Tuesday, May 18, 2010

2. அயோத்யா காண்டம்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
2. அயோத்யா காண்டம்.

மிதிலையில் ஸ்ரீ இராமன் சீதாபிராட்டி திருமணம் நடைபெற்று முடிந்த பிறகு, தசரத மன்னனும் பரிவாரங்களும் அயோத்திக்குத் திரும்பினர். பரதனின் பாட்டனார் கேட்டுக் கொண்டபடி, தசரதன் பரதனை கேகய நாட்டுக்கு சத்ருக்னனுடன் அனுப்பி வைக்கிறான். இந்த நிலையில் தசரதன் ஒருநாள் முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது, காதோரம் ஒரு நரைமுடி இருப்பதைக் கண்டு விடுகிறான். ஓ! தனக்கு முதுமை வரத் துவங்கி விட்டது. ராஜ்ய பாரத்தைத் தன் மகன் இராமனிடம் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, தனது மந்திராலோசனை சபையைக் கூட்டுகிறான்.

மந்திராலோசனை சபை கூடியது. குலகுருவான வசிஷ்டர் வந்து சேருகிறார். தொடர்ந்து அமைச்சர்கள் வந்து சேருகின்றனர். வந்த அமைச்சர்கள் முதலில் வசிஷ்ட முனிவரையும் பிறகு தசரத மன்னனையும் வணங்கித் தத்தம் ஆசனங்களில் அமர்கின்றனர். மந்திராலோசனை தொடங்குகிறது. முதலில் தசரதன் தனது உள்ளக்கிடக்கையை அமைச்சர்களுக்கும் மற்றவர்களுக்கும் உணர்த்தும் விதத்தில் பேசத் துவங்குகிறான்.

"சூரிய குலத் தோன்றல்களான என் மூதாதையர்கள் வழியில் அறுபதினாயிரம் ஆண்டுகள் ராஜ்ய பாரத்தை முறையாக என் தோளில் தாங்கி வந்தேன். இதுவரை அறவழியில், இந்த பூமியின் உயிர்களுக்காகப் பற்பல நன்மைகளைச் செய்து வந்தேன். இனி எனது உயிர்க்கு நன்மைதரும் செயல் குறித்து யோசித்து அதன்படி நடக்க விரும்புகிறேன். எனக்கு முதுமை வரத் துவங்கிவிட்டது என்பதை கவனித்தேன். இனியும் இந்த ராஜ்ய பாரத்தை என்னால் சுமக்க முடியாது. எனக்கு அந்த வலிமையும் குறைந்து வருகிறது. எனது முன்னோர்கள் ஆட்சிப் பொறுப்பைத் தங்கள் பிள்ளைகளிடம் ஒப்படைத்துத் தவம் இயற்றக் கானகம் சென்றது போலவே, நானும் செய்ய விரும்புகிறேன். நாட்டில் உள்ள பகைகளை வென்ற நான், இனி என் உள்ளத்தில் இருக்கும் பகைகளான காமம், வெகுளி முதலான எதிரிகளையும் தவம் எனும் ஆயுதம் கொண்டு வெல்ல விரும்புகிறேன்."

"நெடுங்காலம் மகப்பேறு இல்லாமல் வருந்தியிருந்தேன். என் மனக் குறை நீங்கிட இராமன் வந்து அவதரித்தான். இனி இந்தப் புவி பாரத்தை இராமன் தாங்கி வருந்தவும், நான் இதனின்றும் தப்பி ஈடேறிப் போகவும் விரும்புகிறேன். மூப்படைந்த பிறகும், நானே ஆட்சி செய்தால், பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் இருக்கிறேன் என்ற அவப்பெயர் எனக்கு வரும். எனவே, நான் இராமனிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு, பிறவி நோய்க்கு மருந்தான தவ வேள்வியைத் தொடங்க விரும்புகிறேன். அமைச்சர்களே! உங்கள் கருத்து என்ன?" என்று அமைச்சர்களை நோக்கி வினவினான் தசரதன்.

இதனைக் கேட்ட மந்திரக் கிழவர்களுக்கு இராமனுக்கு ராஜ்யம் என்றதும் மகிழ்ச்சியும், தசரதன் பிரிவு எனும் துக்கத்தையும் அடைந்தனர். இரண்டு கன்றுகளையுடைய பசு, ஒரு கன்றினைப் பிரிய நேரும்போது எதையும் பிரிய மனமின்றி தவிப்பது போல தவித்தனர். தசரதன் பிரிவு வருத்தத்தைத் தருவது என்றாலும், அவன் மறுமைக்குத் தவம் செய்வது அவசியம் என்பதாலும், மன்னுயிர்க்கெல்லாம் இராமனைப் போன்ற ஓர் அரசன் கிடைப்பது என்பது அரிது என்பதாலும், விதியின் வழியே அனைத்தும் நடக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்பியதாலும், அமைச்சர்கள் தசரதன் விருப்பத்திற்கு சம்மதித்தார்கள்.

அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து வசிஷ்டர் பேசத் துவங்கினார்: "தசரதா! முன்பு உன் முன்னோர்கள் ஆக்ஞா சக்கரத்தைச் செலுத்தி பெருமை கொண்ட மன்னர்களில், இராமனை மகனாகப் பெற்ற உன் பெருமைக்கு ஈடாக யாருக்குக் கிடைத்தது? அறம் உணர்ந்தவர்கள் செய்ய வேண்டிய செயலையே நீ செய்யத் துணிந்திருக்கிறாய். இராமன் நெறி தவறாமல் உன்னைப் போலவே சிறப்பாக ஆட்சி புரிவான். மும்மூர்த்திகளில் ஒருவனே இராமனாக வந்து பிறந்திருப்பதால், அவனால் ஆகாதது ஒன்றுமில்லை. மக்களும் தாங்கள் பருகும் நீரைக் காட்டிலும், தம் உயிரைக் காட்டிலும் இராமனை மகிழ்வோடு ஏற்பார்கள். எனவே உன் எண்ணப்படியே, இராமனுக்கு முடி சூட்டலாம்" என்றார்.

வசிஷ்டரின் வார்த்தைகளைக் கேட்ட தசரதன், தான் இராமனை மகனாகப் பெற்றபோது மகிழ்ந்ததைக் காட்டிலும், மிதிலையில் இராமன் சிவதனுசை ஒடித்தபோது மகிழ்ந்ததைக் காட்டிலும், பரசுராமனின் கர்வத்தை ஒழித்த அந்த நாளைக் காட்டிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். வசிஷ்டரின் மொழிகேட்டு தசரதன் கண்களில் நீர்மல்க, குருவின் பாதங்களில் நமஸ்கரித்து "ஐயனே! தாங்கள் காட்டிய நல்வழியிலே நான் ராஜ்ய பாரம் தாங்கியதைப் போலவே, இராமனுக்கும் தாங்களே வழிகாட்டியாக இருக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டான்.

அமைச்சர் சுமந்திரன் எழுந்து "இராமனுக்கு அரசுரிமை என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி எனினும், உனது பிரிவு என்பது எங்கள் உள்ளங்களைச் சுட்டெரிக்கின்றது. ஆயினும் உங்கள் குலதர்மப்படி நீ செய்யும் இந்தச் செயல் அறவழிப்பட்டதே" என்றான்.

தசரதன் சுமந்திரனிடம் "நன்று சொல்லினை, இனி இராமனுக்கு முடிசூட்டுவது குறித்து ஆகவேண்டிய காரியங்களைக் கவனிப்போம். நீயே போய் லக்ஷ்மி மணாளனான ஸ்ரீ இராமனை இவ்விடம் அழைத்து வா" என்றான். இவ்வுரை கேட்ட சுமந்திரன் மன்னனை வணங்கி விடைபெற்று, பொற்தேர் ஏறி, இராமனை அழைத்துவர, அவன் திருமாளிகைக்குச் சென்றான்.

அங்கே இராமன் தம்பி இலக்குவனோடும், சீதாபிராட்டியோடும் அமர்ந்திருக்கக் கண்டு, வணங்கி "இராமா! சக்கரவர்த்திக்கு உன்னிடம் ஒரு காரியம் இருக்கிறது, உடன் வருவாயாக!" என்று சொன்னவுடன் தாமரைக் கண்ணனான ஸ்ரீ இராமன் ஒரு மேகம் நடந்து செல்வது போல நடந்து சென்று தேரிலே ஏறிக்கொண்டான்.

இராமன் தேர் ஓட்டிச் சென்ற வீதிகளில், மகளிர் விரகத்தால் சிந்திய மலர்களும், உடல் வெப்பத்தால் காய்ந்த மலர்களும் கிடந்தன. இவை, இராமனுக்கு பின்னால் விளையப்போகும் காரியத்தை நினைவூட்டுவது போல அமைந்தது. இலக்குவனுடன் இராமன் வந்து தசரதனைத் தொழுதவுடன் அவனைத் தன் மார்புறத் தழுவினான் மன்னன். இது என்ன? தசரதன் தான் தாங்கி வந்த புவி பாரத்தைத் தாங்கக்கூடிய தோள்வலியும், புயவலியும் தன் மகன் இராமன் பெற்றிருக்கிறானா என்று தன் தோளோடு அவன் தோளை வைத்து அளந்து பார்க்கிறானோ? சுவையான காட்சி, அதை கம்பர் வாக்கால் பார்ப்போம்.

"நலங்கொள் மைந்தனைத் தழுவினன் என்பது என்? நளிநீர்
நிலங்கள் தாங்குறும் நிலையினை நிலையிட நினைத்தான்
விலங்கல் அன்ன திண்தோளையும் மெய்த்திரு இருக்கும்
அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான்".

இராமனைத் தன் அருகில் அமர்த்திக் கொண்டு "இராமா! உன்னிடம் நான் கேட்டுப் பெற வேண்டியது ஒன்று உண்டு. எனக்கு முதுமை வந்துவிட்டது. ராஜ்ய பாரம் எனக்குச் சுமையாக இருக்கிறது. இதிலிருந்து விடுபட்டு தவநெறி மேற்கொள்ள நீதான் எனக்கு உதவி புரிய வேண்டும்" என்றான் தசரதன்.

"நமது முன்னோர்களும் உரிய காலத்தில் ராஜ்ய பாரத்தைத் தன் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டுத் தவம் செய்யச் சென்றிருக்கிறார்கள். இராமா! நான் செய்த தவப் பயனாய் நீ எனக்குப் பிள்ளையாய் வந்து பிறந்திருக்கிறாய். நீயே இந்த ராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்! உன் மீது பாரத்தைச் சுமத்துவதாக எண்ணாதே! இதுதான் நல் அறம் என்பதைக் கருதி ஏற்றுக் கொள்வாயாக!" என்றான் தசரதன்.

தந்தை கூறிய அனைத்தையும் கேட்டுக்கொண்ட ஸ்ரீ இராமன் அவன் கூறுவதே அறம் என்று உணர்ந்து அடக்கத்தோடு அவன் சம்மதத்தைக் குறிப்பால் உணர்த்தினான். தசரதன் மகனைத் தழுவி ஆசீர்வதித்து அனுப்பினான்.

உடனே முடிசூட்டுவிழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி உத்தரவுகளைப் பிறப்பித்தான். வசிஷ்ட முனிவர் அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கப் புறப்பட்டுப் போனார். எல்லா நாட்டு அரசர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அனைத்து அரசர்களும் வந்து கூடினார்கள். அவர்களிடம் தசரதன் "நான் துறவு உள்ளம் கொண்டமையால், இராமன் என் புதல்வன் என்று அவனிடம் நான் உரிமை கொண்டாடமுடியாது. அவனை உங்களிடம் ஒப்புவித்து விட்டேன். இனி அவன் உங்கள் புதல்வனாகக் கருதி உரியன செய்வீர்களாக! என்றான்.

இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்ற செய்தி மக்களிடம் பரவியது. கேட்க வேண்டுமா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு. செய்தி கேட்டமாத்திரத்தில் ஆங்காங்கே மக்கள் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதமாக தாறுமாறாக தாளகதியின்றி ஆடுகிறார்கள். குரல் வளம் இல்லாதவர்கள்கூட உரத்த குரலெடுத்துப் பாடுகிறார்கள். ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து கரம் கோர்த்து மகிழ்கின்றனர், இராமனைப் பெற்ற பாக்கியவதியான கோசலையிடம் இந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல்ல வேண்டுமாம், ஓடுகின்றனர் அவள் இருக்கும் மாளிகை நோக்கி.
அங்கே போய் கோசலையிடம் இந்தச் செய்தியைச் சொல்கின்றனர். இராமனுக்கு மகுடம் என்பது மகிழ்ச்சியான செய்திதான், ஆனால் தசரதன் தவம் செய்யப் போவது என்பது பிரிவு அல்லவா? அந்த எண்ணம் துன்பத்தையும் கொடுக்கிறது.

தனது குல தெய்வத்துக்கு பூஜை செய்துவிட்டு, மக்களுக்குத் தான தருமங்களைச் செய்கிறான் தசரதன். பசுக்களையும், பொன்னையும் சிறந்த இரத்தினங்களையும் தானமாகக் கொடுக்கிறான். வந்தவர்கள் அனைவருக்கும் சாப்பாடு போட்டு, புதிய வஸ்திரங்களையும் தானமாகக் கொடுக்கிறான்.

