Monday, May 17, 2010

iv) Continued ...

"எந்தை! கேள்! அவ்விராமற்கு இளையவன்
சிந்தையுள் நெடும் சீற்றம் திருமுகம்
தந்தளிப்பத், தடுப்பரும் வேகத்தன்
வந்தனன்; உன் மனக் கருத்து யாது? என்றான்".

நிலைமை விபரீதமாகச் சென்று கொண்டிருப்பதை உணராமல் சுக்ரீவன் படுத்துக் கிடந்தான். இவனிடம் இந்த நிலையில் பேசிப் பயனில்லை என்று அங்கதன் அனுமனிடம் சென்று நிலைமை விளக்கி அங்கு இலக்குவன் கோபத்துடன் நிற்கிறான், இங்கோ இந்த சுக்ரீவன் கள் போதையிலும் இளமங்கையரின் உபசரணையிலும் மதிமயங்கி உறங்கிக் கிடப்பதையும் சொல்லி, இதற்கு என்ன உபாயம் என்று யோசனை செய்கிறான். பிறகு இருவரும் அங்கதனின் தாயான தாரையிடம் செல்கிறார்கள். தாரை இவர்களைப் பழிக்கிறாள். "நன்றி மறந்து விட்டிர்கள் போலும்!" என்கிறாள். இதற்கிடையே வானரங்கள் ஒன்று சேர்ந்து கோட்டைக் கதவைச் சாத்தி, பாறைகளைக் கொண்டு வழியை அடைத்து வைத்து விடுகின்றன.

வானரங்கள் கோட்டை வாயிலை அடைந்து மூடிவிட்டதைக் கண்ட இலக்குவன் சினத்தால் எழுந்த முறுவல் முகத்தில் மலர, ஓகோ, என்னிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகக் கதவை அடைத்து மூடினீர்களோ? என்று எண்ணிக் கொண்டு தனது தாமரைப் பாதங்களால் அந்தக் கதவை ஓங்கி ஒரு உதை விட்டான். தெய்வத் தன்மை வாய்ந்த இலக்குவனின் பாதம் பட்டு அந்தக் கதவும், கோட்டை மதிற்சுவரும், வாயிலையொட்டிய மலைகளும் நொறுங்கி வீழ்ந்தன. இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த வானரக் கூட்டம் அச்சம் தலைக்கேற மனம் கொதித்து விதிர்விதிர்த்துப் போனார்கள். மதிற்சுவர்களும், வாயிற்கதவும் நொறுங்கி வீழ்ந்த வேகத்தில், அச்சம் கொண்ட வானரக் கூட்டம் தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம் என்று தறிகெட்டு நாலா திசைகளிலும் ஓடத் துவங்கின. இப்படி வானரங்கள் அனைத்துமே கிஷ்கிந்தையை விட்டு ஓடிவிட்டமையால் அந்த இடம் நட்சத்திரங்கள் நீங்கிய வானத்தைப் போல வெறுமையாகக் காட்சியளித்தது.

கிஷ்கிந்தைக்குள் நுழைந்த இலக்குவன் நகரத்தின் வீதிகள் வழியாக கையில் வில் ஏந்தி வருகிறான். அங்கே மாளிகையில் அங்கதன் முதலானோர் தாரையிடம் 'இதோ இலக்குவன் வந்துவிட்டான்" என்று அச்சத்துடன் சொல்லி நடுங்கினார்கள். தாரை யோசித்தாள் என்ன செய்வது என்று. பெண்ணாகிய நான் அவன் முன் சென்றால் அந்தப் பெருந்தகை தலை நிமிர்ந்து பார்க்க மாட்டான். அவனுடைய கோபத்தையும் காட்ட மாட்டான் என்று எண்ணிக் கொண்டு அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து "நீங்களெல்லாம் இங்கிருந்து போய்விடுங்கள். நான் போய் அந்த வீரன் இலக்குவனிடம் நிலைமையை விளக்கிச் சொல்லுகிறேன்" என்று சொல்லிவிட்டு, மற்றவர்களை அவ்விடம் விட்டு நீங்கிப் போகச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் தனியளாய்ச் சென்றாள் தாரை.

