழுபது வெள்ளம் அளவுள்ள சேனை, இராமபிரான் இடும் கட்டளைகளை நிறைவேற்றத் தயாராக இருக்கின்றன. அவற்றில் பல தாங்களைத் தேடி நாலாபுறத்திற்கும் விரைந்து சென்றுள்ளன. இழிதொழில் புரியும் இராவணன் தங்களைக் கவர்ந்து சென்ற போது, தாங்கள் அணிகலன்களை ஓர் துணியில் கட்டி நாங்கள் இருந்த ருசியமுக பர்வதத்தில் போட்டீர்கள். இந்தச் செய்தியை நான் இராமனிடம் சொன்னேன். அவர் என்னைத் தனியே அழைத்துத் தென் திசைக்குச் செல் என்று என்னைப் பணித்தார்."

"உன் அணிகலன்களைக் கண்டதும், இராமபிரான் பட்ட பாட்டைச் சொற்களால் சொல்ல முடியாது. நீங்கள் அன்று எறிந்து விட்டுச் சென்ற அணிகலன்களே இன்று உங்கள் மங்கல அணியைக் காப்பாற்றின. தெற்குப் புறமாகத் தங்களைத் தேடிவந்த இரண்டு வெள்ளம் வானர சேனைக்கு வாலியின் புதல்வன் அங்கதன் தலைவன். அவனே என்னை இலங்கைக்கு அனுப்பியவன். அவர்கள் என்னுடைய வரவை எதிர்நோக்கிக் கடலுக்கு அப்பால் காத்துக்கொண்டிருக்கிறார்கள்" என்றான் அனுமன்.

இதைக் கேட்டதும் சீதை மகிழ்ச்சியடைந்தாள். ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள்.

"பெரியோனே! இராமர் எப்படி இருக்கிறார்?" என்றாள்.

"அன்னையே! இராமனின் திருவுருவை வர்ணிக்க வார்த்தைகள் ஏது? இருந்தாலும் சொல்கிறேன் கேளுங்கள்" என்று இராமனது திருவடி முதல் திருமுடி வரை வர்ணிக்கலானான். ஒவ்வோர் அங்கத்தையும், அதன் பெருமை அழகு முதலியவற்றைச் சொல்லி விளக்கினான். இவ்வாறு அனுமன் சொன்ன சொற்களைக் கேட்ட சீதை தீயிலிட்ட மெழுகு போல உருகினாள். அவளை அனுமன் தரையில் விழுந்து வணங்கினான்.

No comments:

Post a Comment

Please give your comments here