"என் வயிற்றில் உதித்த ஸ்ரீ இராமன், இனி உன்னவன், அவனுக்கு எல்லா நலன்களும் அருளுதல் உன் கடனே" என்று குலதெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறான். தனது அரண்மனை ஜோசியரை வரவழைத்து, அவரிடம் கலந்து ஆலோசித்து முடிசூட்டு விழாவிற்கு ஒரு நல்ல நாளைப் பார்க்கிறான். அந்த ஜோசியர் "நாளையே நல்ல நாள்" என்று கூற, மன்னன் மகிழ்ச்சியடைகிறான். வசிஷ்டரை அழைத்து உடனே முடிசூட்டுவிழாவிற்கான விரதம் முதலான காரியங்களைத் தொடங்கச் சொன்னான்.

இராமனிடம் செய்தி சொல்வதற்காக வசிஷ்டர் அவன் இருக்கும் மாளிகைக்குச் சென்று அவனிடம் விவரங்களைக் கூறினார். பிறகு அவனிடம் அரசு ஆளும் முறை பற்றியும், அவன் கடைப்பிடிக்க வேண்டிய பற்பல நீதிகளையும் உபதேசிக்கிறார். இனி அவன் குழந்தை அல்ல, இந்த நாட்டை ஆளப்போகும் மன்னன் அல்லவா? குலகுருவான வசிஷ்டர் செய்ய வேண்டிய கடமையல்லவா இது?

வசிஷ்டர் சொல்கிறார்: "இராமா! நான் சொல்லும் அறவழிகளை நன்கு கேட்டு அதன்படி நடந்துகொள். நீ வேத சாஸ்திர் விற்பன்னர்களைப் பேணி பாதுகாத்து அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும்; ஏன் தெரியுமா? அவர்கள் முப்பெரும் தேவர்களைக் காட்டிலும், பஞ்ச பூதங்களைக் காட்டிலும், மெய்ப்பொருளைக் காட்டிலும் உயர்ந்தவர்கள். இந்த இடத்தில் "புறநானூற்று"ச் செய்யுள் ஒன்றில் குறிப்பிடப்படும் சோணாட்டுப் பார்ப்பான் கெளணியன் விண்ணந்தாயன் எனும் வேத விற்பன்னர் 24 வகையான யாகங்களைச் செய்து, செல்வங்கள் எல்லாம் பெற்று வாழ்ந்ததும், அவரைப் புலவர்கள் பாடிப் பரிசில்கள் பெற்ற வரலாற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்வோம்."

"கடும் சொற்களைப் பேசுவதை அறவே நீக்கிவிடு! நீதி நூல்கள் காட்டும் பாதையில் நீ நடக்க வேண்டும். எவருடனும் பகைமை கொள்ளாதே! பகைமையை நீக்கிவிட்டால் போர் செய்ய வாய்ப்பில்லை, அப்படி ஒரு நிலைமை வந்தாலும் போர் செய்யாதே! நடுநிலையோடும், மன உறுதியோடும் ஆட்சி செய்! நல்லோர் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நட! குடிமக்கள் உயிர் என்றால், அதனைத் தாங்கும் உடலாக நீ இரு!."

"இன்சொல்லே பேசு! ஈகையுடன் இரு! உள்ளும் புறமும் தூயவனாக இரு! வினைத்திட்பம் உடையவனாக இரு! உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிரு! எப்போதும் வெற்றியோடு இரு! அரச நீதி தவறாமல் ஆட்சி செய்!. நல்லொழுக்க வழியில் நடப்பாயாக! நடுநிலையாளனாக இரு! ஆசைகளை விட்டொழி! குறிப்பாகப் பெண்ணாசை அழிவைத் தரும் என்பதால் அவ்வெண்ணத்தை அடியோடு விடு! இவ்வாறு பற்பல நீதிகளை வசிஷ்டர் இராமனுக்கு உபதேசித்தார்.

பிறகு இராம பிரானுக்குச் செய்ய வேண்டிய பூர்வாங்க சடங்குகளைச் செய்விக்கிறார். புண்ணிய தீர்த்தமாடி, தர்ப்பாசனத்தில் அமர்ந்து நோன்பு நோற்று, தியானத்தில் அமர்கிறான் இராமன்.

மன்னன் நகர் முழுவதும் முரசு அறைந்து நாளைக்கு இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்று அறிவிக்கிறார்.

"ஏவின வள்ளுவர் 'இறைவன் நாளையே
பூமகள் கொழுநனாய்ப் புனையும் மெளலி! இக்
கோநகர் அணி' கெனக் கொட்டும் பேரி அத்
தேவரும் களிகொளத் திரிந்து சாற்றினார்"

இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்ற செய்தி கேட்டவுடன், அயோத்தி நகரத்து மாந்தர் அனைவரும் கிடைத்தற்கரிய தேவாமிர்தம் பெற்று உண்டவர்கள்போல் பெருமகிழ்ச்சி கொண்டனர். அதன் விளைவாக நடந்தது என்ன?

"ஆர்த்தனர்; களித்தனர்; ஆடிப் பாடினர்;
வேர்த்தனர்; தடித்தனர்; சிலிர்த்து மெய்ம்மயிர்
போர்த்தனர்; மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்
தூர்த்தனர் நீள் நிதி சொல்லினார்க் கெலாம்".

இராம பட்டாபிஷேகச் செய்தியைச் சொன்னவர்களுக்கெல்லாம் நிதியை வாரி வாரி வழங்கினராம் அயோத்தி மக்கள். நகரம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டது. பல நிறக் கொடிகள் கட்டப்பட்டன. நகர மாந்தர் தத்தம் வீட்டு நிகழ்ச்சியைப் போல எண்ணி பந்தல், தோரணம், வாழை, கமுகு கட்டி அலங்கரித்து மகிழ்ந்தனர். அயோத்தி நகர் தேவலோகம் போல காட்சி அளித்தது.

அப்போது நகரில் நடக்கும் ஆரவாரங்களைக் கேட்டு, கைகேயியின் தாதியும், உடலில் கூன் விழுந்த தோற்றமுடைய மந்தரை எனும் பெயர் கொண்ட 'கூனி', என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக வெளியே வந்தாள்.

"அந்நகர் அணிவுறும் அமலை வானவர்
பொன்னகர் இயல்பென பொலியும் எல்வயில்
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்
துன்னரும் கொடுமனக் கூனி தோன்றினாள்".

இந்தக் கூனியால் விளையப் போகும் தீமைகளைக் கருத்தில் கொண்டு, கொடுமனக் கூனி என்றும், இறுதியில் இராவணன் வதம் செய்யப் படுவதற்கு இவள் செய்யும் சூழ்ச்சியே காரணமாக இருக்கப் போகிறது என்பதைக் காட்டும் விதத்தில், இராவணன் இழைத்த தீமைபோல் இந்தக் கூனி தோன்றினாள் என அவளை கம்பர் பெருமான் நமக்கு அறிமுகம் செய்விக்கிறார்.

அங்கு வந்து சேர்ந்த கூனி இருக்கிறாளே, இவள் எப்படிப் பட்டவள்? மூவுலகங்களுக்கும் தனது செயலால் துன்பம் மூட்டுவாள். இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்ற செய்தியைக் கேட்டவுடன் நெஞ்சு துடித்து வருந்தினாள். தாங்கொணாக் கோபம் கொண்டாள்; மனம் சஞ்சலமடைந்தாள்; சினத்தால் கண்கள் தீயினை உமிழ்ந்தன.

"தோன்றிய கூனியும் துடிக்கும் நெஞ்சினள்
ஊன்றிய வெகுளியாள்; உளைக்கும் உள்ளத்தாள்
கான்று எரி நயனத்தாள்; கலிக்கும் சொல்லினாள்;
மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள்".

இவளுக்கு ஏன் இவ்வளவு கோபம்? ஆத்திரம்? இராமன் மீது ஏன் இவ்வளவு பொறாமை? காரண்ம் இருக்கிறது. முன்பொரு நாள் இராமன் சிறுவனாக இருந்த போது, தன் வில்லில் மண் உருண்டைகளை வைத்து இந்தக் கூனியின் கூன்விழுந்து வளைந்த முதுகில் அடித்ததைத் தன் ஆழ்மனத்தில் இருத்தி வருந்திக் கொண்டிருந்தாள். எனவே அவன் மீது கொண்டிருந்த ஆத்திரத்தால், அவனுக்குப் பட்டாபிஷேகம் என்ற செய்தியைக் கேட்டவுடன் அவளுக்கு மிகுந்த கோபத்தை உண்டு பண்ணுகிறது. தன் எஜமானியான கைகேயியிடம் விரைந்து செல்கிறாள்.

இராவண சம்ஹாரத்திற்காக, இந்தக் கூனி தேவர்களால் அனுப்பப்பட்டதாக ஆழ்வார் பாசுரங்கள் குறிப்பிடுகின்றன. கைகேயி தனது மாளிகையில் பட்டு மெத்தையில், கடைக்கண்கள் அருள் பொழிய திருப்பாற்கடலில் கிடக்கும் பவளக்கொடிபோல படுத்திருந்தாள். சில கோள்களின் ஆதிக்கம் தீமைகளை விளைவிக்கும். அதுபோன்ற ஒரு தீய கிரகமாக கூனி கைகேயியைத் தொட்டு எழுப்பினாள். கூனியின் கை பட்டதும் விழித்துக் கொண்ட கைகேயி, அரைத் தூக்கத்தில் எழுந்து "என்னடீ?" என்று கேட்கக் கூனி புலம்பத் தொடங்கினாள்.

"அடியே கைகேயி! ராகு தன்னைப் பிடிக்க வரும்போதும் தன் தண்ணொளியைப் பரப்பி நிற்கும் சந்திரன் போல, உன்னைத் தேடிவரும் தீமை தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாயே! எழுந்திரு" என்றாள்.

"என்னடி துன்பம் எனக்கு? என்ன துன்பம் நேர்ந்தாலும் அவைகளைப் போக்க வல்ல என் மக்கள் நால்வரும் இருக்கும்போது எனக்கு என்னடி கவலை? உலகத்தில் நல்ல புதல்வர்களைப் பெற்றவர்கள் இம்மையில் மட்டுமல்ல, மறுமையிலும் நற்கதி பெறுவர். அதிலும் இராமனே மகனாகப் பெற்ற எனக்கு என்னடி தீமை வந்துவிடும்?" என்றாள் கைகேயி.

"போடி அறிவற்றவளே! உனக்கு வரும் நன்மைகள் அனைத்தும் தொலைந்து போயிற்று. உன் செல்வம் அனைத்தும் அழிந்து போயிற்று. புத்திசாலியான கோசலை, தன் புத்தியால் வாழ்கிறாள்" என்றாள் கூனி.

"தசரதனைக் கணவனாகவும், பரதனை மகனாகவும் பெற்ற மகராசி கெளசலைக்கு இதைவிட என்ன மேம்பட்ட வாழ்வு கிடைத்துவிடும்? என்று கூனி கூறவரும் செய்தி அறியாத நல்லமன கைகேயி பதிலளித்தாள்.

இராமனைத் தன் மகன் என்றும், பரதனைக் கோசலையின் மைந்தன் எனவும் எண்ணி வளர்த்து வந்த பாங்கும், பரந்த குணமும், நல்லெண்ணமும் இந்தக் கூற்றின் மூலம் விளங்குகிறது அல்லவா? சில பெண்கள் தன் கணவனுடைய தங்கையிடம் பேசும் போது, என் புருஷன் என்று சொல்லாமல் "உன் அண்ணன்" என்று குறிப்பிடுவார்கள், அதைப் போலவும் கைகேயி சொன்னாளோ என்னவோ?

"தாடகை என்ற பெண்ணைக் கொன்று ஆண்கள் எல்லாம் பரிகசிக்கும்படியாகவும், வீரம் மாசு படும்படியாகவும், தன் கையில் வில் ஏந்தி நிற்கும் இராமன் நாளை முடிசூட்டிக் கொள்ளப் போகிறானாம்" என்றாள் கூனி.

"இப்போது புரிகிறதா கோசலைக்கு வாழ்வு வந்திருக்கிறது என்று?"

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கைகேயியின் மனம் ஆனந்தக் கூத்தாடியது. "இராமனுக்கு முடிசூட்டு விழாவா? என் கண்மணி இராமனுக்கா?" கண்களில் மகிழ்ச்சி பொங்க, உள்ளம் களிப்பில் கூத்தாட "நல்ல செய்தி கொண்டு வந்த உனக்கு இந்தா இந்த மணிமாலை" என்று ஒரு விலை மதிக்க முடியாத இரத்தின ஹாரத்தைப் பரிசாக அளித்தாள்.

கைகேயி வருந்துவாள் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, இப்படி ஆனந்தக் கூத்தாடியது கண்டு கூனிக்கு ஆத்திரம் வந்தது. கூச்சலிட்டாள்; கைகேயியை அதட்டினாள்; கோபமாய் பார்த்தாள்; வைதாள்; வெப்ப பெருமூச்சு விட்டாள்; தன் கோலத்தை அலங்கோலமாக ஆக்கிக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதாள்; கைகேயி பரிசளித்த இரத்தின மாலையைத் தூக்கி எறிந்தாள்.

அந்தக் கூனியின் உடல் மட்டும் கூனல் அல்ல; அவள் மனம், குணம், செயல் அனைத்துமே கோணல்தான். அவள் கைகேயியைப் பார்த்து சொல்கிறாள்: "அடியே! நீ பேதை; அறிவிலி; பைத்தியக்காரி; உன் மகனோடு நெடுநாள் வாழ்ந்து துன்பப்படப் போகிறாய். நீ உன் மூத்தாளான கெளசலைக்கு தாதியாகி சீரழியப் போகிறாய். அதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது."

