கவிச்சக்கரவர்த்தி கம்பரின் இராம காவியத்தின் உரைநடை வடிவத்தைப் படிக்கும் அன்பர்கள் தங்கள் கருத்துக்களை 'கமெண்ட்ஸ்' பகுதியில் எழுதுங்கள். உங்கள் செளகரியத்துக்காகத்தான் "தமிழ் எழுதி" எனும் பெட்டி தரப்பட்டிருக்கிறது. உங்கள் மேலான கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன். நன்றி.
கம்பன்
உ
கவிச்சக்கரவர்த்தி கம்பன் இயற்றிய
இராம காதை
உரைநடை வடிவம்.
எழுதியது: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.
நாரணன் விளையாட் டெல்லாம் நாரத முனிவன் கூற
ஆரணக் கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான்
சீரணி சோழ நாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன்
காரணி கொடையான் கம்பன் தமிழினால் கவி செய்தானே.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆருயிர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.
நாடிய பொருள் கைகூடும், ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியது ஆக்கும் வேரிஅம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவோர்க்கே.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இன்மையே 'ராம' என்ற இரண்டு எழுத்தினால்.
பால காண்டம்.
வடக்கே இமயமலையில் மானச சரஸிலிருந்து உற்பத்தியாகி இடைவிடாத நீரொழுக்கொடு கூடிய, சூரிய குலத்து அரசர்களின் நல் ஒழுக்கத்தைப் போல ஓடிவருகின்ற நதிதான் சரயு எனும் நதி. இது உயிரினங்களுக்கெல்லாம் தாய்ப்பால் போல உயிரளித்து காப்பாற்றி வளப்படுத்துகின்றது. மலையில் உற்பத்தியாகும் சரயு நதி, கடலில் கலக்கும் வரையிலும் பற்பல துறைகளையெல்லாம் கடந்து சென்று இறுதியில் சமயம் கூறும் கருத்துக் கேற்ப, எவர் எவ்வழி சார்ந்திருந்தாலும், இறுதியில் பரம்பொருளை அடைவது போல இந்த நதி ஓடிக் கடந்து இறுதியில் கடலில் கலக்கிறது.
இந்த சரயு நதி ஓடி வளப்படுத்தும் நாட்டிற்கு கோசல நாடு என்று பெயர். நீர்வளமும் நிலவளமும் நிரம்பிய நாடு கோசல நாடு. அங்கே இயற்கை அன்னை படைத்திருக்கும் அரிய காட்சிகளே கண்டும் கேட்டும் அனுபவிக்கத்தக்க அருமையான காட்சிகளாகும். இந்த இயற்கைக் காட்சிகள் ஓர் இசை நிகழ்ச்சியை நடத்துகிறதாம். எப்படி?
தாமரை மலர்கள் விளக்குகளைத் தாங்கி நிற்கின்றன; மேகங்கள் மத்தளம் கொட்டுகின்றன; கருங்குவளை மலர்கள் கண்விழித்து இந்த அரிய காட்சிகளைப் பார்த்துக் களிக்கின்றன; நீர்நிலைகளில் காற்றால் அலைவுறும் நீரலைகள் திரைச்சீலைகளாய் அமைந்திருக்க வண்டுகள் ரீங்காரமிட்டு இசை பாடுகின்றன; இக்காட்சியைக் கண்டும் இசையைக் கேட்டும் கான மயில்கள் ஆடுகின்றன. கம்பர் காட்டும் அரிய காட்சி இது.
கோசல நாட்டில் வணிகம் பெருகி நடப்பதால், செல்வமும் கணக்கின்றி குவிந்து கிடந்தன. அந்த நாட்டிலுள்ள நிலத்தடி சுரங்கங்களெல்லாம் பற்பல தாதுக்களையும், மணிகளையும் வாரி வாரி கொடுத்துக் கொண்டிருந்தன. விளை நிலங்களோ உற்பத்தியைக் கணக்கின்றி கொடுக்கின்றன; தானியங்கள் மலை மலையாய் குவிந்து கிடக்கின்றன. கோசல நாட்டு மக்கள் ஒருவர் போல அனைவரும் நல்லொழுக்கமும் நல்ல பண்பாடும் மிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள்.
கோசல நாட்டில் தீமை புரிபவர்களே இல்லை. தீயவர்கள் இல்லை என்பதால் அவர்களுக்குத் தண்டனை கொடுப்பது எனும் பேச்சுக்கே இடமில்லை. அங்கு சண்டைகளோ அல்லது தகறாறுகளோ இல்லை, ஏனென்றால் அங்குள்ளவர்கள் மத்தியில் கோப தாபங்கள் இல்லை; அங்கு அறவழி இல்லாத காரியங்களை எவரும் செய்வதில்லை, தவறுகள் நடைபெறுவதில்லை; அதனால் அங்கு அனைவரும் மிக உயர்ந்த மக்களாக இருந்தார்களேயன்றி தாழ்ந்தவர்கள் எவரும் இல்லை.
கோசல நாட்டில் வறுமையே இல்லை என்பதால் எவரும் கையேந்தி யாசகம் பெறுபவர் இல்லை; கேட்பவர்கள் எவரும் இல்லை என்பதால் வள்ளல் தன்மையோடு கொடுப்பவர்களும் இல்லை; தங்களுக்குள் பகை கொண்டு போர் புரிவோர் இல்லை என்பதால் போரில் காட்டும் வீரம் வெளிப்பட வாய்ப்பே இல்லை; பொய் பேசுபவர்களே கோசல நாட்டில் இல்லை என்பதால், வாய்மையின் சிறப்பு வெளிப்பட வாய்ப்பே இல்லை; மக்கள் கல்வி அறிவில் சிறந்தவர்களாக விளங்கியதால் அறிவின் பெருமையும் மேம்பாடும் வெளிப்பட வாய்ப்பே இல்லை.
இத்தகைய வளமிக்க, பெருமைமிக்க கோசல நாட்டின் தலைநகரம் அயோத்தி. யுத்தம் இல்லாத இடம் என்பதால் இவ்வூர் அயோத்தி என அழைக்கப்பட்டது. பூமித்தாயின் திருமுகம் போல அமைந்தது அந்த நகரம். அந்த அழகிய பூமித்தாயின் முகத்தில் இந்த நகரம் அமைந்திருப்பதை, அவ்வழகிய முகத்தில் இடப்பட்ட திலகம் என்று சொல்லலாமோ? அல்லது அந்த முகத்தில் விளங்கும் தாமரை மலர் போன்ற கண்கள் எனலாமோ? அல்லது மார்பில் அணிந்துள்ள ஹாரம் எனலாமோ? மங்கல நாணோ? பூமி தேவியின் உயிர் இது எனலாமோ?
ஓ! இது திருமகள் வாசம் செய்யும் தாமரை மலர்தான். திருமாலின் மார்பில் தவழும் கவுஸ்துபம் முதலான மணிகள் கொண்ட பெட்டகம்தான். மேல் உலகினும் சிறந்ததான வைகுந்தமாக இருக்குமோ? ஊழிக் காலத்தில் திரு உந்தியில் அடங்கும் உயிர்களோ? என்னவென்று உரைப்பது? அத்தகைய சிறப்புக்களையுடைய அயோத்தி நகரத்தில் மங்கள ஒலிகள் மட்டுமே எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும்.
இத்தகைய பெருமைகொண்ட மாண் நகரை அரசாண்ட மன்னன் தசரதன் என்பான். அவன் என்ன சாதாரண அரசனா? இல்லை இல்லை, அரசர்களுக்கெல்லாம் அரசன், சக்கரவர்த்தி. ஏழு உலகங்களிலும் அவனது செங்கோல் சிறப்புற்று விளங்கியது. இந்த இராம காதையின் நாயகனான ஸ்ரீ இராமபிரானை, இப்பூவுலகுக்கு அளித்த தருமமூர்த்தி போன்றவன் தசரத மன்னன்.
அந்த தசரத சக்கரவர்த்தி அன்பு செலுத்துவதில் தாய் போன்றவன். தவங்களைச் செய்வதால் எப்படி நன்மைகள் எல்லாம் விளையுமோ அப்படி நன்மைகளை அளிப்பவன். மற்றவர்களுக்கு எப்படி வாழ வேண்டுமென்பதில் தானே வழிகாட்டியாக இருந்து, நன்னெறியில் வழி நடத்துவதில் நற்புதல்வன் போன்றவன்; நாட்டுக்கு ஏதேனும் நோய் போன்ற தீமை ஏற்படுமானால், இவன் அதற்கு மருந்து போல இருந்து குணமாக்குபவன்; மொத்தத்தில் கல்வி, கேள்வி, அறிவிலே சிறந்தவன்.
இத்தகைய பெருமைகளையெல்லாம் தனக்கே உரிமையாக்கிக் கொண்டிருந்த தசரத சக்கரவர்த்தி ஒருநாள் தன் அரண்மனையில் கொலு மண்டபத்தில் அமைச்சர் பரிவாரங்கள் புடைசூழ அமர்ந்திருந்தான். அவன் அந்த சபையில் வீற்றிருந்த காட்சியானது இந்திர லோகத்தில் இந்திரன் அரசு வீற்றிருந்ததைப் போல இருந்தது. அப்போது சினத்திற்குப் பெயர் போன விஸ்வாமித்திர மகரிஷி அந்த அரசவைக்கு வந்து சேர்ந்தார்.
தவ சிரேஷ்டரான விஸ்வாமித்திர மகரிஷியைக் கண்ட தசரத சக்கரவர்த்தி, தன் கழுத்தில் அணிந்திருந்த மணி ஹாரங்கள் ஒளிர வேகமாக எழுந்து வந்து, தன்னை நாடி வந்திருக்கும் முனிவரின் பாதங்களில் விழுந்து பணிந்து வணங்கினான். இந்திரனுடைய சபைக்கு பிரம்ம தேவன் வருகின்ற போது இந்திரன் எழுந்து வணங்குவதைப் போல இருந்தது அந்தக் காட்சி.
தசரதன் விஸ்வாமித்திர முனிவருக்கு முறைப்படியான பல சிறப்புக்களைச் செய்து, உபசார மொழிகளைக் கூறலானான். "நான் வந்து தங்களது அடிபணிந்து எனது அரண்மனைக்கு அழைப்பது போக, தாங்களாகவே என்னைத் தேடி வரும்படி நேர்ந்ததற்கு நான் என்ன புண்ணியம் செய்தேனோ? இது என் குலம் செய்த பேறு; நான் செய்த நல்வினையின் பயன்" என்றெல்லாம் மன்னன் உபசார வார்த்தைகளைக் கூறினான்.
மன்னன் மொழிகளைக் கேட்ட முனிவர் சொல்கிறார்: "தசரதா! கேள். என்னைப் போன்ற முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் ஏதாவது இடையூறு வந்ததென்றால் அதை நீக்கிக் கொள்ள மலைகளில் சிறந்த கைலாயத்திலிருக்கும் சிவபெருமானையும், திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலையும், பத்மபீடத்து நன்னகர் எனும் தாமரை ஆசனமுடைய பிரம்ம லோகமும், அதன் தலைநகரான அமராவதிப் பட்டணமும், மணிமாடங்களைக் கொண்ட அயோத்தி எனும் பொன்னகரத்தையுமன்றி வேறு புகலிடம் எங்களுக்கு ஏது?"
"தசரதா! நான் கைலாயத்துக்கோ அல்லது பாற்கடலுக்கோ, பிரம்ம லோகத்துக்கோ செல்வதைக் காட்டிலும் மிக எளிதாக உன்னை வந்தடைய முடியும் என்று கருதியே நான் உன்னை நாடி வந்துள்ளேன். ஒரு சமயம் இந்திரனுடைய பதவிக்கு சம்பராசுரனால் ஆபத்து நேர்ந்தபோது நீயல்லவா அந்த அசுரனோடு போரிட்டு, இந்திரனுக்கு அவனுடைய நகரை மீட்டுக் கொடுத்தாய்" என்றார்.
அது என்ன வரலாறு? சற்று பார்ப்போமா? ஒரு சமயம் திமித்துவன் எனும் பெயர் கொண்ட சம்பராசுரன், தன் அசுரர் கூட்டத்தோடு சென்று இந்திரன் உள்ளிட்ட தேவர்களோடு போரிட்டு அவர்களை வென்று, அமராவதி நகரைக் கைப்பற்றி, இந்திரனைப் பதவியிலிருந்தும் துரத்தி விடுகிறான்.(இந்திரன் என்பது ஒரு பதவி. இந்தப் பதவியில் மாறி மாறி பலர் இருந்திருக்கிறார்கள். நமது ஜனாதிபதி பதவி போன்றது இந்திரப் பதவி, நிரந்தரமாக ஒருவரே இந்திரனாக இருந்ததில்லை) உடனே இந்திரன் தசரத சக்கரவர்த்தியிடம் சென்று தன் நிலைமையைக் கூறி முறையிட்டு அவனது உதவியைக் கோரினான். தசரத மன்னன் இந்திரனுக்கு உதவி செய்யும் பொருட்டு தனது இளைய மனைவி கைகேயி தேரோட்ட, தான் சென்று சம்பராசுரனோடு கடும் போர் செய்து அசுரர்களைக் கொன்றுவிட்டு வானுலக ஆட்சியை மீட்டு மீண்டும் இந்திரனிடம் ஒப்படைத்தான்.
முனிவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட தசரத சக்கரவர்த்தி தன்னிரு கைகளைக் கூப்பிக்கொண்டு அவரை வணங்கி "முனிவர் பெருமானே! யான் அரசு எய்திய பயனை இன்றே அடைந்தேன். நான் தங்களுக்குச் செய்ய வேண்டியது என்ன என்பதைக் கூற வேண்டும்" என்றான். அதற்கு விஸ்வாமித்திர முனிவர் கூறுகிறார்:
"தருவனத்துள் யான் இயற்றும் தவவேள்விக்கு இடையூறாத் தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என, நிருதர் இடை விலக்கா வண்ணம்
செருமுகத்துக் காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி! என உயிர் இரக்கும் கொடுங்கூற்றின் உளையச் சொன்னான்"
"தசரதா! நீ வேறொன்றும் பெரிய காரியம் எதுவும் எனக்காகச் செய்ய வேண்டாம். அடர்ந்த வனத்துக்குள் நான் ஒரு தவ வேள்வியை நடத்துகிறேன். அதை அரக்கர்கள் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; எப்படி காமம், கோபம் இவை தவம் புரிவோர்களுக்கு இடையூறு செய்யுமோ அப்படி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படி இடையூறு செய்யாவண்ணம் அவர்களை தடுத்து நிறுத்த நின் மக்கள் நால்வரில் கரிய செம்மலாகிய ராமனை என்னோடு அனுப்பி வை" என்றான். முனிவனுடைய இந்த வார்த்தைகள் அவனது உயிரையே பறிப்பது போல இருந்தது. என்ன இது? இந்த முனிவர் தனது உயிரையே அல்லவா யாசகம் கேட்கிறார்.
முனிவருடைய இந்த கோரிக்கை தசரத மன்னனின் காதில் விழுந்தது எப்படி இருந்தது தெரியுமா? ஏற்கனவே உடலில் வேல் பாய்ந்து பள்ளம் விழுந்த ஆழமான புண்ணில் தீ நுழைந்தது போல வேதனை அளித்தது. ஏப் அப்படி அந்த மன்னன் உணர்ந்தான் என்பதற்குக் காரணம் இருந்தது.
தசரத மன்னனுக்கு ஒரு சாபம் உண்டு. அவனது மகன் அவனை விட்டு பிரிவதனால் உண்டாகும் துயரத்தால் அவன் இறந்து போவான் என்று ஒரு சாபத்தை அவன் பெற்றிருந்தான். அது பலிக்கும் காலம் வந்துற்றதோ? இப்போது இந்த முனிவன் இராமனைத் தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கேட்கிறானே. அப்படி இராமன் தன்னைவிட்டுப் பிரிவதனால் தனது உயிர் நீங்கப் போகிறதோ? என்றெல்லாம் தசரதன் எண்ணமிட்டான்.
ஏற்கனவே அந்த சாபத்தினால் அவனது மனத்தில் ஓர் ஆழமான காயம் பட்டிருந்தது. அந்த காயம் பட்ட புண்ணில் இப்போது இந்த முனிவனது வேண்டுகோள் தீயை இட்டது போல உணர்ந்தான் மன்னன். தவமாய் தவமிருந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்து, வாராது போல வந்த பிள்ளையை இந்த விஸ்வாமித்திர முனிவர் யாசிப்பதால் அவன் உள்ளம் பட்ட பாட்டை விளக்குகிறார் கவிச்சக்கரவர்த்தி. அதாவது, ஒருவனுக்கு கண் பார்வை இல்லாமலிருந்து பார்வை வந்து மீண்டும் இழந்த போது அவன் எவ்வாறு வருந்துவானோ அப்படி வருந்தினான் தசரதன் என்பதை "கண்ணிலான் பெற்றிழந்தான் என உழந்தான்" என்று கூறுகிறார். அந்தப் பாடல் இதோ:
"எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறிவேல் பாய்ந்த
புண்ணிலாம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் எனச் செவியில் புகுதலோடும்
உண்ணிலா வியதுயரம் பிடித்து உந்த ஆருயிர் நின்று ஊசல் ஆடக்
கண்ணிலான் பெற்றிழந்தான் என உழந்தான் கடும் துயரம் காலவேலான்".