அரச வீதிகளைக் கடந்து இலக்குவன், சுக்ரீவனுடைய அரண்மனை வாயிலை அடைந்தான். அப்போது எதிரே பெண்கள் கூட்டம் புடைசூழ 'மலைக்குல மயில்' தாரை சென்று இலக்குவன் முன் தோன்றினாள். பெண்கள் குழாத்தோடு தனக்கு முன்பாக தாரை வந்து தோன்றிய காட்சியை இலக்குவன் பார்க்கிறான். அவனது தாமரை வதனம், பெண்களைக் கண்டதும் ஏற்பட்ட நாணத்தால் சற்று தலை குனிந்தபடி, வில்லைத் தரையில் ஊன்றி நின்ற காட்சி 'மாமியர் கூட்டத்தின் நடுவில் நிற்பவன் போல கூசிக்கொண்டு நின்றான்' இலக்குவன். அப்போது இலக்குவனைப் பார்த்துத் தாரை சொல்கிறாள்:

"மைந்த! நாங்கள் எல்லையற்ற காலம் செய்த தவத்தின் பயனாக நீ எம் இல்லம் தேடி வந்திருக்கிறாய். நாங்கள் புனிதம் அடைந்தோம். யானை சேனை பரிவாரங்களுடன் வரவேண்டிய இளவரசனாகிய நீ, தனித்து எம் இல்லம் வந்தது, யாம் செய்த புண்ணியமே!".

இப்படிப் பேசியவளது முகத்தை இலக்குவன் பார்க்கவில்லை. குரல் இனிமை கொண்டு, பேசியவள் பெண் எனப் புரிந்து கொண்டான். அவன் சினம் குறைந்து அவளது ஒளி இழந்த முகத்தைத் தன் தலை நிமிர்ந்து பார்த்தான். அங்கே அவன் எதிரில், கைம்மைக் கோலத்தில் தாரை நிற்பதைக் கண்டதும், அவனது தாய்மார்கள் நினைவு வந்து விடுகிறது. ஆகா! என் தாய்மார்களும் இப்படித்தானே முகம் களையிழந்து கைம்மைக் கோலத்தில் இருப்பார்கள்? என்று நினைக்கிறான்.

அங்கே எதிரே தாரை நின்ற கோலம் அவனைச் சிந்திக்க வைத்துவிட்டது. தாரை மங்கல அணிகள் எதையும் அணியவில்லை, நறுமணம் வீசும் தேன் சொட்டும் மலர் மாலைகள் எதையும் அவள் அணிந்திருக்கவில்லை, குங்குமமும், சந்தனக் குழம்பும் அவள் பூசியிருக்கவில்லை, மேலாடையால் உடலைப் பூரணமாகப் போர்த்தி மூடியபடி அடக்கத்தோடு வந்து நின்ற அந்தத் தாயைக் கண்ட இலக்குவன் கண்கள் பனித்தன. என் அன்னை இருவரும் (இங்கே தன் தாய் கைகேயியை விட்டுவிட்டான்) இப்படித்தானே கைம்மைக் கோலத்தில், மங்கல தோற்றம் எதுவுமின்றி, களையிழந்து காட்சியளிப்பார்கள் என்று வருந்திய பிறகு தாரைக்குப் பதில் கூறலானான்.

"கார்காலம் முடிந்தவுடன் தன் சேனைகளையெல்லாம் ஒன்று திரட்டி, அவர்களை நாலா திசைகளிலும் அனுப்பி சீதாதேவியைத் தேடித் தருவேன் என்று இராமபிரானுக்கு அளித்த வாக்கை அருக்கன் மைந்தன் மறந்தனன் போலும். தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற சுக்ரீவன் என்ன செய்யப் போகிறான் என்பதைத் தெரிந்து கொண்டு வா என்று இராமபிரான் அனுப்ப நான் வந்திருக்கிறேன்" என்றான்.

அதற்குத் தாரை சொல்லுகிறாள், "ஐயனே! சிறியவன் தீமை செய்தால் சீற்றம் கொள்ள வேண்டாம். நற்குணங்கள் மிக்க நீ பொறுத்தருள்வாயாக! சுக்ரீவன் நீங்கள் செய்த உதவியையும் மறக்கவில்லை; தான் கொடுத்த வாக்கையும் மறக்கவில்லை. பல இடங்களுக்கும் தூதரை அனுப்பி படைகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் தாமதம் ஏற்பட்டுவிட்டது. நீங்கள் செய்திருக்கிற உதவிக்குப் பிரதி உபகாரம்கூட செய்யமுடியுமா என்ன?" என்றாள்.

