Tuesday, May 18, 2010

i) தொடர்ச்சி ...

இஃது இங்ஙனமிருக்க, அயோத்தி நோக்கிப் புறப்பட்ட சுமந்திரன், அயோத்தி நகரையடைந்து இராமபிரான் கூறியவாறு முதலில் வசிஷ்டரைக் கண்டு நடந்தவற்றைக் கூறுகிறார். எல்லாவற்றையும் கேட்ட வசிஷ்டர் மிகவும் மனம் வருந்தினார். இனியும் தசரதன் உயிர் வாழ மாட்டான், முடிந்தனன் மன்னன்" என்கிறார்.

வசிஷ்டர் "நான் எவ்வளவு எடுத்துச் சொல்லியும், தடுத்தும் கேளாமல் இராமன் வனம் போய் விட்டானே! விதியை யாரால் வெல்ல முடியும்! என்று வருந்திப் புலம்பினார். பின்னர் சுமந்திரனையும் அழைத்துக் கொண்டு தசரதன் அரண்மனைக்குச் சென்றார்.

தேர் வந்து நின்றதும் இராமன்தான் வந்து விட்டான் என்று எண்ணிய தசரதன், அங்கே இராமனைக் காணாமல் சோர்ந்து போனான். தசரதன் சுமந்திரனை நோக்கி "இராமன் எங்கே இருக்கிறான்" என்று வினவினான். அவர் இராமன் இலக்குவனோடும், சீதையோடும் காட்டில் நெடுந்தொலைவில் உள்ளான் என்று சொல்லவும், தசரதன் உயிர் அவன் உடலைவிட்டுப் பிரிந்து போயிற்று.

தசரத மன்னனின் உடலைவிட்டுப் பிரிந்து போன அவனது ஆவியை தேவர்கள் விமானத்தில் வைத்துத் தாங்கிச் சென்று மோட்ச லோகத்தில் சேர்த்தனர். மீண்டும் பிறப்பு இல்லாத உலகம் இந்த வீட்டுலகம்.

தசரதன் உடலை சோதித்துப் பார்த்து அவனது உயிர் பிரிந்துவிட்டது என உணர்ந்த கோசலை சோகத்தால் துடிதுடித்து அழுதாள்; கதறினாள்.

கதையின் இந்த இடத்தில் வான்மீகம் கூறுவது சற்று வித்தியாசமானது. இராமன் முதலானோர் வனம் புகுந்த செய்தி அறிந்து தசரதன் உயிர் பிரிகிறது. அதனை அறியாத அந்தப்புற மகளிரும் தேவியரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை மன்னன் துயில் எழாமை கண்டு அனைவரும் பதறி அழுகின்றனர். அவ்வழுகையொலி கேட்டு கோசலையும் சுமித்திரையும் விழித்து எழுந்து செய்தியறிந்து பதைபதைத்து அழுது புரண்டனர்.

தசரதன் ஆவி பிரிந்ததறிந்த கோசலை அடைந்த மனவேதனை சொல்லும் தரமாமோ? பிரம்மன் முதலான உலகிலுள்ள எல்லாவற்றையும் படைத்த ஆதிமுதல்வனை மகனாகப் பெற பாக்கியம் செய்த அந்த கோசலை, தன் கணவன் உயிர் நீத்த துயரம் தாங்காமல், அமிர்தம் கிடைத்து அதனை இழந்தவள்போலவும், தன்னிடம் உருவான மாணிக்கத்தை இழந்த நாகம் போலவும், அருமையான தனது துணையை இழந்த அன்றில் பறவை போலவும் துயரக் கடலில் ஆழ்ந்தாள்.

அங்குள்ள சூழ்நிலையைப் புரிந்து கொண்ட வசிஷ்டர் நன்கு சிந்தித்து இறுதிக் கடன் செய்ய வேண்டிய புதல்வர்கள் எவரும் அருகில் இல்லை. பரதன் வருமளவும் மன்னன் உடலை எண்ணெயில் இட்டு கெடாது காத்தல் வேண்டும் என்று சொல்லி அவ்வாறே செய்விக்க ஏற்பாடு செய்தான்.

தசரதனின் மற்ற மனைவிமார்கள் உடன்கட்டை ஏற எண்ணியும், இப்போது வேண்டாம் என்று அவர்களைத் தடுத்து அனுப்பினார். பிறகு பரதனை உடனே அழைத்து வர தூதர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். சிறந்த ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேகய மன்னனுக்கும் பரதனுக்கும் பரிசுப் பொருட்கள் பலவற்றை அவர்களிடம் கொடுத்து, இராமன் வனம் சென்றதும், மன்னன் இறந்ததும் அங்கே தெரிவிக்காமல், முக்கிய பணி காரணமாக என்று சொல்லி பரதனை உடனே அழைத்து வர ஏற்பாடு செய்தார். அறிவில் சிறந்த மதியூகி அமைச்சர் செய்ய வேண்டிய முறையில் இந்தக் காரியங்களை வசிஷ்டர் செய்ததை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இனி, வனத்தில் விட்டுவிட்டு வந்த இராமனது நிலைமையைச் சற்று பார்ப்போம். இராமனைப் பின்தொடர்ந்து சென்ற அயோத்தி நகர மாந்தரனைவரும் தூங்கி விழித்தெழுந்தவுடன் அங்கு இராமபிரானைக் காணாமல் துயருற்றனர். பின்னர் தேர்த்தடம் சென்ற பாதையோடு செல்லத் தொடங்கினார்கள். தேரின் தடம் அயோத்தி நோக்கிச் செல்கிறது என்றுணர்ந்து, இராமபிரான் நகரம் திரும்பிவிட்டான் எனக் கருதி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இராமன் ஊர் திரும்பிவிட்டான் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சியோடு நகரத்திற்குள் புகுந்த மக்களுக்கு முதலில் மன்னன் இறந்துபோன செய்தியும், இராமன் வனம் போய்விட்ட செய்தியும் கிடைத்தன. அளவற்ற துயரமுற்றனர்.

அங்கே கானகத்தில் இராமன், இலக்குவன், சீதை மூவரும் கங்கையின் வடகரையை சென்றடைகின்றனர். அங்கு இருந்த முனிவர்களோடு தங்கி, அவர்களது உபசரிப்பை ஏற்றனர். அங்கே இவர்கள் கங்கை நதியில் நீராடி மகிழ்ந்தனர். இராமனின் திருவடி பட்ட மாத்திரத்தில் சகல பாவங்களும் நீங்குமெனின், அவன் மேனி முழுதும் கங்கையில் அமிழ்ந்து நீராடியதால், அந்த கங்கை நதியின் சிறப்பு அதிகமாயிற்று; கங்கை புனிதம் அடைந்தது.

கங்கைக் கரையில் முனிவர்களோடு விருந்துண்டு தங்கியிருந்த தருணத்தில், அந்தக் காட்டில் வசிப்பவனும், கங்கை நதியில் படகோட்டும் உரிமை பெற்றவனுமான குகன் எனும் வேட்டுவ அரசன், தன் உற்றார், பரிவாரங்கள் புடைசூழ இராமன் வந்திருப்பதறிந்து, அவனைக் காண வந்து சேர்ந்தான். குகன் சிருங்கிபேரம் எனும் இடத்திற்கு அரசனாவான்.

வாயிற்புறத்தில் பெரிய கூட்டம் எழுப்பும் ஓசை கேட்டு இலக்குவன் முனிவர்களோடு இராமன் பேசிக்கொண்டிருந்த ஆசிரமத்தின் வாயிலுக்கு வந்து என்னவென்று பார்க்கிறான். குகன் தன் பரிவாரங்கள் சூழ நிற்பது கண்டு நீங்கள் யார்? என்ன காரியமாக வந்திருக்கிறீர்கள் என்று வினவினான்.

அதற்கு குகன் "ஐயனே! நாவாய்களை இந்த கங்கை நதியில் ஓட்டும் வேட்டுவனான நான், இராமபிரான் கழல் சேவிக்க வந்தேன்" என்றான்.

இதனைக் கேட்ட இலக்குவன் "சற்று இருங்கள்' என்று சொல்லி உள்ளே போய் இராமனிடம் "கொற்றவ! தாயினும் மிக நல்லவனான தூயவன் ஒருவன், இந்தக் கங்கை நதியில் படகு செலுத்துபவன், சிருங்கிபேரத்தின் மன்னன், குகன் என்பான் தங்கள் திருவடி சேவிக்க விரும்பி வந்திருக்கிறான்" என்று சொல்ல, இராகவன் "உடனே அவனை உள்ளே வரச் சொல்" என்கிறார். இலக்குவன் குகனிடம் வந்து உள்ளே வரச் சொல்லி அழைக்கிறான்.

உள்ளே நுழைந்த குகன் கண்கள் களிக்கும்படி இராமனை தரிசனம் செய்து, மேனி வளைத்து, கைகளால் வாய் பொத்தி பணிவோடு நின்றான். இராமன் அவனை அமரும்படி சொல்லியும் குகன் அமரவில்லை. "ஐயனே! தேவரீர் அமுது செய்தருளும்படி தங்களுக்காக தேர்ந்தெடுத்த தேனும், மீனும் இங்குக் கொண்டு வந்தேன், தாங்கள் தயைகூர்ந்து அவற்றை ஏற்றுக்கொண்டு அமுது செய்தருள வேண்டும்" என்றான்.

புன்சிரிப்போடு இராமன் முனிவர்களை நோக்கினான். தவவொழுக்கம் பூண்ட நான் உண்ணுதற்கு முடியாதவற்றைக் கொணர்ந்த அவன் வெள்ளை உள்ளத்தையும் மிகுதியான அன்பையும் எண்ணி இராமன் நெகிழ்கிறான். "உள்ளார்ந்த அன்போடு நீ கொணர்ந்த இவற்றை நாம் உண்டதாகவே எண்ணிக்கொள்" என்றான்.

"நாங்கள் இன்றிரவு இங்கே தங்கி நாளை விடியற்காலை கங்கையைக் கடந்து அப்பால் செல்ல நினைக்கிறோம். நீ இப்போது உனது பரிவாரங்களோடு ஊருக்குத் திரும்பிச் சென்று நாளைக் காலையில் படகுடன் இங்கு வந்து சேர்வாயாக!" என்றான்.

தவக்கோலம் பூண்டிருந்த இராமனைப் பார்த்து குகன் துயரமடைந்து "ஐயனே! தங்களைப் பிரிந்து செல்ல என் மனம் இடம் தருவதில்லை. நான் தங்களுடனே இங்கேயே தங்கிவிடுகிறேன்" என்றான்.

அதுகேட்ட இராமன் "அப்படியாயின் நீயும் இன்று எங்களோடு இருக்கலாம்" என அனுமதித்தான்.

உடனே குகன் தன் சேனையை அழைத்து காட்டு மிருகங்கள் அங்கிருப்பவர்களைத் துன்புறுத்தாதவாறு காத்திட அந்தத் தவப் பள்ளியைச் சுற்றி காவல் இருக்குமாறு பணித்துவிட்டுத் தானும் காவலுக்கு நின்றான்.

"தாங்கள் திருநகர் நீங்கி அயோத்தியைவிட்டு வனம் புகுவதற்கு என்ன காரணம்" என குகன் வினவ இலக்குவன் நடந்த வரலாற்றை அவனுக்கு உரைக்கிறான். அதைக் கேட்டு குகன் மிகவும் வருந்தி இராமன்பால் மேலும் பக்தி கொண்டான்.

அன்றிரவு இராமனும் சீதாபிராட்டியும் நாணல்களை விரித்து அதில் படுத்தனர். இளையபெருமாள் இரவு முழுவதும் கண் துஞ்சாமல் வில் ஏந்திய கையனாய் காவல் இருந்தான். இதையெல்லாம் குகனும் கண்விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பொழுது விடிந்தது. இராமன் எழுந்து கடமைகளையெல்லாம் முடித்து, அங்கிருந்து புறப்பட விரைந்து சென்று "படகினைக் கொண்டு வா" என்று குகனைப் பணித்தான்.

அப்போது இராமபிரானை பிரிய மனமில்லாத குகன், அவன் கங்கையைக் கடந்தபின் அங்கு தங்காது சென்றுவிடக் கூடுமென எண்ணி, அவன் தன்னோடு தம் ஊரிலேயே தங்கிவிட வேண்டுமென்று இறைஞ்சுகிறான்.

குகனது அன்பினை உணர்ந்த இராமன் அவனிடம் மிக்க கருணையோடு தான் மீண்டும் வரும்போது வந்து தங்கிச் செல்வதாகக் கூறுகிறான். குகன் கொண்டுவந்த படகில் மூவரும் ஏறி கங்கையைக் கடக்கின்றனர். அக்கரை சென்றபின் இராமனைப் பிரிய மனமின்றி குகன் மறுபடி தன் ஆசையைக் கூறுகிறான்.

அன்போடு அதனை மறுத்த இராமன் குகன்பால் கொண்ட அன்பால், "தம்பி! குகா! நாங்கள் சகோதரர்கள் நால்வர்தான் இருந்தோம். இப்போது உன்னோடும் கூட ஐவரானோம் என்று சொல்லி விடைபெற்றுச் செல்கிறான்.