"இராமனுக்கு முடிசூட்டினால், அவன் சீதையோடு ஆடம்பரமாக சிம்மாசனத்தில் வீற்றிருக்க, உன் மகன் பரதன் அவனுக்கு ஏவல் செய்யும் தொண்டனாக இருக்க வேண்டும். இந்த நிலையை உணர்ந்த பிறகும், நீ மகிழ்ச்சி அடைகிறாய் என்றால் நான் என்ன சொல்ல இருக்கிறது? கோசலை தன் சாமர்த்தியத்தால் அரசனைக் கைக்குள் போட்டுக் கொண்டு இராமனுக்கு அரசுரிமை வாங்கி விட்டாள். அவள் வாழ்வாள். நீயும் இருக்கிறாயே! பரதன் உன் மகனாய்ப் பிறந்ததால் செல்வமிழந்து தவிக்கிறான். அவன் இவ்வுலகில் பிறந்தும் பிறவாதவனாக இருக்கிறான்".

"அந்த இராமனும் லக்ஷ்மணனும் இந்த பூமியை அளவற்ற காலம் செல்வச் செறுக்கோடு ஆள - உன் மகன் பரதனும் சத்ருக்குனனும் காடு போய் தவமியற்றி விரதம் மேற்கொள்ளுதல் நன்று. அரச குலத்தில் எல்லா சிறப்புகளோடும் பிறந்திருந்தும் பரதன் நாடாளும் பேறு பெறாதவன். இப்படி ஒரு சூழ்ச்சியை மனதில் கொண்டுதான் தசரதன், பரதனை கேகய நாட்டுக்கு அனுப்பிவிட்டு, இராமனுக்கு முடி சூட்ட ஏற்பாடு செய்கிறான் என்று இப்போது எனக்குப் புரிகிறது".

"ஐயோ! பரதா! என் அப்பனே! நீ என்ன செய்வாய்? தந்தையோ உனக்குத் துரோகம் செய்கிறான். தாயும் உன்னைப் பொருத்தவரை கொடியவளாக இருக்கிறாள், என்ன செய்வாய்?"

"கைகேயி! நீ அரசியாய்ப் பிறந்து, அரசியாக அரண்மனையில் வளர்ந்து, சக்கரவர்த்திக்கு வாழ்க்கைப்பட்டும் துயரக் கடலில் வீழ்கிறாயே! இராமனைவிட எந்த விதத்திலும் குறைவிலாத பரதன் சாக்கடையில் இழிந்த அமுதம்போல வீணாகிறானே!"

இப்படி கூனி பேசிய சொற்கள் கைகேயிக்கு மேலும் கோபத்தை மூட்டியது. கண்கள் சிவந்தன. கூனியைப் பார்த்து "கொடியவளே! சூரிய குலத்தில் உதித்த மன்னர்கள் உயிரும் செல்வமும் போனாலும் சத்தியம் தவறமாட்டார்கள். அப்படி மனு நீதிப்படி ராஜ்ய பரிபாலனம் நடைபெறும்போது, உன் இழிந்த புத்தியால் இப்படிப் பேசிவிட்டாய். நீ எனக்கும் நல்லவள் இல்லை; பரதனுக்கும் நல்லவள் இல்லை. தர்ம நியாயப்படி பார்த்தால், நீ உனக்கே நல்லவள் இல்லை. ஊழ்வினை உந்த இங்கே வந்து இப்படியெல்லாம் பேசுகிறாய்."

"எனக்கு நல்லையும் அல்லை; நீ என் மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை; அத்தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லை; வந்து ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தோய்".

"ஒருவர் வாழும்போதும் புகழுடன் வாழவேண்டும். இறந்த பிறகும் புகழுடன் வாழவேண்டும். அந்தப் புகழை நேர்மையோடும், தர்மத்தோடும் நடந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தர்மப்படி மூத்தவனே அரசாள வேண்டும். அதற்கு மாறானதைச் செய்தால் அது இழுக்கு. செய்யத் தக்கது அன்று. புரிந்துகொள்! மதிகெட்டவளே! நீ பேசிய பேச்சுக்கு உன் நாவை அறுத்தெறிந்திருக்க வேண்டும். பழகிய காரணத்துக்காக பொறுத்துக் கொள்கிறேன். நீ பேசியது வெளியே தெரிந்தால் ராஜ தண்டனைக்கு ஆளாவாய். இதோடு வாயை மூடிக்கொள். இனி என் முன் நிற்காதே! ஓடிவிடு!" என்றாள் கைகேயி.

"கைகேயி! நீ என்னிடம் கோபப்பட்டாலும், அடித்து விரட்டினாலும் உனக்கு உண்மையை உணர்த்தாமல் போகமாட்டேன்" என்று சொல்லிக்கொண்டே கைகேயியின் பாதங்களில் வீழ்ந்து பணிந்து வணங்கி மேலும் பேசுகிறாள் மந்தரை.

"மூத்தவன் இருக்க இளையவனுக்குப் பட்டம் இல்லை என்கிறாய். சரி! அப்படியானால் வயதில் மூத்த தசரதன் இருக்கும் போதே இராமனுக்கு முடிசூட்டல் எங்ஙனம் பொருந்தும்? அப்படி இருக்க பரதனுக்கு முடிசூட்டுதல் எப்படி தவறாகும்? செல்வம் வந்துவிட்டால் உறவு ஏது? கோசலையும் இராமனும் இனி முன்போல இருப்பர் என்பது என்ன நிச்சயம்? மனத்தால் உனக்குத் தீங்கு செய்ய நினைப்பார்கள். இராமனுக்கு ராஜ்யம் என்று ஆகிவிட்டால் பொறாமை குணம் கொண்ட கோசலை உன்னையும், உன் மகனையும் எப்படி நடத்துவாள்? அவள் உவந்து போடும் பிச்சைதான் உங்களுக்குக் கிடைக்கும்."

"இப்போது நீ விரும்பியவர்களுக்கெல்லாம் தான தர்மம் செய்கிறாயே, இனி முடியுமா? அந்த கோசலையிடம் போய் தானம் செய்ய பொருள் கொடு என்று கேட்பாயோ? அல்லது கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லி அனுப்பிவிடுவாயோ? அல்லது கொடுக்க முடியவில்லையே என்று அவமானத்தால் மாண்டு போவாயோ? எப்படி இருக்கப் போகிறாய்? சொல்!".

"நீ ஒரு பேரரசி என்று நினைத்துக் கொண்டிருக்கும் உன் தாய் தந்தையர் இங்கு வந்து நீ இருக்கும் நிலையைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள். ஜனகன் முன்னமே உன் தந்தையிடம் பகை கொண்டவன். உன் கணவனுக்கு அஞ்சி இதுவரை வாளாவிருக்கிறான். இனி இராமன் அரசன் என்று ஆகிவிட்டால், அவன் தன்னுடைய மாமனார் பக்கம் இருப்பான். அப்போது உன் தந்தையின் கதி என்ன?"

"கோசலையைப் போல முயன்றிருந்தால் நீயும் உன் மகன் பரதனை அரசனாக்கியிருக்கலாம். அதை நீ கெடுத்து விட்டாய். இனி வழிவழியாக இராமன் வழித் தோன்றல்களுக்கே அரசுரிமை போய்விடும். பரதனும், சத்ருக்குனனும் திண்டாடிக் கொண்டிருப்பார்கள்." இவ்வாறு கூனி எனும் மந்தரை கைகேயியின் மனதைச் சிறுகச் சிறுக மாற்றினாள்.

கைகேயிக்கு திருமணமாகி கணவன் வீட்டுக்கு வந்தபோது, அவள் அன்னை இந்த மந்தரையெனும் கூனியைத் துணையாக அனுப்பினாள். "இப்போது உனக்குக் கேடு வந்துற்றபோது நான் காப்பாற்றவில்லை என்ற ஏச்சு எனக்கு வரும்" என்று சொல்லி கூனி கைகேயியைத் தூண்டுகிறாள்.

"தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி
தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின்; இமையோர்
மாயையும், அவர் பெற்றுள வரம் உண்மையாலும்,
ஆய அந்தணர் இயற்றிய அருந்தவத்தாலும்".

கைகேயி மனம் மாறி, தசரதனிடம் வரம் கேட்டு இராமனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டும், இராமன் காட்டில் அரக்கர்களை அழித்து இராவண சம்ஹாரமும் நிறைவேற வேண்டுமென்று தேவர்கள் மாயம் செய்திருந்தார்கள், அதன் பயனாகவும், ரிஷிகளும் வேதியர்களும் அரக்கர்களின் அழிவுக்காக செய்த அரும்பெரும் தவ வேள்விகளின் பலனாலும், மந்தரை கைகேயியின் மனதை மாற்றிவிட்டதறிந்து தேவர்கள் மகிழ்ந்தார்கள். மந்தரை செய்த மாயத்தின் விளைவாக கைகேயி மனம் மாறினாள். கூனியின் சொற்கள் மட்டுமா அதற்குக் காரணம், இல்லை இல்லை, தேவர்களின் மாயையும், ரிஷிகளின் வேண்டுதலும் கூட காரணமாயின.

அரக்கர்கள் செய்த பாபமும், அறவோர் செய்த தவமும்கூட நல்ல சிந்தனையுள்ள கைகேயியின் மனம் திரியக் காரணமாக இருந்தது. ஏனெனின் இராம அவதாரமே இராவண சம்ஹாரம்தான் நோக்கம். அதனால்தான் தூய சிந்தனையுள்ள கைகேயி மனம் மாறவும், கைகேயி காரணமாக இருந்து இராமன் வனம் புகவும், அரக்கர் அழியவும் காரணமாக இருந்தாள் எனும் கருத்தினைக் காணும்போது, கைகேயி மீது வரும் கோபம் நமக்கெல்லாம் மறைந்துவிடுமல்லவா? தன்னைக் காட்டுக்கு அனுப்ப காரணமாக இருந்த கைகேயியைத் தன் தாய் என்று இறுதியில் இராமபிரான் பெருமைகொண்டது மட்டுமல்ல, தன் தந்தை தசரதனையும் 'அவள் இனி என் மனைவி இல்லை' என்று கூறிய சபதத்தையும் மாற்றிக் கொள்ளச் செய்கிறானே!

மனம் மாறிய கைகேயி கூனியை அன்போடு பார்த்து "மந்தரை, நீ எனக்கும் நல்லவள், என் மகனுக்கும் நல்லவள். நீ கூறியபடி பரதன் அரசன் ஆவதற்கு ஓர் உபாயம் சொல்" என்றாள். சற்றுமுன்புதான் கைகேயி அந்தக் கூனியை "நீ எனக்கு நல்லையும் அல்லை; நீ என் மகன் பரதனுக்கும் நல்லையும் அல்லை, அத்தரும நோக்கில் உனக்கும் நல்லையும் அல்லை" என்று சொன்னதை மாற்றி, இப்போது கூனி தனக்கும் தன் மகனுக்கும் நல்லவள் என்கிறாள் கைகேயி.

இதுகாறும் கைகேயியை அறிவிலியென பழித்த கூனி அதை மாற்றிப் பேசுகிறாள். "அறிவாற்றல் மிக்க கைகேயி! என் சொல்லைத் தட்டாமல் நடந்தால் பரதன் முடிசூட்டிக் கொள்வது உறுதி" என்றாள். உடலைப் போலவே உள்ளமும் கோணலாகிப்போன கூனி மேலும் பேசுகிறாள்: "முன்பு சம்பராசுரனுடன் நந்த போரில் உன் கணவன் தசரதனுக்கு நீ செய்த உதவியைப் பாராட்டி அவன் உனக்கு இரண்டு வரங்களைக் கொடுத்தானல்லவா? அதனை நீ பிறகு பெற்றுக் கொள்வதாகக் கூறியிருந்தாயல்லவா?"

"ஆமாம்"

"அந்த இரண்டு வரங்களையும் நீ இப்போது கேட்டுப் பெற்றுக் கொள்"

"நீ பெறும் இரண்டு வரங்களில் ஒன்றினால், பரதனுக்கு அரசுரிமையையும், மற்றொரு வரத்தினால் இராமன் ஏழிரு பருவங்கள் பெரும் காட்டில் சுற்றித் திரியும்படியும் செய்வாயாக. இராஜ்யம் உன் மகன் பரதனுக்குக் கிடைக்க இது ஒன்றே வழி" என்றாள் கூனி.

இப்படிச் சொன்ன கூனியை, மனமகிழ்ந்து கைகேயி ஆரத் தழுவிக் கொண்டாள். நவரத்ன மாலையையும், பொருளையும் கொடுத்து, என் மகனுக்கு இவ்வுலகம் கிடைக்கும்படி செய்தாய். நீ இனி அவனுக்கு தாய் போன்றவள்" என்று பாராட்டினாள்.

"நீ கூறிய உபாயம் மிகவும் நன்று. அதன்படியே நான் செய்து முடிப்பேன். இல்லையெனில் என் ஆவி துறப்பேன்".

மந்தரையை வெளியே போகச் சொல்லிவிட்டு கைகேயி, தன் மலர் மஞ்சத்திலிருந்து இறங்கிக் கீழே விழுந்து, தலையில் சூடியிருந்த மலர்களைப் பிய்த்து எறிந்தாள். இடையில் அணிந்திருந்த மேகலையை அறுத்து வீசினாள்; பாத கிண்கிணியையும், கை வளையல்களையும் கழற்றி எறிந்தாள்; நெற்றியில் அணிந்திருந்த குங்குமத் திலகத்தை அழித்தாள்; மேலே அணிந்திருந்த இரத்தின ஆபரணங்களை வீசி எறிந்தாள்; கூந்தலைப் பிரித்துத் தரையில் பரந்து விரிந்து கிடக்குமாறு செய்தாள்: கண்களில் பூசியிருந்த அஞ்சனம் கரைய அழுதாள்; இலைகளும் பூக்களும் நீங்கிய வெற்று மரம்போல நிலமிசை வீழ்ந்தாள்.