தசரத சக்கரவர்த்தி உடல் நடுங்க, குரல் தழுதழுக்க, கைகூப்பி முனிவரிடம் கூறுகிறான்: "முனிவர் பெருமானே! அரக்கர்களால் தங்கள் யாகம் தடையின்றி நடைபெற வேண்டும் அவ்வளவுதானே? என் மகன் ராமன் வயதில் இளையவன். போர் பயிற்சியும் இல்லாதவன். ஆகையால் அவன் வேண்டாம். உமது வேள்விக்கு இடையூறாக யார் வந்தாலும், ஏன்? அந்த சிவபெருமானோ, பிரம்மனோ அல்லது இந்திரனோ, எவர் வந்தாலும் நான் வந்து அவர்களை முறியடித்து உங்கள் யாகத்தை முடித்து வைப்பேன்" என்றான்.
இப்படி தசரத மன்னன் சொன்னதுதான் தாமதம், முனிவருக்கு வந்ததே பெரும் கோபம். உடனே இருக்கையை விட்டு எழுந்தார். அவரது புருவங்கள் நெறித்தன. கண்கள் சிவந்தன. கடும் கோபத்தின் காரணமாக சிரிப்பும் வந்தது. அவர் சினத்தீயால் எழுந்த புகை சூரியனைக் கூட மறைத்தது. இந்தக் காட்சியைக் கண்ணுற்ற தேவர்கள் இந்த பூவுலகுக்கு இறுதிக் காலம் வந்து விட்டதோ என்று அச்சப்பட்டார்கள்.
சூழ்நிலையின் இறுக்கத்தைப் புரிந்துகொண்ட தசரத மன்னனின் குல குருவான வசிஷ்ட முனிவர் பேசலானார். அவர் தசரத மன்னனைப் பார்த்துச் சொன்னார்: "மன்னா! கோசிக முனிவரது நோக்கத்தைப் புரிந்து கொள்!" என்று சொல்லிவிட்டு முனிவரிடம் "முனிவரே! நீர் சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். அமைதியடையுங்கள்" என்றார். பிறகு மன்னனைப் பார்த்து "மன்னா! உன் மகனுக்கு அளவிலா நன்மைகள் வந்து சேர்வதை நீ விரும்பவில்லையா?" என்றார். "உன் மகன் ராமனுக்கு அளவற்ற அஸ்திர வித்தைகள் தெரிந்து கொள்ளும் நேரம் வந்திருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு நடந்து கொள்" என்றார்.
குருவின் வார்த்தைகளைக் கேட்ட தசரதன், உடனே இராமனை அழைத்து வரக் கட்டளையிட்டான். காவலர்கள் ராமனிடம் சென்று மன்னர் அழைப்பதாகக் கூற, அக்கணமே ராமன் தன் தம்பி இலக்குவனோடு கிளம்பி அரசவை வந்து சேர்ந்தான். இராமனும் இலக்குவனும் இணைபிரியாமல் இருப்பவர்கள். அண்ணன் போகுமிடமெல்லாம் தம்பியும் வரும் வழக்கம் கொண்டவன். அவைக்கு வந்த ராமனை முனிவரிடம் காண்பித்து தசரதன் "ஐயனே! இந்தச் சிறுவர்க்கு இனி நல்ல தந்தையும் தாயும் நீயே! இவர்களை உம்மிடம் அடைக்கலமாக ஒப்புவித்தேன். இவர்களுக்கு தக்கன செய்வீராக!" என்றான்.
இராம லக்ஷ்மணர்களைக் கண்டதும் கோசிக முனிவனின் கோபம் தணிந்தது. மகிழ்ச்சியடைந்தார். இராம லக்ஷ்மணர்களை அடைக்கலமாக ஏற்றுக் கொண்டு, நாம் போய் வேள்வியை முடிப்போம் என்று கூறி தசரதனை வாழ்த்தி விடைபெற்றுச் சென்றார். இராமன் அம்புராத் தூணியைத் தோளில் தாங்கிக் கொண்டு, கையில் வில்லை ஏந்தி, இலக்குவனும் அதுபோலவே வில் அம்பு சகிதம் புறப்பட்டு, முனிவரின் நிழல் போல அவரைப் பிந்தொடர்ந்து நகரின் எல்லையைச் சென்றடைந்தனர்.
முனிவர் முன்னே செல்ல, அடுத்து இராமனும், அவன் பின்னே இலக்குவனுமாகச் சென்றதாக வான்மீகத்தில் கூறப்படுகிறது. மூவரும் நடந்து சென்று சரயு நதியை அடைகின்றனர். அப்போது இரவு நேரம் வந்துவிட்டது. அன்றைய இரவுப் பொழுதை அங்கே ஒரு சோலையில் கழித்தனர்.
பொழுது விடிந்ததும் ஒரு படகில் ஏறி, சரயு நதியைக் கடந்தனர். அங்கே ஒரு சோலை. அது என்ன சோலை என்று இராமன் வினவ, முனிவர் கூறுகிறார். "ஒரு சமயம் சிவபெருமான் யோக நிலையில் இருந்தார். அப்போது மன்மதன் தனது பாணங்களைக் கொண்டு காமக் கணைகளை ஏவ, சிவபெருமான் சினந்து, அவனைத் தன் நெற்றிக் கண் திறந்து எரித்து சாம்பலாக்கி விட்டார். அது நிகழ்ந்த இடம் இதுதான். இதனை காமன் ஆசிரமம் என்பார்கள். இந்த நாட்டுக்கு அங்க நாடு என்றும் பெயர்" என்று எடுத்துரைத்தார் முனிவர்.
அங்கு வந்து சேர்ந்த இம்மூவரையும், அந்த காமன் ஆசிரமத்தில் வாழ்ந்து வந்த முனிவர்கள் அன்புடன் வரவேற்றனர். மூவரும் அங்கு ஒரு நாள் தங்கிவிட்டு மறுநாள் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற இடம் கொடிய பாலைவனப் பிரதேசம். கொடிய அந்தப் பாலைவனத்தைக் கடக்கும் போது இராம லக்ஷ்மணர்கள் எவ்வளவு ஆற்றலுடையவராயினும், வெப்பம் பொறாமல் துன்பமடைவர் எனக் கருதி, விஸ்வாமித்திர முனிவர் அவர்களுக்கு பலா, அதிபலா எனும் இரண்டு மந்திரங்களை உபதேசித்தார். அவ்விரு மந்திரங்களின் மகிமையால் அந்தப் பாலைவனத்தின் கொடுமை தெரியாமல் குளிர்ந்து நடை வருத்தம் தெரியாமல் செய்தது.
இந்த நிலம் இவ்வளவு கொடுமையான பாலையாக மாற என்ன காரணம் என்று இராமன் முனிவரிடம் வினவ, அவர் கூறியதாவது: "ராமா! கேள். இந்தக் காட்டில் பல உயிர்களைக் கொன்று, தின்று வாழ்பவளும், ஆயிரம் மத யானைகளின் பலத்தைக் கொண்டவளுமான ஒருத்தி இருக்கிறாள். அவள் கதையைச் சொல்கிறேன் கேள்!"
"யட்ச குலத்தில் வந்த சுகேது என்பவன் தனக்குப் பிள்ளையில்லாத குறைக்கு மனம் வருந்தி, அக்குறை தீர பிரம்ம தேவனைக் குறித்து நெடுநாள் தவம் செய்து வந்தான். அவனது கடும் தவத்தை மெச்சி பிரம்ம தேவன் அவனிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்க, அவன் தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு பிரம்மன் 'உனக்கு இந்தப் பிறவியில் மகன் பிறக்கும் பாக்கியம் இல்லை, ஆனால் உனக்கு ஒரு மகள் பிறப்பாள்' என்று வரமருளினார். அந்தப் பெண் லக்ஷ்மி போன்ற அழகும், ஆயிரம் யானைகளின் பலமும் கொண்ட ஒரு பெண்ணாக இருப்பாள் என்றும் பிரம்மன் கூறியருளினார்.
அதன்படி சுகேதுவுக்கு தாடகை என்ற பெண் பிறந்து, வளர்ந்து மணப் பருவம் அடைந்தபோது, அவளது அழகிற்கும், வலிமைக்கும் ஏற்ற கணவன் யார் என்று ஆராய்ந்து, இயக்கர் தலைவனான சுந்தன் என்பவனுக்கு அவளை மணம் செய்து கொடுத்தான். மணமுடித்து அவ்விருவரும் ரதி மன்மதன் போல அன்புடையவராய் இன்பமாய் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு மாரீசன், சுபாஹு என்று இரண்டு மகன்கள் பிறந்தனர். அவ்விருவரும் மாயை, வஞ்சனை இவற்றோடு நல்ல உடல் வலிமையும் பெற்றிருந்தனர்.
சுந்தன் மதம் கொண்டு தன்னை மறந்து, இன்னது செய்கிறோம் என்று அறியாது அகத்திய முனிவரின் ஆசிரமம் சென்று அங்குள்ள மரங்களை வேருடன் பிடுங்கி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்தான். இந்த அகத்திய முனிவர் பொதிகை மலையில் வாழ்பவர் எனவும், சிவபெருமானுடைய திருமணத்தின் போது கூடிய கூட்டத்தின் காரணமாக வடகோடு அழுந்த தென்கோடு உயர, அதனை சமன் செய்யும் பொருட்டு தெற்கே அனுப்பப்பட்டார் என்று புராணங்கள் கூறும். இவர் கடல் நீரை முழுதுமாக பருகக் கூடியவர். அந்த வரலாறு:-
விருத்திராசுரன் என்ற அசுரன் இந்திரனால் துரத்தப்படுகிறான். அவன் மேலும் பல அசுரர்களுடன் கூட கடலுக்குள் ஒளிந்து கொள்கிறான். அவனை வதைக்க முடியாமல் இந்திரன் வருந்திய போது அகத்திய முனிவர் தமது தவ வலிமையால் கடல்நீர் முழுவதையும் தம் கையில் அடங்கும்படி செய்து ஆசமனம் செய்வது போல அருந்தி விடுகிறார். கடலுக்கடியில் ஒளிந்து கொண்டிருந்த அசுரர்கள் வெளிப்பட்டனர். பின்பு இந்திரன் அசுரர்களைக் கொன்று உலகை அவர்களிடமிருந்து காப்பாற்றியதாகவும், இதன் பின்னர் அகத்திய முனிவர் கடல் பகுதியை முன்போலவே நீர் கொள்ளச் செய்தார் என்பதும் புராணம்.
சுந்தன் அகத்திய முனிவரின் ஆசிரமத்தைச் சுற்றியிருந்த மரங்களை வேரோடு பெயர்த்தது கண்டு முனிவர் வெகுண்டார். அவர் பார்த்த கோபப் பார்வையில் அந்த அசுரன் எரிந்து சாம்பராகிப் போனான். இந்த செய்தி கேட்ட தாடகை தன் கணவனைக் கொன்ற முனிவரைக் கொன்று ஒழிப்பேன் என தன் புதல்வர்கள் உடன்வர, அகத்திய முனிவரின் ஆசிரமத்தை அடைந்தனர். அவர்கள் மூவரும் அங்கு சென்று செய்த அடாவடித்தனங்களைக் கண்டு சினந்த முனிவர், நீங்கள் மூவரும் அடாதன செய்ததால், அரக்கர்களாகி தாழ்வடைவீர்கள் என்று சாபமிட்டார்.
வடமொழியும், தமிழும், அநாதிகாலம் தொட்டு இருப்பன. சிவபெருமான் பாணினிக்கு வடமொழியையும், அகத்தியருக்குத் தமிழ் மொழியையும் அளித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய முனிவரான அகத்தியர் இட்ட சாபம் பெற்ற மூவரும் அரக்கர்களாகத் திரிகின்றனர். மாரீசனும், சுபாஹுவும் பாதாலத்தில் இருந்த சுமாலி என்பவனிடம் போய் தங்களை அவனது அபிமான புத்திரர்களாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்ட, அவனும் அவ்வாறே இவர்களை ஏற்றுக் கொள்கிறான்.
இந்த சுமாலி என்பவன் இராவணனுடைய தாயாகிய கேகசிக்குத் தந்தை. அதாவது தாய் வழிப் பாட்டன். இவன் தன் சகோதரர்களான மாலி, மாலியவான் ஆகியோருடன் இலங்கையில் குடிபுகுந்து தேவர்களுக்குப் பல இன்னல்கள் புரிந்து வந்தனர். திருமால் வந்து போர் புரிந்து வென்று மாலி என்பவனைக் கொன்றுவிட, மற்றவர்கள் பாதாலத்தில் பதுங்கிக் கொண்டனர். பிறகு, குபேரன் இலங்கையை வென்று ஆட்சி புரியும் காலத்தில் இராவணன் பிறந்து, வளர்ந்து பற்பல வரங்களைப் பெற்று, குபேரனை விரட்டிவிட்டு இலங்கையைத் தனதாக ஆக்கிக் கொண்டான். அதனால் சுமாலி முதலியோர் மீண்டும் இலங்கையில் குடிபுகுந்தனர்.
சுமாலியோடு சேர்ந்து கொண்ட மாரீசன், சுபாஹு ஆகியோரும் இலங்கையில் குடியேறி அங்கு இராவணனின் மாமன்கள் என்ற முறையில், பற்பல கொடுஞ் செயல்களைச் செய்து வந்தனர். தன் மக்கள் தன்னை விட்டுப் பிரிந்து, தன்னை தனியாக விட்டுச் சென்றபின் தாடகை மனம் புழுங்கிய நிலையில் இந்த வனப்பகுதிக்கு வந்து சேர்ந்தாள். அந்த தாடகை என்பாள் பெண் உருக் கொண்டவள்தான் என்றாலும் பூமியையே பெயர்த்தெடுக்கவும், கடல் நீரை முழுதுமாக அள்ளிப் பருகவும், வானை முட்டி இடிக்கவும் வல்லமை படைத்தவள். மலைகளைப் போன்ற தனங்களும், நஞ்சு உமிழும் கண்களும், இடிபோன்ற ஆரவாரக் குரலும், ஊழித்தீ போன்ற செம்பட்டை மயிரும், இருபிறை போன்ற கோரைப் பற்களும், கடல் எழுந்து நடப்பது போன்ற உருவமும் கொண்டவள். அவளை வருணிக்கும் கம்பர் பாடல் இதோ:--
"சூடக வரவுறழ் சூலக் கையினள்
காடுறை வாழ்க்கையள் கண்ணிற் காண்பரேல்
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்
தாடகை என்பது அச்சழக்கி நாமமே"
விஸ்வாமித்திர முனிவர் இராமனிடம் தாடகையின் வரலாற்றைக் கூறி வருகிறார். மேற்கண்ட பாடலில் கம்பன் கூற்று: "உன்னை கண்களால் காண்கின்ற ஆண்கள் கூட, தாங்களும் பெண்ணாகப் பிறந்திருக்கலாமே என்று உன் அழகில் மயங்கும்வார்களே! இராமா, சூலத்தைக் கையில் ஏந்திக் கொண்டு இந்தக் காட்டில் திரியும் அந்தக் கொடியவள் பெயர்தான் தாடகை என்பதாகும் என்றார். வான்மீகத்தில் வரும் சொற்றொடர் "பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்" என்பது ஆடவரின் கண், மனம் ஆகியவற்றைக் கவரும்படியான எழில் படைத்தவன் என்று கூறுகிறது. இந்த அரக்கிதான் வளமிக்க இந்த பூமியை இப்படி பாலைவனமாக ஆக்கி விட்டாள். இவள் அங்க நாடு எங்கும் உள்ள உயிர்களை அழித்தலோடு எனது வேள்விகளையும் இராவணன் ஏவலால் கெடுத்துக் கொண்டிருக்கிறாள் என்று முனிவர் கூறுகிறார். அவர் இராமனைப் பார்த்து கூறியதாவது:-
"மைந்தா! தசரத குமாரா! இந்த அரக்கியை நீ இப்போதே அழிக்காவிட்டால், இன்னும் சில காலத்தில் இவள் இந்த பூவுலகத்தையே அழித்துப் பாழாக்கி விடுவாள்" என்றார்.