பிறகு மூவரும் கங்கைக் கரையின் தென்பகுதியில் தெற்கு நோக்கிப் பயணம் செல்கின்றனர். வழிநடந்து செல்லுகையில் சூரிய அஸ்தமன காலத்தில் ஓர் ஆசிரமத்தைக் காண்கின்றனர். அந்த ஆசிரமத்தில் வசித்து வந்து பரத்வாஜ முனிவர் இவர்களை வரவேற்று உபசரித்தார். அவர் இராமனைத் தழுவிக்கொண்டு விம்மி, அவன் வனவாசம் செய்ய வந்த விவரத்தைக் கேட்கிறார். நடந்தவற்றை இராமன் சொல்ல, முனிவர் வருத்தமடைகிறார். பிறகு முனிவர் இராமனைத் தன்னுடனேயே தங்கிவிடுமாறு வேண்டுகிறார்.

இந்த இடம் அயோத்திக்கு மிக அருகில் உள்ளது. கோசல நாட்டு மக்கள் இந்த இடத்துக்கு வந்து கூடுவார்கள். அது உங்களைப் போன்ற முனிவர்களுக்கெல்லாம் இடையூறாக இருக்கும். எனவே, தான் தொடர்ந்து வனத்துக்குள் செல்வதே முறை என்றான்.

உடனே பரத்வாஜ முனிவர் சித்திரகூட மலையின் பெருமைகளையெல்லாம் கூறி அங்கேதான் அவர்கள் தங்க சிறந்த இடம் என்று கூறுகிறார். மூவரும் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு யமுனா நதிக் கரையை அடைகின்றனர். அங்கே கிடைத்த மூங்கிற்கழிகளை, ஒத்த அளவாகத் துண்டித்து மாணையெனும் காட்டுக் கொடியைக் கயிறாகக் கொண்டு தெப்பமொன்று கட்டி, அதில் ஏறி யமுனையாற்றைக் கடக்கின்றனர். இராமனையும், சீதையையும் படகில் இருத்தி இலக்குவன் அதைத் தள்ளிக் கொண்டு நீந்திக் கடக்கிறான். பிறகு நெடுந்தூரம் பயணம் செய்து ஒரு பாலைநிலத்தை அடைந்தனர். இராமன் வருகையால் அந்த பாலைநிலம் குளிர்ந்து நீர்வளம் உள்ள இடமாக ஆயிற்று. பிறகு அவர்கள் அவ்விடத்தைக் கடந்து சித்திரகூட மலையைக் கண்டனர்.

இயற்கை வளங்கள் நிரம்பிக் கிடக்கும் அந்த சித்திரகூடக் காட்சிகளையெல்லாம் இராமன் சீதாபிராட்டிக்குக் காட்டுகிறார். அங்கே மேகங்கள் யானைகளைப் போல வித்த்யாசமின்றி தோன்றும் காட்சிகளையும், மரகத பச்சையொளி சூரியன் தேரில் பூட்டிய குதிரைகள் போலவும், மூங்கில் புதரில் சிக்கிய பாம்பின் உரித்த தோல்கள் மாளிகைமீதில் பறக்கும் கொடிகள் போல ஆடியதும், மலைச் சிகரங்கள், அருவிகள், பசுமையான சோலைகள், களிறுகள் சூல்கொண்ட பிடிகளுக்குத் தேன் கொடுக்கும் காட்சிகள், கடுவன்களும் மந்திகளும் தாவி விளையாடும் காட்சிகள், கொடிச்சியர் கவண் வீசும் காட்சிகள், நீர் வற்றிய காட்டாறுகள், கற்பக மலர்கள், அசுணப் பறவைகள் பாடல் கேட்டுத் துயிலும் காட்சிகள், அருவி நீரின் நறுமணம் இப்படி மாறி மாறித் தோன்றும் காட்சிகளையெல்லாம் இராமன் சீதைக்குக் காட்டி மகிழ்கிறார்.

பின்னர் அவ்விருவரும் கண்மூடி தியானத்தில் அமர்ந்து பின் இலக்குவன் அமைத்த ஒரு பர்ணசாலையில் தங்குகின்றனர். இங்கே இலக்குவன் மூங்கில்களை அளவாக வெட்டி, அதனை நட்டு அதன்மேல் வரிச்சுக் கோல்களை பரப்பி, உலர்ந்த தேக்கு இலைகளால் கூரை அமைத்து, அதன் மேல் நாணற் புற்களைப் பரப்பி, நாற்புறமும் மூங்கில் கால்களை நெறுக்கமாக நாட்டி அதன் மேல் மண் பூசி சுவர் அமைத்த வகையினை விவரமாகக் கூறுகிறார் கம்பர்.

உலகெலாம் படைக்கும் பெருமையுடைய இராமன் ஒரு சிறு குடிலில் குடி புகுந்தான். இலக்குவனுக்கு, தான் துன்பம் தருவதாக இராமன் கூற, இலக்குவன் இது தனக்குத் துன்பமன்று என்றும், இராமன் இப்படி காட்டில் ஒரு குடிலில் இருக்கும்படி ஆயிற்றே என்பதுதான் தனது துயரம் என்றும் கூறினான்.

இராமனும் தம்பியை தேற்றக் கருதி அரசச் செல்வங்கள் அழியக் கூடியது, ஆனால் இந்தத் தவச் செல்வமோ மும்மைக்கும் பயன் தரும் என்கிறான். இராம, லக்ஷ்மண, சீதையை இப்படியே சித்திரகூட பர்வதத்தில் விட்டுவிட்டு, நாம் சற்று பின்னோக்கிப் போய் கேகய நாடு சென்றிருந்த பரதனைப் பற்றி இப்போது பார்ப்போம்.......

வசிஷ்ட முனிவர் பரதனை அழைத்து வரும்படி அனுப்பிய தூதர்கள் விரைந்து சென்று இரவு பகலாகப் பயணம் செய்து கேகய நாடு சென்றடைந்தனர். வந்த தூதர்களை வரவேற்ற பரதன், தன் தந்தை தீதின்றி நலமாக இருக்கிறாரா எனக் கேட்டான். அதற்கு அந்த தூதர்கள் தந்தை "வலியன்" (நன்றாக இருக்கிறான்) என பதில் சொல்லுகிறார்கள். என் அண்ணா இராமன் இளவல் இலக்குவனுடன் நலம்தானே? எனக் கேட்கிறான். ஆம் என அவர்கள் கூற தலைமேல் கரம் குவித்து அவர்களை மானசீகமாக வணங்குகிறான் பரதன். பிறகு அனைவரது நலனையும் கேட்டறிந்தபின் அவர்கள் கொணர்ந்த திருமுகத்தை வாங்கினான்.

தந்தையின் திருமுகமாதலால் அதனை மரியாதையோடு வாங்கி எழுந்து நின்று தலைமேற் கொண்டான். பின்னர் பரதன் தனது சேனை மற்றும் பரிவாரங்களுடன் அயோத்திக்குப் புறப்படுகிறான். நெடுந்தூரம் பயணம் செய்து கோசல நாட்டின் எல்லையை அடைகிறான். ஏழு நாட்கள் பயணம் செய்து இந்த தூரத்தைக் கடக்கிறான்.

எழுச்சியும், துள்ளலும், மகிழ்ச்சியும் தாண்டவமாடிய கோசல நாடு துயரத்தில் ஆழ்ந்திருந்தது. மக்கள் துன்பக்கடலில் ஆழ்ந்து இருப்பதைக் கண்டான். எங்கு நோக்கினும் துயரக் காட்சிகள். வயலில் நெற்கதிர்கள் தலைசாய்ந்து மணிகள் உத்ர்ந்து கிடந்தன, பெண்கள் தம் தொழிலில் நாட்டமின்றி ஊடலில் இருந்தனர், இப்படி நாடு களை இழந்து பிணம்போல காட்சிதந்தது.

நாட்டின் அவல நிலை கண்டு பரதன் இங்கு ஏதோ பெருந்தீங்கு நிகழ்ந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டான். அப்படி என்ன நிகழ்ந்தது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் தேரினை விரைந்து செலுத்தச் செய்தான். நகரின் பெருவாயிலை அடைகிறான். அங்கே மதிலிலும் மாளிகைகளிலும் வானளாவப் பறந்து கொண்டிருக்கும் கொடிகளைக் காணவில்லை. நகரத்தில் இரப்போர்க்கு வழங்கும் கொடைகள் நடைபெறவில்லை. மங்கலம் பாடுவோர் கூத்தர் முதலானோர் பரிசு பெற்றுச் செல்லும் காட்சிகளைக் காணவில்லை. அந்தணர்கள் பரிசு பெற்றுச் செல்லும் காட்சிகள் காணப்படவில்லை. யாழ் இசையும் மாந்தர் ஆடும் சிலம்பின் ஓசையும் கேட்கவில்லை. வீதிகள் அரவமின்றி வெரிச்சோடிக் கிடந்தன. பாழ்பட்ட பகைவர் ஊர் போலவும், திருமாலும் திருமகளும் நீங்கிய பொலிவிழந்த பாற்கடல் போலவும் அயோத்தி வறிதாகிப் போனது.

பரதனது தேர் வேகமாகச் சென்று அரசனது மாளிகையை அடந்தது. தந்தையை எங்கும் காணாமல், தந்தை இறந்திருக்கக்கூடுமோ என்று அச்சம் தோன்றியது. உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென வேகமாகப் புறப்பட்ட பரதனிடம் கைகேயி அனுப்பிய தூதர்கள் வந்து "உன் தாயார் உன்னை உடனே பார்க்க விரும்புகிறார்கள்" என்ற செய்தியைக் கூறினார்கள்.

வந்து வணங்கிய பரதனைக் கைகேயி தழுவிக் கொண்டாள். பின் தன் பிறந்த வீட்டினரின் நலம் வினவ, சுருக்கமாக விடையளித்தான் "தீதிலர்" என்று. தந்தையை எங்கு தேடியும் காணவில்லையே, தந்தை எங்கே? என்றான் பரதன்.

தந்தை எங்கே என்றவுடன் மனம் கலங்க வேண்டிய கைகேயி சற்றும் வருத்தமின்றி அவர் இறந்த செய்தியைச் சொல்லி நீயும் வருந்தாதே என்றாள்.

தந்தையைக் காணாது ஏங்கித் தவித்த பரதனுக்கு, கைகேயியின் சொற்கள் பேரிடியென தாக்கி மயங்கி தரையில் சாய்ந்தான். துயரத்தால் தாக்குண்ட பரதன் தன் தாயிடம் "பிறர் சொல்ல அஞ்சும் செய்தியை நீ வாய் கூசாமல் சொல்கிறாயே! உன்னிலும் கொடியவள் உலகில் உண்டோ?" என்றான்.

தசரதன் பெருமையைச் சொல்லிச் சொல்லி புலம்புகிறான். கண்களில் நீர் கொட்ட பரதன் துயரக் கடலில் நீந்த கைகேயி அவனைத் தேற்றுகிறாள்.

தந்தை போய்விட்டான், இனி அவனை நினைந்து புலம்புவதில் பயனில்லை. இராமனைக் கண்டு தரிசித்து அதனால் மன ஆறுதல் பெறலாம் என்று எண்ணி "என் அண்ணா இராமனை தரிசிக்க வேண்டும். அவர் எங்கே?" என்றான்.

சிறிதுகூட வருத்தமின்றி கைகேயி சொன்னாள்: "இராமன் தம்பியோடும் தேவியோடும் கானகத்தில் உள்ளான்" என்று. இதனைக் கேட்ட பரதன் தீயை உண்டவன் போல ஆனான். இராமபிரான் வனம் போனான் என்றால் என்ன காரணமாக இருக்கும். குரு துரோகம், தெய்வக் குற்றம் இவற்றில் எது காரணமாக இருக்கும் என்றி மதி மயங்கினான்.

பிறர்க்குத் தீங்கு எண்ணாத மனத்தினன் இராமன். அப்படியிருக்க அவன் வனம் போக காரணமென்ன என்றான் பரதன். சக்கரவர்த்தி உயிருடன் இருக்கும் போதே இராமன் காட்டுக்குப் போய்விட்டான் என்று பதில் கூறினாள் கைகேயி. ஏன் அப்படி நடந்தது? என்றான் பரதன்.

"நான் உன் தந்தையிடம் இரு வரங்களைக் கேட்டேன். அவற்றைப் பெற்றுக் கொண்டு, ஒரு வரத்தினால் இராமனை காட்டுக்குப் போகச் செய்தேன். மற்றொரு வரத்தினால் நாடு உனக்கு உரியது என்று ஆக்கினேன். அதை பொறுக்கமாட்டாமல், உன் தந்தை, தனது உயிரை நீக்கினான்" என்றாள்.