அழகும், மங்கலமும் தரும் பொருட்களையெல்லாம் நீக்கிவிட்டு, பின்னால் தனக்கு வரப்போகும் கைம்மை கோல நிலையை முன்னதாகவே மேற்கொண்டாள் கைகேயி.

"நவ்வி வீழ்ந்தன, நாடக மயில் துயின்றென்ன
கவ்வை கூர்தரச் சனகியாம் கடிகமழ் கமலத்து
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த
தன்வை ஆம் எனக் கிடந்தனள், கேகயன் தனயை".

துள்ளி விளையாடுகின்ற மான் கீழே விழுந்து கிடப்பதைப் போல கிடந்தாள்; தோகை விரித்தாடும் மயில் துயில் கொள்வது போல தரையில் கிடந்தாள்; மணமிக்க செந்தாமரை மலரில் வாசம் செய்யும் திருமகளான ஜானகி அயோத்தி நகரை விட்டு நீங்கினாள் என்று கருதி அந்த இடத்திற்கு வந்துவிட்ட லக்ஷ்மியின் மூத்தவளான மூதேவி போலக் கிடந்தாள் கேகய மன்னனின் புத்திரியான கைகேயி.

அன்றைய பொழுது சாய்ந்தது. இரவு நேரம் வந்து சேர்ந்தது. இரவின் நடு ஜாம நேரம். மறுநாள் முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்து முடித்துவிட்டு தன் அன்பிற்கு அதிகமும் பாத்திரமான கைகேயியின் இல்லத்துக்கு மகிழ்ச்சியோடு வந்து சேர்ந்தான் தசரதன். மாளிகையின் உள்ளே சென்று தரையில் அலங்கோலமாக விழுந்து கிடக்கும் கைகேயியைக் கண்டான். ஒரு யானைத் தன் துதிக்கையால் எடுப்பது போல அவளைத் தன் நீண்ட கரங்களால் தூக்கி எடுத்தான். அவனது கைகளை விலக்கிவிட்டு, அவள் மீண்டும் சரிந்து தரையில் வீழ்ந்தாள்.

"கைகேயி! என்ன நடந்தது? உனக்கு இழிவு செய்தவர் யாராயினும் என் கையால் மாண்டொழிவர். நடந்ததைச் சொல். அதன் பிறகு பார்!" என்றான் தசரதன்.

"என்பால் உமக்கு உண்மையான அன்பும், அருளும் உண்டு என்றால், முன்னே எனக்கு அளித்தவற்றை நீங்கள் மனமுவந்து இப்போது தரவேண்டும்" என்றாள் கைகேயி.

இதைக் கேட்டு தசரதன் சிரித்தான். "உன் உள்ளம் விரும்பியதைச் செய்வேன்; மறுக்கமாட்டேன்; உன் மகனும் வள்ளலும், என் கண்மணியுமான இராமன் மீது ஆணை" என்றான் தசரதன்.

தசரதன், இராமன் மேல் ஆணையிட்டுக் கூறியதால் வாக்குத் தவறமாட்டான் என்று உறுதி செய்து கொண்ட கைகேயி, "தேவர்கள் சாட்சியாக சம்பராசுர யுத்தத்தின் போது, நீங்கள் கொடுப்பதாகக் கூறிய இரண்டு வரங்களை இப்போது நீங்கள் எனக்குத் தருவீராக!" என்றாள்.

"நான் வாக்களித்த வரங்கள் வேண்டுமென்றால் நேரடியாகக் கேட்காமல், அதற்கு இத்தனை துன்பப் படுவானேன். தரவேண்டியதைத் தராமல் இருப்பது பாவம். உடனே கேள்; தருகிறேன்" என்றான். உடனே கைகேயி கேட்கிறாள்:

"ஏய வரங்கள் இரண்டில் ஒன்றினால் என்
சேய் உலகாள்வது, சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது எனப்புகன்று நின்றாள்
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்".

"நீங்கள் கொடுத்த இரண்டு வரங்களில் ஒன்றினால் என் மகன் பரதன் முடிசூடிக்கொண்டு ராஜ்யத்தை ஆளவும், மற்றொரு வரத்தினால் சீதைமணாளன் இராமன் போய் வனம் புகுதலும் வேண்டுமெனக் கேட்டாள் தீமைகளுக்கெல்லாம் சிறந்த தீமையாக விளங்கும் கைகேயி. அவள் வாயிலிருந்து புறப்பட்ட விஷம் போன்ற சொற்களைக் கேட்ட தசரதன் கீழே விழுந்தான்.

அப்போது மன்னன் தசரதன் அடைந்த வேதனை சொல்லும் தரமாமோ? மனம் உளைந்து கொல்லன் உலைக்களம் போல வெப்பப் பெருமூச்சு விட்டான். கைகேயி மேல் கோபம் தலைக்கேற, ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்தான். மனமும் புலன்களும் மரண காலம்போல கலங்கின. செய்வதறியாது தவித்தான். எழுவான்; பின்பு மனம் கலங்கி விழுவான்; அமர்வான்; நிற்பான்; பின்னரும் வீழ்வான்; கைகேயியைப் பற்றி எற்ற எண்ணுவான்; பின் தளர்ந்து போவான்.

பெருமூச்செறிந்து உலாவியும், அயர்ந்து நின்றும் பலவாறு வருந்தினான். அவன் கொடுத்த வரத்தில் ஒன்று அவன் நெஞ்சில் பாய்ந்து புண்ணாக்க, மற்றொன்று அந்தப் புண்ணில் தீயெனப் பாய்ந்தது. இவ்வளவு துன்பங்களையும் தசரதன் அனுபவிக்கும் போதும் கைகேயி கண்களில் எந்த மாற்றமும் இல்லை. பெண்மைக்கே உரித்தான அச்சம், நாணம், இரக்கம் அனைத்தையும் நீக்கிவிட்டவளைப் போலத் தோன்றினாள். அவளது மனதிலிருந்த வஞ்சத்தின் ஆழம் புரியாமல் தசரதன் அவள் மீது உயிரையே வைத்திருந்தானே!

கைகேயியை தசரதன் நேருக்கு நேராகப் பார்த்து "உனக்கு என்ன புத்தி பேதலித்து விட்டதா? யாரேனும் வஞ்சனையால் உன் மனதில் கலக்கம் ஏற்படுத்தினாரோ? என் மேல் ஆணை, உண்மையைச் சொல்" என்றான் தசரதன்.

கைகேயி மனம் தளரவில்லை. தசரதனுக்கு மறுமொழி சொன்னாள்.

"திசைத்ததும் இல்லை; எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை; முன் ஈந்த இவ்வரங்களை
குசைப்பரியோய்! தரின் இன்று கொள்வென்; அன்றேல்
வசைத்திறன் நின்வயின் நிற்க மாள்வென்" என்றாள்.

"நீ கொடுத்த இரண்டு வரங்களை, எனக்கு வேண்டும்போது பெற்றுக் கொள்வதாகச் சொன்னேன். இப்போது அவற்றைக் கேட்கிறேன். கொடுப்பதானால் சரி; இல்லையேல் நான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்" என்கிறாள் கைகேயி.

இராமன் வனம் புகவேண்டும் என்று வரம் கேட்டு, அதில் இவள் உறுதியாக இருக்கிறாள் என்பதை உணர்ந்த தசரதன் "ஆ! கொடியவளே!" என்கிறான். பின்பு உயிர் சோர்கிறான். ஐயோ! தர்மத்தைக் காப்பது மிக மிகக் கொடியது என்கிறான். 'சத்தியம் என்ன வேண்டிக் கிடக்கிறது, சாகட்டும்' என்று எண்ணி எழுவான், பின்பு தள்ளாடி கீழே விழுவான்.

இந்தப் பெண்களே வஞ்சகிகள். குல கேடர்கள். அவளோடு பெண் குலத்தையே பூண்டோடு அழித்து விடுகிறேன், அதனால் கிழ் மக்கள் வரிசையில் நானும் சேர்ந்து கொள்வதால் குற்றமில்லை என பொங்கி எழுகிறான்.

"கையோடு கையப் புடைக்கும், வாய் கடிக்கும்
மெய்யுரை குற்றமெனப் புழுங்கி விம்மும்
நெய்யெரி உற்றென நெஞ்சு அழிந்து சோரும்
வையக முற்று நடந்த வாய்மை மன்னன்".

இப்படித் துன்பத்தால் பலபடியாகச் சிந்தித்து தசரதன் ஒன்றும் செய்யாது பொறுத்து, நான் படும் பெரும் துன்பம் கண்டும், சிறிதேனும் மனமிரங்கித் தன் நிலையினின்றும் மாறாத இவளை, இரந்து வேண்டுதல் ஒருக்கால் பலன் அளிக்கக்கூடும் என்று கருதி, அவ்வாறே செய்யத் துணிந்தான். தசரதன் கைகேயியின் கால்களில் வீழ்ந்து அவளிடம் கெஞ்சுகிறான்.

"கைகேயி! கைகேயி! உன் மகன் பரதன், இந்த அரசை ஏற்கமாட்டான். அப்படி அவன் ஏற்றுக் கொண்டாலும், இந்த நாடும் மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பரதன் நாடு ஆள, இராமன் காடு புகுதலை தேவரும் ஒப்பமாட்டார்கள். இராமன் காடு சென்றால், மக்கள் உயிர் வாழ மாட்டார்கள். அப்புறம், நீ யாரோடு இருந்து இந்த அரசை ஆளப்போகிறாய்?".

"இராமனை முடிசூட்டிக் கொள்ள முறைப்படி கேட்டதால், அவன் ஒப்புக்கொண்டான். நீ உன் மகன் பரதனுக்கு ஆட்சி வேண்டும் என்பதை இராமனிடம் கூறினால், அவனே மனம் விரும்பி ராஜ்யத்தைக் கொடுத்து விடுவான். கைகேயி! நீ என் கண்களை வேண்டுமானாலும் கேள்! கொடுத்து விடுகிறேன். என் உயிரை வேண்டுமானாலும் கேள்! கொடுத்து விடுகிறேன். வேண்டுமானால் உன் மகனுக்கு இந்த ராஜ்யத்தை எடுத்துக் கொள். மற்றொரு வரத்தை மட்டும் மறந்து விடு!".

"கைகேயி! நான் சொன்ன சொல் தவறமாட்டேன். தவறினால், அது குற்றமாகும். நான் வேண்டுகின்ற வரத்தை நீ மனமிரங்கி தரவேண்டும். இரக்கமற்ற பேய்கூட வருந்தி ஒருவர் யாசித்தால் மனம் இரங்கித் தந்துவிடும். நீ தரலாகாதா?"

இப்படிப் பலப்பல சொல்லி இறைஞ்சியும் அந்தத் தீயவள் கைகேயி, மனம் இரங்கவில்லை.

"மன்னா! இந்த வரங்களை முன்னே தந்தாய். இப்போது தரமறுத்து கோபப்பட்டால், உன் வாய்மை என்னாவது? வாய்மைக்கு ஒரு தசரதன் என்று உலகத்தார் சொல்வார்களே! இனி யார் இருக்கிறார்கள் இந்த உலகில் வாய்மையைக் காக்க?"

இந்தச் சொற்களைக் கேட்டு வருந்திய தசரதன், இவள் பெண் அல்ல. உயிரைக் கொல்லும் விஷம் என்று மூர்ச்சித்துப் பின் எழுந்து மறுபடியும் கெஞ்சுகிறான்.

"நாடு முழுவதையும் கொடுத்து விடுகிறேன். பொய் கூறேன். உன் மகனே இந்த ராஜ்யத்தை ஆளட்டும். நீயே ஆண்டு கொள். உன் அதிகாரத்தைச் செலுத்து. ஆனால், என் மகன், என் கண்போன்ற இராமன் இந்த நாட்டைவிட்டுக் கானகம் போக மட்டும் சொல்லாதே! எனக்கு இந்த வரத்தைக் கொடு" என்றான்.

"இராமனைக் காணாமல் நான் உயிரோடு இருக்க மாட்டேன். எனவே என் உயிர், உன் அடைக்கலமாக உன் கையில் இருக்கிறது. அதை நீ காத்திட வேண்டும். தயவு செய்து மனம் இரங்குவாயாக!"

"நீ இரப்பது போல கேட்டாலும், வலிமையுள்ள நீ எனக்கு இடும் ஆணைதான் நீ கேட்பது. இது அறமல்ல, கொடுத்த வாக்கைத் தவறவிடுவதுதான் தர்மமா?" என்றாள் கைகேயி..

இவ்வளவு மன்றாடியும் மனம் இரங்காததைக் கண்டு மன்னன் 'இனி இராமன் காடு போவதைக் தடுக்கவும் இயலாது; என் உயிர் பிரிவதையும் தடுக்க இயலாது' என்று உணர்ந்து அயர்வுற்று கீழே வீழ்ந்தான்.

இதுவரை இனியவளாகப் பழகி வந்த இந்தக் கைகேயியிடம் இவ்வளவு கொடுமையும், அற்பத்தனமும் குடிகொண்டிருப்பதைக் கண்டு துயரம் கரைகாணாததாயிற்று; தரையிலே மனம் வெதும்பி புரள்கிறான்.