இந்த வரலாற்றைக் கேட்ட இராமன் வியப்பும், அந்த அரக்கியைப் பார்க்க வேண்டுமென்ற அவாவும் கொண்டான். தன் தலையை அசைத்து முனிவர் சொன்ன வரலாற்றைக் கேட்ட அழகினை, அடடா! கம்பர் வாக்கால் பார்க்கலாம்.
"இங்கு உறுவன் இபரிசு உரைப்ப அது கேளா
கொங்கு உறை நறைகுலம் சென்னி துளக்கா
எங்கு உறைவது இத்தொழில் இயற்றுபவள் என்றான்
சங்கு உறை கரத்து ஒரு தனிச்சிலை தரித்தான்"
'பாஞ்சஜைன்யம்' எனும் சங்கைத் தன் கையில் தாங்கியவன், இப்போது ஒரு வில்லைத் தாங்கிக் கொண்டு, விஸ்வாமித்திர முனிவரின் வார்த்தைகளைக் கேட்டவுடன், தன் தலையை மெல்ல அசைத்து இக் கொடுந்தொழிலைச் செய்யும் அவ்வரக்கி எங்கே வசிக்கிறாள் என்று கேட்டான். அப்போது முனிவர் எதிரிலிருந்த மலையைக் காட்டி "இதோ இந்த மலையில்தான் அவள் வாசம் செய்கிறாள்" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு மலை பற்றி எரிவதைப் போல அந்த அரக்கி தாடகை அங்கே வந்து சேர்ந்தாள். அவள் தோற்றம் எப்படி இருந்தது?
"இறைக்கடை துடித்த புருவத்தள்; எயிறு என்னும்
பிறைக்கடை பிறக்கிட மடித்த பில வாயள்
மறக்கடை அரக்கி, வடவைக்கனல் இரண்டாய்
நிறைக்கடல் முளைத்தென நெருப்பு எழ விழித்தாள்."
கோபத்தால் நெறித்த புருவமும், கோரைப் பற்கள் கடைவாயில் தெரிய உதட்டைக் கடித்துக் கொண்டும், இரு கண்களிலும் வடவாக்னி எனும் தீப்பிழம்பு கக்க இவர்களை அவள் உற்றுப் பார்த்தாள். இடிபோல ஏழுலகும் கேட்கும்படியாகக் கர்ச்சித்தாள். தன் கை சூலத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு "இந்தக் காட்டுப் பகுதியில் இருந்த அனைத்து உயிர்களையும் நான் தின்று தீர்த்த பிறகு, எனக்கு உணவாகும்படி நீங்களாகவே வந்திருக்கிறீர்களா? உங்கள் தீவினை உங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறதா? சொல்லுங்கள்" என்றாள்.
"உங்களைக் கொல்லுகிறேன் பார்!" என்று தனது கை சூலத்தைக் குறிபார்த்து எறியத் தயாரானாள். இந்த அரக்கியைக் கொல்வதற்காகத்தான் நாம் வந்திருக்கிறோம். அதுதான் முனிவரின் ஆணை என்பது தெரிந்தும், இவள் ஒரு பெண்ணாயிற்றே, இவளைக் கொல்வது சரியா? என்று இராமன் சிந்தித்துக் கொண்டு தனது கொடிய அம்பினை அவள் மீது செலுத்தத் தயங்கினான். இராமனுடைய கருத்தை உணர்ந்த முனிவர் சொன்னார்: "இராமா! அவள் உருவத்தில்தான் பெண், ஆயினும் செயலால் ஆண்களையும் விஞ்சுபவள். அவளைக் கொல்லுதல் அறச் செயலேயன்றி குற்றம் அல்ல" என்றார்.
"தீது என்று உள்ளவை யாவையும் செய்து எமைக்
கோது என்று உண்டிலள் இத்தனையே குறை;
யாது என்று எண்ணுவது இக் கொடியாளையும்
மாது என்று எண்ணுதியோ? மணிப்பூணினாய்."
"இவள் எங்களைக் கொன்று தீர்க்காத குறைதான், அவ்வளவு தீமைகளைச் செய்து வருகிறாள். தவம் செய்து எலும்பும் தோலுமாக உள்ள எங்களை வெறும் சக்கை (கோது) என்று சாப்பிடாமல் விட்டு வைத்திருக்கிறாள், இவளைப் பெண் என்று கருதாதே. பற்பல உயிர்களையும் வாரி வாரித் தன் வாயில் இட்டுத் தின்கிறாளே,
இதனினும் தீமை வேறு உளதோ? நான் தருமத்தைக் கூறினேனே தவிர இவளிடம் உள்ள கோபத்தால் இவளைக் கொல்லும்படி சொல்லவில்லை, இனியும் தாமதியாமல் உடனே இவளைக் கொல்வாயாக! தீயவரை அழித்து நல்லோரைக் காப்பது அரச தர்மம். உன் தர்மத்தைச் செய்!" என்றார் முனிவர்.
"குருவாகிய நீர் பணிப்பது எதுவாயினும், அதனை செய்து முடிப்பது என் கடமை" என்று இராமன் கூறிக்கொண்டிருக்கும் போதே தாடகை தன் கையிலிருந்த வேலை இராமன் மீது வீசினாள். அந்த சூலம் தன்னை நெருங்காமுன்னர் வில்லை வளைத்து அம்பைச் செலுத்தி அந்த சூலத்தைப் பொடிபொடியாக்கினான் இராமன். உடனே சரமாரியாகக் கற்களை வீசி இராமனைத் தாக்கினாள் அரக்கி. அவ்வளவையும் தன் அம்பினால் தகர்த்து தூள் தூளாக்கினான் இராமன். இனியும் இவளை விட்டு வைக்கக் கூடாது என்று இராமன் ஓர் அம்பை எடுத்து, அந்தக் கருநிற அரக்கி மீது விட்டான். அந்த அம்பு கல் போன்ற அவளது நெஞ்சில் புகுந்து, தங்காமல் கழன்று, அற்பர்களுக்கு நல்லோர் சொன்ன அறிவுரை எப்படி ஒரு காதில் புகுந்து மறு காது வழியாகப் போகுமோ அப்படிப் போனது.
"சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம் கரிய செம்மல்
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சென்ன பொருள் எனப் போயிற்றன்றே!"
பிரளய காலத்தில் வீசுகின்ற சண்டமாருதக் காற்றில் மோதி சிதைந்து போகின்ற கரிய மேகம் போல அந்த அரக்கி இராமன் செலுத்திய அம்பால் அடிபட்டு கீழே விழுந்தாள். அவள் உயிர் நீங்கிய பிறகு அரக்க வடிவம் நீங்கி முந்தைய இயக்கி வடிவம் பெற்று, இராமனை வணங்கி அவன் அருளால் நல்லுலகம் அடைந்தாள். (அத்யாத்ம ராமாயணம்).
ஒரு போரில் மன்னனை வீழ்த்துவதற்கு முன்பு அவனது வெற்றிக் கொடியை வீழ்த்துவது போல இராவண சம்ஹாரத்துக்கு முன்னதாக அவனோடு தொடர்புடைய ஓர் அரக்கி வீழ்ந்தாள். காகுத்தனின் (இராமனின்) கன்னிப் போரில், அரக்கர்களை நெருங்க முடியாத நிலை மாறி, முதல் அரக்கியை அழித்து அவள் இரத்தச் சுவை கண்டது, பின்னர் நேரப் போகும் அரக்கர்களின் அழிவுக்கு அச்சாரமாக அமைந்தது எனலாம். தேவர்கள் பூமாரி பொழிந்து முனிவரிடம் "இனி நடக்கப் போகும் அசுரர்களுக்கு எதிரான போரில், இராமன் வெற்றி பெறுவதற்கு தெய்வப் படைக் கலன்களை மந்திர உபதேசத்துடன் அளிப்பீர்களாக!" என்று வேண்டி நின்றனர். தாடகை வதம் நடந்தது சூரியாஸ்தமன வேளையிலாகும். பின்னர் இராப் பொழுதை அங்கேயே கழித்து விட்டு, காலை பல அஸ்திர வித்தைகளை முனிவர் இராமனுக்கு அருளியதாக வான்மீகம் கூறும்.
பிறகு மூவரும் புறப்பட்டு இரண்டு காத தூரம் நடந்து போகும்போது, பெரிய ஓசையைக் கேட்டனர். அது என்ன ஓசை என்று இராமன் முனிவரிடம் கேட்டான். முனிவர் கூறுகிறார்: சரயு நதியில் கோமதி எனும் ஆறு கலப்பதால் ஏற்படும் ஓசை அது என்று கூறி மேலே செல்ல வழியில் 'கோசிகை' எனும் நதிக்கரையை அடைகின்றனர். விஸ்வாமித்திர முனிவர் தன்னுடன் பிறந்தவளான கெளசிகி என்பவளே இந்த நதியாக மாறினாள் என்று அந்த வரலாற்றையும் முனிவர் கூறினார்.
முன்பொரு காலத்தில் பிரம்ம தேவன் குசன் எனும் ஒரு அரசனை தோற்றுவித்தான். அந்த குசனுக்கு நான்கு புதல்வர்கள். அந்த நால்வரும் நான்கு வேதங்களுக்கு இணையானவர்கள். குசநாபன், ஆதூர்த்தன், வசு, குசாம்பன் என்பது அவர்கள் பெயர். இவர்களில் ஒருவன் கெளசாம்பி நகரிலும், அடுத்தவன் மகோதயம் எனும் நகரிலும், மூன்றாமவன் தன்மவனம் எனும் இடத்திலும், நான்காவது மகன் கிரிவிரச நகரிலும் வாழ்ந்து வந்தனர். இவர்களில் குசநாபனுக்கு அழகிய நூறு பெண்கள் பிறந்தனர். இவர்கள் வளர்ந்து பேரழகிகளாக வளர்ந்து இன்புற்று வாழ்ந்து கொண்டிருந்தனர். ஒரு நாள் அவர்கள் நீர்விளையாடி மகிழ்ந்து வரும் காலையில், வாயுதேவன் இவர்களைக் கண்டு மோகித்து, அவர்களை அணுகித் தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினான். அவர்கள் முறை தவறாத உறுதி பூண்டவர்கள் என்பதால் "எங்கள் தந்தையிடம் சென்று பேசுங்கள்; அவரது முடிவன்றி நாங்களாக எந்த முடிவும் எடுக்க இயலாது" என்று கூறிவிட்டனர். கோபம் கொண்ட வாயு, அவர்களுடைய அழகைப் போக்கி, குரூபிகளாக விளங்குமாறு சபித்து விட்டான்.
வாயு போன பிறகு அந்தப் பெண்கள் குரூபிகளாக உருமாறி தந்தையிடம் சென்று முறையிட்டார்கள். அவர், அந்தப் பெண்களே சாபமிடும் வலிமை பெற்றவர்களாக இருந்தும், அப்படிச் செய்யாமல் தங்கள் நிறைகாத்து நின்ற பெருஞ்செயலுக்கு அவர்களைப் பாராட்டி, பிரம்மதத்தன் என்பவனுக்கு அவர்களை மணமுடித்து வைக்கிறான். இந்த பிரம்ம தத்தன், சூளி எனும் மாமுனிவருக்கும், ஸோமதை எனும் கந்தர்வக் கன்னிகைக்கும் பிறந்த சத்புத்திரன். இவன் க்ஷத்திரிய அம்சமுடையவனாதலின் காம்பிலிய நகரில் ஆட்சி புரிந்து வந்தான். இந்த பிரம்மதத்தன் குரூபிகளான குசநாபனின் பெண்களை அவர்கள் கரங்களைப் பிடித்து பாணிக்கிரகணம் செய்துகொள்ளும் வேளையில் அவர்கள் தங்கள் அவலட்சண உருவம் மாறி, கூன் நிமிர்ந்து, முன்போல பேரழகிகளாக மாறினார்கள். இந்தப் பெண்களின் தந்தையான குசநாபன் அந்தப் பெண்களை கணவனுடன் அனுப்பிய பிறகு, தனக்குப் பின் நாட்டை ஆள ஒரு மகன் இல்லையே என்று புத்திரகாம யாகம் செய்து காதி எனும் மகனைப் பெற்றான்.
காதி வளர்ந்து பெரியவன் ஆனதும், குசநாபன் அவனுக்குப் பட்டம் சூட்டினான். பின்பு சுவர்க்கம் புகுந்தான். அந்த காதிக்கு என் அக்காவான கெளசிகியும், நானும் மக்களாகப் பிறந்தோம். என் அக்கா கெளசிகையை "இருசிகன்" (ரீசிகன் என்பது சமஸ்கிருதப் பெயர்) எனும் முனிவருக்கு மணம் செய்விக்க அவன் நெடுநாள் தவம் செய்து பிரம்ம லோகம் அடைந்தான். பிரம்ம லோகத்துக்கு அந்த ரீசிகன் வான் வழியாகச் செல்வதைக் கண்ட கெளசிகி தானும் ஒரு நதியாக உருவெடுத்து அவனைப் பின் தொடர்ந்தாள். இதனைக் கண்ட ரீசிகன் இவளைப் பார்த்து "நீ இந்த நதி வடிவிலேயே நில உலகில் பாய்ந்து மக்களின் குறைகளைப் போக்கி இருப்பாயாக!" எனக் கூறினான். அவளும் அதுமுதல் இந்த ஆறு வடிவத்தில் இங்கே ஓடிக் கொண்டிருக்கிறாள் என்றார் கோசிக முனிவர்.
கெளசிகி நதியின் வரலாற்றைக் கேட்ட இராம லட்சுமணர்கள் அதிசயத்தில் ஆழ்ந்தார்கள். மூவரும் மேலும் சில தூரம் நடக்க அங்கே இருந்த ஒரு சோலையைக் கண்டு "அது யாது?" என இராமன் வினவினார். அதற்கு முனிவர் இதுதான் 'சித்தாஸ்ரமம்' எனப்படும் இடமாகும். இந்த இடம் தூய்மையானது. தங்கள் கணவரைவிட வேறு தெய்வம் இல்லை என எண்ணும் கற்புடைய பெண்டிரின் மனம்போல தூய்மையானது. வேத முதல்வனான திருமால், முன்பு தவம் செய்த இடம் இது என்றார் விஸ்வாமித்திர முனிவர். இந்த இடத்தில் கம்பர் கூறும் உவமை நமக்கு ஒரு திருக்குறளை நினைவு படுத்துகிறதல்லவா? அது
"தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை".
வேறு தெய்வம் எதையும் தொழாதவளாய், தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும் என்பது இந்தக் குறளின் கருத்து.
இந்த வனத்தில் திருமால் இருந்து தவம் செய்த நாளில் மாவலி (மகாபலி) எனும் அசுர அரசன் இவ்வுலகை ஆண்டு வந்தான். இந்த மகாபலி விரோசனன் என்ற அரசனின் மகனாவான். மகாபலி உலகைத் தன் கொம்பால் தாங்கி கடலில் மூழ்கி உலகை வெளிக் கொணர்ந்தவன். வராகமூர்த்திக்கு இணையான பலம் கொண்டவன். முன்பொருமுறை இரணியாக்கன் என்பவன், தனது ஆற்றலால் பூமியைப் பாய்போல சுருட்டிக் கொண்டு கடலில் புகுந்து ஒளிந்து கொண்டான். தேவர்களும், முனிவர்களும் வேண்டிக் கொள்ள திருமால் வராக உருவம் எடுத்து கடலுக்குள் புகுந்து இரணியாக்கனைக் கொன்று, பூமியை மீட்டுத் தன் கொம்பிலே தாங்கி முன்போல இருக்கச் செய்தான். அந்த வராக மூர்த்திக்கு இணையான பலம் கொண்டவன் இந்த மகாபலி. இந்த மகாபலி தனது வலிமையை நம்பி, தான் செய்யும் யாகத்தில் எந்தப் பொருளை யார் கேட்டாலும் தானம் செய்ய மன உறுதி பூண்டிருந்தான். தேவர்களை வென்று, திரிலோகாதிபதியாக ஆனான்.
காசிபர் எனும் முனிவர் தன் பத்தினியான அதிதியோடு திருமாலைக் குறித்துத் தவம் செய்து, தேவரீர் எனக்கு அதிதி வயிற்றில் தாங்கள் தோன்றி அவதாரம் செய்து, அசுரர்களை அழித்து தேவர்களைக் காக்க வேண்டுமென்று வரம் கேட்டார். திருமால் அதிதி வயிற்றில் பிறந்து வாமனன் எனும் பெயர் பெற்றார். காசிப முனிவர் தவம் செய்து வரம் பெற்றது, இந்த சித்தாஸ்ரமத்தில்தான். மகாபலி வேள்வி நடத்தும் இடத்துக்கு மிக சிறிய உருவம் கொண்ட வாமனன் சென்றான். இந்த சிறிய உருவத்தோடு வரும் வாமனனைக் கண்டு மகிழ்ந்த மகாபலி எழுந்து வந்து உபசரித்தான். அந்தணரில் உனக்கு ஒப்பானவர் எவரும் இல்லை; உன்னை தரிசித்த பாக்கியம் பெற்றேன் என்று அவனை வணங்கினான்.