காதுகளில் தீ புகுந்தது போல இந்தச் சொற்களைக் கேட்ட பரதன் செவிகளைப் பொத்திக் கொண்டான். (கரங்கள் செவி கூடின). கைகேயி சொன்ன சொற்கள் பரதனின் செவி புகுந்ததும் -- அவன் கன்னங்கள் சினத்தால் துடித்தன; மயிர்க்கால்கள் தீ உமிழ்ந்தன; புகை சூழ்ந்தது; வாய் மடித்துக் கரங்கள் ஒன்றோடொன்று மோதி அறைந்தன; சினத்தீ பரதனை முழுவதுமாய் ஆட்கொள்ள வானவரும், அவுணர்களும் அஞ்சினர்; துஞ்சினர்; திசை யானைகள் மருண்டன; சூரியனும் திசை மாறினான்; கடும் சின காலனும் கண்களை மூடிக் கொண்டான்.

அந்த கொடிய வார்த்தைகளைச் சொன்ன கைகேயியை தாயென்றும் பாராமல் கொல்ல என்ணிய பரதன், இராமன் கோபிப்பானே என்று எண்ணி சும்மாயிருந்தான்.

"உன் கொடிய சூழ்ச்சியால் என் தந்தை மாண்டு போனான்; அண்ணா இராமன் பெரும் தவம் மேற்கொண்டான். இதைக் கேட்ட பிறகும் உன் வாயை கிழிக்காமல் இருக்கிறேனே! பாவத்தால் நீ பெற்ற இந்த ராஜ்யத்தை நான் ஆண்டவனாகவே ஆகிவிட்டேனே!"

"முதலில் உணராது தவறு செய்திருந்தாலும், அதன் வினை தெரிந்த பிறகு நீ மாண்டுபோயிருக்க வேண்டும். அஃதின்றி இன்னும் நீ உயிரோடு இருக்கிறாயே! உன்னைக் கொன்றுவிட நினைக்கிறேன். ஆனால் அந்த தாயினும் நல்ல இராமன் என் மீது கோபப்படுவானே என்று தயங்குகிறேன்".

"சூரிய குலத்தில் தோன்றிய நான், தாயின் தகாத சூழ்ச்சியால் கிடைத்த அரசை பெற்றேன் என்று பிற்காலத்தில் பழி ஏற்கும்படி செய்து விட்டாயே! நீ செய்த கொடிய செயலால் ஒருவர் (தசரதன்) மாளவும், வனம் போய் மீண்டுவர ஒரு வீரன் (இராமன்) இருக்கவும், நீ விரும்பிய இந்த நாட்டை நான் (பரதன்) ஆளவும் செய்தாயென்றால் இது நல்ல தர்மம் தான்!" என்று இகழ்ச்சியாகக் கூறினான் பரதன்.

"கொண்ட கணவனையே கொன்று விட்டாயே! பாம்பு போன்ற பாவி! நீ இன்னும் என்னென்ன தீமைகள் புரிவாயோ? தன் மக்கள் நலனைக் கருதுபவள் தாய். கணவன் வழி நிற்பவள் பெண். நீ இவ்விரண்டு வகையிலும் இல்லாமல் மகனுக்குப் பழியையும், கணவனுக்கு மரணத்தையும் கொடுத்து விட்டாயே! நோய் உடலைத் தாக்கி அவ்வுடல் அழியும் போது தானும் அழிந்து விடும்; ஆனால் நீ இன்னும் இருக்கின்றாயே! நீ நோய் அல்ல; பேய்! நீ இவ்வுலகத்தில் வாழ அருகதை அற்றவள்".

"உன் செயலால், உனக்கோ, எனக்கோ, நாட்டுக்கோ நல்லது ஒன்றும் இல்லை. தர்மம் கெட்டது, பழி சேர்ந்தது; நாட்டுக்குத் துன்பம் நேர்ந்தது. உனக்கு இந்த சூழ்ச்சியைச் சொன்னது யார்? எனக்கு இந்த அரசும் வேண்டாம், இந்தப் பழியும் வேண்டாம்."

"நான் நேரடியாகச் செய்யாமல், உன் மூலமாக இத்தீச் செயல்களைச் செய்ததாகத்தான் உலகத்தார் சொல்லுவார்கள். "எய்தவன் இருக்க அம்பை நோவாவேன்" என்று நீ குற்றமும் பழியும் அற்றவளாகி விடுவாய்! ஆனால் எனக்கு நேர்ந்த பழியை மாற்ற முடியாது. உன்னைக்கூட நல்லவளாக்கி விட்டேன் நான்" என்று பரதன் நொந்து கொள்கிறான்.

"எனக்கு ஏற்பட்டுவிட்ட இந்தப் பழிக்கு அஞ்சி நான் உயிரை மாய்த்துக் கொள்வதைக் காட்டிலும், உயிரோடு இருந்து நான் குற்றமற்றவன் என்பதை இந்த உலகுக்குத் தெரியச் செய்வதே மேல் என்று எண்ணுகிறேன். அப்படி நான் பழியிலிருந்து விடுபடுவேனானால், நீதான் காரணம் என்று உலகம் அறிந்து கொண்டு உன்னை இகழும். நஞ்சு, உண்டவரைக் கொல்லும், நீ செய்த பழி உன்னைக் கொல்லத்தான் போகிறது".

"பிறர் நினக்கக்கூட அஞ்சுகின்ற கொடுமையான செயலைக் கூசாமல் செய்துவிட்ட பெரும் பாவி நீ! உன் பாவ வயிற்றில் பிறந்து விட்டதால், அந்தப் பாவம் என்னையுமல்லவா தொடரும். அதனால் நான் செய்யாத பிழைக்கு நானே காரணம் போலவும், அதனால் மனம் வருந்தி துன்புறும் நிலைக்கு ஆளாகிவிட்டேன்! இந்தப் பழி நீங்கவேண்டுமானால் நீ இராமனுக்கு அளித்த தவ வாழ்க்கையை நானே மேற்கொள்ளுகிறேன். இது யாருக்காகவும் அல்ல, தர்மத்துக்காகச் செய்கிறேன்".

"எனக்கு நன்மை தருவது தவம் என்று சொன்னேன். உனக்கு நன்மை தருவது எது தெரியுமா? நீ உயிர்துறத்தலே நன்று. அதுதான் நியாயம். நீ உயிர் துறந்தால் கைகேயி சுய உணர்வு இல்லாமல் தவறு செய்து விட்டாள், அது தவறு என்பது உணர்ந்ததும் உயிரை விட்டு விட்டாள்; அவள் குற்றமற்றவள் என்ற புகழையாவது நீ பெறுவாய். அதனால் உனது பாவங்களும் தீர்ந்து போகும்" என்றான் பரதன்.

எவ்வளவு எடுத்துக் கூறியும் கைகேயி மனம் மாறாதது கண்டு பரதன், இனி இங்கிருப்பதில் பயனில்லை. எல்லா துன்பங்களையும் நீக்கி இதமளிக்க வல்லவள் கெளசல்யா தேவிதான். அந்த அன்னையைச் சென்று காண்கிறேன் என்று புறப்பட்டான்.

(சுமந்திரன் முதலியோர் அருகில் இருப்பதையும் பாராது பரதன் கைகேயியை வைது கொண்டிருக்க அவன் பேச்சொலியால் அவன் வந்திருப்பதை அறிந்த கெளசல்யா தேவி அவனைக் கண்டு பேசக் கருதி சுமித்திரையுடன் கைகேயியின் அரண்மனைக்குப் புறப்பட, அப்போது பரதன் சென்று அவளைக் கண்டு வணங்கியதாக வான்மீகத்தில் சொல்லப் படுகிறது.)

கோசலையைக் கண்ட பரதன் அடியற்ற மரம்போல அவள் திருவடிகளில் வீழ்ந்து, அவற்றைப் பற்றிக் கொண்டு புலம்புகிறான். துயரம் மிகுந்து எழ சிறிது நேரம் பேசமுடியாமல் திணறியபின் பேசுகிறான்.

"அம்மா! எந்தை எவ்வுலகில் உள்ளார்? என் அண்ணா இராமன் எங்கிருக்கிறார். இந்த நிலையைக் காணவா நான் தனியனாய் இங்கு வந்து சேர்ந்தேன். என் மனத்துயருக்கு பதில் சொல்லுங்கள் அம்மா!" என்றான்.

கோசலையைக் கண்டதும் அவன் துயரம் அதிகரித்து தரையில் புரண்டு அழுகிறான். தந்தையைக் கண்டு அவர்தம் திருவடிகளைத் தொழும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டேனே! நாடு காக்க வேண்டிய இராமன், காட்டுக்கா செல்வது? நீங்கள் அதனைத் தடுத்திருக்க வேண்டாமா? நீங்கள் தவறிவிட்டீர்களே அம்மா!"

"இந்தக் கொடுமையைச் செய்தவர்கள் தம் குலத்தோடு அழிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அழியவில்லையே. இவற்றிற்குக் காரணமான கொடியவள் கைகேயியின் வயிற்றில் பிறந்தேனல்லவா? நான்தான் வஞ்சகன். எனவே அதைச் சொல்லவும் எனக்கு அருகதை இல்லை. இந்தத் துயரம் நீங்க வேண்டுமானால், நான் இறந்து ஒழிதல் ஒன்றே வழியாகும்".

"இதுவரை பழிபாவம் செய்து கெட்ட பெயர் பெற்றவர் ஒருவரேனும் நம் குலத்தில் உதிக்கவில்லை. நான் வந்து பிறந்தேனே பழிகாரனாக! நாட்டை முன்பு காத்து வந்தவரும் இனிக் காக்கும் உரிமை பெற்றவரும் நாட்டில் இல்லாமல் போய்விட்டார்களே! நாடு கண்களை இழந்து தவிக்கிறதே; இந்த நாடு இந்த நிலையை அடையலாகுமோ?" என்று பரதன் புலம்புகிறான்.

இதனை கோசலை கேட்டாள். உயர்குடிப் பிறப்பும் அதற்கேற்ற பொறுமை, கற்பு நெறி முதலான சீரிய குணங்களைப் பெற்றவளல்லவா கோசலை. பரதனுடைய மனநிலையை நன்கு புரிந்து கொண்டாள். அவனது தாய் கைகேயியின் சூழ்ச்சியில் அவனுக்கும் பங்கு இருக்குமோ என முன்பு கருதியிருந்தமையால் ஏற்பட்ட கோபம் மாறி, மனம் நெகிழ்ந்து அவனைப் பார்த்துச் சொல்கிறாள்.

"பரதா! உன் தாய் செய்த இந்த சூழ்ச்சி பற்றி உனக்கு முன்பே தெரியவில்லை போலிருக்கிறதே!" என்றாள்.

இந்த சொற்களைக் கேட்டதுதான் தாமதம். கோசலைகூட தன்னை சந்தேகித்து விட்டாளே என்ற எண்ணம் அவனை வேதனைப் படுத்தியது. அடிபட்ட சிங்கம் போல தனது மனக் குமுறலை வெளிப்படுத்தலானான், அடுக்கடுக்கான சூளுரைகளின் மூலம்.

"தாயே! கைகேயி செய்த சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமானால் நான் நரகத்துக்குப் போவேன். எப்படி தெரியுமா? தர்மம் கெடும்படி தீய வழியில் செல்பவனும், இரக்கமற்ற கல்மனம் படைத்தவனும், மாற்றான் மனைவி மீது காமம் கொண்டு அவள் வாயிலில் காத்துக் கிடப்பவனும், காரணமின்றி பிறர் மீது கோபப்படுபவனும், கொடுமை செய்து உயிர்களைப் பறிப்பவனும், தவசிகளுக்குக் கடுந்துன்பம் விளைவித்தவனும் எந்த நரகத்துக்குப் போவார்களோ அந்த நரகத்துக்கு நான் போவேன்".

""என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் ஐம்பெரும் பாவங்களான அரசன், ஆசிரியர், தாய், தந்தை, தமையன் ஆகியோரையும் பெண்களையும் வாளால் கொன்றவன், அரசனுக்குச் சேரவேண்டிய பொருட்களை வஞ்சனையால் கவர்ந்தவன், போரில் எதிரியிடம் தோற்று புறம் காட்டி ஓடிவந்தவன், பிறரிடம் யாசகம் பெற்றுக் கொணர்ந்த பொருளை அவர்களைத் தாக்கி அபகரித்தவனும் எந்த நரகத்துக்குப் போவார்களோ அந்த நரகத்துக்கு நான் போவேன்".

"என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் துளவ மாலை அணிந்த திருமாலை தலைவன் (பரம்பொருள்) அல்ல என்று சொன்னவன், அரிய ஒழுக்கம் அமைந்த அந்தணர்களுக்குப் பிழை புரிந்தவன், குற்றமற்ற வேத நெறியைப் பேணாமல், தவறுகளை இழைத்தவன், பொய் எனும் பேய் பிடித்த மனத்தினன், ஆகியோர் போகும் நரகத்துக்கு நான் போவேன்".

"என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் தாய் பசியால் வருந்த, தான் மட்டும் வயிறு முட்ட சாப்பிடுபவன், போரில் தன் தலைவன் அழியுமாறு அவனை களத்தில் விட்டுவிட்டு தான் மட்டும் தப்பிப் பிழைத்து ஓடியவன், ஆகியோர் போய்ச்சேரும் அந்த கொடிய நரகத்துக்கு நான் போவேன்".