"கணவனோடு தானும் இறந்து போகும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், கணவன் உயிரையே போக்கிடும் உன் போன்றவளை நான் பார்த்ததில்லை. பெண்மை குணங்கள் எதுவுமே இல்லாத நீ! கணவனையே கொல்லத் துணிந்து விட்டாய். உன்னை நான் கொல்லாவிடினும், உலகத்தார் உன்னைக் கொன்று ஒழிப்பர். பெண்களுக்கே உரித்தான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எதுவும் இல்லாத நீ பெண்ணே அல்ல! நாணமில்லார் நங்கையாகார். உருவத்தால் பெண்ணாயினும் ஆண்பாலரே!"

"உடல்வலி, படைவலி, மதிவன்மை ஆகிய எல்லா சிறப்பையும் பெற்ற அரசர் மற்றும் தேவர்களை வென்று, தசரதன் என்று பெயர் பெற்ற நான், ஒரு சாதாரணப் பெண்ணாலே, மனைவியாலே கேடுற்றான் எனும் பழிச் சொல்லுக்கு ஆளாகி விட்டேனே!" இப்படிப் பற்பலச் சொல்லி புலம்பினான் தசரதன்.

எதற்கும் இரங்காத கொடுமனக் கைகேயி "அரசே! பலபடியாகப் பேசவேண்டாம். நான் கேட்ட வரங்களைத் தவறாது கொடுத்ததாக மனதாரச் சொல். இல்லையேல் இப்போதே உயிர் விடுவேன்" என்றாள்.

இவளது கொடுஞ்சொல் கேட்ட மன்னன், இவள் இறந்து விடுவேன் என்கிறாளே என்று கருதி 'இந்த வரங்களைத் தந்தேன்! தந்தேன்!' என்றான். நான் இறந்து போய் விண்ணுலகை ஆள்வேன். ஆனால் நீ உன் மகனோடும் கூடி, வசை வெள்ளம் கூடி, பழியாகிய பெருவெள்ளத்தில் நீந்திக் கொண்டிரு!" என்று சொல்லி மயங்கி கீழே விழுந்தான். அரசன் வரங்களைக் கேட்டபடி கொடுத்துவிட்ட திருப்தியில் கைகேயி நிம்மதியாக உறங்கச் சென்றாள்.

மறுநாள் பொழுது விடிந்தது. முடிசூட்டுவிழா கொண்டாட்டத்துக்கு நகரம் தயாராகிக் கொண்டிருந்தது. பன்னாட்டு அரசர்களும் வந்து குவியத் துவங்கிவிட்டார்கள்.

பட்டாபிஷேக மண்டபத்துக்கு வந்த வசிஷ்டர், தேவையான பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்து, நிகழ்ச்சிகளைத் தொடங்கத் தயாரானார். மன்னனைக் கூட்டிக்கொண்டு வர சுமந்திரன் கிளம்பிச் சென்றான். சக்கரவர்த்தி கைகேயியின் அரண்மனையில் இருப்பது அறிந்து, அங்கே சென்று தான் வந்த விவரத்தைக் கூறுகிறான். அதற்கு முன்பாக கைகேயி எதிர்ப்பட்டு, இராமனை உடனே இங்கு அழைத்து வருமாறு சுமந்திரனிடம் பணித்தாள்.

சுமந்திரன் அவள் இட்ட கட்டளையை சிரமேல் ஏற்று, இராமன் இருக்கும் மாளிகைக்குச் சென்று, இராமனைக் கண்டு, பட்டாபிஷேகத்திற்கு வந்திருக்கிற அனைவரும் காத்திருக்கிறார்கள். அதற்குள், உன் சிறிய அன்னை கைகேயி உன்னை அழைத்து வரும்படி பணித்திருக்கிறார்கள். விரைவில் வருகவெனக் கூறினார்.

இந்த உத்தரவைக் கேட்டதும் இராமன் எழுந்து அரங்கப் பெருமானைச் சென்று வணங்கிவிட்டு, இன்னிசை கீதங்களும், வாழ்த்தொலிகளும் முழங்க சுமந்திரனோடு புறப்பட்டான். இராமபிரான் தேரில் செல்வதை நகர வீதிகளில் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள் வாழ்த்தினார்கள். நேரே சபா மண்டபம் சென்று அங்கே மன்னன் காணப்படாமையினால், கைகேயியின் அரண்மனையைச் சென்றடைந்தான்.அரண்மனை யுள் சென்ற இராமன் அங்கே மகிழ்ச்சியான சூழ்நிலை இல்லை என்பதை உணர்ந்தான். இவன் வரவை எதிர்நோக்கி தந்தையும் கைகேயியும் காத்திருக்கவில்லை. மனக் கலக்கத்தோடு அவர்கள் இருக்கும் இடம் நோக்கிச் செல்லத் தொடங்கினான்.

இராமன் வருவதைக் கண்ட கைகேயி, அவன் சென்று தசரதனைக் கண்டால் என்ன நேருமோ? அவன் வாயால் கட்டளைகளைச் சொல்வானோ? அதனால் நானே போய் முன்னதாக மன்னன் கட்டளைகளை அவனுக்குச் சொல்வேன் என்று சென்றாள்.

"மகனே! இராமா! உன் தந்தை என் மூலம் உனக்குத் தெரிவிக்கச் சொன்ன கட்டளையொன்று உண்டு. அதை நான் சொல்லலாமென்றால் சொல்லுகிறேன்" என்றாள் கைகேயி.

அதற்கு இராமன் "தந்தை ஒரு கட்டளையிட அதைத் தாங்களே எனக்கு அறிவிப்பதானால், இதனினும் நற்பேறு வேறு எனக்கு உண்டோ? என்னப் போல் மேம்பட்டவன் எவரும் உண்டோ? இது நான் செய்த தவப் பயனேயன்றி வேறென்ன? தந்தையும் தாயும் நீங்களே! அம்மா! கட்டளையிடுங்கள்" என்றான்.

"எந்தையே ஏவ, நீரே உரைசெய, இயைந்தது உண்டேல்
உய்ந்தனன் அடியேன், என்னிற் பிறந்தவர் உளரோ வாழி
வந்தது என் தவத்தின் ஆய பயன், மற்றொன்று உண்டோ
தந்தையும் தாயும் நீரே! தலை நின்றேன், பணிமின் என்றான்".

கைகேயி, தனது கட்டளைகளை இராமனுக்கு தெரிவிக்கிறாள். 'கடல் சூழ்ந்த இவ்வுலகை பரதனே ஆள, நீ போய் சடாமுடி தரித்துக் கொண்டு, தவங்களைச் செய்து, கானகம் சென்று, புண்ணிய தீர்த்தங்களில் நீராடி பதினான்கு ஆண்டுகள் சென்றபின் வா' என்று அரசன் சொன்னான் என்றாள். அந்தப் பாடல் இதோ:

"ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள, நீ போய்
தாழிரு சடைகள் தாங்கித் தாங்கரும் தவம் மேற்கொண்டு
பூழிவெம் கானம் நண்ணிப் புண்ணியத் துறைகளாடி
ஏழிரெண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள்".

இதனை நான் கூறவில்லை; உன் தந்தை அரசன் சொன்னான் என்று இராமனிடம் சாமர்த்தியமாக உரைக்கிறாள். இந்த உரையைக் கேட்ட இராம பிரானின் மனநிலை எப்படி இருந்தது. அதனை நம் வாக்கால் விளக்கமுடியுமா? கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாக்கால் பார்ப்போம்:

"இப்பொழுது எம்மனோரால் இயம்புவது எளிதோ யாரும்
செப்பரும் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்
ஒப்பதே முன்பு, பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட
அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா".

சக்கரவர்த்தி தசரதன் கட்டளை இட்ட காரணத்தினால் முடிசூட்டிக்கொள்ள இராமன் சம்மதித்தானேயன்றி, விரும்பி இந்த ராஜ்ய பாரம் ஏற்க சம்மதிக்கவில்லை. எனவே இப்போது ராஜ்யத்தை பரதனுக்குக் கொடுத்துவிட்டு, தான் வனம் சென்று தவம் மேற்கொண்டு, புண்ணிய நதிகளாடி பதினான்கு ஆண்டுகள் முடிந்தபின் வா என்று தந்தை ஆணையிட்டதாய், தாய் கூறியதும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து வண்டியில் பூட்டப்பட்ட மாடு கட்டவிழ்த்து விடப்பட்டது போல உணர்ந்தான் இராமன். முன்பு உனக்கு பட்டாபிஷேகம் என்றபோது அவன் முகம் எப்படியிருந்ததோ, அதுபோலவே ராஜ்யம் உனக்கு இல்லை, பரதனுக்குத்தான், நீ பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்து வரவேண்டும் என்று சொன்னபோதும் அதேபோல, அன்று மலர்ந்த செந்தாமரை மலர்போல ஒளியோடும், மலர்ச்சியோடும் இருந்தது.

"தாயே! மன்னனின் கட்டளை இல்லையென்றாலும், தங்கள் கட்டளையை நான் மறுப்பேனா? என் தம்பி பரதன் பெற்ற செல்வம் நான் பெற்றது போலவன்றோ? தங்கள் கட்டளையை சிரமேற்கொண்டேன். இப்பொழுதே கானகம் செல்கிறேன், தங்களிடம் விடைபெறுகிறேன்" என்றான் இராமன்.

"மன்னவன் பணி அன்றாகினும் நும் பணி மறுப்பனோ என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ!
என் இனி உறுதி, அப்பால் இப்பணி தலைமேற்கொண்டேன்
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்"

இந்தப் பாடலில் வரும் "பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ?" எனும் அடியில் என் தம்பி பரதனுக்குக் கிடைத்திருக்கும் இந்த செல்வம் எனக்குக் கிடைத்த செல்வமன்றோ?" எனும் பொருளிலும் சிலர் சொல்வதுண்டு. ஆனால், இராமன் குறிப்பிட்டது, இந்தச் செல்வத்தை நான் பெற்றால் என்ன, என் தம்பி பரதன் பெற்றால் என்ன எனும் பொருளில்தான் கொள்ள வேண்டும்.

இராமன் இவ்வாறு கைகேயிடம் சொல்லிவிட்டு, அவளைத் தொழுது நமஸ்கரித்துவிட்டு, தன் தந்தை இருந்த திசை நோக்கி வணங்கி புறப்பட்டு நேரே தன்னைப் பெற்ற தாய் கோசலையின் மாளிகையைச் சென்றடைந்தான்.

அங்கே கோசலை இராமனை முடிசூடிய கோலத்தில், அதற்குரிய குடை முதலான சிறப்புக்களுடன் தன் மாளிகைக்கு வருவான் என்று மகிழ்ச்சியோடு அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, இராமன் வெரும் கையனாய் போய் நின்றதும், கோசலை அதிர்ச்சியுற்றாள். "வீசுகின்ற கவரி இல்லை; அரசனுக்குரிய வெண்கொற்ற குடையின்றி; தனி மனிதனாக, விதி இராமனை வழிநடத்திச் செல்ல, தர்மம் அவன் பின் வருத்ததுடன் பின்தொடர, கோசலை முன் போய் நின்றான்.

"இராமா! என் கண்ணே! என்ன இது? உன் தலையில் மணிமுடி இல்லை; உன் உடல் மங்கல மஞ்சள் நீரால் நனைந்திருக்கவில்லை; என்று சொல்லிக்கொண்டே, தன் காலடியில் வீழ்ந்து வணங்கிய இராமனிடம் மனம் நெகிழ்ந்து, அவனை மனதார வாழ்த்திவிட்டு "ஏன் அப்பா! நீ முடிசூட்டிக் கொள்வதற்கு ஏதேனும் இடையூறு நேர்ந்துவிட்டதா?" என்கிறாள்.

நடந்தவற்றையெல்லாம் தன் தாயிடம் சொன்னால் அவள் மனம் உடைந்து போவாள் என்று கருதி இராமன் கைகளைக் கூப்பித் தன் தாயை கும்பிட்டு "அம்மா! உன் அன்பு மகன் குற்றமற்ற குணமுடைய பரதன் முடிசூடப் போகிறான் அம்மா!" என்றான்.

"அப்படியா? உன்னைக் காட்டிலும் நிறை குணங்கள் உடைய பரதன் நல்லவன்; முடிசூட பொருத்தமானவன். இருந்தாலும், மூத்தவன் இருக்க இளையவன் முடிசூடுவது நம் குலத்தில் இதுவரை இல்லையே, அதுதான் குறை" என்றாள் அந்த பெருந்தன்மையான தாய் கோசலை. "இராமா! மன்னர் கட்டளைப்படி பரதனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு, அவனோடு ஒன்றுபட்டு பல்லூழி காலம் நலமாய் வாழ்வாயாக!" என்று வாழ்த்தினாள்.

தாயின் உரைகேட்டு மகிழ்ந்த இராமன் "அம்மா! நான் நன்னெறியில் உய்யும் பொருட்டு அரசன் எனக்கு இட்ட கட்டளை ஒன்றும் இருக்கிறது!" என்றான்.

"அது என்ன கட்டளை இராமா?"

"நான் பதினான்கு ஆண்டுகள் வனம் சென்று அங்கு வாழும் பெரும் தவசிகளோடு தங்கியிருந்து வரவேண்டும் என்றும் மன்னன் கட்டளை அம்மா!"