"செம்மை சேர் உள்ளத்துக்கு உரியவர்களே! நீங்கள் செய்திருக்கக் கூடிய உதவி மறக்கக்கூடிய ஒன்றா? சுக்ரீவன் உங்களைப் புறக்கணிப்பானானால் இம்மையிலும், மறுமையிலும் அவன் வறுமை எய்தி அனைத்தையும் இழப்பான்" இப்படித் தாரை உரை செய்யவும், அது கேட்டு இலக்குவன் கருணை கொண்டு, தன் கோபத்துக்காக வெட்கப்பட்டுக் கொண்டு நின்றான். இந்த நேரத்துக்காகக் காத்திருந்தவனைப் போல அனுமன் அங்கே வந்து சேர்ந்தான்.

அனுமனைக் கண்டதும், கோபம் எழுந்த போதும், இலக்குவன் கோபத்தைக் காட்டாமல் கேட்கிறான், "கற்றுணர்ந்த மகா பண்டிதனாகிய நீயும் கூடவா சொன்ன உறுதி மொழிகளை மறந்தாய்?". அது கேட்ட சொல்லில் வல்லானான அனுமன் கூறுகிறான் "எந்தை போன்றவரே! நான் சொல்வதைச் சற்று கேளுங்கள்".

"ஐயனே! அழியாத அன்பையுடைய தாய் தந்தையரையும், குருவையும், தெய்வ அந்தணரையும், பசுக்களையும், பாலரையும், பெண்களையும் கொலை செய்தவர்களுக்குக் கூட பாவங்களை நீக்கிக் கொள்ள மார்க்கம் உண்டு. ஆனால் மறக்க முடியாத நன்றியறிதலை மறந்தவர்க்கு மார்க்கம் உண்டோ?".

"ஐய! உமக்கும் எம் அரசர்க்கும் நட்பு ஏற்பட வகை செய்தவனாகிய நானே அதனை சிதைக்குமாறு காரியங்களைச் செய்வேனா? எங்கள் தவத்தின் நற்பயன்களாகவும், தேவர்களும் மற்ற எல்லா வகை நன்மைகளும் தாங்களே என்ற எண்ணம்தான் எங்களிடம் குடிகொண்டிருக்கிறது. மூவுலகங்களையும் காக்கும் தங்கள் கருணை எங்களுக்கு இல்லையானால் எமக்கு ஏது வாழ்வு? கவிக்குல வேந்தன் சுக்ரீவன் தங்களுக்கு அளித்த வாக்கை மறக்கவில்லை. நாலாபுறமும் தூதர்களை ஏவி படைகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான்" என்றான் மாருதி. மாருதியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட இலக்குவன் சினம் தணிந்தான். அனுமனிடம் "உனக்கு ஒரு செய்தி சொல்கிறேன், கேள்! இராமபிரான் தேவியைப் பிரிந்ததனால் வருத்தமுற்று மனம் சோர்ந்து, கோபம் கொண்டிருக்கிறான். அதனால்தான் பழி நேரினும் அதற்காகக் கவலைப் படாமல் கோபம் கொண்டு இங்கே வந்தேன்" என்கிறான் இலக்குவன்.

பின்னர் அனுமன் இலக்குவனை சுக்ரீவனிடம் அழைத்துச் செல்கிறான். இலக்குவன் வரவை அங்கதன் போய் சுக்ரீவனிடம் சொல்லி அவனைத் தயார் செய்து வைத்திருக்கிறான். அதற்கு சுக்ரீவன் "நாம் எந்தத் தவறும் செய்யவில்லையே, பின் ஏன் இலக்குவர்க்குக் கோபம்?" என்று கேட்கிறான் சுக்ரீவன்.

அதற்கு அங்கதன் கூறுகிறான்:

"இயைந்த நாள் எந்தை நீ சென்று எய்தலை; செல்வம் எய்தி
வியந்தனை; உதவி கொன்றாய்; மெய்யிலை என்ன வீங்கி
உயர்ந்தது சீற்றம்; மற்று இது உற்றது செய்கை முற்றும்
நயம் தெரி அனுமன் வேண்ட நல்கினன் நம்மை, இன்னும்".

"நீ சொன்ன வார்த்தைப் படி சொன்ன நாளில் அவர்களிடம் போகவில்லை; உனக்குக் கிடைத்த செல்வச் செறுக்கில் உன்னை மறந்து கிடந்துவிட்டாய். செய்நன்றி மறந்து போனாய் என்று அவர்கள் உன் மீது கோபம் கொண்டிருக்கிறார்கள். நல்ல வேளை, சமயம் தெரிந்து நயம்பட பேசி அனுமன் அவர்கள் கோபத்தைத் தணித்திருக்கிறான்".