"என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் பொய்சாட்சி சொன்னவனும், போருக்கு பயந்து ஓடினவனும், தன்னிடம் அடைக்கலமாகக் கொடுத்த பொருளை வஞ்சகமாகக் கவர்ந்து கொண்டவனும், ஒருவர் இளைத்த நேரத்தில் துன்பம் செய்தவனும் போகும் கொடிய நரகத்துக்கு நான் போவேன்".

"என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் அந்தணர் வாழும் வீட்டை தீக்கிறையாக்கிய கொடியவனும், தன் சொந்த பிள்ளைகளையே கொன்றவனும், பொய் வழக்கு போட்டவனும், தேவர்களைப் பழித்தவன் ஆகிய தீயோர் போகும் நரகத்துக்கு நான் போவேன்".

"என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் கன்றுக்குட்டிக்குப் பால் விடாமல், தாய்ப்பசுவிடம் தான் மட்டும் பாலைக் கறந்து குடித்தவன், நீதி மன்றத்தில் பொய் சொல்லி பிறர் பொருளை தன்னதாக்கிக் கொண்டவன், செய்நன்றி கொன்ற தீய நாக்கையுடையவன் ஆகியோர் போகும் நரகத்துக்கு நான் போவேன்".

"என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் வழிப்பயணம் செல்கையில் தன்னுடன் பயணிக்கும் அபலைப் பெண்டிரை தீயோர் கவர்ந்து செல்ல, அவர்களை மீட்கமுயலாமல் தன் உயிரைக் காத்துக் கொள்ள தப்பி ஓடியவன், தன்னுடன் இருப்போர் பசித்திருக்க தான் மட்டும் வயிறு முட்ட உண்பவன் ஆகியோர் போகும் நரகத்துக்கு நான் போவேன்".

"என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் போர்க்களத்தில் எதிரிக்கு பயந்து பணிந்து போனவனும், உயிர்களைக் கொன்று தின்னும் ஆசை உடையவனும், தர்ம மார்க்கத்தை கைவிட்டு அதர்ம வழியில் பொருள் குவிக்க விரும்பிய அரசனும் எந்த நரகத்துக்குப் போவார்களோ அந்த நரகத்துக்கு நான் போவேன்."

"என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் கேடற்ற அரசாட்சி கிடைக்கப் பெற்றதும் தாம் எது செய்யினும் தகும் எனும் ஆணவத்தால் தகுதியற்ற காரியங்களைச் செய்து கொண்டு தர்ம மார்க்கத்திற்கு மாறாக, அரச தர்மம் மறந்து செயல்படுகின்ற பாவியாக நான் ஆவேனாக! கன்னிப் பெண்ணை கற்பழிக்கக் கருதியவனும், குரு பத்தினியை தீய நோக்கத்தோடு பார்த்தவனும், கள் குடித்தவனும், பொன் பொருளைத் திருடியவனும் செல்லும் நரகத்திற்கு நான் செல்வேனாக!".

"என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் ஒரு நாட்டின் நிலையான குடிமக்களும், பல காரணங்களுக்காக வந்து தங்கியிருக்கும் பிற நாட்டவர்களும், வாணிபம் முதலான காரணங்களுக்காக வந்தவர்களும் அஞ்சி ஓடும்படி, எதிரி படையெடுப்பின் போது, ஓடி ஒளிந்து கொள்ளும் வீரமிலா கோழை எனும் கீழ் மகனாக நான் ஆகக் கடவேனாக!".

"என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் களங்கமற்ற உயர் குடிப்பிறந்தாரை, இழித்து பழித்து களங்கம் கற்பித்துக் கூறியவனும், வரிய காலத்தில் ஏழைகளுக்குக் கிடைத்த சிறிய உணவையும் சிதற அடித்தவனும், எதிரில் உள்ளோர் பசித்திருந்து வாட, அவர்கள் நாவில் நீர் ஊறும்படி தான் மட்டும் ருசித்துச் சாப்பிட்டவனும் ஆக நான் ஆகக் கடவேன்!".

"என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் உண்னத் தகாதவற்றை நாய் போலத் தின்பவனும், இவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல என பிறர் இகழவும், அதற்காக வெட்கப்படாதவனும், நரகம் என்று ஒன்று உண்டு எனும் வேதப் பிரமாணத்தைப் புறக்கணிப்பவனும், பிறருடைய குற்றங்களைக் கூறிக் கொண்டு திரிபவனுமாக நான் ஆகக் கடவேனாக!".

"என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் தன்னிடம் ஆண்மை இருந்தும் அதனை வீணாக்கிவிட்டு, பகைவர் கையில் சிக்கிச் சிறைப்பட்டு உயிரினும் சிறந்த மானத்தை இழந்து, சிறைக் காவலர்கள் தாம் விரும்பியபோது தரும் தகுதியற்ற உணவை இரப்பவன் போலக் கையேந்தி உண்டு நிலையற்ற உடம்பைக் காக்கும் இழிநிலை உற்றவனாக நான் ஆகக் கடவேனாக!".

"என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் தன்னிடம் உள்ள பொருளை யாசிப்பவருக்குக் கொடுப்பது புகழும் புண்ணியமும் தரும். அப்படிக் கொடுக்க மனமில்லையேல் "இல்லை" என்று தெளிவாகக் கூறி, இரப்பவன் நசை கொள்ளாதபடி செய்து விடலாம். அங்ஙனமின்றி, நாளை, பின்னை என்று அவனை ஆசைகாட்டி இழுக்கடித்து கடைசியில் இல்லை என்று சொல்வது பெரும் பாவமாகும். அவ்வாறு செய்யும் வீணர் அடையத் தக்க நரகம் எதுவோ அதற்கு நான் போவேனாக!".

"என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் சிறந்த ஆயுதங்களைக் கைக் கொண்டிருந்தும் போர்க்களத்தில் தன்னினும் பலவீனமான எதிரியிடம் தோற்று அவன் அடிபணிந்த இழிவானவன் அடையும் நிலையை நான் அடைவேனாக!".

"என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் வளம் மிகுந்த தன் நாட்டை எதிரிகள் பிடித்துக் கொள்ள உயிரை பெரிதென மதித்து எதிரிகள் பூட்டிய விலங்கோடு நெடுநாள் உயிரோடு வாழும் கோழையாக நான் ஆவேனாக!".

இப்படியாகப் பற்பல சூளுரைகளை பரதன் தாய் கோசலை "கேகயர் கோமகள் இழைத்த கைதவம் நீ அறிந்திலை போலும்!" என்று கேட்ட கேள்விக்கு பதிலாகக் கூறிமுடித்தான்.

"என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் உள்ள அனைத்து நரகங்களுக்கும் நான் போவேனாக!" என்று கூறிக்கொண்டே கோசலையின் பாதங்களில் வீழ்ந்தான் பரதன்.

பரதன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட கோசலை, அவனது மனத் தூய்மையை உணர்ந்து, இராமனே திரும்பி வந்துவிட்டதைப் போல மகிழ்ந்து அன்பினால் கண்ணீர் பெருக்கி பரதனை எடுத்துத் தழுவிக் கொண்டாள். தாய் கைகேயியின் கடிய மனத்தையும், பரதனின் உயர்ந்த குணங்களையும் எண்ணி விம்மிப் பெருமிதமடைந்த கோசலையின் தனங்களில் பால் சுரந்தது. பரதனை அன்போடு அணைத்துக் கொண்டு அவள் பேசலுற்றாள்.

"குழந்தாய்! பரதா! பழமையும் புகழும் வாய்ந்த உன் குலத்துள் உதித்தவருள் உன்னைப் போன்ற சிறந்தவர் யார் உளர்?" என்று கோசலை கூறவும், பரதன் மறுபடி அவளது பாதங்களில் விழுந்த பணிய, அப்போது வசிஷ்டர் அங்கு வந்தார். பரதன் குலகுரு வசிஷ்டரின் பாதங்களிலும் விழுந்து வணங்கினான். குருவைக் கண்டதும் துக்கம் பீரிட பரதன் "எந்தை எங்கே போனான்?" என்று அழுதான்.

(தந்தை மாண்டுபோனான் என்பது தெரிந்தும், மிக நெருக்கமானவர்கள் வரும்போது இப்படிக் கேட்கும் வழக்கம் இருந்தது)

"மாசற்ற என் மைந்தா! பரதா! உன் தந்தை இறந்து ஏழு* நாட்கள் கடந்து விட்டன. புதல்வர் செய்ய வேண்டிய இறுதிக் கடனை நீ செய்து முடிப்பாயாக" என்று கோசலை பரதனிடம் கேட்டுக் கொண்டாள்.

*(வான்மீகத்தின்படி தசரதன் இறந்த மறுநாள் வசிஷ்டர் கேகய நாட்டிற்கு தூது அனுப்பினார். அவர்கள் மறுநாள் விடியுமுன் குதிரைகளில் விரைந்து சென்று கேகய நாடு சென்று பரதனிடம் வசிஷ்டர் சொன்ன செய்தியைச் சொல்ல, செய்தியறிந்த பரதன் உடனே புறப்பட்டு ஏழு நாட்கள் பயணம் செய்து எட்டாம் நாள் அயோத்தி அடைந்தான். அங்ஙனமாயின் மன்னன் இறந்து அன்று பத்தாவது நாளாகும்)

தந்தையின் இறுதிக் கடன்களைச் செய்யுமாறு பணித்த தாய் கோசலையின் பொற்பாதங்களை வணங்கி, வசிஷ்டருடன் சென்று தன்னுயிர் ஈந்து தர்மத்தைக் காத்த தசரதனின் உடலைக் கண்டான். தந்தையின் உடலைக் கண்ட மாத்திரத்தில், பரதன் மண்மீது விழுந்து அலறித் தீர்க்கிறான். உலகம் முழுவதும் நலமுறக் காத்த தசரதன் உடல் எண்ணெயில் இருந்தது. அதனைத் தன் கண்ணீரால் கழுவினான்.

நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்த அந்தணர்கள், மன்னனின் உடலை, தைலப்பேழையினின்றும் மெல்ல எடுத்து, அரச மரியாதைகளோடுகூடிய வாத்திய முழக்கங்களுடன் ஓர் பொன் விமானத்தில் ஏற்றினர். அப்போது தசரதனின் சாரதியான சுமந்திரனும், அமைச்சர்களும், படைத்தலைவர்களும், மற்றுமுள்ள ராஜாங்க அதிகாரிகளும் நட்பு சுற்றம் அனைத்தும் சூழ்ந்துகொண்டு அழுது தீர்த்தனர். மக்கள் அழுது புலம்பிக் கொண்டு கரங்களை உயரத் தூக்கி வணங்க, விமானத்தை ஓர் யானையின் மீது ஏற்றிக் கொண்டு போயினர்.

சங்கு, முரசங்கள் முழங்க, பெருந்துக்கத்தால் மக்கள் கண்ணீர் மல்க, யானை குதிரை, தேர்ப்படைகள் முன் செல்ல வேதம் ஓதிக் கொண்டு அந்தணர்கள் பின்செல்ல, தசரதனின் அறுபதினாயிரம் தேவியரும் அவர்களைத் தொடர, அலைகடல் போல அனைவரும் சரயு நதிக் கரையை அடைந்தனர்.

தர்ம சாஸ்திரங்களில் வல்ல புரோகிதர்கள் தகனத்திற்கு முன்பு செய்யும் கிரியைகளை முடித்துக் கொண்டு தீயிட பரதனை அழைத்தனர். தசரதன் சிதைக்குத் தீமூட்ட பரதன் எழுந்ததும், வசிஷ்டர் அவனை நோக்கி "பரதா! உன் அன்னை செய்த கொடுமையால், மனம் மிக நொந்துபோய் சக்கரவர்த்தி, உனக்குத் தன் சிதைக்குத் தீயிடும் உரிமை இல்லை என்று சொல்லிவிட்டு இறந்து போனான். எனவே, பரதா! தசரதனின் உடலுக்குத் தீ மூட்டும் உரிமை உனக்குக் கிடையாது" என்றார்.

"உன் தாய் மனைவி என்ற உரிமையையும், நீ மகன் எனும் உரிமையையும் இழப்பதாகக் கூறி சக்கரவர்த்தி இறந்து போனார்" என்றார் முனிவர். வசிஷ்டர் இம்மொழி உரைத்ததும், மனம் வருந்தி பெருமூச்செறிந்தான் பரதன். முதலில் நகைத்தான். பின் பெருந்துயரால் மனம் நொந்து கூறுகிறான். பெருந்துயரம் உண்டானபோது அதனை மனத்தில் அடக்கி வைக்க இயலாது. அதைப் பிறரிடம் சொல்லி அழுதால்தான் அடங்கும். எனவே பரதன் இப்படிப் பேசுகிறான்.