"மகாபலி! உன்னை நாடி வந்தோர்க்கு வேண்டியதைத் தருவாயமே! நானும் ஒன்றை நாடி உன்னிடம் வந்திருக்கிறேன். எனக்கு மூன்றடி மண் வேண்டும்" என்றான் வாமனன்.
இதைக் கேட்ட மகாபலி உடனே "தந்தேன்" என்றான். நடக்கும் நிகழ்ச்சிகளைக் கண்டு கொண்டிருந்த மகாபலியின் (அசுர) குருவான சுக்கிரன் (வெள்ளி) கொடுக்காதே என்று தடுத்தான்.
"சிந்தை உவந்து எதிர் என் செய என்றான்
அந்தணன் 'மூவடி மண் அருள் உண்டேல்
வெந்திறலாய் இது வேண்டும்' எனாமுன்
'தந்தனன்' என்றனன்; வெள்ளி தடுத்தான்."
சுக்கிராச்சாரியார் மகாபலியைப் பார்த்து கூறுகிறார்: "பிரளய காலத்தில் அண்ட சராசரங்களைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு சிறு குழந்தையாய் ஆலிலையில் துயிலுகின்ற ஆதிமூர்த்திதான்,
தேவர்களின் வேண்டுகோளின்படி இப்படி குறுமுனி வடிவம் தாங்கி வந்திருக்கிறான். இவன் கேட்டபடி தானத்தைக் கொடுக்க நீ சம்மதித்தால், பிறகு உனக்கு தீமைதான் நேரும்" என்று மகாபலியின் குலகுரு சொன்னார்.
"திருமாலை வேண்டிதான் யாகம் செய்கிறோம். அந்தத் திருமாலே என்னிடம் வந்து யாசித்துத் தானம் பெறுவானாகில், அதைவிட பெரும் பேறு எனக்கு என்ன இருக்கிறது. எனவே, என் வாக்குப்படி தானம் கொடுக்கத் தடை சொல்லாதீர்கள்" என்று பதிலிறுத்தான் மகாபலி. மகாபலி அசுரன் ஆதலின், இந்திரன் முதலானோருக்கு ஆஹூதி கொடுக்காமல் நேரடியாக ஸ்ரீமன் நாராயணனுக்கே யாகம் செய்ததால், அவனே நேரில் வந்து தானம் கேட்கும்போது இதைவிட நற்பேறு வேறு என்ன இருக்கிறது என்று கூறினான்.
உயர்ந்தவர்கள் கொடுப்பது என்று தீர்மானித்துவிட்டால், யார் தடுத்தாலும் நிறுத்த மாட்டார்கள். எனவே மகாபலி, வாமனன் கேட்டதைக் கொடுக்கத் தயாரானான். "ஒருவர் தானம் செய்யும்போது அதனைத் தடுப்பது உங்களுக்கு அழகா? சுக்கிராச்சாரியார் அவர்களே! தானம் கொடுப்பதைத் தடுப்பவர்கள் சுற்றமும், உடுப்பதும், உண்பதுமின்றி கெட்டொழிவர் என்பதைத் தாங்கள் உணரவில்லையோ?" என்றான் மகாபலி. பின்னர் வாமனனை நோக்கி "முனிவரே! நீங்கள் வேண்டியபடி மூன்று அடி நிலத்தை அளந்து எடுத்துக் கொள்க என்றான்" அவர் கையில் நீர் வார்த்தபடி.
அப்படி நீர் வார்க்கையில் சுக்கிரன் வண்டு உருக்கொண்டு நீரூற்றும் பாத்திரத்தின் வாயை அடைத்தான் எனவும், வாமனன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து நீர் வரும் வழியைக் குத்த, வண்டு உருக்கொண்டிருந்த சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் குருடானது எனவும் செய்தி உண்டு. மிக உயர்ந்தவர்களுக்குச் செய்த சிறிய உதவிகூட, மிகப் பெரியதாக மதிக்கப்படும். அதுபோல குறளன் வடிவு எடுத்த வாமனன் பெரிய வடிவு எடுத்து ஓரடியால் பூமியையும், மற்றோர் அடியால் வானத்தையும் அளந்தான். மூன்றாவது அடியை வைக்க இடமின்மையால் பெருமாள் மகாபலியின் தலையில் வைத்து பூமியில் அழுத்தி தீமைகளைப் போக்கினான். திருமாலின் இந்தப் பெருமையை என்னவென்பது. அப்படி காசிப முனிவர் தவம் செய்த இந்த சித்தாஸ்ரமம் நான் யாகம் செய்ய தேர்ந்தெடுத்த இடமாகும் என்றார் கோசிக முனிவர்.
"இராமா! நான் இந்த இடத்தில் இப்போது யாகத்தைத் தொடங்குகிறேன். நீங்கள் இருவரும் விழிப்போடிருந்து காவல் காத்துக் கொண்டிருங்கள்" என்று சொல்லி விஸ்வாமித்திர முனிவர் வேள்வியைத் தொடங்கினார். ஆறு நாட்கள் வேள்வி நடைபெற்றது. அதுவரை கண்களை இமை காப்பது போல இராம லக்ஷ்மணர்கள் வேள்வியைக் காத்து வந்தனர். காவல் தொடங்கியது முதல் அரக்கர்களைக் காணவில்லையே, அந்தக் கொடியவர்கள் எப்போது வருவார்கள் என்று இராமன் முனிவரைக் கேட்டான்.
யாகத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்த காரணத்தால் முனிவரால் பதில் கூறமுடியவில்லை. இராமன் திரும்பவும் வந்து மேலே அண்ணாந்து பார்த்தான். அங்கே ஆகாயத்தில் பலர் கூடி ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த அரக்கர்கள் அங்கிருந்தபடியே அம்புகளை இவர்கள் மீது எய்தனர். ஈட்டிகளை எறிந்தனர். நீரையும், நெருப்பையும் பொழிந்தனர். பெரிய பாறைகளைப் பெயர்த்து வீசினர். வசைச் சொற்களால் திட்டினர். அதட்டினர். மழுவாயுதத்தை எறிந்தனர். இப்படிப் பல கொடிய மாயச் செயல்களைச் செய்தனர். அவர்கள் வீசிய ஆயுதங்கள் வான மண்டலத்தையே மூடி மறைத்தன. யாக மந்திரங்கள், அந்த அரக்கர்களை அருகில் வரமுடியாமல் தடுத்தன. எனவே தூரத்தில் வானத்தில் நின்றுகொண்டு இத்தகைய தீச்செயல்களைச் செய்தனர்.
இராமன் உடனே இலக்குவனை அழைத்து "தம்பி! அதோ பார்! முனிவர் சொன்ன தீயவர்கள் இவர்கள்தான்" என்றான்.
அரக்கர் கூட்டத்தைக் கண்ட இளைய பெருமாள் அவர்களைக் கொன்று வீழ்த்த இராமனது கட்டளையை எதிர்பார்க்கும் குறிப்போடு, தன் கைவில்லை எடுத்து "இப்போது இவர்கள் இற்று வீழ்வதைக் காண்பீர்கள்" என்றான்.
அரக்கர் சொரியும் எதுவும் யாக குண்டத்தில் விழாமல் அம்புகளால் இராமன் ஒரு சரக்கூடம் அமைத்தான். முனிவர்கள் இராமனிடம் அடைக்கலம் புகுந்தனர். அவர்களுக்கு அபயம் அளித்த இராமன் உடனே தன் வில்லை எடுத்துப் பாணங்களைத் தொடுக்கலானான். இராமன் விட்ட ஓர் அம்பு மாரீசனை கடலில் கொண்டுபோய் போட்டது. மற்றொரு அம்பு சுபாஹுவை எமனுலகுக்கு அனுப்பியது. எஞ்சிய அரக்கர்கள் அஞ்சி அலறி ஓடினர். எனினும் இராமனுடைய வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் அவர்களைத் துரத்திச் சென்று கொன்றுவிட்டுத் திரும்பின. தேவர்கள் பூமாரி பெய்ய, துந்துபி முழங்க, மேகங்கள் கர்ச்சனை செய்ய, அனைவரும் இராமனைத் தொழுது வணங்கினர்.
யாகத்துக்கு அரக்கர்களால் ஏற்பட்ட இடையூறு நீங்கியவுடனே, முனிவரும் தம் யாகத்தை நன்கு முடித்தார். ஸ்ரீராமனை விஸ்வாமித்திர முனிவர் புகழ்ந்து பாராட்டினார். இராமன் முனிவரிடம் "வேள்வி முடிந்துவிட்டது. இனி நான் என்ன செய்ய வேண்டும்" என வினவ, முனிவர் "ஸ்ரீ ராமா! நீ செய்வதற்கு அரியது என்று ஒன்றுமே இல்லை. எனினும் உன்னால் முடிய வேண்டிய காரியங்கள் சில உண்டு. அவற்றைப் பிறகு பார்க்கலாம், இப்போது முதலில் மிதிலைக்குச் செல்வோம். அங்கு ஜனக மகாராஜன் செய்யும் வேள்வியைக் காண்போம்" எனக் கூற மூவரும் புறப்பட்டனர்.
சித்தாஸ்ரமத்திலிருந்து புறப்பட்ட அம்மூவரும் சோனை நதிக்கரையை அடைந்தனர். இந்த நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடும் ஆறு. அங்கு சென்றடையும் போது மாலை நேரம் வந்தது. சோனை நதிக்கரையிலிருந்த ஒரு சோலையில் மூவரும் அன்றிரவைக் கழித்தனர். மறுநாள் மூவரும் நடந்து சென்று கங்கைக் கரையை அடைந்தனர். அப்போது இராமன் முனிவரிடம் "எந்தையே! இந்த மாபெரும் கங்கை நதியின் சிறப்பினை எனக்குச் சொல்லி அருள்வீராக!" எனக் கேட்க, முனிவரும் சொல்லலானார்.
"இராமா! ஒரு காலத்தில் சகரன் எனும் பேரரசன் இப்புவியை ஆண்டு வந்தான். அவனுக்கு இரண்டு மனைவியர். ஒருத்தி விதர்ப்ப தேசத்தைச் சேர்ந்தவள், அவள் பெயர் 'விதர்ப்பை'. இவளது இயற்பெயர் 'கேசினி'. இளையவள் 'சுமதி'. இவள் காசிப முனிவருக்கும் விநதை என்பாளுக்கும் மகளாகப் பிறந்தவள். காசிபரின் தவத்தினால், முதல் மனைவிக்கு வம்ச விருத்திக்கு ஒரு மகனும், இளையவளிடம் வலிமை மிக்க அறுபதினாயிரம் புதல்வர்களும் பிறப்பார்கள் என வரம் அருளினார் பிருகு முனிவர். அதன்படி கேசினி அதாவது விதர்ப்பைக்கு அசமந்தன் பிறந்தான். சுமதியின் கருவில் சுரைக்காய் வடிவில் ஒரு மாமிசப் பிண்டம் தோன்றி வெடிக்க, அதினின்றும் அறுபதினாயிரம் புதல்வர்கள் தோன்றினார்கள்.
அசமஞ்சன் கொடுமனம் கொண்டவன். சிறு பிள்ளைகளை ஆற்றில் விட்டெறிந்து கொல்வான். அவனை தந்தை காட்டிற்குத் துரத்தி விட்டான். காட்டில் அவன் தவம் செய்து, இறந்த குழந்தைகளை மீட்டு விட்டான். ஒருவர் அஸ்வமேத யாகம் செய்து விட்டால், இந்திர பதவி அடைவர். எனவே இந்திரன் அஸ்வமேத யாகம் யார் செய்தாலும், அதைக் கலைத்து விடுவான். தேவர்கள், யார் இந்த யாகம் செய்தாலும் இந்திரனுக்குத் தகவல் கொடுத்து விடுவார்கள். சகரன் அஸ்வமேத யாகம் செய்ய முயலுகிறான். தேவர்கள் அந்தச் செய்தியை இந்திரனுக்குத் தெரிவிக்க, அவன் யாகக் குதிரையை பாதாளத்தில் கொண்டு போய் மறைத்து வைத்தான். அங்கே கபில முனிவர் என்பவர் தவம் செய்து கொண்டிருந்தார்.
கபில முனிவர் தவம் செய்யும் பாதாளத்தில் கொண்டு போய் யாகக் குதிரையை இந்திரன் மறைத்து வைக்கக் காரணம் என்ன தெரியுமா? கபில முனிவர் யோகம் கலைந்து கண் விழித்துப் பார்க்கும் போது எதிரில் உள்ளோர் எரிந்து சாம்பராகிவிடுவர். சகரனும் அவனது பிள்ளைகளும், முனிவரின் கண்களில் பட்டு எரிந்து போகட்டும் என்று இந்திரன் இந்தச் சதி செய்தான்.
சமரனது பேரன் அஞ்சுமான் என்பவன். இந்த அஞ்சுமானை யாகக் குதிரைக்குக் காவலாக அனுப்புகிறான். குதிரையைக் காணாமல் சமரனின் பிள்ளைகள் பாதாளத்திற்குச் சென்று தேடுகிறார்கள். அங்கே, கபில முனிவரின் அருகில் குதிரை இருக்கக் கண்டு அவர்தான் திருடினார் என்று எண்ணி அவரை வசை பாடுகின்றனர். கபில முனிவர் கண் விழித்துப் பார்த்தார். அந்த அறுபதினாயிரம் பிள்ளைகளும் எரிந்து சாம்பராகினர்.
சகரனுக்குச் செய்தி போகிறது. மன்னன் சோகத்தால் வருந்தி, தன் மகனுடைய மகனான அஞ்சுமானை அழைத்து அவர்கள் இறந்ததால், வேள்வி நின்று விட வேண்டுமா? என வினவ, அவன் புறப்பட்டு கபில முனிவர் இருக்குமிடம் செல்கிறான். கபில முனிவரின் ஆசிரமம் இருக்குமிடம் சென்ற அஞ்சுமான் சகரபுத்திரர்கள் எரிந்து போன சாம்பர் மேட்டைப் பார்க்கிறான். முனிவரிடம் சென்று வணங்கியதும், அவர் நடந்த விவரங்களைச் சொல்லி குதிரையை அழைத்துப் போகச் சொல்லுகிறார். குதிரை வந்ததும் சகரன் யாகத்தைச் செய்து முடித்தான். அஞ்சுமானிடம் ஆட்சியைக் கொடுத்து விட்டு தவம் செய்வதற்காக வனம் சென்றான்.
அஞ்சுமானுடைய மகன் திலீபன். அவனது மகன் பகீரதன். இந்த பகீரதன் தன் முன்னோர்கள் சாம்பராகி விட்டார்கள் என்பதால், அவர்கள் நற்கதி அடைய வேண்டி அரும் தவமியற்றினான். பாதாளத்துக்குப் போவதற்காக சகரன் தோண்டிய பள்ளத்தில் நீர் சேர்ந்து தேங்கியதால், அது "சாகரம்" என ஆயிற்று. பகீரதன் நாட்டை ஆண்டு வரும்போது வசிஷ்ட முனிவர், அவன் முன்னோர்களின் வரலாற்றை எடுத்துரைத்து, அவர்கள் நற்கதியடைய ஓர் உபாயத்தை எடுத்துரைத்தார். அவர் அரசனை நோக்கி "அரசே! நீ நெடுங்காலம் பிரமனை நோக்கி தவம் செய்தால், உன் எண்ணம் கைகூடும்" என்றார்.
உடனே பகீரதன் ஆட்சியைத் தன் அமைச்சர்களிடம் ஒப்புவித்து விட்டுத் தவம் செய்யச் சென்றான். நல்ல ஆலோசனைகளை வழங்குபவனை "சுமந்திரன்" என்று அழைப்பார்கள். நல்லஆலோசனைகளைக் கூறுபவன் என்பது பொருள். எனவே அவனது அமைச்சனின் பெயர் சுமந்திரன். பகீரதன் இமய மலைச் சாரலுக்குச் சென்று, பதினாயிரம் வருஷம் தவம் செய்தான் பிரம்ம தேவன் அவன் முன்பு தோன்றி "நின் தவத்துக்கு மகிழ்ந்தனம். உனது முன்னோர்கள், கபில முனிவரின் கோபத்தால் இறந்தனர். ஆகாய கங்கை பூமியில் இறங்கி ஓடி, இறந்தவர்களின் அஸ்தியின் மீது படியுமானால், அவர்கள் நற்கதி அடைவார்கள்" என்று கூறினார்.