"இதை நீங்கள் ஏன் முன்பே என்னிடம் சொல்லவில்லை?" என்று கேட்கிறான் சுக்ரீவன்.

"நான் முன்பே இலக்குவனுடைய வருகையை உன்னிடம் தெரிவித்தேன். ஆனால் நீ அப்போது அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. மயங்கியிருந்தாய். எனக்கு வேறு என்ன செய்வதென்று புரியவில்லை, ஆகையால் மாருதியிடம் போய் சொன்னேன். அதன் பிறகுதான் தாய் தாரைக்குத் தெரிவித்து அவர் போய் இலக்குவனின் கோபத்தைத் தணித்தார். ஆகையால் நீ போய் உடனே இலக்குவனைப் பார்ப்பதுதான் நீ ஆற்ற வேண்டிய செயல்" என்றான் அங்கதன்.

"நான் நன்றி கொன்றவனைப் போல வாளாவிருந்து விட்டேனே. இராமனைப் பார்க்க வெட்கமடைகிறேன் என்றான்" சுக்ரீவன். பின்னர் அங்கதனை அனுப்பி இலக்குவனை அணுகி அழைத்து வர அனுப்பினான். இலக்குவனைத் தன் படை, பரிவாரங்கள் புடைசூழ நின்று வரவேற்றான் சுக்ரீவன். வானரப் பெண்கள் மலர்களைத் தூவியும், நறுமணப் பொடிகளைத் தூவியும், சாமரங்களைக் கொண்டு வீசியும் இலக்குவனை வரவேற்கின்றனர். சுக்ரீவன் இலக்குவனை வணங்கி அரண்மனைக்குள் அழைத்துச் செல்கிறான். அங்கே ஓர் அரியணையில் அமருமாறு இலக்குவனை சுக்ரீவன் வேண்ட, அவன் மறுத்துவிடுகிறான்.

"கல்மனம் படைத்த கைகேயி இராமனுக்கு ராஜ்யம் இல்லை என்றதும், மணிமுடி துறந்து எம்பிரான் புல் அணை வைக, நான் மட்டும் பூப்போன்ற மெல்லணை மேல் அமர்வதோ?" என்றான் இலக்குவன்.

இதைக் கேட்ட சுக்ரீவன் திகைத்துப் போய் நின்றான்; விம்மினான்; கண்களில் நீர் ஆறாய் பெருக நின்றான். இலக்குவன் கல் தரையில் அமர்ந்தான். சுக்ரீவன் இலக்குவனை நீராடி உணவு உண்ண அழைத்த போதும் இளவல் மறுத்தான்.

"பச்சிலை, கிழங்கு, காய் பரமன் நுங்கிய
மிச்சிலே நுகர்வது வேறு தான் ஒன்று
நச்சிலேன்; நச்சினேனாயின், நாய் உண்ட
எச்சிலே அது, இதற்கு ஐயம் இல்லையால்"

"இராமன் உண்ட பச்சிலை, கிழங்கு, காய் இவற்றில் மிச்சம் இருப்பதைத் தவிர தான் வேறு ஒன்றையும் உண்கிலேன். அப்படி நான் விரும்பினேனானால், அது நாய் உண்ட எச்சிலாகத்தான் இருக்கும்" என்று உறுதிபட கூறினான் இலக்குவன்.

இலக்குவனின் இந்த பதிலைக் கேட்ட சுக்ரீவன் விரைந்து எழுந்தான். கண்களில் நீர் பொங்கிக் கொண்டு வந்தது. செல்வமும், வாழ்க்கையும் அவனுக்கு வெறுப்பு ஏற்பட்டது, மனம் மிகவும் வருத்தம் கொண்டு, உடனே இராமபிரானிடம் செல்லக் கருதி அனுமனை அழைத்துக் கூறுகிறான், "நெறிவலோய்! முன்பு நாம் இட்ட கட்டளையின்படி வானர சேனையைத் திரட்ட சென்றிருக்கிற தூதர்களோடு இனி வரும் வானர சேனையையும், நீ உன்னோடு அழைத்துக் கொண்டு வந்து, இந்த இடத்திலேயே இரு!" என்று சொல்லிவிட்டு இராமன் இருக்குமிடம் சென்றான்.