"தந்தைக்கு இறுதிக்கடன் ஆற்ற உரிமையில்லாத நான், அரசாளும் உரிமையை மட்டும் பெற்றேனோ? சூரிய குலத்தில் உதித்த யாருக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்கிறது? சூரிய குலத்தில் பிரமன் புதல்வன் காசிபப் பிரஜாபதி, அவன் மகன் விவசுவான் என்ற சூரியன், அவன் மகன் வைவஸ்வத மனு என்று இவ்வாறு என் குல முன்னோர்கள் எல்லோரும் அறநெறிப்படி நீதிநெறி தவறாத ஆட்சி செய்து தேவ பதவி பெற்றுவிட்டனர். நான் மட்டுமன்றோ இப்படி வீணன் ஆனேன்! காய்த்துக் குலுங்கும் தென்னைக் குலையில் நல்ல காய்களுக்கு மத்தியில் பதடி (தேரையுண்ட காய்) போல நான் வந்தேன். என்னை அரசனாக்கக் கருதி என் தாய் செய்த செயல்தான் என்னே!" இவ்வாறு புலம்பித் தவிக்கும் பரதன் தன் தம்பி சத்ருக்குனனைக் கொண்டு ஈமக் கடன்களைச் செய்வித்தான். (இறுதிக் கடன்களை பரதனே செய்ததாக வான்மீகத்தில் வருகிறது).

தசரதனது தேவிமார்கள் அறுபதினாயிரவரும் அவன் இறந்தவுடனேயே தாங்களும் உயிர்விடத் துணிந்தனர். ஆனால் வசிஷ்ட முனிவர் ஆணையால் அப்போது, உயிர்த்தியாகம் செய்வதைத் தவிர்த்த அவர்கள் இப்போது பூஞ்சோலையில் புகும் மயில் கூட்டம் போல உடன்கட்டை ஏறினர். "சககமனம்" எனும் உடன்கட்டை ஏறுதல் பத்தினிப் பெண்டிர் அவ்வாறு செய்வதால் தமக்கு நற்கதி உண்டாகுமோ ஆகாதோ என்கிற ஐயமின்றி துணிந்து செய்ய வேண்டுமாம். அத்தகையவராய் பத்தினிப் பெண்டிர் அனைவரும் அவ்வாறே செய்து நல்லுலகம் அடைந்தனர்.

முதல்நாள் சடங்குகள் சத்ருக்குனனால் நடத்தி வைக்கப்பட்டபின், அனைவரும் அரண்மனை சென்றடைந்தனர். ஏனைய நாட்களின் சடங்குகளும் முடிந்தபின், அரசு கட்டில் ஏறவிரும்பாத பரதன் உட்பட அனைவரும் அரண்மனையில் கூடினர். இனி செய்ய வேண்டியதுபற்றி ஆலோசிக்க வசிஷ்டர், மறையவர்கள் புடைசூழ வந்திருந்து பரதனிடம் நாடு அரசன் இல்லாமல் இருத்தலால் ஏற்படும் தீங்குகள் பற்றி எடுத்துரைத்தார்கள்.

வசிஷ்ட முனிவர் தவிர, அமைச்சர்கள், நகர மாந்தர், படைத்தலைவர்கள், முனிவர்கள் ஆகியோர் பரதனிடம் ஆலோசனை நடத்தினர். அனைவரும் பரதனை அரசனாக்க வேண்டுமென்று விரும்பி அதனை அவனிடம் உணர்த்தவல்ல திறனும் ஆற்றலும் தகுதியுமுள்ளவர் வசிஷ்டர்தான் என்று முடிவு செய்து, அதனை அவர் செய்ய வேண்டும் எனும் குறிப்பில் சுமந்திரன் முனிவரின் முகத்தைப் பார்த்தான். வசிஷ்டர் அந்தக் குறிப்பை உணர்ந்துகொண்டு பரதனிடம் பேசலானார்.

"பரதா! நாடு அரசனின்றி இருத்தல் தகாது. அரசாட்சி உன்னைத் தேடி வந்துள்ளது, எனவே நீ முடிதரித்து நாட்டைப் பாதுகாப்பது உன் கடன்" என்றார்.

பரதன் இச்சொற்களைக் கேட்டு வருந்தினான். தன்னை நஞ்சு உண்ணுமாறு வற்புறுத்துவது போல இருந்தது பரதனுக்கு. அரசாட்சி மற்றவர்க்கு அமுதம் போல இருக்கலாம், ஆனால் பரதனுக்கு அது நஞ்சுபோலத்தான் இருந்தது. துயரம் மிகுதியால் பரதன் மூர்ச்சையடைந்தான். பின்பு தெளிந்து எழுந்து, மெதுவாகத் தன் கருத்தை அனைவரும் அறியக் கூறலானான்.

"பெரியோர்களே! நீங்கள் கூறுவது தர்மமாகாது, குற்றமே! மூத்தவன் இருக்க நான் முடிசூடுதல் எவ்வகையிலும் தகாது. என் அன்னை செய்தது பெருங்குற்றம். இராமன் இவ்வுலகம் மட்டுமின்றி மூவுலகங்களையும் தாங்கும் தகுதியும் ஆற்றலும் உள்ளவன். மூத்தவன் என்பதே முடிசூடுவதற்கு உரிமையாயிற்று. நான் எவ்வகையிலும் அதற்குப் பொருத்தமானவன் அல்ல".

"நீங்கள் கூறுவதுதான் சரியென்றால் அதர்மத்துக்கு இப்போது நடைபெறும் திரேதா யுகமோ, அடுத்து வரும் துவாபர யுகமோ ஏற்காது. கடைசியில் வரும் கலியுகம் மட்டுமே தர்மம் தடுமாற ஏற்ற காலம். இது என்ன கலியின் ஆட்சியோ? நான் அரசாட்சியை ஏற்க மாட்டேன். அண்ணன் இராமச்சந்திர மூர்த்தியை மீண்டும் அழைத்து வந்து முடிசூட்டுவதையே நான் விரும்புகிறேன். அப்படி இராமனை மீண்டும் அழைத்து வரமுடியவில்லையென்றால் நானும் காட்டிலேயே தங்கி அரிய தவத்தினை மேற்கொள்வேன். அப்படியும் முடியாவிட்டால் என் உயிரைத்துறப்பேன்" என்றான் பரதன்.

சபையோர் வியந்தனர். "தந்தை இருந்தபோதே, இராமன் முடிசூட இசைந்தான். நீயோ தாய் தந்தை இருவருமாக உனக்களித்த அரசை இராமன் இங்கு இல்லாத போதும் மறுக்கிறாய். உன்னைப் போல சிறந்த குணம் படைத்தோர் அரச குலத்தில் இதுவரை தோன்றினாரில்லை" என்று புகழ்ந்தனர்.

"நீ அரசு ஏற்று உன் தந்தையைப் போல சிறப்பாக ஆட்சி செய்து பெறக்கூடிய புகழினும், அரசை மறுத்து நீ பெற்ற புகழ் பெரிது. அஃது என்றும் வாழ்க!" என்று வாழ்த்தினர்.

பரதன் தன் தம்பி சத்ருக்குனனை அழைத்தான். "தம்பி! நாடு முழுவதும் முரசு அறைந்து இராமபிரானை அழைத்து வர சேனையை உடனே தயார் செய்" என்றான்.

இராமன் மீண்டும் வருவான், முடிசூடுவான் என்ற செய்தியைக் கேட்டவுடனேயே நாட்டு மக்கள் அனைவரும் உவகைமிக அடைந்தனர். சந்திரோதயம் கண்டு கடல் பொங்கி கொந்தளிப்பதுபோல மக்கள் கிளர்ந்தெழுந்தனர். யானைகள், குதிரைகள், தேர்கள், வண்டிகள் என கண்ணுக்கெட்டிய தூரம் தயாராகிவிட்டனர். பெருத்த ஆரவாரத்துடன் படைகள் நகரத் தொடங்கின.

படைகளை முன்னே செல்லவிட்டபின் பரதன் தானும் தன் தம்பியுமாக தவக்கோலம் பூண்டு மரவுரி தரித்து தேர்மீதேறி புறப்பட்டான். தாய்மார்கள் மூவரும், அமைச்சர்கள், தூய அந்தணர்கள் ஆகியோர் பரதனைத் தொடர்ந்து சூழ்ந்துகொண்டு சென்றனர். இப்படி நகர்ந்து செல்லும் கூட்டத்தில் இவ்வளவுக்கும் காரணமான கூனியும் உந்திக் கொண்டு நடந்து போவதைக் கவனித்த சத்ருக்குனன் அவளைக் கொன்றுவிட நினைத்துப் பாய்ந்து சென்றான். அவனை பரதன் தடுத்து நிறுத்தினான்.

"தம்பி! தாய் கைகேயி தவறு இழைத்தவள் என்று நான் அவளைக் கொன்றுவிட்டேனானால், அண்ணன் இராமன் என்னை மன்னிக்கமாட்டான். அதனால்தான் நான் அவைளைக் கொல்லவில்லை. இதனை நீயும் எண்ணிப்பார்" என்று சொல்லி தம்பியை சமாதானப் படுத்திக் கூட்டிச் சென்றான்.

இராமன் காட்டுக்குச் செல்கையில் தங்கிய சோலையிலேயே இப்போது இவர்களும் தங்கினார்கள். இராமன் முன்பு தங்கிய சோலையில் அண்ணன் இராமன் முன்பு சயனித்த இடத்தைக் கேட்டறிந்து, அதனை மிதிக்கவும் அஞ்சி, அதன் பக்கத்தில் புழுதி படிந்த வெறுந்தரையில் அன்றிரவைக் கழித்தான். அறுசுவை உண்டியை நீத்து கிழங்கையும் கனிகளையும்கூட உண்ணாமல் பட்டினியாகக் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தான். இராமபிரான் அந்தச் சோலையிலிருந்து கால் நடையாகவே நடந்து சென்ற செய்தியறிந்து, தானும் நடந்தே செல்லலாயினான். இப்படி நடந்தே கங்கைக் கரையைச் சென்றடைந்தனர்.

கடல்போன்ற பரதனின் படை பரிவாரங்கள் அனைத்தும் கங்கையின் வடகரையை அடைந்தது, ஆற்றின் மறுகரையிலிருந்து கவனித்த வேட்டுவ அரசன் குகன், இராமபிரான் மீது போர் செய்து அழிப்பதற்காக இந்தப் படை வருகிறது போலும் என கோபமுற்றான். உடனே தனது இடையில் தொங்கிய ஊதுகொம்பை எடுத்து ஊதி, போர் வந்துவிட்டது என்று தோள்பூரிக்க வாயை மடித்து உதடுகளைக் கடித்து கண்கள் தீ உமிழ புறப்பட்டான்.

இதோ வரும் படை ஒரு எலிக்கூட்டம். நான் நாகம் போன்றவன் என்றான். தன் படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி கங்கையின் தென்கரை வந்து அடைந்தான். அங்கு தன் படை வீரர்களை நோக்கி "வீரர்களே! நம் அன்பிற்குரிய இராமபிரான் பதினான்கு ஆண்டுகள் கழித்துத் திரும்பிவந்து அரசு கொள்ள இடமின்றி, இப்போதே அவரைத் தொலைத்துவிடும் சூழ்ச்சியோடு அந்தக் கரையில் இந்தப் படை வந்திருக்கிறது. அது மேலே செல்லாதவாறு நாம் தடுத்து அவர்களை இங்கேயே அழித்துவிடவேண்டும்" என்றான்.

"மேகவண்ண இராமபிரான் என் உயிர் நாயகன். அவனை நாடு ஆள விடாதபடி வஞ்சனையால் அரசைக் கைப்பற்றிய மன்னர்கள் வருகிறார்கள். என்னுடைய தீ கக்கும் அம்புகள் அவர்கள் மீது பாயாதா என்ன? அப்படி இவர்கள் என்னிடமிருந்து தப்பிப் போய்விட்டால் மக்கள் என்னை "நாய்க்குகன்" என்று ஏசமாட்டார்களா?"

"ஆழமான இந்த கங்கையாற்றைக் கடந்து இவர்கள் போய்விடுவார்களோ? பெரிய யானைப் படையைக் கண்டு அஞ்சி வழிவிடுபவனா நான்? என்னைப் பார்த்து அவர் "நீ எனக்குத் தோழன்" என்று சொன்னாரே. அதுவன்றோ நான் பெற்ற பேறு. இவர்களை உயிர் பிழைத்துப் போக நான் விட்டுவிட்டால், அறிவிலி இந்த குகன் இறக்கவில்லையே என்று மக்கள் என்னை ஏசமாட்டார்களா?"

"பரதன் தனக்கு அரசு வேண்டுமென்ற ஆசையால், தமையன் என்றும் கருதாது இராமபிரானை அழிக்கத் துணிந்தாலும் இலக்குவன் இருக்கும்போது அது நடக்குமா? அது கிடக்கட்டும், நான் ஒருவன் இருப்பதை இவன் மறந்து விட்டான் போலும். அன்றி என்னைப் பொருட்படுத்தவில்லையா? அரசர் உயர்ந்தோர், வேடர் தாழ்ந்தோர் என்பதனால், வேடர்விடும் அம்புகள் அரசர் மார்பில் தைக்காதோ? அதையும் நான் பார்த்துவிடுகிறேன். இவனை அழிக்காமல் விடமாட்டேன்".