"அந்த ஆகாய கங்கை பூமியில் பாய்ந்தால், அதன் வேகத்துக்கு பூமி தாங்காது. அதனைத் தாங்கும் ஆற்றல் சிவபெருமானுக்கு உண்டு. எனவே, நீ அந்த சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்" என்றும் பிரம்மன் கூறினார். அதன் பிறகு பகீரதன், சிவபெருமானைக் குறித்து பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்ய, சிவன் அவன் முன் தோன்றி "உன் கருத்தை நிறைவேற்றுவோம்" என அருள் செய்தார். அதாவது, கங்கை பூமியில் பாயும் போது அதனைத் தான் தாங்கிக் கொள்வதாக உறுதியளித்தார்.
பிறகு பகீரதன் கங்கையை பூமிக்கு வரவழைப்பதற்காக ஐயாயிரம் ஆண்டுகள் தவம் செய்தான். கங்கா தேவி ஒரு இளம் பெண் வடிவம் தாங்கி பகீரதன் முன் தோன்றி "பகீரதா! கங்கை பூமியில் வரும்போது அதன் வேகத்தைத் தாங்குவார் யார் இருக்கிறார்கள். சிவபெருமான் விளையாட்டாகச் சொல்லிவிட்டார் போலும். அது உண்மை இல்லை. உன் தவத்தில் ஏதோ கோளாறு இருந்திருக்கிறது. மறுபடியும் தவம் செய்" என்று செறுக்கோடு கூறிச் சென்றாள்.
பகீரதன் மனச் சோர்வு அடைந்தான். மீண்டும் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்தான். சிவன் அவன் முன் தோன்றி "பகீரதா! கவலைப் படாதே. கங்கையை சிதறாமல் நாம் அடக்குவோம்" என்று சொல்லி மறைந்து விட, மீண்டும் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் தவத்தில் ஈடுபட்டான். சருகு, புழுதி, நீர், வாயு இவற்றை மட்டும் உட்கொண்டு மொத்தம் முப்பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்து கங்கை நதியை பூமிக்குக் கொண்டு வந்தான்.
பெருத்த ஆரவாரத்துடன் கங்கை பொங்கி பாய்ந்து வந்தாள். அப்போது உலகம் அதிர பாய்ந்து வந்த நதியைச் சிவபெருமான் தனது சடாமுடியில் தாங்கி மறைத்து முடிந்து விட்டான். கங்கையின் செறுக்கும், சிவபெருமான் முடிக்குள் அடங்கிவிட்டது. இது என்ன இப்படி நேர்ந்தது, நமது மூதாதையர் நற்கதி பெற வேண்டி அவர்தம் சாம்பரைக் கரைக்க நினைத்தால், இவர் கங்கையைத் தன் சடாமுடியில் அடக்கிக் கொண்டாரே என்று திடுக்கிட்டு நின்றான். சிவபெருமான் அவனைப் பார்த்து "அஞ்சாதே, கங்கை நம் சடைக்குள்ளேதான் இருக்கிறாள்" என்று கூறி, ஒரு சிறிது மட்டும் கசிய விட்டார். கங்கை ஓடத் தொடங்கவும் அதற்கு முன்பாக பகீரதன் வழி காட்டிக் கொண்டு தன் முன்னோர்களின் சாம்பர் இருக்கும் இடத்தைக் காட்டிட ஓடினான்.
வழியில் சன்னு எனும் முனிவன் ஓடிவரும் கங்கையைத் தன் கையில் ஏந்தி ஆசமனம் செய்து விட்டான். பகீரதன் சன்னு முனிவனிடம் போய் தனது வரலாற்றையும், கங்கை பூமிக்கு வந்த கதையையும் கூறினான். அதைத் தாங்கள் ஆசமனம் செய்து விட்டீர்களே என் முன்னோர்கள் கதி என்ன ஆவது என்றான். அது கேட்ட முனிவன் கங்கையைத் தன் காது வழியாக ஓடவிட, அது அவன் முன்னோர்கள் சாம்பரில் பட்டுக்கொண்டு ஓடியது. அவர்கள் நற்கதி அடைந்தார்கள். பகீரதனும் அயோத்தி திரும்பினான்" என்று விஸ்வாமித்திர முனிவர் இராமனுக்குக் கங்கையின் வரலாற்றைக் கூறினார். பகீரதன் முயற்சியால் வந்ததால், பாகீரதி என்றும், கன்னு முனிவனின் காது வழியாக வெளியே வந்ததால் சானவி என்றும் கங்கையாறு பெயர் பெற்றது.
பிறகு மூவரும் கங்கையைக் கடந்து அங்கு விசாலை எனும் நகரை அடைந்தனர். பிறகு விதேக நாட்டின் எல்லையை அடைந்தனர். விதேக நாடு வளமிக்க நாடு. அந்த நாட்டின் தலைநகரம் மிதிலை. விஸ்வாமித்திர முனிவரும், இராம இலக்குவரும் அந்த மிதிலை நகரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த பாதையில் ஒரு கருங்கல் உருவைக் கண்டனர். அதனருகே இராமன் நடந்து சென்ற போது இராமனின் திருவடித் துகள் அதன் மீது பட்டதும், ஓர் பெண் உருக்கொண்டு எழுந்தது. எழுந்த அந்தப் பெண் இராமன் பாதங்களில் வணங்கி எழுந்தாள்.
தன் கால் துகள் பட்டு ஒரு பெண் எழுந்ததும், இராமன் ஆச்சரியப்பட்டு முனிவரைப் பார்த்தான். அவர் கூறினார்: "பகீரதன் வழித்தோன்றலாகிய இராமா! இவள் கெளதம முனிவரின் மனைவியான அகலிகையாவாள்" என்றார்.
தாய் போன்ற இவருக்கு இவ்வாறு நேர்ந்தது எப்படி என இராமன் வினவினான். அதற்கு முனிவர் "இராமா! கெளதம முனிவர் சிறந்த தவ சிரேஷ்டர். அவரது மனைவி இவள். இவளது பெயர் அகலிகை என்பதாகும். இந்திரனுக்கு அகலிகை மீது மோகம் ஏற்பட்டது. அதனால் எப்படியும் அந்த அகலிகையை அடையக் கருதி, ஒரு நாள் இரவில் முனிவர் ஆசிரமத்தை விட்டு வெளியேறிய சமயம், அவர் உருவத்தை எடுத்துக் கொண்டு அகலிகையை நெருங்கினான். முனிவரை வெளியேற்ற அவன் சேவல் போல கூவினான் என்றும், அது கேட்டு முனிவர் பொழுது விடிந்துவிட்டது போலிருக்கிறது என்று ஆற்றங்கரைக்கு ஸ்நானத்துக்குச் சென்று விட்டதாகவும், அந்த நேரம் பார்த்து இந்திரன் முனிவரின் வேஷத்தில் ஆசிரமத்துள் நுழைந்தான்.
ஆற்றுக்குச் சென்ற முனிவன், அது அகாலமென்று உணர்ந்து, ஆசிரமத்துக்கே திரும்பிவர, தன்னை இந்திரன் ஏமாற்றிவிட்டதை உணர்ந்தார். அவன் மீது அளவிலாத கோபத்துடன் முனிவர் ஆசிரமத்துக்கு வந்தார். இந்திரன் பயந்து போய் பூனை வடிவம் எடுத்துக் கொண்டு ஓட முனைந்தான். அகலிகை நடந்தவற்றை அறிந்து நாணத்தால் செயலற்று நின்றாள். முனிவர் இந்திரனைத் தீயெனப் பார்த்து, இந்த இழிச் செயலைச் செய்த உனக்கு உடலெங்கும் ஆயிரம் பெண் குறிகள் தோன்றட்டும் என சபித்தார். அகலிகையைப் பார்த்து, வேசிபோல இருந்த நீ கல்லாய் மாறிவிடுவாய் எனவும் சபித்தார். அகலிகை முனிவரிடம் கெஞ்சி முறையிட்டு பிழை பொருத்தருள்வீர் எனக்கு சாப விமோசனம் அருள்வீராக என வேண்டினாள். அதற்கு முனிவர் "என்று தசரத குமாரன் இராமனுடைய பாத துகள் உன்மீது படுகிறதோ அப்போது பெண் உருக் கொள்வாய்" என்று சாப விமோசனமளித்தார்.
தேவர்கள் பணிந்து கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்திரன் உடலில் ஆயிரம் குறிகளுக்குப் பதிலாக, ஆயிரம் கண்களாக மாற்றி அருளினார். கோசிக முனிவர் இராமனை வெகுவாகப் பாராட்டினார்.
"இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே, உன்
கைவண்ணம் அங்கு கண்டேன், கால் வண்ணம் இங்கு கண்டேன்!"
இராமபிரான் தாடகையை வதம் செய்தபோது அவனது கைவண்ணமும், கால் துகள் பட்டு அகலிகை சாப விமோசனம் பெற்று எழுந்த போது அந்த அண்ணலின் கால் வண்ணமும் கண்டதாகக் கம்பன் கவிக்கூற்று. பிறகு இவர்கள் கெளதம முனிவரிம் அகலிகையை அழைத்துச் சென்று அவரிடம் ஒப்படைக்கிறான். அப்போது இராமபிரான் கெளதம முனிவரிடம், மனத்தாலும் தவறு செய்யாத இந்த மாதரசியைத் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள, கெளதமரும் அவளை ஏற்றுக் கொண்டார். பின்னர் மூவரும் மிதிலை நகரைச் சென்றடைந்தனர்.
அவர்கள் மிதிலை நகரின் கோட்டையை நெருங்கி வந்த போது அந்த கோட்டையின் மீது பறந்து கொண்டிருந்த அரசு கொடி இவர்களை "வா! வா!" என்று அழைப்பது போல இருந்ததாம். அன்று தாமரை மலரை விட்டு நீங்கிய மகாலக்ஷ்மி இந்த நகரத்தில்தான் இருக்கிறாள், சீக்கிரம் வா! என்று அந்தக் கொடிகள் கை அசைத்து அழைப்பதைப் போல இருந்தது. மிதிலை நகருக்குள் புகுந்த அந்த நகர வீதிகளில் மூவரும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். வழியில் பல்வேறு இனிய காட்சிகளைக் கண்டுகொண்டே இவர்கள் நடக்கிறார்கள். அப்போது அந்த வீதியில் அமைந்திருந்த கன்னி மாடம் அவர்கள் கண்களில் படுகிறது.
அந்த மாடத்தின் மீது அழகே உருவாக ஒரு பெண் நிற்கிறாள். அவள்தான் ஜனக மகாராஜனின் புத்திரியான ஜானகி என்பாள். முனிவருக்குப் பின்னால் தன் தம்பியோடு நடந்து வரும் இராமன் அந்த அழகிய பெண்ணைப் பார்க்கிறான். அதே கணத்தில் அந்தப் பெண்ணும் அழகும் கம்பீரமுமாக வந்து கொண்டிருக்கும் இராமனைப் பார்க்கிறாள். பார்க்கின்ற அவர்களது கண்கள் ஒன்றோடொன்று சங்கமமாகின்றன. அவர்களது உணர்வுகளும் ஒன்றாகிவிடுகின்றன. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த பார்வையில் அவர்கள் உயிரும் உணர்வும் ஒன்றானது போல உணர்ந்தார்கள். இந்த இடத்தில் கம்பர் பெருமான் இயற்றியுள்ள பாடல் இதோ:
"எண்ணரும் நலத்தினாள் இனையன் நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது, உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!"
திருவள்ளுவர் பெருமான் இயற்றிய திருக்குறளில் காணப்படும் "கண்ணோடு கண் இணை நோக்கொக்கின், வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல" எனும் பாடலின் பொருளுக்கு விளக்கம் தருவது போல இராமனும் சீதையும் ஒருவரையொருவர் பார்த்த மாத்திரத்தில் வாய்ச்சொற்கள் எதுவும் இல்லாமல் அவர்கள் உணர்வுகள் ஒன்றிப் போயின. ஓருயிரும் ஈருடலுமாகப் பாற்கடலில் இருந்த திருமாலும், இலக்குமியும் தங்கள் கலவி நீங்கிப் போய் பிரிந்திருந்து மீண்டும் கூடுகையில் பேசவும் முடியுமோ? இங்கு இவ்விருவரும் பார்த்த பார்வையினால், பேச்சு இல்லாமல் போய்விட்டது.
மூவரும் நடந்து சென்று கண்ணுக்கு மறையும் வரையிலும் பார்த்துக் கொண்டிருந்தாள் சீதாபிராட்டி. அவள் மெல்லியள். இராமன் பேரெழில் அவள் மனத்தை வாட்டத் தொடங்கியது. அவன் தன் கண் பார்வையிலிருந்து மறைந்து சென்ற பிறகும், அவன் நினைவாகவே இருந்தாள். இராமனுக்கும் மாடத்தில் பார்த்த அந்த பேரழகியான கன்னிகையின் உருவமும், அவள் கண்களும், அழகும் அவன் மனத்தை விட்டு நீங்க மறுத்தன.
சீதை அந்தப்புரம் சென்று தனது மலர் மஞ்சத்தில் படுத்தாள். மலர்கள் கருகிப் போயின. நெஞ்சில் தாபமும், ஏக்கமும் கொண்டு கண்ணீர் விட்டு அழுதாள். அவள் ஏன் இப்படி அழுகிறாள், வருத்தப்படுகிறாள் என்ற விவரம் அறியாத தோழியர்கள் அவளுக்குத் திருஷ்டி சுற்றிப் போட்டுக் கொண்டிருந்தனர். ஆரத்தி சுற்றினர். மஞ்சத்தில் படுத்திருந்த சீதையின் மனதில் இராமன் மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான். அவன் நினைவு மட்டுமே அவள் மனதில் இருந்தது. யார் அவன்? தேவனோ? இருக்காது, ஏனென்றால் அவன் பார்க்கும் போது கண் இமைத்தானே. கையில் வில் ஏந்தியிருக்கிறான்; மார்பில் முப்புரி நூல் அணிந்திருக்கிறான், எனவே அவன் ஒர் மானிடன்தான். அதிலும் அரச குமாரன். மாதர் நலம் அனைத்தையும் என்னிடமிருந்து கவர்ந்து கொண்டு, என் கண்வழி புகுந்து நெஞ்சைத் திருடிச் செல்லும் கள்வனோ? ஐயோ! என்ன அவன் அழகு! இப்படியெல்லாம் இராமனின் அழகையும் அவன் உருவம் தன் மனத்துக்குள் புகுந்து செய்யும் மாற்றங்களையும் சீதை உணர்ந்து அவனிடம் காதல் வசப்பட்டாள்.
அடடா! என்ன தோற்றம் அவனது தோற்றம். அவளது எண்ணங்களை கம்பர் பெருமான் கவிதையில் வடிக்கிறார்.
"கடலோ! மழையோ! முழுநீலக் கல்லோ! காயா நறும் போதோ!
படர் பூங்குவளை நாண் மலரோ! நீலோற்பலமோ! பானலோ!
இடர்சேர் மடவார் உயிர் உண்பது ஏதோ? என்று தளர்வாள் முன்
மடல்சேர் தாரான் நிறம் போலும் அந்தி மாலை வந்ததுவே!"
இராமனின் வண்ணத்தோடு ஒத்துப் போகும் இந்த மலர்கள் எல்லாம் சீதையின் நினைவில் வருகிறது. அந்த எண்ணத்தில் ஆழ்ந்து கிடக்கும் போதே இருளும் வந்து சேர்கிறது.
முனிவரோடு இராமனும் இலக்குவனும் கன்னிமாடத்தில் அந்த அழகிய பெண்ணைப் பார்த்தபின் ஜனகன் அரண்மனைக்குச் சென்று மகாராஜாவைக் கண்டனர். ஜனகன் மனம் மிக மகிழ்ந்து இவர்களை வரவேற்று உபசரித்து, ஓர் மாளிகையில் தங்க வைத்தான். இவர்கள் வந்திருக்கும் செய்தி அறிந்து இவர்களைக் காண்பதற்காக கெளதம முனிவருக்கு அகலிகை மூலம் பிறந்த சதானந்த முனிவர் என்பவர் வந்தார். இவர் ஜனக மகாராஜா குடும்பத்து புரோகிதர் ஆவார். இராமனும் இலக்குவனும் அந்த சதானந்த முனிவரை வணங்கி ஆசிபெற்றனர். கோசிக முனிவரின் வருகை விதேய நாட்டின் நற்பயன் என்று விஸ்வாமித்திர முனிவருக்கு முகமன் கூறி வணங்கினார் சதானந்தர், அதற்கு விஸ்வாமித்திரர் பதிலளிக்கையில் "சதானந்தரே! இதோ இந்த இராமன் தாடகையை வதம் செய்து, என் வேள்வியை நிறைவேற்றினான். அங்கிருந்து வரும் வழியில் உன் அன்னைக்கு சாப விமோசனம் கொடுத்து உயிர்ப்பித்து நம் குறை தீர்த்த பெருந்தகை" என்று அவருக்கு இராமனைப் பற்றி எடுத்துரைக்கிறார்.