அவனோடு அங்கதனும் உடன் செல்கிறான், வானரப் படைகள் பின்தங்கிப் போயின; சுக்ரீவன் மனதில் இராமனைக் காண வேண்டுமென்ற ஆவல், அவனை முன்னே இழுத்துக் கொண்டு செல்கிறது, இராமன் இருக்கும் மலை நோக்கி மிக விரைவாகச் செல்கிறான். காட்டிலிருந்த இராமனைக் காண வந்த பரதனைப் போல இப்போது சுக்ரீவன் மிக வேகமாக, ஆர்வத்தோடு வந்தான். அங்கு இராமனிடம் சென்று அவனை சுக்ரீவன் வணங்குகிறான். சுக்ரீவனுடைய க்ஷேமலாபங்களை இராமன் விசாரிக்கிறான். குணம் எனும் குன்றேறி நின்றார் வெகுளி என்பதால், அவர் உள்ளத்தில் கருணை பொங்கி வந்தது. இராமன் சுக்ரீவனைத் தன் அருகில் உட்கார வைத்து, நலம் விசாரித்தார். நின் அருள் பெற்ற எனக்கு என்ன குறை என்று சுக்ரீவன் பதில் சொல்லுகிறான்.

"அனுமன் எங்கே?" என்று இராமன் வினவினான். "படை திரட்டச் சென்ற தூதுவர்களை விரைவுபடுத்தி, படைகளோடு அவன் வந்து சேருவான்" என்கிறான் சுக்ரீவன். "நீயும் போய் உடன் இருந்து பெரும் படையைத் திரட்டிக் கொண்டு வா" என்று இராமன் அவனுக்கு விடை கொடுத்து அனுப்புகிறான். அங்கதனையும் அவனுடன் சென்றுவருமாறு அனுப்பி வைக்கிறான்.

வானரப் படைகள் ஒன்று சேரத் தொடங்கின. பல்வேறு திசைகளிலிருந்தும் வானர வீரர்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே வானரங்களாக இருந்த அந்த பெரும் படையை இலக்குவன் பார்வையிடுகிறான். அப்படி வந்து சேர்ந்த படைகளில் இருந்த பொறுக்கி எடுத்த தளபதிகளைப் பற்றிய விவரங்களைச் சற்று பார்க்கலாம்.

சதவலி எனும் வீரன் ஆயிரம் வலிமை கொண்ட படைத் தளபதிகளோடும், பதினாயிரம் கோடி வானரப் படைகளுடன் வந்து சேர்ந்தான். (ஐயிரண்டு ஆயிரம் கோடி என்றால் = 5x2x1000=10,000 கோடி படைவீரர்கள்) சுசேடணன், என்பவன் மேரு மலையைப் பிடுங்கி எடுக்கக்கூடிய வலிமையுள்ள பத்து லட்சம் கோடி குரங்குப் படையுடனும், சுக்ரீவனுடைய மாமனாராகிய தாரன் அதாவது ருமையின் தந்தை ஆறு எண்ணாயிர கோடி வானர படையுடனும் (தாரன் என்பவன் வியாழ பகவானின் மகன்) அனுமனின் தந்தையும், அஞ்சனையின் கணவனுமான கேசரி என்பான் ஐம்பது ஆய நூறாயிரம் கோடி பெரிய படையுடனும் (50 x 100,000 = 50 லட்சம் கோடி படை), சுவாட்சன் (கண்ணன்) என்பவன் ஈர் இரண்டு ஆயிரம் கோடி படையுடனும் (2 x 2000 = 4,000 கோடி படை), வராகம் போன்ற கரடி இனத் தலைவனான தூமிரன் இரண்டாயிரம் கோடி கரடிப்படையுடனும் (ஆயிரம் கோடியின் இரட்டியில் அதாவது 1000 x 2 = 2000 கோடி), பெரிய மலையைப் போன்ற உருவம் கொண்ட பனசன் என்பவன் பன்னிரெண்டாயிரம் கோடி படையுடனும், கொடிய கூற்றை ஒப்பும் வானர வீரனான நீலன் பதினைந்து கோடி நெடிய வானரப் படையுடனும், கவயன் எனும் வீரன் முப்பதினாயிரம் கோடி குரக்குச் சேனையுடனும், ஆறைந்து (30) கோடி குரங்குச் சேனையுடன் தரிமுகன் என்பவனும், ஆயிரத்து அறுநூறு கோடி பெரிய படையுடன் சாம்பன் என்பவனும், பகுத்த பத்து நூறாயிரம் பத்தியின் இரண்டு கோடி வெம்படையுடன் துன்முகன் என்பவனும், கோடி கோடி நூறாயிரம் எண்ணுள்ள படை கொண்டு துமிந்தன் என்பவனும், நூறு லட்சம் கோடி படைகளுடன் மைந்தன் கஜகோமுகன் எனும் வீரனும், ஒன்பது கோடி படை வீரர்களுடன் குமுதன் என்ற படைத் தலைவனும், ஐந்தாயிரம் கோடி சேனையுடன் அனுமனும், நூறாயிரம் கோடி சேனையுடன் நளன் என்பானும், கணக்கற்ற சேனை வெள்ளத்தோடு கும்பசங்கர் எனும் படைத்தளபதியும், இப்படிப் பற்பல வீரர்கள் தத்தம் படைகளுடனும் வந்து சுக்ரீவனை வணங்குகின்றனர். (இவர்களைப் பற்றி யுத்தம் தொடங்குவதற்கு முன்பாக இராவணனுக்கு ஒற்றனொருவன் தூரத்திலிருந்து அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியையும் யுத்த காண்டத்தில் காணலாம்).