"மண்ணாசை பிடித்த மன்னர்கள், அவ்வாசையால் எத்தகைய தீங்கையும் செய்வார்கள் போலும். மற்றவர்கள் எப்படி இருந்தாலும் இராமபிரானின் தம்பியாகிய இவன் எப்படிச் செய்யத் துணிந்தான்? என்னிடமிருந்து தப்பிப்பிழைத்துப் போனால்தானே! பார்க்கலாம்."

"அரசாளப் பிறந்த தலைவன் இராமன் தவம் மேற்கொள்ள, அரசுரிமை இல்லாத இவன் தவறான வழியில் அரசினைப் பெறுவதோ? அதற்கு நான் இடம் கொடேன். இவனைத் தடுத்து அழித்து புகழைப் பெறுவேன். இதில் என் உயிர் போனாலும் எனக்குக் கவலை இல்லை".

"தனக்கு உரிய நாட்டை இராமபிரான் இவனுக்குக் கொடுத்துவிட்ட பின்பும் இந்த பரதன் நாம் ஆளுகின்ற இந்த காட்டையும் கொடுக்க மனமின்றி படையெடுத்து வந்துவிட்டான் பாரீர்! என்ன கொடுமையிது! ஆகையால் ஆடுகின்ற கொடிகளோடு கூடிய இந்தப் படையினை அழித்து, அதன்பின் இராமபிரானை நாட்டை ஆளும்படி மீட்டுக் கொடுத்து, உலகோர் சொல்லும் புகழை நீங்களெல்லாம் அடையவேண்டும்".

குகன் இப்படியெல்லாம் பேசினானே தவிர உள்ளூர அவனுக்கு ஒரு பயம். இராமபிரானுக்குத் தன் தம்பியை நாம் அழித்து விட்டோம் என்று கோபம் வந்தால் என்ன செய்வது என்ற கவலை வந்துவிடுகிறது அவனுக்கு.

அப்போது குகனை முன்பே அறிந்தவனான சுமந்திரன் மறுகரையில் தன்னருகில் நின்றிருந்த பரதனிடம் குகனைப் பற்றி கூறுகிறான். "பரதா! அதோ பார். அந்தக் கரையில் தன் படைகளுடன் வந்து கையில் வில்லுடன் நிற்கிறானே, அவன்தான் குகன். இந்த கங்கையின் இரு கரைகளிலும் உள்ள நிலப்பகுதிக்குச் சொந்தக்காரன். உங்கள் குலநாதனாம் இராமனுக்கு உயிர்த் துணைவன். கணக்கற்ற படகுகளுக்குச் சொந்தக்காரன்; மகாவீரன். வீரத்தில் ஆண் யானையைப் போன்றவன்;. வில்லேந்திய வீரர்களையுடைய படையை உடையவன்" என்றான்.

"பரதா! அந்த குகன் வீரம் நிறைந்தவன் மட்டுமல்ல. நெஞ்சம் முழுவதும் அன்பை உடையவன். உன்னுடைய வரவை எதிர்பார்த்து அதோ அந்தக் கரையில் அவன் தன் படைகளுடன் நிற்கிறான் பார்!"

சுமந்திரன் குகனைப் பற்றி 'உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த் துணைவன், கரைகாணா காதலான்' என்று சொன்னவை பரதனுக்கு உடனே அவனைக் காணவேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது. உடனே தன் தம்பியையும், உடன் அழைத்துக் கொண்டு எழுந்து சென்று கங்கைக் கரையை அடைந்தான். பரதன் அப்படி வந்து நிற்கும் காட்சியை மறுகரையில் நின்ற குகனும் காண்கிறான். பரதன் அணிந்திருந்த மரவுரிக் கோலத்தைப் பார்க்கிறான். பொலிவிழந்து வாடியிருக்கும் அவன் பரிதாப நிலை கண்டு குகனுக்கு பகீர் என்றது.

வான்மீகத்தில் இந்தப் பகுதி கூறுவதாவது:-- "இறந்த தந்தைக்குத் தர்ப்பணம் செய்ய பரதன் கங்கைக் கரையை அடைகிறான். அப்போது குகன் இவனைப் பார்த்து சந்தேகப்பட்டு, தன் படைகளைத் திரட்டி எச்சரிக்கையாய் இருங்கள் என்று சொல்லிவிட்டு அவன் கருத்தை உணரும் பொருட்டுத் தான் மட்டும் காணிக்கைப் பொருட்களோடு மறுகரை வந்தடைந்தான்".

குகன் கண்ட காட்சி அவன் மனதைத் துணுக்குறச் செய்தது. மரவுரி உடுத்த உடல், மாசு அடைந்த மெய்; ஒளி இழந்த முகம், கல்லும் கனியும்படியான துயரம் தாங்கிய நெஞ்சம், இவற்றைக் கண்டான் பரதனிடம். குகன் கையில் பிடித்திருந்த வில் நழுவி கீழே விழுந்தது. நெஞ்சம் விம்மியது. செய்வதறியாது திகைத்து நின்று விட்டான்.

இராமன் மீது படையெடுத்து வருகிறான் என்றல்லவோ நினைத்தேன். ஆனால் இவனோ இப்படி வருகிறானே!

இதோ இந்த பரதன் என் நாயகன் இராமனைப் போலவே இருக்கின்றான். அருகில் நிற்கும் அவன் தம்பி, இலக்குவனைப் போலவே இருக்கிறான். தவ வேடம் மேற்கொண்டிருக்கிறான். மனத்தில் அளவற்ற துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறான். இராமபிரான் சென்ற திசை நோக்கித் தொழுது கொண்டிருக்கிறான். அடடா! எம்பெருமான் இராமனுக்குத் தம்பியராகப் பிறந்தவர்கள் தவறு செய்பவர்களாகவா இருப்பார்கள்? நிச்சயம் மாட்டார்கள்".

இவன் மனதில் ஏதோவொரு இடுக்கண் துன்புறுத்துகிறது. இராமன் மீது ஆறாத காதல் கொண்டிருக்கிறான். இராமன் மேற்கொண்ட அதே தவக் கோலத்தையே இவனும் மேற்கொண்டிருக்கிறான். இவன் உளக் கருத்தை அறிந்து வருகிறேன்" என்று சொல்லி, தான் மட்டும் ஒரு படகில் ஏறி கங்கையைக் கடந்து வடகரையைச் சென்றடைகிறான்.

"வந்தெதிரே தொழுதானை வணங்கினான், மலர் இருந்த
அந்தணனும் தலை வணங்கும் அவனும் அவனடி வீழ்ந்தான்
தந்தையினும் களிகூரத் தழுவினான் தகவுடையோர்
சிந்தையிலும் சென்னியிலும் வீற்றிருக்கும் சீர்த்தியான்".

படகைவிட்டு இறங்கி வந்து தொழுத குகனை பிரம்ம தேவனும் தலை வணங்கும் தகுதியுடைய பரதன் வணங்கினான். அந்த குகனும் பரதன் அடிகளில் விழுந்து வணங்கினான். தன் அடிகளில் விழுந்து வணங்கிய குகனை பரதன் தூக்கி நிறுத்தித் தந்தையினும் களிகூரத் தழுவினான். இந்த இடத்தில் தொழுதல் என்றால் தரையில் வீழ்ந்து வணங்குதல் என்றும், வணங்குதல் என்றால் தலை தாழ்த்தி வணங்குவது என்றும் கொள்ள வேண்டும்.

வந்து எதிரே தொழுதானை (குகனை) மலர் இருந்த அனதணனும் தலை வணங்கும் அவனும் (பரதனும்) வணங்கினான். அவன் (அந்த குகன்) அவன்அடி வீழ்ந்தான் (பரதன் கால்களில் வீழ்ந்தான்) அப்படி வீழ்ந்த குகனை தந்தையினும் களிகூர பரதன் தழுவினான், அந்த பரதன் தகவுடையோர் சிந்தையிலும் சென்னியிலும் வீற்றிருக்கும் சீர்த்தியான். இந்த பாடலுக்கு இருவிதமாகவும் பொருள்கூறி வருகின்றனர். யார் யார் அடியில் விழுந்து வணங்கினார் என்பதில் குழப்பத்தைத் தெரிவிக்கின்றனர். எனினும் மேலே கண்ட பொருளே சரியானது. ஏனெனில் அடுத்து வரும் பாடலில் "கேட்டனன் கிராதர் வேந்தன் கிளர்ந்தெழும் உயிரன் ஆகி, மீட்டும் மண்ணதனில் வீழ்ந்தான், விம்மினன்" என்று குகன் அடைந்த நிலையை வர்ணிக்கும்போது, குகன் மீண்டும் மண்ணில் வீழ்ந்தான் என்று வருவதால், முன்பும் அவனே மண்ணில் வீழ்ந்து வணங்கினான் என்பது தெளிவாகிறது அல்லவா?

குகன் பரதனிடம் "நீ வந்த காரியம் என்ன?" என்று கேட்கிறான்.

"அயோத்தி அரசுக்கு உரிமையுள்ளவருக்கு அரசைக் கொடுக்காமல் முறைதவறிவிட்டனர், அந்த முறைகேட்டை நீக்கி அயோத்திக்கு உரிமையுள்ள அரசனை அழைத்துப் போவதற்காக வந்திருக்கிறேன்" என்கிறான் பரதன். இதைக் கேட்ட குகன் மகிழ்ச்சி பொங்க மீண்டுமொருமுறை, பரதன் காலில் வீழ்ந்தனன். கைகளைக் கூப்பிக்கொண்டு குகன் சொல்லுகிறான்:

"தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணிதன்னைத்
தீவினை என்ன நீத்துச் சிந்தனை முகத்துத் தேக்கி
போயினை என்றபோது புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியினம்மா".

"பரதா! ராஜ்யத்தை நீ விரும்பவுமில்லை; கேட்கவுமில்லை. தாய் கேட்டு, தந்தை கொடுத்த ராஜ்யத்தை வேண்டாம், இது தவறு என்று சொல்லி மறுத்துவிட்டு, முகத்தில் கவலை படர இராமனைத் தேடி கானகம் வந்திருக்கிறாய் என்பதைக் காணும்போது, பரதா! ஆயிரம் இராமர் உனக்கு இணையாவாரோ?"

"பரதா! உன்னை என்ன சொல்லி புகழுவேன். நானோ கற்றறியா வேடன். சூரியனுடைய பிரகாசமான ஒளி எப்படி சந்திரன், நட்சத்திரங்கள் இவற்றின் ஒளியையெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் செய்து பிரகாசிப்பது போல, நீயும் உன் ரவிக்குலத் தொன்றல் அனைவரின் புகழையும் உன் புகழுக்கெதிரே ஒன்றுமில்லாமல் செய்து விட்டாய்".

இராமபிரானின் குண விசேஷங்களைக் கண்டுதான் குகன் இராமனிடம் உள்ளத்தைப் பறிகொடுத்தான். அது போலவே பரதனின் குண நலன்களைக் கண்டு இவன் மீதும் பக்தி கொண்டான். இங்கே இராமபிரான் எவ்விடத்தில் தங்கியிருந்தார் என்று குகனிடம் கேட்டான் பரதன். குகனும் அந்த இடத்தைக் காட்டுகிறான். இரு பாறைகளின் இடையில் புற்கள் பரப்பிய இடத்தைக் கண்டான். துடித்துத் தரையில் வீழ்ந்தான். கண்ணீர் விட்டுக் கதறி அழுதான்.

என்னால் அன்றோ அண்ணா உனக்கு இப்படிப்பட்டத் துன்பங்கள் நேர்ந்தன. புல்லில் படுத்தாய், கிழங்கையும், கனிகளையும் உண்டாய். நீ பட்ட துன்பங்களை அறிந்த பின்னரும், நான் உயிர் துறக்காமல் வாழ்கிறேனே.

இராமபிரான் பிராட்டியோடு துயின்றதால் இலக்குவன் அங்கு இருந்திருக்க முடியாது. எனினும் இவர்களைக் காக்கும் பணியைத் தலைமேல் கொண்டிருந்ததால் உறங்கியிருக்கவும் மாட்டான். எனவே குகனை நோக்கிக் கேட்கிறான் "குகனே! இலக்குவன் எங்கே தங்கி இரவுப் பொழுதைக் கழித்தான்?".

இந்தக் கேள்வியை பரதன் கேட்கவும் குகன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

"அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச
வில்லை ஊன்றிய கையொடும் வெய்து உயிர்ப்போடும் வீரன்
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய், கண்கள் நீர் சோரக் கங்குல்
எல்லை காண்பளவும் நின்றான், இமைப்பிலன் நயனம் என்றான்".

"பரதா! அண்ணலும் பிராட்டியும் தூங்கும்போது, வில் ஊன்றிய கையனாய், பெருமூச்சுடனும், கண்களில் நீர் சோர விடிய விடியக் கண்விழித்துக் காவல் காத்தான் இலக்குவன்" என்றான் குகன்.

"நானும்தான் இருக்கிறேனே! ஸ்ரீ இராமனுக்கு சேவகம் செய்பவன் என்று சொல்லிக்கொண்டு செயலில் அப்படி நடக்கவில்லையே. மாறாக அவன் பெருந்துன்பம் அடைவதற்கு நானே காரணமாகி விட்டேனே! இலக்குவனோ, தான் அடியவன் என்பதத் தன் செயலால் உணர்த்துகிறான். என்னால் என்ன பயன்?" என்று பரதன் தன்னை நொந்து கொண்டான்.