இதனைக் கேட்ட மாத்திரத்தில் கோசலை பெரிதும் வருந்தினாள்; மயங்கினாள்; விம்மி அழுதாள்; விழுந்தாள்; சோகத்தின் எல்லைக்கே சென்றாள். பின் தெளிந்து எழுந்து "இராமா! இது என்ன வஞ்சகம்? நாடாளச் சொல்லி பின் அதை மாற்றி உன்னைக் காட்டுக்கு துரத்துவது கள்ளமன்றோ? நான் இனி உயிர் வாழ மாட்டேன்" என்றாள்.

"எல்லோரையும் காட்டிலும் உன்பால் பேரன்பு கொண்டு நீயே உயிர் எனக் கருதிய மன்னர் அதற்கு முற்றிலும் மாறாக உன்னைக் காட்டிற்கு அனுப்பும் வகையில் நீ ஏதேனும் தவறு செய்து விட்டாயோ இராமா?" என்றாள் கோசலை.

"நான் அறங்களேயன்றி தீவினை எதையும் செய்தவள் அல்லவே! எனக்கு ஏன் இந்தத் துயரம்? கன்றைப் பிரிந்த பசுபோல கதறுகின்றேனே!" என்று புலம்புகிறாள். பிறகு இராமன் கோசலையிடம் பலவாறு எடுத்துச் சொல்லி ஆறுதல் கூறுகிறான்.

"இராமா! நீ வனம் செல்கிறாய் என்றதுமே, என் உயிர் போயிருக்க வேண்டும். அப்படிப் போகவில்லை. ஆனால் நீ போனபிறகு நான் உயிரைத் தாங்கிக் கொண்டு இருப்பது இயலாத காரியம். எனவே என்னையும் உன்னுடன் காட்டுக்கு அழைத்துச் செல்" என்றாள்.

"தாயே! தந்தை என்னைப் பிரிந்த பிறகு மிகவும் துயரமடைவார் அல்லவா? அப்போது அவருக்கு ஆறுதல் கூறாமல் தாங்கள் என்னுடன் காட்டுக்கு வருவது என்பது முறையாகுமா?" என்றான் இராமன்.

இனி இராமனைத் தடுத்து நிறுத்த முடியாது என்று நன்கு உணர்ந்த பிறகு கோசலை, தசரதனை விட்டே சொல்லி தடுத்துவிடலாம் என்று எண்ணமிட்டாள். பிறகு இராமன் சுமத்திரையிடம் சென்று விடைபெறச் சென்றான். கோசலை தன் கணவன் தசரதனைக் காண்பதற்காக கைகேயியின் அரண்மனைக்குச் சென்று அங்கு மன்னன் கிடந்த காட்சியைக் கண்டு மூர்ச்சையடைகிறாள். மூர்ச்சை தெளிந்து எழுந்து கோசலை அழுது புலம்புகிறாள். அவளது அழுகுரல் அரண்மனையெங்கும் எதிரொலிக்கிறது.

அங்கே, ராஜ சபையில் இருந்த மக்கள் காதுகளிலெல்லாம் மங்கல ஒலிகள் கேட்க வேண்டிய நேரத்தில், இப்படியொரு அழுகுரல் அமங்கலமாய்க் கேட்கிறதே, அது என்னவென்று பார்த்து வர வசிஷ்டரை அனுப்புகின்றனர்.

கைகேயியின் அரண்மனைக்குச் சென்ற வசிஷ்ட முனிவர் நிலைமையைப் புரிந்து கொண்டார். கைகேயியிடம் நடந்தது என்னவென்று கேட்க, அவள் சிறிதும் கலக்கமின்றி குற்ற உணர்வு சிறிதுமின்றி நடந்ததைக் கூறி முடித்தாள்.

வசிஷ்டர் மன்னனை எழுப்பி தேற்றுகிறார். இனி கைகேயியிடம் சொல்லி மீண்டும் இராமனுக்கே அரசைத் தருமாறு கேட்கலாம் என்று ஆறுதலாகப் பேசுகிறார். தசரதன் சோகத்தில் இராமா! இராமா! என்று புலம்பிக்கொண்டிருக்கிறான். ஒருக்கால் கைகேயி மனம் மாறி இராமனுக்கே நாட்டைக் கொடுத்தாலும் இராமன் அதை ஏற்றுக்கொள்வானா என்ற ஐயம் ஏற்படுகிறது.

எனினும் முனிவர் வசிஷ்டரின் ஆலோசனையை கைகேயி ஏற்காமல் மன்னன் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லையானால் தான் உடனே உயிர்நீப்பேன் என்கிறாள். கோபம் கொண்ட வசிஷ்டர் கைகேயியை "நீ பெண் அல்ல, பேய்!" என்கிறார்.

தசரதன் குலகுருவான வசிஷ்டரிடம் "இராமன் கானகம் போய்விட்டானா?" என்று கேட்கிறான். கோபத்துடன் கைகேயியிடம் "இராமன் காட்டுக்குப் போய்விட்டால், நான் உயிர் தரியேன்" என்கிறான். இவ்வாறு பலவாறு கைகேயியிடம் சொன்ன பின்:

"இன்னே பலவும் பகர்வான் இரங்காதாளை நோக்கிச்
சொன்னேன் இன்றே, இவள் என் தாரமல்ல, துறந்தேன்
மன்னே ஆவான் வரும் அப்பரதன்தனையும் மகன் என்று
உன்னேன், முனிவா! அவனும் ஆகான் உரிமைக்கு என்றான்".

"முனிவரே! இனி இந்தக் கைகேயி என் மனைவியும் அல்லள்; அந்தப் பரதனை என் மகனாகக் கருதமாட்டேன்; அவன் இனி மகன் என்ற உரிமையில் செய்யவேண்டிய காரியங்களுக்கும் உரியவன் இல்லை" என்றான் தசரதன். பிறகு கோசலையைக் கண்டு மனம் வருந்திப் புலம்புகிறான். கோசலை கணவனைத் தேற்றுகிறாள். தசரதன் பழைய நிகழ்ச்சிகளைச் சொல்லிச் சொல்லிப் புலம்புகிறான்.

கோசலை கணவனிடம் "இராமனைப் பிரிந்து தவிக்கும் என்னை நீங்களும் கைவிட்டுச் சென்றால் என் நிலை என்னவாகும் யோசித்தீர்களா?" என்று கேட்கிறாள்.

"கோசலை! என் உயிர் நீங்குவதற்குக் காரணமாக இந்த இராமனின் பிரிவு இருக்கும் என்று எனக்கு ஒரு சாபம் உண்டு. அந்த சாபம் எனக்கு ஏற்பட்ட வரலாற்றைச் சொல்கிறேன் கேள்!" என்று சொல்லத் தொடங்குகிறான் தசரதன்.

"ஒரு முறை நான் காட்டுக்கு வேட்டையாடச் சென்றிருந்தேன். அங்கே யானைகளும், சிங்கங்களும் நடமாடும் பகுதிக்குச் சென்று வேட்டைக்குத் தயாராக மறைந்து நின்றிருந்தேன். அப்படி மறைந்து இருக்கும்போது, சலபோசனன் எனும் சிறந்த முனிவனும் அவன் மனைவியும் பார்வை இழந்தவர்களாகத் தன் மகனே துணையாக அவனுடன் இருந்தார்கள். கண் இழந்த பெற்றோருக்குத் தண்ணீர் கொண்டு வரும் பொருட்டு ஒரு குறுகிய பாத்திரத்தில் நீரோடையில் அந்த மகன் நீர் மொள்ளும்போது உண்டான ஓசை, யானை நீர் அருந்தும் ஓசை போல இருந்ததால், மறைந்திருந்த நான், யானை என்று எண்ணி, ஒலி வந்த திசை நோக்கி அம்பைச் செலுத்திவிட்டேன். அந்த அம்பு நீர் மொண்டுகொண்டிருந்த இளம் பிரம்மச்சாரியின் மீது பாய்ந்துவிட்டது. அந்த இளைஞன் தரைமீது விழுந்து புலம்பி மரணாவஸ்தைப் பட்டான். ஒலி வந்த திசை நோக்கி அம்பு விட்டேனே தவிர அங்கு இருந்தது யானையா மனிதனா என்று எனக்குத் தெரியாது. அவன் அலறி வீழ்ந்த பிறகுதான் ஓடிப் போய்ப் பார்த்தேன். அநியாயமாக இப்படி ஓர் இளைஞன் மீது அம்பு செலுத்திவிட்டோமே என்று மிகவும் வருந்தினேன்."

"கையிலிருந்த குடம் நழுவி கீழே விழுந்து கிடக்க, தரையில் கிடந்து புரளும் அந்த இளைஞனைக் கண்டதும், என் வில்லும் மனமும் சோர்ந்து விழ, அவன் அருகில் சென்று "இளைஞனே! நீ யார்?" என்று கேட்டேன். அதற்கு அவன் "நான் காசிப முனிவரின் வழியில் வந்த சலபோசன் எனும் முனிவனின் மகன் சுரோசனன் என்றான்".

"இரு கண்களிலும் பார்வை இழந்த எனது பெற்றோர்களுக்காக தண்ணீர் கொண்டு வரும் பொருட்டு இந்த ஓடைக்கு வந்தேன். நீ யானை என்று கருதி என்மீது அம்பு செலுத்திவிட்டாய். இது எனது விதிப்பயன்; அன்றி வேறு என்ன? நீ என்ன செய்வாய், வருந்தாதே என்று அந்த இளைஞன் சொன்னான்".

"என் பெற்றோர் தண்ணீர் வேட்கையால் தவித்துக் கொண்டிருப்பார்கள். எனவே நீ உடனே அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு போய்க் கொடுத்து, என் நிலைமையைக் கூறி, என் இறுதி நமஸ்காரங்களையும் அவர்களிடம் தெரிவித்துவிடு! என்றான் அவன். பிறகு உயிர் நீத்தான்".

"மைந்தன் கேட்டுக் கொண்டபடி, அவன் பெற்றோருக்கு நீரையும், இறந்த மகனின் உடலையும் எடுத்துக் கொண்டு போய் அந்தப் பார்வை இழந்த பெற்றோர் இருக்குமிடம் சென்றேன். அவர்கள் என் காலடி ஓசை கேட்டுத் தனது மகன் என்று எண்ணி "குழந்தாய்! ஏன் இவ்வளவு தாமதம். உனக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்ததோ என்று நாங்கள் மிகவும் வருந்தினோம். வா! மகனே, என் அருகில் வா! என்றான் அந்த கண்ணிழந்த தந்தை."

"உடனே நான் ஓர் அரசன் என்றும், நடந்த வரலாற்றைக் கூறி முடித்தேன். அதைக் கேட்டு புத்திர சோகத்தால் அந்த பெற்றோர் துன்புற்று அழுதனர். கண் பார்வை இழந்த எங்களுக்குக் கண்போல இருந்த எங்கள் கண்மணி போய் விட்டானே. மகனே! உன்னைப் பிரிந்து நாங்கள் எப்படி வாழ்வோம்? நாங்களும் உன்னுடன் வந்தோம், என்று அலறினர்".

"உங்கள் மகனைப் போல இருந்து, நான் தங்களுக்கு வேண்டுவன செய்வேன் என வேண்டிக் கொண்டேன். இனி எங்களுக்கு வாழ்வு தேவையில்லை. மன்னா! இனி எங்களைப் போலவே நீயும் உன் மகனைப் பிரிந்து, அந்த புத்திர சோகத்தில் உயிர் இழக்க வேண்டும் என்று சாபம் கொடுத்து விட்டான் அந்த முனிவன். கோசலை! அந்த முனிவனின் சாபம் நிறைவேறும் காலம் வந்துவிட்டது. இராமன் என்னை விட்டுப் பிரிதலும், அதனால் நான் உயிர் துறப்பதும் நிச்சயம்" என்றான் தசரதன்.

உடனே வசிஷ்டர் புறப்பட்டுப் போய் சபா மண்டபத்தில் கூடியிருந்தவர்களுக்கு, இராமன் முடிசூட்டு விழா நின்றுவிட்டதையும், இராமன் வனம் செல்லப் போவதையும் தெரிவித்தார். நாட்டு மாந்தர் அனைவரும் வேதனையால் துயருற்று தவித்தனர். இராமனைக் காட்டுக்கு அனுப்பிய தசரதன் செயலை குறை கூறினர். இராமபிரான் வனம் செல்வது அறிந்து மக்கள் மட்டுமா வருந்தினார்கள்? இல்லை இல்லை. வளர்ப்புப் பிராணிகளும் வருந்தினவாம். அவ்வளவு உயிர்களும் ஆழ்ந்த துயரத்தில் வருந்தின.

இந்த செய்திகள் அனைத்தையும் கேள்விப்பட்ட இலக்குவன் சினம் கொண்டான். போர்க்கோலம் பூண்டான். இராமன் முடிசூடுவதற்குத் தடையாக உள்ளவர் எவராயினும், அவர்களைக் கொன்றொழிப்பேன். கைகேயியின் நோக்கம் நிறைவேற விடமாட்டேன். என்று எழுந்தான். இலக்குவன் எழுப்பிய வில்லின் நாணொலி கேட்டு இராமன் அங்கே வருகிறான். "தம்பி! கோபப்படாதே, நீ ஏனப்பா இப்போது கோபப் படுகிறாய்" என்று அவனை அமைதிப் படுத்த முனைகிறான்.

இலக்குவனுக்கு இராமன் பல நல்லுரைகளைக் கூறி அவன் கோபம் தணிவிக்கிறான். பிறகு இராமன், இலக்குவனுடன் சுமத்திரை இருக்குமிடம் செல்கிறான். அதுவரை நடந்தவை அனைத்தையும் கேட்ட சுமத்திரை வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாள். நல்வார்த்தைகள் கூறி இராமன் அவளைத் தேற்றுகிறான்.