இப்படி நாலா திசைகளிலிருந்தும் வந்து குவிந்த சேனை வெள்ளத்தைக் காண வருமாறு இராமனை சுக்ரீவன் வேண்டுகிறான்.

"ஐயனும் உவந்து அகம் என முகம் மலர்ந்து அருளித்
தையலாள் வரக் கண்டனனாம் எனத் தளிர்ப்பான்
எய்தினான் அங்கோர் நெடுவரச் சிகரத்தில் இருக்கை
வெய்யவன் மகன் பெயர்த்தும் அத்தானையின் மீண்டான்".

சுக்ரீவனின் அழைப்பைக் கேட்டு இராமபிரானின் முகம், அவனது உள்ளத்தைப் போலவே மலர்ந்தது. சீதாதேவியே நேரில் வந்துவிட்டது போல மனக்கிளர்ச்சியடைந்து, அங்கு ஒரு நெடிய மலையின் உச்சியை அடைந்து அந்தச் சேனையைப் பார்வையிட்டான். படையைப் பார்த்து இராமன் சுக்ரீவனிடம் வியந்து பேசுகிறான். இந்தப் படை எழுபது வெள்ளம் எனும் அளவுடையது என்று சுக்ரீவன் இராமனிடம் கூறுகிறான். உடனே, இராமன் இனியும் பேசிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. உடனே ஆக வேண்டிய காரியங்களைக் கவனிக்கலாம் என்றான், அனைவரும் அடுத்துச் செய்யப் போவது பற்றி ஆலோசிக்கக் கூடினார்கள்.

மதிராலோசனை நடக்கிறது. அங்கே முக்கியமானவர்கள் அனைவரும் கூடியிருக்கிறார்கள். சுக்ரீவன் சீதையைத் தேடுவதற்காக நாலா திசைகளுக்கும் வீரர்களை அனுப்புகிறான். மேற்கு திசைக்குச் சென்று எல்லா இடங்களிலும் சீதையைத் தேடும்படி இடபன் எனும் வீரனையும், சதவலி எனும் தளபதியை குபேரன் வாழும் வடதிசைக்கும், விந்தன் என்பவனை இந்திரனுக்குரிய கீழ்திசைக்கும் இரண்டு வெள்ளம் படைகளுடன் செல்லும்படி ஆணையிடுகிறான். பிறகு சுக்ரீவன் அனுமனை நோக்கி, "ஐய! நீ புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல் தவன வேகத்தை ஓர்கிலை, தாழ்த்தனை கவன மாக் குரங்கின் செயல் காட்டியோ?" என்கிறான். "அனுமனே! நீ உன் தந்தையாகிய வாயுபகவானைப் போல மூவுலகிலும் சஞ்சரிக்க வல்லவன். உன் ஆற்றலை வெளிக் காட்டுகின்ற சந்தர்ப்பம் இதோ வந்துவிட்டது. நீ போய் சீதாபிராட்டியை எங்கிருந்தாலும் தேடுக. பாதாளத்திலோ, பூமியிலோ, சுவர்க்க லோகத்திலோ எங்கிருந்தாலும் தேடிக் கொணர்க" என்றான்.