அன்றிரவு இராமன் படுத்திருந்த இடத்தில் பரதன் படுத்திருந்து மறுநாட்காலை கங்கை ஆற்றைக் கடந்து செல்லும் விருப்பத்தைக் குகனிடம் சொல்ல, அவ்வண்ணமே அவனும் நாவாய்களைக் கொண்டு வந்து சேர்க்கிறான். பரதனும் அவனுடன் வந்தவர்களும் படகுகளில் ஏறி கங்கை ஆற்றைக் கடந்து தென் கரையை அடைகின்றனர். அங்கே பரதனுடன் அவனது தாய்மார்கள் கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகியோர் நிற்கின்றனர். அவர்களில் கோசலையைப் பார்த்து குகன், இவர்கள் யார்? என்கிறான்.

"இவர்தான் தசரத சக்கரவர்த்தியின் முதல் தேவி. மூன்று உலகங்களையும் படைத்த பிரம்மனைப் பெற்றெடுத்த திருமாலாகிய இராமபிரானைத் தன் வயிற்றில் சுமந்தவர், நான் பிறந்தமையால் அந்த மகனை காட்டுக்கு அனுப்பிவிட்டு பெருந்துன்பத்தை அடைந்தவர், இவர்தான் கோசலை" என்றான்.

உடனே குகன் கோசலையின் கால்களில் வீழ்ந்தான், அழுதான். இவனது அன்புகண்டு நெகிழ்ந்த கோசலை பரதனிடம் "இவன் யார்?" என்றாள்.

அதற்கு பரதன் "இந்த நின்ற குரிசில் (வீரன்) இராகவனின் இன்னுயிர் தோழன். இலக்குவனுக்கும், சத்ருக்குனனுக்கும் எனக்கும் மூத்த அண்ணன். பெயர் குகன்" என்றான்.

உடனே கோசலை "என் அருமைக் குமாரர்களே! இனி துன்பத்தால் வருந்தாதீர்கள். இராம இலக்குவர் காட்டுக்குப் போனதும் நல்லதாயிற்று. இல்லாவிட்டால் உங்களுக்கு இப்படியொரு சகோதரன் கிடைத்திருப்பானா? இனி நீங்கள் ஐவீரும் ஒருவர் போல பிரியாமல் ராஜ்யத்தை நெடுநாள் ஆளக்கடவீராக!" என்றாள்.

அடுத்ததாக சுமித்திரையைக் காட்டி, இவர் இலக்குவனையும், சத்ருக்குனனையும் பெற்றெடுத்த தேவியென அறிமுகப் படுத்துகிறான். அடுத்ததாக கைகேயைக் காட்டி, குகன் "இவர் யார்?" எனக் கேட்க, பரதன் சொல்லுகிறான்:

"படர் எலாம் வளர்த்தாளைப் பழிவளர்க்கும் செவிலியைத் தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங்காலம் கிடந்தேற்கும் உயிர்ப்பாரம் குறைந்து தேய
உடரெலாம் உயிர் இழந்தவெனத் தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே
இடரிலா முகத்தாளை உணர்ந்திலையோ, இந்நின்றாள் என்னை ஈன்றாள்".

உலகத்தில் வேறெங்கும் காணமுடியாத கொடுமை மிக்க பாவி இவள். இவள் பெற்று வளர்த்தது துன்பங்களையும், பழிகளையுமே! இவள் வயிற்றில் கிடந்ததால் இவளைப்போல் கல் நெஞ்சு எனக்கு இல்லை. இவ்வளவு பேரும் துன்பக் கடலில் துவண்டு கிடக்கையில், இவள் ஒருத்தி மட்டும் துயர் இல்லாதவள் என்பது முகத்திலேயே தெரியுமே! எனவே இவள் யார் என்று உனக்குத் தெரிந்திருக்கலாம். இவள்தான் என்னைப் பெற்றவள்" என்றான் பரதன்.

பரதனின் தாய் என்று தெரிந்ததும் குகன் அவளையும் வணங்கினான். படகுகள் கரை அடைந்தபின் தாயர் சிவிகையில் ஏறிச் செல்ல, பரதனும் குகனும் நடந்து செல்கின்றனர். அந்தப் பகுதியில் வாழ்ந்த பரத்வாஜ முனிவ்ரது பெருமையை அறிந்து அவரைக் காண, அவர் ஆசிரமம் சென்றடைந்தனர். முனிவரும் பரதனின் வருகையறிந்து எதிர்கொண்டழைத்துச் சென்றார்.

முனிவர் பரத்வாஜரைத் தன் தந்தைபோல நினைத்து வணங்குகிறான் பரதன். முனிவர் அன்போடு ஆசி கூறுகிறார். முனிவர் பரதனை நோக்கி "ஐயனே! அயோத்தியின் அரச முடிசூடி ஆளும் உரிமை கிடைத்த பின்னும், நீ முனிவர்களுக்குரிய மரவுரி உடுத்து, கானகம் வந்த காரணம் என்னவோ?" என்றார்.

நீ முடிசூடி அரசாள்வதே முறை, அதைவிடுத்து ஏன் கானகம் வந்தாய் என்று முனிவர் கேட்டதால், பரதனுக்கு மனதில் சினம் உண்டாகியது. "அறிவார்ந்த பெரியோய்! தாங்கள் சொல்வது நியாயமல்ல. வேதநாயகனாம் இராமனுக்கு உரிமையுள்ள ராஜ்யத்தை, நான் எப்படி கொள்ள முடியும். அப்படி அவர் ராஜ்யம் ஏற்க மறுப்பாராகில் நானும் பதினான்காண்டுகள் அவருடனே உறைவேன்" என்றான்.

பரதன் கூறிய இம்மொழி கேட்டு பரத்வாஜ முனிவரும் அவருடன் இருந்த முனிவர்களும் மனம் மிக மகிழ்வெய்தினர். உடனே அவர் பரதன் முதலானவர்களைத் தன் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று, விருந்தினர்களுக்குத் தேவையான உணவு வகைகள், உபசரிப்பு முதலானவற்றிற்காக தேவர்களை வேண்டி அக்னியில் ஹோமம் செய்யத் தொடங்கினார்.

தேவலோக மாந்தர் வந்து பரதனுக்கும் அவனுடன் வந்த பரிவாரங்களுக்கும் சிறப்பான விருந்தினைப் படைத்தனர். யானை, குதிரை இவற்றுடன் படை வீரர்கள், அமைச்சர்கள், பிரதானிகள் ஆகியோரும் தாங்கள் நடந்து வந்த களைப்பு தீர பரத்துவாஜ முனிவர் அளித்த விருந்தையுண்டு மகிழ்ந்திருந்தனர்.

ஆயினும் பரதன், எவ்வளவு வற்புறுத்தியும் உயர்ந்த உணவு வகைகளை விலக்கிவிட்டு தவசியர்க்குரிய காய், கிழங்குகளை மட்டுமே உண்டான். இரவு நேரம் வந்தது. படைகள் நன்கு உறங்கி எழுந்தனர். கதிரவன் உதித்தான். அனைவரும் முந்தைய நாள் விருந்தின் மகிழ்வு மறந்து பழைய நிலை அடைந்தனர். பரதனும் சேனைகளும் அங்கிருந்து புறப்பட்டு ஒரு பாலைவனத்தை அடைந்தனர். அந்தப் பாலை நிலத்தையும் மருத நிலம் போலக் கருதி அதனைக் கடந்து சித்திரகூடம் சென்றடைந்தனர்.

பெரும் சேனையின் வரவால் ஏற்பட்ட பேரொலியும், புழுதிப் படலமும் தூரத்தே பார்த்துவிட்ட இலக்குவன் வேகமாய் எழுந்தான். ஒரு குன்றின் மீது ஏறினான். அங்கிருந்து அலைகடல் போல வரும் பரதன் சேனையக் கண்டான். அவனுக்கு கோபம் வருகிறது. தந்தை சொல் கேட்டு கானகம் வந்த இராமனைக் கொல்லவே, பரதன் படையொடு வருகிறான் என ஆத்திரப்பட்டுக் காலால் மலையின் முகட்டை ஓங்கி உதைக்கிறான். அது தூள்தூளாகிறது. அங்கிருந்து தரைக்குத் தாவிக் குதித்து இராமனிடம் ஓடிச் சென்று கூறுகிறான்.

"அண்ணா! பரதன் உன்னை மதிக்காமல் பெரும் படையுடன் உன்னைத் தாக்க வருகிறான்" என்று சொல்லிக் கொண்டே இடுப்பில் உடைவாளைக் கட்டிக் கொள்கிறான். காலில் வீரக்கழலை அணிந்து கொள்கிறான். அம்புறாத் தூணியைத் தோளில் எடுத்து மாட்டிக் கொள்கிறான். கவசத்தை அணிந்து கொண்டு தன் வரிவில்லைக் கையில் ஏந்தியபடி, இராமனின் திருவடிகளைத் தொட்டு வணங்கி எழுந்து கூறுகிறான்.

"அண்ணா! இம்மை, மறுமை, இரண்டையும் இழந்துவிட்ட இந்த பரதன் தோள்வலியையும், அவன் படை வலியையும், நீயே எல்லாம் என்று உன் பின்னே வந்துள்ள என் தோள்வலியையும் பராக்கிரமத்தையும் இப்போது பார்!" என்றான்.

பரதனுடைய சேனையைத் தான் எப்படிப் பொடிப்பொடியாக்குவேன் என்பதையும், அவன் படைகள் தன் கணைகளால் படப்போகும் பாட்டையும் எடுத்துக் கூறுகிறான். எல்லாவற்றையும் பொறுமையாகப் புன்னகையோடு கேட்டுக்கொண்ட இராமன் சொல்லுகிறான்.

."தம்பி! இலக்குவா! நீ நினைத்தால் ஈரேழு பதினான்கு உலகத்தையும் கலக்குவாய் என்பது எனக்குத் தெரியும். உன்னை அப்படிச் செய்யாமல் தடுப்பதும், முடியாத காரியம்தான்; என்றாலும்கூட தம்பி! உனக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பொறுமையாகக் கேட்பாயா" என்றான் இராமன்.

"வலிய தோளுடைய லக்ஷ்மணா! நம் குலத்தில் தோன்றிய மன்னர்களுள் குலதர்மத்தைக் கைவிட்டவர்கள் எவருமில்லை. லக்ஷ்மணா! நீ என் மீது அளவு கடந்த அன்பை வைத்துவிட்டாய். அந்த அன்பின் மிகுதியால் நீ பரதனது இயல்பை அறியாமல் பேசுகிறாய். அவன் செயல்கள் அனைத்தும் வேத நெறிகளிலிருந்து பிறழாதவை. இதனை நீயே பின்பு உணர்ந்து கொள்வாய்".

"பரதனும் உன்னைப் போலவே என்மீது அன்பு கொண்டவன். அரசுரிமையை ஏற்க அவன் விரும்பியிருக்க மாட்டான். அதனால் என்னை அழைத்து வரும்படி தந்தை சொல்லியிருக்கலாம், தன் இயல்பான அன்பினாலும், என்னை அழைத்துப் போகவுமே அவன் வருகிறான் என்பதைத் தவிர வேறுவிதமாக எண்ணுவது அறிவுடமை அல்ல" என்றான் இராமன்.

"அதுமட்டுமல்ல, பரதன் என்னோடு போர் புரிவான் என்று நினைப்பதேகூட அறிவுடமை ஆகாது லக்ஷ்மணா! தர்ம தேவதை போன்ற பரதனை, நல்ல குணத்திற்கெல்லாம் உரையாணி போன்றவனுமான பரதனை, நீ இவ்வாறு எண்ணுதல் தகுமா? அவன் இங்கு வருவது என்னைக் காணும்பொருட்டே. இதை நீயே பின்னர் நிச்சயம் காணப்போகிறாய்". இவ்வாறு இராமன் தன் தம்பியிடம் கூறுகிறான்.

இப்படிக் கூறிவிட்டு இலக்குவனோடும் தன் தம்பி பரதனை எதிர்நோக்கி இராமன் நின்றபோது, பரதனும் தன் தம்பி சத்ருக்குனன் பின்வர இராமன் முன் வந்து சேர்ந்தான். இப்போது பரதன் எப்படி இருந்தான் என்பதை கம்பர் பெருமான் கூறுகிறார்.

"தொழுது உயர் கையினன்; துவண்ட மேனியன்
அழுது அழி கண்ணினன்; அவலம் ஈது என
எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை
முழுது உணர் சிந்தையான் முடிய நோக்கினான்".

தலைமீது குவித்த கரங்கள்; வாடிய மேனி; அழுது அழுது நீர் சோரும் கண்கள்; துயரத்தின் முழு வடிவம் போல வந்து தன் எதிரே நிற்கும் பரதனை, அனைத்தையும் உணர்ந்த இராமன் கூர்ந்து நோக்கினான். பிறகு பேசுகிறான்: "பரதா! அயோத்தியில் தந்தை நன்கு நலமாக உள்ளாரா?".