பின்னர் ஏவல் மகளிர், தவசிகள் அணியவேண்டிய மரவுரி கொண்டு வர, அதனை இராமன் பெற்றுக் கொள்கிறான். உடனே இலக்குவன் தானும் இராமனுடன் வனம் செல்ல வேண்டுமென்று தன் தாய் சுமத்திரையிடம் கேட்கிறான். அதற்கு அந்தத் தாய் சொல்கிறாள். "இலக்ஷ்மணா! நீ உடனே புறப்படு. இனி இராமன் இருக்கும் இடம்தான் உனக்கு அயோத்தி. நீ இராமன் மனம் கோணாமல் நடந்து கொள். அவன் வனவாசம் முடிந்து நாடு திரும்பி வந்தால் நீயும் வா! அப்படி அவனுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் அவனுக்கு முன்பாக நீ இறந்து விடு!" என்றாள் அந்தப் புனிதமான தாய்.

இராமனும் இலக்குவனும் பிறகு சுமத்திரையை நமஸ்கரித்து, கன்றுகளைப் பிரிய நேர்ந்த பசுவைப் போல சுமத்திரை அழுது கண்ணீர் சிந்த, தத்தம் ராஜரீக உடைகளைக் களைந்துவிட்டு தாதியர் கொண்டு வந்த மரவுரிகளைத் தரித்துக் கொண்டு வெளியே புறப்பட்டார்கள். இலக்குவனும் தன்னைப் போலவே, மரவுரி தரித்த காட்சி கண்டு, இராமன் சொல்கிறான். "லக்ஷ்மணா! நான் கானகம் செல்வதால், கைகேயி நீங்கிய தாய்மார் இருவரும், தந்தையும் ஆறாத் துயரில் ஆழ்ந்துள்ளார்கள். நீ அவர்களோடு தங்கி இருந்தால் அவர்களுக்குச் சற்று ஆறுதலாக இருக்கும். எனக்காக நீ, அவர்களோடு தங்கியிருக்கக் கூடாதா?" என்று கேட்டான்.

இராமன் அவ்வாறு சொல்லவும், அன்பே உருவான இலக்குவன் தோள்கள் குலுங்க விம்மி அழுது, இராமனை நோக்கிக் சொல்கிறான்: "அண்ணா! நான் உங்களுக்குச் செய்த தீமைதான் என்ன? நீர்நிலைகளில் நீர் இருந்தால் மீன்களும் அல்லியும் ஆம்பலும் இருக்கும்; பூமி இருந்தால்தான் அதன் மீதுள்ள ஜீவராசிகளும் இருக்கும். கோதண்டராமா! யார் இருந்தால் நானும் திருமகளாம் சீதாபிராட்டியும் உயிரோடு இருப்போம் என்பதை நீங்களே சொல்லி அருள வேண்டும்" என்றான்.

எது ஆதாரமோ, அது இன்றி அதன் சார்புப் பொருட்கள் இருப்பது எப்படி சாத்தியம்? என்பது இலக்குவன் கேள்வி.

"அண்ணா! வாய்மை காப்பவன் என்று உன்னை உலகோர் கூறிக்கொண்டிருக்க, உன்னைக் காட்டுக்கு அனுப்பி விட்டு இன்னும் நம் தந்தை தசரதச் சக்கரவர்த்தி உயிரோடு இருக்கிறார் அல்லவா? அவரது மகன்தானே நானும்; உங்களைப் பிரிந்து உயிரோடு இருப்பேன் என்று நினைத்தீர்கள் போலும்".

"முன்பு நான் சினம் கொண்டு எழுந்த போதெல்லாம், 'உன் சினம் நல்லதல்ல, அதனை முற்றிலும் தவிர்த்து விடு என்று நீங்கள் கட்டளையிட்டதைவிட, இப்போது என்னைத் தங்கள் உடன்வராது இருக்கச் சொல்வது மிகவும் கொடுமையானது"

"ஐயனே! அரசச் செல்வமும் மற்ற பிற இன்பங்களும் ஒரு பொருட்டல்ல என்று கருதித் தாங்கள் அவற்றையெல்லாம் துறந்து சென்றாலும், என்னையும், சீதாபிராட்டியையும் 'கைதுடைத்து' விட்டுச் செல்வது பொருத்தமுடையதா?" என்கிறான் இலக்குவன்.

இலக்குவனுடைய உள்ளார்ந்த கனிந்த அன்பு மொழிகளைக் கேட்ட இராமபிரான் ஒன்றும் சொல்ல இயலாதவனாகிக் கண்களில் நீர் தாரை தாரையாகச் சொரியத் தம்பியின் முகத் தாமரையைப் பார்த்த வண்ணம் அமைதியாக நின்றான். அப்போது வசிஷ்டர் அங்கே வருகிறார். அவரை இருவரும் வணங்குகிறார்கள்.

மெய்ப்பொருளை உணரும் தன்மையுடைய வசிஷ்டர் அவ்விருவர் தோற்றத்தையும் கண்ட மாத்திரத்தில், அவர்களது நோக்கத்தை அறிந்து மனவேதனையடைந்து தன் வசம் இழந்தார். ஊழ்வினையை யாரே மாற்றவல்லார் என்று பெருமூச்செறிந்தார். சிந்தையும் செயலும் செப்பமுடைய இராமனுக்கு இந்த நிலை வர கைகேயி காரணம் என்பது புறத் தோற்றமேயன்றி, வேறு யாதோ காரணமும் இதில் இருக்க வேண்டும். அந்தக் காரணம் பின்னர் வெளிவரும் என்று வசிஷ்டர் நினைத்தார். எனினும் இராமனை நோக்கி "இராமா! நீ கானகம் சென்றுவிட்டால் தசரதன் உயிர் வாழ்தல் இயலாது" என்றார்.

"குருதேவா! மன்னவன் பணியை ஏற்று நடப்பது என் கடமை. அதனின்று நான் பிறழேன். மன்னனை ஆறுதல் வார்த்தைகள் கூறி தேற்றுதல் குருதேவராகிய உங்கள் கடமையாகும். இவ்விரண்டு கடமைகளையும் நிறைவேற்றுதல்தான் முறை" என்றான் இராமன்.

"இராமா! வரம் என்ற பெயரால் கைகேயி கேட்டதற்கு "தருகிறேன்" என்று ஆராயாமல் உடன்பட்டதையன்றி "நீ வனம் போ" என்று மன்னன் தன் வாயால் உன்னைப் பணித்தானா? இல்லையே! எனவே, இது அவனது ஆணையல்ல" என்றார் வசிஷ்ட முனிவர்.

"தந்தை இயைந்ததாலேதானே தாய் என்னை ஏவினாள். நானும் உடன்பட்டு அவளுக்கு உறுதி கூறிவிட்டேன்; இவ்வளவும் அறிந்த தாங்கள் தந்தை வாயால் "போ" என்று கூறவில்லை என்றொரு போக்குக் காட்டி என்னைத் தடுப்பது, சகல சாஸ்திரங்களும் அறிந்த தங்களுக்கு முறையானதன்று" என்றான் இராமன்.

வசிஷ்டரால் ஒன்றும் பதில் கூறமுடியவில்லை. கண்களிலிருந்து கண்ணீர் பெருகி நிலத்தில் விழ நின்றார். இராமனும் இலக்குவனும் அவரைத் தொழுது அரண்மனை வாயிலை நோக்கி நடந்தனர்.

குமரர் இருவரும் வீதியில் நடந்து செல்வதைக் கண்டு நகர மாந்தரும் பிறரும் பெரும் துயரமடைந்தனர். இராமன் வனம் புகுவதால் நன்மை அடையப்போகும் தேவர்களேகூட வருந்தி நின்றார்கள் என்றால் மற்றையோர் நிலை கேட்க வேண்டுமா?

இராமனின் தவக்கோலம் கண்டு நகர மகளிர் கைகளால் கண்களில் அடித்துக் கொண்டு அழுதனர். நகர மாந்தர் பலர் துயரம் தாங்காமல் உயிரை விட்டனர். சிலர் மயங்கினர்; சிலர் விம்மி அழுதனர்; சிலர் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கினர்; கூந்தல் தீப்பிடித்ததுபோல அலறி அழுதனர் சிலர். இராமன் முடிசூட்டிக்கொண்டு பவனி வருவான் என்று ஆவலோடு காத்திருந்த மக்கள், மாறான காட்சியைக் கண்டு 'ஐயோ! நம் கண்கள் குருடாகவில்லையே' என்று வருந்தினர்.

அயோத்தி நகரத்து மக்கள் மட்டுமா? இல்லை, ஐயறிவு, நாலறிவு உள்ள உயிரினங்களும்கூட துயரத்தால் துவண்டு போயின. ஊரும் மக்களும், மற்ற உயிரினங்களும் வருந்தி வாட, இருவரும் சீதை இருக்குமிடம் சென்றடைந்தனர்.

முடிசூட்டிக் கொண்டு மன்னனாய் இராமன் வருவான் என்று காத்துக் கொண்டிருந்த சீதை இவர்களது கோலம் கண்டு துணுக்குற்றாள். உடல் நடுங்க "இந்தத் துயரம் வந்து சேர என்ன காரணம்?" என்று உடல் நடுங்க கேட்டாள்.

"சீதா! பரதன் நாட்டை ஆளவும், நான் காடு செல்லவும் பெற்றோர் பணித்தனர். அதனைச் சிரமேல்கொண்டு நான் இன்றே கானகம் புறப்படுகிறேன். மீண்டு வருவேன். நீ இங்கே வருத்தப்படாமல் இரு" என்றான் இராமன்.

இந்தச் சொற்கள் சீதாபிராட்டியைப் பெரிதும் வருத்தின. "தாய் தந்தை சொல்லை ஏற்றுத் தாங்கள் கானகம் செல்வது சரிதான். ஆனால் என்னை மட்டும் இங்கே இரு என்று சொல்வது என்ன நியாயம்? அதை நான் பொறேன்" என்றாள் சீதை.

"உன் நன்மை கருதியே நான் இப்படிச் சொன்னேன் சீதா! கானகத்தில் நடக்கும் போது வெம்மையும், சிறு கற்கள் பாதத்தில் குத்தும் துன்பத்தையும் உன்னால் தாங்க முடியாது" என்றான் இராமன்.

அதற்கு சீதாபிராட்டி சொல்கிறாள் "நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?". உன்னைப் பிரிவது என்பது எவ்வளவு கொடுமை, அதனினும் கொடுமையானதா கானகத்தில் வெப்பம் காலைச் சுடுவது என்கிறாள் சீதாபிராட்டி. இவளைக் கண்ணீர் கடலில் மிதக்க விட்டு எப்படிப் பிரிந்து செல்வது என்று இராமன் மனதில் குழப்பம் ஏற்படுகிறது. அப்போது சீதை உள்ளே சென்று தானும் மரவுரி தரித்து இராமன் முன்பாக வந்து நின்றாள். இராமனுடைய கையைத் தன் மெல்லிய கரத்தால் பற்றினாள். பிராட்டியின் இந்தச் செயலைக் கண்டோர் அனைவரும் மயங்கி விழுந்தனர்.

"நீ அவசரப்பட்டு துணிந்த செயல் உனக்கு மகிழ்ச்சி தருவதாயினும் எனக்குப் பெரும் துன்பம் தருகிறது" என்றான் இராமன்.

"காட்டு வாழ்க்கை துன்பம் தருவதுதான், நான் இல்லாவிட்டால் அஃது இன்பமாகி விடுமா?" என்றாள் சீதை.

இராமபிரானால் ஒன்றும் பேச முடியவில்லை. மூவரும் அங்கிருந்து புறப்பட்டனர். அந்தக் காட்சியைக் கம்பர் வாக்கால் அறிந்து அனுபவிக்கலாம். அவர் சொல்கிறார்: "வரவுரியைத் தன் உடம்பில் சுற்றிக் கொண்டு திருமகள் பின்னே வர, வில் ஏந்திய கையனாய் இலக்குவன் முன்னால் செல்ல, கார்மேக வண்ணன் இராகவன் செல்லும் காட்சியைக் கண்ட அவ்வூராருக்கு உண்டான துன்பம் சொல்லும் தரமாமோ?" அந்தப் பாடல் இதோ:

"சீரை சுற்றித் திருமகள் பின் செல
மூரி விற்கை இளையவன் முன் செலக்
காரை ஒத்தவன் போம்படி கண்ட அவ்
வூரை உற்றதும் உணர்த்தவும் ஒண்ணுமோ?"

இந்தக் கோலத்தோடு கானகம் செல்லும் இவர்களைக் கண்ட அயோத்தி மாந்தர், இனி இவர்கள் வனம் புகும் எண்ணம் மாறாது என உணர்ந்து, இனி அழுது பயனில்லை, இவர்களுக்கு முன்பாக நாம் வனம் செல்வதே நன்று என்று எழுந்தனர்.

இம்மூவருடன் கோசலையும், சுமத்திரையும் பின்தொடர்ந்து செல்லத் தொடங்கினர். தன்னைத் தொடர்ந்து வந்த தாய்மார்களைத் தடுத்து நிறுத்தி "நீங்கள் என்னைப் பின் தொடர்வதை விட்டு, போய் அரசரைத் தேற்றுங்கள் என்றான் இராமன். பின்னர் இலக்குவன் முன்செல்ல, சீதை பின் தொடர நடந்து வந்த இராமபிரான், சுமந்திரன் கொண்டு வந்து நிறுத்திய தேரில் ஏறிக் கொண்டனர். தேர் புறப்பட்டது.