"இராவணன் தென் திசையில் இருக்கிறான். நீ அந்த தென் திசைக்குச் சென்று அரக்கர்களை வென்று, புகழ் பெற வேண்டும். உன்னையன்றி, வேறு யாரால், இந்தக் காரியத்தைச் செய்யமுடியும்? உனக்குத் துணையாக அங்கதனையும், ஜாம்பவானையும் அழைத்துச் செல். இரண்டு வெள்ளம் வானரப் படைகளையும் உன்னுடன் அழைத்துச் செல்."

"வள்ளல் இராமனின் தேவியை, அன்று இராவணன் கவர்ந்து சென்றது தென் திசை நோக்கித்தான். எனவே நீங்கள் இங்கிருந்து புறப்பட்டு தெற்கே செல்லுங்கள். அங்கே ஆயிரம் கொடுமுடிகளோடு திருமால் போன்று தோற்றமளிக்கும் விந்திய மலையை அடைவீர்கள். (திருமாலுக்கு ஸஹஸ்ர ஸீரிஷ புருஷ: என்று புருஷ ஸூக்தத்தில் வருகிறது). அந்த மலையில் தேடிய பிறகு, தேவர்களும் வந்து நீராடுகின்ற நர்மதா நதி தீரத்தை அடைவீர்கள். பிறகு அங்கிருந்து சென்று ஹேமகூட பர்வதத்தைச் சென்றடைவீர்கள். அந்தப் பிரதேசத்தை விரைவாகக் கடந்து பெண்ணை நதிக் கரையை அடைந்து அங்கும் நன்கு தேடிப் பார்த்தபின், தொடர்ந்து தெற்கு நோக்கிச் செல்லுங்கள்."

"பிறகு ஆத்தி, அகில், சந்தன மரங்கள் நிறந்த விதர்ப்ப தேசத்தையடைந்து, அங்கிருந்து தண்டகவனத்தைச் சென்றடைவீர்கள். அதன் பிறகு அகத்திய முனிவர் வாழ்ந்த முண்டகத் துறையை அடைவீர்கள். தண்டகாரண்யத்தில் இருக்கிறது இந்த இடம். அங்கு செல்லுங்கள். அந்த முண்டகத்துறை மரங்கள் எல்லாம் இனிய கனிகளை எக்காலத்திலும் தரவல்லவை. அவ்விடத்தையும் கடந்து சென்றால், தொடுவானத்தருகே செவ்வானத்தில் பயணிக்கும் கதிரவனும் தங்கிச் செல்ல விரும்புகின்ற பருப்பதம் எனப்படும் பாண்டு மலையை அடைவீர்கள்".

"அங்கிருந்து மேலும் தெற்கே சென்றால் ஓர் புனிதமான ஆறு, அதன் பெயர் கோதாவரி என்பது, அந்த நதி தீரத்தைச் சென்றடைவீர்கள். பிரம்மாண்டமான அந்த ஆற்றைக் கடந்து அப்புறம் சென்றால் சுவணை எனும் நதி (சோனை) வரும். அதற்கும் அப்பால் சந்திரகாந்த மலையும், பின் பற்பல நாடுகளும் குறுக்கிடும். அவற்றையெல்லாம் கடந்து சென்றால் ஆதிசேஷன் பறவைகளுக்கு அஞ்சி மறைந்து வாழும் கொங்கணமும், குலிந்த தேசத்தையும் அடைவீர்கள்."

"இவற்றையெல்லாம் தாண்டி வரண்ட மலைப் பிரதேசங்களையெல்லாம் கடந்து சென்றால், திருவேங்கடமலை வந்து சேரும். அங்கு இருவினைகளையும் தீர்க்கும் மகாத்மாக்கள் வாழ்கின்றனர். அவர்களை எங்கிருந்தும் தொழுதுகொள்ளலாம். அந்த மலையை அடைந்தவுடனே உங்கள் பாவமெல்லாம் நீங்கி முக்தியடைவீர்கள்."

"இந்த இடங்களையெல்லாம் கடந்து சென்ற பிறகு தொண்டை நாடு வரும். அங்கிருந்து தொடர்ந்து பயணித்தால், பொன்னி நதி பாயும் காவிரி வளநாட்டைச் சென்று அடைவீர்கள். அங்கிருந்து மேலும் பயணம் செய்து மலைநாட்டை அடையுங்கள். அங்கெல்லாம் பிராட்டியைத் தேடிய பிறகு தென் தமிழ் நாடாம் பாண்டிய நாட்டை அடையுங்கள்".