"உமது அருளுக்குப் பாத்திரமான இவர்களுக்கு செயற்கரியது எதுவுமில்லை" என்றார் சதானந்தர்.
சதானந்தர் இராமனைப் பார்த்து "குழந்தாய்! இந்த கோசிக முனிவர் இருக்கிறாரே, இவர் ஒரு காலத்தில் அரச குலத்திலே உதித்தவர். ராஜ நீதியிலும் போர்ப்பயிற்சியிலும் வல்லவர். பிறகு பெருந்தவம் செய்து பெரும் புகழ் பெற்றவர். இவர் ஒரு முறை காட்டிற்கு வேட்டையாடச் சென்ற போது வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்குச் சென்று தங்கினார். கோசிகன் அரசன் ஆனதால் அவரை வரவேற்று உபசரித்து தன்னிடமிருந்த காமதேனு எனும் தேவலோகத்துப் பசுவின் அருளினால் சிறந்த விருந்து அளித்தார். காமதேனு வேண்டுவோர்க்கு வேண்டுவன கொடுக்கும் வல்லமை பெற்றது.
கெளசிகன் வசிஷ்ட முனிவரிடம் தான் பெரும் பொருள் கொடுப்பதாகவும், காமதேனுவைத் தனக்குத் தரும்படியும் கேட்டான். அவர் மறுத்து விட்டார். நான் தவசி. நான் பிறருக்கு கொடுப்பது தவறு. உன்னால் முடிந்தால் காமதேனுவை ஓட்டிச் செல் என்றார். உடனே ஓடிச் சென்று காமதேனுவை பிடிக்க முயன்றான் கோசிகன். பசு வசிஷ்டரிடம் கேட்டது "நீங்கள் என்னை இவனிடம் கொடுத்து விட்டிர்களா?" என்று.
வசிஷ்டர் "நான் கொடுக்கவில்லை. அவனே எடுத்துக் கொள்ள முற்பட்டான்" என்றார். இதனைக் கேட்ட காமதேனு பெரும் கோபம் கொண்டது. இந்த அரசனை நானே முடிப்பேன் என்று தன் மயிர்க்கால்களைச் சிலிர்த்தது. அதன் மயிர்க்கால்களிலிருந்து பற்பல நாட்டு வீரர்கள், பப்பரர், யவனர், சீனர், சோனகர் எனப்படுவோர் வந்து கெளசிகனின் படை வீரர்களை நீர்மூலம் செய்தனர். அப்போது கெளசிகனின் நூறு பிள்ளைகள், இது பசுவின் செயல் அல்ல, இந்த மாய முனிவன் வசிஷ்டனின் செயல் என்று கருதி அவரைக் கொல்ல பாய்ந்தனர். வசிஷ்டர் தன் பார்வையால் அவர்கள் அனைவரையும் எரித்து சாம்பராக்கினார்.
தன் மக்கள் எரிந்து சாம்பரானதால் கெளசிகன் அம்புகளை வசிஷ்டர் மீது தொடுத்தான். அவற்றை அவர் தன் கை தண்டத்தால் தடுத்தார். இப்படி தானும் தோற்று, பிள்ளைகளையும் இழந்த கோசிகன் மனம் தளர்ந்து, ஊக்கம் குன்றி பிள்ளைகளில் தப்பிப் பிழைத்த ஒருவனிடம் அரசுரிமையைக் கொடுத்துவிட்டு இமயமலைச் சாரலில் சிவபெருமானைக் குறித்துக் கடும் தவம் புரிந்தான். இவனது கடும் தவத்தை மெச்சி சிவபெருமான் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க, "தனுர் வேதம்" அனைத்தும் தான் உணர்ந்திட வேண்டும், எல்லா அஸ்திர சஸ்திர மந்திரங்களும் கிடைக்கச் செய்ய வேண்டும்; நான் நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும், என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அங்ஙனமே அருளினார்.
இனி வசிஷ்டன் தொலைந்தான் என இறுமாப்பு கொண்டான் கெளசிகன். வசிஷ்டர் ஆசிரமம் சென்று அதை அழித்தான். வசிஷ்டர் வெகுண்டு தன் பிரம்ம தண்டத்துடன் வந்து நின்றார். அவர் மீது பற்பல அஸ்திரங்களை கெளசிகன் விட்டான். அவ்வளவையும் வசிஷ்டரின் பிரம்ம தண்டம் வீழ்த்தி விட்டது. இறுதியில் பிரம்மாஸ்திரத்தை ஏவ, தேவர்களும், முனிவர்களும் கலங்க, வசிஷ்டர் கலங்காமல் எதிர்கொள்ள அதுவும் வலுவிழந்தது. க்ஷத்திரிய பலத்திலும் பிரம்ம பலமே பெரிது என்று வசிஷ்டர் நிரூபித்துவிட்டார். கெளசிகனும் அதை உணர்ந்து கொண்டான்.
அரசர்களின் உடல்வலி, தோள்வலி, படைவலியினும் பிரம்ம தேஜஸே பெரிது என்று தானும் அவற்றைப் பெறுவதற்காகத் தவம் செய்யச் சென்றான் கெளசிகன். இந்திரன் இதைக் கண்டு பயந்தான். எப்படியாகிலும் அவனது தவத்தைக் கலைத்துவிட வேண்டுமென்ற நோக்கத்தில் அரம்பையரில் திலோத்தமை என்ற அழகியை அனுப்பி அவர் தவத்தைக் கலைக்கச் சொன்னான். இந்திரன் எண்ணியவாறே கெளசிகன் தவம் கலைந்து, திலோத்தமையின் அழகில் மனம் தடுமாறி, அவளோடு பலகாலம் கழித்தான். பிறகு தன் தவறுக்காக மனம் வருந்தி "தேவலோகத்துப் பெண்ணான நீ மண்ணுலகில் சென்று மானிட மங்கை ஆகுக" என்று திலோத்தமையை சபித்துப் பின் வேறு திசைக்குச் சென்று மீண்டும் தவம் செய்யத் தொடங்கினான். பிறகு திரிசங்குவிற்காக புதிய சொர்க்கத்தைப் படைத்தான். அதனால் ஏற்பட்ட தவ இடையூறினால் தவ வலிமையெல்லாம் இழந்து, மீண்டும் தவம் செய்ய வேறு திசை நோக்கிச் சென்றான். அதன் பிறகு மேனகையிடம் மனத்தைச் செலுத்தி அவளுடன் சிலகாலம் இன்பமாய்க் கழித்தபின், தன் பிழை உணர்ந்து மறுபடியும் தவம் செய்தான்.
இப்போது கெளசிகன் முன்பாக பிரம்மதேவன் தோன்றி, "நீ மகரிஷி ஆயினை" என்றான். அதில் திருப்தி அடையாத கெளசிகன் நான் பிரம்மரிஷியாக வேண்டும், அதற்கு வரம் தரவேண்டும் என்றான். பிரம்மதேவன் நீ இன்னம் ஜிதேந்திரியனாகவில்லை. மீண்டும் தவம் செய் என்று சொல்ல, மீண்டும் தவம் செய்தான். அப்போதும் இந்திரன் அரம்பையை அனுப்பினான். கெளசிகன் கோபம் கொண்டு அவனை பதினாயிர வருஷம் கல்லாய் கிடப்பாய் என சபித்தான். மறுபடி தவவலிமை குறைய, இனி கோபமே படுவதில்லை என உறுதிபூண்டு "பிரம்ம ரிஷி" ஆனான். இப்படி சக்கரவர்த்தி குமாரர்களுக்கு கெளசிகனது வரலாற்றை சதானந்த முனிவர் கூறி முடித்தார்.
இராமனை, சீதையின் நினைவு மிகவும் வருத்தியது. இரவு தூக்கமின்றி சீதை நினைவில் கழித்து, மறுநாள் காலை வைகறையில் சிறிது கண்ணயர்ந்தான். காலையில் எழுந்து உற்சாகத்தோடு தன் தம்பியும் உடன்வர முனிவரோடு யாகசாலை சென்றடைந்தான். சபா மண்டபத்தில் ஜனக மகாராஜா அருகில் இம்மூவரும் அமர்ந்தனர். "பெரியீர்! இந்தக் குமாரர்கள் யார்?" என்று ஜனகன் கேட்க, முனிவர் சொன்னர்: "இவர்கள் தசரத குமாரர்கள். வேள்வி காண வந்தனர். அப்படியே உன் வில்லையும் பார்ப்பார்கள்" என்றார்.
"இவ்விருவரும் தசரத சக்கரவர்த்தியின் குமாரர்கள்; கலைக்கோட்டு மாமுனிவரை அழைத்து வந்து தசரதன் செய்த புத்ர காமேஷ்டி எனும் யாகத்தின் பலனாய் கோசலைக்கு இராமனும், கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு லக்ஷ்மண சத்ருகுனனும் பிறந்தனர். என் யாகத்தைக் காக்கும் பொருட்டு வில்லேந்தி மேருவரையும், வெள்ளிப் பருபதமும் போன்ற இராம லக்ஷ்மணர்கள் என்னுடன் வந்தார்கள். யாகத்துக்கு இடையூறு செய்த தாடகையை வதம் செய்தார்கள். சுபாஹுவை ஓர் அம்பினால் கொன்று, மற்றொன்றினால் மாரீசனை வெகுதூரம் கடலில் வீசினான். அப்படியே உன் யாகத்தையும், நீ வைத்திருக்கும் சிவதனுசையும் காண என்னுடன் வந்தார்கள்" என்றார் கெளசிக முனிவர்.
"இவர்களைப் பெற்றவர் தசரத சக்கரவர்த்தி என்றாலும், கலைகளையும், வேதங்களையும் போதித்து, பேருணர்வினனாக இவனை ஆக்கிய பெருமை வசிஷ்ட முனிவரையே சேரும். அவரே இவர்களது ஞான ஆசான்" என்றார் முனிவர். இதனை எதற்குச் சொல்ல வேண்டும்? ஒருக்கால் தசரத சக்கரவர்த்தியின் குமாரர்கள் என்று சொல்லுகிறாரே, இவர்களும் தந்தையைப் போல பல மனவியர்களை மணந்துகொள்வார்களோ என்று ஜனகன் நினைத்துவிடக்கூடாது என்பதற்காக, வசிஷ்ட முனிவரின் சீடர்கள் என்று கூறியதின் மூலம், இவர்கள் ஏக பத்தினி விரதர்களாக இருப்பார்கள் என்று சொல்ல விரும்பினாரோ என்னவோ?
"மன்னா! இவர்கள் உருவில் சிறியவர்கள் என்று நினைத்து விடாதே! அவனது ஓர் அம்பின் ஆற்றலை நான் கண்ணாரக் கண்டேன். ஜனக மகாராஜனே! அதுமட்டுமல்ல, கெளதம முனிவரின் சாபத்தால் கல்லாய் சமைந்திருந்த அகலிகையின் சாபம் தீரத் தன் கால் துகள் பட்ட மாத்திரத்தில், அவள் உயிர் பெற்றெழுந்த அதிசயத்தை, என் கண்களால் கண்டேன்." என்று முனிவர் கூறிக்கொண்டிருக்கும் போதே ஜனக ராஜன், இந்தச் சிறுவன் இராமனால் சிவதனுசை வளைக்க முடியுமோ என்று மனதால் சிந்தித்ததற்கு முனிவர் பதில் சொன்னது போல அமைந்தது.
ஜனகன் சிவதனுசை "கார்முகச் சாலை" எனும் இடத்திலிருந்து கொண்டு வரப் பணித்தான். உடனே பணியாளர்கள் சென்று எட்டுச் சக்கரமுடைய உறுதியான இரும்புப் பேழையில் வைக்கப்பட்டிருந்த தனுசை "அறுபதினாயிரவர்" (ஐயாயிரவர் என்றும் கூறுவர்) தாங்கி வந்தனர். இது சிவதனுசு. இதனை எடுத்து வளைத்தல் சிவபெருமானுக்கோ அல்லது திருமாலுக்கோ அன்றி பிறரால் இயலாது. திருமகள் போன்ற நம் சீதையை மணந்து கொள்ள அந்த திருமாலே முன்வந்து இந்த தனுசை வளைத்துவிட்டால், திருமணம் இனிது நிறைவேறும். அது நிகழுமோ? என அனைவரும் எண்ணமிட்டுக் கொண்டிருந்தனர்.
இப்படி ஒரு நிபந்தனை விதிக்க இந்த மன்னனுக்கு ஏன் இப்படி புத்தி கெட்டதோ! இவனுக்குத் தன் பெண் மீது ஆசை இல்லையோ! என கூட்டத்தினர் வருந்தினர். "திரயம்பகம்" என்ற பெயர் கொண்ட அந்த தனுசை கொண்டு வந்து வைத்தவுடன், இந்த தனுசை இதுகாறும் ஒருவரும் வளைக்க முடியாத நிலையில் இப்போது ஏன் கொண்டு வர வேண்டும். யார் வந்து இப்போது இவ்வில்லை வளைத்துவிடப் போகிறார்கள் என்றும் அவர்கள் எண்ணமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது சதானந்த முனிவர் இந்த சிவதனுசின் வரலாற்றை இராம லக்ஷ்மணர்களிடம் கூறத் தொடங்கினார்:
"ஒரு சமயம் தக்கன் பார்வதியை இகழ்ந்ததைக் கருதி சிவபெருமான் வில்லைக் கையில் ஏந்தி கோபத்துடன் தட்சனுடைய வேள்விச் சாலையை அடைந்து, வேள்வியை அழிக்குமாறு வீரபத்திரரை ஏவினார். அவர் தேவர்களை சின்னாபின்னமாக்கி வேள்வியையும் அழித்தார். பின்னர் கோபம் தணிந்து அவர்களையெல்லாம் உயிர்ப்பித்தார். சினம் தணிந்த பின்னும் சிவன் கையில் வில் ஏந்தியிருப்பது கண்டு அஞ்சி தேவர்கள் நடுங்கினார்கள். சிவபெருமான் தன் கை வில்லை ஜனகன் குலத்து முன்னோன் ஒருவனிடம் கொடுத்துவிட்டதாக வரலாறு. ராமா! வில்லின் வரலாற்றை உனக்கு உரைத்தேன். இனி இந்த சீதையின் வரலாற்றைக் கூறுகிறேன் கேள்." என சதானந்தார் கூறத் தொடங்கினார்.
"வேள்விச்சாலை அமைக்கும் பொருட்டு நிலத்தை ஏர் கொண்டு உழுதோம். உழுகின்ற கொழு முகத்தில் இப்பெண்ணரசி கிடைத்தாள். புவிமடந்தை என சீதை தோற்றமளித்தாள். மேன்மை குணங்கள் உள்ள பிராட்டி மேன்மையான இடத்தில் மேன்மையாகவே வளர்ந்தாள். இந்தத் திருமகளை அடையவேண்டி தேவர்களும் மன்னாதி மன்னர்களும் போட்டி போட்டுக் கொண்டு வந்தார்கள், ஆயினும் சிவதனுசை வளைப்பவர்க்கே சீதையை மணமுடிப்பதாக ஜனகன் அறிவிப்பு செய்தமையால், எவராலும் இந்த தனுசை வளைக்க முடியாததால் தோற்றுத் திரும்பினார்கள். வந்த மன்னர்கள் இயலாமையால் சினம் பொங்க ஜனகனுடன் போர் தொடுக்கலாயினர். ஆனால், ஜனக மகாராஜாவின் படைகள் அவர்களை தோற்கடித்து விரட்டிவிட்டனர். இதனால் சீதையின் திருமணம் எங்கே தடைப்பட்டு விடுமோ என்று நாங்கள் ஐயப்பட்டுக் கொண்டிருந்த போது இராமன் வந்துவிட்டதால், அவன் எமது கவலையைத் தீர்ப்பான் என்று திடமாக நம்புகிறோம்" என்றார் சதானந்தர்.
இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த விஸ்வாமித்திர முனிவர் ஜாடையாக இராமனைப் பார்க்க, அவரது பார்வையின் பொருளைப் புரிந்து கொண்டு இராமன் அந்த சிவதனுசை நோக்கினான். உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தான். தேவர்கள் ஆரவாரம் செய்தனர். இராமன் நடந்து சென்று சிவதனுசு இருந்த பெட்டியை நெருங்கினான். அவன் எழுந்தது, நடந்தது, வில்லை எடுக்க முயன்றது, அடடா! என்ன காட்சி அது! கூடியிருந்த பெண்களும் இதரரும் பெருமகிழ்ச்சி எய்தி வாழ்த்தினர். இந்தக் காட்சியைக் காண அனைவரும் இமைக்கக்கூட மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர். இராமன் நடந்து சென்ற காட்சியைச் சொல்ல வந்த கம்பர் கூறுகிறார்:
"மாகம் மடங்கலும்; மால் விடையும்; பொன்
நாகமும்; நாகமும் நாண நடந்தான்".
மாகம் மடங்கலும் என்றால், சிறப்புப் பொருந்திய சிங்கம். மால் விடையும் என்றால் பெருமையுள்ள ரிஷபமும், பொன் நாகமும் என்றால் தங்க நிறமுள்ள மகாமேருமலை, நாகமும் என்றால் யானை, இவைகள் அனைத்துமே வெட்கமடையும்படியாக இராமன் நடந்தானாம். இராமன் எழுந்தான், நடந்தான், தனுசு இருக்கும் பெட்டியருகே சென்றான், சென்று அந்தத் தனுசை ஒரு கையால் எடுத்தான். ஒரு முனையைக் காலில் வைத்து அழுத்திக் கொண்டு, நாணை இழுத்து ஒரு கையால் பூட்டியதைக்கூட எவரும் பார்க்கும் முன்னர், ஒரு பெரும் ஓசை கேட்டது. அந்த சிவதனுசு இற்று வீழ்ந்ததைத்தான் அனைவரும் கண்டனர். இவ்வளவும் இமைக்கும் பொழுதில் நடந்து முடிந்து விட்டது.
"தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில்
மடுத்ததும், காண்நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்".
இது கம்பரது கவிச்சித்திரம். வில் முறிந்த ஓசை பூமியெங்கும் கேட்டது. மேலுலகிலும், பாதாளத்திலும் எதிரொலித்தது. விண்ணோர் பூமழை பொழிந்தனர். கடல்கள் எல்லாம் பல்வகை இரத்தினங்களை வாரி இறைத்தன; முனிவர்கள் ஆசி மொழிந்தனர்; ஜனக மன்னனோ என் நல்வினைப் பயனே இன்று இந்த இராமன் உருவில் வந்தது என்று மகிழ்ந்தார். மிதிலை நகரத்து மக்கள் மகிழ்ந்தனர். நகரெங்கும் இசைபாடி மகிழ்ந்தனர். தெய்வ கீதம் இசைத்தனர். நடந்த நிகழ்ச்சிகளைக் கண்டவர்கள் மகிழ்ச்சியோடு மற்றவர்களுக்குச் சொல்ல ஓடினர்.
"தசரதன் புதல்வர் என்பார்; தாமரைக் கண்ணன் என்பார்;
புயல் இவன் மேனி என்பார்; பூவையும் பொருவும் என்பார்;
மயல் உடைத்து உலகம் என்பார்; மானுடன் அல்லன் என்பார்;
கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார்."
"நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்;
கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கு அன்னதேயால்;
தம்பியைக் காண்மின் என்பார்; தவம் உடைத்து உலகம் என்பார்;
இம்பர் இந்நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார்".
அங்கே அந்தப்புரத்தில் சீதாப்பிராட்டி இராமனைக் காணும் ஆசையால் உயிர் தரித்திருந்தாள். அவள் ஆருயிர் நின்று ஊசலாட உழன்றாள் கடும் துயரம். இராமனை எண்ணி எண்ணி அவள் உள்ளம் ஏங்குகிறது. அப்போது நீலமாலை எனும் தோழி ஓடி வந்து இராமன் வில்லை முறித்துவிட்ட செய்தியைக் கூறுகிறாள். அன்று முனிவனுடனும் தம்பியுடனும் மிதிலை வந்த இராமன் தான் வில்லை முறித்தான் என்கிறால். அன்று கன்னி மாடத்திலிருந்து தான் பார்த்த அந்தக் கார்வண்ணனே வில்லை முறித்தவன் என்ற செய்தியை அறிந்து அளவிலா உவகை கொண்டாள் சீதை.
ஜனகன் பேருவகை கொண்டான். சிவதனுசை வளைக்க யார் வருவார் என்று காத்திருந்து இப்போது இராமன் வில்லை முறித்தவுடன் அவனுக்கு சீதையின் திருமணத்தை உடனே முடித்துவிட வேண்டுமென்று அவசரம். கெளசிக முனிவரை நோக்கி "முனிவர் பெருமானே, இராமன் சீதை திருமணத்தை இன்றே முடித்து விடலாமா? அல்லது முறைப்படி தசரத சக்கரவர்த்தியை அழைத்து, நாடெங்கும் திருமணச் செய்தியை முரசு அறைந்து அறிவித்துவிட்டு உரியவாறு நடத்தலாமா, தங்கள் கருத்து யாது?" என்று கேட்டான்.
அதற்கு முனிவர் சொன்னார்: " தசரத சக்கரவர்த்திக்கு செய்தி அனுப்பி, அவரை வரவழைத்துத் திருமணம் செய்வதே முறை, நீ அப்படியே செய்" என்று சொன்னதும், ஜனகன் தூதர்களை அயோத்திக்கு அனுப்பி, இங்கே நிகழ்ந்தவற்றை தசரத சக்கரவர்த்தியிடம் கூறி, அழைத்து வரும்படி ஓலை கொடுத்து அனுப்பினான். தூதுவர்கள் அயோத்தி சென்று மன்னனைக் கண்டு செய்தியைக் கூறினர். மன்னன் தூதர்களின் ஓலையை வாசிக்கச் செய்து கேட்டான்.
இராமனின் வீரச் செயல்களும், அகலிகை சாப விமோசனமும், சிவதனுசு முறிபட்டதும் கேட்டு மன்னன் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தான். அவன் உடம்பு மகிழ்ச்சியால் பூரித்துப் போயிற்று. முரசறைந்து நாட்டு மக்களுக்கு தசரதன் செய்தி அறிவித்தான். நாட்டு மக்கள் செய்தி கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர். அரசன் ஆணைப்படி தேரும், யானையும், குடைகளும், கொடிகளோடும், சேனைகள் புறப்பட்டன. பேரிகைகள் முழங்கின. வீரர்களும் பெண்டிரும் பிரயாணம் புறப்பட்டு மிதிலை நகர் நோக்கிச் செல்லப் புறப்பட்டனர். வழியெங்கும் ஆடலும், பாடலும், ஊடலும், கூடலுமாக அவரவர் தத்தமக்கே திருமணம் போல உணர்ந்து மகிழ்ந்தனர். இளைஞர்கள் கன்னியர் மீது காமக்கணைகளை வீசினர்.
திருமணம் நடத்தி வைக்க அந்தணர் சென்றனர். வழியெங்கும் ஆரவாரமும், ஒலிகளும்நிறைந்து விளங்கின. மாதர் சிலம்பொலி, குதிரைகள் கனைப்பொலி, காதலர் சிரிப்பொலி, இப்படிப் போகப்போக மக்கட்கூட்டம் நிறைந்து வழிந்தது. தசரத மன்னனோடு பட்டத்தரசிகளும் வாத்திய முழக்கங்களோடும், மக்களின் இரைச்சலோடும், படைகளின் பேரொலியோடும், இசைக் கருவிகளின் இசையோடும் வழிநடை சென்றனர். கோசலையும் கைகேய்யும், சுமத்திரையும் தோழிகள் புடைசூழ தேரிலேறிச் சென்றனர்.
சீர் சுமந்து செல்லும் பெண்டிர், உரிமை மகளிர் அறுபதினாயிரவர், வசிஷ்ட முனிவர், பரத சத்ருக்குனர், அதிகாரிகள், மண்டலாதிபர்கள் இவர்களோடு தசரதன் நவரத்தினங்கள் பதித்த தேரில் ஏறிச் சென்றான். வழியில் இராப் பொழுதை இந்து சைல அடிவாரத்தில் தங்கிக் கழித்தனர். மறுநாள் காலை அனைவரும் சந்திர சைலத்தை அடுத்துள்ள சோனையாற்றின் கரையை அடைந்தனர். அங்கே மகளிர் நீர்விளையாடி, பூக்கொய்து, இன்பமாய்த் தங்கிப் புறப்பட்டனர்.
அன்றைய அந்தி மாலைப் பொழுதில் இளைஞர்களும், கன்னியர்களும் தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு, கள் உண்டு, பல்வகை போகங்களைத் துய்த்துத் தங்களுக்கே திருமணம் போல மகிழ்ச்சியோடு இருந்தனர். இப்படி தசரதன் தன் பரிவாரங்களுடன் புறப்பட்டு நான்கு நாட்கள் பயணம் செய்து, ஐந்தாம் நாள் மிதிலையை அடையும் போது, ஜனக மகாராஜன் அவர்களை எதிர்கொண்டு அழைத்துச் சென்றான். இராம லக்ஷ்மணரும் அவருடன் வந்து தாய் தந்தை சுற்றத்தார், மக்களையும், படைகளையும் அழைத்துச் சென்றனர்.
கம்ப சித்திரம் என்கிறோம். அது எப்படி இருக்கும் என்று பலர் நினைக்கலாமல்லவா. இப்போது சில கம்ப சித்திரங்களைப் பார்ப்போம். இராமன் மிதிலை நகரில் உலா வந்தபோது மக்கள் அடைந்த நிலையை கம்பர் வர்ணிக்கிறார். முதலில் பெண்கள் கூடி வந்து இந்தக் காட்சியைப் பார்க்கிறார்கள். எப்படி?
"மானினம் வருவ போன்றும், மயிலினம் திரிவ போன்றும்
மீனினம் மிளிர்வ போன்றும், மின்னினம் மிடைவ போன்றும்
தேனினம் பம்மி ஆர்ப்பச் சிலம்பினம் புலம்ப எங்கும்
பூநனை கூந்தல் மாந்தர் பொம்மென புகுந்து மொய்த்தார்"
"விரிந்து வீழ் கூந்தல் பாரார்; மேகலை அற்ற நோக்கார்
சரிந்த பூந்துகில்கள் தாங்கார், இடை தடுமாறத் தாழார்
நெருங்கினர்; நெருங்கப் புக்கு நீங்குமின் நீங்குமின் என்று
அருங்கலம் அனைய மாதர் தேனுகர் அளியின் மொய்த்தார்."
"பள்ளத்து பாயும் நன்னீர் அனையவர், பானல் பூத்த
வெள்ளத்துப் பெரிய கண்ணார், மென் சிலம்பு அலம்ப மென்பூத்
தள்ளத்தம் இடைகள் நோவத் தமை வலித்து அவன்பாற் செல்லும்
உள்ளத்தைப் பிடித்தும் என்ன ஓடுகின்றாரும் ஒத்தார்".
மிதிலை நகரின் வீதிகளில் தேரில் இராமன் பவனி வரும்போது முட்டிமோதிக் கொண்டு அவனைக் காண்பதற்காகக் கூடியிருக்கும் பெண்களின் கண்களின் ஊடே, அவன் உருவம் புகுந்த வந்ததால் இவனுக்குக் கண்ணன் என்று பெயர் வந்ததும் சரிதான் போலும். அவன்கூடவே அந்தப் பெண்களின் உள்ளங்களும் போகின்றனவாம், அந்த உள்ளங்களைப் பிடிப்பதற்காக ஓடுவதைப் போல அந்தப் பெண்கள் ஓடுகின்றனர். கூட்டத்தை விலக்கிக் கொண்டு விலகுங்கள் விலகுங்கள் என்று மற்றவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அவனைப் பார்ப்பதற்காக அவனை சுற்றிலும் மொய்த்தனர். உலா வருகின்ற அந்தக் கார் நிறத்து வண்ணனின் தோளைக் கண்டவர்கள், தோளை மட்டுமே பார்த்துக் கொண்டு நின்று விட்டனர். தொடு கழற் கமலம் அன்ன தாள் கண்டார், அவனது தாளினையே பார்த்துக் கொண்டிருந்தனர்; அவனது இரு தடக்கைகளைக் கண்டவர்களும் அங்ஙனமே; அப்படி அந்த இராமனை முழுமையாகக் கண்டவர்கள்தான் பின் யார் இருக்கிறார்கள் இந்தக் கூட்டத்தில். அந்த அருமையான பாடல் இங்கே:
"தோள் கண்டார் தோளே கண்டார், தொடுகழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார், தடக்கை கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத் தன்னான் உருவு கண்டாரை யொத்தார்."
இப்படி அனைவரும் திருமண மண்டபத்தை வந்தடைந்தனர். அங்கு பல தேசத்திலிருந்தும் மக்கள் வெள்ளம் வந்து குவிந்திருந்தனர். கங்கர், கொங்கர், கலிங்கர், தெலுங்கர்கள், சிங்களாதிபர், சேரலர், தென்னவர், அங்கராசர், குலிங்கர், அவந்திகர், வங்கர், மாளவர், சோளர், மராட்டர் என்று அனைவரும் இருந்தனர். ஜனகன் வந்திருந்த அனைவரையும் உயர்வு தாழு கருதாது மிகச் சிறப்பாக உபசரித்தான். திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமண நிச்சயதார்த்தம் செய்யும் பொருட்டு சீதையை மண்டபத்துக்குத் தருவிக்குமாறு வசிஷ்டர் கேட்டுக் கொண்டார்.
வசிஷ்டர் கேட்டுக்கொண்டபடி ஜனகன் முறைப்படி ஏற்று அவரைத் தொழுது பின்னர் சீதையை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். உடனே சீதையின் செவிலித்தாயர்கள் அவளை அலங்கரித்து கூந்தலில் மலர் சூட்டி, சுட்டி முதல் தலயலங்கார அணிகலன்களைப் பூட்டி, குழைகள் அணிவித்து, கழுத்தணிகள் முத்துமாலை உள்ளிட்ட பற்பல மாலைகளை அணிவித்து தோளுக்கு அணியாக பதுமராகம் முதலான மணிகளை அணிவித்து, இடைக்கு அணிகள், மேகலை முதலானவற்றைப் பூட்டி, கண்களுக்கு மையிட்டு, நெற்றிக்குத் திலகமிட்டு, பூக்களும் பொற்கொடியும் அணிவித்து, பிறகு திருஷ்டி கழித்து, இரட்சையும், காப்பும் இட்டு, நெய்விளக்கு ஏற்றி, பலிதூவி, இறைவனைத் தொழுது, வேதம் கற்றோருக்குத் தானம் ஈந்து, ஆரத்தி எடுத்த நீரால் அவளுக்குப் பொட்டு இட்டு, செவிலித்தாயர் சீதையை தயார் படுத்தினர்.
சீதை மன்றம் நோக்கி நடந்து வர, அவளது அழகைக் கண்டு கூடியிருந்த மங்கையரும் மயங்கினர். மென்மையாக தனது பாதங்களைப் பூமியில் பதித்து, தரையெங்கும் பூக்களைப் பரப்பி அதில் ஒரு பூ தவழ்ந்து வருவதைப் போல நடந்து வந்தாள். சீதையின் அழகைக் கண்டு அவையோர் செயலிழந்தனர். அந்த தெய்வீக அழகு அவர்களைச் சிலைகளாக்கியது. பார்த்தவர் அனைவரும் கண்களை இமைக்க மறந்தனர். கண்கள் திறந்தது திறந்தபடி இருந்தன.
இராமனோ, நெடுநாள் பாற்கடலைக் கடைந்தபின் இறுதியில் அமுதம் வந்தபோது அடைந்த மகிழ்ச்சியை, பிராட்டியைப் பார்த்தவுடன் பெற்றான். வசிஷ்டர் மகிழ்ந்தார். தசரத சக்கரவர்த்தி மகிழ்ந்தார். அவையினர் தெய்வம் நடந்து வருவதாக உணர்ந்தனர். ஜானகி அவைக்கு வந்து குருமார்களை வணங்கி தசரதனை வணங்கி, கண்களில் நீர்சோர ஜனகன் அருகில் அமர்ந்தாள்.
சீதை உட்கார்ந்தபடியே சிறிது கண் இமைகளைத் தூக்கித் தன்னை மணந்து கொள்ளப் போவது அன்று மாடத்திலிருந்து பார்த்தோமே அந்த அஞ்சன வண்ணன்தானே என்று பார்த்து, ஆம்! அவனேதான் என்று ஐயம் நீங்கி மனம் தெளிவுற்று மகிழ்வு எய்தினாள். தசரதன் வசிஷ்டரை நோக்கி "திருமண நாள் எது?" என்றான். அப்போது விஸ்வாமித்திர முனிவர் ஜனகனிடம் கேட்க, அவன் தன் குலப் பெருமையெல்லாம் சொல்லி தன் புதலல்வியரை, ராம லக்ஷ்மணருக்கும், தன் தம்பியின் புதல்விகளை பரத, சத்ருக்குனருக்கும் கொடுக்க சம்மதித்து, அதற்கு அடுத்த இரண்டாம் நாளான பங்குனி உத்தரம் நாளில் நால்வருக்கும் திருமணம் செய்வது என நிச்சயம் செய்து கொண்டனர். சபா மண்டபத்திர்லிருந்து அனைவரும் தத்தம் இடம் சென்றனர். இரண்டாம் நாள் நடைபெறவிருக்கும் திருமண ஆயத்தங்கள் விரைவாக நடைபெறத் தொடங்கின.