அங்கிருந்து புறப்பட்டு அயோத்தி நகரை நீங்கி இரண்டு யோஜனை தூரம் சென்றபிறகு ஒரு சோலையை அடைகின்றனர். அங்கு இருந்த முனிவர்களுடன் இவர்களும் தங்கினர். இராமனைத் தொடர்ந்து நகரத்து மாந்தர்கள் அனைவரும் வந்து சேர்ந்து, அந்தச் சோலையிலேயே தங்கினர். கூடியிருந்த மாந்தர் அனைவரும் ஊண் இன்றி, உறக்கம் துறந்து துயரத்தில் மூழ்கியிருந்தனர். அந்த நேரத்தில் இராமனும் சுமந்திரனும் மட்டும் பேசிக் கொண்டிருந்தனர்.

இராமன் சுமந்திரனிடம் "அமைச்சரே! உம்மால் ஒரு காரியம் ஆகவேண்டும். அன்பு மிகுதியினால் நம்மோடு வந்திருக்கும் இந்த மக்களைத் திரும்ப அனுப்புவது எளிதான காரியமன்று. அப்படி அவர்களைத் திரும்ப அனுப்பாமல் நாம் தொடர்ந்து வனம் புகுவதும் நன்றன்று. ஆகையால் நீங்கள் இப்போதே ரதத்தை ஓட்டிக் கொண்டு நகரத்துக்குத் திரும்பிச் சென்று விடுங்கள். நீங்கள் ரதம் ஓட்டிச் சென்ற தடத்தைப் பார்த்து அவர்களும், நான் நாடு திரும்பிவிட்டேன் என்று ஊர் திரும்பி விடுவார்கள்" என்றான்.

இந்த இடத்தில் வான்மீகி இராமாயணத்தில் வேறுவிதமாகக் கூறப்பட்டிருக்கிறது. அது வருமாறு: "தமசா நதிக்கரையில் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்ட இராமன், தொடர்ந்து வந்த மக்கள் அறியாவண்ணம், அவர்கள் உறங்கும் நேரம் பார்த்து, மூவரும் தேரில் ஏறி சிறிது தூரம் சென்று ஆற்றைக் கடந்து சென்ற பிறகு இறங்கிக் கொண்டு, சுமந்திரரை தேரைத் திரும்பச் செலுத்தி சிறிது தூரம் போய்விட்டு வருமாறு பணித்ததாகவும், பிறகு மூவரும் தேரில் ஏறிக் கொண்டு, தேவசுருதி, கோமதி என்னும் இரு நதிகளைக் கடந்து கங்கைக் கரையை அடைந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

இராமன் கூறிய ஆலோசனையை ஏற்று சுமந்திரர் புறப்படுமுன் இராமனிடம் "இராமா! தாங்கள் மூவரையும் காட்டில் கொண்டு விட்டு வந்ததாகப் போய் மற்றவர்களிடம் சொல்வேனோ, உடன் அழைத்துக் கொண்டு வந்தேன் என்று சொல்வேனோ, என்ன சொல்வேன். இராமா! தங்களை இந்தக் காட்டில் விட்டுவிட்டு நான் மட்டும் நாடு திரும்பிச் சென்றால், என் அன்புக்கும், நட்புக்கும் என்ன பொருள்? நகரத்து மாந்தர்களும் மற்றைய அரசர்களும் உங்கள் பின்னால் வருகிறார்கள். எப்படியும் உங்களைத் திரும்ப அழைத்துக் கொண்டு வந்துவிடுவார்கள் என நம்பியிருக்கும் உங்கள் தந்தை, தாங்கள் வரவில்லை என்பது தெரிந்தால் உயிர் தரித்திருப்பாரா? அவருக்கு நானே எமன் ஆகவேண்டுமா?"

"கைகேயி உன்னை வனம் போகச் சொன்னதால், தசரதன் மரணாவஸ்தையில் இருக்கிறார். ஆயினும் உயிர் இன்னும் இருக்கிறது. நீங்கள் வனம் போய்விட்டதை நான் போய் சொன்னால், அவரது உயிர் பிரிந்துவிடும். அவரைக் கொன்ற பழி என்னைச் சேராதா?

எதற்கும் இராமன் இசைந்து வரவில்லை என்றதும் சுமந்திரன் அவன் அடியில் வீழ்ந்து புரண்டு மன்றாடுகிறான். பிறகு இராமன் சுமந்திரனைத் தூக்கி எடுத்து நிறுத்தி, ஆரத் தழுவிக் கொண்டு அழைத்துக் கொண்டு சென்று பேசுகிறான்.

"துன்பம் எத்தகையவருக்கும் வரும் என்பதனைச் சிறந்த அறிவாளியான நீங்கள் அறியீரோ. இப்போது காடு செல்லும் துன்பம் வருகிறதே என்று, தெய்வமாய்க் கருதற்குரிய தந்தையின் சொல்லைச் தட்டி நடந்தால், நான் எய்தும் பழி சாதாரணமானதன்று என்பதும் உமக்குத் தெரியாதா? நீங்கள் என்னைக் காடு செல்லாது தவிர்ப்பது முறையில்லை" என்றான் இராமன்.

இப்படிப் பற்பல சொல்லி, தான் வனம் புகுவதே அறம் என்றும், இல்லையேல் பெரும்பழி தனக்கு வந்து சேரும் என்றும் இராமன் கூறுகிறான். நாடு திரும்பியபின் கைகேயியிடம் கோபப்படக்கூடாது என்றும், தம்பி பரதனிடம் மாறாத அருள் பாலித்து வரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறான். செல்லும் சொல் வல்லானாகிய இராமபிரான் மீண்டும் ஏதும் சொல்வதற்கு இடமின்றித் தன் கட்டளையாகக் கூறியவற்றைக் கேட்ட சுமந்திரன், அதற்கு உடன்பட்டு அவர்களை வணங்கிவிட்டுப் புறப்பட்டான்.

சீதாபிராட்டி சுமந்திரனிடம் "சக்கரவர்த்தியிடமும், மாமியரிடமும் என் வணக்கங்களைக் கூறுங்கள். என் தங்கையர்களிடம் நான் வளர்த்து வரும் பூனை, கிளி முதலான பறவைகளையும் பாதுகாத்து வரவேண்டுமாய்க் கேட்டுக் கொள்ள வேண்டும்" என்றாள். சீதை தான் கானகத்தில் படப்போகும் துயரங்களைப்பற்றி நினையாமல், அரண்மனையிலுள்ள புள் இனங்களுக்காக வருந்துகிறாரே என்று சுமந்திரன் வருந்தினான். இராமபிரான் தேற்றியும் துக்கம் தாங்காமால் சுமந்திரன் அழுதார்.

பின்னர் இலக்குவனிடம் சென்று தாங்கள் கூறவிரும்புவது ஏதேனும் உளதா எனக் கேட்டார்.

உடனே இலக்குவன் கோபத்துடன் "இராமனுக்கு வாக்களித்தபடி இராஜ்யம் இல்லையென்று கூறி, வேறொரு பெண்ணிடம் கொடுத்துவிட்ட வாய்மையாளனுக்கு நான் என்ன சொல்லவிருக்கிறது? என்றான்.

"இராமனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டு இன்னும் நீர் உயிரோடு இருக்கின்றீரே!" என்று நான் கேட்டதாகச் சொல்லுங்கள். பரதனிடம் சென்று சொல்லுங்கள்; அவன் இராமனுடன் பிறந்தவனுமல்ல; நானும் பரதனுடன் பிறந்தவனல்ல. சத்ருக்குனன் பரதனுடன் சார்ந்தொழுகலால் அவன் என் தம்பியும் அல்ல. ஆயினும் இராமனுக்கு எவர் தீங்கு நினைப்பினும், அது பரதனே ஆயினும் அவர்களை அழித்து ஒழிக்கும் ஆற்றலுடையவன் நான். என் இராமனைத் தவிர வேறு யாரையும் நான் மன்னனாகக் கருதவில்லை" என்றான்.

அப்போது இராமபிரான் தம்பி இலக்குவனை நோக்கி "தம்பி! லக்ஷ்மணா! நீ நேர்மையற்ற வார்த்தைகளைப் பேசாதே!" என்று ஆணையிட்டான். இலக்குவன் கோபம் தணியவும், சுமந்திரன் இவர்களைப் பணிந்து, பின் தேர் நிறுத்தியிருந்த இடம் நோக்கிச் செல்கிறான்.

சுமந்திரன் சென்றபின், இராமன் மற்ற இருவரோடும் புறப்பட்டான். சூரிய உதயத்துக்கு முன்பாக இரவிலேயே இரண்டு யோஜனை தூரம் நடந்தார்கள்.

12 comments:

 1. திரு.தஞ்சாவூரான்,உங்களுடைய பொறுமையான தட்டச்சுத்தலுக்கு நன்றி.

  ஆனால் சற்று நினைத்துப் பாருங்கள்,இராமாயணக் கதை யாருக்குத் தெரியாது? லிப்கோ வெளியிட்டிருக்கும் புத்தகம் எளிதாக அனைவருக்கும் கிடைக்கும்;மேலும் இந்தக் கதை உலகமறிந்த கதை.

  இதைக் கை வலிக்க நேரம் செலவு செய்து தட்டச்சும் நேரத்தில் கம்பனின் தேர்ந்தெடுத்த கவிதைதகளை எடுத்துக் கொண்டு அவன் சொல்ல முயற்சிக்கும் கருத்துக்களை,கவிதை தாண்டிய விளங்கங்களை அளிக்க முயலுங்கள்,அது உங்களின் தேடலையும் விரிவாக்கும்,படிப்பவர்களும் பயன்தரும்...

  ReplyDelete
 2. திரு அறிவன் அவர்களே! ராமாயணக் கதை எல்லோரும் அறிந்த ஒன்று என்பது உண்மைதான் என்றாலும், இந்த இதிஹாஸங்களை மீண்டும் மீண்டும் கேட்பது ஒரு புண்ணியம் என்று சராசரி பாரதன் நினைக்கிறான்.இன்று புத்தகங்களை விட வலையுலகில் இருந்தாலே வாலிபன் வாசிப்பான்.எனவே வலையில் திரு தஞ்சாவூரார் ராமாயணத்தை எழுதியுள்ளது ஆர்வமுள்ள இளைஞ‌ர்களுக்கு மிகவும் பய‌னுள்ளது என்றே நான் கருதுகிறேன்.
  லிஃப்கோ பதிப்பு வால்மீகி ராமாயணம். கம்ப ராமயணத்திற்கும், வால்மீகிக்கும் பல இடங்களில் வேறுபாடு உண்டு.கம்பன் தமிழ் பண்பாட்டை மனதில் வைத்துப் பல மாற்றகளைச் செய்துள்ளார்.எனவே தஞ்சாவூராரின் முயற்சி, அதுவும் அவருடைய 75 வயதில், பாராட்டுக்குரியதே!

  ReplyDelete
 3. அடடா! இத்தனை நாள் தெரியாதிருந்தேனே?!
  திரும்பி வருகிறேன்.
  உங்கள் பொறுமைக்கும் உழைப்புக்கும் வணக்கங்கள்!

  ReplyDelete
 4. very interesting i like this very much

  ReplyDelete
 5. beautiful. uhave got all punniyam for re writing ramayana in simple words for us. great work. kamban perumiye engalukkum puriyumbadi alittheere.-vijaya

  ReplyDelete
 6. superb.great job man

  ReplyDelete
 7. கேட்க வைப்பிருந்தோர் கேட்டார்கள். படிக்க வாய்ப்பிருந்தோர் படித்தார்கள். எனினும் இன்றைய உலகில் இணைய தளத்தில் - இரு பெரும் இதி காசங்களில் ஒன்றாம் இராமாயணம் - உரைநடை வடிவில் .. உங்கள் உழைப்பில் பெருகி வழிகிற உற்சாகத்துடன் .. கோடான கோடி நன்றிகள் உரித்தாகட்டும். நாளைய சமுதாயம் உங்களுக்கு நன்றி செலுத்தும்.

  அன்புடன்.. காவிரிமைந்தன்... kaviri2012@gmail.com

  ReplyDelete
 8. கேட்க வைப்பிருந்தோர் கேட்டார்கள். படிக்க வாய்ப்பிருந்தோர் படித்தார்கள். எனினும் இன்றைய உலகில் இணைய தளத்தில் - இரு பெரும் இதி காசங்களில் ஒன்றாம் இராமாயணம் - உரைநடை வடிவில் .. உங்கள் உழைப்பில் பெருகி வழிகிற உற்சாகத்துடன் .. கோடான கோடி நன்றிகள் உரித்தாகட்டும். நாளைய சமுதாயம் உங்களுக்கு நன்றி செலுத்தும்.

  அன்புடன்.. காவிரிமைந்தன்... kaviri2012@gmail.com

  ReplyDelete
 9. நான் வெகு நாட்களாக கம்பராமயணம் படிக்க எண்ணி சமீபத்தில் "ராஜாஜியின் கம்பராமாயணம்" படித்தேன். அங்கிருந்து என் தேடல்கள் ஆரம்பித்தது. இன்னும் கம்பராமாயணத்தை மேலும் சிலர் எழுதியதை படிக்க வேண்டும் என்ற ஆவல். வலைத்தலத்தில் தேடுகையில் தங்களின் வலைப்பூவில் கம்பராமாயணம் பார்த்ததும் ஆவல் அதிகமாகி விட்டது. வாசிக்கிறேன். மிக்க நன்றி.

  ReplyDelete

Please give your comments here