"பாண்டிய நாட்டின்கண் உள்ள பொதிய மலையைச் சென்றடைவீராயின், அங்கே அகத்திய முனிவரின் தமிழ்ச் சங்கத்தைக் காண்பீர்கள்! அந்த மலையை வலங்கொண்டு சென்றால், பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திருநதியைக் காண்பீர்கள். அங்கு யானைகள் நிறைந்த மயேந்திரம் எனும் பெரிய மலையையும், அதன் அண்மையில் கடலும் காண்பீர்கள்".

"இப்படி எல்லா இடங்களிலும் தேடிய பிறகு ஒரு மாத காலத்துக்குள் இங்கு வந்து சேர வேண்டும். தாமதமின்றி விடைபெற்றுக் கொண்டு புறப்படுங்கள்" எனக் கூறினான் சுக்ரீவன்.

அப்போது இராமபிரான் அனுமனை அன்போடு நோக்கி "நீதி வல்லவனே! நீ சீதையைக் காண்பாயானால், அவள்தான் சீதை எனத் தெளிவதற்காக அவளது அங்க அடையாளங்கள் சிலவற்றை உனக்குச் சொல்லுகிறேன். கேட்பாயாக! என்று அனுமனைத் தனியே அழைத்துச் சென்று கூறலானான்.

இராமபிரான் அனுமனிடம் கூறுகிறார், "ஐய! சீதையின் மெல்லிய கால்களின் விரல்கள், பாற்கடலிற் பிறந்த சிறந்த பவளங்கள் போன்றவை. செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்து, அவற்றின் மேற்புறத்தில் சந்திரர்களைப் பதித்தது போல அமைந்திருக்கும். தாமரை மலரோ, பிற பொருட்களோ அவள் பாதங்களுக்கு இணையாகமாட்டா!" இப்படி பாதாதி கேசம் சீதையின் அங்கங்களை வர்ணித்து அனுமனிடம் சொல்லுகிறான். இராமன் அனுமனிடம் மேலும் முன்பு நடந்த சில நிகழ்ச்சிகளை நினைவூட்டி சீதையிடம் கூறும்படி சொல்லி அனுப்புகிறான்.

முன்பு இராமன் மிதிலைக்குச் சென்ற போது மாடத்தில் நின்று கொண்டிருந்த சீதையைக் கண்டதும் அப்போது ஒருவரை ஒருவர் கண்ணோடு கண் நோக்கிய செய்தியைக் கூறுகிறான். அரசவையில் இராமன் சிவதனுசை முறித்துவிட்டான் என்ற செய்தி அறிந்ததும், தான் கன்னி மாடத்தில் நின்று கொண்டு கைவில் ஏந்தி முனிவரோடு வந்தவன்தான் முறித்திருக்க வேண்டும், இல்லையேல், என் உயிரை விடுவேன் என்று சீதை நினைத்த செய்தியை அவளுக்கு உரைப்பாயாக என்றும் கூறுகிறான். ஜனகன் சபா மண்டபத்தில் சீதை வந்தபோது மின்னல் கொடி போன்றவளைப் பார்த்ததை சீதையிடம் உரைப்பாயாக என்றான்.

நான் காட்டுக்குப் புறப்பட்டபோது, தானும் உடன் வருவதாகக் கூறியபோது, இதுகாறும் என் சுகங்களில் பங்கு கொண்ட நீ, இனி துன்பம் தருபவளாக ஆக நினைத்தாயோ என்று நான் கூறியதை அவளிடம் நினைவு படுத்து என்கிறான். அதற்கு சீதாபிராட்டி என்னைத் தவிர மற்ற யாவும் இன்பம் தருபவையோ என்று சினந்து கூறியதையும் நினைவு படுத்துவாயாக. சீதையோடும் தான் கானகம் புறப்பட்டபோது, அயோத்தி நகரக் கோட்டையைத் தாண்டும்போதே, கானகம் வந்து விட்டதோ எனக் கேட்ட அவளது பேதமையைச் சுட்டிக் காட்டுவாயாக.

(இதே போன்று சிலப்பதிகாரத்திலும், கோவலன் கண்ணகி இருவரும் மதுரை செல்வதற்காக பூம்புகாரை விட்டுப் புறப்பட்டவுடனே, மதுரை வந்துவிட்டதா என்று கண்ணகி கேட்ட பேதமையையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்).

No comments:

Post a Comment

Please give your comments here