ஜனகன் அனைவரையும் இனிதாக உபசரித்தான். ஒருவருக்கும் ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான். நாளை திருமணம் என்ற நிலையில் சீதை வேட்கையால் இராமனை நினைத்து அவதியுற்றாள். கொடிய தாகத்தோடு குடிக்க நீர் நிலைகளைத் தேடி அலைந்தவன் ஓரிடத்தில் நீர் நிலையைக் கண்டும், அதனை நெருங்கமுடியாதபடி முட்புதர்கள் சூழ்ந்திருந்தால் எப்படி வேதனைப் படுவானோ அப்படி வருந்தினாள் சீதை. இராமனும் சீதையை நினைத்து ஏங்குகிறான். ஜனகன் முரசு அறிவித்து நகருக்கு திருமணம் பற்றி செய்தி அறிவிக்கிறான். நகர மக்கள் சீதா கல்யாணம் காண, தங்களை மணமக்களாய் எண்ணி, அலங்கரித்துக் கொண்டு வருகிறார்கள்.
திருமண நாள். சூரியன் உதயமானான். நகர் அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டிருந்தது. வாழையும், கமுகும் வழியெங்கும் கட்டியிருந்தனர். பல்லாயிர மணிகள் வண்ணமயமான வானவில் போல ஒளிருந்தன. விளக்கேற்றி, பாளை முளைவித்தனர். ஊரெங்கும் பந்தல். விருந்துக்கான பொருட்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. வாழை இலை, வெற்றிலை, பழங்கள், மலர்கள், இவை மலைபோல குவிந்தன. வீதிகளெல்லாம் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மிதிலா நகரம் தேவேந்திரன் பட்டாபிஷேக நாளில் விளங்கும் ஸ்வர்க்க லோகம் போல விளங்கியது.
திருமண மண்டபத்துக்கு தசரதன் வெண்கொற்றக் குடை விரித்து, முரசுகள், மங்கல வாத்தியங்கள் முழங்க, சுற்றிலும் ஏனைய அரசர்கள் புடைசூழ சம்பந்தயாக வந்து சேர்ந்தான். மயன் அமைத்த அந்த மண்டபம் கலகலவென பற்பல ஒலிகளோடு விழாக்கோலம் பூண்டு விளங்கியது.
அங்கே! இராமனுக்கு மங்கல நீராட்டி, கன்னிப் பெண்கள், வேதியர்கள் முதலானோருக்குத் தானங்கள் கொடுத்து, ஆதிஅம்ஜோதியாம் திருவரங்கப் பெருமானை வணங்கினார்கள். பிறகு இராமனுக்கு அலங்காரம் நடைபெற்றது. காதணிகள், வீரப்பட்டம், திலகம், முத்தாரம், முத்து வடம், தோள்வளை, கடகம், நவமணி மாலை இவற்றின் மேல் உத்தரீயம், முப்புரிநூல், அரை ஆடை நழுவாமல் கட்டும் உதரபந்தனம், பட்டாடை உடுத்தி, அரைக்கச்சும் உடைவாளும் அணிந்து, அரையைச் சுற்றி கட்டப்படும் அரைப்பட்டிகை, கிம்புரி எனும் தொடையணி, காலில் சிலம்பு, கழல், இவ்வளவும் அணிந்து அலங்காரத் தோற்றத்தில் தேர் ஏறி புறப்பட்டான்.
தேவர்கள் மகிழ்ந்தனர். சீதா கல்யாணம், இராவணன் அழிவின் தொடக்கம் என்பது அவர்களுக்குத் தெரியுமல்லவா? இராமனின் தேர், திருமண மண்டபம் வந்தடைந்தது. மூலகிலும் பெண்களின் அழகுக்குத் திருமகளை உவமை கூறுவர். அந்தத் திருமகளே மணமகளாக வந்திருக்கும் இந்தச் சீதையாதலின், இவள் அழகையும், திருமணச் சிறப்பையும் கூறவும் வேண்டுமோ?
மண்டபத்தில், அக்னி வளர்த்து, ஹோமம் தொடங்கி, வசிஷ்டர் தலைமையில் சடங்குகள் ஆரம்பமாயின. மறையவர்கள் வேதமந்திரங்களை கோஷிக்க, ஜனகன் சீதாபிராட்டியின் கையைப் பிடித்து இராமபிரான் கையில் கொடுத்து நீர் வார்த்து கன்னிகாதானம் செய்வித்தான். அந்தணர் ஆசி வழங்கினர். மங்கலப் பெண்டிர் பல்லாண்டு பாடினர். மன்னர்கள் வாழ்த்தும், மக்களின் மகிழ்ச்சி ஆரவாரமும் விண்ணை முட்டின. வானவர் கற்பக மலர்களைத் தூவினர். மன்னர்கள் பொன்மலர் தூவினர். சீதையின் கரத்தைப் பிடித்து இராமனுக்குப் பாணிக்கிரகணம் நடந்தது. அக்னியை வலம் வந்து இருவரும் வணங்கினர். லாஜ ஹோமம் (பொரி இடுவது எனும் முறை) அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, இராமன் சீதையின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினான்.
அதே மண்டபத்தில் இலக்குவன் ஊர்மிலையையும், பரதன் மாண்டவியையும், சத்ருக்குனன் ஸ்ருதகீர்த்தியையும் மணம் செய்து கொண்டனர். திருமணச் சடங்குகள் முடிந்து அவரவர் தத்தமது விடுதியை அடைந்தனர். இராமனும் சீதையுடன் தனது விடுதிக்குப் போய்ச் சேர்ந்தான்.
திருமணம் முடிந்த பின்னர் தசரதன் மிதிலையில் சில நாட்கள் தங்கி ஜனகன் முனிவர்கள் ஆகியோரருடன் அளவளாவி மகிழ்ந்தான். விஸ்வாமித்திர முனிவ்ர் இராமனுக்கு வேதங்களில் காணப்படும் பல ராஜ நீதிகளை உபதேசித்து, அனைவரையும் ஆசீர்வதித்துவிட்டு தவம் செய்ய இமய மலைக்குச் சென்றுவிடுகிறார்.
பின்னர் தசரதன் தன் உறவினர் பரிவாரங்கள் புடைசூழ அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றான். மணமக்கள் அனைவரும் அவர்களுடன் புறப்பட்டனர். அப்போது சில தீய நிமித்தங்கள் தோன்றின. மயில்கள் இடமிருந்து வலமாகச் சென்றன. முதலில் இது நல்ல நிமித்தம். அடுத்து காகங்கள் வலமிருந்து இடமாகச் சென்றன. இது தீய சகுனமாக இருந்ததால் தசரதன் தயங்கி நின்றான்.
சில நல்ல, தீய நிமித்தங்கள் பற்றி கூறப்படும் செய்திகளாவன: வலியன், கருடன், காடை, கழுகு, ஆந்தை, உடும்பு, கீரி, குரங்கு இவை வலமிருந்து இடமாகப் போனால் நல்ல நிமித்தங்களாகக் கருதப்படும். நாரை, விச்சுளி, காக்கை, செம்போத்து, கிளி, கொக்கு, மயில், கோழி, ஓணான், புள்ளிமான், புனுகு பூனை, புலி, நரி, இவை இடமிருந்து வலம் போனால் நல்ல நிமித்தமாகக் கருதப்படுகிறது.
தசரதன் நிமித்திகனை அழைத்து இந்த நிமித்தங்களின் பலன்கள் என்ன என்று கேட்கிறான். அவன் ஆராய்து, இப்போது முதலில் ஒரு இடையூறு வரும், அஃது, எளிதின் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்று கூறினான். தசரதனும் பரிவாரங்களும் சிறிது தூரம் சென்றதும், எதிரே ஒருவன் பூமி அதிரும்படியாக கையில் மழு (கோடறி போன்றதோர் ஆயுதம்) ஏந்தியபடி வந்து நின்றான்.
அவன் தன் கை வில்லை வளைத்து நாணேற்றி அதைத் தெறித்தான். அதில் எழுந்த ஓசையில் உலகமே அதிர்ந்தது. உயிரினங்கள் நிலை தடுமாறின. கோர தாண்டவமாடும் உருத்திர மூர்த்தி போல அவன் வந்து தோன்றினான். அவன் பெயர் பரசுராமன். இவனது வரலாறு வருமாறு. கார்த்த வீரியார்ச்சுனன், சந்திர வம்சத்து அரசன். ஆயிரம் கைகள், வீர பராக்கிரமம், நற்குணங்கள் இவை அனைத்தும் வாய்த்தவன். இவன் தன் வீரத்தால் இராவணனைத் தோற்கடித்தவன். அத்தகையவன் பரசுராமனின் தந்தையான ஜமதக்னி முனிவர்பால் காமதேனுவைக் கவர்ந்து தவறு இழைத்தமையால், பரசுராமன் மிக்கச் சினம் கொண்டு அவனைத் தன் மழுவால் கொன்றான். பரசுராமனின் இந்தச் செயலுக்கு பழிவாங்கும் விதமாக, கார்த்தவீர்யாச்சுனனின் புதல்வர்கள் பரசுராமன் இல்லாத நேரம் பார்த்து அவன் தந்தை ஜமதக்னியைக் கொன்று விடுகின்றனர். ஜமதக்னியின் மனைவி ரேணுகா தேவி இருபத்தோரு முறை மார்பில் அடித்துக் கொண்டு அழுதாள். அதனால் பரசுராமன் ஆவேசம் கொண்டு "க்ஷத்திரிய குலத்தையே நாசம் செய்வேன்" என்று இருபத்தோரு முறை அவர்களைக் கொன்று அவர்கள் உதிரத்தில் தந்தைக்கு பித்ரு கடன்களைச் செய்தான்.
இந்த பரசுராமன் திருமாலின் அம்சாவதாரமாய் பிருகு முனிவர் வம்சத்தில் தோன்றி 'ராமன்' என்ற பெயருடன் கடுந்தவம் செய்து சிரஞ்ஜீவி எனும் வரம் பெற்று பரசுப்படை பெற்றதால் பரசுராமன் எனும்
பெயரால் வழங்கப்பட்டான். இவன் எதிர்பட்டதும் தசரதன் கலங்கிப் போனான். க்ஷத்திரியர்களை வேரோடு களையும் இந்த பரசுராமன், தனது குமாரன் இராமனை ஏதாவது செய்துவிடுவானோ என்று பயம் அவனுக்கு.
எதிரே வரும் இவர் யாரோ என்று எண்ணி இராமனும், பரசுராமனைப் பணிந்து வணங்கினான். ஆனால் பரசுராமனோ கோபம் தீராமல், "இராமா! பழுதுபட்ட சிவதனுசை உடைத்ததனால், நீ வீரனாகிவிட மாட்டாய். நீ வீரன் என்றால் வா, என்னோடு போரிடு" என்றான். அதற்கு தசரதன் "பெருமையுடைய பரசுராமா! வீரம் மிகுந்த உனக்கு சாதாரண மானுடர்களாகிய நாங்கள் சமமா? இராமன் சிறுவன். அவன் உனது அடைக்கலம். இராமன் அறியாமையால் ஏதாவது பிழை செய்திருப்பானானால், சினம் தணிந்து சிறுவன் என்பதால் பொருத்தருளுவாய்" என்றான்.
இவ்வாறு பலவாறாக தசரதன் கெஞ்சி அழுது பின் மூர்ச்சித்தான். இதற்கெல்லாம் கவலைப் படாத பரசுராமன், இராமன் முறித்த சிவதனுசின் வரலாற்றைக் கூறி, அது பழுதுபட்டது என்றும், முடிந்தால் என் கையிலிருக்கும் விஷ்ணு தனுசை முறித்து இராமன் வீரனென்றால் நிரூபித்துக் காட்டட்டும் என்றான். இதனைக் கேட்டு இராமன் சிரித்தான். பரசுராமன் கையிலிருந்த விஷ்ணுதனுசை வாங்கி அதை வளைத்து, நாண் ஏற்றி, ஓர் அம்பை குறிபார்த்து, "பரசுராமரே! நீர் வேதம் உணர்ந்த பெரியோன். ஜமதக்னியின் புதல்வன். தவம் மேற்கொண்டவன். உம்மைக் கொல்லல் தகாது. ஆஅனால் நான் அம்பை வில்லில் பூட்டி விட்டால் அதற்கு ஓர் இலக்கு வேண்டும். சொல் இப்போதே! என் அம்புக்கு எது இலக்கு?" என்றான் இராமன்.
பரசுராமன் திகைத்தான். இராம பாணத்திற்கு இலக்காவது யார்? "இராமா! நீதி வடிவானவனே! என்மீது கோபப்படாதே. நீ யார் என்பதைப் புரிந்து கொண்டேன். நீயே திருமாலின் அம்சம். வேத முதல்வனே! உலகம் உன்னால் இனி இன்பமுறும். அடைக்கலமானவரைக் காக்கும் இராமா, நான் உன் அடைக்கலம்" என்று சொல்லி பல சொல்லி போற்றினான்.
"இராமா! உன் அம்புக்கு என் தவத்தின் பயனாய் அடந்த அனைத்து வரங்களையும் தருகிறேன்" என்று சொல்ல, இராமன் வில்லைத் தளர்த்தினான். பின்னர் பரசுராமன் இராமனை வாழ்த்தி வணங்கி விடைபெற்றுச் சென்றான். மயங்கி வீழ்ந்த தசரதனை இராமபிரான் தேற்றி எழுப்பினான். பரசுராமனால் இராமனுக்கு எந்த துன்பமும் ஏற்படவில்லை என்பதறிந்து தசரதன் மகிழ்ச்சியடைந்து, மூவுலகுக்கும் நல்வினை யாற்றவும், இம்மைக்கும் மறுமைக்கும் வாழ்வளிப்பவன் இராமன் என்று ஆசி கூறினான்.
வழக்கம்போல தேவர்கள் வாழ்த்தினர். பின்னர் அயோத்தி நகர் சென்றடைந்து அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அப்போது கேகய மன்னன் தன் பேரன் பரதனைப் பார்க்க விரும்பியதால், பரதனை சத்ருக்னனுடன் கேகய நாடு அனுப்பி வைத்தான் தசரதன்.
பால காண்டம் முற்றும்.
கம்பராமாயணம்
(இராமகாதை)
(இராமகாதை)
உரை நடை ஆக்கம்
தஞ்சை வெ.கோபாலன்
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,
தஞ்சாவூர்.

What a great service!
ReplyDeleterealy great!
thanks
வணக்கம் ஐயா தங்களின் வலைத்தளத்துக்கு இன்றுதான்
ReplyDeleteவந்தேன் மிக அருமையான முறையில் ராம காவியத்தை
எழுதியிருக்கும் தங்களிடம் ஆசிபெற்றுச்சென்றாலே போதும்
எழுத்துலகில் பிரவேசிக்க வந்த எனக்கும் நற்புகழ் சேரும்
என்றே என் மனதில் தோன்றுகின்றது.நீங்கள் நீடுழி வாழ
வேண்டும் இறையருளால்.நன்றி ஐயா பகிர்வுகளுக்கு.......
அன்புடையீர்!... வணக்கம்.. கம்பராமாயணம் என்னும் இந்த வலைத் தளத்துக்கு என் முன்வினைப் பயனால் இன்று வந்தேன். என்ன சொல்வது!... எப்படிச்சொல்வதென்று தெரியவில்லை.... நெஞ்சமெல்லாம் பரவசமாக இருக்கிறது...வாரியார் ஸ்வாமிகள்,புலவர் கீரன் ஆகியோர் பேருரைக் கேட்ட பேரின்பம்...ராம நாமம் எல்லாரையும் வாழ்விப்பதாக....
ReplyDeleteஎட்டுத்தொகை நூல்களின் கடவுள் வாழ்த்து+பாடல்களின் எண்ணிக்கை
ReplyDeleteமற்றும் பாடிய புலவர்களின் எண்ணிக்கையும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
es.anbu1224@gmail.com
மூச்சு விடாமல் படித்து மகிழ்ந்தேன். தூய தமிழ் எனக்கு அவ்வளவாக ஏற்புடையதாகவில்லை. மற்றபடி மிக நன்று.
ReplyDelete