"ஐயனே! உன் பிரிவாலும், என்னைப் பெற்றவளின் வரம் எனும் எமனாலும், சத்தியத்தை இந்த பூமியில் நிலைநிறுத்திவிட்டு, அப்பா வானுலகம் போய்விட்டார்" என்கிறான் பரதன்.

மன்னன் தசரதன் சுவர்க்கம் அடைந்தான் என்ற செய்தி கேட்டு, புண்ணில் வேல் பாய்ந்தது போல் உணர்ந்து, கண்கள் சோர, மனமும் சுழல, இராமன் தரையில் வீழ்ந்தான். சிறிது நேரம் உணர்வு இல்லாமல் கிடந்தான். பிறகு நினைவு திரும்பி புலம்பினான், அழுதான், மனம் வருந்தி பெருமூச்செறிந்தான். தந்தையின் நற்குணங்களையெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதான். அருகிலிருந்த அனைவரும் இராமனைத் தேற்றுகின்றனர். அப்போது குலகுருவான வசிஷ்டர் இராமனிடம் கூறுகிறார்.

"இராமா! நீ உன் தந்தைக்காக வருந்துவதை விட்டு, அவருக்குச் செய்ய வேண்டிய நீத்தார் கடன்களைச் செய்?" அவரவர் செய்த வினைப் பயன்களுக்கு ஏற்ப உலகில் பிறந்து இன்ப துன்பங்களை நுகரும் உயிர்கள், அந்நுகர்ச்சிக்குரிய காலம் முடிந்தவுடன் அவ்வுயிர்களை எடுத்துச் செல்லும் யமன் நல்ல உயிர் கெட்ட உயிர் என்று பார்ப்பதில்லை. பிறந்த குழந்தைகளேகூட மாண்டுவிடுகிற காட்சியைக் காணுகின்ற நாம் அறுபதினாயிரம் ஆண்டுகள் சிறப்புற ஆண்ட சக்கரவர்த்தியின் இழப்பின் பொருட்டு வருந்துவது சரியில்லை".

"இவ்வுலகமே பஞ்சபூதங்களின் சேர்க்கை. அவற்றுக்கே அழிவு உண்டு எனும்போது, அவற்றால் உருப்பெற்று ஆயுள் வரையறுக்கப்பட்ட ஜீவராசிகள் அழிவதில் என்ன வியப்பு இருக்கிறது?".

"உயிர் வாழ்க்கை என்பது சில காலம் ஒளிவிடும் ஒரு விளக்கு. அவ்விளக்கு எரிவதற்கு வேண்டிய நெய், திரி, தீயுமாக வினை, காலம், ஊழ் என்பன அமைகின்றன. நெய்யும் திரியும் அற்றால் விளக்கு அணைவது போல, வினைப்பயனும், காலமும் ஊழும் முடிந்தால் வாழ்க்கையாகிய விளக்கு அணைவது திண்ணம்."

"தீவினை செய்து, அதன் பயனாய், இம்மை, மறுமை இரண்டிலும் துன்பத்தையே நுகரும் உயிர்கள் அனேகம். உன் தந்தை முன்செய்த நற்பயனால் உன்னை ஈன்றான். அதனால் பரமபதம் அடைந்து நற்கதி அடைந்தான். ஆகவே அவனுக்குச் செய்ய வேண்டிய காரியங்களைவிட வேறு என்ன இருக்கிறது?".

"இராமா! கவலையை ஒழி. தந்தைக்குரிய கடன்களை செய்துமுடி. அதுவே உனது முதற் கடமை" என்றார் வசிஷ்டர்.

இராமன் கலக்கம் நீங்கினான். நீராட நதித்துறைக்குச் சென்றான். நீராடிவிட்டு வசிஷ்டர் வழிகாட்ட நீத்தார் கடன்களை நன்கு செய்து முடித்தான். பிறகு பரதன் முதலிய பரிவாரங்கள் புடைசூழ பர்ணசாலை சென்றடைந்தான்.

பெருஞ்சிறப்புகளுடன் அரண்மனையில் வாழவேண்டிய இராமன், இங்கே எளிய குடிலில் வாழ்வது கண்டும், பரிவாரங்கள் தோழியர்கள் புடைசூழ இருத்தற்குரிய பிராட்டி தனியளாய் இருப்பது குறித்தும் பரதன் மீண்டும் வருத்தமடைந்தான். சீதையின் கால்களில் விழுந்து புலம்புகிறான். மன்னனின் இறப்புச் செய்தியறிந்து சீதையும் வருந்தி கண்ணீர் சிந்தி அழுகிறாள்.

தாய் கோசலை, கைகேயி, சுமத்திரை ஆகியோரை அழைத்துக் கொண்டு சுமந்திரன் வருகிறான். இராமன் தாய்மாரை வணங்குகிறான். இராமனைக் கண்டதும் அனைவரும் மனம் நொந்து வருந்துகின்றனர். தாய்மார்கள் சீதையைத் தழுவிக்கொண்டு வருந்து கின்றனர். அன்றைய பொழுது சாய்ந்தது. சூரியனும் தசரதனுக்கு பித்ருக்கடன் செய்துவிட்டு மூழ்குவது போல கடலுள் மூழ்கினான்.

மறுநாட்காலை, அனைவரும் கூடியிருந்த அவையில் இராமபிரான், பரதன் வந்த காரியத்தை வினவினான். முடிசூடாமல் இங்கு ஏன் வந்தாய் என்றான் இராமன். இப்படிக் கேட்ட இராமனை பரதன் நெடுநேரம் பதில் கூறாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"பெரியோர்கள் ஏற்றுக் கொள்ளமுடியாத வரங்களால் உன்னை தவநிலை ஏற்கச் செய்தவளும், சக்ரவர்த்தியின் உயிரைப் போக்கடித்தவளுமான பாவி கைகேயியின் வயிற்றில் பிறந்துவிட்ட எனக்கு என்ன தவம் வேண்டிக் கிடக்கிறது?. தவம் எனக்குப் பொருந்தாது. உயிர் விடுதலே எனக்குத் தகும். ஆனால் அப்படிச் செய்யாமல் இருக்கிறேனே! நீ முடிசூடாமல் தவ வேடங்கொண்டு இங்கே ஏன் வந்தாய் என்று கேட்கிறாயே! அப்படி நான் அரசு மேற்கொள்வது மரபுக்கு உகந்ததோ?".

"கற்பு நெறி தவறிய மகளிரின் குணமும், பொறுமை நீங்கிய தவ ஒழுக்கமும், அருள்நெறி தவறிய தர்மமும், மரபுவழி தவறிய அரசாட்சியும் முன்னேறுமா?"

"அரசுக்கு உரிமையுள்ள நீ, அதனை நீத்து தவம் மேற்கொண்டதும் தவறு. மூத்தவன் நீ இருக்க, நீ முறையின்றி அரசை கைவிட்டுக் காட்டுக்கு வரவும், அதனால் உன் பிரிவினால் தந்தை இறக்கவும், அந்தத் தருணம் பார்த்து நான் அரசைக் கைக்கொண்டு ஆள்வேனானால், சோர்ந்த நேரத்தில் நாட்டைக் கைப்பற்றிக் கொள்ளும் பகைவனுக்கும் எனக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?"

"தந்தை உன்னைக் காட்டுக்கு அனுப்பி, தானும் இறந்து போய் மக்களையும் துன்பத்தில் ஆழ்த்திவிட்டான்; எனவே தந்தையே தீமை செய்தவர் ஆகிறார்".

பரதன் பேசுவதைக் கேட்டுக் கொண்ட பிறகு இராமன் சொல்கிறான், "வெற்றி வீரனே! பரதா! நன்னெறிகளும், சத்தியமும், நியாயங்களும், மேன்மையும், தர்மம் முதலானவைகளும், வேத சாஸ்திரங்களைக் கைவிடாத அரசர்களுடைய கட்டளையாலே உலகத்தில் நிலைத்து இருக்கின்றன. இவை போன்ற நன்னெறிகளுக்குக் காரணம், பெற்றோர்களே என்பதை நீ உணர்வாயாக!".

"தாய் வரம் கேட்டாள். தந்தை கொடுத்தான். அந்த பிதுர்வாக்ய பரிபாலனம் செய்ய நானும் கானகம் வந்தேன். அப்படி நான் மேற்கொண்ட தர்மத்திலிருந்து மாறிவிடவேண்டுமென்பது உன் விருப்பமா? பெற்றோர் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதே பிள்ளைகளின் கடமை. நான் அவர் சொல்லை மீறியிருந்தால் பொல்லாத பாவத்துக்கு அல்லவா ஆளாவேன்".

"கைகேயி பெற்ற வரத்தினாலும், தந்தை கொடுத்த வரத்தினாலும் நாடு ஆளும் உரிமை உன்னுடையதே. அதனை மறுக்காமல் ராஜ்யத்தை நீ ஆளவேண்டும்" என்கிறான் இராமன்.

"அண்ணா! உன் கூற்றுப்படியே, ராஜ்யம் என்னுடையது என்றால், இப்போது நான் அதை உங்களுக்கு உவந்து அளிக்கிறேன், ஏற்றுக்கொள்!. நாடு அரசன் இல்லாமல் தவிக்கிறது. நீ வந்து முடிசூட்டிக்கொண்டு நாட்டைக் காப்பது உன் கடமை".

"பரதா! அப்படி நான் நாட்டுக்குத் திரும்பினால், நான் ஒப்புக்கொண்ட வனவாச காலமான பதினான்கு ஆண்டுகள் முடிந்து விட்டதாக ஆகிவிடுமா? வாய்மை காத்தலினும் சிறந்தது வேறில்லை என்பது உனக்குத் தெரியாதா? பரதா! நம் தந்தையார் என்னை பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழும்படி கட்டளையிட்டார். அந்தக் காலம்வரை நாட்டை ஆளும்படி உனக்குக் கட்டளையிட்டார். அந்த ஆட்சியைத் தந்தை ஆணைப்படி நீ ஆளுதலே முறையாகும். அதனை நீயாக வேண்டாவிட்டாலும் இப்போது நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். அரசை ஏற்றுக் கொள்!". என்றான் இராமன்.

இனியும் இந்த விவாதத்தைத் தொடரவிடக்கூடாது என்று எண்ணிய வசிஷ்ட முனிவர் பற்பல தர்மங்களை எடுத்துரைத்து இராமனையே நாட்டை ஆளும்படி கேட்டுக் கொள்கிறார். இதைக் கேட்ட இராமனுக்கு கோபம் உண்டாகிறது.

"நேர்மையான செயலைச் செய்வேன் என்று நான் உறுதி மேற்கொண்டபின் அதனை மீறுதல் எவர்க்கும் ஆகாது. எனவே, கொண்ட கொள்கையினின்றும் நான் நழுவுதல் நடக்காது" என்றான் இராமன்.

அப்படியானால் தானும் காட்டிலேயே தங்கிவிடுவதாக பரதன் கூறுகிறான். தாங்கள் தவம் புரிந்து வேண்டிய காரியம் நடைபெறாமல் போய்விடுமோ என்று அஞ்சி தேவர்கள் வானத்தில் கூடினார்கள். தேவர்கள் இராமனிடம், தான் கொண்ட பிரதிக்ஞைப்படி காட்டில் இருப்பதும், பரதன் நாட்டை ஆளுவதும்தான் முறை என்கிறார்கள்.

"பார்! தேவர்களே சொல்லிவிட்டார்கள், பரதா! நீதான் நாட்டை ஆளவேண்டும்" என்றான் இராமன். அப்போது பரதன் ஒரு பிரதிக்ஞை செய்கிறான். "அப்படியானால் அண்ணா! பதினான்கு ஆண்டுகள் முடிந்த அடுத்த கணம் நீ வந்து ராஜ்ய பாரத்தை ஏற்கவேண்டும். அப்படி இல்லையென்றால் நான் தீப்புகுந்து உயிரை மாய்த்துக் கொள்வேன்" என்கிறான் பரதன்.

இராமபிரான் இதற்கு ஒப்புக் கொள்கிறான். "அண்ணா! உனது பாதுகைகள் இரண்டையும் நீ எனக்குத் தர வேண்டுமென" பரதன் கேட்டுப் பெற்றுக் கொள்கிறான். பாதுகைகளைப் பெற்றுக் கொண்ட பரதன் அவற்றைத் தன் தலையிலே வைத்துக் கொண்டு தரையில் வீழ்ந்து இராமனை வணங்குகிறான்.

பின்னர் பரதன் மற்றும் பரிவாரங்கள் புடைசூழ திரும்பப் பயணப்பட்டு அயோத்தி நகருக்குள் செல்லாமல், நந்திக்கிராமம் எனும் இடத்தை அடைந்தான். அங்கே இராமனின் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்துத் தன் ஐம்பொறிகளை அடக்கி நீர் சோரும் கண்களோடு தவம் புரிந்து வாழ்ந்தான்.

இராமன் முதலியோர் பயணப்பட்டு மேலும் தென் திசை நோக்கிச் செல்லலாயினர்.

(அயோத்யா காண்டம் முற்றும்)

No comments:

Post a Comment

Please give your comments here